Sunday, May 10, 2009

பாறைச்சுவடுகள்




திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட
தவறுகளே வாழ்க்கையாகிப் போனது
வயதின் சுமையாலன்றி
ஞபகங்களின் சுமைகளாலேயே
முதுகு கூனல் கண்டது
நடந்து வந்த கால் தடங்கள்
காலமழையில் கரைந்து போயினும்
அவற்றின் பொய் வடிவங்கள் மட்டும்
மனவெளியில் பாறைச்சுவடுகளாய்ப்
பதிந்து ஒட்டிக் கொண்டன
இறந்த காலங்களின் நிழல் வீச்சில்
எதிர் காலங்கள் இருண்டு நெப்பிழந்தன.
ஈட்டாதவற்றின் மீதான ஏக்கங்கள்
ஈட்டியவற்றின் முள் கீறல்கள் மீது
திறந்த புண் மீது அமர்ந்த
ஈக்களாய் மொய்த்தன.
நிழல் விழுந்து
நிலம் கீறல் கண்டது;
பிம்பம் விழுந்து
கண்ணாடி விரிசல் விட்டது.
(வடக்கு வாசல் - ஜூன்,2008)

சபிக்கப்பட்டவர்கள்

சாபம்-
விமோசனமே எழுதப்படாத சாபம்
யாரோ கொண்ட மோகத்துக்கு
யார்க்கோ வந்த சாபம்
யாரோ செய்த லீலைக்கு
யார்க்கோ இட்ட சாபம்
புலனின் தவத்துக்கு
வரமாய் வந்த சாபம்
இருட்டறையின் புழுக்கத்தில்
இரண்டு பேர் இறக்கிய சுமையை
இன்னொருவர் மீது ஏற்றிய சாபம்
சபிக்க மட்டுமே தெரிந்த, எங்கள்
'கடவுளின்' கருவறையில்
வரத்துக்காகத் தவமிருந்து
வயிற்றில் சுமந்த சாபம்
பாரத்தை ஏற்றியவர்களுக்கு
பாரத்தைச் சுமந்து கொண்டவர்களின்
நன்றி என்னத்துக்கு?
மறுபடியும் பழைய கதை:
யாரையோ வஞ்சம் தீர்க்க
மீண்டும் இவர்கள் பங்குக்கு
புதிய பாரங்கள்
புதிய ஆத்மாக்களின் முதுகிலேறும்
காலம் காலமாய்ச்
சபிக்கப்பட்டவர்களின் தொகை
இப்படித்தான்
சங்கிலித்தொடராய் நீளும்.

Friday, March 20, 2009

அழைப்பு

நண்பர்களே, எனது வலைப்பதிவை இன்று தொடங்குகிறேன்...புதிய தொழில்நுட்பம் ..புதிய முயற்சி..புதிய அனுபவமும் கூட ! சிறு பத்திரிகைகளின் வீச்சைத் தாண்டி இந்தத் தளம் நிற்குமா என்று தெரியவில்லை . ஆனால் சிறு பத்திரிகைகளில் கிடைக்காத எழுத்தாள சுதந்திரம் இதில் கிடைக்கும். வாசகர்கள் தான் கிடைப்பார்களா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..போகப்போகப் புதிய பரிமாற்றங்களைப் பகிர்ந்து கொள்வோம்.