Sunday, December 5, 2010

மகாபாரதமும் இரட்டை ஒழுக்கமும் (கடிதம்- 3)

"மகாபாரதமும் இரட்டை ஒழுக்கமும்"
கடிதம் - 3 (கணையாழி-ஜூன் 1989)

ஜனரஞ்சக சினிமாக்காரர்களின் கையில் இந்த இதிகாசங்கள் எந்த அளவுக்கு மலினப் படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றி நான் இங்கு எந்தவித சர்ச்சையும் எழுப்பப் போவதில்லை. சர்ச்சை மகபாரதத்தைப் பற்றியதேதான். இரட்டை ஒழுக்கம் (Double Standard) என்பது இன்றைய சமூக சுழ்நிலையில் வெகு சகஜமாக அடிபடும் வார்த்தை. அது மகாபாரத காலத்து நியாங்களுக்கும் விதிவிலக்கில்லை என்று தோன்றுகிறது.

உதாரணத்துக்கு , இந்த கங்கை விவகாரமும் கம்ஸன் விவகாரமும். பிறக்கப் பிறக்க வரிசையாய்க் குழந்தைகளை, இரக்கமின்றி ஆற்றில் வீசி அநியாயமாய்க் கொல்கிறாள் கங்கை. கடைசியில் சாப விமோசனம் என்று சொல்லி விடுகிறார்கள். கம்சனும் வரிசையாய்க் குழந்தைகளைச் சுவரில் அறைந்து கொல்கிறான். முன்னவள் செய்த ' சிசு ஹத்தி', சாப விமோசனமாய்ப் போக, பின்னவள் செய்தது மட்டும் பாவமாய்ப் போய்விடுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் கம்ஸன் செய்த சிசுக் கொலைகள் (Infanticide) தற்காப்பின் காரணமாய்ச் செய்யப் பட்டதால் அவனைக் கூட மன்னிக்கலாம் என்று தோன்றுகிறது. கங்கையை எவிதம் மன்னிப்பது? ஆனால் வேடிக்கை என்னவென்றால், கங்கை தேவதை ஆகிறாள்; கம்சன் அசுரன் ஆகிறான்.


இன்னொரு இடம்: யமுனைக் கரையில் யாதவப் பெண்களைத் துகில் உரிந்து சந்தோஷப் படுகிறான் கிருஷ்ணன். அதே கிருஷ்ணன் , கௌரவர் சபையில் துச்சாதனன் துரௌபதியைத் துகில் உரிகிற போது, நீள நீளமாய்ப் புடவைகளை விநியோகம் பண்ணுகிறான். வழக்கம் போலவே கிருஷ்ணன் தேவன் ஆகிறான். துச்சாதனன் அசுரன் ஆகிறான். பல சமயங்களில், கிருஷ்ணன் திரௌபதிக்கு உபகாரம் பண்ணினான் என்பதை விட, தனது பழைய யமுனைக் கரை விஷமத்துக்குப் பரிகாரம் பண்ணினான் என்று கூடத் தோன்றுகிறது.

Sunday, November 28, 2010

விபரீத ஆராய்ச்சி - (கடிதம்-2)

கடிதங்கள் வரிசை-கடிதம்-2

இந்தக் கடிதம் ஆகஸ்ட்-96 கணையாழி இதழில் வெளி வந்தது. இது, இதற்கு முந்திய இதழில்,கொடுமுடி ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய கடிதத்துக்கு எதிர் வினையாக நான் எழுதிய கடிதம். அதி நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கஷ்டப்பட்டு வேதரிஷிகளின் கவிதைகளில் "கண்டுபிடித்து", அவை அந்தக் காலத்து ரிஷிகளுக்கே தெரிந்திருந்தன என்கிற மாதிரியான ஓர் அபத்தமான வாதத்தை அவர் அந்தக் கடிதத்தில் முன் வைத்திருந்தார்.)

"விபரீத ஆராய்ச்சி "

பண்டிட் ஜவகர்லால் நேரு தனது 'உலக சரித்திரம்' (Glimpses of World History) என்ற நூலில், ஓரிடத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "தற்காலத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த ஹிந்து, முகமதிய மறுமலர்ச்சி இயக்கங்கள் எல்லாம் தங்களது பழைய பல மூட சம்பிரதயங்களையும் தவறான கோட்பாடுகளையும் தைரியமாக எதிர்க்கவும் முடியாமல், புதிதாய் வளர்ந்து வரும் மேற்கத்திய விஞ்ஞான சாஸ்திரங்களைப் புறக்கணிக்கவும் முடியாமல், இரண்டும்கெட்டான் நிலையில் தங்களது பழைய 'புனிதப் புஸ்தகங்களில்' புதிய விஞ்ஞானக் கோட்பாடுகளைச் செருகிப் பொருத்திப் பார்த்து சந்தோஷப் பட ஆரம்பித்திருக்கின்றன.இத்தகைய போக்கு எதிர்காலத்தில் வியர்த்தமாகவே முடியும். மாறி வரும் உலகின் புதிய போக்குகளுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதை விட்டு விட்டு, இவர்கள் பழமையின் பாரம்பரியத்தின் எடையால் அழுந்திக் கிடக்கிறார்கள். ஆனால் தலையைப் பின் பக்கமாய்த் திருப்பி வைத்துக்கொண்டு, பின்னல் பார்த்தபடியே முன்னால் முன்னேறிச் செல்வது என்பது சுலபமான சமாசாரம் இல்லை. ." (chapeter 113; page 437; Jawaharlal Memorial Fund Publications).

கொடுமுடி ராமகிருஷ்ணனின், வேத ரிஷிகளின் சுலோகங்களில் நவீன விஞ்ஞானக் கருத்துகளைச் செருகும் முயற்சியைப் படித்த போது, எனக்கு மேலே குறிப்பிட்ட நேருவின் வாசகங்களே நினைவுக்கு வந்தன. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆரிய சமாஜத்து தயானந்த சுவாமி இந்தக் காரியத்தைத் தான் செய்தார். வேத ரிஷிகளின் கவிதைகளில் ஆகாய விமானத் தொழில் நுட்பத்தைப் புகுத்தி வேத ரிஷிகளின் வசம் மணிக்குப் பத்தாயிரம் மயில் வேகத்தில் பறக்கும் ஆகாய விமானங்கள் இருந்தன என்று ஒரு போடு போட்டார். 1980-களின் ஆரம்பத்தில் டில்லியில் நடந்த வேத காலத்து விஞ்ஞானம் பற்றிய சர்வதேச சம்மேளனத்தில் (World Assembly on Vedic Sciences) மகரிஷி மகேஷ் யோகி ரிக்வேதப் பாடல்களில், இருபதாம் நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் Unified Field Theory சொல்லப்பட்டிருப்பதாக பிரகடனம் செய்தார். (Tradition, Science and Society, by Dr. S. Balachandra Rao; chapter- 2; page -31). சில ஆண்டுகளுக்கு முன் உத்திரப் பிரதேசத்தில் அப்போதைய பி.ஜே.பி. அரசு பள்ளிகளில் வேத காலத்துக் கணிதம் (Vedic Maths) என்ற ஒன்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க முயற்சி செய்தது. இந்த முயற்சியின் பின்னணி, 1965-ஆம் ஆண்டு வெளிவந்த கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியாரான சுவாமி பாரதி கிருஷ்ண தீர்த்தாவின் புதிய 'கண்டு பிடிப்பான ' Vedic Mathematics' என்ற புத்தகம். (Frontline- Oct.22, 1993- இதழில் இந்தப் புஸ்தகத்தைக் கடுமையாய் விமரிசித்து Prof. S.G. Devi என்பவர் கட்டுரை எழுதினர். பக்கம்.90)

இவை எல்லாமே, வேலை மெனக்கெட்டு நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பழமையான மத நூல்களில் தேடித் பார்க்கிற அற்ப சந்தோஷத்தை முன்னிட்டு செய்யப்பட்ட அபத்தமான முயற்சிகள் ஆகும். இந்தப் பட்டியலில் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் கொடுமுடியார், கற்பனையில் இவர்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டார் என்றே தோன்றுகிறது. இல்லை என்றால், இந்திரன் அகலிகையைக் கெடுத்த அந்தப் பழம் கதையில் இந்த மனிதர் அல்ட்ரா வயலட் கதிர்கள் எலக்ட்ரானைத் தாக்கி வெளியே கொண்டு வருகிற Atomic Physics சமாசாரத்தைத் தேடுவாரா? இப்படி ஒவ்வொரு புராணக் கதைக்கும் இந்த மாதிரி விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டே போகிற போது, இவர் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக வருவார் என்றே தோன்றுகிறது.

ஆகவே, திரு. ராமகிரிஷ்ணணன் போன்றவர்களின் இத்தகைய 'ஆராய்ச்சிகள்' வேதரிஷிகளின் மரியாதையைக் கெடுப்பதாகவே முடியும். (திரு ராமகிரிஷ்ணனுக்கு வேத ரிஷிகள் என்ன கெடுதல் செய்தார்கள்?) வேத காலத்து ஆரியர்கள் இயற்கையைக் கண்டு புகழ்ந்தும் வியந்தும், தங்களுக்கே உரிய பாணியில் பதிவு செய்து வைத்த அழகிய கவிதைகளே வேதப் பாடல்கள். அவை எளிமையானவை. ஒலிநயமும் சொல்நயமும் மிக்கவை. அக்காலத்து மனித வாழ்க்கை முறைகளையும் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்புலமாகக் கொண்டிருப்பவை. அவற்றை சமூகவியல் கண்ணோடு நோக்கி, டி.டி. கோசாம்பி, தேவி பிரசாத் சாட்டோபாத்யாய் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆராய்ந்து அளித்திருக்கிற விஸ்தாரமான விளக்கங்கள் அறிவுக்கு உகந்தவையகவும் அதே சமயம், அக்காலத்திய அறிவு ஜீவிகளான வேத கவிகளின் மேன்மையைத் தெளிவு படுத்துபவனவாகவும் இருக்கின்றன.

ஆனால், அவற்றைத் தற்கால விஞ்ஞானக் கண் கொண்டு செய்கின்ற இத்தகைய ஆராய்ச்சிகள் வீண் வேலை. அவற்றால் நமக்கும் பிரயோஜனம் இல்லை, வேத ரிஷிகளுக்கும் பிரயோஜனம் இல்லை! வேத ரிஷிகளுக்கு நவீன விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவர்கள் பெற்றிருந்த அறிவின் அளவே அவர்களுக்குப் பெருமை சேர்க்கவல்லது தான்.


Saturday, November 6, 2010

"கரிச்சான்குஞ்சு-ஓர் அஞ்சலி" (கடிதம்-1)


வெவ்வேறு காலகட்டங்களில் நான் எழுதிக் கணையாழியில் வெளிவந்த எனது கடிதங்களை இங்கே தொகுத்தளிக்கிறேன்.

கடிதம்-1(கணையாழி- மார்ச் 1992)"கரிச்சான்குஞ்சு-ஓர் அஞ்சலி"

திரு கரிச்சான்குஞ்சுவின் மறைவு அறிந்து பெருத்த மன வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். 1972-இலிருந்து 78 வரை கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் மன்னார்குடியில் அவரோடு நெருங்கிப் பழகும் ஓர் அபூர்வ வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த சில அனுபவங்களையும் உணர்வுகளையும் கணையாழி வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

மன்னார்குடி நாலாந்தெருவில் எனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு அடிக்கடிப் போய் நான் பேசிக்கொண்டிருப்பதுண்டு. அப்போது தான் பக்கத்து வீட்டில் ஒரு 'பழைய காலத்து' எழுத்தாளர் குடி இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.வெற்றிலை எச்சிலைத் துப்ப வெளியே வந்த மனிதரை, திண்ணையிலிருந்தே ஓரக்கண்ணால் ஒரு முறை பார்த்தேன். ஆளும் பார்ப்பதற்கு உச்சிக் குடுமியும் விபூதிப் பட்டையுமாய்ப் பார்பதற்குப் பழைய காலத்து மனிதராகவே காட்சி அளித்ததால் 'இவர் என்னத்தைப் பிரமாதமாக எழுதப் போகிறார்' என்று தோன்றியது. பெயர் மட்டும் புதுமையாய் வேடிக்கையாய் இருந்தது.

அப்போது தான் கல்லூரிப் படிப்பு முடிந்து புரட்சிகரமான கருத்துக்களின் தாக்கத்தில் இருந்த எனக்கு இயல்பாகவே அவரது வைதீகத் தோற்றம், அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்குத் தடையாக இருந்ததில் வியப்பில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, அதே மனிதரைக் கடைத் தெருவில் சந்திக்க நேர்ந்த போது சம்பிரதாயமாய்ப் புன்னகைத்தேன். அவர் சட்டென்று என் கைகளை அன்போடு பற்றிக் கொண்டு, "தினமணி கதிரில் உன்னோட கதையைப் படிச்சேன். ரொம்ப நன்னா வந்திருக்கு. இன்னும் நிறைய எழுது" என்றார். (அப்போது தான் எனது முதல் கதை தினமணி கதிரில் பிரசுரமாய் இருந்தது.) எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. " ஒரு எழுத்தாளரோட வாயாலேயே என்னோட கதை பாராட்டப்படறது நெஜமாவே பெரிய விஷயம்" என்று நான் சொன்னவுடன், "நான் ஒரு 'ரைட்டர்னு உனக்குத் தெரியுமா?" கேட்டுக் குதூகலித்தார்.

அதற்குப் பின், அடிக்கடி அவர் இல்லம் சென்று உரையாடத் தொடங்கினேன். வயசு வித்தியாசமோ, தலைமுறை வித்தியாசமோ, அறிவு வித்தியாசமோ ஒரு சுவராகக் குறுக்கே நிற்காமல், அந்த சந்திப்புகள் மிகவும் இயல்பானவையாகவும் பாந்தமானவையாகவும் அர்த்தம் உள்ளவையாகவும் விகசிக்கத் தொடங்கின.

முதல் முறையாக அவரைப் பார்த்த அன்றைக்கு, இதே மனிதரிடம் சரி சமமாகக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ஒரு நாள் ப்ராய்டையும் மார்க்சையும் எந்த வித உள் தடைகளும் இன்றி ரொம்ப சுவாதீனமாய் விவாதிக்கப் போகிறோம் என்று நினத்திருப்பேனா என்ன? அவரோடு பழகிய போதே என்னுள் பல புதிய கதவுகள் திறக்கத் தொடங்கின. மணிக்கொடி காலத்து மகோன்னத எழுத்தாளர்களைப் பற்றி அவர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். முறை சாரா (non-conformist) எழுத்துக்களைப் பற்றியும் சூசகமான எழுத்துக்களைப் (suggestive writings) என்னுள் ஒரு புதிய பார்வை விரிந்தது. கட்டுக் குடுமியோடு அவர் கம்யுனிசம் பேசியது எனக்குத் தாங்கவியலாத ஆச்சர்யத்தைத் தந்தது. அவரது வெவ்வேறு பரிமாணங்களும் சிந்தனையின் வீச்சுகளும் என்னைப் பிரமிக்க வைத்தன.

ஒரு நாள் இரவு வெகு நேரம் உபநிஷத்துக்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். விவேகானந்தரின் புத்தகங்களைப் படித்து உபநிஷத்துக்களின் பால் எனக்கு ஓர் ஈடுபாடு ஏற்பட்டிருந்த காலம் அது. கரிச்சான்குஞ்சு ஈசாவாஸ்ய உபநிஷத்துக்களில் இருந்து ஒரு சுலோகமும் அர்த்தமும் சொல்லி அவருக்கே உரிய பாணியில், "முதல் சுலோகத்துல ஞானம் இல்லாம கர்மாக்களைக் கட்டிண்டு அழறவன் குருட்டுத்தனமான இருட்டில் பிரவேசிக்கறான் என்று சொல்றான். ரொம்ப சரி. எனக்கு அதுலே முழுக்க முழுக்க உடன்பாடு. ஆனா அடுத்த சுலோகத்துல குழப்பிடறான் பாரு..'கர்மாக்களை விட்டுட்டு ஞானத்தை மட்டும் உபாசிக்கறவன் அத விடப் பெரிய இருட்டில் பிரவேசிக்கரான்னு சொல்றான்யா.. ஏன் அப்படிச் சொல்லணும்?" என்று கேட்டுவிட்டு வெற்றிலையை எடுத்துப் போட்டுக்கொண்டே அசை போட்ட படி என்னைப் பார்த்தார். நான் சொன்னேன்.

"இந்த சுலோகத்தை நான் கூடப் படிச்சேன். கொஞ்சம் self-contradictory-யாகத்தான் படறது. ஆனா விவேகானந்தர் கர்மாங்கற பதத்துக்கு கொடுக்கற அர்த்தத்தை இன்றைய சூழலுக்குப் பொருத்தமானதா எடுத்துண்டு பார்த்தா, அந்த ரெண்டு சுலோகதுக்கும் முரண்பாடே இல்லாத மாதிரி இருக்கு.."

கரிச்சான்குஞ்சு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். "எப்படி சொல்றே..?" என்றார் ஆர்வமாய். "கர்மான்னா செயல். அதாவது action. அதைத்தான் அவித்யான்னு சொன்னதா வச்சிக்கலாம். அப்போ வித்யாங்கறது சிந்தனை.அதாவது thought. சமிபத்துல ஜவகர்லால் நேருவோட லெக்சர் ஒண்னு படிச்சேன். அதுல இந்த மாதிரி ஒரு வரி வருது. 'thought without action is abortion'-ன்னு சொல்றார். அடுத்த வரியிலேயே 'action without thought is folly'-ன்னு சொல்றார். இந்த வரிகள், அந்த ச்லோகங்களோட, நவீன காலத்துக்கொப்பத் திருத்தி அமைக்கப்பட்ட ஒரு revised version மாதிரி இல்ல..?"

அவர் கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தார். கண்களில் மட்டும் ஒரு புதையலைக் கண்டெடுத்த சந்தோஷம் மின்னியது. சட்டென்று கைகளை உயர்த்தி, " நீ தீர்க்காயஸா இரு.இந்த சின்ன வயசுலே என்னமா யோசிக்கறே..?" என்று குரல் தழுதழுக்கச் சொன்னார். எனக்கு ரொம்பவும் கூச்சமாய்ப் போய் விட்டது.

ஒரு வேளை என்னை ஆழம் பார்க்கக் கூட அவர் அந்த சுலோகங்கள் குழப்புவதாய்ச் சொல்லி இருக்கலாம். அல்லது அந்த சுலோகங்கள் நிஜமாகவே முரண் பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தும் என்னுடைய சாதுர்யமான விளக்கத்தில் அவர் உள்ளூர 'பயல் பரவாயில்லை.பழசையும் புதுசையும் ஒரு மாதிரி bridge பண்றான்' என்று ரசித்திருக்கலாம்.எது எப்படியோ, இளம் சிந்தனையாளர்களை மனம் திறந்து பாராட்டி அவர்களை வளர்த்து விட வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் அவரிடம் இருந்தது. அதைச் செயல் படுத்தவும் தயங்கவோ சோரவோ மாட்டார்.

மகாபாரதத்தில் திரௌபதியைப் பாண்டவர்கள் பகிர்ந்து கொள்கிற சம்பவத்தைப் பின்னணியாய் வைத்து, அந்தச் செயலை நியாயப்படுத்தச் சொல்லப்படுகிற போலிக் காரனங்களைஎல்லாம் கேலி செய்து 'சுயதர்மம்' என்று ஒரு நாடகம் எழுதி அவரிடம் போய்ப் படிக்கக் கொடுத்தேன். படித்து முடித்தவர் ஒரே வரியில் 'I am proud of you, my boy' என்று மட்டும் சொன்னார். அது மட்டுமல்லாமல் ஒரு பிரபலமான மாதப் பத்திரிகைக்கு அதை அனுப்பச் சொன்னார். 'அந்தப் பத்திரிகை இதை எல்லாம் போடாது சார்' என்றேன். 'நீ அனுப்புய்யா.. இவன் தான் இலக்கியத்தைக் காப்பத்தறேன்னு சொல்லிண்டு இருக்கானே..காப்பத்தரானா பார்போம்' என்றார். பத்தே நாளில் நான் எதிர்பார்த்த மாதிரியே நாடகம் திரும்பி வந்து விட்டது. கரிச்சன்குஞ்சுவுக்கு பயங்கரக் கோபம். "கோயில்ல மணி அடிக்க வேண்டியவன்லாம் இலக்கியத்துக்கு வந்துட்டான்யா.. இவன்களுக்கு creative thinking பத்தி எல்லாம் எப்படித் தெரியும்?" என்று சத்தம் போட்டவர் நாடகத்தைக் கணையாழி என்கிற டில்லிப் பத்திரிகைக்கு அனுப்பச் சொன்னார். ஒரு சில மாதங்களில் அந்த நாடகம் கணையாழியில் பிரசுரம் ஆனா பொது என்னை விட, கரிச்சன்குஞ்சுவே அதிகம் சந்தோஷப் பட்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.." Atlast, you got the recognition from the right people.."

கரிச்சான்குஞ்சு என்கிற அந்த அபூர்வ மனிதரின் புறத்தோற்றத்துக்கும் அகத்தோற்றத்துக்கும் இருந்த வெளிப்படையான முரண்பாடுகள் பல சமயம் என்னை ஆச்சர்யப் படுத்தும். சில சமயம் உறுத்தவும் செய்யும். நெற்றி நிறையத் திரு நீறு பூசி இருப்பார்.கடவுளாவது கத்திரிக்காயாவது என்பார். கோயில்களில் போய் ராமாயணம் உபன்யாசம் பண்ணுவார்.கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ள வேண்டும் என்பார். 'அப்புறம் ஏன் இந்தக் குடுமியும் விபூதிப் பட்டையும் என்று கேட்டால் 'எனக்கு இந்த வேஷம் வேண்டி இருக்கேய்யா ' என்று சொல்லிச் சிரிப்பார். "என்னைச் சொல்றியே .. எனக்குத் தெரிஞ்சு ஒரு ப்ரொபசர்.. மகா மேதாவி..சப்ஜெக்ட் என்ன தெரியுமா..அஸ்ட்ரோ பிசிக்ஸ்! ஆனா ஒரு அமாவாசை தவறாமத் தர்ப்பணம் பன்றான்யா.." என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, சட்டென்று தணிந்த குரலில் விஷமத் தனமாய்ச் சிரித்துக் கொண்டே 'ஹிப்போக்ரசி' என்றார் ஒரு தடவை.

ஆனால், அவரது தோற்றம் அவரோடு தோழமை கொள்வதற்கு ஒரு போதும் இடைஞ்சலாய் இருந்ததே இல்லை. கம்யுனிஸ்டுகள், வியாபாரப் பத்திரிகையாளர்கள், இலக்கியப் பத்திரிகையாளர்கள்,சங்கர மடத்தைச் சேர்ந்த வைதீகிகள் , நாஸ்திகர்கள், அமைப்பை எதிர்க்கிற தீவிரவாத இளைஞர்கள் என்று ஒன்றுக்கொன்று எதிர் எதிரான பல தரப்பு வட்டங்களிலும் அவரிடம் மரியாதை கொண்ட நண்பர்கள் இருந்தார்கள். அந்த அளவில் அவர் ஒரு சுவாரஸ்யமான புதிராகவே இருந்தார். ஒரு தொழு நோயாளியை மையமாய் வைத்து தனக்கே உரிய பாணியில் மனவியல் பார்வையோடு அவர் எழுதிய 'பசித்த மானுடம்' நாவலை, அவர் எழுத எழுத அவ்வப்போது அவர் வாயாலேயே படிக்கக் கேட்டு ரசிக்கிற வாய்ப்பு எனக்கு அந்தக் காலத்தில் கிடைத்தது. ஏனோ அந்த நாவல் விமர்சகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப் படாமல் போனது, ஒரு துர்பாக்கியமே.

ஒத்த சிந்தனையும் படைப்பார்வமும் உள்ள இளைஞர்களை எல்லாம் ஒரு கூரைக் கீழ்ச் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்குக் கரிசனம் இருந்தது. இதற்கு உதரணமாய் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். ஒரு தடவை தனது சோதனை எழுத்துக்களின் மூலம் இலக்கிய வட்டத்தில் நிறையப் பேரின் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்த மூன்று ஆற்றல் மிக்க இளைஞர்கள் சென்னையிலிருந்து கரிச்சன்குஞ்சுவைப் பார்க்க அவர் இல்லத்துக்கு வந்திருந்தார்கள். அந்த மூன்று பேரையும் வந்த கையோடேயே 'உங்க கட்சிக்குப் புதுசா ஒரு ஆள் தரேன். அவரையும் சேத்துக்குங்கோ' என்று சொல்லி, ராத்திரி ஒன்பது மணிக்கு மேல், எந்தப் பிராபல்யமும் இல்லாத என்னை அறிமுகப் படுத்தி வைக்க நான் தங்கி இருந்த அறைக்கே கூட்டி வந்து விட்டார். அப்புறம் அன்றைக்கு ராத்திரி இரண்டு மணி வரை, கரிச்சான்குஞ்சு வீட்டில் இலக்கிய ரகளை தான். மறக்க முடியாத அந்த இனிய இரவுப் போது, சம்பந்தப் பட்ட அந்த இளைஞர்களுக்கும் ஞாபகம் இருக்கலாம். அந்த இளைஞர்களில் இருவர் இன்றைக்குப் பிரபலமாய் இருக்கிற மாலனும், பாலகுமாரனும். இன்னொருவர் சுப்ரமணிய ராஜு-நம்மிடையே இல்லை.

78-க்குப் பிறகு, மன்னார்குடி விட்டு வேலை தேடி சென்னை வந்த என் வாழ்க்கை எப்படி எப்படியோ திசை மாறிப் போனது. அதற்கப்புறம் கரிச்சன்குஞ்சுவைப் பார்க்கக் கூட எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கில்லை. சென்னைக்கு வந்த புதிதில் 'அறிவு ஜீவிகள்' என்று சொல்லிக் கொண்ட என் வயதொத்த சில இளைஞர்களோடு , எனது படைப்பார்வதைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணி வலியப் போய்த் தொடர்பு கொண்டேன். ஆனால் என் அனுபவம் என் எதிர் பார்ப்பிற்கு மாறாய் இருந்தது. அவர்கள் மத்தியில் நிலவிய போட்டி, பொறாமை, தற்செருக்கு, சகிக்கவியலாத ஈகோ, எதிராளியைத் தனது சொற் சாதுர்யங்களால் மடக்கி மட்டம் தட்டி மகிழ்ச்சி கொள்ளும் sadism, உலகத்து இலக்கியங்களை எல்லாம் தாங்கள் கரைத்துக் குடித்து விட்டாற் போன்ற வறட்டு மமதை-ஆகியவை கண்டு மனம் நொந்து 'எங்கே, இருக்கிற கொஞ்ச நஞ்ச எழுத்தார்வமும் போய்விடுமோ' என்று பயந்து, சீக்கிரத்திலேயே அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.
ஒரு வகையில் சம வயது இளைஞர்களிடம் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், கரிச்சான்குஞ்சு என்கிற 'ஆன்றவிந்து அடங்கிய' முதியவரின் எளிமையையும் பெருந்தன்மையையும் இன்னும் அதிகமாகவே புரிந்து கொள்ள உதவி செய்தது. .

அக்கினிக் குஞ்சுகளை ஊதி ஊதி நெருப்பாகவும் செய்யலாம்.ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டி ஒரே அடியாய் அணைத்து விடவும் செய்யலாம். கரிச்சான்குஞ்சு முதல் ரகத்தைச் சேர்ந்தது. அக்கினிக் குஞ்சுகளைக் கண்டால் சந்தோஷம் கொண்டு கானம் பாடும்.பொத்தி நின்று அதை ஊதி விட்டு நெருப்பாக்கும்.

ஆனால் கரிச்சான்குஞ்சு சோர்ந்து போய், காட்டை விட்டே பறந்து போய் விட்டது. இனி, அத்தகைய பறவைகளை எந்த யுகத்தில் மறுபடியும் தேடுவது?


(Photo courtesy: Dhalavai Sundaram @www.flickr.com)