Thursday, October 27, 2011

“கவியா, மகா கவியா?” - சந்தேகம் தெளிவித்த படலம்!

“சார், நமஸ்காரம். ஒரு சின்ன சந்தேகம்.பாரதியார் வெறும் கவியா, மஹா கவியா?
“கொஞ்சம் ,பொறுங்கள்..ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன்!
“காந்தி வெறும் ஆத்மாவா, மகாத்மாவா?
“கொஞ்சம் இருங்கள், ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன்!
சரி இதையாவது சொல்லுங்கள்..பாரதியார் பிறப்பதற்குச் சில வருஷங்களுக்கு முன்னால் வரை வாழ்ந்தாரே, மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை... அவர் வெறும் வித்வானா, மகாவித்வானா?
இருங்கள், இதையும் ஜெயமோகனிடமே கேட்டுச் சொல்லி விடுகிறேன்!
“என்ன சார் இது, நீங்கள் எது கேட்டாலும் ‘ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன், ‘ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றே சொல்கிறீர்கள்..அது சரி, யார் இந்த ஜெயமோகன்?
“பாரதியாரை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால் ஜெயமோகனைத் தெரியவில்லை உங்களுக்கு..இது தமிழர்கள் செய்த துர்ப்பாக்கியம் தான்..பாரதியார் மகாகவி இல்லை என்று சொன்னவரே இந்த ஜெயமோகன் தான் சார்..
“அப்படியா, பாரதியார் மகாகவியாய் இருப்பதில் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை?”
“அதையும் ஜெயமோகனிடம் தான் கேட்க வேண்டும்..
“வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷிப் பட்டம் பெற வேண்டி விஸ்வாமித்திரர் தான், கஷ்டப்பட்டு அலைந்ததாய்ப் படிதிருக்கிறேன்.. ஆனால்,வசிஷ்டரின் ப்ரும்மரிஷிப் பட்டத்தையே ஒரு விஸ்வாமித்திரர் ரத்து செய்த கதை இப்போது தான் கேள்விப் படுகிறேன்..சரி.. இன்னும் நீங்கள் எனக்கு இந்த ஜெயமோகன் யார் என்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்கள்...அவர் என்ன நிறையத் தெரிந்த பண்டிதரா?
“சாதாரணப் பண்டிதர் இல்லை சுவாமி..மஹா பண்டிதர்..
“ஜெய மோகனை இப்படி மஹா பண்டிதர் என்று யார் சொன்னது?
“ஏன் ஜெயமோகனே சொல்கிறாரே..வேறு என்ன அத்தாட்சி வேண்டும் உமக்கு!

Wednesday, May 18, 2011

ஸ்டான்லி கா டப்பா



"தாரே சமீன் பர்" - படத்துக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த படம் சமீபத்தில் வெளியான " ஸ்டான்லி கா டப்பா ".

"தாரே சமீன் பர்" படத்துக்குக் கதை எழுதிய அமோல் குப்தே தான் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். குப்தேவுக்கு இயக்கத்தைப் பொறுத்தவரை இது முதல் படம். "தாரே சமீன் பர்" -இன் பரிமாணங்கள் இந்தப் படத்தில் கிடைக்கவில்லை என்றாலும், இது வேறொரு தளத்தில் நின்று பள்ளிக் குழந்தைகளின் மன நிலையை அணுகுகிறது.

படம் முழுதும் பள்ளிக் குழந்தைகளின் அப்பாவித்தனமும் சின்னச் சின்னக் குறும்புகளும் நிறைந்த யதார்த்தமான வகுப்பறைக் காட்சிகள் அற்புதமாய்க் கண் முன் விரிகின்றன.குழந்தைகளின் சாப்பாட்டு டப்பாக்களில் இருந்து வலுக்கட்டாயமாய் பங்கு கேட்டு வாங்கித் தின்பதையே தினமும் வாடிக்கையாய்க் கொண்டிருக்கும் ஹிந்தி வாத்தியார் பாபு வர்மாவுக்கு (அமோல் குப்தே), டப்பாவே இல்லாமல் வருகிற சிறுவன் ஸ்டான்லி (பார்ததோ குப்தே) புதிராகவும் எரிச்சல் ஊட்டுகிறவனாகவும் தெரிகிறான். தங்களை எப்போதும் சந்தோஷமாய் வைத்திருக்கும் சிறுவன் ஸ்டான்லியோடு தங்கள் டிபன் பாக்ஸ் உணவை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிற மற்ற குழந்தைகள் வர்மாவின் எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகின்றனர்.

ஸ்டான்லிக்கென்று கொண்டு வருவதற்கு டப்பா எதுவும் இல்லை. அவனது டப்பா எப்போதும் காலியாகவே இருக்கிறது. இரவில் ஓட்டலில் குழந்தைத் தொழிலாளியாகவும் பகலில் பள்ளிச் சிறுவனாகவும் இரண்டு முரண்பட்ட எல்லைகளுக்கு நடுவே ஊசலாடும் அவனது சோகம் எந்த மெலோ-டிராமாவும் இன்றி யதார்த்தமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

பார்த்தோ உட்பட இந்தப் படத்தில் நடிக்கும் அத்தனைக் குழந்தைகளும் தொழில் ரீதியான நடிகர்குளுக்குச் சவால் விடுகிற மாதிரி நடித்திருக்கிறார்கள். சிறுவன் பார்த்தோ ஒரு பேட்டியில்,"முதலில் நாங்கள் நடிக்கிறோம் என்றே எங்களுக்குத் தெரியாது.. ஏதோ workshop என்று சொல்லி சனி ஞாயிறுகளில் கூட்டி வந்து பயிற்சி கொடுத்தார்கள். பார்த்தால் கடைசியில் இதுதான் சினிமா என்று சொல்லி விட்டார்கள்.." என்று சொல்லியிருப்பது சுவாரஸ்யமான செய்தி. அது மட்டும் இல்லாமல் "இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் படிப்பு ஒரு நாள் கூடத் தடை படாமல், முழுக்க சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் படமாக்கப் பட்டது" என்று படத்தின் கடைசில் காண்பிக்கப் படுகிறது.
(குழந்தைகளை வைத்து reality show போட்டிகள் நடத்தும் தொலைக் காட்சி ஊடகங்கள் கவனிக்க)

ஏற்கெனெவே சில விமர்சனங்களில் குறிப்பிட்டதையே தான் திரும்பவும் சொல்ல வேண்டி இருக்கிறது. " இந்தப் படத்தில் குழந்தைகள் அசலான குழந்தைகளாக இருக்கிறார்கள்; பெரியவர்கள் அசலான பெரியவர்களாக இருக்கிறார்கள்.."

உங்கள் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும்,கூடவே உங்கள் குழந்தைக்காலத்தை ஓர் இரண்டு மணி நேரம் திரும்பவும் இன்னொரு முறை வாழ்வதற்காகவும் இந்தப் படத்தை அவசியம் எல்லோரும் போய்ப் பாருங்கள்.ஏனென்றால், இந்திய சினிமா வயசுக்கு வந்திருப்பதை மறுபடியும் இந்தப் படம் நிருபித்திருக்கிறது.

Thursday, February 3, 2011

மூன்று பல்கேரியப் படங்கள்



(சுவடு-சிற்றிதழ்-1978-இல் வெளிவந்தது)
மூன்று பல்கேரியப் படங்கள்


இரண்டு ஹாலிவுட் வக்கிரங்கள் (எக்ஸார்ஸிஸ்ட், ஓமன்) மாசக் கணக்கில் சென்னை நகரில் ஒரு பெரிய பூச்சாண்டி காட்டி முடித்து ஒரு வழியாய் தங்கள் கடையைச் சுருட்டிக் கொண்டிருகிற இந்தக் கால கட்டத்தில் சப்தமே இல்லாமல் மூன்று வித்யாசமான- கலைப் பிரக்ஞை உள்ள பல்கேரியப் படங்கள் ருஷ்யக் கலாசார இல்லத்துத் திரையரங்கில் சென்ற மாத இறுதி வாரம் மின்னல் வேகத்தில் வந்து போயின. பல்கேரிய மக்கள் குடியரசின் சார்பில் ஆகஸ்ட் 23 முதல் 30 வரை இங்கு இந்தப் பட விழா நடந்தது. இந்த இடத்தில் இதே மாச் ஆரம்பத்தில் best Indian feature films எனகிற சில மோசமான தெலுங்குப் படங்களைத் திரையிட்டதற்குப் பிராயச்சித்தம் போலவும் அவை இருந்தன. அல்லது கதைக்கான கருப்பொருளில் ஆகட்டும், தொழில் நுட்பத்தில் ஆகட்டும், அதன் வெளியீட்டுப் பாங்கில் ஆகட்டும் (method of presentation)-இத்தகைய வேற்று நாட்டுப் படங்களின் முன் நாம் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணர்த்தும் பொருட்டுத் தற்செயலாய் நேர்ந்த முரண்பாடுகளைப் போலவும் அவை இருந்தன.



முதல் படமான Affection அலெக்ஸாண்டர் கராஸிமெனோவின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. ல்யூடிமில் ஸ்டைக்காவின் இயக்கத்தில் உருவானது. அத்தையோடும் தந்தையோடும் பிணக்கு கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, ஒரு holiday house-இல் போய் தங்குகிற இளம் நர்ஸ் மரியாவின் மனோ நிலைகளை, ஓர் எழுது கோலின் மொழியாக இன்றி, காமிராவின் மொழியாகச் சொல்லுகிற கதை. இரண்டாவது படம் Cyclops. ஒரு நீர் மூழிகிக் கப்பலின் கமாண்டரைக் கருப்பொருளாகக் கொண்டு நீருக்கு மேலேயும் நீருக்கு அடியிலேயும் வித்யாசமான மனித உணர்வுகளைத் தேடி சோகத்தோடும் உத்வேகத்தோடும் துருவி அலைகிற காமிரா. மூன்றாவது, ஒரு சுவாரஸ்யமான, ஆனால் யதார்த்தம் பங்கப்படாத காதல் கதை; “Be happy Annie!” காதல் கதை என்பது ரொம்பவும் சராசரியான வார்த்தை. காதலர்களின் கதை என்பதே பொருந்தும். பாட்டுப் பாடாத காதலர்கள்; முச்சந்தியில் துரத்திக்கொண்டு ஓடாத காதலர்கள்; முகத்துகருகில் முகத்தை இழுத்துக் கொண்டே போய்ச் சட்டென்று உச்சந்தலைக்கு மேல் தயாராய் இருக்கிற புறாவையோ, குருவியையோ காட்டுகிற இயக்குனரின் போலித்தனத்துக்கும் பாமர ரசிகனின் கோபமான விசில் சத்தத்துக்கும் உடந்தையாகிற பாவத்தைச் செய்யாத காதலர்கள்! எல்லாவற்றையும் விட அன்னியின் சந்தோஷத்துக்காகத் தனது பல்கேரியப் பயணத்திட்டத்தையே தியாகம் செய்து, காதலி வேலை பார்க்கிற அந்தச் சின்ன ஊரிலேயே தனது விடுமுறையைக் கழித்து விட்டு, மனத் திருப்தியோடு மாஸ்கோ திரும்புகிற ருஷ்ய பைலட் ஆன்ட்ரி பெட்ரோவிச் தான் இந்தப் படத்தின் சுவாரஸ்யமான கதா பாத்திரம். பல்கேரியர்கள் தங்களுக்கு ரொம்பவும் பழக்கமான ருஷ்ய விசுவாசத்தை இதில் இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
( "Affection" என்ற படத்திலிருந்து ஒரு காட்சி )


My scripts are in visual form” என்று சத்தியஜித்ரே Amercan film பத்திரிகைக்கு சமீபத்தில் சொன்ன அந்த அழகான வார்த்தைகள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றன. சினிமா என்பது வெறும் செல்லுலாய்ட் கண்காட்சி அல்ல. அது, காமிராவின் மேன்மையான பரிபாஷை. அதற்கும் மேல், அது நகர்கின்றதும் நகராததும் ஆன பிம்பங்களின் கூட்டுத் தோற்றத்தில் தன்னிச்சையாய் அர்த்தப் படும் சங்கேதம். நல்ல படம் மோசமான படம் என்கிற பாகுபாடுகள் எல்லாம் இந்த அடிப்படையில் உணரப்படுகிற விஷயமே அன்றி, பரிட்சைப் பேப்பர் போல் மதிப்பெண் போட்டுத் தீர்மானிக்கிற விஷயம் அன்று. பல்கேரியன் சினிமடாகிராஃபியின் தொழில் நேர்மையும் கலைப் பிரக்ஞையும் என்னை வியப்பில் ஆழ்த்தின.


அன்பின் வித்யாசமான வடிவங்களை, அவற்றின் முகமூடிகள் விலகுகிற அண்மையில் சந்திக்கிற இளம் நர்ஸ் மரியா விசித்திரமான மன நிலைகளுக்கு ஆளாகிறாள். வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியே வந்து விட்ட நிலையிலும் தன்னை வாஞ்சையோடு பின் தொடர்ந்து வருகிற தந்தை; ”It is none of my business, but…” என்று பிரகடனப் படுத்திக் கொண்டே நேச பாவத்தோடு அவளுக்கு, தானே உணவு பரிமாறுகிற மேனேஜர்; அவளை சந்தோஷப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, சுவர் மூலையில் போய்த் தலை கீழாய் நிற்கிற ஜர்னலிஸ்ட்…. இவை எல்லாமே எரிச்சல் ஊட்டும் அசட்டுத்தனங்களாய்ப் படுகின்றன மரியாவுக்கு. தன்னைத் தனித்துவப் படுத்திக் கொள்கிற சுதந்திரத்துக்கு அவை ஊறு விளைவிப்பதாய் எண்ணி அவள் சினம் கொள்கிறாள். திரும்பத் திரும்ப, எப்போதோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த அந்த AIR-man நிக்கோலயின் முகம் மட்டும் தவிர்க்க முடியாமல் அவள் நினைவில் இடறுகிறது. அந்த சமயங்களில் எல்லாம் ஒரு வெள்ளை விமானம் பனிப் படலத்தை மெல்லக் கிழித்துக் கொண்டு தூரத்திலிருந்து சிறிது சிறிதாய்ப் பெரிதாகித் திரையை அடைத்துக்கொண்டு முன்னுக்கு வருவதை அவள் ஒரு மனத்தோற்றமாய்க் காண்கிறாள். கடைசியில், அவனை சோஃபியாவில் கண்டுபிடித்துத் தன் அறைக்கு வரவழைக்கிறாள். மரியாவின் அறையில் ஒரு விசித்திரமான மேஜை விளக்கு இருக்கிறது. அதன் திரவம் நிரம்பிய கண்ணாடி சிலிண்டரின் உட்புலத்தில் இரத்தச் சிவப்பில் இரண்டு குமிழிகள் உப்பிபும் சுருங்கியும் மாறி மாறி மேலும் கீழும் மிதந்து கொண்டிருக்கின்றன. நிக்கோலே உள்ளே நுழைந்தவுடனேயே அந்த விசித்திர விளக்கை விந்தையோடு பார்க்கிறான். பிறகு மரியாவின் பரபரப்பும் ஏக்கங்களும் நிறைந்த முகத்தைப் பார்க்கிறான். தனது திருமணத்துக்கு அவளை அழைக்க முடியாமல் போனதுக்காக வருத்தம் தெரிவிக்கிறான். அந்த நேரத்தில், அவளுள் ஏதோ ஒன்று சத்தம் இல்லாமல் எதிலோ மோதி வெடித்துச் சிதறுகிறது.


Affection என்ற இந்தப் படத்திலும், Cyclops- என்ற படத்திலும் கதை என்று பெரிதாய் எதுவும் இல்லை. அப்படி ஒன்று வருகிற போதே கலைஞன் சுவர்களுக்குள் சிக்கிக் கொள்கிறான். யதார்த்தங்களின் தரிசனத்துக்கு அதுவே நந்தியாகி விடுகிறது. எந்த உலகில் சூரியோதயமும் சூரிய அஸ்தமனமும் அங்கு ஜீவிக்கிறவர்களால் அறியப்படுவதில்லையோ…’ என்று ஆரம்பமாகிறது Cyclops- படம். ஸப்மரின் கமாண்டரின்- சாவுகளைச் சந்தித்து வாழ்வின் நளினங்கள் மங்கி இறுகிப்போன முரட்டு முகம் பெரிஸ்கோப்பின் eye piece-க்குப் பக்கத்தில் தெரிகிறது. தொடர்ந்து பெரிஸ்கோப்பின் மேல் கீழ் இயக்கங்கள்; நீருக்குள் நெளியும் சிறிதும் பெரிதுமான மீன்கள்;நீருக்கு வெளியே அவருக்காக ஆசாபாசங்களோடு காத்திருக்கும் அவரது மனைவி மக்கள்; அவர்களின் மனிதத் தன்மையும் உயிர்த்துடிப்பும் நிறைந்த உணர்ச்சிப் போராட்டங்கள். நீ இங்கு அவ்வப்போது வந்து இட்டு வைக்கிற முட்டைகளை விசுவாசத்தோடு அடைகாத்துக் குஞ்சு பொறிக்கிற பெட்டைக் கோழி இல்லை நான். .என்று சீறுகிற கமாண்டரின் முதல் மனைவி அவனது மனப் போராட்டங்களுக்குத் தூண்டு களம் ஆகிறாள். கடைசியில் கமாண்டர் விசித்திரமான பிரமைகளில் மூழ்குகிறான். அட்லாண்டிக் மகா சமுத்திரமே திடீரென்று ஆவியாகி வற்றி வறண்டு போகிறது. மனித குலத்தின் மொத்த அழிவிற்குப் பின்னரும் எஞ்சி நிற்கிற சிலரில் ஒருவனாய் வறண்ட சமுத்திரப் படுகையில் ஆக்ஸிஜன் மாஸ்குகளோடு அவன் நடந்து செல்கிறான். சுற்றிலும் கபாலங்களும் எலும்புகளும்- அழிந்து போன மனித வர்க்கத்தின் எச்சங்களாய் இறைந்து கிடக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஒரு நீர்ப் பாறையின் உச்சியில் ஐன்ஸ்டினின் அந்தப் புகழ் பெற்ற ‘E=mC2 ‘ கேட்பாரற்று மௌனமாய்க் காட்சி அளிக்கிறது. Cyclops- உணர்த்தும் உன்னதமான சோகம் இது. நூறு வயலின்களைப் பின்னணியில் நிறுத்திவைத்து முகாரியை இழுக்கச் சொன்னாலும் உணர்த்த முடியாத சோகம்.


Affection தருகிற செய்தி எத்தனைக்கெத்தனை மிருதுவானதோ அத்தனைக் கத்தனை நெருடலானது சைக்லோப்ஸ்தருகிற ஒன்று. வாழ்வின் இரண்டு extreme-களை அலட்சியமாய்த் தொட்டு விட்டுத் துள்ளுகிற அந்தப் பெருங்கலைஞனின் சாமர்த்தியம்அமைதி வேட்கையையும் மனித நேயக் காதலையும் உடனடி அவசியங்களாய் உணரச் செய்ய அவன் மேற்கொள்கிற வீண் ஆரவாரங்களும் பாஷையின் ஊதாரித்தனங்களும் அற்ற- உன்னத முயற்சிகள்.


இந்தப் படங்கள் எதிலுமே மூன்றில் இரன்டு பங்குக்கும் மேல் எந்த இடத்திலும் பின்னணி என்கிற பேரில் சங்கீத இயக்குனரின் அதிகப் பிரசங்கித்தனங்களோ அனாவசியக் குறுக்கீடுகளோ இல்லை. பெரும்பாலான இடங்களில் இயல்பான ஓசைகளே பின்னணியில் சம்பவங்களுக்கு பலம் சேர்க்கின்றன. கால் சராய்களின் ஓசை; மின் விசிரி சுற்றுகிற ஓசை; ஸ்ப்ரிங்க் கதவுகள் திறந்து மூடிக்கொள்கிற ஓசை; எங்கோ தூரத்துப் பூந்தோட்டத்தில் பட்சிகள் விட்டு விட்டு சப்திக்கிற ஓசை; ஒரு மெல்லிய முணுமுணுப்பு மாதிரி அவ்வப்போது இதமாய்க் காற்றில் மிதந்து வருகிற கிட்டாரின் ஓசை


கம்யூனிஸ்ட் நாடுகளில் சிந்தனா சுதந்திரம் கிடையாது என்கிற மாதிரிப் பிரசாரம் செய்யப் படுகிறது. வாழ்க்கையின் வித்யாசமான பரிமாணங்கள் மேன்மையான கலை வடிவம் பெற்று உயிர்த்தெழுவது என்பது சிந்தனா சுதந்திரம் அற்றுப் போன எந்த சமூகத்திலும் மருந்துக்குக் கூட சாத்தியம் இல்லை. அரசியல் கொள்கைகளும் வியாபார உத்திகளும் தீண்டி அசுத்தமாகாத உயரத்தில் வைத்துக் கலையை பல்கேரியர்கள் காப்பாற்றுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. “THE AIM OF ART IS TO COMMUNICATE THE INCOMMUNICABLE REALITY”.- Eugene Ionesco.