Tuesday, September 17, 2013

பெரியார் பிறந்த நாளில், பெரியார் பற்றிய ஒரு பார்வை


ருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் பெரியாரின் பிரவேசமும், பிரசாரமும் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் அவசியப்பட்ட 'காலக் கட்டாயங்'களாகவே இருந்தன. ஆனால் எல்லா இசங்களைப் போலவே அதுவும் ஒரு காலத்துக்குப் பின் நீர்த்துப் போனது. கால ஓட்டத்தில்,பெரியார் பிரசாரம் செய்த கடவுள் மறுப்புக் கொள்கை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற விஷயங்கள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அல்லது முற்றிலுமாக மறக்கப் பட்டு, அவரது 'பிராமண எதிர்ப்பு' என்கிற ஒரு விஷயம் மட்டும் 'பிராமணத் துவேஷ'மாக சமூகத்தில் ஒரு நோய் போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது. இது ஒரு துரதிர்ஷ்டம் தான். 

சமூகத்தின் ஆழ் மனதில் காலம் காலமாகப் புதைந்திருந்து, வெளியே வெடிப்பதற்கான தயார் நிலையில் இருந்த பிராமண எதிர்ப்பு உணர்வு பெரியாரின் பிரவேசத்தில் ஒரு வடிகாலை உணர்ந்திருக்க வேண்டும். ஒருவேளை பெரியார் பிராமண எதிர்ப்பு என்கிற கவசத்தை அணியாமல் இருந்திருந்தால் அவரால் 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்று பொது மேடைகளில் தைரியமாகப் பேசி இருக்க முடியமா என்பது சந்தேகமே. பெரியாரின் பிராமண எதிர்ப்பு, பிராமணர்களைப் போலவே அப்போது சமூகத்தில் அதிகாரம் செலுத்தி வந்த பிற 'மேல் ஜாதி' இந்துக்களைத் தனியே அடையாளம் காட்டாமல் விட்டு விடவே, பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று சமூகம் polarize ஆகிப் போனது. அப்படி ஒரு முகமாய்க் குவிந்த சமூகத் தளத்தில், பிற ஆதிக்க முகங்கள் 'பிராமணர் அல்லாதார்' என்ற ஒரு சௌகரியமான போர்வைக்குள் போய் ஒளிந்து கொண்டன. சமூகத்தின் சகல தீமைகளுக்கும் ஒட்டு மொத்தக் காரணிகளாக பிரமாணர்கள் மட்டும் தனிமைப் படுத்தப் படுவதிலேயே பரிதாபமாக இது முடிந்தது. 

இன்றைக்கு பிராமணர்கள் தங்கள் அனைத்து அதிகார மையங்களையும் பழைய சமூக அகங்காரங்களையும் ஒரு சேர விட்டு விட்டவர்களாய், தங்கள் அடையாளங்களை இழந்துப் பொது நீரோட்டத்தில் கரைந்து விட்டனர். ஆனால், அதே சமயம் புதிய அதிகார மையங்கள் வேறு திசைகளிலிருந்து முளைக்கத் தொடங்கி விட்டன. 

அதனால், இந்தக் காலத்துக்கொவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை அவரது தொண்டர்கள் புறந்தள்ளி விட்டு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பெண் சமத்துவம் போன்ற தளங்களில் பெரியார் விட்டுச் சென்ற மேன்மையான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்போதைக்குப் பெரியாரைச் சரியான முறையில் மீட்டெடுத்து, அவரது பன்முக மேதைமையை இன்றைய இளைஞர்கள் முன் வைப்பதே, அவருக்கு  நாம் செய்யும் மெய்யான அஞ்சலி.

Friday, September 13, 2013

சிறுகதை


ஜங்ஷன்

எஸ்.எம்.ஏ.ராம் 






சின்ன ஜங்ஷன். இங்கிருந்து இரண்டு கிளைகள் வெவ்வேறு திசைகளில் பிரிவதால் இது ஜங்ஷனாயிற்று. பிரிந்தாலும் ஜங்ஷன்; சேர்ந்தாலும் ஜங்ஷன். உயரத்திலிருந்து பார்த்தால் பிரிதல் சேர்தல் எல்லாம் ஒன்று தான். ஒரே புள்ளி. அதில் தான் தண்டவாளங்களின் பிரிதல் சேர்தல் எல்லா நிகழ்ச்சிகளும்.

இன்ஜினை அவிழ்த்துக் கொண்டு போய் விட்டாகள். இந்த ஸ்டேஷனில் தான் மின் என்ஜினுக்குப் பதிலாக  டீசல் எஞ்சினையும், டீசல் எஞ்சினுக்குப்  பதிலாக  மின் எஞ்சினையும் மாற்றுகிறார்கள். பழைய காலத்தில் வண்டியில் மாட்டுக்குப் பதிலாகக் குதிரையையும் அல்லது குதிரைக்குப் பதிலாக மாட்டையும் மாற்றிப் பூட்டுகிற மாதிரி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  இன்னும் முக்கால் மணி நேரமாவது ஆகும். சங்கரன் ரயில் பெட்டியை விட்டுக் கீழே இறங்கினான். கையைச் சுடுகிற வரை சிகரெட் எரிந்து விட்டது. இனித் தூக்கி எரிய வேண்டியது தான். கொஞ்ச நேரம் கேன்டீனில் போய் உட்காரலாம் என்று தோன்றியது. பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் அவன் வழக்கமாய் உட்கார்ந்து நண்பர்களோடு பேசும் இடம். அதே கரை படிந்த வாஷ்பேசின். அதே விரிசல் விழுந்த வட்டமான   மரமேஜை. சுவர்க் கடிகாரம் கூட அன்றைக்குப் பார்த்த மாதிரியே தான் இருந்தது. காலத்தை மீறிக் கொண்டு காலம் காட்டுகிற-அல்லது காலம் தள்ளுகிற அவஸ்தை.

சங்கரன் உள்ளே போய்ப் பூரியும் காப்பியும் வாங்கிக் கொண்டு மேஜைக்கு வந்தான். ஜன்னல் வழியாய் எதிர்ப் பிளாட்ஃபாரத்தில் இன்னொரு திசையில் செல்லும் ரயில் மெதுவாய் உள்ளே வருவது தெரிந்தது. ரயில் ஜன்னல்களில் எல்லாம் முகங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவியலாய்க் குரல்களின் இரைச்சல். அந்த ரயிலும் இன்னும் முக்கால் மணி நேரம் நிற்கும். அதன் என்ஜினும் டீசலுக்கோ, மின்சாரத்துக்கோ மாறத் தனியே பிரிந்து செல்லும். அதிலிருந்தும் இவனைப் போலவே ஓர் ஒற்றை மனிதன் எவனாவது பொழுதைக் கழிக்க இந்தக் கேன்டீனுக்கு வரலாம். பழகின முகமாகவும் அது இருக்கலாம். அதுவும் பூரியும் காப்பியும் வாங்கிக் கொண்டு இந்த மேஜைக்கே வந்து, இவனெதிரிலேயே உட்கார்ந்து கொள்ளலாம். ஏனெனில் இது ஜங்ஷன். சந்திப்புகள் நிகழ்ந்தே தீர வேண்டிய இடம்.

சொல்லி வைத்த மாதிரியே நிகழ்ந்தது. சங்கரனின் முன்னால் வந்து உட்கார்ந்த மனிதனுக்கு இவனது வயதே இருக்கலாம். தேனடை மாதிரி முகவாயில் தாடி வைத்திருந்தான். நெற்றியில் பட்டையாய்த் திரு நீறு பூசி இருந்தான். கழுத்தில் உத்திராட்சம் கட்டி இருந்தான்,. இடுப்புக்குக் கீழே கறுப்பு வேஷ்டி. சபரிமலைக்குப் போகிறவன். என்னவோ நினைத்து சங்கரன் தனக்குத் தானே சிரித்த போது, எதிராளி இவனை நெற்றி சுருங்கப் பார்த்தான்.

தான் சிரித்தது இவனைப் பாதித்திருக்குமோ என்று சங்கரனுக்கு உறுத்திய கணத்தில் தாடிக்காரன் தயக்கத்தோடு, “நீ.. சங்கரன் இல்லே...?” என்று இவனைப் பார்த்துத் தணிந்த குரலில் கேட்டான்.

சங்கரன் ஆச்சரியமாய் அவனை ஏறிட்டுப் பார்த்தான். தாடி அவனது அடையாளத்தைப் பெருவாரியாய் மங்கடித்திருந்தது. ஆனால் அதையும் மீறி அந்தக் குரல்...அந்தக் குரலுக்குரிய உதடுகள்..இடுங்கிய கண்கள்..எல்லாமாய் சங்கரனின் ஞாபகத் திரையில் சலனங்களை உண்டு பண்ண, அவன் ஆச்சரியமாய் ‘அவனா இவன்’ என்று யோசித்தான்.

“என்னத் தெரியலே..? நான் தான் சுந்தரம்..”

“மை குட்நெஸ்! ரேஷனலிஸ்ட் சுந்தரம்!  இது என்னப்பா வேஷம்?”

“அது இருக்கட்டும். நீ எப்படி இங்கே..”

சங்கரன் தான் வேலை பார்க்கிற இடம், போகிற ஊர் எல்லாம் சொல்லி, எதிர்த்திசையில் செல்கிற அந்த ரயிலில் தனது பெட்டி எண், இருக்கை எண் ஆகியவற்றையும் சொல்லிச் சிரித்தான்,

சுந்தரம் எதுவும் பேசாமால் எதிரில் இருப்பவனையே உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பழைய ஞாபகங்களை அசை போடுகிற மாதிரி அவன் முகபாவம் இருந்தது; அல்லது எதிராளியின் முகத்தை ஆராய்கிற மாதிரியும் இருந்தது.

சங்கரனே மௌனத்தைக் கலைத்தான். “நாம் பழகின காலம் எல்லாம் ரொம்பப் பசுமையா ஏதோ நேத்திக்கு நடந்த மாதிரி ஞாபகத்துல இருக்கு. பதினைஞ்சு வருஷமாவது இருக்காது, நாம கடைசியாப் பார்த்து? அதுக்கப்பறம் ஒரு ரெண்டு வருஷத்துக்கு நம்ம கிட்டக் கடிதத் தொடர்பு கூட இருந்ததா ஞாபகம். நாம கடைசியா சந்திச்ச அந்த சாயங்காலப் போது இன்னும் கூட நினைவுல இருக்கு. அன்னிக்கு ரங்கபுரம் துர்க்கை கோவில்ல பௌர்ணமி பூஜை அமர்க்களப் பட்டது. ஸ்பீக்கர் செட்டுலேருந்து ஒரே அம்மன் பாட்டுக்களாப் போட்டுத் தள்ளிக் கிட்டிருந்தாங்க. ’காஞ்சியில காமாட்சி, காசியில விசாலாட்சி, மதுரையில மீனாட்சி’ன்னு ஒரே புள்ளி விவரமாக் கொடுத்துண்டு ஒரு பாட்டு.. அப்ப நீ ஒரு கமென்ட் அடிச்சியே, “அம்மன் எத்தனை இடத்துல பிரான்ச் வச்சிருக்காய்யா’ன்னு....ஞாபகம் இருக்கா? எனக்கு இப்ப நெனச்சாலும் சிரிப்பு வருது..”

சங்கரன் பூரியை விண்டு வாயில் போட்டுக் கொண்டான். சுந்தரம் ரவாக் கிச்சடியில் இருந்து ஒரு மிளகாயைத் தேடி எடுத்து வெளியில் எறிந்தான். சங்கரனின் கூர்மையான ஞாபக சக்தியை வியக்கிறவன் மாதிரி முகத்தில் பிரகாசம் காட்டினான்.

“ஆனா உனக்கு அப்படியெல்லாம் பேசறது அப்பப் பிடிக்காதே?” என்ற சுந்தரம், சட்டென்று பேச்சை மாற்ற விரும்பி, “முந்தி எல்லாம் இதே கேண்டீன்ல ரவா கிச்சடின்னா எத்தனை முந்திரிப் பருப்பு கையில அகப்படும்? ஹ்ம்ம்..அப்படியும் ஒரு காலம் இருந்தது. அப்ப வீசினக் காத்து கூட இப்ப வீசற காத்தை விட மேன்மையானதா இருந்திருக்கணும்னு நினைக்கத் தோணுது.. எல்லாமே எப்படி மாறிப் போச்சு!”  என்று தொடர்ந்து பேசினான்.

‘சிலது தலைகீழா மாறிடுது.. சிலது கொஞ்சம் கொஞ்சமா மார்றது தெரியாம மாறுது. சிலது மாறாம அப்படியே இருக்கு. இந்த ரவுண்ட் டேபிள்; அந்த சுவர்க்கடிகாரம்..”

“அய்யர்  இருக்காரா இல்லையா?”

“அய்யர் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். பையன் தான் மேற்பார்வை பண்றானாம். பையனுக்கு இதை இம்ப்ரூவ் பண்றதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லேன்னு சொன்னாங்க. சந்நிதித்  தெருவுல ஒரு வீடியோ கடை தெறந்திருக்கானாம். நல்ல பிசினஸ். சிவன் கோவில் குருக்கள்லேருந்து அத்தனை பெரும் அவன் கிட்ட கஸ்டமர்ஸ்! லீஸ் முடிஞ்சவுடனே இதை வேற யாருக்காவது கொடுத்தாலும் கொடுத்திடுவான். இதெல்லாம் அப்பப்பக் கேளிவிப்படறது..அவ்வளவு தான். எல்லாம் செகண்ட் ஹான்ட் இன்ஃபர்மேஷன். நானும் இந்த ஊரை விட்டுப் போயி எத்தனை வருஷமாச்சு!”

சுந்தரம் ரொம்பவும் ஆச்சரியப்பட்டான். “நீ இங்க இல்லாமலேயே இத்தனை விஷயங்களைத் தெரிஞ்சு வச்சுருக்கியே? பெரிய ஆச்சரியம் தான். அந்த நாள்லேருந்தே உனக்கு எல்லாத்துலேயும் க்யூரியாசிட்டி அதிகம். பேசாம நீ ஒரு பிரஸ் ரிபோர்டராப் போயிருக்கலாம்!” சுந்தரம் சிரித்த போது, முன் பற்கள் இரண்டும் பக்க வாட்டுப் பற்களோடு தொடர்பின்றி வித்தியாசமான வெள்ளையாய் இருந்தன. அந்தக் காலத்தில் அந்த இரண்டு பற்களும் அவனுக்கு மங்கிப் பழுப்பாய்த் தெரியும். ஒரு வேளை புதுசாய்க் கட்டி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் அவனிடம் இந்த அவசரம் நிறைந்த குறுகிய இடைவெளியில் விசாரித்துக் கொண்டிருப்பது அசட்டுத் தனம். ஆனால் இந்த வேஷத்துக்கு எப்படி மாறினான் என்று மட்டும்   கேட்டுத் தெரிந்து கொண்டு விடவேண்டும். இல்லை என்றால் மண்டை வெடித்து விடும்.

சங்கரன் பேச வாயெடுக்கும் முன் சுந்தரம் மௌனத்தைக் கலைத்தான். “ஏம்பா..அந்தக் காலத்துல எல்லாம்     
நெத்தியில ஒரு சின்ன விபூதிக் கீத்தும் சந்தனப் பொட்டும் வச்சிக்காம வெளியில வர மாட்டியே. என்ன ஆச்சு அதெல்லாம்? வேர்வையில அழிஞ்சு போச்சா?”

சங்கரன் சட்டென்று பதில் சொல்லாமல் இன்னொரு பூரி விள்ளலை வாய்க்குள் தள்ளி, அதை நன்றாய்க் கடித்து மென்று விட்டுக் கொஞ்சம் தண்ணீர் குடித்தான். சுந்தரம் இன்னும் கொஞ்சம் கிச்சடியைக் கையில் எடுத்தான்.

“சுந்தரம்.. உனக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் சொல்லப் போறேன் இப்போ.....நான் அந்தப் பழைய சங்கரன் இல்ல. எனக்குக் கடவுள்  நம்பிக்கை எல்லாம் போயிப் பல வருஷம் ஆச்சு.”

சுந்தரம் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தவன் மாதிரி சங்கரனைப் பார்த்தான். இவனா? எப்படி நம்புவது இதை? செவ்வாய், வெள்ளி கோவிலுக்குப் போகத் தவற மாட்டான். பிரதோஷம் என்றால் கல்லூரிக்குக் கூட மட்டம் போட்டு விட்டு, நந்திகேஸ்வரர் சன்னதியில் பழி கிடப்பான். ஊரில் எந்த இடத்திலாவது பஜனை என்றால், இவன் தான் சுருதிப் பெட்டியைத் தோளில் மாட்டிக்கொண்டு நாலரைக் கட்டையில் கத்தியபடி முன்னால் நடந்து போவான். ‘கடவுள் இல்லை என்று எவனாவது சொன்னால் கோபமாக, ”கடவுள் இல்லாம சூரியன் எப்படி உதிக்கறதாம்? பூமி எப்படி சுத்தறதாம்?” என்கிற ரீதியில் எதிராளியைப் பதில் கூடச் சொல்ல விடாமல் தர்க்கத்தில் இறங்கி விடுவான். இப்போதும் ஞாபகம் இருக்கிறது. மேலத்தெரு பிள்ளயார் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, பி.காம். பரிட்சையைக் கூடப் பொருட்படுத்தாமல், ஏப்ரல் மாத வெய்யிலில் எப்படித் தெருத் தெருவாய் அலைந்தான்? அந்தப் பிள்ளையா இவன்?

சுந்தரத்தின் கண்களில் இருந்த வியப்பு சங்கரனின் கண்களிலும் தெரிந்தது. எது மூலம், எது பிரதிபலிப்பு என்று கண்டு பிடிப்பது கஷ்டம் தான்.

சங்கரனே பேசினான்; ”நான் எப்படி மாறினேன்கறது இருக்கட்டும்..நீ எப்படி இப்படி பக்திப் பழமா மாறினே? என்னால துளிக் கூட நம்பவே முடியலே. உங்கப்பா எப்பேர்ப்பட்ட சுயமரியாதை இயக்கத் தீவிர வாதி!”

சுந்தரத்தை நன்றாகவே நினைவிருக்கிறது.. ‘திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் என்றால், அப்புறம் மடையர்களே ஏன் தினமும் காலையில் பல் தேய்க்கிறீர்கள்? டூத் பேஸ்ட் செலவாவது மிச்சம் ஆகுமே?’ என்று கோவில் சுவரில் கரிக்கட்டியால் எழுதியவன் அவன். சைக்கிள் கேரியர் பெட்டியில் வெள்ளைப் பெயிண்டால் ‘கடவுளை மற..மனிதனை நினை” என்று எழுதி வைத்துக் கொண்டு ஊரை வலம் வருவான். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தை வகுப்பு மாணவர்களிடம் சர்க்குலேஷன் விட்ட விஷயம் முதல்வர் வரைக்கும் போக, பரம பக்தரான அந்தப் பிரின்சிபால் இவனை வேறு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிப் பத்து நாள் கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததும் கூட இப்போது நினைவுக்கு  வருகிறது.... அந்த சுந்தரமா இவன்?

சுந்தரம் லேசாய்ச் சிரித்துக் கொண்டே எழுந்திருந்து போய்க் கை கழுவி விட்டு இரண்டு பேருக்கும் சேர்த்து அவனே காபி வாங்கிக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தான். காபியிலிருந்து ஆவி பறந்து வந்து முகத்தில் குப்பென்று மோதியது. சுந்தரம் கைக்குட்டையால்  முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“சங்கரன்..பழசெல்லாம் வெறும் பிரமை. கனவு. நிஜம் மாதிரித் தோணற பிரமை. ஏன், நாம் ரெண்டு பெரும் சந்திச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த நிமிஷங்கள் கூட, நாம ரயிலேறினதுக்கபுறம் வெறும் பிரமை தான் இல்லியா? ‘தன்னம்பிக்கை தான் சத்தியம், தெய்வ நம்பிக்கை எல்லாம் பேத்தல்’னு எங்கப்பா சொல்லிக்கிட்டிருந்தார். அப்பா தான் என்னோட நம்பிக்கையா இருந்தார். என்னோட பலமா இருந்தார். என்னோட தைரியமா இருந்தார். அப்பா இல்லாத என்னைக் கற்பனை கூடப் பண்ண முடியாத அளவுக்கு ‘அப்பா பிள்ளையா’ நான் வளர்ந்தேன். அவரோட நம்பிக்கைகளே என்னோட  நம்பிக்கைகளா இருந்தது. ‘அறிவே பலம்; பகுத்தறிவு அதைவிட பலம்’னு அவர் அடிக்கடி சொல்வார். நண்பர்களுக்கு மத்தியிலே நின்னுக்கிட்டு அவர் அட்டகாசமாப் பண்ணற தர்க்கங்கள் எல்லாம் என்னைப் பிரமிக்க வைக்கும். அவர் படிக்கச் சொன்னதைப் படிச்சேன். பேசச் சொன்னதைப் பேசினேன். .யோசிக்கச் சொன்னதை யோசிச்சேன், நான் குழம்பறப்போ தெளிய வைக்கிறவராகவும் நான் பயப்படறப்போ தைரியம் ஊட்டறவராகவும் அவர் எப்பவும் என் கூடவே இருக்கப் போறார்னு நான் நெனச்சேன். ஆனா சங்கரன், திடீர்னு ‘பிளட் கான்சர்’ வந்து அவர் செத்துப் போனார். நான் அதிர்ச்சியிலயும் துக்கத்துலயும் இடிஞ்சு போனேன். ‘அறிவே பலம்’னு வாழ்க்கை முழுதும் பேசிக்கிட்டிருந்த அவரை மனித அறிவு ஏன் காப்பாத்த முடியாமப் போச்சுன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன். திடீருன்னு அப்பா காணாமப் போனதை என்னால ஜீரணிக்க முடியல. அவரோட ஞாபகங்கள் என்ன ராவும் பகலும் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுது. வெறும் அறிவு கடைசி வரைக்கும் ஒரு மனுஷனுக்குத் துணையா வர முடியுமான்னு எனக்கு சந்தேகம் வந்தது. சாம்பிராணி வாசனை, கற்பூர ஆரத்தி, குத்து விளக்கு வெளிச்சம், எல்லோரும் சேர்ந்து ஏகக் குரல்ல ஏத்தி இறக்கிப் பாடற நாம


சங்கீர்த்தனம், சீராத் தொடுத்துக் கோர்த்த புஷ்ப ஹாரங்களுக்கு  மத்தியில மயக்கற மாதிரி மந்தகாசம் பண்ற அந்தக் கிருஷ்ண விக்கிரகம்..எல்லாமாச் சேர்ந்து மெஸ்மரிசம் பண்ணி என்னை வசப் படுத்தி இருக்கணும்.... அப்பா நம்பின பகுத்தறிவுக்கும் மிஞ்சி ஒரு பிரபஞ்ச அறிவு இருக்கணும்னு எனக்குக் தோணிச்சு. நான் மாறிட்டதா உணர்ந்தேன். பழைய சுந்தரம் ஒரு கனவு. இறந்து போன என் அப்பாவைப் போல...

சுந்தரம் பேசி முடிக்கிற வரை, சங்கரன் அவனையே, காபியைக் கூட ஆற்றாமல் சுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். காபியில் இப்போது பாதி ஆவி அடங்கி இருந்த மாதிரி இருந்தது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். முதல் மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷம் தான் இருந்தது. சுந்தரம் காபியை வாயில் வைத்து லேசாய் உறிஞ்சிக் கொண்டே விழிகளை மட்டும் மேலே உயர்த்தி சங்கரனைப் பார்த்தான்..

சங்கரன் காபியை ஒரு மடக்குக் குடித்து விட்டுப் பேசினான். “எனக்கு எந்த அளவுக்குக் கடவுள் மேல நம்பிக்கையும் பக்தியும் இருந்ததுன்னு உனக்குத் தெரியும்.கல்யாணம் ஆகிக் குழந்தை பொறந்தது வரைக்கும் எல்லாம் எந்த மாற்றமும் இல்லாமத்தான் போயிண்டிருந்தது.. கலையில எழுந்திருச்சுக் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்லாமக் காபி கூடக் குடிக்க மாட்டேன்.  புயலே அடிச்சாலும் வெள்ளிக் கிழமை கோவிலுக்குப் போறது தவற மாட்டேன். குழந்தைக்கு ரெண்டு வயசானப்போ, குலதெய்வம் கோவிலுக்கு மொட்டை அடிக்கறதுக்காகக் குடும்பத்தோட போனோம். மொட்டை அடிச்சுட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டத் தோள்ல குழந்தையோடக்  கோவில் குளத்துல இறங்கினேன். படியெல்லாம் பாசியா இருந்ததைக் கவனிக்கல. கால் சறுக்கி நானும் குழந்தையும் தனித் தனித்தனியாத் தண்ணியில விழுந்தோம். எனக்கு வெறும் சிராய்ப்போட போச்சு. ஆனா குழந்தையோட தலை படிக்கல்லில மோதி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுது. சின்ன கிராமம். எந்த ஆஸ்பத்திரி வசதியும் இல்ல. டாக்சி புடிச்சுத் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிண்டு போனோம். ஒண்ணும் பிரயோஜனம் இல்ல. அவ்வளவு தான் சுந்தரம். ப்ரெயின் ஹாமரேஜ்னு சொன்னாங்க...குழந்தையை டாக்டரும் காப்பாத்தல; கடவுளும் காப்பாத்தல...”

பல வருஷங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு பெரிய சோகத்தை இப்போது அவனால் ஒரு தகவலைப் போல் சொல்லிக் கொண்டு போக முடிந்த போதும், அவனது குரலும் விரலும் மெல்ல நடுங்குகிற மாதிரி சுந்தரத்துக்குத் தோன்றியது. சங்கரனின் விரல் நடுக்கத்தில் டம்ளரில் இருந்த காபி மெல்லச் சலனித்துத் தளும்பியது. சுந்தரம் சம்பிரதாயமாய் “ஐ ஆம் சாரி..” என்று சங்கரனிடம் சொன்னான்.

சங்கரன் தொண்டையைச் செறுமிக்கொண்டு இன்னும் கொஞ்சம் காபி சாப்பிட்டான். ”சுந்தரம்..தன் சந்நிதியிலேயே ஒரு உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு கடவுள் என்ன கடவுள்? அந்தக் கடவுளால யாருக்கு என்ன பிரயோஜனம்? என் குழந்தை செத்துப் போனதுக்கு விதி தான் காரணம்னா, நடுவுல கடவுள்னு இன்னொண்ணு எதுக்கு? இந்த மாதிரி எல்லாம்  எனக்குக்குள்ளக் கேள்வி மேல கேள்வி எழுந்துது...”  சங்கரன் ஒரு நிமிஷம் இடைவெளி விட்டு, சுந்தரத்தை இப்போது நேருக்கு நேராய்ப் பார்த்து ஒரு வறட்டுப் புன்னகையோடு இப்படிச் சொன்னான். “ஸோ..நானும் உன்னை மாதிரியே மாறிட்டேன்...பட் இன் தி ஆப்போசிட் டைரக்ஷன்..”

டம்ளரில் இருந்த மீதிக் காபி முழுசுமாய் ஆவி அடங்கி ஆறிப் போய் இருந்தது. இருவருமே எதுவும் பேசாமல் சற்று நேரம் மௌனமாய் உட்கார்ந்திருந்தார்கள். சுவர்க் கடிகாரத்தின் முட்கள் எந்த சித்தாந்த மயக்கமும் இன்றித் தம் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தன.

ரயில்கள் கிளம்புவதற்கு முன்னறிவிப்பாய் முதல் மணி அடித்து விட்டது. அவற்றின் என்ஜின்கள்-ஒன்று டீசலுக்கும் இன்னொன்று மின்சாரத்துக்கும் மாறி இருக்க வேண்டும்....சுந்தரமும் சங்கரனும் மீதிக் காபியைக் குடிக்காமலேயே, எழுந்திருந்து ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டார்கள். சங்கரன் தன் விசிட்டிங் கார்டை சுந்தரத்திடம் கொடுத்து ‘ஊருக்குப் போய் மறக்காமல் தன்னோடு தொடர்பு கொள்ளச் சொன்னான். சங்கரன்  உற்சாகத்தோடு தலையை ஆட்டினான். பிறகு இருவருமே இப்போது எதிர் எதிர் திசைகளில் பிரிந்து தங்கள் தங்கள் வண்டிகளை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
*
(திண்ணை 27 May, 2013 )

Thursday, September 12, 2013

உட்காருவதற்கு ஒர் இடம்

ஓடும் பேருந்தில் 

நெருக்கி அடித்துக் கொண்டு

மூச்சுத் திணறிய படி

நெடுநேரம் பயணித்த போது

உட்காருவதற்கு ஓர் இடம்

தேடி அலைந்தது கண்

கடைசியில் ஒருவழியாய்க்

காலியானது ஓர் இருக்கை

சரி தான் என்று சந்தோஷமாய்

ஆற அமர உட்கார்ந்த பொது 

நான் இறங்க வேண்டிய இடம்

வந்து விட்டது.

(Photo Courtesy: photobucket)

நாளைக்கிருப்பாயோ, நல்லுலகே?



யிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் வருஷம் என்று நினைக்கிறேன். ..    .........   வருஷம் அவ்வளவாய் நினைவில் இல்லை. தேதி ஜூலை பதினாலுஎன்பது மட்டும் தெள்ளத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அன்றைக்கு உலகம் அழியப் போகிறதுஎன்றுப் பல மாதங்கள் முன்னமேயே பத்திரிகைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு 'சோதிடப்' புரளிகளைப் பரப்ப ஆரம்பித்திருந்தன.       இந்த ஆரூடத்தை யார் முதலில் தொடங்கி வைத்தனர், இதற்கான அடிப்படை என்ன என்பது போன்ற விவரங்கள் எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. எனக்குஅப்போது பதினோரு வயசு தான் நடந்து கொண்டிருந்தது.  ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். எதற்காகவோ நானும் அம்மாவும் திருவானைக் காவலில் இருந்த என் பாட்டி வீட்டுக்குப் போய் இருந்தோம்.



ஜூலை பதினாலு நெருங்க நெருங்கப் பத்திரிகைகள் வியாபார நோக்கத்தோடு வித விதமாய்க் கயிறு திரிக்கத் தொடங்கி இருந்தன. 'ஆரூட மேதைகள்' ஒவ்வொருவரும் எந்தெந்த விதத்தில் எல்லாம் அன்றைக்கு உலகம் அழியக் கூடும் என்று தங்கள் தங்கள் கற்பனைச் சரக்குகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர்.    .அங்கொன்றும் இங்கொன்றும் ஒலித்த ஒரு சில viஞ்ஞான-விவேகக் குரல்கள் கூட இந்த வியாபார, ஜனரஞ்சக இரைச்சல்களின் இடையே எடுபடாமல் போயின.


சிறு பையனாக இருந்த எனக்கு அன்றைக்கு உலகம் எந்த மாதிரி அழிந்து போகும் என்பதில் பல்வேறு வகையான பயம் கலந்த கற்பனைகள் இருந்தன. .  பெரும் காற்று வந்து உலக உருண்டையை அப்படியே பாதாளத்தில் கொண்டு போய்ச் செருகி விடுமோ? அல்லது அத்தனை சமுத்திரங்களும் நாலா திசைகளிலிருந்தும் பொங்கித் திரண்டு வந்து அப்படியே எல்லாவற்றையும், எல்லாரையும் 'கபக்' என்று ஒரே விழுங்காய் விழுங்கிக் கபளீகரம் பண்ணி ஏப்பம் விட்டு விடுமோ? அதற்கப்புறம் நாமெல்லாம் என்ன ஆவோம்? எங்கே போவோம்? அம்மா, பாட்டி எல்லாரும் என்ன ஆவார்கள்? எல்லோரும் தனித்தனியாய் எங்காவது வேறு வேறு மூலைகளுக்குப் போய் விடுவோமா? முக்கியமாக, உலகம் அழியப் போகிற ஜூலை பதினாலுக்கு முந்திய நாளான ஜூலை பதிமூன்றாம் நாள்-வீட்டுப் பாடம் பண்ணி விட்டுப் படுக்கப்போக வேண்டுமா, அல்லது அதற்கு அவசியம் இல்லையா?

ஜூலை பதின்மூன்றாம் நாள் இரவு பாட்டியும் அம்மாவும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். . கோவிலில் கூட்டம் அதிகமாய் இருந்ததா என்று நினைவு இல்லை. மறு நாள் உலகம் அழியப் போவதைப் பற்றிய கவலை எதுவும் அவர்கள் முகத்தில் இருந்ததாயும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், கோயிலில் இருக்கிற போதே சொல்லி வைத்தாற் போல் பேய் மாதிரி ஒரு மழை அரை மணி நேரம் அடித்துத் தீர்த்தது. நான் பாட்டிக்கும் அம்மாவுக்கும் நடுவே பயந்து ஒண்டிக் கொள்ள, கோவில் மண்டபத்திலேயே மழை நிற்கிற வரை காத்திருந்து விட்டு, அப்புறம் திருவானைக் காவலுக்கு பஸ் பிடித்து வந்தோம். வருகிற வழி எல்லாம் பாட்டி ஏதேதோ சுலோகங்களை முணு முணுத்தபடியே வந்தாள்.

அன்றைக்கு ராத்திரி பாட்டிக்கும் அம்மாவுக்கும் நடுவே உடம்பைக் குறுக்கிப் படுத்துக் கொண்டென். ஏன் திடீர் என்று மழைவந்தது? அப்புறம் ஏன் நின்று விட்டது? ஒரு வேளை ராத்திரிப் பன்னிரண்டு மணிக்குப் பிரளயம் வரப் போகிறதோ? அதற்கான முன்னோட்டம் தான் அந்த மழையோ? அம்மாவாலும் பாட்டியாலும் மட்டும் எப்படிப் பயப்படாமல் தூங்க முடிகிறது? பாட்டி வரும் வழியில் என்ன சுலோகம் சொல்லி இருப்பாள்? 

கொஞ்சம் தள்ளிச் சுவரின் உச்சியில் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. அது என்னையே பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. மறுநாள் உலகம் அழியப் போகிறது என்று அதற்கும் தெரிந்திருக்குமோ? கண்களை பயத்தோடு இறுக்க மூடிக் கொண்டேன். 
மறு நாள் பொழுது விடிந்து விட்டது என்று அம்மா என்னை உலுக்கி எழுப்பிய போது தான் தெரிந்தது. கண்ணை அகல விரித்து நாலா புறமும் பார்த்து உலகம் அழியாமல் பத்திரமாய் இருப்பதை உறுதி செய்து கொண்டேன். உலகம் அழிய வில்லை. அது எப்போதும் போல் பத்திரமாய் இருக்கிறது...ஒரு வேளை இது வேறு ஒரு புது உலகமாய் இருக்குமோ என்று சந்தேகம் வரவே, சுவர் உச்சியில் பார்த்தேன். அங்கே அந்தப் பல்லி அதே இடத்தில் அந்த நிலையிலேயே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இந்த முறை அது முறைக்கிற மாதிரித் தெரியவில்லை. மாறாக என்னைப் பார்த்துக் கேலியாக சிரித்துக் கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது!
- திண்ணை, ஏப்ரல் 15,2013

(Photo Courtesy:  Murali Nath)

அப்பாவும் பிள்ளையும்


ந்த ராத்திரி அற்புதமாய் இருந்தது. மொட்டை மாடியின் கட்டாந்தரை யில், அப்பாவின் பக்கத்தில் சந்துரு மல்லாக்கப் படுத்துக் கிடந்தான். ஆகாயம்  முழுக்கவும் நட்சத்திரங்கள் வாரி இறைக்கப் பட்டிருந்தன. அப்பா அவனுக்கு ஒவ்வொரு நட்சத்திரமாய்க் காட்டினார். கேள்விக்குறி மாதிரி வானின் வடதிசையில்  சப்தரிஷி மண்டலம் தெரிந்தது. அந்த ஏழு நட்சத்திரங்களையும் அப்பா அவனுக்குக் காட்டிக் கதை சொன்னார். அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. அப்பாவை இறுக்கக் கட்டிக் கொண்டு அவன் தன் சந்தோஷத்தைப் பிரகடனப் படுத்திக் கொண்டான். அந்த நிலையிலேயே கழுத்தை ஒடித்து அந்த ஏழு நட்சத்திரங்களையும் அண்ணாந்து பார்த்தான். ஒவ்வொன்றும் அவனைப் பார்த்துச் சிமிட்டிச் சிமிட்டி சமிக்ஞை மொழியில் என்னமோ பேசுகிறார்ப் போலத் தோன்றியது.

இப்படியே இந்த மாதிரியே இந்த ராத்திரியாகவே இருந்து விட்டால் எந்தனை நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். இப்படி, அப்பாவுடன் ஒட்டிக் கொண்டு, உரிமையோடு அவர் வயிற்றில் காலைப் போட்டுக் கொண்டு, ஜில்லென்று காற்று வீசுகிற இந்த மெல்லிய இருட்போதில் நிர்மலமான அந்த ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு, அந்தக் கேள்விக் குறி நட்சத்திரங்கள் ஏழையும் இமை கொட்டாமல் வெறித்துக் கொண்டு படுத்திருக்கிற ஆனந்தம் நிலைத்திருக்க, யாராவது இந்த நேரமும் பொழுதும் நகராமல் பண்ணினால் தேவலையே என்று தோன்றியது. ஆனால், அது சாத்தியமில்லை என்று உணர்ந்ததில், மனசு முழுக்கவும் அடுத்த நிமிஷமே சோகம் வந்தது.

போன வாரம் இப்படி ஒரு ராப்போதில் தான், தெருக்கொடியில் குடியிருக்கும் மூர்த்தி வீட்டிலிருந்து, உடம்பை நடுங்க வைக்கிற மாதிரிக் குரூரமாய் ஓர் அழுகை ஒலி பீறிட்டு வந்தது; எல்லார் வீட்டு வாசலிலும் ஆண்களும் பெண்களும் ஒரு நிமிஷத்தில் நிறைந்து போயினர். பக்கத்து வீட்டுச் சீனு மாமா தான் துண்டை வெறும் தோளில் போட்டுக் கொண்டு அவசர அவசரமாய் என்ன ஏது என்று பார்க்க ஓடினார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் விஷயம் தெருவெல்லாம் பரவி விட்டது. மூர்த்தியின் அப்பா செத்துப் போய் விட்டார். மூர்த்தியையும் அவனது முப்பத்தைந்து வயசு அம்மாவையும் அனாதைகளாக்கி விட்டுத் திடுதிப்பென்று புறப்பட்டுப் போய்விட்டார். அந்தக் கோடி வீட்டு அழுகுரல் இன்னும் தெளிவாய் ஞாபகத்தில் இருந்தது.

அவன் இந்த நேரத்தில் அப்பாவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். உடம்பில் பெரிதாய் நடுக்கம் வந்தது. மூர்த்தியின் அப்பா மாதிரி, அவன் அப்பாவும் செத்துப் போய்விடவில்லை. ஸ்தூலமாய் முழுமையாய் மூச்சு விட்டுக் கொண்டு பக்கத்தில் தான் படுத்திருக்கிறார். ஆகாயத்து நட்சத்திரங்களை அவனுக்குக் காட்டுகிற  இந்த அப்பா, அவரது சுவாசம், அந்த உடம்புச் சிவப்பு, இந்தக் கட்டாந்தரை, அவரை உரசிக் கொண்டு அவர் மீது சுவாதீனமாய்க் கால் பரப்பிக் கொண்டு படுத்திருக்கிற அவன்- இவை எல்லாம் அந்த ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலவே நிஜம். இது எப்போதும் நிஜமாக இருக்க வேண்டும். இந்த ராத்திரி நகராமல் இப்படியே நிற்க வேண்டும். விடியவே கூடாது. இப்படி இது விடிந்தும் அஸ்தமித்தும் ராத்திரிகளும் பகல்களும் மாறி மாறி வரத் தொடங்கினால் எந்த ஒரு ராத்திரியாவது இன்றைக்கு அவன் அருகில் படுத்திருக்கிற இந்த அப்பாவும் மூர்த்தியின் அப்பா மாதிரிச் செத்துப் போவார். அப்புறம் அவனுக்கு நட்சத்திரங்களைக் காட்ட அப்பா இருக்க மாட்டார். முதுகில் தட்டித் தூங்க வைக்க அப்பா இருக்க மாட்டார். பாதி ராத்திரியில் மூத்திரம் வந்தால், வாசல் வரை துணைக்கு வந்து அவன் போய் முடிக்கிற வரை அருகில் நின்று கொண்டிருக்க அப்பா இருக்க மாட்டார். 

அவன் நடுக்கத்தோடு அப்பாவை மெல்லத் தடவினான். “அப்பா..” என்று அழுகிற குரலில் கூப்பிட்டான். தூங்குகிற தருவாயில் இமை செருகின அப்பா, சட்டென்று துணுக்குற்று விழித்துக் கொண்டு அவன் பக்கமாய்த் திரும்பிப் படுத்துக் கொண்டு அவன் தலையைக் கோதினார்.

“என்னடா ராஜா..?”

“அப்பா..மூர்த்தியோட அப்பா மாதிரி நீயும் செத்துப் போயிடுவியா, அப்பா?”-அவன் விசும்பத் தொடங்கினான்.

“சீ அசடு. யாருடா அப்படிச் சொன்னது?”

“நீ சாகக் கூடாது, அப்பா..”

“போடா அசட்டுப் பயலே..அதெல்லாம் ஒன்னும் சாக மாட்டேன். கண்ணை மூடிண்டு தூங்கு”

“நெஜமா நீ சாகக் கூடாது. எப்பவுமே சாகக் கூடாது..”

அவனுக்குத் தொண்டை கரகரத்தது. கண்களில் நீர் தேங்கிப் பார்வையை மறைத்தது.

போடா பைத்தியம். இப்படி எல்லாம் அசடு மாதிரிக் கற்பனை பண்ணிண்டு அழக் கூடாது.”

“மூர்த்தியோட அப்பா மட்டும் ஏன் செத்துப் போனார்?”

அப்பா பேசாமல் இருந்தார். திடீரென்று ஒரு சின்ன வெள்ளை மேகம் அந்த ஏழு நட்சத்திரங்களையும் வெடுக்கென்று கவ்வியது. ஆகாயம் முழுக்கவும் அங்கங்கே திட்டுத்திட்டாய், பஞ்சு பஞ்சாய் சின்னச் சின்ன மேகங்கள் உற்பத்தியாயின. 

அவன் கண் முன்னால் இப்போது முற்றிலும் புதிய ஆகாயம் விரிந்திருந்தது. யாரோ எந்த மூலையிலோ ஒளிந்து நின்று கொண்டு அந்தப் பஞ்சுப் பிசிருகளைப் பலமாய் ஊதியிருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.

“எப்படி இவ்ளாம் மேகம் வந்தது?”

அப்பாவுக்கு அவனது சிந்தனை திசை மாறியதில் சந்தோஷமாய் இருந்தது. அவர் அவனிடம் உற்சாகமாய்ப் பேசினார்.

“மேகம் எப்படி உற்பத்தியாறது, சொல்லு..சயின்ஸுல படிச்சிருப்பியே..?”

“நேக்குத் தூக்கம் வரதுப்பா..”

“படவா..!” அப்பா அவனைச் செல்லமாய்த் தட்டினார்.

“சமுத்திரத் தண்ணி சூரியனோட வெப்பத்துல ஆவியாகி மேல போயி மேகமா மார்றது. அப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமாக் குளுந்து கறுத்து..”

“மூர்த்தியோட அப்பா  ஏன் செத்துப் போனார்னு சொல்லுப்பா..“

‘அப்புறம் அடி தான் கிடைக்கும். தூங்கு பேசாம. நான் முதுகுல தட்டிண்டே இருக்கேன். அப்படியே தூங்கிப் போயிடுவியாம், என்ன?”

அவன் சிணுங்கிக் கொண்டே குப்புறப் படுத்திக் கொண்டான். அப்பா மெதுவாய் அவன் முதுகில் தட்டிக் கொண்டே இருந்தார். அப்படி அவர் தட்டுகிற ஒவ்வொரு தட்டின் போதும், எங்கோ பறக்கிற மாதிரி  இருந்தது. கொஞ்சம் உடம்பைத் திருப்பி தலையை நிமிர்த்திப் பழையபடி ஆகாயத்தைப் பார்க்கலாம் போல் இருக்கும். அந்த மேகத் திரள் இப்போது சப்தரிஷி மண்டலத்தை விட்டுவிட்டு வேறு பக்கம் நகர்ந்து விட்டதா என்று பார்க்கத் தோன்றும். ஆனால் அப்பாவின் மிருதுவான் தட்டல்கள் தடங்கலின்றித் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிற ஆனந்தத்தை இழக்க விரும்பாமல் அவன் குப்புறக் கிடந்தான். அப்பா கண்ணயரும் போதெல்லாம் அவர் கை சோர்ந்து தொய்ந்து அவன் முதுகில் ஸ்தம்பித்துப் போகவே, அவன் மெல்லச் சிணுங்கி “தட்டுப்பா..” என்று குரல் கொடுப்பான். அப்பா சட்டென்று கண் விழித்து, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தட்டத் தொடங்குவார்.

அவன் வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அப்பாவுக்கு மட்டும் படுத்தவுடன் தூக்கம் வந்து விடுவது  அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அது மட்டுமில்லை. தூங்கி வெகு சீக்கிரத்திலேயே சுவாச வீச்சுக்கள் பெரிதாகி விசித்திர சப்தங்களுடன் குறட்டை விடவும் ஆரம்பித்து விடுகிறார், அப்பா. சில சமயம் மூங்கிலை ஏழெட்டு வண்டுகள் குடைகிற மாதிரி சப்தம் வரும். சில சமயம் சிங்கம் கோபத்தோடு உறுமுகிற மாதிரிக் கேட்கும். சில சமயம் இங்கிதமாய், மூங்கில் துளைக்குள் காற்று புகுந்த புகுந்து வேறு புறமாய் வெளிப்படுகிற மாதிரி ஒலி வரும்.
          
எல்லோரும் தூங்கிப்போய் ஊரே அமைதியில் ஆழ்ந்திருக்கும் அந்த அமானுஷ்யமான இராப் போதில் இவன் மட்டும் விழித்திருக்க, அப்பாவின் மூக்குத் துவாரத்திலிருந்து விட்டு விட்டு வரும் அந்த விசித்திர சப்தம்  இவனைப் பயமுறுத்தும். அந்த சமயங்களில் எல்லாம் இவன் அப்பாவை உலுப்பி எழுப்பி அவரின் ஆழ்ந்த துயிலைக் கலைத்து சிணுக்கத்துடன் “பயமாய் இருக்குப்பா..” என்பான். அறிதுயில் கலைந்த நிலையிலும் அப்பா இவன் மீது கோபம் கொள்ளாமல் இவன் பக்கம் திரும்பி இவனை இறுகக் கட்டிக் கொண்டு மறுபடியும் முதுகில் தட்டுவார். குறட்டை ஒலி சட்டென்று தடங்கிச் சிறிய இடைவெளிக்குப் பிறகு வேறு ஸ்தாயியில் வேறு ராகத்தில் வெளிப்படத் தொடங்கும்.
          
இன்றைக்கு அப்பா ஆச்சரியமாய் சத்தமின்றித் தூங்கிக் கொண்டிருந்தார். அவன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து உட்கார்ந்து கொண்டான். தெருக் கம்பத்துக் குழல் விளக்கு வெளிச்சம் மொட்டை மாடியின் விளிம்புகளில் விழுந்து தரையில் அவன் படுக்கை வரை வழிந்திருந்தது. ரேடியோ ஏரியலுக்காகக் கட்டியிருந்த அந்த உயரமான சீரற்ற மூங்கிலின் நிழல் சரியாய் அப்பாவின் மீது கிடை மட்டமாய் விழுந்து அவரை இரண்டு கூறாய் வெட்டி இருந்தது.
        
அவன் எழுந்து உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். பின் பக்கத்து வாழைக் கொல்லையிலிருந்து தவளைகளின் சப்தம் மெல்லக் காற்றில் மெல்ல வந்தது.
        
நிசிப் போதில் கேட்கும் இந்த தவளைகளின் ஓலம் அவன் வயிற்றைப் பிசைந்தது. இத்தனை தவளைகளின் சத்தங்களில் எந்த ஒன்றாவது பாம்பு தவளையை விழுங்கும் சத்தமாக இருக்கும் என்று அவன் சிநேகிதன் ஒருத்தன் சொன்னது ஞாபகம் வந்தது. இது பற்றி அப்பாவிடம் மறு நாள் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. கீழே இறங்கி வாசலுக்குப் போக பயமாக இருந்தது. தனது இத்தகைய பயங்களை நினைத்துப் பலதடவை அவனுக்கே வெட்கம் வந்திருக்கிறது..தன்னொத்த பையன்கள் எத்தனை பேர் தைரியமாய் ரயில்வே ஸ்டேஷன் பொட்டல் வரைக்கும் போய் டூரிங் தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சினிமாப் பார்த்து விட்டு வருகிறார்கள்? ஏன் இவனுக்கு மட்டும் இந்த பயம் இருட்டு இருட்டாய்க் கண் முன் குமிந்து குமிந்து வந்து மருட்டுகிறது? எப்போதும் அவனது பயங்களிலிருந்து அவனைக் காப்பாற்றி இன்சுலேஷன் டேப் மாதிரி இப்படி அப்பாவும் அம்மாவும் எத்தனை காலம் இருக்க முடியும்? அவனுக்குக் கண்களில் நீர் மண்டிக் கொண்டு நின்றது. மேலே ஆகாயத்தில் கும்பல் கும்பலாய் நட்சத்திரங்கள் கூடி நின்றுக் கிசுகிசுக்கிற மாதிரித் தோன்றின. எவற்றோடும் சேராமல் வெகு தொலைவில் அந்தகாரத்தில் வானத்தின் ஏதோ ஒரு கோடியில் சின்னதாய்த் தன்னந்தனியாய் ஓர் ஒற்றை நட்சத்திரம் திடீரென்று கண்ணில் பட்டது. அட, நீ ஏன் இப்படித் தனியனானாய்? உன்னைச் சுற்றி எத்தனை பெரிய பாழ் வெளி? உன் குரல் யாருக்கு எட்டும்? உனக்கு மட்டும் பயமாக இல்லை?

இனிமேலும் சிறுநீரை அடக்க முடியாது என்று தோன்றியது. கீழே போய்த்தான் ஆக வேண்டும். என்ன பயம், பாழாய்ப் போன பயம்? கீழே முன் அங்கணத்தில் பாட்டியும் அத்தையும் படுத்திருப்பார்கள். பின் அங்கணத்தில் பெட்ரூம் விளக்கைத் தலை மாட்டில் வைத்துக் கொண்டு கதவை ஒருக்களிக்கச் சாத்தி மரக்கட்டையைத் தலைக்கு அணை கொடுத்து அம்மா தூங்கிக் கொண்டிருப்பாள். பாவம், அந்த மூன்று நாட்களும் அவள் தலைக்குக் கட்டையை வைத்துக் கொண்டு தான் தூங்குகிறாள். பின்கட்டில், வீட்டுக்கார மாமி, அவளின் கண் தெரியாத கிழத்தாயார், பகல் எல்லாம் தெருப் பையன்கள் வீட்டுக்கு வந்தால் நாய் மாதிரி ‘வள் வள்’ என்று விழும், மாமியின் தலை மழித்த விதவை அக்காள்- போதாக் குறைக்குக் கூடத்தில் அப்பா சிரத்தையாய் பூஜை பண்ணி வழிபடும் தாத்தா காலத்து சுவாமி விக்கிரகங்கள்- இத்தனை இருக்கையில் என்ன பயம்? அவனை எது என்ன செய்ய முடியும்?

அப்பாவை எழுப்பாமலேயே, அவன் மெல்ல எதிலும் இடித்துக் கொள்ளாமல் படிகளில் இறங்கி, ரேழி விளக்கைப் போட்டு, பிறையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்து, தாழ்ப்பாளைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்தி அதன் கிரீச்சொலி இருட்டின் நிசப்தத்தை மெல்லச் சீண்டி இம்சைப்படுத்த, கம்பி கேட்டைத் திறந்தான். தெரு, மனித அரவமற்று வெறிச்சோடி இருட்டிலும் பேரமைதியிலும் மூழ்கிக் கிடந்தது. இவன் வீட்டுக்கு நேர் எதிரே இருக்கும் விளக்குக் கம்பத்தில் வழக்கமாய் ஓர் இருபத்தைந்து வாட் விளக்கு மங்கலாய் ஒரு துக்கம் கலந்த வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டு இருக்கும். இன்று அதுவும் தன் பிராணனை விட்டு விட்டிருந்தது. ஏழெட்டு வீடுகள் தள்ளி இருந்த அந்தத் தெருவின் ஒரே குழல் விளக்கு மட்டும் தனது வெளிச்சத்தை முடிந்தவரை விநியோகித்துக் கொண்டிருந்தது.  அந்தக் குழல் விளக்கு தந்த தைரியத்தில் அவன் தெருவில் இறங்கி அவசர அவசரமாய் டிராயரைத் தூக்கிக் கொண்டு வாசல் சாக்கடை ஓரத்தில் உட்கார்ந்தான். இவனது நிழல் அரை மயக்க வெளிச்சத்தில் விசித்திரப் பரிமாணங்களோடு விடுவிடுவென்று பெரிதாகி நீண்டு எதிர்ச்சாரி வரை போய் விழுந்து கிடப்பதைக் கண்டு வெருண்டு, சுருண்டு படுத்திருந்த நாய் ஒன்று மெல்ல உறுமியது. தொடர்ந்து அங்கங்கே  நிறைய நாய்கள் ஏக காலத்தில் குரைக்கத் தொடங்கின. அவன் பயத்தில் தாறுமாறாய்ப் பெய்து டிராயரை எல்லாம் நனைத்துக் கொண்டான். அப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். இத்தனை நாய்களில் எந்த ஒன்றாவது தன மீது பாய்ந்து குதறப் போவதாய் அவனாகக் கற்பனை பண்ணிக் கொண்டான்.
  
      திடீரென்று நாய்கள் குரைப்பதை நிறுத்தி விட்டன. இவன் நம்மவன் என்று அவை உணர்ந்திருக்க வேண்டும். சற்றுமுன் உருமின நாய் மெல்ல இவனது நீண்ட நிழலைக் கண்டு சிநேகமாய் வாலை ஆட்டியது. இவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயம் குறைந்தது. இப்படி நிதானம் இழந்துப் பரபரப்பாய்த் தான் டிராயரை நனைத்துக் கொண்டது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று தன் மீதே கோபம் வந்தது.

     நாலைந்து வீடுகள் தள்ளி யார் வீட்டுக் கதவோ திறக்கிற சப்தத்தைத் தொடர்ந்து, யாரோ டார்ச் லைட்டுடன் வெளியே வந்து சுவரோரமாய் வேட்டியைச் சுருட்டிக் கொண்க்டு உட்கார்ந்தார்கள். அவனுக்கு இப்போது புதுசாய்த் தைரியம் வந்திருந்தது. அந்தத் தெருவின் அகண்ட இருள் மண்டிய அமைதி மண்டலத்தில் அவன் மட்டும் தனியனாய் இல்லை. இன்னொரு பேர் தெரியாத துணையும் இருக்கிறது. துணை இருந்தால் போதாதா? துணைக்குப் பேர் எதற்கு?

     இவன் இப்போது ரொம்பத் தைரியசாலியாய், கைகளைப் பின்னல் கட்டிக் கொண்டு, தெருவின் இரவுத் தோற்றத்தை ஒரு கவிஞன் போல் நின்று ரசிக்க முயற்சி செய்தான். சிலுசிலுவென்று எங்கிருந்தோ ஒரு ரம்மியமான காற்று வந்து அவன் உடம்பு முழுதும் வியாப்பித்துக் கடந்து சென்றது. தெருக்கோடியில் பெருமாள் கோவிலின் கருத்த மெருகிழந்து போன, எந்தத் தலைமுறையிலோ குடமுழுக்குப் பண்ணின பழைய கல்-விமானம் மங்கலாய்த் தெரிந்தது. இந்தப் பக்கம் திரும்பி நின்றால் மறுகோடியில் அதற்கு நேராய் அதை விடக் கொஞ்சம் புதுசாய் சிவன் கோவில் கோபுரம்- இருட்டில் இரு கோடிகளில் இப்படி எதிரும் புதிருமாய் நிற்கும் இரண்டு கோவில்களும், இடைப்பட்ட இந்தப் பெரிய தெருவும், இதன் வீடுகளும், அதனுள் உறங்கும் மனிதர்களும், இவனது பயங்களும்-எல்லாமே விசித்திரமாய் அழகுள்ளவையாகவே இருக்கின்றன. பயத்துக்குக் கூட அழகிருக்கிறது. நாளை அப்பாவிடம் இப்படி இருட்டில் பயந்து கொண்டே தனியாய் நின்றதையும், பயம் சட்டென்று விலகிப் போனதையும் சொல்ல வேண்டும். பயத்தை முற்றவிட்டுப் பார்த்தால், ஒரு வேளை அது தானாய்ப் பழுத்துக் கடைசியில் தைரியமாய்க் கனிந்தாலும் கனியலாம்.. இரவு  முற்றிப் பகல் வருகிற மாதிரி...

        அவன் மெல்லப் படியேறித் திண்ணைக்கு வந்தான். சட்டென்று அலை அலையாய், தூரத்துச் சிவன் கோயில் இருட்டிலிருந்து சிவனின் உடுக்கை மாதிரி ஒரு சத்தம் மெல்ல மெல்ல மிதந்து பெரிதாகிக் கொண்டே வந்தது. அய்யோ, குடுகுடுப்பாண்டி வருகிறான்..! நேராகச் சுடுகாட்டிலிருந்து, மண்டை ஒட்டுக்கு பூஜை பண்ணிவிட்டு, மை எடுத்துக் கொண்டு வருகிறான். யார் வீட்டு வாசலிலாவது நின்று அவன் எதைச் சொன்னாலும் அது பலிக்கும். கல்யாணம் ஆகும் என்று சொன்னால் கல்யாணம் ஆகும். இழவு விழும் என்று சொன்னால் இழவு விழும். அந்த நடுநிசி வேளையில் யார் அவன் கண்ணில் எதிர்ப்பட்டாலும் அவ்வளவு தான்.. அவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

        வாசலில் கதவைப் பூட்டியது கூட ஞாபகம் இல்லாமல் அவன் மாடிப்படியில் விழுந்தடித்துக் கொண்டு ஏறி, அப்பாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டான். கீழே குடுகுடுப்பைச் சத்தம் வெகு அருகாமையில் கேட்டது. ஒரு வேளை அது நம் வீடாகக் கூட இருக்கலாம். சுவாமி, கடவுளே.. அவன் அங்கு நின்று எதுவும் சொல்லிவிடக் கூடாது. குடுகுடுப்பை ஒலி சட்டென்று நின்றது. குடிபோதையில் உளருகிறமாதிரி கரகரப்பான குரலில் குடுகுடுப்பாண்டி தடுமாறி ஏதோ ராகம் போட்டுக் கத்தினான். இவன் ஆள் காட்டி விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். காதுக்குள் ‘நொய்’ என்று சத்தம் வந்தது. மூடிய கண்களுக்குள் குடுகுடுப்பை கலர்க் கலராய்க் கிழிசலை உடுத்திக் கொண்டு சினிமாவில் ஆடுகிறமாதிரி ஆடினான். தூக்கம் கண்களை அழுத்தியது. குடுகுடுப்பாண்டி எப்போது போனானோ, இவன் அப்படியே தூங்கிப் போனான்.
(கணையாழி,செப்.2013)
*
(ஓவியம்: நன்றி: கணையாழி )