Tuesday, October 29, 2013

எல்லை இல்லாததோர் வானக் கடலிடை..


வ்வொரு முறை ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் போதும் அதன் எல்லையற்ற பெருவெளி ஆச்சரியத்தையும் மலைப் பையும் கொடுக்கும். எத்தனையோ ஆயிரம் ஆயிரம் வருஷங்களாய் நம்மைப் போலவே இந்தப் பரந்த வான வெளியை யார் தான் பார்த்து மலைத்துப் பிரமித்து நின்றதில்லை?   இந்தக் கண்ணில் தெரியும் ஆகாயம், அதன் விரிந்த நீலப்பரப்பில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கணக்கற்ற நட்சத்திரங்கள், இவற்றையும் தாண்டிப் பின்னால் கண்களுக்கும் புலப்படாத இன்னும் எத்தனையோ பேருலகங்கள் என்று நம்மை மருட்டுகிறது இந்த ராட்சசப் பிரபஞ்சம்! 


இதன் அளவிடமுடியாத பிரும்மாண்டத்தில் என் இடம் எது?  எனது பூமியின் இடம் தான் எது? நான், என் உறவுகள், என் சமூகம், எனது இனங்கள், எனது மதங்கள், எனது கணக்கற்ற கடவுள்கள், அவை பொருட்டு  நான் அனு தினமும் சண்டையிட்டு ஸ்தாபிக்க நினைக்கிற எனது சித்தாந்தங்கள், இன்னும் நான் அதி முக்கியமாய் நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனையும்-இந்த பிரும்மாண்டத்தின் சந்நிதியில் அர்த்தம் உள்ளவை தானா?

இந்தப் பிரபஞ்சத்தின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல்  ஆதி காலம் தொட்டே மனிதனின் அடி மனத்தில் வேரூன்றிப் போயிருந்தது. பைபிளின் பழைய ஏற்பாட்டின் முதல் அத்தியாயமான ஆதி ஆகமம் பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி இப்படிச் சொல்கிறது: "கடவுள் முதல் ஐந்து நாட்களிலும் பூமி, வெளிச்சம், கடல், ஆகாயம், நிலம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள், தாவரங்கள்,புற்கள், மரங்கள்- என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக உருவாக்கி, ஆறாம் நாள் மனிதனைத் தன் சாயலிலேயே தோற்றுவித்தார். பின் ஏழாம் நாள் ஒய்வெடுத்துக் கொண்டார்” (வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக வேலை வாங்கினால், ஏழாம் நாள் கட்டாயமாக ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை முதலாளிகள் கவனிக்க!)

பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை ஆதி மனிதனை வியக்க வைத்திருந்தாலும், தன்னையே அவன் பிரதானமாய்க் கருதியதால், இதையெல்லாம் உருவாக்கவல்ல ஒரு தேவன்  அவனுக்காக அவன் வாழ்கிற இந்தப் பெரிய பூமியையே முதலில் தோற்றுவிக்கக் கடமைப் பட்டிருந்தார். அது மட்டுமல்லாமல், அவனை அவர் தன் சாயலிலேயே உருவாக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. அவன் பிறக்கப் போகிற பூமியின் பொருட்டே சூரியன், நட்சத்திரங்கள் முதலான மற்ற சகல வஸ்துக்களையும் அவர் முதல் நாளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் யோசித்து உருவாக்கினார்.!
                                                                                2

வார்சாவில் உள்ள
கோபர்நிகஸ் நினைவுச் சின்ன
ம்
பிரபஞ்ச மையத்தில் மனிதனின் முதன்மை என்ற மதநூற் கோட்பாடு, பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்,  நிக்கலஸ் கோபர்நிகஸின் சூரிய-மையக் கொள்கையால்(Helio Centric Theory) ஆட்டம் கண்டது. பூமி பிரபஞ்சத்தின் தனது பிரதான மையப் பகுதியை இழந்து, அதைச் சூரியனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, மற்ற கோள்களோடு கோளாகக் கும்பலில் ஒன்றாய், சூரிய மண்டலத்தின் ஓர் ஓரத்துக்கு ஒதுங்கியது. ஆனாலும், மத குருக்களின் கோபத்துக்கு ஆளாவதை கோபர்நிகஸ் விரும் பாமல், அந்தக் கொள்கையைத் தன் வாழ்நாட்காலம் முழுவதும் வெளிச்சத்துக்குக் கொண்டு வராமலேயே இறந்து போனார். 

அவர் இறந்து சுமார் அறுபத்தேழு வருஷங்களுக்குப் பிறகு, 1610- ஆம் வருஷம் கலிலியோ என்னும் ஓர் அசாத்தியத் துணிச்சலும், காலத்தை மிஞ்சிய சிந்தனையும் கொண்ட மனிதர் கோபர்நிகசின் சூரிய-மையக் கொள்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். தான் வடிவமைத்திருந்த, தொலைநோக்கிக் கருவியின் மூலம் சந்திரனில் உள்ள பள்ளங்களையும் வியாழனை(Jupiter)ச் சுற்றும் நான்கு துணைக்கோள்களையும் கண்டு  வியப்படைந்தார். கூடவே, தான் பணி புரிந்த பாஜுவா (Padua) பல்கலைக் கழக சக பேராசிரியர்களையும் கூப்பிட்டு அந்த ஆச்சரியமான காட்சியைப் பார்க்கச் சொன்னார்.

வந்தது வினை. புதிய கருவியை வைத்துக் கேளிக்கை காட்டிப் பணம் பண்ணிப் பிழைக்கத் தெரியவில்லை கலிலியோவுக்கு. மாறாய், மதப்பற்றும், புதிய உண்மைகளை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற வறட்டுப் பிடிவாதங்களும் கொண்டிருந்த சக பேராசிரியர்களின் சந்தேகத்துக்கும் கோபத்துக்கும் அவர் ஆளானார். பூமிக்கு வெளிச்சம் கொடுக்க வேண்டிக் கடவுள் சந்திரனைப் பூமிக்காகவென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்க, மனிதர்களே இல்லாத வேறொரு கிரகத்துக்கு இப்படித் தாராளமாய் அதுவும் நான்கு சந்திரன்களைப் படைத்துத் தனது நேரத்தையும் சக்தியையும் அவர் வீணாக்கி இருக்க முடியும் என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. வியாழனின் சந்திரன்களைக் கலிலியோவின் டெலஸ்கோப் மூலம் பார்ப்பதற்குக் கூடப் பிடிவாதமாக அடம் பிடித்து மறுத்த ஒரு சக பேராசிரியர் இறந்த போது, “ உயிரோடு இருக்கிற வரை தான் இந்த மனிதர் வியாழனின் சந்திரன்களைப் பார்க்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். இப்போது, சொர்க்கத்துக்குப் போகிற வழியிலாவது அவை அவர் கண்களில் படும் என்று நினைக்கிறேன்..” என்று கலிலியோ கிண்டலாய் எழுதினர்.
ஃப்ராம்பார்க் (போலந்து)கில்
உள்ள கொர்பநிகஸ் கோபுரம்.
இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்து தான்
கோபர்நிகஸ் தனது வானவியல்
பரிசோதனைகளை மேற்கொண்டார்

கடைசியில்  கலிலியோ திருச்சபையின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்தது. திருச்சபையின் விசாரணைக் குழுவின் முன் கலிலியோ அழைக்கப் பட்டதும், கலிலியோ சித்திரவதைக் கருவிகளைப் பார்த்துப் பயந்து, அது வரை தான் பிரசாரம் செய்துவந்த சூரிய-மையக் கொள்கை தவறு என்றும் டாலமியின் பூமி-மையக் கொள்கையே சரி என்றும் சபை முன்னர்ப் பொய்யாய்  வாக்குமூலம் அளித்தார்.  கலிலியோ வுக்குப் பொது வாழ்க்கையில் இருந்த புகழும், போப்பாண்டவரோடு அவருக்கு ஆரம்பத்தில் இருந்த நெருங்கிய நட்பும் ஒரு வேளை அவரை  'எரிமரத்திலிருந்து(Stake) காப்பாற்றி இருக்கக் கூடும். இருந்தும், கலிலியோவைப்  போன்ற 'அபாயகரமான’ சிந்தனையாளர்களை அன்றைய  மத நிறுவனம் வெளியே சுதந்திரமாய்த் திரிய விட விரும்பவில்லை. அதனால், அவரது எஞ்சிய வாழ் நாட்கள் முழுதும் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டார்.

அந்தக்கால கட்டத்தில், திருச்சபைக்கு அஞ்சித் தான் சொன்ன பொய் வாக்கு மூலத்துக்குப் பிராயச்சித்தம் போலவோ என்னவோ, தான் தன் வாழ்நாள் முழுதும் கண்டறிந்த புதிய இயற்பியல் உண்மைகளை எல்லாம் மீண்டும் ‘டிஸ்கொர்ஸி’ என்னும் பெயரில் புத்தகமாய் எழுதி, அதை ரகசியமாய் வைத்திருந்து, தன்னைப் பார்க்க வந்த தன் பழைய சீடன் ஆண்ட்ரியோவிடம் கலிலியோ ஒப்படைத்தார்.  அந்த அற்புதமான தருணங்களை பெர்ட்டால்ட் ப்ரெஹ்ட் என்னும் ஜெர்மன் நாடகாசிரியர், 

தனது 'கலிலியோவின் வாழ்க்கை' என்னும் நாடகத்தில் மனசைப் பிழியும் வண்ணம் காட்சிப் படுத்தி இருக்கிறார். ப்ரெஹ்டின் கலிலியோ ரத்தமும் சதையுமான யதார்த்த மனிதராய்த் தெரிகிறார். திருச்சபையின் முன் தான் சித்திர வதைக்கு அஞ்சிய கோழையாகி விட்டதை எண்ணி அவமானப் படும் அவர் ஆன்ட்ரியோவிடம், ஆன்ட்ரியோ, விஞ்ஞானிகளுக்கு  அந்த விஞ்ஞானம் ஒரு வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். அது அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான வழியாகிப் போய் விடக்கூடாது. நான் எனது தொழிலுக்குத் துரோகம் செய்து விட்டேனோ?” என்று மனம் புழுங்குகிறார்.
                                                        
                                                                                 

புனேயில் உள்ள,
 விண்ணியல் மற்றும் விண்பௌதீக
மைய வளாகத்தில்
(Inter University Center for Astronomy and Astrophysics)
நிறுவப்பட்டுள்ள
ஆர்யபட்டரின் சிலை
(சிற்பியின் கற்பனை வடிவம்)
இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில் அந்தக் காலக் கட்டத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது? ஐரோப்பாவில் இத்தகைய ஒரு தீவிரக் கருத்து யுத்தமும்  மத அடக்குமுறையும் உச்ச கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில், இந்தியாவில் எந்த சலனமும் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மன்னர்கள் எப்போதும் போல் தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதும், அப்படிச் சண்டைகள் இல்லாத ஒய்வுக் காலங்களில்(!) அரசவையில் நர்த்தகியின் அவயவங்களைக் கலை அழகோடு ரசிப்பதுமாய்ப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

புலவர்கள், வழக்கம் போல் அரசர்களின் தோள்களையும் அவர்தம் காமக் கிழத்திகளின் மார்புகளையும் புகழ்ந்து கவி பண்ணிக் கொண்டிருந்தனர். இன்னொரு புறம், சிவ பக்தர்களும், விஷ்ணு பக்தர்களும், இந்த மாயப் பிரபஞ்சத்தைப் புறம் தள்ளி, கோயில் கோயிலாய்ச் சென்று பக்தி நெறியைப் பரப்பிக் கொண்டு பரவசநிலையில் இருநதனர். சாதாரண மனிதனோ, 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன' என்றும் 'நாளைப் பாடு நாராயணா' என்றும் சொல்லிக் கொண்டு எந்த சுற்றுப் புறப்பிரக்ஞையும் இன்றிக் காலம்  தள்ளிக் கொண்டிருந்தான். இந்தியாவில் எல்லா சாதிகளும் இருந்தும், இந்த விஞ்ஞானிகள் என்ற சாதி மட்டும் ஏனோ உருக்கொள்ளாமலேயே போனது! 

ஆனால், புராதன பாரதத்தில் இந்த நிலை இருக்கவில்லை. கிரேக்க, ரோமானிய நாடுகளைப் போலவே இங்கேயும் ஏராளமான கணித, வான சாஸ்திர, தர்க்க, தத்துவ மேதைகள் நிறைந்திருந்தார்கள். பிரபஞ்ச மூலத்தைக் குறித்த ஆர்வமும், தேடலும் நிறைந்த கருத்துகள் சுதந்திரமாய் அறிஞர்களிடம் பரவி இருந்தன. கி பி ஐந்தாம் நூற்றாண்டில் பாடலி புத்திரத்தில் வாழ்ந்த ஆர்யபட்டர், பூமி-மையக் கொள்கையைக் கொண்டிருந்தாலும், பூமி தன் அச்சில் சுழல்வதைத் தனது நூல்களில் வலியுறுத்தினார்.. அவருக்குச் சில வருஷங்களுக்குப் ிறகு வந்த பிரம்மகுப்தரோ, பூமி உருண்டை வடிவமாக இருப்பதாகவும், அது ஓர் இடத்தில் நிற்காமால் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

மேற்கண்ட அபூர்வமான தகவல்களைக், கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில், கஜினி முகம்மதுவின் காலத்தில்  ந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட  ‘ஆல்பெருனி’ என்னும் பாரசீக அறிஞர், தனது  இந்தியாவைப் பற்றிய நூலில் குறிப்பிடுகிறார். "வராக மிகிரர், பிரம்ம குப்தர் போன்ற இந்திய அறிஞர்கள் வானவியல் நிகழ்வுகளான சூரிய சந்திர கிரகணங்கள் உண்மையில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தனர்" என்றும் அவர் அந்த நூலில் வியந்து எழுதுகிறார்.  

அப்படி இருந்தும் அதற்கு மாறான அறிவியல் சாராத கற்பனைக் கதைகளிலேயே பாமர மக்களைத் தொடர்ந்து இருக்கச் செய்ததின் உள் நோக்கம் என்ன? அரண்மனைச் சோதிடரான வராக மிகிரர் தனது பிழைப்பைக் கெடுத்துக் கொள்வதோடு பிற புரோகிதர்களின் பிழைப்பையும் கெடுத்து அவர்களின் கோபத்துக்கும் ஆளாகிற முட்டாள் தனத்தைச் செய்யத் தயாராக இல்லாமல் இருந்திருக்கலாம்! 
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த
 பாரசீக வானவியல் அறிஞர் ஆல்பெருனி

அந்தக் கால கட்டத்தில் தூய விஞ்ஞானம், தூய வானவியல் என்று, மதச் சடங்குகளின்  கலப்பில்லாத  ஓர் அறிவுத் தேடல்  இங்கே உருவாகாமல் போனது  இந்தியாவின் துர்ப்பாக்கியமே. கோபர்நிகஸ், கலிலியோ காலங்களுக்கு முன் இருந்த ஐரோப்பிய நாடுகளும் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை. இங்கே வராக மிகிரரைப் போலவே ஐரோப்பாவிலும் ‘யொஹான்னஸ் கெப்ளர்’(Johannes Kepler) என்ற அறிஞர் வானவியல், சோதிடம் இரண்டிலுமே காலை வைத்துக் கொண்டிருந்தார். 

உண்மையில், தனது வானவியல் ஆய்வுகளுக்குத் தேவையான பணத்தை அவர் ஓய்வு நேரங்களில் சோதிடம் சொல்லியும், பிரபுக்களுக்கும் அரசர்களுக்கும் ஜாதகம் குறித்துக் கொடுத்தும் சம்பாதிக்க வேண்டியதாய் இருந்தது. ஆனால், கெப்ளருக்கு இந்த இரண்டையும் கலந்து குழப்புவதில் சம்மதம் இல்லை. வானவியலையும் சோதிடத்தையும் தனித் தனியே பிரித்து, தான் ஒரு வானவியல் அறிஞராக அடையாளம் காணப்படுவதையே அவர் விரும்பினார் என்பது அவர் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. அத்தகைய முயற்சிகளோ, கேள்விகளோ நமது பண்டைய வான சாஸ்திரிகளிடம் இருந்ததாய் நாம் அறியோம். ஒரே சமயத்தில், வானவியல் அறிஞர்களாகவும்  சோதிடர்களாகவும் இருப்பதில் அவர்கள் எத்தகைய முரண்பாடுகளையும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.
                                                               
                                                                          4

புராதன இந்திய நூல்கள் பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி எப்படிப் பேசுகின்றன? பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் ஒரு சுலோகம் இப்படிப் பேசுகிறது: “ஆரம்பத்தில் தனியாகத் தான் ஒன்றே இருந்த பிரும்மம், அந்தத் தனிமையில் கசப்புற்றுத் தானே இரண்டாக, ஒரு பகுதி ஆணாகவும் இன்னொரு பகுதி பெண்ணாகவும் பிரிந்தது. பின் அவை இரண்டும் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து ஒன்றை ஒன்று துரத்திச் சல்லாபித்துப் புணர்ந்து பூமியில் மனிதர்கள் முதலான சகல ஜீவராசிகளையும் தோற்றுவித்தன..” இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், விவிலியத்தில் சொன்னது போல் உலகத் தொடக்கத்தில் கடவுள் தனித் தனியாக உயிரினங்களைத் தோற்றுவித்ததாகக் கற்பிக்காமல், இங்கே சிருஷ்டிக்கிறவனே அந்த சிருஷ்டிகளாகவும் மாறுகிற அதிசயத்தைப் பார்க்கிறோம்.

ரிக்வேதம் பிரபஞ்சத்தின் மூலப் பொருளை 'ஹிரண்ய கர்ப்பம்'என்று சித்தரிக்கிறது. ஹிர்ணய கர்ப்பம் என்ற சொல்லுக்குத் தங்கமயமான முட்டை என்று பொருள் சொல்லப் படுகிறது. ஆரம்பத்தில் எதுவும் அற்ற பெருவெளியில் எங்கும் எல்லையற்று விரிந்து கிடந்த நீர்ப் பரப்பில் அந்தத் தங்கமுட்டை தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்தது. பின் அது இரண்டாக உடைந்தது. ஒரு பாதி பிருகிருதி(பூமி)யாகவும் இன்னொரு பாதி சுவர்க்கமாகவும் (ஆகாசம்) உருக்கொண்டது.இந்தப் பொன்முட்டை விவகாரம், இதுவரை நாம் கண்ட பிரபஞ்ச உற்பத்திக் கற்பனைகளிலேயே மிகமிக நேர்த்தியானதும், நளினமானதும் ஆகும். ஆனாலும். அதீத ஆர்வக் கோளாறால், இந்தப் பொன் முட்டை வெடித்து அதிலிருந்து பூமியும் ஆகாசமும் தோன்றிய கதையைநவீன விஞ்ஞானக் கோட்பாடான ‘பெருவெடிப்பு’க் கொள்கை(Big Bang Theory)யோடு தொடர்பு படுத்தி அற்ப சந்தோஷம் அடைகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் சந்தோஷத்தை நாம் கெடுக்க வேண்டாம்!

இதை விட மிகவும் ஜாக்கிதையாகவும், தர்க்க ரீதியாகவும் இந்த விஷயத்தை அணுகுகிறது, அதே ரிக் வேதத்தில் வரும்  நாசதீய சூக்தம். பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றிப் பெரிதாய்க் கேள்வி எழுப்பி விட்டு, மேலே சொன்ன வம்புகள் எதிலும்  சிக்கிக் கொள்ளாமல், “இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து வந்தது, யாரிடமிருந்து வந்தது  என்பது பற்றியெல்லாம்  நாம் அறியோம். இதை யாரேனும் சிருஷ்டித்திருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம்..” என்று பிடி கொடுக்காமல் நழுவி விடுகிறது. 

நிம்மதியான நிலைப் பாடு. எதிலும் பட்டுக் கொள்ள வேண்டாம். யாருடைய சித்தாந்த வலையிலும் போய் மாட்டிக் கொள்ள வேண்டாம். எல்லோரையுமே திருப்திப் படுத்தியாயிற்று, அல்லது யாரையுமே திருப்திப் படுத்தவில்லை. ஜனகரின் சபையில் பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றி பிரும்ம ஞானி யாக்யவல்கியரிடம்  சரமாரியாய்க் கேள்விகள் கேட்கிறாள் கார்கி என்கிற ஒரு தைரிய சாலிப் பெண். ஒரு கட்டத்துக்கு மேல் அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறும் யாக்யவல்கியர், “கார்கி, இதற்கு மேல் கேள்விகள் கேட்டால் உன் தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறி விடும்..” என்று கத்துகிறார். நாசதீய சூக்தம் எழுதியவரின் நேர்மையை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது தான்!
                                                      
                                                                              5
                                                                                                                                             
கலிலியோ பயன்படுத்திய
தொலைநோக்கி
கோபர்நிகஸ், கலிலியோ மற்றும் கெப்ளருக்குப் பின் வந்த நியூட்டனின் காலத்தில் மத குருக்களின் பிடி பெருமளவுக்குத் தளர்ந்த நிலையில், சுதந்திரமான விஞ்ஞானக் கருத்துகள் அச்சமின்றிப் பரிமாறிக் கொள்ளப் பட்டன. புவியீர்ப்புவிசைக் கொள்கை(Universal law of Gravitation), ஐசக் நியூட்டனால் முன்வைக்கப் பட்டது. நியூட்டனின் மூன்று இயக்க விதிகளும், உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், அவரது முதல் விதியின் அடிப்படையில், ‘இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி இதில் கோள்களை முடுக்கி விட்டுச் சுற்றச்செய்த பிற்பாடு, கடவுளுக்கு எந்த வேலையும் இல்லை, அவை அவரது தயவின்றியே தாமாகவே தங்கள் இயக்கத்தைக் கவனித்துக் கொள்ளும்’ என்ற  கொள்கை சில சக விஞ்ஞானிகளால் முன்வைக்கப் பட்டது.

இதே சந்தர்ப்பத்தில் ஒளியின் பக்கம் விஞ்ஞானிகளின் கவனம் திரும்பியது. ஒளி துகளாக வருகிறதா, அல்லது அலையாக வருகிறதா என்ற சுவாரஸ்யமான சர்ச்சையை ஐசக் நியூட்டனும், கிறிஸ்டியன் ஹைகன்ஸும் கிளப்பி விட்டனர். ஒளியின் சில குணங்கள் நியூட்டனுக்கும், வேறு சில குணங்கள் ஹைகன்ஸுக்கும் சாதகமாக இருந்ததால், இரு தரப்பினரும் தங்கள் தங்கள் கொள்கைகளை நிறுவ வேண்டிப் பல்வகை வாதங்களை முன்வைத்தனர். இரு பக்கங்களிலிருந்தும் சில அபத்தமான நியாயப்படுத்தல்களும் நிகழ்ந்தன. வானுக்கும் பூமிக்கும் ஒளி வடிவமாய் நின்ற சிவனின் அடியையும் முடியையும் தேடிச் சோர்ந்து போய்த் திரும்பிய புராண விஷ்ணுவையும் பிரம்மாவையும் போல் இந்த நவீன பிரம்மா விஷ்ணுக்கள், ஒளியின் உண்மையான சொரூபத்தை அறிந்து கொள்ளத் தங்கள் தலை முடியைப் பிய்த்துக் கொண்டனர். ஒளி யாருக்கும் அகப்படாமல், சில சமயம் துகளாகவும், சில சமயம் அலையாகவும்  தோற்றம் காட்டித் தன் மெய்யான சொரூபத்தை இருட்டடிப்பு செய்து கொண்டு எல்லோரோடும் கண்ணாமூச்சி ஆடியது!

1865-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்னும் விஞ்ஞானி, ஒளி மின்காந்த அலைகளாக(Electromagnetic Waves) வருவதாகத் தெரிவித்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாக்ஸ் பிளான்க்(Max Planck) என்ற அறிஞர், வெப்பக் கதிர்கள் தனித்தனி ஆற்றல் பொட்டலங்களாக (energy packets) வருவதாக ஒரு போடு போட்டார். இது அத்தனை விஞ்ஞானிகளின் அடிவயிற்றிலும் புளியைக் கரைத்தது இது வரை மிகுந்த போராட்டங்களோடும், பிரயத்தனங்களோடும் கட்டிய கோபுரத்தின் அஸ்திவாரமே இந்தப் புதுமையான அணுகுமுறையால் ஆட்டம் கண்டது. பண்டைய இயந்திரவியல் (classical mechanics) வாதிகள் முகம் சுளித்தனர்; மின்காந்த அலையியல் (electromagnetic wave theory) வாதிகள் எரிச்சல் அடைந்தனர். மாக்ஸ் பிளான்க்கின் இந்தப் புதிய கோட்பாடு குவாண்டம் கொள்கை (Quantum Theory)  என்னும் புரட்சிகரமான  ஒரு புதிய விஞ்ஞானத்துக்கு வித்திட்டது.
                                                      
                                                                               6               


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இந்தக் கொள்கையை ஒளிக்கும் விஸ்தரித்து, மின்காந்த அலைக் கொள்கையால் அதுவரை விளக்க முடியாமல் இருந்த  ஒளிமின் விளைவை(Photoelectric effect) மிகவும்திருப்தி கரமாக  விளக்கினார். இந்த விளக்கத்தின் பொருட்டே அவருக்கு 1921-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல்பரிசு கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில், கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகிற மாதிரி எலக்ட்ரான்களும் அணு மையத்தைச் சுற்றி வருவதாய் ரூதர் ஃபோர்ட், நெய்ல்ஸ் போர் போன்றோர் ஒர் அணு மாதிரியை முன்வைத்தனர். 

ஆனால் பரிசோதனைகள் மூலம், சூரியமண்டலத்தில் கிரகங்கள் செயல்படுகிற மாதிரி அத்தனை எளிமையாய் எலக்ட்ரான்களின் செயல்பாடுகள் இல்லை என்று தெரிய வந்தது. எலக்ட்ரான்களின் நடவடிக்கை நியூட்டனின் பண்டைய இயந்திரவியல் விதிகளுக்கும், மாக்ஸ்வெல்லின் புதிய மின்காந்தஅலை-விதிகளுக்கும் பிடிபடாமல் இருந்ததால், இந்தப் பழைய  விதிமுறைகள் எலக்ட்ரான்கள் சுழலும் அணுவின் நுண் உலகத்தில் செல்லுபடியாகாது என்று போர் முதலானோர் கருதினர். அவற்றின் நடவடிக்கைகளைக் கணிக்கக் குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் புதிய விதிகள் வகுக்கப்பட வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

இந்தக் கட்டத்தில் தான் ஒளி எப்படித் துகளாகவும்   அலையாகவும்  மாறி மாறி இரட்டை வேடம் போடுகிறதோ அதே போல் நுண்ணணுக்களான எல்க்ட்ரான்களும் துகளாக மட்டுமன்றி அலைகளாகவும் நடந்து கொள்கின்றன என்று டீ ப்ராக்லீ என்னும் விஞ்ஞானி ஒரு புரட்சி கரமான கருத்தை முன் வைத்தார். இந்த அலைக் கூட்டங்களின் நடுவே எந்த நேரத்தில் ஓர் எலக்ட்ரான் எந்த இடத்தில் இருக்கும் என்பதையும் அது அந்த இடத்தில் எந்த வேகத்தில் எந்த திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் ஒரே சமயத்தில்  துல்லியமாகக் கண்டு பிடித்துக் கூற  முடியாது என்று ஹைசன்பர்க் என்பவர் சொன்னார். இந்தக் கோட்பாடு ‘ஹைசன்பர்க்கின் நிச்சயமின்மைக் கொள்கை” (Heisenberg’s Uncertainty Principle) என்று பின்னால் புகழ் பெற்றது.

அணுக்களின்  உலகில் எதுவும் நிச்சயம் இல்லை. எதுவும் எப்படியும் நடக்கலாம். எதுவும் எப்படியும் நடக்காமலும் இருக்கலாம்! எதுவும் முன்கூட்டியே தீர்மானிக்கப் படுவதில்லை. நுண்ணணு உலகின் இயக்க நிகழ்வுகள், சில தெரிந்த விதிகளின் பிரகாரம், இப்படி ஆரம்பித்தால் இப்படிப் போய் இப்படி முடியும் என்கிற மாதிரி ஒரு சௌகரியமான ஒழுங்கு முறையோடு நடக்கவில்லை. மாறாக,அவை எந்த ஒழுங்கு முறையும் அற்று, அந்தக் கணத்து வாய்ப்புகளின் (probability) அடிப்படையிலேயே நிகழ்கின்றன. இது பெரிய  அளவுக்குப் பிரபஞ்ச இயக்கங்களைப் பற்றிய அறிவியல் பார்வையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. பேருலகில் கண்ணுக்குத் தெரியும் கோள்கள்,நட்சத்திரங்கள் முதலான சகலப் பிரம்மாண்டங்களும்,இந்த நுண்ணணுக்களாலேயே ஆக்கப்பட்டவை என்பதால்,வெளிப் பார்வைக்கு ஒரு கட்டுக் கோப்பான ஒழுங்கு முறையோடு தீர்மானமாக நிகழ்கிற மாதிரித் தோன்றுகிற புறவுலக இயக்கங்கள் யாவும், உண்மையிலேயே அவற்றின் உள்ளிருந்து அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் நுண்ணணுக்களின் தீர்மானிக்கப் படாத, ஒழுங்கற்ற, இயக்கங்களாலேயே முடிவு செய்யப் படுகின்றன.

‘பிரபஞ்சத்தின் சகல இயக்கங்களும் கடவுள் அல்லது சிருஷ்டிகர்த்தா ஒருவரின் இச்சைப்படி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டே நிகழ்கின்றன’ என்ற மதங்கள் போதிக்கும் நம்பிக்கைக்கு இது முற்றிலும் எதிர்மாறாக அமைந்தது ஒரு புறம் இருக்கட்டும். பிரபஞ்ச இயக்கங்களை விளக்க அதுவரை தனித்தனியாக இருந்த வெவ்வேறு இயற்பியல் விதிகளை எல்லாம் ஒன்றிணைத்து,பொதுவில் ஒரே விதியைத்(Unified Field Theory) தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த ஐன்ஸ்டீனுக்கு குவாண்டம் இயற்பியலில் நிகழ்ந்து வந்த இந்தப் புதிய முன்னேற்றங்கள் அதிர்ச்சியையும் எரிச்சலையும் அளித்தன. 

குவாண்டம் இயற்பியல் போகும் போக்கு அவருக்குப் பிடிக்கவில்லை. எந்தக் குவாண்டம் இயற்பியல் அவர் ஆரம்ப காலத்தில் நோபல் பரிசு வாங்க ஏதுவாய் இருந்ததோ, அதே குவாண்டம் இயற்பியலை அவர் பின்னால் ஏற்க மறுத்தார். ஹைசன்பர்கின் நிச்சயமின்மைக் கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த சந்தர்ப்பத்தில் தான் ஐன்ஸ்டீன் அந்தப் புகழ் பெற்ற “கடவுள் பிரபஞ்சத்தோடு பகடை ஆடவில்லை” (God does  not play dice with the Universe)  என்ற வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் இயற்கைக்கு நியூட்டனையும் தெரியாது, ஐன்ஸ்டீனையும் தெரியாது! அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக அது இயங்கிக் கொண்டிருக்கவில்லை.

                                                                              7
                                                                                                                                           
பெருவெடிப்புக் கொள்கையை
முன்வைத்த,
பெல்ஜியத்தைச்சேர்ந்த
ஷார்ஜ் லெமைட்ர (Georges Lemaitre)
1926-ஆம் வருஷம் லெமைட்ர (Georges Lemaitre) என்னும் பெல்ஜியக் கணித,வானவியல் அறிஞர் பெருவெடிப்புக் கொள்கை(Big Bang Theory) என்றொரு புதுக் கொள்கையை முன்வைத்தார். இது பிரபஞ்ச உற்பத்தி பற்றியது. இரண்டாயிரம், மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால், விஸ்தாரமாக வெவ்வேறு விதமாய்க் கற்பனைக் குதிரையில் ஏறிக் கட்டவிழ்த்து விட்ட கதைகளிலிருந்து மாறுபட்டதாய் முதன் முதலாய் உருவான அறிவியல் பூர்வமான கொள்கையாக அது இருந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,கோபர்னிகஸ் போன்று லெமைட்ரவும் ஒரு கிறிஸ்துவ மதபோதகராகவும் இருந்தது தான். 

ஆனால், லெமைட்ர அறிவியலில் மதத்தைக் கலக்கக் கூடாது என்ற தெளிவும் நேர்மையும் உடையவராயிருந்தார். இந்தப் புதிய கொள்கையின் படி, 1370 கோடி வருஷங்களுக்கு முன் இந்த மொத்தப் பிரபஞ்சமும் ஒரே ஒரு சிறு புள்ளிக்குள் (Singularity) எல்லையற்ற அடர்த்தியோடு இறுக்கமாக அடைபட்டுக் கிடந்தது. அப்போது அதைச் சுற்றி வேறு எதுவும் இருக்கவில்லை. அந்தப் புள்ளி எல்லையற்று அடர்ந்து இறுகியிருந்ததைப் போலவே, எல்லையற்ற வெப்ப நிலையில் தகித்துக் கொண்டும் இருந்தது. திடீரென்று ஒரு கணத்தில் அது தனது உள் வெப்பமும் அழுத்தமும் தாங்காமல் வெடித்தது.

‘வெடித்தது’ என்று பேருக்குச் சொன்னாலும்,வேகமாக ஊதப்பட்ட ஒரு ராட்சச பலூனைப் போல் அது விடுவிடுவென விரிந்தது என்று சொல்வதே சரியாக இருக்கும்.அதனுள் பதுங்கி இருந்து வெளி வந்த பருப்பொருள், விரிதல் மூலம் குளிரத் தொடங்கி, பிரபஞ்சத்தின் முதல் புரோட்டான்களும், நியூட்ரான்களும், எலக்ட்ரான்களும் அவதரித்தன. இந்தப் பிரபஞ்ச முட்டை(Cosmic egg) ‘வெடித்த’ முதல் ஒரு நிமிஷத்தில், இன்னும் வெப்பம் குளிர்ந்து, புரோட்டான்களும் நியூட்ரான்களும் நெருங்கி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து பிரபஞ்சத்தின் முதல் ஹைட்ரஜன் அணுக்கருக்களும்(nucleus) ஹீலியம் அணுக்கருக்களும் தோன்றின. ஆனால் தூரத்தில் இருந்த எலக்ட்ரான்கள்களும் இந்த அணுக்கருக்களோடு சேர்ந்து மின்னேற்றம்(electric charge) அற்ற ஹைட்ரஜன் அணுக்களும் ஹீலியம் அணுக்களும் (neutral atoms) உருவெடுப்பதற்குப் பிரபஞ்சம் இன்னும் பல ஆயிரம் வருஷங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இப்படியே பிரபஞ்சம் தனது  இன்றைய வடிவத்துக்கு வரப் பல மில்லியன் வருஷங்கள் பிடித்தன. இன்னும் இந்தப் பிரபஞ்சம் தனது விரிவடைதலை நிறுத்தவில்லை. அது தன்  பாட்டுக்குத் தொடர்ந்து விரிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆதி ஒற்றைப் புள்ளி(singularity) அது வெடிக்கிற அந்தக் கணத்தில் எந்த ‘வெளி’யில் தங்கி இருந்தது? தெரியாது. ஏனெனில் அப்போது, புள்ளி ‘வெளி’யில் இல்லை,மாறாக ‘வெளி’யே புள்ளிக்குள் தான் இருந்தது! புள்ளி வெடித்து விரிந்த போது தான் ‘வெளி’யே பிறந்தது. சரி,அந்தப் புள்ளி வெப்பமும் அழுத்தமும் தாங்காமல் வெடிப்பதற்கு ‘முன்னால்’ என்ன நிகழ்ந்தது? இந்தக் கேள்வியும் அபத்தமே. ஏனெனில் “முன்னால்’, ‘பின்னால்’ என்ற நேரக் குறியீடுகள் எதுவும் அப்போது இல்லை. காரணம்,நேரமே அதற்கப்புறம் தான் பிறந்தது! லெமைட்ர அறிமுகம் செய்த இந்தப் பெரு வெடிப்புக் கொள்கை உண்மையில், அதுவரையில் வளர்த்தெடுக்கப்பட்ட தூய அறிவியல் நிலையிலிருந்து பிறழ்ந்து ஒரு தத்துவார்த்த அறிவியலாய்த் தோற்றம் கொண்டது.

இந்தப் புதிய பிரபஞ்சக் கொள்கை அறிவிக்கப் பட்ட பின்னால் வழக்கம் போல் இதுவும் பலத்த சர்ச்சைகளுக்கும் கேலிகளுக்கும் ஆளானது. குவாண்டம் இயற்பியலைச் செய்த மாதிரியே இந்தப் பெரு வெடிப்புக் கொள்கையையும் ஐன்ஸ்டீன் கடுமையாகக்  கேலியும் விமர்சனமும் செய்தார். பெருவெடிப்புக் கொள்கையின் பிரதான அம்சமாய் இருந்த ‘பிரபஞ்ச விரிவாக்கம்’ ஐன்ஸ்டீனை ரொம்பவுமே தொந்தரவு செய்தது. அது, அவரது பொதுச் சார்புக் கொள்கை(General Theory of Relativity)யின் அடிப்படை அம்சமான ‘அசைவற்ற பிரபஞ்சம்’ (Static Universe) என்னும் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்ததால், ‘பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறது’ என்ற விஷயத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்,அவர் லெமைட்ரவிடம், ”உங்கள் கணிதம் நன்றாக இருக்கிறது;  ஆனால் உங்கள் பௌதீகம் கொடூரமாய் இருக்கிறது” என்று கிண்டல் செய்ததாய்ச் சொல்லப்படுகிறது. பல வருடங்கள் கழித்துப் பிற விஞ்ஞானிகள் செய்த பரிசோதனைகள் ‘விரியும் பிரபஞ்ச’க் கொள்கைக்கே சாதகமாக முடிந்த போது ஐன்ஸ்டீனும் பெருவெடிப்புக் கொள்கையை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார்.
                                                      
                                                                               8
                                                                                                                                             
போஸான் துகளுக்கு
அந்தப் பெயர் வரக்
காரணமாய் இருந்த
சத்யேந்திர நாத் போஸ்
ஒரு புறம் இப்படிப் பிரபஞ்ச மூலம் பற்றிய தீவிர ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, இன்னொரு புறம் அதே நேரத்தில் அணுக்களின் உலகம் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. இதில் விசேஷம் என்னவென்றால், ஒன்று எல்லையற்ற பெரிது (infinitely large) பற்றிய தேடல் என்றால்,இன்னொன்று எல்லையற்ற சிறிது(infinitely small) பற்றிய தேடலாய் இருந்தது. இதைக் கொஞ்சம் கவித்துவத்தொடு சொல்வதென்றால், விஞ்ஞானம் ஒரே சமயத்தில் திரிவிக்ரமனனையும் வாமனனையும் அருகருகே நிறுத்தி வைத்து ஆராய்ந்தது! இதன் விளைவாக, பிரம்மாண்டம் அணுக்களால் ஆனது என்று அறிந்த அறிவியல், அணுவுக்குள்ளும் ஒரு பிரம்மாண்டம் இருந்ததை அறிந்து மலைத்தது. அது வரை பகுக்க முடியாததாய் அறியப் பட்ட அணுவுக்குள்ளும், அணுவிலும் சிறியதாய் ஏராளமான நுண்ணணுக்கள் இருப்பது பரிசோதனைகள் மூலம் நிரூபணம் ஆகியது.  

இந்த நுண்ணணுப் பட்டாளம் மொத்தத்தையும் இரண்டு வகைத் துகள்களுக்குள் அடக்கி வரையறை செய்தனர் குவாண்டம் இயந்திரவியல் விஞ்ஞானிகள்.. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் மற்றும் அவையொத்த நிறை(mass) உள்ள துகள்கள் அனைத்தும் ஃபெர்மியான்களாக(Fermions) வரையறை செய்யப்பட்டன. நிறை அற்ற துகள்களுக்கு போஸான்கள் (bosons) என்று பெயரிடப்பட்டது. இதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் நிறை உள்ள ஃபெர்மியான் துகள்கள் தங்களது நிறையை நிறையற்ற போஸான் துகள்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டன!

இந்த விசித்திர போசான்களுக்கு எப்படி அந்தப்  பெயர் வந்தது என்பது இன்னொரு சுவாரஸ்யமான கதை. சத்யேந்திரநாத் போஸ் என்னும் இந்திய விஞ்ஞானி வங்காளத்தைச் சேர்ந்தவர். ஜகதீஸ் சந்திர போசின் பிரதான மாணவரான இவர்,1920-களில் டாக்கா பல்கலைக் கழகத்தில்(தற்போதைய பங்களா தேஷ்) இயற்பியல் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஜெர்மனியில் இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கட்டுரையை அனுப்பிக் கூடவே ஒரு கடிதமும் இணைத்து அனுப்பினார். அந்தக் கட்டுரையில் ப்லாங்கின் கதிர் வீச்சு விதியைப்(Planck’s’ radiation law)  பண்டைய இயந்திரவியலின்(Classical Mechanics) துணை இன்றி முற்றிலும் நவீனக் குவாண்டம் இயந்திரவியலைக் கொண்டே, ஒரு புதிய வகைத் துகளை வைத்து விளக்க முடியும் என்று சமன்பாடுகளின் மூலம் நிரூபித்திருந்தார். அந்த அணுகு முறை ஐன்ஸ்டீனுக்குப் பிடித்துப் போகவே, அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து, ஜெர்மனியில் அப்போது பிரபலமாய் இருந்த ஓர் இயற்பியலுக்கான சஞ்சிகையில் வெளியிட்டார். அந்தக் கட்டுரை அன்றைய செல்வாக்கு வாய்ந்த அறிவியல் நிபுணர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், அத்தகைய துகள்களின் இருப்புக்கான சாத்தியக் கூறுகளையும் மிகவும் திருப்திகரமான வகையில் முன்வைத்தது. 

போஸைக் கௌரவிக்கும் வகையில் அந்தத் துகளுக்குத்தான் போஸான் என்று  பெயர் சூட்டப்பட்டது. அவ்வகைப் போஸான்கள் இருப்பது பின்னால் பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்றால், மற்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் பேசப்பட்ட அளவுக்கு எஸ்.என். போஸ் பேசப்படவில்லை. அதோடு மட்டுமின்றி, போஸான் துகள் குறித்துத் தொண்ணூறுகளின் இறுதியில்  நடந்த ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசுகள் அளிக்கப் பட்ட போதிலும், அதற்குப் பெயர் வர மூலகாரணமாய் இருந்த இந்திய விஞ்ஞானி போஸை நோபல் கமிட்டி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை                                            
                                                                                9
                                                                                                                                                  
ஜெனீவாவுக்கறுகில்,
பூமிக்கடியில் பொருத்தப் பட்ட,
பெரு வெடிப்பு (Big Bang)
பரிசோதனை செய்யப் பட்ட
LHC இயந்திரம்
போஸான் துகள்களின் வரிசையில், 1964-இல், பீட்டர் ஹிக்ஸ் என்னும் ஆங்கிலேய இயற்பியல் அறிஞர் இன்னொரு புதிய வகைப் போஸானை அனுமானமாய் முன்வைத்தார். அதுவரை எந்தப் பரிசோதனைகளிலும்  அகப்படாத இந்தப் போஸான் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர் வைக்கப் பட்டது. மற்ற போஸான்களைக் காட்டிலும் இது அதிகமாக எல்லா பிரபஞ்சவியல் அறிஞர் களின் கவனத்தையும் ஈர்க்கக் காரணம் இருந்தது. 

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த பெருவெடிப்பின் (Big Bang) அந்த முதல் கணத்தில் உருவான இந்த ஹிக்ஸ் போஸான் துகளே, அதற்கு அடுத்தடுத்துத் தோன்றிய மற்ற எல்லாத் துகள்களுக்கும் (ஃபெர்மியான்கள்) நிறை (mass) வழங்கியதாக நம்பப் படுகிறது. அல்லது, கவி மொழியில் சொல்வதாய் இருந்தால், நவீன விஞ்ஞானம் தேடிக் கொண்டிருந்த, பிரபஞ்ச சிருஷ்டிக்கான, மூலப் பிரம்மம், அல்லது ஆதிபிதா இந்த ஹிக்ஸ் போசானாகவே இருக்கக் கூடும். இந்தக் காரணத்தாலேயே எந்தப் பரிசோதனைக்கும் அகப்படாமல் நழுவிக்கொண்டிருந்த, கொள்கை ரீதியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த(hypothetical particle)  இந்த ஹிக்ஸ் போஸான் துகளை வேடிக்கையாய்க் ‘கடவுள் துகள்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

உண்மையில், 1964-ஆம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸால் ஊகிக்கப்பட்ட இந்தத் துகளைப் பற்றி, லியான் லேடர்மன்(Leon Lederman) என்னும் நோபல் விஞ்ஞானி ,“கடவுள் துகள்: பிரபஞ்சம் பதில் என்றால் கேள்வி என்ன?(God particle: If the Universe is the answer, what is the question?)’ என்ற சுவாரஸ்யமான தலைப்பில், பிரபஞ்சவியல் பற்றி ஒரு புத்தகம் 1993-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அதன் பிரசுரகர்த்தர், ஜனரஞ்சகமான பரபரப்பை உண்டு பண்ணும் வணிக நோக்கில், லேடர்மன் goddam particle என்று குறிப்பிட்டதை God particle  என்று மாற்றி விட்டதாய்க் கூறப்படுகிறது. 

உண்மையில் பீட்டர் ஹிக்ஸ் கடவுள் நம்பிக்கை அற்றவர். தான் ஊகித்துச் சொன்ன ஹிக்ஸ் போஸான் துகளுக்குக் கடவுள் துகள் என்று பெயர் வைத்ததை அவர் விரும்பவில்லை. கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அவரும் அவரது சகவிஞ்ஞானிகளும் விளக்கம் கொடுத்த பின்னரும் யாரும் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாய்த் தெரியவில்லை!

கடைசியாக, இப்படிக் கடவுள் துகள் என்று செல்லப் பெயர் சூட்டப்பட்ட மேற்சொன்ன  ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடி ஒரு பிரம்மாண்டமான திட்டத்தோடு, உலகின் முன்னணி விஞ்ஞானிகள் எல்லோரும் திரண்டு வரிந்து கட்டிக்கொண்டு பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியது தான், நாம் இதுவரை சொல்லிக் கொண்டு வந்த கதையின் உச்சக்கட்டம்(climax)!  ராட்சச ஞானம் கொண்ட இந்த நவயுக ரிஷிகள், கடவுள் துகளின் தரிசனத்துக்காக ஒரு மிகப் பெரிய இயந்திரத்தை வடிவமைத்தனர். 

Large Hadron Collider (LHC) என்று அழைக்கப் படும் இந்த வேகமுடுக்கி இயந்திரம் (Particle Accelerator) ஃப்ரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில், ஜெனீவாவுக்கு அருகே, பூமிக்கடியில் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்ட 27 கிலோமீட்டர் சுற்றளவும், 7.8 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வட்ட வடிவக் கான்க்ரீட் சுரங்கத்துக்குள் பொருத்தப்பட்டது. 1998-லிருந்து 2008 வரையிலான பத்தாண்டுகள், CERN என்று சுருக்கமாக அழைக்கப்படும், ’அணுக்கரு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்(European organization for Nuclear Research)’ உலகெங்கிலும் உள்ள நூறு நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரம் விஞ்ஞானிகள், பொறியாளர்களின் கடும் உழைப்பில், 1000 கோடி டாலர் செலவில் இந்த இமாலயப் பணியை நிறைவேற்றி முடித்தது.

இதன் தொழில்நுட்ப விவரங்கள் இந்தக் கட்டுரையின் நோக்குக்கும் வீச்சுக்கும் அப்பற்பட்டவை. இந்தப் பரிசோதனையின் நோக்கம் என்னவென்றால் இந்த ராட்சசக் குழாய்களின் ஊடாக, இரண்டு அசுர சக்தி வாய்ந்த, ஒளியின் வேகத்துக்கு சற்று மட்டும் குறைவான வேகத்தில் முடுக்கி விடப்பட்ட இரண்டு புரோட்டான் கற்றைகளை எதிரும் புதிருமாக மோதவிட்டு, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அந்தப் பெருவெடிப்பை மீண்டும் மறுநிகழ்வு செய்து, இந்த அலைக்கழிக்கும் ‘கடவுள் துகள்’ எங்காவது அகப்படுகிறதா என்று கண்டறிவது தான். வேறுமாதிரி சொல்லப் போனால், சிருஷ்டியின் அந்த ஆரம்ப வினாடிக்கூறுகளை இந்த நவீன பிரம்மாக்கள் மீண்டும் சிருஷ்டித்துப் பார்க்க ஆசைப்பட்டனர்.

2012, ஜூலை 4-ஆம் நாள், இந்த LHC-இயந்திரத்துக்குள், ப்ரோட்டான் கற்றைகளின் அசுரவேக மோதல்களின் போது, ஹிக்ஸ் போஸானை 99.9 சதவிகிதம் ஒத்திருக்கும் ஒரு புதிய துகள் ‘அகப்பட்டிருப்பதாக’ விஞ்ஞானிகள் உலகுக்கு அறிவித்தனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பின் போது, ‘கடவுள் துகளின்’ தீர்க்கதரிசி பீட்டர் ஹிக்ஸும் உடன் இருந்தார். உலகெங்கும் உள்ள செய்தித்தாள்களும், தொலைக் காட்சி ஊடகங்களும், கடைசியில் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகப் ‘பரபரப்புச்’ செய்திகள் வெளியிட்டன. சந்தடி சாக்கில், இந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு சில பழமைவாதிகளும், மதவாதிகளும் சாதாரண மக்கள்  மத்தியில், ’கடவுளையே கண்டுபிடித்து விட்டதாக’ப் பிரசாரம் செய்ததும் நிகழ்ந்தது! நல்ல வேளை, எந்தக் கோயிலிலும் புதியதாய் இந்தப் ‘போசானேஸ்வரருக்குத் தனியாய்ச் சன்னதி எதுவும் திறக்கவில்லை!


                                                                            10
                                                                                                                             
பெரு வெடிப்பும்
விரிவடையும் பிரபஞ்சமும்.
 ஓர் ஓவியரின் கற்பனை
சென்ற நூற்றாண்டின் இறுதி வரை விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகள் கண்ணுக்குத் தெரிகிறவைகளாகவும், மனித சமூக வாழ்க்கை முறைகளில் மிகப் பெரிய அளவில் சௌகரியமான மாற்றங்களைக் கொண்டு வருவனவாகவும் இருந்ததால், அவற்றின் முக்கியத்துவம் பாமரர்களும் வியந்து பாராட்டுவதாக இருந்தது. உதாரணத்துக்கு ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி என்ஜின், ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த ஆகாய விமானம், மார்க்கோனி கண்டு பிடித்த ரேடியோ போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

ஆனால் பின்னால் வந்த கண்டுபிப்புக்கள், அவற்றின் முக்கியத்துவம் பாமரர்கள் புரிந்து கொள்ளும் படியாக எளிமையாய் இல்லை. காரணம், ஒரு கட்டத்துக்குப் பிறகு விஞ்ஞானம் கண்ணுக்குத் தெரியாத உலகுக்குள்ளும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டது. சொல்லப் போனால், ஆரம்பத்தில் தூணைப் பிளந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், கால ஓட்டத்தில் துரும்பைப் பிளக்கும் செயலிலும் இறங்கத் தொடங்கினர். தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் ஆற்றல் கற்றைகள், சில உக்கிர நரசிம்மங்களாகவும், வேறு சில யோக நரசிம்மங்களாகவும்  வெளியே வந்து குதித்தன!

எல்லா அறிவியல் தேடல்களின் முடிவிலும், ஏதோ ரூபங்களில் அதற்கான பலன்கள் சமூகத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஸ்தூலமாகவோ, அரூபமாகவோ சென்றடைதல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையைச் சேர்ந்தது தான் இந்தப் பிரபஞ்சவியல் ஆய்வுகளும், ’கடவுள் துகள்’ கண்டுபிடிப்பும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய், அரிஸ்டார்க்கஸ், ஆர்யபட்டர், டாலமி என்று தொடங்கி கோபர்நிகஸ், கலிலியோ என்று தொடர்ந்து, ஐன்ஸ்டீன், லெமைட்ர என்று இன்னமும் நீண்டு கொண்டிருக்கும் இந்தத் தொடர்ந்த தேடலின் விளைவாகவே, நமது பிரபஞ்சப் பிரக்ஞை ஜீவித்திருக்கிறது. நமது மூலத்தின் முடிச்சுகளைத் திறப்பதற்கான மந்திரக் கோல், நம் கையில் முழுமையாய்க் கிடைத்து விட்டாதா என்று நாம் அறியோம். ஆனால், அறிந்த விஷயங்களின் மீது ஏறி, அறியாத விஷயங்களைத் தேடி நமது பிரபஞ்சப் பயணம் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

’அண்டத் தொகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பறும் தன்மை வளப்பெரும் காட்சி’(திருவாசகம்) என்றும் ’எல்லை இல்லாததோர் வானக் கடலிடை..”(பாரதி) என்றும் கவி மொழியில், வானத்தை அண்ணாந்து பார்த்துத் தொலைவிலிருந்தே அதிசயிக்கக் கற்றுக் கொண்ட நாம், இப்போது ‘கண்ணில் தெரியும் வானத்தைக்’ கைகளில் பிடித்து, அதை மண்ணில் வசப்படுத்தும்’ சூத்திரக் கயிற்றைத் தேடிப் பயணித்திருக்கிறோம். நமது இந்தப் பயணத்தைக் கவனமாகாவும், உணர்ச்சிவசப் படாமலும், ‘மானுடம் வெல்லும்’ என்ற இலக்கோடேயே மேலெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது. 

பழைய சிந்தனைகளில், புதுமையின் சாயல்களும் கூறுகளும் இருப்பதை அடையாளம் கண்டு அவற்றைக் கௌரவிக்கிற அதே நேரத்தில், அவற்றின் போதாமைகளையும் அவை தோன்றிய காலகட்டங்களின் வரம்புகளையும் கூடவே நேர்மையோடு ஒப்புக் கொள்வது நல்லது. தத்துவங்களைத் தத்துவங்களாகவும், அறிவியலை அறிவியலாகவுமே பார்க்கக் கற்றுக் கொள்வது, வரலாறு திரிக்கப் படுவதிலிருந்து நம்மைக் காப்பாற்றும். அவற்றை இன்றைய நவீன அறிவியல் சிந்தனைகளில் செருகிக் குழப்புவதின் மூலம், நாம் பண்டைய சிந்தனையாளர்கள், நவீன சிந்தனையாளர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் அநியாயம் இழைக்கிறோம். இத்தகைய போக்கை, “முகத்தைப் பின்னால் திருப்பி வைத்துக்கொண்டு முன்னால் நடந்து செல்ல முயல்வதோடு’  ஒப்பிட்டுக் கேலி செய்கிறார்,‘Glimpses of World History’-யில் ஜவஹர்லால் நேரு.


எல்லையற்று விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சம், வரும் தலைமுறைகளுக்காகத் தனது ரகசியங்களைப் பத்திரமாகத் தன் கர்ப்பத்தில் பதுக்கிப் பாதுகாத்து வைத்திருக்கிறது. ‘ஹிரண்மயேன பாத்ரேண சத்யஸ்யாபி ஹிதம் முகம்’ என்கிறது ஈசாவாஸ்ய உபநிஷத். ’உண்மையின் முகத்தை ஒரு தங்க மயமான பாத்திரம் மூடிக் கொண்டிருக்கிறது’ என்று இதற்குப் பொருள். பதிலை வைத்துக் கொண்டு கேள்விக்காக அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறது, லேடர்மன்னின் ‘கடவுள் துகள்’ பற்றிய புத்தகம்.
                                           -(தளம், ஜனவரி 2013, இதழில் வெளிவந்தது)