Tuesday, October 14, 2014

தாத்தா காலத்து பீரோ


பாட்டி சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் அந்த பீரோவைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பாள். பாட்டியின் எண்ணம் முழுவதும் அந்த பீரோவே பெருமளவுக்கு வியாபித்துக் கிடந்தது. ஒருவேளை, அந்த பீரோ தாத்தாவின் இன்னொரு பிம்பமாய் அவளது உள்மனதில் அழுத்தமாய்ப் பதிந்திருக்கக் கூடும்.

பீரோவைப் பற்றிப் பேச்சு வருகிற போதெல்லாம் பாட்டியின் முகத்தில் பலவிதமான உணர்வு மாற்றங்கள் ஏற்படும். சில சமயம் அது பரவசம் போல் தோற்றம் காட்டும்; இன்னொரு சமயம் எதையோ இழந்ததை மீட்டு வரும் ஏக்கமாய் வெளிப்படும்; வேறொரு சமயம் திரும்பப் பெற முடியாத ஒரு பழசை வீணுக்கு அசை போடுகிற விரக்தியாய் வடிவம் கொள்ளும்.

தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஏனென்றால், தாத்தா காலமான போது, என் அப்பாவுக்குத் திருமணமே ஆகி இருக்க வில்லை! அப்போது அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் தாத்தாவின் ஜாகை  உத்தம பாளையத்தில் இருந்தது. உத்தம பாளையத்தில், நாட்டுக்கோட்டைச் செட்டியார் நடத்திக் கொண்டிருந்த ஒரு வங்கியில் தாத்தா மேனேஜராக இருந்தார். அப்போதெல்லாம் சென்னை மாகாணத்தில் வங்கிகள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் வசமே இருந்தததாக அப்பா சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

தாத்தாவிடம் செட்டியாருக்கு அசாத்திய நம்பிக்கையும் அபிமானமும் இருந்தன. வங்கிப் பொறுப்பு மட்டும் அல்லாமல், செட்டியார் தனக்குச் சொந்தமான ஏலக்காய் மலை எஸ்டேட்டின் வரவு செலவுக் கணக்குகளின் பொறுப்பு முழுசையும்  தாத்தாவிடமே ஒப்படைக்கிற அளவுக்கு அந்த நம்பிக்கையின் தீவிரம் இருந்தது. பாட்டி  தாத்தாவைப் பற்றிச் சொல்கிற போது, “உங்க தாத்தா ஏலக்காய் எஸ்டேட் முழுசையையும்  நிர்வகிச்சிண்டிருந்தாரே  தவிர, ஆத்துக்கு இத்தனூண்டு ஏலக்காய் கூட எடுத்துண்டு வந்து நான் பார்த்ததில்ல. எஸ்டேட் ஏலக்காய் வாசனை கூட எனக்குத் தெரியாது. சமையலுக்கு வேண்டிய ஏலக்காய் கூடக் கடையில போய் தான் வாங்கிண்டு வந்து கொடுப்பார்..” என்று ஒரு பெருமூச்சோடு  சொல்லுவாள். பாட்டி, தாத்தாவின் நேர்மையைப் புகழ்ந்து பேசுகிறாளா அல்லது அவர் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதர் என்று மறைமுகமாக நொந்து கொள்கிறாளா என்பது எனக்கு அந்த சமயங்களில் புரியாது.

நான் அப்படிச் சந்தேகப் படுவதற்கான காரணங்கள் இருந்தன. பாட்டிக்குத் தாத்தா தனக்கு ஒரு வீடு வாங்கிவைத்து விட்டுப் போகவில்லை என்பது ஒரு பெரிய மனக் குறையாக இருந்து வந்தது. என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒவ்வொரு தடவையும் எது குறித்தாவது சண்டை வருகிற போதெல்லாம், ‘அவர் இருக்கறப்போவே, எனக்குன்னு சொல்லிக்க ஒரு வீட்டு கூட வாங்கிக்கத் தெரியலையே?’ என்று பெரிதாய் ஒப்பாரி வைப்பாள்

அந்த சமயங்களில் எல்லாம் எனக்குப் பாட்டி மீது அனுதாபம் வரும். தாத்தா வாங்காத வீடு  பற்றிய மனக் குறை பாட்டியைப் பெரிதாய் வாட்டிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும், தனக்கென்று ஒரு சுதந்திரமான சொந்த வாசஸ்தலம் இல்லையே என்கிற சுய இரக்கமே அதில் தொனித்ததாய் எனக்குத் தோன்றும்.


இப்படித் தாத்தா வாங்காத வீடு பற்றிய புலம்பல்கள் தலை காட்டாத தினங்களில் எல்லாம் பாட்டி, தாத்தா வாங்கிய பீரோவைப் பற்றிப் பிரஸ்தாபிக்க ஆரம்பிப்பாள். ஒரு வாரத்தில் நாலு தடவையாவது உத்தம பாளையத்திலேயே விட்டுவிட்டு வந்த அந்த  பீரோவைப் பற்றிப் புலம்பாமல் இருக்க மாட்டாள், அவள்.

அப்பா இல்லாத போதே பாட்டியின் பீரோ பற்றிய பிரஸ்தாபங்கள் அதிகமாக இருக்கும். அப்பா ஆபீசிலிருந்து வந்தவுடன் பாட்டி ‘விதியே விதிப் பழமே வித்தாயோ வாசல்லே’ என்று ஏதோ அவளுக்கு மட்டுமே பரிச்சயமான  ஒரு பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு விடுவாள். ஏனென்றால், அப்பா, அந்த பீரோவைப் பற்றிப் பாட்டி பேச்செடுத்தாலே ’ஆரம்பிச்சாச்சா, ஆபீசிலேருந்து வந்ததும் வராததுமா..?” என்று கோபமாய் எரிந்து விழுவார்.

தாத்தா உத்தம பாளையத்தில் இருந்த போது, ரொம்பவும் ஆசைப்பட்டு ஒரு பீரோ வாங்கினாராம். வாங்கினார் என்று சொல்வதை விட, ஆசாரியை வீட்டுக்கே வரவழைத்துத் தன் பார்வையிலேயே அதைச் செய்யச் சொன்னார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். பாட்டியின் வர்ணனைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு பீரோவின் தோற்றக் குணாதிசயங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமே ஆகி இருந்தன. பீரோ என்றால் இரும்பு பீரோ என்று நினைத்து விட வேண்டாம். மர பீரோ. சாதாரண மரம் இல்லை, தேக்கு மரம். பாட்டி இப்படிச் சொல்வாள், “தேக்கும் கூட சாதாரணத் தேக்குன்னு நினைச்சுக்காதேடா, பர்மாத் தேக்கு!” பின்னால் தான் எனக்குத் தெரிந்தது, அந்தக் காலத்தில். பக்கத்துக் கேரளத்தில் விளைந்த தேக்காக இருந்தாலும் பர்மாத் தேக்கு என்று சொல்லிக் கொள்வதில் தான் எல்லோருக்கும் கௌரவம் என்று!

பாட்டி சொல்லிச் சொல்லி தாத்தாவின் பீரோ என் கண் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றதோடன்றி, அடிக்கடிக் கனவிலும் வரத் தொடங்கியது. எனக்கே அப்படி என்றால், பாட்டியின் கனவுகள் எப்படி இருக்கும் என்று  நான் வெகுவாக யோசித்து ஆச்சரியப் படுவேன். சினிமாக்களில் வருகிற மாதிரி, பாட்டியின் கனவுகளில் எப்போதும் தாத்தாவின் உருவமும் அந்த பீரோவின் உருவமும் பளிச் பளிச்சென்று மாறி மாறி வந்து போகிறார்ப் போல்  நானே ஒரு கற்பனை பண்ணிக் கொண்டு சிரித்துக் கொள்வேன். 

பீரோவைப் பற்றிப் பாட்டிப் பலவகையில் வர்ணிப்பாள். பாடாத குறைதான்! பாட்டி ஒரு புலவராக இருந்திருந்தால், அந்த பீரோவைப் பற்றி ஒரு சின்னக் காவியமே பாடி இருப்பாள். தேக்கில் செய்யப்பட்ட பீரோ அதற்கே உரிய அழகான பழுப்பு நிறத்தில் இருந்தது. அதன் அங்க லட்சணங்களைப் பற்றிப் பாட்டி இன்னும் நிறையச் சொல்லி இருக்கிறாள். அந்த ஆசாரி வெறும் கூலிக்காகக் கடனே என்று அதைச் செய்யவில்லை. தாத்தா மீது ரொம்பவும் மரியாதையும் விசுவாசமும் உள்ளவர் அவர். தாத்தா  அவருடைய பெண் கல்யாணத்துக்கு பாங்கிலிருந்து ‘லோன்’ எல்லாம் எடுத்துக் கொடுத்து ஒத்தாசை பண்ணியதை  மறக்காமல், அந்த நன்றியை பீரோவின் ஒவ்வொரு அணுவிலும் அவர் இழைத்திருந்தார். மிகுந்த பொறுமையோடும் சிரத்தையோடும்  அங்குலம் அங்குலமாய் இழைக்கப் பட்டுப் பாலீஷ் பண்ணின அந்த பீரோவின் கதவுகளும் வெளிப்புறமும் பளிங்கில் செதுக்கிய ஒரு தேவதைச் சிலை மாதிரி அப்படி ஒரு மொழு மொழுப்பாய் இருக்குமாம். ‘இங்கே மட்டும் அந்த பீரோ இருந்தால், தினமும் ஒரு பத்து தடவையாவது அதன் கதவுகளில் என் கன்னத்தைத் தேய்த்துத் தேய்த்து மகிழ்ந்திருக்கலாமே என்று நான் அப்போதெல்லாம் வேடிக்கையாய் ஆசைப் படுவேன்.

தாத்தா அந்த பீரோவைப் ‘புதுப் பெண்டாட்டி’யைப் பார்த்துக் கொள்வது போல் அவ்வளவு கரிசனமாக வைத்துக் கொண்டிருந்தாராம். அந்த பீரோவைத் துடைப்பதற்காகவே தனியாய் வழவழப்பான சின்னப் பட்டுத் துணி ஒன்றைத் தாத்தா வைத்திருந்தார். எப்போது, யார் அதைத் திறந்து மூடினாலும் அவர்களின் கை பதிந்த தடம் உடனே அழிந்து விடுகிற மாதிரி அந்தப் பட்டுத் துணியால் துடைத்து விட வேண்டும் என்று அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். தாத்தா வீட்டில் இருக்கும் போது, அவரே அதை அலுப்பு சலிப்பின்றிச் செய்வார். விடுமுறைக்கு அகமதாபாத்திலிருந்து வரும் பேரக் குழந்தைகள், தாத்தாவைச் சீண்டிப் பார்ப்பதற்காகவே அந்த பீரோவைச் சுற்றிசுற்றி வந்து கண்ணா மூச்சி விளையாடும் என்றும்  தாத்தா பொய்க் கோபத்தோடு கையை ஓங்கிக் கொண்டு எழுந்து பக்கத்தில் வருவதற்குள் பீரோவின் உடம்பில் நன்றாய்க் கன்னங்களைத் தேய்த்து விட்டு ஓடி விடும் என்றும் பாட்டி சொல்லிச் சிரிப்பாள்.

பாட்டி பீரோவைப் பற்றி அவ்வப்போது ஏதேனும் சுவாரஸ்யமான கதைகள் சொல்வாள். பாட்டி இயல்பாகவே கதை சொல்வதில் வல்லவள் என்பதால், அவளது கதைகள் சம்பவங்கள் போலவும் சம்பவங்கள் கதைகள் போலவும் எது நிஜம் எது கற்பனை என்று புரியாத மாதிரி மாறி மாறி மயக்கம் காட்டும்.  அப்படித் தான் ஒரு தடவை சமையல் அறையில் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பூனையைப் பாட்டி விரட்டிக் கூடத்துக்குத் துரத்திக் கொண்டு போக, அது ஒரே துள்ளாய்த் துள்ளி பீரோவின் பின்னால், பீரோவுக்கும் சுவருக்கும் உள்ள இடைவெளியில் போய் ஒளிந்து கொண்டு விட்டதாம்.  

பூனையைச் சுவர் இடைவெளியிலிருந்து வெளியே கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதாய் இருக்க வில்லை. பூனை இசைகேடாய் பீரோவுக்கும் சுவருக்கும் நடுவில் தாறுமாறாகச் சிக்கிக் கொண்டு விட்டது. பாட்டி சொன்னாள்: “கையை விட்டுப் பூனையை எடுக்கலாம்னா கையைப் பூனை பிராண்டிடப் போறதேன்னு பயம். அப்புறம் பூனையைக் கையால தூக்கறப்போ  பூனை மயிர் கீழ உதுந்துட்டா என்ன செய்யறது? உதுர்ற ஒவ்வொரு ரோமத்துக்கும் பொன்னால ரோமம் செஞ்சு தானம் பண்ணணுமாக்கும்!  இல்லேன்னா ஆத்துக்குப் பீடை இல்லையோ? ஆனா அத்தனை தங்கம் இருந்தா நாலு பொண்களுக்குக் கல்யாணம் பண்ணலாமே!”

ஒரு பூனையை விடுதலை செய்வது என்பது இவ்வளவு ‘காஸ்ட்லி’யான விஷயம் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது! அதை விட, எனக்குப் பூனையை அதன் முடி உதிராமல் எப்படி வெளியில் கொண்டு வந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.

தாத்தா பாங்கிலிருந்து வருகிற வரை பூனை மியாவ் மியாவ் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வழியாய்ச் சோர்ந்து ஓய்ந்து விட்டதாகப் பாட்டி சொன்னாள். பூனை ஒரு வேளை செத்துப் போயிருக்குமோ என்று பாட்டிக்கு ஒரே பயம். பூனை மீது உள்ள பாசத்தினால் இல்லை. பூனையின் ஒரு முடி போனாலே அதற்குச் சமமாய்த் தங்கம் தானம் கொடுக்க வேண்டும் என்கிற போது, பூனையே போய் விட்டால்? அவ்வளவு தங்கத்திற்கு எங்கே போவது!

நல்ல வேளை, தாத்தா ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாய்ப் பாட்டி விஷயத்தைச் சொல்ல, தாத்தா ‘சந்தி’ கூடப் பண்ணாமல் எதிர்த்த வீட்டு மாமாவைக் கூட்டிக் கொண்டு வந்து, மெதுவாய் அவ்வளவு பெரிய பீரோவைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்த, சோர்ந்து படுத்திருந்த பூனை, துணுக்குற்றுக் கண் விழித்துச் சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில் ஒரே துள்ளாய்த் துள்ளி வெளியே ஓடி விட்டது. ஆனாலும் தாத்தாவுக்கு நிரந்தர வேதனை தருகிற மாதிரி, பூனை ஒரு காரியம் செய்து வைத்திருந்தது. அது, தான் நாள் முழுவதும் அங்கே தங்கி இருந்ததின் ஞாபகார்த்தம் போல் பீரோவின் பின் பக்கப் பலகையில் நன்றாய்த் தன் நகங்களால் கீறி, தாத்தா துடைத்து துடைத்துப் பாதுகாத்த அதன் வழுவழுப்பான மேனியில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டுப் போய் விட்டது. 

தாத்தா இறந்து போன பிற்பாடு, தொடர்ந்து உத்தம பாளையத்தில் இருக்க விருப்பமின்றி, மதுரைக்கு ஜாகை மாறிய போது, அவ்வளவு பெரிய பீரோவை அங்கே எப்படி எடுத்துக் கொண்டு போவது என்பதில் பிரச்சனை வந்தது. மதுரை வடக்கு  மாசி வீதியை ஒட்டி இருந்த ஒரு சந்தில், தாத்தாவின்  தூரத்து உறவினர் ஒருவர் வீட்டு மாடிப் போர்ஷனில் பார்த்திருந்த இடம் உத்தம பாளையம் வீடு மாதிரி எல்லாம் பெரிசில்லை. மனிதர்களோடு சேர்த்து அவர்களின் மரசாமான்களையும் ஏற்றுக் கொள்கிற அளவுக்கு அதற்குத் தெம்பு இல்லை.

ஆகவே, பீரோவைத் தற்காலிகமாக உத்தம பாளையத்திலேயே, அதே தெருவில் எதிர்த்த வீட்டில் இருந்த, தாத்தாவின்  நெருங்கிய சிநேகிதர் யக்ஞமூர்த்தியின் வீட்டில் விட்டுவிட்டுப் போவதென்றும், பின்னால் எப்போது முடிகிறதோ அப்போது போய் எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவாயிற்று. பாட்டிக்கு இதில் சிறிதும் இஷ்டம் இல்லை. என்றாலும், தாத்தா ஆசை ஆசையாய்ப் பேணிப் பாதுகாத்த பீரோ புதியதாய்ப் போகிற வீட்டின் இட நெருக்கடியில் தட்டு முட்டு சாமான்களோடு சாமான்களாய்ப் பொலிவிழந்து சிதைந்து போகவும் கூடும் என்று அப்பா எடுத்துச் சொன்னதால் பாட்டி ஒருவாறாய்ச் சமாதானம் அடைந்தாள். ஒரு பெரிய சபையில் இத்தனை காலம் வீற்றிருந்த ராஜ சிம்மாசனம் தனக்குரிய ஸ்தானத்தை  இழந்து ஒரு சின்ன இடத்தின் புழுக்கத்தில் கவுரவமின்றி நின்று கொண்டிருப்பதில் பாட்டிக்கும் சம்மதம் இல்லை.  ‘பீரோ எங்க போயிடப் போறது? நம்ம யக்ஞத்துக்கிட்ட தானே விட்டுட்டுப் போறோம்? அவன் மகா நாணயஸ்தன். தாத்தான்னா அவனுக்கு அவ்வளவு பிரியம். பீரோவைத் தன் குழந்தை மாதிரிப் பாத்துப்பான்..’ என்று பாட்டி தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

ஆனால் மதுரைக்குக்  குடிபெயர்ந்த பிறகு எல்லாமே பாட்டியின் கைகளை மீறிப் போயின. பொருளாதார நெருக்கடியால் அப்பா இண்டர்மீடியட்டோடு படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேடி வடக்கே செல்ல நேர்ந்தது. மதுரை ஜாகையைக் கலைத்து விட்டுப் பாட்டி, தாத்தாவின் பூர்வீக கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்த திருவாரூருக்கு இடம் மாறினாள்.  அப்பாவின் அத்திம்பேர் அந்த சமயத்தில் அகமதாபாத்தில் இருந்தார். அவர் அப்பாவுக்கு அங்கே ஒரு மில்லில் வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருந்தார். ஆனால் கொஞ்ச காலத்திலேயே அப்பா வேலையும் ஊரும் பிடிக்காமல் மறுபடியும் திருவாரூருக்கே திரும்ப வந்து விட்டார். பிறகு அப்பா சர்வீஸ் கமிஷன் எழுதிப் பாஸ் பண்ணிக் கூட்டுறவுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். ஊர் ஊராக மாற்றலாகி மூட்டை முடிச்சுக்களை அடிக்கடிக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய அரசாங்க வேலை என்பதால், கால ஓட்டத்தில், உத்தம பாளையத்தில் அனாதையாக விடப்பட்ட அந்த பீரோவை  அநேகமாக பாட்டியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் மறந்தே போனார்கள்.

ஆனால் பாட்டி மட்டும் பீரோவை மறக்கவில்லை. தாத்தாவை எப்படிப் பாட்டியால் மறக்க முடியாதோ அதே போலத் தாத்தாவின் ஞாபகங்களோடு பின்னிப் பிணைந்திருந்த பீரோவும்  பாட்டியின் உள் மனதில் ஒரு நீக்க முடியாத ஞாபகமாகப் புதைந்திருந்தது. அது ஒரு வாழ்ந்து முடிந்த கடந்த காலத்தின் எச்சம் போல் பாட்டியின் நிகழ் காலத்தை அவ்வப்போது நெருடியது. “ஆமா, பிரமாத பிதுரார்ஜித சொத்து! அந்த பீரோ இப்போ எந்த நிலையில் இருக்கோ, யாருக்குத் தெரியும்? அதைத் தேடிக் கண்டுபிடிச்சு எடுத்துண்டு வர செலவுலப் புதுசாவே ஒண்ணு பண்ணிடலாம். அப்படியே கொண்டு வந்தாலும், அதைப் பேரீச்சம்பழக்காரன் கிட்ட தான் போடணும்’ என்று ஒரு தடவை அம்மா எள்ளலோடு சொன்ன போது, பாட்டி ஒரு மூலையில் போய் உட்கார்ந்து மௌனமாய்க் கண் கலங்கினாள்.

அப்பா வெளிப்படையாய் பீரோ விஷயத்தில் அசிரத்தையாய் இருந்த மாதிரிக் காட்டிக் கொண்டாலும், பீரோ பற்றியும் யக்ஞமூர்த்தியின் இருப்பிடம் பற்றியும் அவ்வப்போது யார் மூலமாகவாவது விசாரித்துத் தெரிந்து கொண்டு பாட்டியிடம் சொல்வார். அப்படித்தான் ஒருநாள், “யக்ஞமூர்த்தி மாமா இப்போ உத்தம பாளயத்திலே இல்லையாம். திண்டுக்கல்லுக்கோ எங்கியோ போயிட்டதாக் கேள்விப்பட்டேன்.. சரியான விவரம் விசாரிக்கச் சொல்லி இருக்கேன். அவர் பீரோவைப் பத்திரமா வச்சுண்டிருப்பார். கவலைப் படாதே..” என்று அப்பா சொன்ன போது, பாட்டியின் முகத்தில் ஒரு சின்னப் பிரகாசம் வந்தது.  ஆனால், அந்தப் பிரகாசம்  நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்தத் தகவல் கிடைத்த கொஞ்ச நாளிலேயே அப்பாவுக்கு சேலத்துக்கு மாற்றலாகி விட்டது. அப்பா அதற்கப்புறம் எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டார். புதிய இடத்துக்கு மாற்றலாகிப் போகிற இந்த சந்தர்ப்பத்தில் பீரோ விஷயத்தைக் கிளற பயந்து பாட்டியும் அதைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்து விட்டாள்.  

அதற்கப்புறம் என்னென்னவோ நடந்து விட்டன. அப்பாவுக்கு வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றல்கள் வந்து கொண்டிருந்தன. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இடையில் வரும் சண்டைகளும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனாலும், இருவருக்குமே வயசாகிக் கொண்டிருந்ததாலோ என்னவோ,  அந்த சண்டைகளின் தீவிரம் குறைந்து கொண்டிருந்தது. ஒரு தடவை பாட்டியும் அம்மாவும் ரொம்பவும் நட்போடு அதிசயமாய் ரேழியில் உட்கார்ந்து பல்லாங்குழி கூட விளையாடினர்.

“பாவம், உங்க பிள்ளை உங்க ஆத்துக்காரர் வச்சுட்டுப் போன அந்த பீரோவை எப்படியாவது எடுத்துண்டு வந்து உங்க கண்ணுல காட்டிடக் கூடாதோ? ஆனா, அவரும் தான் என்ன பண்ணுவார்? ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை கவர்மென்ட் காரன் மூட்டையைத் தூக்கிண்டே இருக்கச் சொல்றான்..” என்று ஒரு தடவை அம்மாவே பாட்டியிடம் கரிசனத்தோடு ஆறுதலாய்ப் பேசினாள். இந்தக் கட்டத்தில் பாட்டி வயதின் முதிர்ச்சி காரணமாய் உடலாலும் மனதாலும் வெகுவாகச் சோர்ந்து போயிருந்தாள். பீரோ ஒரு தொலைதூரத்து நிழல் போல் அவளின் நினைவுகளை விட்டு நீங்கத் தொடங்கி இருந்தது.

“எங்கியோ அது பத்திரமா இருக்கு. எனக்குத் தான் அதை என் காலம் முடியறதுக்குள்ள பாப்பேனான்னு தெரியல்ல..இப்ப அந்தக் குறை எல்லாம் கூடப் பெரிசா இல்ல. அவரே போன பிற்பாடு, அவர் வாங்கின ஒரு ஜட வஸ்து கிட்டப் போயி நான் ஏன் இவ்வளவு அபிமானம் வச்சுண்டிருக்கணும்? அசடு இல்லையோ நான்?” என்று பாட்டி ஒரு நாள் ஒரு வேதாந்தி போலவும் பேசினாள்..

பாட்டி செத்துப்போன போது, நான் சென்னையில் ஹாஸ்டலில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா அப்போது கும்பகோணத்திற்கு மாற்றலாகிக் கடலங்குடித் தெருவில் இருந்தார். அப்பா கொடுத்திருந்த தந்தியைப் படித்து விட்டு பாத்ரூமில் போய் யார் கண்ணிலும் படாமல் கேவிக் கேவி நான் அழுதேன். ராத்திரி  ரயிலைப் பிடித்து விடியற்காலை  கும்பகோணம் வீட்டுக்குப் போன போது, பாட்டியை ரேழியில் கிடத்தி இருந்தார்கள். அவள் வெகு சாந்தமாய்த் தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. சின்ன வயதில் பாட்டி மடியில் படுத்துக் கொண்டே கேட்ட புராணக் கதைகளும், பாட்டி என்னை இடுப்பில் சுமந்து தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஆடி ஆடி நடந்தபடி அழைத்துக் கொண்டு போன கோயில்களும் அடுக்கடுக்காய் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அழுதே பார்த்து அறியாத அப்பா பாட்டியின் தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டு அன்றைக்கு அடக்க முடியாமால் அழுதது மனசை என்னவோ செய்தது.

பாட்டியின் காரியங்கள் எல்லாம் முடிந்த பின் நான் சென்னைக்குக் கிளம்பத் தயாராய் இருந்த அன்று, தபாலில் அப்பாவின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்த அப்பா ஒரு வித விரக்திச் சிரிப்புடன் கடிதத்தை என்னிடம் கொடுத்தார். கடிதத்தைப் படித்த போது நிஜமாகவே எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கடிதம் ஆச்சரியத்தை அளிக்கிற மாதிரி, யக்ஞமூர்த்தியிடமிருந்து வந்திருந்தது. அவரே தன் தள்ளாத வயதில் அதை எழுதி இருக்க வேண்டும். வயதான விரல்களின் நடுக்கம் எழுத்துகளின் சிதைந்த வடிவங்களில் வெளிப்பட்டிருந்தது.

“ஆசீர்வாதம். ஆச்சரியமாய் ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு உன்னுடைய விலாசம் எனக்குக் கிடைத்தது தெய்வ சங்கல்பம் தான். யார் யாரோ எங்கெங்கேயோ போய்ப் பல வருஷம் எந்தத் தொடர்பும் இல்லாமல் எப்படி எப்படியோ காலம் போய் விட்டது. எனக்கு ரொம்பவே வயசாகி விட்டது. யாருடைய உதவியும் இல்லாமல் எங்கேயும் வெளியில் போகிற மாதிரி சரீரம் இல்லை. கடந்த ஐந்தாறு வருஷங்களாக நானும் என் குடும்பமும் மன்னார்குடி மூணாம் தெருத் திருப்பத்தில், ஃபின்ட்லே ஹைஸ்கூல்  பக்கத்தில் ஜாகை இருந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கடிதம் எழுதுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. என் பிள்ளை, பெண் எல்லாரும் வற்புறுத்தியதின் பேரில் நானும் என் மனைவியும் மன்னார்குடி ஜாகையைக் கலைத்துக் கொண்டு மெட்ராசுக்கே போய் விடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் உன் தாயார் என்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன, உன் அப்பாவின் பீரோவை இன்று வரை நான் என் சொந்தக் குழந்தையைப் போல் கண்ணும் கருத்துமாய்ப் பாவித்து பத்திரமாய் வைத்துக் கொண்டிருக்கிறேன். மரமோ தங்கமோ எதுவாய் இருந்தாலும் பிறத்தியார் பொருளை அவர்களிடமே திருப்பிச் சேர்க்கிற வரை மனசில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நாங்கள் மெட்ராஸ் போவதற்கு முன்னால், நீ ஒரு தடவை இங்கே வந்து அந்த பீரோவை வாங்கிக் கொண்டால் எனக்கு ரொம்பவும் நிம்மதியாய் இருக்கும்., பக்கத்தில் தான் கும்பகோணம் இருக்கிறது. அதனால் அவசியம் வரவும். அம்மா எப்படி இருக்கிறார்? அவருக்கும் ரொம்பத் தள்ளாமை ஏற்பட்டிருக்கும். அவருக்கு அந்த பீரோவின் மேல் கொள்ளைப் பிரியம். இத்தனை வருஷம் இப்படித் தொடர்பே இல்லமால் போய் விட்டதை நினைத்தால் துக்கமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும்? நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் பகவத் சங்கல்பம். இப்படிக்கு, ஆசிர்வாதங்களுடன் யக்ஞ மூர்த்தி.”

கடிதத்தை முடித்தவுடன் கனக்கும் மனசோடு அப்பாவை ஏறிட்டுப் பார்த்தேன். அப்பா அவசரம் அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டது போல் இருந்தது. அதற்கப்புறம், என் சென்னைப் பயணத்தைத் தள்ளி வைத்து விட்டுப் பிடிவாதமாய் நானும் அன்றைக்கு சாயங்காலமே அப்பாவுடன் மன்னார்குடிக்குப் புறப்பட்டேன். பஸ்ஸில் போகிற போதெல்லாம் ஏதோ தேடாமலேயே கிடைக்கப் போகும் ஒரு பழம் புதையலைப் பெற்றுக் கொள்ளப் போகிறவர்கள்  மாதிரி எங்களைக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு சாதாரண பழைய மர பீரோவுக்கு அத்தகைய  புதையலுக்கான தகுதியெல்லாம் இருக்கிறதா என்றெல்லாம் நான் யோசிக்க வில்லை. எனக்குப் பிரியமான பாட்டி, பாட்டிக்குப் பிரியமான தாத்தா, தாத்தாவுக்குப் பிரியமான பீரோ என்று யாவும் ஒரு விவரிக்க இயலாத மாய உணர்வுச் சங்கிலியில் பின்னிக் கொண்டு நின்றதால் அந்தப் பயணம் எனக்கு சுகமாகவே இருந்தது. ‘ஒரு வேளை பாட்டி வேண்டுமென்றே தான் கிளம்பிப் போய்த் தனக்குப் பதிலாகத் தாத்தாவை அனுப்பி .வைத்திருக்கிறாளோ?’ என்று கூடத் தோன்றியது.

மன்னார்குடி நெருங்க நெருங்க, தாத்தாவின் பீரோவை மட்டும் அல்லாது  நான் இது வரை பார்த்திராத தாத்தாவின் தோற்றத்தையும்  நானே எனக்குள் வித விதமாய் உருவகித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தாத்தா பீரோவைத் திறந்து திறந்து மூடுவதும், அதைப் பட்டுத்  துணியால் துடைப்பதும் நிழலுருவங்களாய்த் தெரிந்தன. அங்கு போனவுடன், மறக்காமல் முதல் வேலையாய், பீரோவின் பின்புறம் போய், ‘அன்றைக்கு அந்தப் பூனை கீறின நகத் தடங்கள் இன்னமும் அதில் அழியாமல் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்’ என்று ஏனோ விநோதமாய் எண்ணிக் கொண்டேன்.
                                                  (தளம், ஜூலை,2014)



Wednesday, July 2, 2014

முகநூல் பதிவுகள் 2014

முக நூலில் சேர்ந்த நாள்: செப்டம்பர் 7. 2009

2014
ஜூலை 4

நல்ல வேளை. பதினோரு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம், 'விதி' என்று சொல்லாமல், 'விதி மீறல்' என்று சொல்லி இருக்கிறார்கள்!

ஜூலை-2

சென்னையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் எழுபத்திரண்டு மணி நேரம் அதிசயமாய் உயிர்த்திருந்த ஓர் இளைஞரை, மீட்புக் குழுவினர் அரும்பாடு பட்டுக் காப்பாற்றியதையும், மற்றுமோர் உயிரைக் காப்பாற்றிய தங்கள் அருஞ்செயலை அவர்கள் எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்ததையும் இன்று செய்திக் தாளில் படித்த போது உடம்பு சிலிர்த்தது. 

இதே கால கட்டத்தில், இதே உலகின் இன்னொரு புறம், கையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டு நவீனக் கொலைக் கருவிகளும், மனசில் ஏழாம் நூற்றாண்டு அடிப்படைவாதச் சித்தாந்தங்க ளுமாய் அலைந்த படி, அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிற மத பயங்கர வாதிகளைப் பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

மாற்றார் உயிர்களைக் கொல்வதற்காகவே மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள், மரணத்தோடு போராடும் உயிர்களைக் 'காப்பாற்றுவதில்' உள்ள மகிழ்ச்சியும் சாகசமும் எவ்வளவு மகத்தானது என்று அனுபவித்துணர வாய்ப்பில்லை தான். மனசைத் தொந்தரவு செய்யும் இந்த முரண்பாடுகளை ஜீரணித்துக் கொண்டு தான் நமது யந்திர ரீதியான வாழ்க்கையும் சொரணையற்று நகர்ந்து கொண்டிருக்கிறது.


ஜூன் 29

'பிரைம் சிருஷ்டி' என்னும் கட்டிட நிறுவனம் கட்டிக் கொண்டிருந்த ஓர் அடுக்கு மாடிக் கட்டிடம், நேற்று சென்னையில் திடீர் என்று இடிந்து விழுந்து பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியாயும் வேதனையாகவும் இருக்கிறது. இனி மேலாவாது, வீடு வாங்க நினைக்கிறவர்கள், வாங்குவதற்கு முன், அங்கே 'வாஸ்து' சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதை விடுத்து, முதலில் 'வஸ்து' சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்களாக!

ஜூன் 20

மோதி பிரதமர் ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தலுக்கு முன்னால் பா.ஜ.க. பிரசாரம் செய்தது உண்மையாகி விட்டது. அவர் பிரதமர் ஆன 
ஒரே மாதத்துக்குள்ளேயே, 'முதல் பெரிய மாற்றம்' வந்து விட்டது. ரயில் பட்ஜெட் வருவதற்கு முன்னாலேயே, இன்று முதல் ரயில் கட்டணங்கள் 14.2 % உயர்த்தப் பட்டு விட்டன. இனி போகப் போக இதே மாதிரியான மாற்றங்களையே மக்கள் எதிர் பார்க்கலாம். 

இந்த விஷயங்களில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பா.ஜ.க அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வித்யாசமும் இல்லை. ஆனாலும் நடைமுறையில் ஒரு வித்தியாசம் இருந்தது. முந்தைய அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மாதிரிக் கட்டண உயர்வு விஷயங்களில், கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப் பட்டுக் கொஞ்சம் மிதமாகச் செயல் பட வேண்டியிருந்தது. இப்போது அந்த நிர்ப்பந்தம் இல்லை. பெரும்பான்மை, ஸ்திரத் தன்மை போன்றவை மக்களின் நலன் சார்ந்து உபயோகிக்கப் படுவதற்குப் பதிலாக, மக்கள் நலனுக்கு எதிராகவே எப்போதும் உபயோகிக்கப் பட்டு வருவதே வரலாறாகிப் போனது நமது துரதிர்ஷ்டம் தான்.

ஒரு விஷயம் தான் புரியவில்லை. ஒரு துறை நஷ்டத்தில் இயங்குகிற தென்றால், அந்த நஷ்டத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவதை விட்டு , வெறுமனே கட்டணங்களை உயர்த்தி அதைச் சரிக்கட்டி விடலாம் என்கிற அளவுக்குப் பொருளாதாரப் பாடம் இவ்வளவு சுலபமாக இருக்கிறதே! இதைக் கற்றுக் கொள்ளவா, இந்தப் பொருளாதார மேதைகள் ஐந்து வருஷம் கஷ்டப்பட்டுப் பல்கலைக் கழகங்களில் படித்தார்கள்?



ஜூன் 16

The strike call given by the city auto drivers is unjust and highly condemnable.
Most of these auto drivers are autocratic in nature and atrocious in behavior. At most of the time, instead of acting as the friends of the people, they only act as the enemies of the people. Common man is scared of calling them for hire, unless there is some urgency. 

A few days back, the auto drivers in Keelkattalai bus stand demanded Rs 150/- from my daughters to ply a distance of a mere 5 km to Pallavaram.(For Rs.150/- one can hire a call taxi and travel comfortably for this distance), When they were reminded of the existence of a device called 'meter', they simply ridiculed the reminders.

I have registered a complaint on the Facebook page of Chennai City Traffic police. So far no action has been taken. Their call for strike is unwarranted and against the public interest. Govt should not yield to their pressure tactics. People should reject autos and prefer other mode of transports like share autos or call taxis until these unscrupulous lawbreakers are brought to terms.


ஜூன் 15

தந்தையர் தினம் 
***********************

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் எந்தையுமிலமே.."

கிட்டத் தட்ட ஆயிரத்து எண்ணூறு வருஷங்களுக்கு முன்னால், சிறுமிகளான பாரி மகளிர் பாடிய இந்த எளிமையும் , உணர்வும் நிறைந்த பாடல், தந்தையின் முக்கியத்துவத்தையும் அவரது இழப்பின் வலியையும் உணர்த்திய அளவுக்கு இன்று வரை வேறு எந்தக் கவிதையும் செய்ததாகத் தெரியவில்லை. எத்தனை முறை, எத்தனை வருஷங்களுக்குப் பிறகு எடுத்துப் படித்தாலும் கண்களைக் குளமாக்கும் வரிகள் இவை.

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக் கிழைமையும் தந்தையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் எனது பங்களிப்பாக, சென்ற ஆண்டு கணையாழி செப்டம்பர் இதழில் வெளியான எனது 'அப்பாவும் பிள்ளையும்' சிறுகதையின் முழுப் பதிவையும் இங்கே தந்திருக்கிறேன். 


ஜூன் 14

குரு பெயர்ச்சியில் வரும் 'குரு'வையும் தட்சிணாமூர்த்திக் குருவையும் போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். மேற்சொன்ன குருவுக்கும் குரு பெயர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர், சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ய தட்சிணா மூர்த்தியாகி தென்திசை நோக்கி வீற்றிருக்கும் சிவன். 

குரு பெயர்ச்சி குறிப்பிடும் குரு, வேறு. இது வியாழக் கிரகம் (Jupiter). இந்துப் புராணங்களின் படி நவக்கிரகங்களில் ஒருவரான வியாழ பகவான். இவரே தேவர்களின் குருவான பிரஹஸ்பதியாகப் புராணங்களில் சொல்லப் படுபவர்.

வானவியல் ரீதியாக, பூமி, வியாழன் இரண்டுமே அவ்வவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருஷம் எடுத்துக் கொண்டால், வியாழன் பன்னிரண்டு வருஷங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆகவே பூமியிலிருந்து பார்க்கும் போது, வியாழன் சூரிய மண்டலத்தின் பின் புலத்தில் வெகு தொலைவில் இருக்கும் பன்னிரண்டு ராசிகளில், ஒரு குறிப்பிட்ட ராசியில் ஓரு வருஷம் தங்கி விட்டு, ஒரு வருஷ முடிவில் பக்கத்து ராசிக்குள் பிரவேசிக்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வே குரு பெயர்ச்சி.

மற்றபடி, இந்த நேரத்தில் செய்யப் படுகிற பரிகாரம், ஹோமம் போன்றவை, மத நம்பிக்கைகள் சார்ந்தவை, அவை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.


ஜூன் 11

ஜூன் 1 முதல் தமிழ் நாட்டில் இனிப் 'பவர் கட்'டே கிடையாது என்று அம்மையார் சொன்னாலும் சொன்னார், கடந்த ஒரு வாரமாகச் சென்னைப் புறநகர்ப் பகுதிகள் யாவும் திடீர் திடீர் என்று மணிக்கணக்கில் இருளில் மூழ்கிப் போகின்றன. மற்ற பகுதிகளைப் பற்றித் தெரிய வில்லை. 

'நடந்து முடிந்த தேர்தலில் மொத்தப் 'பவ'ரையும் ஒருத்தரிடமே கொண்டு போய்க் கொடுத்து விட்டால், மக்களுக்கு என்ன 'பவர்' மிஞ்சும்?' என்று அங்கலாய்க்கிறார்கள் மக்கள். 

வாஸ்தவம் தான். ஜெயலலிதா முதலில், 'கரன்ட்' அக்கவுன்ட்டில் உணமையில் எவ்வளவு வைத்திருக்கிறார் என்பதை உடனடியாகத் தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். நான் சொன்னது எலக்ட்ரிக் கரன்டை!

ஜூன் 10

என்னடி அநியாயம் இது?'
*************************************
தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கிலப் பாடம் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும்,கட்டாயம் தமிழிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பல வருஷங்களுக்கு முன் அரசு ஒரு சட்டம் கொண்டு வந்த போது, அதை எதிர்த்துத் தமிழ் நாட்டிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நீதி மன்றத்துக்குப் போயின. பின்னர் அது கை விடப் பட்டது.

"சரி, அது போகட்டும், தமிழ் நாட்டு மாணவர்களுக்குக் குறைந்த பட்சம் தமிழையாவது ஒரு கட்டாயப் பாடமாகச் சொல்லிக் கொடுங்களேன்" என்று கெஞ்சுகிற மாதிரி, இப்போது அரசு, தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி வேறொரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இதையும் எதிர்த்து அந்தப் பள்ளிகள் இப்போது நீதி மன்றத்துக்குப் போயிருக்கின்றன.

"என்னடி அநியாயம் இது?" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருகிறது!


ஜூன் 8

பாரதியின் கண்ணன் பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த, எத்தனை வருஷங்கள் ஆனாலும் நினைவில் நீங்காமல் நிற்கிற வரிகள் இவை: 

'பிறந்தது மறக்குலத்தில், எந்தை 
பேதமற வளர்ந்ததும் இடைக் குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே, சில 
செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு 
நிறந்தனில் கருமை கொண்டான், இவன் 
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்
துறந்த நடைகள் உடையான், உங்கள் 
சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்..'

மற்றதெல்லாம் சரி; ஆனால், கண்ணனுக்கு நெருக்கமான வர்களாகப் பாரதி குறிப்பிடுகிற அந்தச் செட்டி மக்கள் யார்?

இதற்குச் சில பேர் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவை எனக்குத் திருப்தி அளிக்கவில்லை.


ஜூன் 3





ஜன நெரிசலும், வாகனங்களின் புகை மூட்டமும் மண்டி மூச்சைத் 

திணற வைக்கும் தாம்பரம் நகர மையத்தில், ஆச்சரியமாய் மூச்சு 

விட்டுக் கொண்டு புத்துணர்வோடு காட்சி அளிக்கிறது, சமீபத்தில் 

புதிப்பிக்கப்பட்ட இந்த முத்துரங்கம் பூங்கா. இதற்கு நம்ம பூங்கா 

என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பெங்களூர், டில்லி போன்ற நகரங்களில் ஒவ்வொரு 

செக்டாரின் மையத்திலும் பச்சைப் பசேல் என்று ஒரு பூங்கா 

இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெருகி வரும் சென்னைப் 

புறநகர்ப் பகுதிகள், விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு 

காலத்தில் பூங்காக்களாக இருந்த இடங்களையும் விழுங்கி ஏப்பம் 

விட்டுக் கான்க்ரீட் காடுகளாய் மாறி வரும் அவல நிலையில்

தாம்பரத்தின் இந்தப் பழைய பூங்கா புனர்ஜென்மம் 

எடுத்திருப்பதைக் கண்டு மனசு குளிர்கிறது. 


பக்கத்தில் இருக்கும் குரோம்பேட்டை, பல்லாவரம் நகரங்களின் 

நகராட்சி தாம்பரம் நகராட்சியிடமிருந்து ஏதாவது பாடம் கற்றுக் 

கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!





மே 26 



'இன்னொரு யுத்தம்'-ஓர் உரைச்சித்திரம்.
***************************************************
இதிகாசங்களை மறுவாசிப்பு செய்து, சமகால சமூகப் பார்வையோடு கொடுக்கும் முயற்சிகள் அரிதாகவே நடக்கின்றன. புதுமைப் பித்தனின் 'சாப விமோசனம்', கிரீஷ் கர்னார்டின் 'யயாதி', எம்.வி. வெங்கட்ராமனின் 'நித்ய கன்னி' போன்றவை இந்த வரிசையில் வரும். எனது 'ஆபுத்திரனின் கதை' நாடகமும் இந்த வகை முயற்சியே.

மகாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை வைத்துப் பெண்ணிய நோக்கில் நான் எழுதிய 'சுயதர்மம்' 'நாடகம்',1976-ஆம் வருஷம், 'கணையாழி'யில் பிரசுரமாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அதற்கப்புறம், 'சுயதர்ம'த்துக்கு இரண்டாம் பகுதி எழுத வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆவல் இந்த உரைச் சித்திரம் மூலம் இப்போது நிறைவேறி இருக்கிறது. 'சுய தர்மம்' போலவே முழுக்க முழுக்க உரையாடல் பாணியில் அமைந்திருக்கும் இந்தப் படைப்பை 'நாடகம்' என்கிற வரையறைக்குள் கொண்டு வருவதில் எனக்குத் தயக்கங்கள் இருப்பதால், இதை முன்னெச்சரிக்கையோடு 'உரைச் சித்திரம்' என்று வகைப் படுத்தி விட்டேன்!

இது மகா பாரத சீசன். ஒவ்வொரு தொலைக் காட்சியும் ஆளுக்கொரு மகாபாரதத்தை அவர்கள் இஷ்டத்துக்கு வதைத்தோ, சிதைத்தோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வதைக்கவும் இல்லை, சிதைக்கவும் இல்லை. மாறாக, சமகாலப் பார்வையில், 'படைப்புரிமை'யின் எல்லைகளை மீறாமல், மகா பாரதத்தின் ஒரு பகுதியை மீள் வாசிப்பு செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

இது இந்த வாரத் 'திண்ணை' இணைய இதழில் பிரசுரமாகி இருக்கிறது. இதைப் பிரசுரித்த 'திண்ணை'க்கு நன்றி.


may 26

இன்றைக்குச் சென்னையில் சிற்றுந்துகளைப் (small buses) பார்த்தேன். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னால் நீதிமன்ற ஆணைப் படி அழிக்கப் பட்ட இரட்டை இலைகள் எல்லாம், தேர்தல் நடைமுறைகள் முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட முடிவதற்குள், அவசரம் அவசரமாகப் போர்க்கால வேகத்தில் திரும்பவும் பழைய படியே எல்லா பஸ்களிலும் வரையப் பட்டிருந்தன. 

இதே அவசரமும், மும்முரமும் , சாலையில் உள்ள பள்ளங்ளை உடனுக்குடன் மூடுவதிலும், குப்பைத் தொட்டிகளில் தினம் நிரம்பி வழியும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவதிலும், எரியாத தெருவிளக்குளை உடனுக்குடன் மாற்றுவதிலும்- இன்னும் இப்படி எத்தனையோ அன்றாட அவசியங்களில் காட்டப் பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

இதைக் கண்டு, "அப்படியெல்லாம் ஆசைப் படுவது எவ்வளவு பெரிய அசட்டுத் தனம்! போ. உன் போன்ற மற்ற அசடுகளோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்த மூலையில் போய் உட்கார்" என்று ஏற்கெனவே வெறுப்பில் இருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்து சத்தம் போட்டாள். அவள் வேறு யாருமில்லை; சாட்சாத், பாரத மாதா தான்!

may 21

டில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க அரவிந்த் கேஜ்ரிவால் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகின்றன. அவை உண்மையாய் இருக்கிற பட்சத்தில், 'தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு' மிகப் பொருத்தமான உதாரணம் கேஜ்ரிவாலாகத் தான் இருப்பார்.

may 19

இன்றைக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு வந்திருக்கிறது. 1952-இலிருந்து இது வரை நடந்த இந்தியப் பொதுத் தேர்தல்களிலேயே (லோக் சபா), மிகக் குறைந்த வாக்கு சதவிகிதத்துடன் அதிக பட்ச இடங்களைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பது பா.ஜ.க தானாம். 

இந்தியாவின் மொத்த வாக்குகளில் வெறும் 31 சதவிகிதம் மட்டுமே பா.ஜ. க.வுக்குப் போய் இருக்கிறது. மிச்சம் 69 சதவிகிதம் பேர் பா.ஜ. க.வை நிராகரித்து வேறு வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், அவை சிதறிப் போனதால் இடங்களாய் மாறவில்லை.

நூறு பேரில் வெறும் முப்பத்தோரு பேர்களின் ஆதரவைப் பெறும் ஒருவர், மொத்தப் பேர்களும் மாற்றத்தை விரும்பித் தனக்குப் பின்னால் நிற்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறார், நமது தேர்தல் முறையில் தர்க்க ரீதியாக ஒரு சீரியஸான கோளாறு இருப்பதாகவே தோன்றுகிறது.

may 18

கோஷங்கள் 
****************
நவீன சமூகவியற் கருத்துகளின் தாக்கம் காரணமாக, ஆரம்ப காலத்திலிருந்தே நான் 'பெரியார் பிராண்ட்' நாஸ்திகத்திலிருந்தும் 'சங்கராச்சாரியார் பிராண்ட்' ஆஸ்திகத்திலிருந்தும் விலகி நிற்கக் கற்றுக் கொண்டிருந்தேன். இதைக் கருவாய் வைத்து , நாஸ்திக ஆஸ்திக கோஷங்களின் வெறுமையை எள்ளல் செய்து நான் 1979-இல் 'கோஷங்கள்' என்ற சிறுகதையை எழுதினேன்.

கதையை, அந்த நாட்களில் முற்போக்கு எழுத்தாளர்களின் சங்கப் பலகையாய் இருந்த ஒரு பிரதான இடது சாரி இலக்கியப் பத்திரிகைக்குக் கொடுத்தேன். இந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணியது தான் இதற்குக் காரணம்.

ஆனால், என் கதை anticommunist-ஆக இருப்பதாகச் சொல்லி அவர்கள் அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஒரு கதை அதன் நோக்கத்துக்கு முற்றிலும் எதிர்மறையாக அர்த்தம் பண்ணப் பட்டிருந்தது எனக்கு ஒரு விதத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைத் தந்தது.

அதற்கப்புறம் பல நாட்கள் 'கோஷங்கள்' -கதை என் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது. ஒரு நாள், எனது வெளிவட்டங்கள் நாவலைப் பிரசுரித்த நண்பர் திரு மாசிலாமணி அவர்கள் மூலம், அப்போது 'இதயம் பேசுகிறது' இதழில் இணை ஆசிரியராக இருந்த திரு. தாமரை மணாளனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிடம்,"உங்களைப் பற்றி மாசிலாமணி ரொம்ப உயர்வாகச் சொல்லி இருக்கிறார். ஏதாவது கதை இருந்தால் கொடுங்கள். போடுகிறேன்" என்றார்.

நான் அவரிடம் "இந்த மாதிரி எழுத்துகளை எல்லாம் உங்கள் பத்திரிகை போடுமா என்று தெரியவில்லை . போட்டால் சந்தோஷம். ஆனால், இதை எடிட் பண்ணிப் போடுவதாய் இருந்தால் வேண்டாம் " என்று சொல்லி என் 'கோஷங்கள்' கதையைக் கொடுத்தேன். அவர் எனக்கு வாக்களித்த மாதிரியே என் 'கோஷங்கள்' கதையும் எந்த வெட்டும் இல்லாமல், மாயாவின் அழகான ஓவியத்தோடு, 5.8.79- 'இதயம்' இதழில் பிரசுரமானது.

அப்போது நான் சென்னையில் ISCUS (Indo Soviet Cultural Society) கட்டிட மாடி அறையில் தங்கி இருந்தேன். அங்கே என்னுடன் கூடத் தங்கி இருந்த நண்பர் திலக்கின் தந்தை ஒரு தீவிரக் கம்யூனிஸ்ட் தொண்டர். பழகுவதற்கு மிகவும் இனியவர். ராஜபாளையத்துக்காரர். அவர் இந்தக் கதையைப் படித்து விட்டு மிகவும் நெகிழ்ந்து போய் என் கைகளை அன்போடு பற்றிக் கொண்டு “நாங்கள் இத்தனை வருஷமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதை ரொம்ப அழகாக நறுக்குத் தெறித்த மாதிரிச் சொல்லி விட்டீர்கள்” என்று மனசாரப் பாராட்டினார். நான் அவரிடம், அவருடைய ‘காம்ரட்’கள் நடத்தும் பத்திரிகை இதை ஆன்டி-கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தித் திருப்பிக் கொடுத்து விட்டதைச் சொன்ன

 போது அவர் அதை நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார். 

may 17

இதற்கு முன் ஒவ்வொரு முறை ஏதாவது ஓர் அலை வந்த போதும், அது கடலிலிருந்து முத்துக்களையும் பவளங்களையும் 
கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று தான் எதிர் பார்த்தோம். 

ஆனால், அலை வடிந்து திரும்பப் போகிற போது, கடலில் இருந்த குப்பைகளையும் செத்தைகளையும் கரையில் தள்ளி விட்டு, ஏற்கனேவே கரையில் ஒதுங்கி இருந்த எமது கிளிஞ்சல்களையும் சங்குகளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டுபோய் விட்டது.

இந்த முறையும் வழக்கம் போல், ஓரு புது அலை- கொஞ்சம் பெரிய சைசில்-வந்திருக்கிறது. 

இது என்ன செய்யப் போகிறது என்பது, இதன் பிரவாகம் ஓய்கிற போது தான் தெரியும்!

may 14

இத்தனை வருஷமும் போட்டி போட்டுக் கொண்டு கிண்டல் பண்ணி விட்டு இப்போது, போகிற போது மன்மோகன் சிங்கைப் எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், எதிர்க் கட்சித் தலைவர் உட்பட. எது எப்படி ஆனாலும், மே 16, மற்றவர்களுக்கு எப்படியோ-ஆனால் மன்மோகன் சிங் அவர்களுக்கு மட்டும் நிச்சயமாகப் பொன்னாள். ஏனெனில் அது, அவர் தனது சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்கப் போகிற நன்னாள்!

may 14

வெளிவட்டங்கள் 
**********************
(பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. மன்னிக்கவும்)

இது நடந்து ஐந்தாறு வருஷங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் எழுத்தாளர் திலீப்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ராம், உங்களிடம் நீங்கள் எழுதிய வெளிவட்டங்கள் நாவலின் பிரதி ஏதாவது வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. காரணம், நான் எழுதிய ஒரே நாவலான இந்த ‘வெளிவட்டங்கள்’, கலைஞன் பதிப்பக வெளியீடாக 1979-ஆம் வருஷம், அதாவது இந்தத் தொலைபேசி அழைப்பு வந்த நாளுக்கு சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் வெளிவந்தது.

பெயர் வெளிவட்டங்கள் என்றாலும், போதிய போஷகர்கள் (promoters) இன்றி அது சில உள்வட்டங்களில் சிலாகித்துப் பேசப்பட்டதோடு நின்று போனது. நிறைய எதிர்பார்ப்புகளோடு நான் அந்த நாவலை எழுதியிருந்தேன். கலைஞன் பிரசுரகர்த்தர் திரு. மாசிலாமணி அவர்கள் எனது பிரதியால் மிகவும் கவரப்பட்டவராய், நான் எழுத்துலகுக்கு அப்போது புதியவன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், எந்த வியாபார நோக்கமும் இன்றி மிகுந்த உற்சாகத்தோடு, தனது வெள்ளிவிழா வெளியீடுகளில் ஒன்றாக அதை வெளிக் கொணர்ந்திருந்தார். ஒரு சுவாரஸ்யமான விவாதத்தை அல்லது சர்ச்சையைத் தூண்டி விடுகிற potential-உம் அந்த நாவலுக்கு இருந்தது. இருந்தும் துரதிர்ஷ்ட வசமாக அது நிறையப் பேரின் கவனத்துக்குப் போகாமல், காலவெள்ளத்தில் ஷெல்ஃபில் முடங்கிப் போய்விட்டது.

அந்த நாவலைப் பற்றித் தான் அன்றைக்குத் திலீப் குமார் தொலைபேசியில் என்னிடம் விசாரித்திருந்தார். நான் அவரிடம் சொன்னேன். “இப்போது அது எங்கேயும் அச்சில் இல்லை. என்னிடம், எனது பிரத்தியேகப் பிரதி ஒன்றே ஒன்று தான் இருக்கிறது” என்றேன்.

“அந்த நாவலை இயக்குனர் வசந்த் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தீவிர ஆர்வத்தோடு என்னிடம் வந்து இருக்கிறார். நீங்கள், இந்தப் பக்கம் வருகிற போது அந்தப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்தால், அவர் படித்தவுடன் நானே அதை அவரிடமிருந்து பத்திரமாய்த் திரும்ப வாங்கி உங்களிடம் தந்து விடுகிறேன். உங்கள் பிரதியின் பாதுகாப்புக்கு நான் கேரண்டி” என்றார் திலீப்குமார். என் ஆச்சரியம் இன்னும் அதிகமானது .நான் அடுத்த வாரம் பிரதியைக் கொண்டு தருவதாக அவரிடம் சொன்னேன்.

நான் பிரதியோடு சென்ற அன்றைக்கு, திலீபின் ஷோரூமில் வசந்தும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே நல்ல, வித்யாசமான, வணிக அம்சங்கள் குறைவாக உள்ள படங்களை வசந்த் தந்திருந்ததால் அவர் மீது எனக்கு ஒரு மரியாதை இருந்தது. திலீப் என்னை வஸந்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நான் அவரிடம் கேட்டேன்: “முப்பது வருஷத்துக்கு முன்னால் வெளியாகி, மிகக் குறைந்த பேர்களாலேயே படிக்கப் பட்டு, புற உலகின் கவனத்தை ஈர்க்காமல் அலமாரிக்குப் போய் விட்ட இந்த நாவலைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அது மட்டும் அல்லாமல் இதைத் தேடிக் கண்டுபிடித்துப் .படிக்க வேண்டும் என்கிற அளவுக்கு எப்படி இதில் ஈர்ப்பு வந்தது?”

தமிழில் வந்திருக்கும் எல்லா நல்ல எழுத்துகளையும் குறிப்பாக மரபு சாரா எழுத்துகளைத் தேடித் படிப்பதில் தொடக்க காலத்திலிருந்தே தனக்குத் தணியாத தாகம் உண்டு என்று அவர் சொன்னார். அதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே தூண்டு கோலாய் இருந்ததாய் அவரது பால்ய நண்பர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டார். வங்கி அதிகாரியாய் இருந்த அந்த நண்பர் ஒரு தீவிரமான புத்தகப் பிரியராம்.

வசந்த் சொன்னார்: “நான் வாசித்த பெரும்பான்மையான புத்தகங்கள் என் பால்ய சிநேகிதன் சிபாரிசு பண்ணியது தான். போன வாரம் ஏதோ பேச்சு வந்த போது, ‘பல வருஷங்களுக்கு முன்னால் ‘வெளி வட்டங்கள்’ என்று ஒரு நாவல் வந்ததே, உனக்குத் தெரியுமா? ரொம்பவும் அபூர்வமான நாவல் அது. நாவலின் நிறைய இடங்களில் சுற்றுப் புறத்தைக் கூட மறந்து நான் சத்தம் போட்டு ரசித்துச் சிரித்திருக்கிறேன். ஆபீசுக்கே எடுத்துக் கொண்டு போய் சக ஊழியர்களிடம், நாவலின் முக்கியமான இடங்களைப் படித்துக் காட்டி மகிழ்ந்து இருக்கிறேன். அது எங்காவது கிடைத்தால் வாங்கிப் படி.’ என்று அவன் சொன்னான். அவன் லேசில் ஒரு புத்தகத்தை அடுத்தவர்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டான். முப்பது வருஷங்களுக்கு முன்னால் படித்த நாவல் ஒன்றை இன்று வரை ஞாபகம் வைத்துக் கொண்டு அதைப் படிக்கும் படி எனக்கு சிபாரிசு செய்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்று தோன்றியது. திலீப் குமார் தான் இந்த மாதிரி நூல்களைப் பற்றி விசாரிக்கச் சரியான நபர் என்று நினைத்தேன்”

உண்மையில் வசந்த் சரியான நபரைத் தான் தேர்ந்தெடுத்திருந்தார். 1979-இல் நான் சென்னைக்கு வேலை தேடிக் குடியேறின போது எனக்கு அறிமுகமான நல்ல இலக்கிய நண்பர்களில் திலீப் குமாரும் ஒருவர். தாய் மொழி குஜராத்தியாக இருந்தாலும் தனது சிறந்த சிறுகதைகளால் தமிழை வளப்படுத்தியவர்.

வசந்த்திற்கு என் நாவல் பற்றி எப்படித் தெரிய வந்தது என்பதை அறிந்த போது நிஜமாகவே நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி, நாம் அறிந்திராத திசைகளிலிருந்தும் நாம் அறிந்திராத மனிதர்களிடமிருந்தும் நமக்கு எதிர்பாராமல் கிடைக்கும் இத்தகைய அங்கீகாரங்கள், அவை எத்தனை சின்னதாய் இருந்தாலும், அவற்றுக்கு எவ்வளவு சாகித்ய அகாடமிகளும் ஈடாகாது என்று தோன்றியது.

இன்றைய இளம் வாசகர்களுக்காகவும், நாளைய இளம் வாசகர்களுக்காகவும் வெளி வட்டங்கள் முழு நாவலையும் PDF-வடிவில் Internet Archive-இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். Free download- வசதியும் உண்டு. அவகாசம் கிடைக்கும் போது ஆர்வம் உள்ள வாசகர்கள் படித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கோருகிறேன். குறிப்பாய்ப் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. காரணம், படித்துப் பார்த்தால் தான் தெரியும்! 


may 7

ஜல்லிக் கட்டு, தமிழர்களின் வீர மரபு அல்ல; கோர மரபு. ஒரு மாட்டைப் பத்துப் பேர் சேர்ந்து துரத்தி அதன் உடலை இம்சைக்காளாக்கிப் பிடிப்பதும், மிரண்டு ஓடும் அந்த வாயில்லா ஜீவனின் இயலாமைகளையும் அவஸ்தைகளையும் ரசித்து ஆயிரம் பேர் சுற்றிலும் நின்று ஆரவாரித்து சந்தோஷம் கொள்வதும்-வீரமும் இல்லை; விளையாட்டும் இல்லை. நவீன உலகில் இத்தகைய, காலத்துக்கொவ்வாத 'அநாகரிக மரபு'களுக்கு இடம் இல்லை. இன்றைக்கு உச்ச நீதி மன்றம் இந்த விபரீத விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்ததின் மூலம், மாடுகளின் 'சுய மரியாதை'யோடு, இந்த 'விளையாட்டில்' அநியாயமாய்க் குத்திக் கிழிபட்டுச் சாகும் இளைஞர்களின் விலை மதிப்பில்லா உயிர்களும் காப்பாற்றப் பட்டிருக்கின்றன.

may 6

"காலிங் பெல்"
******************
சுவடு-சிற்றிதழ், மே-1978 இதழில் எனது 'காலிங் பெல்' சிறுகதை வெளிவந்தது.சில இதழ்களே வெளி வந்து அற்பாயுளில் நின்று போனாலும், சுவடில் சுந்தர ராமசாமி, மீரா, பூமணி, தமிழ்நாடன், கலாப்ரியா,நா.விச்வநாதன், வண்ண நிலவன், வல்லிக் கண்ணன் போன்ற அன்றைய இலக்கியப் 'பெருந்தலைகள்' பலரும் எழுதி அதன் தரத்தை வளப்படுத்தினர். இவர்களோடு கூடவே, சாதாரணனான எனது படைப்புகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தார்கள்.

புதுக் கோட்டையிலிருந்து வெளி வந்த இந்தச் சிற்றிதழின் பின் புலத்தில் சிவகங்கைக் கவிஞர்களான பாலாவும் மீராவும் உந்து சக்திகளாகச் செயல் பட்டனர். மன்னார்குடியில் நான் இருந்த போது, அப்போது மன்னைக் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த பாலாவின் நட்பு எனக்குக் கிடைத்தது, ஒரு மகத்தான அனுபவம். பாலாவின் நட்பு அனுபவங்களைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுத வேண்டும். பாலாவின் தூண்டுதலின் பேரில் தான் நான் சுவடுக்குப் படைப்புகள் அனுப்பினேன்.

கடைசியாகத் தினமணி கதிரில், 1974- இடைப் பகுதியில் எனது கதை பிரசுரமானதற்குப் பிறகு, எனக்குக் கிடைத்த ஒரு நீண்ட இடைவெளி நவீன இலக்கியம் பற்றிய எனது பார்வையை செழுமைப் படுத்திக் கொள்ள இயற்கையே எனக்கு அளித்த வாய்ப்பாக அமைந்தது.

காலிங் பெல் கதை மூலம் எனது எழுத்துகளின் இரண்டாம் பருவத்தில்(Second Phase) நான் அடி எடுத்து வைத்தேன். ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் ஒரு சம்பிரதாயமான, சின்னத் திருமண விசாரிப்பை யதார்த்தமாய்க் காட்சிப் படுத்துகிற கதையில், காலிங் பெல் ஒரு தற்செயலான, அதே சமயம் வலிமையான குறியீடாகக் கூடவே வந்து சேர்ந்து கொள்கிறது. 

may 4

I agree with the argument of the human right activists that there is no place for capital punishment in a civilized society. But, at the same time can there be any place for hard core terrorism and brutal gang rapes in a civilized society? As long as these two unpardonable and heinous crimes against the humanity continue to exist, I can not support the abolition of the capital punishment particularly in these two specific cases. An indoctrinated mad group of hard core terrorists, has no right to take innocent lives in their 'fight' against the state.

may 1
மே தினச் சிந்தனை 
**************************
பணம் சம்பாதிக்கும் போதே பணம் கொடுக்கிறவர்களின் கோபத்தையும் வெறுப்பையும் சேர்த்து சம்பாதிப்பவர்களுக்கான சிறந்த உதாரணம் சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள். (ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்). குறைந்த கூலியில் அதிக உழைப்பைக் கறப்பது எப்படிச் சுரண்டல் ஆகிறதோ அதே போல், கொஞ்சம் உழைப்பில் நிறையச் சம்பாதிக்க நினைப்பதும் சுரண்டல் தான். சுரண்டலின் பொருள் முதலாளிகளுக்கு ஒரு மாதிரியும் தொழிலாளிகளுக்கு ஒரு மாதிரியும் மாறுவதில்லை.

பணக்கார முதலாளிகள் யாரும் ஆட்டோவில் பயணிப்பதில்லை. ஆட்டோவில் போகிறவர்கள் எல்லோரும் நடுத்தர, அதற்கும் கீழே இருக்கிற வர்க்கத்தவர்கள் தான். தொடர்ந்து, சாதாரண மனிதர்களின் அவசரத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர்களின் 'சிரமப்பட்டுச் சேர்த்த' பணத்தை, நிர்ணயிக்கப் பட்ட அளவுக்கும் மீறி அபகரிப்பதால், ஆட்டோக்கார்கள் மொத்த சமூகத்திலிருந்தும் எதிரிகள் போல் அன்னியப் படுத்தப் படுகிறார்கள்.

சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, உழைப்புக்கேற்ற ஊதியம் போன்ற நற்பண்புகள் சமூகத்தில் எல்லாத் தளத்து மக்களுக்கும் பொதுவானவை. எப்போதும் முதலாளிகளின் சுரண்டல்களை மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கத் தோழர்கள், ஆட்டோத் தொழிலாளர்கள் விஷயத்தில் பட்டும் படாமல் இருப்பது அவர்களது 'இரட்டை ஒழுக்க' நிலையையே வெளிப் படுத்துகிறது.

நியாயமான வேலை நேரம், நியாயமான கூலி இவற்றுக்காக உழைப்பாளிகள் போராட்டத்தில் குதித்ததை நினைவு கூறும் இந்த மே தினத்தில், 'அதே நியாயங்களை நாங்களும் கடைப்பிடித்து, இனி மேல் நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் கட்டாயப் படுத்தி வாங்கி சாதாரண மக்களைச் சுரண்ட மாட்டோம்' என்று ஒவ்வொரு ஆட்டோத் தொழிலாளியும் 'மே தின உறுதிமொழி' எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யுமாறு தொழிற்சங்கத் தலைவர்களும் அவர்களை அறிவுறுத்தி இன்றைக்கு அறிக்கை விட வேண்டும்.

அப்படிச் செய்தால் ஆட்டோ டிரைவர்கள் மீதான மரியாதை சமூகத்தில் மேம்படும். அடிப்படைப் போக்கு வரத்து வசதிகளுக்குக் கூட அநியாய விலை கொடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப் படும் 'கையறு நிலை'யிலிருந்து சாமானியர்களுக்கு விமோசனம் கிட்டும்.


April 27


கவிதை எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை
ஆனாலும் சில பேர் எழுதுகிறார்கள்

கவிதையைப் படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை
ஆனாலும் சிலபேர் படிக்கிறார்கள்

கவிதை புரிய வேண்டும் என்று கட்டாயம் இல்லை
ஆனாலும் சில சமயம் புரிந்து விடுகிறது!




April 26



"உங்களைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத் தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

-'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதையில் புதுமைப்பித்தன்.
(ஏப்ரல் 25-புதுமைப்பித்தன் பிறந்த தினம்)




April 23

"நீங்க யாருக்கு ஓட்டுப் போடப்போறீங்க?" என்று உங்களிடம் யாராவது கேட்டால், "நான் இந்த தடவை நோட்டாவுக்குத் தான் போடப் போறேன்" என்று சொல்லிப் பாருங்கள். உடனே அவர்கள்,"நோட்டாவா? இப்போ மோதி தன் பேரை மாத்திண்டுட்டாரா?" என்று கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!




வேதாளம் சொன்ன புதுக் கதை
*******************************************
முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீண்டும் இறக்கிக் கீழே கொண்டு வந்தான் விக்கிரமாதித்தன். அவனது முதுகில் இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் இப்படிக் கேட்டது:

"ஹே, மகாராஜா! ஒரு கட்சி ஆட்சியில் இருந்த போது அதில் மந்திரியாய் இருந்த ஒருவர் சுடுகாட்டைக் கூட விட்டு வைக்காமல் அதிலும் ஊழல் செய்து மாட்டிக் கொள்கிறார். வேறொரு ஆட்சி பதவிக்கு வந்தவுடன் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பல வருஷங்கள் நடக்கிறது. இதற்கிடையில், அதே மந்திரி, தன் மீது வழக்குப் போட்ட கட்சிக்கே தாவி விடுகிறார். வழக்குப் போட்ட கட்சியும் அவரைத் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு, அவரை ராஜ்ய சபாவிலும் உறுப்பினராக்குகிறது. இந்த நிலையில் தான், பதினேழு வருஷங்களாக வழக்கை விசாரித்து வந்த நீதி மன்றம் 'அவர் ஊழல் செய்தது உண்மைதான்' என்று சொல்லி அவரை இரண்டு வருஷம் ஜெயிலில் போட உத்தரவிடுகிறது.


"ஹே, மகாராஜா, இப்போது சொல். மக்கள் எந்தக் கட்சியைப் புறக்கணிக்க வேண்டும்? மந்திரி ஊழல் செய்த போது,ஊழலுக்கு உறுதுணையாக இருந்த முதல் கட்சியையா? அல்லது, ஊழலுக்குத் தண்டனை பெறும் போது அவர் உறுப்பினராக இருக்கும், (இந்த வழக்கையே தொடுத்த) இரண்டாவது கட்சியையா? இதற்குச் தவறான பதில் சொன்னால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்.. சரியான பதில் சொன்னாலோ நான் மறுபடியும் முருங்கை மரத்திலேயே வழக்கம் போல் ஏறிக் கொள்வேன்" என்றது.

இதைக் கேட்ட விக்கிரமாதித்யன், மிகுந்த கோபமும் விரக்தியும் அடைந்தவனாய், "இப்போதே என் தலை வெடித்து விடும் போல் தான் இருக்கிறது. நீயும், உன் நாசமாய்ப் போன அரசியல் கதையும்! நீ எந்த மரத்திலாவது ஏறித் தொலை. அல்லது இந்தக் கட்சிகள் எதிலாவது போய் ஏறிக் கொள். நான் எந்த பதிலையும் சொல்வதாக இல்லை. என்னை ஆளை விடு" என்று சொல்லி வேதாளத்தை முதுகிலிருந்து கீழே தள்ளி விட்டு விட்டு அந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தான்!



எங்கு திரும்பினாலும் 'மோதி, மோதி' என்ற நாமாவளியே ஜெபிக்கப் படுகிறது. ஒரு புறம், அவரது துதி பாடிகளால், இந்தியாவின் சகல துக்கங்களையும் துடைக்க வருகை தரப் போகும் ஒரு தேவ தூதனைப் போல மோதியின் பிம்பம் வளர்த்தெடுக்கப் படுகிறது. இன்னொரு புறம், இனக் கலவரங்களையும் பிரிவினையையும் தூண்டி தேசத்தின் அமைதியையே குலைக்க வரும் நாச சக்தியாக வேறொரு பிம்பம் அவரது எதிரிகளால் பரப்பப் படுகிறது.

இப்படியாகத் தானே, நேர் மறையாகவும், எதிர் மறையாகவும், தொடர்ந்து, இடைவிடாது, பிரசார சாதனங்கள் மூலம் இந்த மோதி என்கிற மனிதரின் பெயர் இந்திய மக்களின் மனத்தில் ஏதோ ஒரு விதத்தில், பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நான் மோதியின் ஆதரவாளனும் இல்லை; எதிர்ப்பாளனும் இல்லை. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, மோடி மஸ்தான் எப்போது பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போகிறான், அல்லது மந்திரத்தால் மாங்காய் வரவழைக்கப் போகிறான் என்று வழக்கம் போல் வேடிக்கை பார்க்கிறவன். இதற்கு முன்னால், ஏமாந்த தருணங்கள் எல்லாம் ஏனோ புதிதாக மீண்டும் வேடிக்கை பார்ப்பதற்குத் தடையாக இருப்பதில்லை,.

மாயை கலைவதற்கு, விதத்தைக் காரன் வித்தையை முடிக்கும் தருணம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இது வரை எந்த வித்தைக் காரர்களும் தங்கள் வித்தை முடிவுக்கு வந்ததாக அறிவித்ததில்லை, வேடிக்கை பார்க்க வரும் கூட்டமும் தாங்கள் ஏமாந்ததாய் ஒப்புக் கொண்டதில்லை!


ஆழ்துளைக் கிணறுகளை ஆயிரக்கணக்கில் செலவு செய்து தோண்டி விட்டு அதை ஒரு சாக்கைப் போட்டு மூடி வைக்கும் 'மகாபுத்தி சாலிகளை'க் கடுமையாகத் தண்டிக்கும் வண்ணம் ஏன் இன்னும் சட்டங்கள் திருத்தப்படவில்லை? சங்கரன் கோவிலில் சமீபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தையின் விஷயத்தில், ஆழ்துளைக் கிணற்றின் வாயை சாக்கைப் போட்டு மூடிவைத்த பிரகஸ்பதி வேறு யாரும் இல்லை, குழந்தையின் அப்பாவே தான். இவர் ஒரு பள்ளியில் 'தொழிற்கல்வி' ஆசிரியர் வேறாம்! விமோசனமே இல்லாத தேசம் இது.


April 14 · Edited
கடுமையான உஷ்ணம், புழுக்கம், வேர்வை நமைச்சல் இவற்றோடு கூடி விடியும் ஏப்ரல் மாதத்துத் 'தமிழ்'ப் புத்தாண்டில், ஜிலு ஜிலுவென்று விடியும் ஜனவரி மாதத்து ஆங்கிலப் புத்தாண்டில் உள்ள கிளுகிளுப்பும்(thrill), இனிமையும் charm) கிடைப்பதில்லை என்பது உண்மை தான். என்ன தான் கொண்டாட்டம் என்பது மனம் சம்பந்தப் பட்டது என்று வாதிட்டாலும், சீதோஷ்ணமும் சூழலும் மகிழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.