Tuesday, May 27, 2014

இன்னொரு யுத்தம்(ஓர் உரைச்சித்திரம்)


(பழைய இதிகாசங்களைப் புதிய 
வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்)

(விராட ராஜனின் அரண்மனை. அக் ஞாத வாசம் முடித்துப் பாண்டவர் கள் யுத்த நிமித்தம் மந்திராலோச னைக்காகக் கூடியிருக்கி றார்கள்.)

யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோத னிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு திரும்பி வந்து விட்டார். இனி ஆவதென்ன? யுத்தம் தானா? தருமன் தன் பங்குக்காக சுற்றத்தையே அழித்துக் குவித்தான் என்ற அவப்பெயர் எனக்கு ஏற்பட வேண்டுமா? வேண்டாம். துரியோதனனைச் சந்திக்கிற மனோபலமும் புத்திபலமும் அற்ற ஓர் ஏழைப் பிராமணன் தூது போனதாலேயே இந்த சமரச முயற்சி தோற்றுப் போனது. சாகசங்களில் வல்லவனே! நீயே இதற்குத் தகுதியானவன் எங்கள் பொருட்டு மீண்டும் துரியோதனனிடம் தூது செல். ஐந்து நிலங்களையாவது எங்களுக்காகக்  கேள். அதுவும் இல்லை என்றால் ஐந்து வீடுகளையாவது கேள். யுத்தத்தை மட்டும் கேட்காதே.

பீமன்: (கோபமாய்) இப்படிப் பேசுவதற்கு நீர் வெட்கப்படவில்லையா? ஓர் ஆண்மையும் நெஞ்சுரமும் மிக்க க்ஷத்திரியன் பேசுகிற பேச்சா இது? பதின்மூன்று வருஷங்கள் தினவெடுத்துக் கிடக்கும் என் தோள்களும் மரப் பொந்தில் தூசி மண்டிக் கிடக்கும் அர்ச்சுனனின் அஸ்திரங்களும் இத்தனை காலம் காத்துக் கிடந்தது, கடைசியில் ஒரு மந்திராலோசனை மண்டபத்தில் உமது இந்தப் பேடி உபதேசத்தைக் கேட்பதற்குத் தானா? உமக்காக அன்று அர்ச்சுனன் அந்தப் பெருங்காட்டை அழித்து அழகிய நகராகப் பண்ணியது வீண். உமது தர்மங்களுக்கும் மந்தித்த சாத்வீகங்களுக்கும் காடே ஏற்றது; நாடல்ல.

கிருஷ்ணன்: பீமா, அமைதி கொள். வெற்று வெறியில் அன்று நீங்கள் பண்ணின வீண் சபதங்களுக்காக இன்று உணர்ச்சி வசப்பட்டு உன் அண்ணனின் விவேகங்களைப் பழிக்காதே. தர்மபுத்திரர் எந்த சந்தர்பத்திலும் தர்மமே பேசுவார்.

(பாஞ்சாலி வேகமாய் உள்ளே நுழைகிறாள்.)

பாஞ்சாலி: புருஷோத்தமர்களே, மந்திராலோசனை மண்டபத்தில் அனுமதியின்றிப் பிரவேசித்ததற்காக மன்னியுங்கள். தர்மபுத்திரர் தர்மமே பேசட்டும்! ஆனால், அன்று அந்தப் புலைச்சபையில் விரித்தெறிந்தேனே இந்தக் கருங்கூந்தல்- இதன் கதி?

சகாதேவன்: பெண்ணே, சுருட்டிய கூந்தலை விட இந்த விரித்த கூந்தலே உனக்கு இன்னும் சோபையைக் கூட்டுகிறது! அதைக் கெடுத்துக் கொண்டு ஏன் கூந்தலை முடித்துக் கொள்ள ஆசைப்படுகிறாய்?

கிருஷ்ணன்: (புன்னகையோடு) ஆமாம், பாஞ்சாலி. உன் கூந்தல் எத்தனை நீளம் தெரியுமா! மேகம் கண்டு தன் முழுத்தோகையையும் விரித்துக் கொண்டு நிற்கும் ஒரு மாலைக் காலத்து மயிலைப் போல நீ இப்போது காட்சி தருகிறாய்.

திரௌபதி: (சினத்தோடு) சே, இந்த ஆடவர்கள் எத்தனைக் கொடூரமான ரசனை படைத்தவர்கள்! குருதி கொதிக்க வேண்டிய நேரத்திலும் இவர்கள் ஒரு பெண்ணின் கூந்தலை ரசித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஐயோ, நீங்கள் எல்லாம் ரசிப்பதற்காகவா நான் என் கூந்தலை அவிழ்த்தெறிந்தேன்? என் சுயமரியாதைகள் அனைத்தும் உங்கள் சுயநலமிக்க வறட்டு தர்மங்களின் கனலில் உருகி வெந்து போக வேண்டியது தானா? மனைவியின் உணர்வுகளை மதிக்கிற புருஷன் ஒருவன் கூட இந்த உலகில் தோன்றவே மாட்டானா? (துயரத்தோடு வெளியேறுகிறாள்)

(கிருஷ்ணன் கைகளைக் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் உலவுகிறான். சற்று நேரம் அவையில் அமைதி நிலவுகிறது. எல்லோர் முகத்திலும் கவலை படர்ந்திருக்கிறது. கிருஷ்ணனே மௌனத்தைக் கலைக்கிறான்.)

கிருஷ்ணன்: இந்தப் பிரச்சனையை ஏன் வீணே வளர்க்கிறீர்கள்? தர்மன் யுத்தத்தை விரும்பவில்லை. உங்களில் ஒவ்வொருவராய்ச் சொல்லுங்கள். யாருக்கு யுத்தத்தில் விருப்பமுண்டு, யாருக்கு இல்லை?

(மறுபடியும் மௌனம் பரவுகிறது. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமால் இருக்கிறார்கள். சட்டென்று பீமன் எழுந்து வந்து தன் கதையைக் கண்ணனின் முன் தரையில் வெறுப்போடு வீசி எறிகிறான்)

பீமன்: என் கதை உளுத்துப் போகட்டும் கிருஷ்ணா. மூத்தவனின் வழி நிற்பது தானே இளையவனின் தருமம்? யுத்தத்தை நீ போய்த் தாராளமாய்த் தவிர்த்து விடலாம்.

(அர்ச்சுனன் எழுந்து வந்து தனது காண்டீபத்தைத் தரையில் போடுகிறான்.)

அர்ச்சுனன்: என் காண்டீபமும் எந்த மரப் பொந்திலாவது தொடர்ந்து உறங்கட்டும். என் அம்பறாத்தூணியில் இனி அரண்மனைப் பெண்கள் அர்ச்சனைக்குப் புஷ்பங்கள் எடுத்துச் செல்லட்டும். யுத்தம் எதற்கு? அண்ணன் சொற்படி ஐந்து வீடுகளையாவது யாசகம் பெற்று அந்தணர்களைப் போல உஞ்சவிருத்தி பண்ணிக் கொண்டு சமாதான சக வாழ்க்கை வாழ்வோம்.  

நகுலன்: (எழுந்து வந்து) கூடவே துரியோதனிடம் எனக்கு ஒரு குதிரை லாயம் மட்டும் தானமாய் வாங்கி வா, மதுசூதனா. மனிதர்களுடன் யுத்தம் பண்ணுவதை விடக் குதிரைக்குக் கொள்ளு காட்டுவது சுகமானது!

கிருஷ்ணன்: சகாதேவா! நீ என்ன சொல்லப் போகிறாய்?

சகாதேவன்: மூத்தவனின் தர்மமே இளையவனின் தர்மமாமே? அவ்விதமானால் புருஷன்மார்களின் தர்மமே மனைவியரின் தர்மம் என்பதும் சரி தான். அடடா! புருஷனை விட மனைவி இளையவளாய் இருக்க வேண்டியதின் சூட்சுமம் இப்போதல்லாவா விளங்குகிறது! இனித் திரௌபதியின் தர்மத்தைப் பற்றி நமக்கென்ன கவலை? அர்ச்சுனனிடமிருந்து நன்கு தீட்டிய வாளாய் ஒன்று எனக்கு வாங்கிக் கொடு, கிருஷ்ணா. திரௌபதியின் அந்த அழகிய தலைக் குழலை முழுமையாய் அரிந்து கொய்து விடுகிறேன். இனி அது அவளுக்கெதற்கு? நீ சந்தோஷமாய்த் தூது போய் சமரசம் பேசி விட்டு வரலாம். வரும்போது முடிந்தால், அஸ்தினாபுரத்துச் சுவடிச் சாலையிலிருந்து தத்துவச் சுவடிகள் ஏதாவது இரவலாய் வாங்கி வா. அமைதிக் காலத்தில் அவை எனக்குக் கொறிப்பதற்குப் பயன்படும்.

துருபதன்: (துக்கம் தோய்ந்த குரலில்) அர்ச்சுனனை மணக்கவென்று ஒரு மகளும், துரோணரை வதைக்கவென்று ஒரு பிள்ளையும் வரம் வேண்டிப் பெற்றேன். முன்னது மெய்யானது. பின்னது பொய்யாகி விடுமா?

சகாதேவன்: (சிரித்து) முன்னதே ஐந்தில் ஒரு பாகம் தான் மெய்யாகி இருக்கிறது துருபதரே! அர்ச்சுனன் பெற்றுக் கொண்டது துரௌபதியில் ஐந்தில் ஒரு பங்கு தானே!

திருஷ்டத்யும்னன்: (சீற்றத்தோடு) விளையாடுவதற்கு இது நேரமில்லை. துரோணரை சம்ஹரிக்கும் நோக்கிலேயே என் பிறப்பு நேர்ந்தது. அது இந்தப் போர் நிறுத்த முயற்சிகளால் பயனற்று வீணாகப் போகிறது.

சகாதேவன்: (விரக்திச் சிரிப்போடு) ஒரு பிறப்பின் நோக்கம் இன்னொன்றின் மரணமாய் இருத்தல் மிகவும் கொடிய விசித்திரம் தான். மனித நாகரிக வளர்ச்சியில் எங்கோ வெளித்தெரியாமால் கோளாறு நேர்ந்திருக்கிறது.

கிருஷ்ணன்: திருஷ்டத்யும்னா, உன் தந்தை பெற்ற வரம் பொய்க்குமானால், துரோணரைப் போன்ற ஒரு மகாவீரரை இந்த உலகம் பாதுகாத்துக் கொள்ளும். ஒரு சுத்த வீரன் சாகாமல் எஞ்சியிருப்பது க்ஷத்திரிய குலத்துக்கு நல்லது தானே!

சகாதேவன்: அது போலவே திரௌபதியின் சபதமும் பொய்க்குமானால் பெண்குலத்துக்கே நல்லதாய் முடியும். ஏனென்றால், வருங்காலத்தில் ஓர் ஆணை நம்பித் தன் கூந்தலை அவிழ்த்தெறிகிற அசட்டுத் தனத்தை எந்தப் பெண்ணும் செய்ய மாட்டாள்.

கிருஷ்ணன்:(கனைத்து) நல்லது, ராஜகுமாரர்களே! அப்படியானால் நான் புறப்படுகிறேன். துரியோதனன் மனதை மாற்றி நல்ல செய்தியோடு வருவதற்கு முயலுவேன். யுதிஷ்ட்ரரே, உங்கள் எல்லாரிடமும் அபிப்பிராயம் கேட்ட மாதிரியே துருபத குமாரியிடமும் ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் போவதில் உமக்கு ஆட்சேபனை இல்லையே?

யுதிஷ்ட்ரன்: சே,சே..வேண்டாம். அரச விவகாரங்களில் பெண்களிடம் அபிப்பிராயம் கேட்பது நமது நியதி இல்லை. அது விவேகமும் அல்ல.

சகாதேவன்: உண்மை தான் கிருஷ்ணா! பெண்கள் நமக்குத் தேவையாய் இருப்பது அந்தப்புரங்களில் மட்டுமே. அபிப்பிராயங்களில் அல்ல. பாவம், அவர்கள் அபலைகள்! பிள்ளை பெறுவதற்கு மேல் அவர்களுக்கு வேறொன்றும் செய்யத் தெரியாது. ஆண்களே வருங்காலத்தில் பிள்ளை பெற முடியும் என்றால், அந்த சிரமத்தையும் அவர்களிடத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் நேராது!

யுதிஷ்ட்ரன்: சகாதேவன் எல்லாரையும் குழப்புவது என்று தீர்மானித்து விட்டான். கிருஷ்ணா, நீ யாரிடம் வேண்டுமானாலும் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டு போ. உனது தூதே எனக்கு முக்கியம். அது பற்றி யார் சொல்கிற அபிப்பிராயாங்களும் அல்ல.

(கிருஷ்ணன் கிளம்புகிறான். சகாதேவன் எதையோ நினைத்து வாய்விட்டுச் சிரிக்கிறான். கிருஷ்ணன் திரும்பிப் பார்க்கிறான். சகாதேவன் ‘ஒன்றுமில்லை, கிருஷ்ணா, நீ போ..’ என்கிறான். கிருஷ்ணன் நிலைவாயிலைக் கடக்கிற போது தானும் எதற்கோ சிரித்து விட்டுப் போகிறான்.)

***********

(வேறு காட்சி)

(அரண்மனை அந்தப்புரம். திரௌபதியும் கிருஷ்ணனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.)

திரௌபதி: (சிவந்த விழிகளோடு) அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆண்பிள்ளைகள் தானா, அல்லது, தன்மானத்தை அடகு கொடுத்து விட்ட கோழைகளா?

கிருஷ்ணன்: அவர்களைப் பார்த்தால், ஆண் பிள்ளைகளைப் போலத்தான் தோன்றியது, துருபத குமாரி! சமாதான நாட்டம் கோழைத்தனத்தோடு சேர்த்தியாகுமா?

திரௌபதி: (ஏதோ யோசித்து விட்டு) அவர்கள் ஆண் பிள்ளைகளாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த சந்தர்ப்பத்திலும் ஆண் பிள்ளைகள் அப்படித் தான் நடத்து கொள்வார்கள்.

கிருஷ்ணன்: எப்படி நடந்து கொள்வார்கள்?

திரௌபதி: தங்கள் சுயதர்மத்தையே மேலானதாகக் கருதுவார்கள். பெண்களை வெறும் அடிமைச் சரக்காய் எண்ணுவார்கள். அவர்களின் மனோபாவங்களை ஓர் ஒப்புக்காகக் கூடக் கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

கிருஷ்ணன்: நீ என்ன சொல்கிறாய்? ஒரு பெண்ணின் சபதத்துக்காகக் கணக்கற்ற ஆண்கள் யுத்த களத்தில் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறாயா?

திரௌபதி” (சிறிது மௌனத்திற்குப் பின்) ஒரு பெண்ணின் சரீரத்துக்காக மட்டுமே அவர்கள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணன்: (தடுமாற்றங்களுடன்) பெண்ணிடம் அபிப்பிராயம் கேட்காதே என்று இதற்குத் தான் தர்மபுத்திரர் சொன்னார் போலிருக்கிறது!

திரௌபதி: (ஆவேசத்துடன்) அப்படியா சொன்னார்? ஐயோ, இது எத்தகைய அவமானம்! ஒரு பெண்ணின் உணர்வுகளைப் பலியிடுவது தர்மருக்கு இது மூன்றாவது தடவை! தன்மானமுள்ள எந்த ஒரு க்ஷத்திரியப் பெண்ணும் இதைத் தொடர்ந்து சகித்துக் கொள்ள மாட்டாள்.

கிருஷ்ணன்: மற்ற இரண்டு தடவைகள் எது, எது திரௌபதி?

திரௌபதி: தன் தாயின் வார்த்தைகளைச் சாக்காகக் காட்டி, அர்ச்சுனன் வெற்றி கொண்ட என்னை, ஐவருமே பங்கு போட்டுக் கொண்டது, முதல் தடவை. பின் அந்த நீசர்களின் சபையில் அந்தப் பாவி துச்சாதனன் என்னை நிர்வாணமாக்க முயன்ற போது, பொங்கி எழுந்த வீமனையும் அர்ச்சுனனையும் அடக்கி விட்டுத் தானும் பேடியாய்ச் செயலற்று அமர்ந்திருந்தது இரண்டாம் தடவை.

(கிருஷ்ணன் பதில் பேசாது கைகளைக் கட்டிக் கொண்டு உலவுகிறான்.)

திரௌபதி: கிருஷ்ணா, அந்த சகாதேவன் எதுவும் சொல்லவில்லையா?

கிருஷ்ணன்: சொன்னான், திரௌபதி. உன் கூந்தலை அரிந்து கொய்து விட்டு யுத்தத்தையும் நிறுத்தச் சொன்னான்.


திரௌபதி: (முகத்தில் ஒரு மின்னல் ஓட) ஆகா, அவன் புத்திமான்! ஒரு பெண்ணின் சுயமரியாதையைத் தான் அவன் கூந்தல் என்று குறிப்பிட்டிருக்கிறான். கிருஷ்ணா, சதா பெண்கள் மத்தியிலேயே இருந்து பழகிய ஆண்பிள்ளையாயிற்றே, நீ? ஒரு பெண்ணின் இயல்புகள் கொஞ்சமேனும் உன்னிடம் தொற்றியிருக்காதா? என் மனப் போராட்டாங்களின் நியாயங்களை நீயாவது புரிந்து  கொண்டு எனக்கு உபகாரம் செய்.

கிருஷ்ணன்: தூது போகாதே என்கிறாயா?

திரௌபதி: இல்லை, கிருஷ்ணா. ஆனால், இந்த தூதை ஒரு நாடகமாக்கு. பெண் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டி இந்த ஆண்பிள்ளைகளை யுத்தத்தில் இழுத்து விடு.

கிருஷ்ணன்: இது அதிகபட்சமான வேண்டுகோள் திரௌபதி! வேறு ஏதேனும் கேள்.

திரௌபதி: கிருஷ்ணா, நீயும் நன்றி மறந்தாய். அன்று ஆற்று நீரில் நீ உன் கௌபீனத்தைப் பறிகொடுத்து விட்டுக் கரையேற முடியாமல் தவித்த போது, என் சேலைத் தலைப்பைக் கிழித்து உன் பக்கம் வீசி உன்னை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றினேன்...

கிருஷ்ணன்: அதற்குப் பிரதி தான் நான் எப்போதோ செய்து விட்டேனே? அன்று, துரியோதனன் சபையில் உன் புருஷன்மார்கள் கையாலாகாதவர்களாய்ச் சமைந்து கிடந்த போது, குவியல் குவியலாகச் சேலைகளை அனுப்பி உன் மானம் காத்தது உபகாரம் இல்லையா, துருபதபுத்ரி?

திரௌபதி: அதற்காக நான் உனக்குக் கடமைப் பட்டிருக்கிறேன், கிருஷ்ணா. ஆனால், அன்று நீ செய்தது, என் கணக்கில் பிரதி உபகாரம் என்பதை விட,, உன் கணக்கில் பரிகாரமாகத் தான் அது வரவு வைக்கப் பட்டிருக்கிறது. உனக்கு  நினைவிருக்கிறதா, கிருஷ்ணா, அன்றைக்கு யமுனைக் கரையில் அத்தனை யாதவப் பெண்களின் புடவைகளையும் ஒளித்து வைத்து, அவர்களின் தவிப்பை வேடிக்கை பார்த்த உன் அந்தப் பொல்லாத விளையாட்டை? அது ஒரு வெறும் பிள்ளைப் பிராயத்துக் குறும்பு தான் என்பதையும், அதைத் துச்சாதனின் நீசத் தனத்தோடு ஒப்பிடுவது தவறு என்பதையும் நான் அறிவேன். இருந்தாலும், ஒரே மாதிரியான செயல்கள், நோக்கங்கள் வேறு வேறானாலும், தங்கள் தோற்றப் பிழைகளால் தவிர்க்க முடியாமல் அறிவு மயக்கங்களை  உண்டு பண்ணி விட்டுப் போய் விடுகின்றன.

கிருஷ்ணன்: என்னைத் தர்மசங்கடத்தில் இழுத்து விடுகிறாய் பெண்ணே.

திரௌபதி: ஒவ்வொரு தர்மமும் ஒரு சங்கடம் தான் கண்ணா! நீ என் பொருட்டு வரவழைக்கப் போகிற இந்த மகா யுத்தம், வெறும்  பங்காளிப் போராட்டமாய் வெளி உலகுக்குத் தோற்றம் காட்டட்டும். ஆனால் இதன் பின்னணியில் தொடர்ந்து நசுக்கப் பட்ட ஸ்த்ரீபிம்பமே இந்த ஆண் வர்க்கத்தைப் பழி தீர்க்கிற ஆவேசத்தோடு சூட்சுமமாய் விஸ்வரூபமெடுத்து உள் நிற்கும். புருஷ தர்மங்களைப் பேணுவதே ஒரு பெண்ணின் தொழிலாக ஆதிக்க வெறியில் இவர்கள் இங்கே ஸ்தாபித்த அந்தப் புலைச்சாத்திரம் இந்த யுத்தத்தில் இவர்களோடு சேர்ந்து தானும் மரணமடையும். பாண்டவர்கள் ஜெயித்த பிற்பாடும் கூட, இந்தப் படுகொலைகளைத் தவிர்க்க முடியாமால் தாங்கள் அதர்மவான்களாகிப் போனதற்காக அல்லும் பகலும் அவர்கள் மனம் அமைதியின்றிப் புழுங்கும்....

கிருஷ்ணன்: திரௌபதீ, சாந்தமடை. உன் ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன். மகாபாரதப் போர், ஒரு பங்குப் பிரச்சனையாய் பாண்டவர்களுக்கும் அவர்களது  நூறு சகோதரர்களுக்கும் நேர்ந்ததென்று நாளைய உலகம் நன்றாய் ஏமாறும். ஏன் இந்த வியாசன் கூட அவ்விதமே ஏமாறுவான். ஆனால், அது உண்மையில் ஓர் ஆண்-பெண் கௌரவப் பிரச்சனையாய், திரௌபதிக்கும் அவளின் ஐந்து புருஷர்களுக்கும்  நடந்த யுத்தம் என்பது நீயும் நானும் மட்டுமே அறிந்த ரகசியங்களாய் இருக்கும்.

திரௌபதி: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) கிருஷ்ணா, உண்மையில் உன் வாக்கு சத்தியமாகுமா? எனக்கு நீ அத்தகைய உதவியும் செய்வாயா?

கிருஷ்ணன்: செய்கிறேன் பாஞ்சாலி. இந்தத் தூதை வீணாக்குவதற்காகவே, துரியோதனின் விருந்தேர்ப்பாடுகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, அந்த ஏழை விதுரன் வீட்டில் போஜனம் பண்ணி விட்டுப் போவேன். திருதராஷ்டிர புத்திரனுக்கு இதை விடப் பெரிய அகௌரவம்  வேறு நேரமுடியாதாகையால், அவன் எரிச்சலடைந்து தூதுவனாகப் போகும் என்னை அவமானப் படுத்தி விரட்டுவான். பாண்டவர்களின் தூது தோற்கும். திரௌபதியின் அந்தரங்கம் வெல்லும். யுத்தம் மூளும்.

திரௌபதி: அந்த யுத்தகளத்திலேயே பெண்ணைப் பணயப் பொருளாக்கிப் பகடை ஆடிய இந்த ஆண்களின் அகங்காரம் அழிந்து நிர்மூலமாகும்..(சற்று அமைதிக்குப் பின்) இதில் உனக்கும் லாபங்கள் உண்டு கிருஷ்ணா. அரண்மனை விருந்தை விலக்கி விட்டு அந்த ஏழை விதுரனின் குடிலில் உணவருந்தப் போவதால், உனக்கு ஏழைப் பங்காளன் என்று இன்னொரு திருநாமம் கிட்டும்!

கிருஷ்ணன்: (நழுவுகிற மேலங்கியைச் சரி செய்து கொண்டு) உன்னை அந்தப் பாண்டு புத்திரர்கள் ரொம்பவுமே  குறைவாக எடை போட்டு விட்டார்கள், திரௌபதி! சரி, நான் வரட்டுமா? கடைசியில் நீயே ஜெயித்தாய்.

திரௌபதி: ஆமாம்; ரகசியமாய்! ஏனென்றால், ஓர் ஆணின் ஜெயங்களைப் போல், ஒரு பெண்ணின் ஜெயங்கள் அம்பலத்துக்கு வருவதில்லை. அல்லது, அப்படி வர அனுமதிக்கப் படுவதில்லை.

கிருஷ்ணன்: (போகிற போக்கில்) ஆனால், ஒரு பெண் ஜெயிப்பதற்கும் கடைசியில் ஓர் ஆண் பிள்ளையே வேண்டி இருக்கிறதென்பதை மறந்து விடாதே, பாண்டவ தேவி!

திரௌபதி: (பெரிதாய்ச் சிரித்து) அநீதி இழைக்கப் பட்ட வர்க்கத்திற்கான பிராயச்சித்தம், அநீதி இழைத்த வர்க்கத்திடமிருந்து வருவது தான் நியாயம், கிருஷ்ணா!

(கிருஷ்ணன் பதில் எதுவும் சொல்லத் தெரியாமல், ஓர் அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து நழுவுகிறான். திரௌபதி, தான் கடைசியாய்ச் சொன்னதை நினைத்தோ  என்னவோ, தனக்குத் தானே குலுங்கிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். அந்தச் சிரிப்பின் குலுங்கலில் அவளது விரிந்த கூந்தலின் பிரிந்த முடிக் கற்றைகள் அதிர்ந்து அதிர்ந்து, தீப ஒளியில்  தீ நாக்குகள் போல் காற்றில் அலைகின்றன.)
(திண்ணை-25.05.14)
---------------------------------------------------

Thursday, May 15, 2014

கோஷங்கள்


கொதிக்கிற வெயிலில் கோஷம் போட்டுக் கொண்டே ஒரு கும்பல் போனது. அந்தக் கும்பலில் அவனும் இருந்தான். நாலைந்து கோஷங்களை அவனுக்கு நன்றாய் மனப்பாடம் ஆகிற மாதிரி  சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவற்றை மனப்பாடம் பண்ணுவதில் அவன் அதிக சிரமப்பட வில்லை. ஊர்வலம் முடிந்தவுடன் கோஷம் போட்டுக் கொண்டு பின்னால் வந்த சிறுபிள்ளைகளுக்கு எல்லாம் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுப்பதாய்ச் சொல்லி இருந்ததால், அவன் அந்த கோஷங்களை மனப்பாடம் பண்ணுவதில் அதிக அக்கறையும் உற்சாகமும் காட்டி இருந்தான்

ஊர்வலத்தில் போட்டுக் கொண்டு போக, அவன் மாதிரிப் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு கறுப்புச் சட்டை கொடுத்திருந்தார்கள். ‘ஊர்வலம் முடிந்தவுடன் மறக்காமல், கழற்றித் தந்து விடவேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப் பட்டிருந்தது. இதற்கு முன் யார் யாரோ போட்டுக் கழற்றியதின் ஞாபகார்த்தங்களாய் அவை சுமந்திருந்த வேர்வை நெடிகளையும், தோய்க்காமல் விடப்பட்ட கறைகளையும் ஒரு ரூபாய்க் காசுக்காக அவன் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

தார் உருகி இளகிப்போன சாலையில், அந்தச் சுடுகிற பகல்போதில் இடையனுக்குப் பின்னால் கத்திக் கொண்டு போகிற ஆட்டுக் குட்டிகளைப் போல, கும்பலில் ஒருத்தனாய், தனித்துவம் இழந்து சுயமரியாதை பறி போய்த் திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டு மாதிரி ஒன்றையே கோஷித்துக் கொண்டு அவன் நடந்து போனான்.

“கடவுள் இல்லை..கடவுள் இல்லை..இல்லவே இல்லை..”

எதிர்மறைகள் நேர்மறைகளை விட எந்த விதத்திலோ அதிக சக்தி வாய்ந்தனவாய்த் தோன்றுகின்றன... சொல் அமைப்பில், வாக்கியக் கட்டில், அட்சர வெளிப்பாட்டில்.. முடியவே முடியாது என்று அடம் பிடிக்கிற குழந்தையின் பிடிவாதம் மாதிரி.. மாட்டவே மாட்டேன் என்று எல்லாவற்றையும் வீசி எறிந்து விட்டு முகம் திருப்புகிற ஒரு சிறு பெண்ணின் வைராக்கியம் மாதிரி...

“இல்லவே இல்லை..இல்லவே இல்லை..”

ஊர்வம் அலங்கார மேடையை நெருங்கியவுடன் அவனைச் சட்டென்று சோகம் கப்பிக் கொண்டது. இந்த வியர்வை நாறும் சட்டையும் நாளைக்கு ‘இல்லவே இல்லை’ என்று ஆகி விடும். ஒரு ரூபாய்ப் பணத்துக்காக, எச்சில் இலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு அடித்துக் கொள்ளும் தெரு நாய்கள் மாதிரி, ஊர்வலக் கமிட்டி செகரட்டரியிடம் பையன்களோடு பையனாய்ப் போய் அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். அது ஒரு வேளை வரும். அப்புறம் அதுவும் ‘இல்லவே இல்லை’ ஆகி விடும்! கவளம் கவளமாகப் பசிக்கிற வேளையில் பிரத்தியட்சமாய் உள்ளே போகிற சோறு உள்ளே போனவுடன் என்ன ஆகிறது? எங்கே போகிறது? எப்படி அவை இல்லாமல் போகின்றன? ஏன் அது அடுத்த வேளைக்கு உதவுவதில்லை?

அலங்கார மேடையின் நடுவே ‘தலைவர்’ படம் மாலை மரியாதைகளோடு வைக்கப் பட்டிருந்தது. ‘இல்லவே இல்லை’ என்ற அந்த மகத்தான எதிர்மறையைக் கண்டறிந்து தைரியமாய்ப் பிரகடனம் பண்ணி விட்டுப் போன அந்தத் தலைவரின் பெயரை யார் யாரோ துதி பாடினார்கள். நடுநடுவே ‘இல்லவே இல்லை’ எட்டிப் பார்த்தது. தனக்குப் பிடித்த அந்த ‘இல்லவே இல்லை’ வரும் போதெல்லாம் அவன் உடம்பு சிலிர்த்தது. அவை தானே கண்டறிந்த மகா வாக்கியங்கள் போல் அவன் உடம்பில் மீண்டும் கோஷ போதை விறுவிறுவென்று ஏறியது.

‘தலை மறைக்கிறது’ என்று ஒருவர் அவனை உட்காரச் சொல்லி அதட்டிய போதே அவன் உள்ளூர அவமானம் அடைந்தான். தான் முக்கியத்துவம் இழந்து போனதைப் போல் கோபமும் கொண்டான். இந்த அலங்காரங்களுக்கும், அறைகூவல்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும்- தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அவன் அவர்களுக்குத் தேவை  கும்பலில் தான்; கோஷத்தில் தான். முகங்களோடு ஒரு முகமாய்; குரல்களோடு ஒரு குரலாய்; வெறும் எண் அவன். ஒன்று, இரண்டு, மூன்று மாதிரி. நாளை பத்திரிகையில் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேர் திரண்டதாய்ச் செய்தி வந்தால், அவன் அந்த ஐயாயிரத்தில் எங்கோ நடுவில், அடையாளம் தெரியாத நடுவில், அடையாளம் தெரியாத நம்பர்ப் புழுக்கத்தில்- ஓர் எண்ணிக்கையாய் இருப்பான்.

ஒரு ரூபாய்ப் பணம் உணவாகி உள்ளே போன பிற்பாடு, அவன் தன் வழக்கமான கல் மண்டபத்துக்கு வந்து ஆசுவாசமாய்த் தூணில் சாய்ந்து கொண்டான். அந்தி வேளைச் சிலுசிலுப்பில்  மனசின் கனம் லேசாய்க் கரைகிற மாதிரித் தோன்றியது. அந்த நேரம் பார்த்து, நெற்றியில் திருமண்ணும், தலையில் கட்டுக் குடுமியுமாய், செக்கச் செவேலென்று, சட்டையில்லாத மார்பில் யக்ஞோபவீதம் குறுக்காய்ப் புரள, இவன் வயசொத்த இன்னொரு பிள்ளை அதே மண்டபத்துக்கு வந்து இவனெதிரில் இருந்தத் தூணோரம் உட்கார்வதற்காகத் தோளிலிருந்த துண்டால் தரையில் தூசியைத் தட்டினான்.

இவன் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்துச் சிரித்தான். இவனது சிரிப்பை ஒரு சினேக சங்கேதமாய் எண்ணிப் பதிலுக்கு அவனும் சிரித்து விட்டுத் தூணில் சாய்ந்து கொண்டு, அடிவானை ஆசையோடு நெருங்கிக்  கொண்டிருக்கும் தூரத்துச் சூரியனைப் பார்க்கலானான். பார்த்த நிலையிலேயே, ‘ஊரிலேன் காணி இல்லை; உறவு மற்றொருவர் இல்லை’ என்று பாசுரம் சொல்லத் தொடங்கினான்.


சட்டென்று அந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டுச் சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்த இவன், இப்போது நிஜமாகவே சிநேக பாவத்தோடு அவனுக்கருகில் போய்  உட்கார்ந்து கொண்டான். அவன் பாசுரத்தை நிறுத்தி விட்டு இவனைப் பார்த்தான், கேள்விக் குறியோடு.

இவன் கேட்டான்: “நீ சொல்றதுலயும் ‘இல்லை’ வருதே?”

இவனது கேள்வியின் சூட்சுமம் அவனுக்கு விளங்கவில்லை.

இவன் சொன்னான்: “ நீ இப்ப ஒரு பாட்டுப் பாடினியே, அதைச் சொல்றேன். அதுலயும் ‘இல்லை, இல்லை’ வரதைச் சொல்றேன். எனக்கு இந்த ‘இல்லை’ வந்தாலேயே ரொம்பப் பிடிக்கும். அதுவும் ‘இல்லவே இல்லை’ வந்தா இன்னும் பிடிக்கும்..!” பிராமணச் சிறுவனுக்கு இவன் பேசுவது வியப்பை உண்டு பண்ணியது.”அது ஏன் அப்படி?” என்று அவன் கேட்டான்.

“அது ஏனோ தெரியல.. ஆனா, அந்த வார்த்தையச் சொல்றப்போ எல்லாம், ஒரு பெரிய சத்தியத்த யாரோ உணர்த்தற மாதிரி இருக்கும்..”

“உனக்கு அப்பா அம்மா யாராவது இருக்காளா?”

“இல்ல”

“தம்பி தங்கை?”

“இல்ல”

“வீடு, வாசல்?”

“இல்ல”

“சாப்பாடு, துணி, படிப்பு, உத்தியோகம்?”

“ஊஹூம், இல்ல.. இல்ல.. இல்லவே இல்ல. “

எதிர்மறைகள், எதிர்மறைகள் .. கால யந்திரத்தின் வலிமையான, கூரான, முள்ளாய்க் கீறிக் கிழிக்கும் கோரமான பல் சக்கரங்கள்..

பாசுரம் சொன்ன சிறுவன் இவனைப் பரிதாபமாய்ப் பார்த்தான்.

இப்போது இவன் முறை வந்தது. “உனக்கு எல்லாம் இருக்குதா?”

அவன் கொஞ்ச நேரம் ஒரு சரியான பதிலுக்குத் தேடுவது போல் மௌனமாய் இருந்தான்.

“இப்படிக் கேட்டா என்ன பதில் சொல்றது? எல்லாம் இருக்குன்னாலும் பொய்; ஒண்ணுமே இல்லேன்னாலும் பொய்...” என்று சொல்லி முகவாயைச் சொரிந்து கொண்டே சூரியனைப் பார்த்தான். சூரியன் லேசாய் நிறம் வெளிறிச் சிவக்கத் தொடங்கி இருந்தது.

“நீ சாப்பாட்டுக்கு என்ன செய்யறே?”

“தினமும் விடியக் காலையில எழுந்திருந்து, பஜனை கோஷ்டியோட சேந்துண்டு, ‘ராதே ராதே, ராதே ராதே, ராதே கோவிந்தா..”ன்னு பாடிண்டே கோயிலுக்குப் போறேன். அங்க வெண்பொங்கலும் புளியோதரையும் கிடைக்கும். சாயங்காலம் கோயில் திருவோலக்க மண்டபத்துல உக்காந்துண்டு அரையர்களோட சேந்து திவ்யப் பிரபந்தம் சொல்றேன். அப்பா மடைப்பள்ளியிலிருந்து ஏதாவது கொண்டு வந்து தருவார்.”

இவன் நிஜமாகவே ஆச்சரியப் பட்டான். இந்தப் பிள்ளையும் கோஷம் போடுகிறான்; கும்பலோடு போகிறான்... ஆனால், கோஷத்தின் தொனியும் பாவங்களும் தான் வேறு. இவனுக்கு கோஷ முடிவில் ஒரு ரூபாய் கிடைக்கிற மாதிரி, அவனுக்கு வெண் பொங்கல் கிடைக்கிறது. அவ்வளவு தான் வித்யாசம்!

எல்லாருமே இதற்காகத்தான் கோஷம் இடுகிறார்கள். ஒரு நிர்ப்பந்தமே போல் கோஷம் இடுகிறார்கள். தனது சுய பிரக்ஞை இன்றி, பித்தானை அழுத்தினால், ஏற்கெனவே பதிவு பண்ணினதைப் பேசுகிற விளையாட்டு பொம்மை மாதிரி.... வெண்பொங்கலை நினைத்தவுடன் இவன் நாக்கில் ஜலம் ஊறியது.

“உன்னோட நானும் வந்து கோசம் போட்டாப் பொங்கல் தெனம் கெடைக்குமா?”

“அது கோஷம் இல்ல. நாம சங்கீர்த்தனம். உனக்கு அதெல்லாம் வாயில நுழையுமா?”

“நீ சொல்லிக் குடு. நான் புடிச்சுக்குவேன். ‘இல்ல, இல்ல’ வர்ற மாதிரி எதுனாச்சும் இருக்குதா?”

“அப்படியெல்லாம் எதிர் பார்த்தா முடியாது. எங்கே இதைச் சொல்லு பாப்போம். ‘அநாத நாதா தீன பந்தோ ராதே கோவிந்தா..’ “

அவன் அதைச் சொல்ல சிரமப்பட்டான். “என்னாப்பா, கஸ்டமா இருக்குதே?” என்று குழந்தை போல் சிணுங்கினான்.

“கஷ்டப்பட்டாத் தான் பொங்கல் கிடைக்கும். சரி..சரி.. முதல்ல உனக்கு ஈசியா இருக்கிற மாதிரிச் சொல்லித் தரேன். நாங்க ஒவ்வொரு அடி சொல்லி முடிச்சவுடனேயும் நீ, ‘ஜெய்...ஜெய்...விட்டல’ன்னு சொல்லு. அப்புறம் ஒண்ணொண்ணாப் பழகிக்கலாம். இன்னொரு விஷயம்.. நீ இந்த மாதிரி எல்லாம் வந்தா யாரும் பஜனையில சேக்க மாட்டாங்க.  குளிச்சு சுத்தமா நெத்தியில திருமண்ணாவது விபூதியாவது இட்டுண்டு, துண்டை இடுப்பில கட்டிண்டு, மேல் சட்டை இல்லாம வரணும்.”

அவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கறுப்புச் சட்டை வேஷம் மாதிரி, இங்கு வேறு வித வேஷம்... வேஷங்களை அவ்வளவு அவசியமாக்கி விட்ட மனிதர்கள்!

இப்போது இவன் மட்டும் மண்டபத்தில் தனியாக உட்கார்ந்திருந்தான். பிராமணச் சிறுவன் போய் விட்டான். தான் நாளைக்குப் போடப் போகிற புதிய கோஷங்களைப் பற்றி மறுபடியும்  நினைத்தான். இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பழைய ‘இல்லவே இல்லை’ கிடையாது.  இன்னும் ஒரு மாசம் கழித்தோ, இரண்டு மாசம் கழித்தோ கையில் காசு சேர்ந்தவுடன் அந்தக் கட்சி மறுபடியும் ஊர்வலம் நடத்தும். அப்போது அது இவனைக் கூப்பிட்டு அனுப்பும். இவனும் ஒரு ரூபாய்க் காசுக்காக, ஊர்வலத்தில் போய் கோஷம் போடுவான். அதுவரை இந்தப் புதிய கோஷங்கள். அதற்கப்புறம் வேறு ஏதாவது கோஷங்கள்.  வெறும் கோஷங்கள்.. அர்த்த, அவசியங்களைப் பற்றி யாரும் கவலைப் படாமல் ஒரு சமூகக் கடமை மாதிரி, தனித் தனியாய்ப் பிரிந்து எழுப்புகிற கோஷங்கள்.

அவனுக்கு இப்போது மறுபடியும் வயிற்றில் லேசாய்ப் பசிக்கத் தொடங்கியது. கண்ணில் நீர் கப்பிக் கொண்டது. வாழ்க்கை அந்தக் கல் மண்டபத்துத் தரையைப் போல் முரடாய்க் கனத்தது.

“ஜெய், ஜெய் விட்டல....ஜெய் ஜெய் விட்டல..”

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை... இல்லவே இல்லை..”

அவன் காதுகளுக்குள் கோஷங்கள் ‘ஞொய்’ என்று ரீங்காரம் இட்டன.

இல்லை என்று தெளிந்த பிற்பாடு ஏனிந்த கோஷம்? இருப்பதைப் பற்றி ஏன் யாருக்கும் பிரக்ஞை இல்லை?

அவன் துக்கம் நிறையத் தூரத்துச் சூரியனைப் பார்த்தான். அது இப்போது நன்றாய்க் கனிந்து முழுதும் சிவந்திருந்தது.

-5.8.1979, 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியானது.


*
(நவீன சமூகவியற் கருத்துகளின் தாக்கம் காரணமாக, ஆரம்ப காலத்திலிருந்தே நான் 'பெரியார் பிராண்ட்' நாஸ்திகத்திலிருந்தும் 'சங்கராச்சாரியார் பிராண்ட்' ஆஸ்திகத்திலிருந்தும் விலகி நிற்கக் கற்றுக் கொண்டிருந்தேன். இதைக் கருவாய் வைத்து , நாஸ்திக ஆஸ்திக கோஷங்களின் வெறுமையை எள்ளல் செய்து நான் 1979-இல் 'கோஷங்கள்' என்ற சிறுகதையை எழுதினேன்.
கதையை, அந்த நாட்களில் முற்போக்கு எழுத்தாளர்களின் சங்கப் பலகையாய் இருந்த ஒரு பிரதான இடது சாரி இலக்கியப் பத்திரிகைக்குக் கொடுத்தேன். இந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணியது தான் இதற்குக் காரணம்.
ஆனால், என் கதை anticommunist-ஆக இருப்பதாகச் சொல்லி அவர்கள் அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஒரு கதை அதன் நோக்கத்துக்கு முற்றிலும் எதிர்மறையாக அர்த்தம் பண்ணப் பட்டிருந்தது எனக்கு ஒரு விதத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைத் தந்தது.
அதற்கப்புறம் பல நாட்கள் 'கோஷங்கள்' -கதை என் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது. ஒரு நாள், எனது வெளிவட்டங்கள் நாவலைப் பிரசுரித்த நண்பர் திரு மாசிலாமணி அவர்கள் மூலம், அப்போது 'இதயம் பேசுகிறது' இதழில் இணை ஆசிரியராக இருந்த திரு. தாமரை மணாளனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிடம்,"உங்களைப் பற்றி மாசிலாமணி ரொம்ப உயர்வாகச் சொல்லி இருக்கிறார். ஏதாவது கதை இருந்தால் கொடுங்கள். போடுகிறேன்" என்றார்.
நான் அவரிடம் "இந்த மாதிரி எழுத்துகளை எல்லாம் உங்கள் பத்திரிகை போடுமா என்று தெரியவில்லை . போட்டால் சந்தோஷம். ஆனால், இதை எடிட் பண்ணிப் போடுவதாய் இருந்தால் வேண்டாம் " என்று சொல்லி என் 'கோஷங்கள்' கதையைக் கொடுத்தேன். அவர் எனக்கு வாக்களித்த மாதிரியே என் 'கோஷங்கள்' கதையும் எந்த வெட்டும் இல்லாமல், மாயாவின் அழகான ஓவியத்தோடு, 5.8.79- 'இதயம்' இதழில் பிரசுரமானது.
அப்போது நான் சென்னையில் ISCUS (Indo Soviet Cultural Society) கட்டிட மாடி அறையில் தங்கி இருந்தேன். அங்கே என்னுடன் கூடத் தங்கி இருந்த நண்பர் திலக்கின் தந்தை ஒரு தீவிரக் கம்யூனிஸ்ட் தொண்டர். பழகுவதற்கு மிகவும் இனியவர். ராஜபாளையத்துக்காரர். அவர் இந்தக் கதையைப் படித்து விட்டு மிகவும் நெகிழ்ந்து போய் என் கைகளை அன்போடு பற்றிக் கொண்டு “நாங்கள் இத்தனை வருஷமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதை ரொம்ப அழகாக நறுக்குத் தெறித்த மாதிரிச் சொல்லி விட்டீர்கள்” என்று மனசாரப் பாராட்டினார். நான் அவரிடம், அவருடைய ‘காம்ரட்’கள் நடத்தும் பத்திரிகை இதை ஆன்டி-கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தித் திருப்பிக் கொடுத்து விட்டதைச் சொன்ன போது அவர் அதை நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார்.)







Wednesday, May 14, 2014

வெளிவட்டங்கள் (நாவல்)-அறிமுகம்



இது நடந்து ஐந்தாறு வருஷங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் எழுத்தாளர் திலீப்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ராம், உங்களிடம் நீங்கள் எழுதிய வெளிவட்டங்கள் நாவலின் பிரதி ஏதாவது வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. காரணம், நான் எழுதிய ஒரே நாவலான இந்த ‘வெளிவட்டங்கள்’, கலைஞன் பதிப்பக வெளியீடாக 1979-ஆம் வருஷம், அதாவது இந்தத் தொலைபேசி அழைப்பு வந்த நாளுக்கு சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் வெளிவந்தது.

பெயர் வெளிவட்டங்கள் என்றாலும், போதிய போஷகர்கள் (promoters) இன்றி  அது சில உள்வட்டங்களில் சிலாகித்துப் பேசப்பட்டதோடு நின்று போனது. நிறைய எதிர்பார்ப்புகளோடு நான் அந்த நாவலை எழுதியிருந்தேன். கலைஞன் பிரசுரகர்த்தர் திரு. மாசிலாமணி அவர்கள் எனது பிரதியால் மிகவும் கவரப்பட்டவராய், நான் எழுத்துலகுக்கு அப்போது புதியவன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், எந்த வியாபார நோக்கமும் இன்றி மிகுந்த உற்சாகத்தோடு, தனது வெள்ளிவிழா வெளியீடுகளில் ஒன்றாக அதை வெளிக் கொணர்ந்திருந்தார். ஒரு சுவாரஸ்யமான  
விவாதத்தை அல்லது சர்ச்சையைத் தூண்டி விடுகிற potential-உம் அந்த நாவலுக்கு இருந்தது. இருந்தும் துரதிர்ஷ்ட வசமாக அது நிறையப் பேரின் கவனத்துக்குப் போகாமல், காலவெள்ளத்தில் ஷெல்பில் முடங்கிப்  போய்விட்டது.

அந்த நாவலைப் பற்றித் தான் அன்றைக்குத் திலீப் குமார் தொலைபேசியில்  என்னிடம் விசாரித்திருந்தார்.  நான் அவரிடம் சொன்னேன். “இப்போது அது எங்கேயும் அச்சில் இல்லை. என்னிடம், எனது பிரத்தியேகப் பிரதி ஒன்றே ஒன்று தான் இருக்கிறது” என்றேன்.

“அந்த  நாவலை இயக்குனர் வசந்த் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தீவிர ஆர்வத்தோடு என்னிடம் வந்து இருக்கிறார். நீங்கள், இந்தப் பக்கம் வருகிற போது அந்தப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்தால், அவர் படித்தவுடன் நானே அதை அவரிடமிருந்து பத்திரமாய்த் திரும்ப வாங்கி உங்களிடம்  தந்து விடுகிறேன். உங்கள் பிரதியின் பாதுகாப்புக்கு நான் கேரண்டி” என்றார் திலீப்குமார். என் ஆச்சரியம் இன்னும் அதிகமானது .நான் அடுத்த வாரம் பிரதியைக் கொண்டு தருவதாக அவரிடம் சொன்னேன்.

நான் பிரதியோடு சென்ற அன்றைக்கு, திலீபின் ஷோரூமில் வசந்தும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனெவே நல்ல, வித்யாசமான, வணிக அம்சங்கள் குறைவாக உள்ள படங்களை வசந்த் தந்திருந்ததால் அவர் மீது எனக்கு ஒரு மரியாதை இருந்தது. திலீப் என்னை வஸந்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நான் அவரிடம் கேட்டேன்: “முப்பது வருஷத்துக்கு முன்னால் வெளியாகி, மிகக் குறைந்த பேர்களாலேயே படிக்கப் பட்டு, புற உலகின் கவனத்தை ஈர்க்காமல் அலமாரிக்குப் போய் விட்ட இந்த நாவலைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அது மட்டும் அல்லாமல் இதைத் தேடிக் கண்டுபிடித்துப்  .படிக்க வேண்டும் என்கிற அளவுக்கு எப்படி இதில் ஈர்ப்பு வந்தது?”

தமிழில் வந்திருக்கும் எல்லா நல்ல எழுத்துகளையும்  குறிப்பாக மரபு சாரா எழுத்துகளைத் தேடித் படிப்பதில் தொடக்க காலத்திலிருந்தே தனக்குத் தணியாத தாகம் உண்டு என்று அவர் சொன்னார். அதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே தூண்டு  கோலாய் இருந்ததாய் அவரது பால்ய நண்பர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டார். வங்கி அதிகாரியாய் இருந்த அந்த நண்பர் ஒரு தீவிரமான புத்தகப் பிரியராம்.

வசந்த் சொன்னார்: “நான் வாசித்த பெரும்பான்மையான புத்தகங்கள் என் பால்ய சிநேகிதன் சிபாரிசு பண்ணியது தான். போன வாரம் ஏதோ பேச்சு வந்த போது, ‘பல வருஷங்களுக்கு முன்னால் ‘வெளி வட்டங்கள்’ என்று ஒரு நாவல் வந்ததே, உனக்குத் தெரியுமா? ரொம்பவும் அபூர்வமான நாவல் அது. நாவலின் நிறைய இடங்களில் சுற்றுப் புறத்தைக் கூட மறந்து நான் சத்தம் போட்டு ரசித்துச் சிரித்திருக்கிறேன். ஆபீசுக்கே எடுத்துக் கொண்டு போய் சக ஊழியர்களிடம், நாவலின் முக்கியமான இடங்களைப் படித்துக் காட்டி மகிழ்ந்து இருக்கிறேன். அது எங்காவது கிடைத்தால் வாங்கிப் படி.’ என்று சொன்னான். அவன் லேசில் ஒரு புத்தகத்தை அடுத்தவர்களுக்கு சிபாரிசு  செய்ய மாட்டான். முப்பது வருஷங்களுக்கு முன்னால் படித்த நாவல் ஒன்றை இன்று வரை ஞாபகம் வைத்துக் கொண்டு அதைப் படிக்கும் படி எனக்கு சிபாரிசு செய்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்று தோன்றியது. திலீப் குமார் தான் இந்த மாதிரி நூல்களைப் பற்றி விசாரிக்கச சரியான ஆள் என்று நினைத்தேன்”

உண்மையில் வசந்த் சரியான நபரைத் தான் தேர்ந்தேடுத்திருந்தார். 1979-இல் நான் சென்னைக்கு வேலை தேடிக் குடியேறின போது அறிமுகமான இலக்கிய நண்பர்களில் திலீப் குமாரும் ஒருவர். தாய் மொழி குஜராத்தியாக இருந்தாலும் தனது சிறந்த சிறுகதைகளால் தமிழை வளப்படுத்தியவர்.

வசந்த்திற்கு என் நாவல் பற்றி எப்படித் தெரிய வந்தது என்பதை அறிந்த போது நிஜமாகவே நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி, நாம் அறிந்திராத திசைகளிலிருந்தும் நாம் அறிந்திராத மனிதர்களிடமிருந்தும் நமக்கு எதிர்பாராமல் கிடைக்கும் இத்தகைய அங்கீகாரங்கள், அவை எத்தனை சின்னதாய் இருந்தாலும், அவற்றுக்கு எவ்வளவு சாகித்ய அகாடமிகளும் ஈடாகாது என்று தோன்றியது.


இன்றைய இளம் வாசகர்களுக்காகவும், நாளைய இளம் வாசகர்களுக்காகவும் வெளி வட்டங்கள் முழு நாவலையும் PDF-வடிவில் Internet Archive-இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். Free download- வசதியும் உண்டு. அவகாசம்  கிடைக்கும் போது ஆர்வம் உள்ள வாசகர்கள் படித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கோருகிறேன். குறிப்பாய்ப் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. காரணம், படித்துப் பார்த்தால் தான் தெரியும்! 

நாவலுக்கான link:
https://archive.org/details/velivattangal

Monday, May 5, 2014

காலிங் பெல்


கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை. இதற்கு முன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க இரவு எட்டு மணிக்கு மேல் போய்த் திண்ணை விளிம்பில் கால் முட்டி உரசப் படிக்கட்டில் நின்று எங்கெங்கோ துழாவி விட்டுக் கடைசியில் அது அகப்படாமல் அவன் திரும்பி வந்ததுண்டு.

கிருஷ்ணமூர்த்தியின் போர்ஷன் மூன்று கட்டுகளைத் தாண்டி, அந்த நீட்டுவாக்கு வீட்டின் கோடியில் ஏறக்குறைய அடுத்த தெருவை நெருடுகிற எல்லையில் இருந்ததால் அழைப்பு மணி அவசியமாய் இருந்தது. அதற்கப்புறம் ஒரு நாள் பகலில் போயிருந்த போது இவனுக்குக் கிருஷ்ணமூர்த்தியே பட்டன் பதித்திருந்த தடத்தை அடையாளம் காட்டி, இனி எப்போது வந்தாலும் நிலைப்படிக் குறட்டின் வலது மூலையில் ஸ்ரீவைஷ்ணவச் சின்னங்களின் சித்திர வேலைப்பாடு சுவரைத் தீண்ட முடியாமல் தடைப்பட்டுத் திணறுகிற அந்தச் சின்ன  இடை வெளியில் சுட்டு விரலை வைத்து அழுத்தச் சொல்லி இருந்தான். 

அதனால் இன்றைக்கு அவனுக்கு அந்தப் பழைய சிரமங்கள் ஏற்படவில்லை. நீலத்தடத்தைச் சரியாய் அனுமானித்து அழுத்திவிட்டுப் படியிலேயே கதவு திறப்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றான். வீட்டுக் கோடியில் அது எழுப்புகிற நாதம் ஒரு மெல்லிய முனகலாகக் கூட வாசற்படியில் வெளிப்படக் காணோம். ஒரு பரம ரகசியம் பாதுகாக்கப் படுகிற மாதிரி அப்படியொரு கொடூர மூடு மந்திரம். விரல்களில் மட்டும் பிளாஸ்டிக்கின் ஸ்பரிசம் இன்னும் அப்படியே இருந்தது. இருட்டில் ரூபமிழந்து போகிற வஸ்துக்களுக்கு இந்த ஸ்பரிசம் மட்டுமே அடையாளம்.

கொஞ்ச நேரம் பொறுத்து யாரோ கதவைத் திறக்கிற சப்தம் கேட்டது. கதவுக்கு இந்தப்புறம் ஆளோடியில் மேற்கூரையின் இறக்கம் ஏராளமாய் நிழலை அள்ளித் தெளித்திருந்ததால் அதன் மத்தியில் நின்று கதவைப் பாதி மட்டும் திறந்து வைத்துக் கொண்டு விசாரிக்கும் பெண்ணின் முகம் இவனுக்குப் புலப்படவில்லை.

அவன் நிலைப்படியைப் பார்த்துக் கொண்டே ‘கிருஷ்ணமூர்த்தி இருக்கானா?’ என்று கேட்டான்.

“இருக்கார், சாப்பிடறார்” என்று சொல்லி விட்டு, அவனுக்கு வழி காட்டுகிற மாதிரி அவள் முன்னே நடந்து போனாள் “வாங்கோ” என்று கூப்பிடாவிட்டாலும் அந்த நடையின் பாவனைக்கு அது தான் சம்பிரதாயமான அர்த்தமாய் இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு அவனும் பின் தொடர்ந்தான். ஒருவேளை அந்நிய புருஷர்களோடு பேச அவளுக்கு அனுமதிக்கப் பட்ட வார்த்தைகள் அவ்வளவாகவே இருக்கலாம்.

மூன்று கட்டுகளையும் ஒரு நாடா போல் பக்கவாட்டில் இணைக்கிற ரேழியில் அந்தந்தக் கூடங்கள் குடித்தது போக மிஞ்சிய வெளிச்சம் அங்கங்கே திட்டுத் திட்டாய் உமிழ்ந்து வைக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு திட்டைக் கடக்கிற போதும் அங்கங்கே முன்னால் போகிற முதுகிலும் அவற்றைப் போலவே விட்டு விட்டு விகசிக்கிற சிவந்த திட்டுகள். அது கிருஷ்ணமூர்த்தியின் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று மனசுக்குள் ஊகித்துக் கொண்டே பின் தொடர்ந்தான். கிருஷ்ணமூர்த்தி இவ்வளவு உயரம் இருப்பானா? நிலைகள் வருகிற போதெல்லாம் இவள் நிறையக் குனிய வேண்டி இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி இத்தனைக் குனிய மாட்டான். ‘இவள் கிருஷ்ணமூர்த்தியின் விவகாரத்திலும் இந்த அளவுக்குத் தினம் குனிய வேண்டி இருக்குமே’ என்று அவன் நினைத்துக் கொண்டான். அங்கு குடியிருப்பவர்களுக்கெல்லாம் மொத்தம் மூன்று நிலைப்படிகள் என்றால் அவளுக்கு மட்டும் ஒன்று ‘சர்ப்லஸ்’ என்று நினைத்த போது சிரிப்பு வந்தது.

கடைசிப் போர்ஷன் வந்ததும் அவள் சமையலறைக்குள் புகுந்து மறைந்து போனாள். கிருஷ்ணமூர்த்தி சமையலறையிலிருந்து வெளிப்படுவதற்குப் பிடித்த சில நிகிஷங்களில் அவன் கூடத்தில் இருந்த ஈசிசேரில் உட்கார்ந்தபடியே சுவரில் தொங்கும் புகைப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். எதிர்ச் சுவரில் அப்போது தான் ஃப்ரேம் போட்ட மாதிரித் தொங்கிய அந்த போட்டோவில் மாலையும் கழுத்துமாய் ஒரு ஜோடி நிற்பது தெரிந்தது. உத்தரத்திலிருந்து தொங்கும் கூடத்து விளக்கின் பீங்கான் ஷேடிலிருந்து அரை வட்டமாய் ஒரு நிழல் கிளம்பிப் போய் அந்தப் படத்தின் மேல் பாதியில் இலக்காய்க் குவிந்திருக்கவே, நிற்கிறவர்களின் முகம் சரியாகத் தெரியவில்லை. அது கிருஷ்ணமூர்த்தியும் அவன் மனைவியுமாய்த் தான் இருக்க வேண்டும் என்று இவனாய் அனுமானித்துக் கொண்டான். எழுந்து போய்ப் பக்கத்தில் நின்று உற்றுப் பார்த்து ஊர்ஜிதம் பண்ணிக் கொள்ள ஆசையாய் இருந்தது. ஆனால் ஷேடின் நிழலை விடப் போலி நாகரிகங்களின் நிழல் இன்னும் பெரிதாய் நிஜங்களைக் கவ்வி மூடிக் கொள்ளவே உடம்பு ஈஸிசேரில் அழுத்தமாய் ஒட்டிக் கொண்டது/.

கிருஷ்ணமூர்த்தி டர்க்கி டவலில் உள்ளங்கையைத் தேய்த்தபடியே கூடத்துக்கு வந்தான். “ஒன் மேல நான் ரொம்பக் கோபமா இருக்கேன்” என்றான். ஈஸிசேரில் இருந்த நிலையியிலேயே இவன் ஒரு புன்சிரிப்போடு கையை நீட்டிக் கொண்டு, “ஐ ஆம் ஸாரி” என்றான். “எனக்குக் கல்யாணம் நடந்ததுக்கா சொல்றே?” என்று கிருஷ்ணமூர்த்தி இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான். வந்தவன் சங்கடங்களோடு சிரித்தான்.

“மேரேஜூக்கு வரமுடியாமப் போயிடுத்து. இன் பாக்ட், அன்னிக்குத் தஞ்சாவூர்லே ஒரு முக்கியமான ஸ்டாப் மீட்டிங். கிரீட்டிங்க்ஸ் டெலிக்ராம் கொடுக்கக் கூட ஒழியல. மறுநாள் லெட்டர் போட்டிருந்தேனே, வந்துதோ?”

“நத்திங், நீ ஒரேயடியா மறந்துட்டேன்னே நான் முடிவு பண்ணிட்டேன்”

கிருஷ்ணமூர்த்தி உள்புறம் திரும்பி “பானு” என்று குரல் கொடுத்தான். 

“ஒரு தட்டுல பட்சணம் எடுத்துண்டு வா...”

“ஐ ஆம் சாரி, கிருஷ்ணமூர்த்தி. ஆத்துல இப்பத்தான் ஹெவியா சாப்பிட்டேன். சும்மா ஒன்னப் பார்த்துக் கல்யாணம் விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“இதுக்கும் சாரியா? அதுக்குள்ள ரெண்டு சாரி சொல்லிட்டே. நீ துக்கம் விசாரிக்க வந்த மாதிரி இருக்கு!”

“ஐ ஆம்...” அவன் பல்லைக் கடித்துக் கொண்டான். விளக்கின் ஷேடை ஒரு பல்லி அசைத்து ஆட்டி விட்டதில் இப்போது நிழல் எதிர்ச் சுவற்றுப் புகைப்படம் முழுசையுமே பீடித்துக் கவிந்து கொண்டது.

“நீ லெட்டர் போட்டதாவா சொல்றே?” என்று கிருஷ்ணமூர்த்தி அவனிடம் மறுபடியும் கேட்டுக் கொண்டே சமையலறைப் பக்கம் அவள் வருகிறாளா என்று பார்த்தான்.

“சர்ட்டன்லி. ஆனா அட்ரஸ் தான் தப்பாப் போட்டுட்ட மாதிரி ஒரு பீலிங். வேலைக் குழப்பம். ஆபீசுல ஒரு ட்ரான்ஸ்பர் விஷயமா ஏகப்பட்ட தகராறு.”

புரை தீர்ந்த நன்மை பயக்கும் பொய்களைப் பற்றி அவனுக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிப் படிப்பு வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை என்று சில பேர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

புடவைச் சரசரப்போடு ஒரு தட்டில் ஸ்வீட் வகையறாக்கள் அவனுக்கெதிரில் ஒரு ஸ்டூலின் மீது பிரத்தியட்சமாயின. நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுக் கொண்டே ‘இதெல்லாம் என்னத்துக்கு?’ என்று கேட்டு விட்டு மைசூர் பாகில் விரல்களைப் பதித்தான். ஒரு கையால் விள்ள முடியாது போல் தோன்றவே இரண்டு கைகளையும் உபயோகித்து அதைப் பிளந்தான். அவன் படுகிற சிரமங்களைக் கவனித்து “சும்மாப் பல்லால கடிச்சு சாப்பிடு” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

மறுபடியும் புடவைச் சரசரப்பும் குப்பென்று ஓர் அடையாளம் புரியாத பவுடர் வாசனையும் சமீபித்தன. என்ன பவுடர் அது? ‘குடிக்கூரா’வாக இருக்குமோ? கிருஷ்ணமூர்த்தி கஞ்சன். அவ்வளவு விலை கொடுத்துப் பவுடர் வாங்க மாட்டான்.

ஸ்டூலின் விளிம்பில் இப்போது ஓர் எவர்சில்வர் செம்பு நிறையத் தண்ணீரும் பக்கத்தில் ஒரு டம்ளரும் தோன்றின. டம்ளரின் முலாம் ஏறிய வெளிப்பரப்பில் ஒரு கையின் சிவப்பு ஜிவு ஜிவு என்று குவிந்து கவிவதைக் கவனித்துக் கொண்டே அவன் ரவாலாடை உதிர்த்தான். அவன் பிரயோகித்த அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்தில் தட்டு முழுவதும் மாவு வெள்ளைச் சிதறல்கலாகப் பரவி மற்ற பட்சணங்களை எல்லாம் நிறமிழக்கச் செய்து விட்டு, ஸ்டூல் பரப்பிலும் தெறிக்கவே,  தான் அத்தனை வேகப்பட்டிருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான்.

அவன் சாப்பிடுகிற போது கிருஷ்ணமூர்த்தி நிறையப் பேசிக் கொண்டிருந்தான். தன் ஆபீஸ் விவகாரங்களைப் பற்றிச் சொன்னான். ஒரு மாதம் லீவு எடுப்பதற்கு எத்தனை சிரமப்பட வேண்டியிருந்தது என்று பெரிதாய்க் குறைப்பட்டுக் கொண்டான். யூனியன் செக்ரட்டரியிடம் தனக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதென்பதை ரொம்பவும் விஸ்தாரமாய் உள்ளே இருக்கிற அவளும் கேட்கட்டும் என்கிற மாதிரியான குரலில் இரைந்து சொன்னான். இவன் தனது அலுப்புகளை பட்சணங்களில் கரைத்துக் கொண்டு மௌனமாய் இருந்தான்.

மையல் கட்டைக் கூடத்திலிருந்து பிரிக்கிற நிலை வாயிலில் ஒரு ஸாட்டின் ஸ்க்ரீன் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரும் பகுதியில் திட்டுத் திட்டாய் எண்ணைக் கரை படிந்திருக்கவே, “சமையல் அறையில் இருக்கிறவள் அவ்வப்போது வந்து அதில் தன் கைகளைத் துடைப்பவளாக இருக்க வேண்டும்’ என்று அவன் தண்ணீர் குடித்துக் கொண்டே நினைத்தான். தூக்கி, உதட்டில் யார் படாமலும் தண்ணீர்  அருந்துவதில் நிறையச் சௌகரியங்கள் இருக்கின்றன. எந்தப் பீடிகையும் தயக்கமும் இன்றி அறிமுகங்களுக்குக் காத்திராமல் எதிரில் நிற்கிற யார் முகத்தையும் தீர்க்கமாய்ப் பார்க்கலாம். அவர்களுக்கும் தாங்கள் பார்க்கப் படுகிற பிரக்ஞை இருக்காது...

தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்பட்டவுடனேயே குடித்திருக்கலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான். இப்போது அவனையும் கிருஷ்ணமூர்த்தியையும் தவிர்த்துக் கூடத்தில் வேறு யாரும் இல்லை. 

கிருஷ்ணமூர்த்தியிடம் வளரும் உலகின் அடிப்படையான நாகரிக பிரக்ஞைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டதாய் அவன் மனசுக்குள் குறைப்பட்டான். இவனைக் கட்டிக் கொண்டு இந்த நாலாவது கட்டு இருட்டுக் குகையில் இனி வாழ்க்கை முழுவதும் சிறை இருக்கப் போகிற ஆத்மாவை நினைக்கிற போது அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. சமையல் பண்ணுகிற நேரம் போக, பாக்கி நேரம் முழுவதும் ஒரு காலிங் பெல் சமிக்ஞைக்காகக் காத்துக் கொண்டு அந்தக் கூண்டுக்குள் கால காலத்துக்கும் செய்ய வேண்டிய வனவாசம். வன வாசம் கூட இல்லை. அக்ஞாத வாசம். மிஞ்சி மிஞ்சிப் போனால் முன் கட்டுப் பெண்களுடன் கோவிலுக்குப் போகலாம்; காமிரா அறையில் தோளை நன்றாய்ப் போர்த்திக்கொண்டு  மாமியாரோடு பல்லாங்குழி ஆடலாம்; மத்யானம் வெறும் தரையில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தூக்கம் வருகிற வரை ஆனந்த விகடனிலும் குமுதத்திலும் தொடர்கதை படிக்கலாம். அப்புறம்- கிருஷ்ணமூர்த்தி வந்து விடுவான். அப்பா அண்ணன் தம்பிகளுக்குப் பின் அவளோடு அனுமதிக்கப் பட்டிருக்கிற ஒரே ஆண் பிள்ளை.

“ஆல்பம் பாக்கறியா?” என்று கேட்டுக் கொண்டே கிருஷ்ணமூர்த்தி உள்ளே போனான். வந்தவனுக்கு ஒரு சின்ன ஆறுதல் நேர்ந்தாற் போல் இருந்தது. அவன் வேறு புறம் திரும்பி நோக்கினான். ஜன்னலும், ஒரு சின்ன அறையும், அறைச்சுவரை ஒட்டின மாதிரி ஒரு கட்டிலும் கட்டிலின் மேல் மேலுறை கழற்றப்பட்டு சிவப்பாய் ஸாட்டின் உள் உடம்பு தோன்ற ஒரு மெத்தையும் தெரிந்தன. இது தான் சாந்தி முகூர்த்தத்திற்கு வாங்கினதா என்று கேட்க வேண்டும் போலிருந்தது.  ஆனால் உள்ளே அவள் இருக்கிற போது தான் அதைக் கேட்பது நாகரிகமில்லை என்று எண்ணிப் பேசாமலிருந்து விட்டான்.

மேலுறையை சலவைக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குள்ளாகவா அத்தனை அழுக்காய் அடித்து விட்டார்கள்? அவனுக்குக் குறும்புத் தனமாய்ச் சிரிப்பு வந்தது. அவன் சோம்பல் முறிக்கிற மாதிரி ஈஸிசேரிலிருந்து எழுந்திருந்து, நின்று கொண்டு கவனித்த போது இன்னொரு மெத்தை தரையில் சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. ஆனால் அது ஏன் தரைக்குப் போனது என்று தான் புரியவில்லை. ஒரு வேளை அவர்களுக்குள் பிணக்கு ஏதாவது நேர்ந்திருக்க வேண்டும், தமிழ் சினிமாவில் வருகிற ஊடல் காட்சிகள் மாதிரி..

கிருஷ்ணமூர்த்தி திரும்பி வந்தான். “ஐ ஆம் சாரி.. ஆல்பத்தை எதுத்தாத்துல கொடுத்திருக்கு. இன்னொரு நாள் சாவகாசமாக் காட்டறேன்” என்றான்.

“இப்போ நீயும் சாரி சொல்லிட்டே” என்று இவன் சொல்லி பலமாய்ச் சிரித்தான். உடனே, உள்ளே அவள் இருக்கிற போது தான் அப்படிச் சிரித்திருக்கக் கூடாது என்று நினைத்து வெட்கப் பட்டுக் கொண்டான்.

அவன் புறப்படும் போது எதையோ தேடுகிற மாதிரி அண்ணாந்து சுற்று முற்றும் பார்த்து விட்டு “காலிங் பெல்லை எங்க ஃபிக்ஸ் பண்ணி இருக்கே?” என்று கேட்டான்.

“சமையல் ரூமில். அங்க இருந்தாத் தான் சௌகரியமா இருக்கும்” என்று கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பதில் வந்தது.

ந்த தடவை கிருஷ்ணமூர்த்தியே அவனை வாசல் வரை வந்து வழியனுப்பினான். நிலைப்படியருகே நின்று கொண்டு “அடிக்கடி வந்து போயிண்டிரு” என்றான்.

அவன் என்னமோ நினைத்துக் கொண்டு “இந்த ரேழிக்கும் வாசலுக்கும் ஒரு பல்பைப் போடச் சொல்லேன். எதுவுமே அடையாளம் தெரியல” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கினான். “அப்படியே உங்காத்துக் கூடத்து பல்புலேருந்து ஷேடையும் கழட்டி வச்சுடு. சொவரெல்லாம் பாதிக்கு மேல மறைக்கறது”

கிருஷ்ணமூர்த்தி ‘குட் நைட். சொல்லிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு உள்ளே போன பின்னும் அவன் ஏனோ சில வினாடிகள் படிகளிலேயே தாமதித்தான். இப்போதும் கூட, இருட்டில் காலிங் பெல்லின் பட்டன் இருக்கிற தடம் அவனுக்குத் தெரியவில்லை. அருகில் போய்க் கையால் துழாவி மறுபடியும் அதைக் கண்டு பிடித்து அழுத்தி சமிக்ஞை செய்யலாம் போலிருந்தது. ஆனால், கிருஷ்ணமூர்த்தி இன்னும் ஒரு கட்டுக் கூடத் தாண்டி இருக்க மாட்டான். அவனே திரும்பவும் வந்து கதவைத் திறந்து, “ஏய், வாட் ஹேப்பன்ட்? கர்ச்சீப் கிர்ச்சீப் ஏதாவது கூடத்துலேயே வச்சுட்டு வந்துட்டியா?” என்று கேட்பான்.

அவன் எதிலோ அதிருப்தியும் யாரிடமோ அனுதாபமுமாய், தெருவில் இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.


-'சுவடு', மே,1978