Sunday, April 8, 2018

ஞாநி-சில நினைவுகள்...



1978-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் நான் சென்னைக்குக் குடியேறிய போது, முதன் முதலில் தேடிச் சென்று அறிமுகம் செய்து கொண்ட கலை-இலக்கியம் சார்ந்த நண்பர் ஞாநி தான். அப்போது அவர் தனது   ‘பரீக்ஷா’ என்ற நாடகக் குழுவின் மூலம் மரபு சாராத நாடகங்களை நிகழ்த்துவதில் தீவரமாய் இருந்தார். நான் அதற்கு முன்னர் மன்னார்குடியில் இருந்த போதே ‘கணையாழி’யின் வாயிலாக ஞாநி பற்றியும்  அவரது சோதனை நாடகங்கள் பற்றியும் ஓரளவு அறிந்து வைத்திருந்தேன். என்னிடம் அப்போதுதான் நான்  எழுதி முடித்திருந்த ‘மூடிய அறை’ நாடகப் பிரதி இருந்தது. அயனஸ்கோவின் Absurd Dramaக்களின் உந்துதலால் அபத்த நாடக வடிவில் நான் பண்ணியிருந்த எனது கன்னி முயற்சி அது. அந்தப் பிரதியை நிகழ்த்துவதற்கான சாத்தியக் கூறுகளுடைய ஒரே நாடகக் குழு, சென்னையில் ஞாநியின் பரீக்ஷா மட்டுமே என்று நான்  நம்பியதால், ‘மூடிய அறை’ பிரதியோடு  நானும் நண்பர் ரவிச்சந்திரனும் அவரைப் போய்ப் பார்த்தோம். ஞாநி அந்தக் காலகட்டத்தில் பீட்டர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.
ஞாநியுடனான எனது அறிமுகம் அப்படித்தான் ஆரம்பமாயிற்று. ஞாநியைச் சுற்றி ஒரு நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. அக்கினி புத்திரன், திலீப்குமார் போன்றவர்கள் கிட்டத்தட்ட எல்லா நேரமும் அவருடன் காணப் படுவார்கள். சபா நாடகங்களுக்கு மாற்றான, தீவிரத்தன்மை உள்ள ஒரு புதிய நாடகத்தைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் இருந்தது. ஆனால், ந.முத்துசாமியின் முழுக்க முழுக்க abstract-ஆன நாடக வகையை அவர் தவிர்த்ததாகவே எனக்குப் பட்டது, (முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தைப் பரீக்ஷா நிகழ்த்தி இருந்தாலும் கூட). சபா பாணி ஜனரஞ்சக நாடகங்களுக்கும், முத்து சாமி பாணி ‘அரூப’ நவீன நாடகங்களுக்கும் நடுவே ஓர் இடை நிலை நாடகங்களில் அவர் கவனம் செலுத்தினார். பிரபஞ்சனின் ‘முட்டை’, அரந்தை நாராயணனின் ‘மூர் மார்க்கெட்’. இ.பா.வின் ‘மழை’, ஜெயந்தனின் ‘மனுஷா மனுஷா’ போன்றவை அவர் அந்தக் காலத்தில் தேர்வு செய்து நிகழ்த்திய நாடகங்கள்.
ஞாநிக்கு பாதல் சர்க்கார் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. வீதி இயக்கம் 1980-களின் ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்து பாதல் சர்க்காரை அழைத்து வந்து சோழ மண்டலத்தில் பத்து நாட்கள் நடத்திய நாடகப் பட்டறையில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அது ஆரம்பிக்கிற அன்றைக்கு, அந்த நிகழ்வோடு ஒன்றி வருகிற மாதிரி. பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’ நாடகத்தை அவர் தனது பரீக்ஷா மூலம் மியூசியம் தியேட்டரில் நிகழ்த்தியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் தனக்கென்று தொடர்ந்து ஒரு தனிமுகத்தைப் பேணி வந்ததையே இது காட்டுகிறது.

அவரது முழுக் கவனமும் தனது பரீக்ஷா அமைப்பின் வாயிலாக நடுத்தர வர்க்கப் பார்வையார்களையே இலக்காகக் கொண்டிருந்தது எனினும், வீதி நாடக இயக்கம் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய தெரு நாடக நிகழ்வுகளிலும் அவர் அவ்வப்போது கலந்து கொண்டதை இங்குக் குறிப்பிட வேண்டும். வீதி நாடக நண்பர்கள் அக்கினி புத்திரன், பூமணி, கே.எஸ்.ராஜேந்திரன், பாரவி முதலியோர் பங்கு கொண்டு நிகழ்த்திய என் ‘குப்பை’ நாடகத்தில் அவர் பங்களிப்பும் இருந்தது.
அவர் தனது, பரீக்ஷாவுக்கான நாடகப் பிரதியைத் தேர்வு செய்கிற போது அவ்வளவு இலகுவாகத் திருப்தி அடைந்து விடுகிறவர் இல்லை. அவரைச் சந்தித்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஓர் இரவு, நெடு நேரம் வரை, ஜெமினி மேம்பாலத்தின் அடியில் இருந்த புல் வெளியில், ‘மூடிய அறை’ நாடகத்தின் உள் அமைப்பு குறித்து அவர் எழுப்பிய கேள்விக் கணைகளுக்குப் பதில் அளிக்க நான் ஒரு நீண்ட விதாதத்தில் அவருடன் ஈடுபட நேர்ந்தது.  அந்த அனுபவம் இன்னும் எனக்கு இன்று வரை மறக்க முடியாத ஒன்று. அந்த விவாதத்தின் போது நண்பர்கள் ரவிச்சந்திரனும், திலீப் குமாரும் உடன் இருந்தனர். ‘மூடிய அறை’யை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டிய அவசியத்த்துக்கான நியாயங்களை ரவிச்சந்திரன் ஒரு தீவிரத்தோடு ஞாநியின் முன் வைத்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
ஞாநிக்கு ‘மூடிய அறை’ பிடித்திருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ அவர் அதை உடனே நிகழ்த்தவில்லை. கிட்டத்தட்டப் பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு 1990-களின் ஆரம்பத்தில் ஒரு நாள், நானே அந்தப் பிரதியைப் பற்றி மறந்து போயிருந்த தருணத்தில், ஞாநியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘மூடிய அறை’ நாடகத்தை மியூசியம் அரங்கில் அந்த வார இறுதியில் ‘play reading’ என்கிற உத்தியில் நிகழ்த்த இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்ததைப் படித்து  நான் மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அந்த நிகழ்வின் போது மேடையில் பரீக்ஷா குழுவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்தபடி, அவரவர்க்கான வசனங்களை குரல்-பாவங்களோடு படித்துக் காட்டியது புதுமையாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் அன்றைய நிகழ்ச்சிக்கு அசோகமித்திரனைத் தலைமை தாங்கிப் பேச அழைத்திருந்த ஞாநி, என்னையும் மேடைக்கு அழைத்துப் பேசச் சொல்லி கௌரவப்படுத்தி எனக்கு இன்னமும் ஆச்சரியம் அளித்தார்.. அதன் பின், ஒரு பின் விளைவே போல், அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஞாநியின் நெருங்கிய நண்பர் வைத்தியநாதன்  நாடகப் பிரதியால் கவரப்பட்டு தனது யவனிகா நாடகக் குழுவின் மூலம் ‘மூடிய அறை’யை நாலு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து நாரதகான சபா ஹாலில் நிகழ்த்திக் காட்டினார். ஞாநி பத்து வருடங்களுக்கு மேல் கவனமாகப் பாதுகாத்து வந்த எனது பிரதி, அது நாள் வரை முழு நாடகமாக நிகழ்த்தப் படாத குறை ஞாநியின் நண்பரின் மூலம் தீர்ந்ததாக அப்போது எனக்குத் தோன்றியது.
ஞாநி தன்னை எப்[போதுமே ஒரு பத்திரிகைக்காரர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதையே  விரும்பியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள். ஆனாலும் நான் பார்த்தவரை அவர் பத்திரிகை, நாடகம் இரண்டு துறையையுமே இரண்டு கண்களாகத் தான் பாவித்து  வந்தார். இதை நான் உறுதியாகச் சொல்லக் காரணம் உண்டு. 1993-ஆம் ஆண்டு கோவையில் சுபமங்களா சார்பில் கோமல் சுவாமிநாதன் நடத்திய நாடக விழாவில் டில்லியிலிருந்து வந்து, பென்னேஸ்வரனின் யதார்த்தா குழுவினர் நிகழ்த்திய எனது எப்போ வருவாரோ நாடகம் எல்லாராலும்  வெகுவாக சிலாகித்துப் பேசப்பட்ட சந்தர்ப்பம் அது. அந்த நிகழ்ச்சிக்கு ஞாநி செல்லவில்லை. அதனால். அந்தக் குறையைப் போக்கும் விதமாய், தனது சொந்த செலவில், கோமலுடன் இணைந்து சென்னையில் கிருஷ்ண கான சபாவில் மீண்டும் இன்னொரு முறை அந்த நாடகத்தைப் போட ஏற்பாடு செய்ததை, அவரது நாடக ஈடுபாட்டின் தீவிரத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில், அந்த சமயத்தில் அவர் ‘தீம் தரிகிட’ பத்திரிகை நடத்தி நஷ்டம் ஏற்பட்டு மிகுந்த பணக் கஷ்டத்தில் இருந்ததாகப் பேசிக் கொண்டார்கள்.
ஞாநியின் பன்முகத் தன்மை ஆச்சரியப் படத்தக்கது. மனசில் பட்டதை, அது எவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் தைரியமாக எழுதக் கூடியவர். கலைஞர் கருணாநிதியைப் பற்றி அவர் எழுதிய, தவிர்த்திருக்கக் கூடிய ஒரு கருத்துக்காக, அவரது சாதியைப் பற்றிப் பேசி அவரைக் கேவலப் படுத்தி நமது சமூகத்தின் ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எல்லாம் சேர்ந்து ஒரு பொதுக் கூட்டம் நடத்திய போது கூட, அவர் அதைப் பற்றி எல்லாம் லட்சியம் செய்யவில்லை. மாறாக, ஞாநியின் அபிப்பிராயங்கள், பெரிய அரசியல், இலக்கியப் புள்ளிகள் கூட்டம் போட்டு எதிர்வினை ஆற்றுகிற அளவுக்குக் கவனத்துக்குள்ளாயிற்று என்பதே இதில் சுவாரஸ்யமான விஷயம். சில  சமயங்களில் அவர் தான் கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே சிலவற்றை சர்ச்சைக்குரிய விதத்தில் எழுதியதாக ஒரு தோற்றம் உருவானதென்றாலும், தனிப்பட்ட வாழ்வில் வெறும் முற்போக்கு விஷயங்களைப் பேச மட்டும் செய்யாமல், கூடியவரை அவற்றைக் கடைப்பிடித்தும் காட்டிய அபூர்வ மனிதர் அவர். உதாரணமாக, தனது பரீக்ஷா நாடகம் ஒன்றின் இடைவேளையிலேயே தனது திருமணத்தை நடத்தி எல்லாரையும் ஆச்சரியப் பட வைத்தவர் அவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது அதீதமான தைரியமும் அர்ப்பணிப்புணர்வும் ஆச்சரியமூட்டக் கூடியது.. இறுதி நாட்களில், தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரத்துக்கு இரு முறை டயாலிசிஸ் செய்தே ஜீவித்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும் அவர் துளியும் பதற்றமோ, சோகமோ இன்றி, தனது பொதுவெளிச் செயல்பாடுகளில் எப்போதும் போல் இயல்பாக அவர் ஈடுபட்திருந்தது. எல்லோராலும் அவ்வளவு எளிதாகச் செய்யக் கூடியதல்ல.
பொது வெளியில் ஞாநியின் பங்களிப்புகளைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். அவற்றையே மீண்டும் நானும் எழுத விரும்பவில்லை. அவரோடு, ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பழகியவன் என்ற முறையில், எனது தனிப்பட்ட் அனுபவங்களையும் பார்வைகளையும் மட்டும் இங்கே நான் பதிவு பண்ணி இருக்கிறேன். ஒரு சில கருத்து மாறுபாடுகளால், அதற்கப்புறம் நிறைய அவரிடமிருந்து நான் விலகி வந்து விட நேர்ந்தாலும், அவரது தொடர்பின் மூலமாகவே எனக்குக் கிட்டிய பாரவி. கே.எஸ்.ராஜந்திரன், வெளி ரங்கராஜன் போன்ற நாடகவியக்க நண்பர்களின் நட்பு  இன்றும் தொடர்ந்து நிலைத்தே இருக்கிறது. இதை, ஞாநியோடு  எனக்கு, நாற்பது வருஷங்களுக்கு முன்னால் பீட்டர்ஸ் காலனியில் ஒரு இனிய மாலை வேளையில் நிகழ்ந்த அந்த இனிய முதல் சந்திப்பின் நீட்சியாகவே கருதுகிறேன். இன்னும் பல ஆண்டுகள் இருந்து நிறைய சாதிக்க வேண்டிய ஏராளமான ஆற்றலைத் தன்னுள் பொதித்து வைத்திருந்தார் அவர். ஆனால், அதை வெளிப்படுத்த முடியாமல் அவர் இப்படித் திடுதிப்பென்று அற்பாயுளில் புறப்பட்டுப் போனதின்  ஆற்றாமையையும்  அதிர்ச்சியையும் அவ்வளவு எளிதில் என்னால் இப்போதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
-தளம், ஜன-மார்ச், 2018
       ---------------------------------------------------------------------------------------------------------------