மாகிஷ்மதி நகரத்தில் கிளிகள் பேசும் வீடு எது என்று யாரைக் கேட்டாலும்
சட்டென்று வழி சொல்வார்கள். அந்த அளவுக்கு அந்த வீட்டின் கிளிகள் பிரசித்தம். சுற்றிலும்
அழகான தென்னந்தோப்புகளும் குளிர்ந்த தடாகங்களும் சூழ்ந்த அந்த நகரின் அகன்ற
தெருக்கள் ஒன்றில் தான் மண்டன மிஸ்ரரின் மாளிகை போன்ற வீடு இருந்தது. அந்த
வீட்டின் வாசல் கூடத்தில் உத்தரத்தில்
தொங்கும் கூண்டுகளிலிருந்து கிளிகளின் பேச்சரவம் எந்த நேரமும் கேட்ட வண்ணம்
இருக்கும். அவற்றை சாதாரணப் பாமரக் கிளிகள் என்று யாரும் நினைத்து விடவேண்டாம்.
அவை பேசும் கிளிகள். அதுவும் வெறும் வெட்டிப் பேச்சு அல்ல. மாறாக அறிவார்த்தமான
வேதத் தர்க்கங்களைப் பேசும் கிளிகள் அவை. பூர்வ மீமாம்சத்தில் இருந்து, அந்த வீட்டின் அழகான எஜமானி சரசவாணி
தன் மதுரக் குரலில் அவற்றுக்குப்
புகட்டியிருக்கும் மந்திரங்களையும் சுலோகங்களையும் அவளோடு போட்டி போட்டுக் கொண்டு
அவையும் கூடச் சொல்லும்.
மண்டன மிஸ்ரர் இல்லாத நேரங்களில் எல்லாம் சரசவாணிக்குத் துணை அந்தப்
பேசும் கிளிகள் தான். சொன்னதை அப்படியே
திரும்பிச் சொல்லக் கூடியவை என்று தான் கிளிகளைப் பற்றிக் காலம் காலமாகக் கதைகளில்
எழுதி இருக்கிறார்கள். ஆனால், இவளது கிளிகளோ ஒரு படி மேலே போய் இவள்
சொல்லாதவற்றையும் ஊகித்துச் சொல்லும். அவளோடு அந்தரங்கமாய் உரையாடும். உரிமையோடு
கேள்விகள் கேட்கும். அவள் சோர்ந்து போய் இருக்கிற நேரங்களில் வேதக் கவிதைகளில் இருந்து
சுவாரஸ்யமாய் ஏதாவது ஒன்றை எடுத்து விட்டு அவளை உற்சாகப் படுத்தும்.
உண்மையில் அறிவற்ற அற்ப ஜந்துக்களான கிளிகளுக்கு இதெல்லாம் சாத்தியம்
தானா என்று சரசவாணியே நம்பாமல் ஆச்சரியம் கொண்ட தருணங்களும் உண்டு. ஒரு வேளை
இந்தக் கிளிகள் பேசும் விஷயமே தானாய்க் கற்பித்துக் கொண்ட பிரமைகள் தானோ என்கிற
மாதிரி அவளது பகுத்தறிவு அவளை யோசிக்க வைத்திருக்கிறது. அவளது உள்ளுக்குள் இருந்து
எழுகிற ஓசைகள் தான் வெளியில் அந்தப் பறவைகளின் வாய்களில் இருந்து இப்படிக் கிளிப் பேச்சாய்ப் புறப்பட்டு
வருகின்றனவோ? அவ்விதம் ஆனால் அந்தக் கிளிகள் அவளிடம் அந்தரங்கமாய் உரையாடுவது
வெறும் மாயை தானா? ச்சே,ச்சே..அப்படி
இருக்க முடியாது. இந்த மாயா வாதம். இப்போது புதிதாய்க் கிளம்பி இருக்கும்,
வேதாந்திகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் உத்தர மீமாம்சகர்களுடனேயே இருந்து
விட்டுப் போகட்டும். அவளுக்கு வேண்டாம். அவள் பூர்வ மீமாம்சகி. இந்த வாழ்க்கையையும் இதன் நித்திய நெறிகளையும்
சுக துக்கங்களையும் நிஜங்களாக ஏற்று நேசிக்கிறவள்.
கொஞ்ச நாட்களாகவே சரசவாணியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம்
தெரிந்தது. எப்போதும் மலர்ந்த நிலையிலேயே காணப் படும் அவள் முகம் இப்போதெல்லாம்
வாடி, ஒரு நிரந்தர சோகத்தை எதிர்கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிற மாதிரிப்
பிரகாசம் இழந்திருந்தது. காலையில் எழுந்து
கணவர் மண்டன மிஸ்ரரின் நித்திய ஹோம அனுஷ்டானங்களுக்கு .வேண்டியவற்றைத் தயார்
செய்வதிலிருந்து மாலை வேளைகளில் அவரோடு கூட அமர்ந்து அவரது மாணவர்களுக்கு ஜைமினியின் மீமாம்ச
சூத்திரங்களை விளக்கிச் சொல்வது வரை எல்லா வேலைகளையும் சிரத்தையின்றி ஒரு இயந்திர
கதியில் அவள் செய்வதாய்த் தோன்றியது. அவள் ஆசையாய்ப் பேசிக் கொஞ்சி மகிழும் அந்தக்
கிளிகளுடன் அவள் செலவிடும் நேரம் கூட வெகுவாய்க் குறைந்து அவள் தனிமையை நாடும்
நேரம் அதிகரித்திருந்தது.
அன்றைக்கு மாலை கிளிகளுக்கு உணவளிக்க சரசவாணி கூண்டுகளை நெருங்கிய
போது எல்லாக் கிளிகளும் ஏக காலத்தில் ‘சரச வாணி..சரச வாணி..” என்று அவள் பெயரை அப்போது
தான் முதல் முதலாக உச்சரிக்கிறார்ப் போலக் கிறீச்சிட்டுக் கத்தின. சரசவாணி எந்த
சுவாரஸ்யமும் காட்டாமல், “ஆமாம் எனதருமைக் கிளிகளே.. நான் சரசவாணி தான்.அதற்கென்ன
எப்போது?” என்று கேட்டுக் கொண்டே பழங்களையும் கொட்டைகளையும் ஒவ்வொரு கூண்டிலும்
வைத்துக் கொண்டே போனாள்.
கிளிகள் அவள் சொன்னதைக் கேட்காதவை போல் தங்களுக்குள் பேசிக் கொண்டன.
“கொஞ்ச நாளாகவே நம் சிநேகிதி சந்தோஷமாய் இல்லை, கவனித்தாயா?’ என்று
ஒரு கிளி இன்னொரு கிளியிடம் சரசவாணியின் காதுபடக் கேட்டது.
சரசவாணிக்குக் கிளிகளின் அந்தரங்க பாஷை தெரியும். அவளின் அந்தரங்க
பாஷை அவளது கிளிகளுக்கும் தெரியும்.
இன்னொரு கிளி பதில் சொன்னது. “இவள் இப்படி மகிழ்ச்சி இழந்து நாம்
பார்த்ததே இல்லை. காரணம் என்னவாக இருக்கும்?’
இப்போது வேறொரு கூண்டிலிருந்து மூன்றாவது கிளி உரையாடலைத் தொடர்ந்தது.
“எல்லாம் போன மாசம், கள்வனைப் போல் சுவரேறிக் குதித்து,
கூடத்தில் சிராத்தம் நடந்து
கொண்டிருக்கிறது என்றும் பார்க்காமல் உள்ளே நுழைந்து மண்டன மிஸ்ரரரிடம் வாத பிட்சை
கேட்டு அடம் பண்ணினாரே ஒரு இளம் சன்யாசி, ஞாபகம் இருக்கிறதா? அவரால் தான் எல்லாப்
பிரச்சனையும்..நம் எஜமானி அம்மாளை சோகம் பீடித்ததற்கும் அந்த மனிதரே காரணம்..”
இது வரைக்கும் கிளிகளின் சம்பாஷனை காதில் விழாத மாதிரித் தன்
காரியத்தில் ஈடுபட்டிருந்த சரசவாணி இந்தக் கட்டத்தில் குறுக்கிட்டு, “ஏய் அதிகப் பிரசங்கிகளே,,சும்மா
இருங்கள்..” என்று பொய்க் கோபத்துடன் அவற்றை அதட்டினாள்.
எஜமானியின் பொய் அதட்டலுக்கு பயப்படுகிற மாதிரிச் சட்டென்று மௌனமான
கிளிகள், ஒரு நிமிஷம் தாமதித்து மீண்டும் ஏக காலத்தில் “சரசவாணி..சரசவாணி,,” என்று
அவள் பெயரை உச்சரித்துக் கூச்சல் இட்டன..
சரசவாணிக்குச் சிரிப்பு வந்தது.
கிளிகளின் கூண்டுகளை செல்லமாய்ச் சீண்டி ஆட்டி விட்டு விட்டு, “உங்களுக்கு
என்ன வேண்டும் இப்போது?” என்று அவற்றைக் கேட்டாள்.
“நாளைக்கு அடுத்த சுக்ல பட்சம் தொடங்குகிறது. சரியாய் ஒரு மாசக் கெடு
முடிகிறது. அந்த சன்யாசி நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டு பிடித்துக்
கொண்டு மீண்டும் திரும்ப வந்து உன்னை வாதத்தில் ஜெயிக்கப் போகிறார் என்று
நம்புகிறாயா, சரசவாணி?” என்று முதல் கிளி அவளிடம் கேட்டது.
“நீங்கள் ரொம்பவும் பொல்லாத கிளிகளாக இருக்கிறீர்கள், வீட்டில்
நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான்
நிறைய இடம் கொடுத்து விட்டேன். போலிருக்கிறது..” என்று மீண்டும் பொய்க் கோபம் காட்டினாள்
சரசவாணி.
“எங்களை எத்தனை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறாய், நீ? எத்தனை
சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன்னிடத்தில் ஒரு பிரதி உபகாரமாய் நாங்களும்
பதிலுக்கு அக்கறை காண்பிக்க வேண்டாமா?” என்று அவளை சமாதானம் செய்கிற தொனியில்
குரல் கொடுத்தது நான்காவது கிளி.
சரசவாணி இப்போது மௌனமானாள். கிளியின் பேச்சு அவளை ஆழ்ந்த யோசனையில்
மூழ்கடித்தது. அங்கிருந்து அகன்று, படி ஏறி மாடத்துக்குப் போனாள். உள்ளே சலனமிடும்
வெவ்வேறான எண்ணங்களோடு சாளரம் வழியே வெளி உலகைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
தூரத்தில் நர்மதை எந்த சலனமும் இன்றி ஓடிக் கொண்டிருந்தது. அதில்
படகுகள் மிதந்து கொண்டிருந்தன. படகோட்டிகள் எந்தக் கவலையும் இன்றி அவர்களுக்கு
இஷ்டமான பாட்டுகளை உரத்த குரலில் பாடிய படி ஜனங்களை ஏற்றிக் கொண்டு நதியைக் கடந்து போய்க் கொண்டிருப்பது
அங்கிருந்து நிழல் படலங்கலாகத் தெரிந்தன.
சரசவாணி வேறு புறம் திரும்பி நோக்கினாள். அங்கே தடாகத்தில்
நீலோத்பலங்கள் மெல்ல வாய் நெகிழ்ந்து
மலரத் தொடங்கி இருந்தன. அவை இரவின் வருகையை சந்தோஷமாக எதிர்கொள்ளத் தங்களை தயார்
படுத்திக் கொண்டு விட்டன. நிறையச் சக்ரவாகங்கள் மனிதர்களுக்குண்டான எந்தக் கூச்சங்களும் இன்றி, இணை இணையாய், ஒன்றை
ஒன்று பிரியாமலும் ஒன்றோடு ஒன்றாக உரசிக் கொண்டும் தடாகத்தின் வெளிச்சம் குறைந்த
பகுதிகளை நோக்கி நீந்திப் போய்க் கொண்டிருந்தன.
சரசவாணி பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சின் போது விம்மித்
தணிந்த அவளது ஸ்தனங்களை ஒரு நொடி அவளே கவனித்து விட்டுச் சட்டென்று தன் விழிகளை வெட்கத்தோடு
உயர்த்திக் கொண்டாள். அவள் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் தாபங்களும், மோகங்களும்
ஆசைகளும் அன்றோ இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்து சிருஷ்டியை என்றும்
உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருக்கின்றன?. இந்தச் சக்ரவாகங்கள் செய்த பாக்கியம் கூட
நாம் செய்ய வில்லை. இவற்றுக்கு யாரோடு வாதம் செய்து எந்த சித்தாந்தத்தை நிறுவ வேண்டும் என்று கவலை? சக்ரவாகங்கள் எப்போதாவது சன்யாசம்
பூணுவதைப் பற்றி யோசித்திருக்குமா? சநதோஷிப்பதும் பெட்டைகளோடு கூடிக் குலாவிச்
சுகித்திருப்பதுமே அவற்றின் இயல்பு. இயல்புகளைத் தொலைப்பது மனிதர்களுக்கு
மாத்திரமே சாத்தியம்.
இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். வீட்டின் பணிப் பெண், விளக்குகளில்
எண்ணெய் ஊற்றித் திரிகளைச் சரி செய்து அவற்றை ஒவ்வொன்றாய் ஏற்றிக் கொண்டிருப்பது
தெரிந்தது. சந்தி அனுஷ்டானங்களைச் செய்வதற்காக நதிக் கரைக்குப் போன மண்டன மிஸ்ரர்
சற்று நேரத்தில் திரும்பி விடுவார். அவரிடம் இன்றைக்கு இரவு நிறையப் பேச வேண்டும்.
ஒரு வேளை அவரோடு இப்படி ஏகாந்தமாய்ப் பேசும் இரவு இதுவே கடைசியாகவும் இருக்கக்
கூடும். அவருக்குள்ளும் இத்தகைய
எண்ணங்களும் கவலைகளும் ஓடாமலா செய்யும்? அவரை அவள் நன்கு அறிவாள். ஞான ரீதியாகவும்
தேக ரீதியாகவும் அவளிடம் அவர் பெற்ற ஆனந்தங்களை அவரால் எப்படி அத்தனை எளிதில்
துறந்து விட முடியும்? ஆனால், நாளைக்கு அந்த சன்யாசி சங்கரர் திரும்ப வந்து
விட்டால் என்ன செய்வது? அவர் கட்டாயம் வந்தே விடுவார் என்று ஏன் என் மனம் இவ்வளவு
உறுதியாய் நம்புகிறது?
கிட்டத்தட்ட நாற்பது
நாற்பத்தைந்து நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை, மண்டன மிஸ்ரர் தன் வீட்டுக்
கூடத்தில் ஹோமம் வளர்த்து, பிராமணர்கள் புடை சூழ சிராத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஓர்
இளம் சன்னியாசி கூடத்தில் வந்து அவர் முன்னே குதித்தார். .சிராத்த வேளையில்
ஒரு சன்னியாசி, அதுவும் வெளி வாசல் கதவு மூடப் பட்டிருந்த நிலையிலும் இப்படி அத்து
மீறி உள்ளே அதிரடியாகப் பிரவேசித்ததில் கோபம் கொண்ட மண்டன மிஸ்ரர், “யார் நீர்?
எப்படி உள்ளே வந்தீர்?” என்று அதட்டலாய்க் கேட்டார்.
வந்தவர் எந்தப் பதட்டமும் இன்றி, “நான் சங்கரன். அத்வைதப் பிரசாரகன்.
ஆகாய மார்க்கமாக உள்ளே வந்தேன்..” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
“சுவர் ஏறிக் குதிப்பது உங்கள் ஊர் பாஷையில் ‘ஆகாய மார்க்கமாக’
வருவதோ?” என்று ஏளனமாய்ச் சிரித்த மண்டனர் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு வந்தவரிடம்
பேசினார். “நான் சிராத்த காரியத்தில்
இருக்கிறேன். இந்த வேளையில் வெளி மனிதர்களை உள்ளே அனுமதிப்பதோ அல்லது அவர்களிடம்
பேசுவதோ பிதுர்க்களை கோபப்படுத்தும் செயல். என்ன வேண்டும் உமக்கு?”
“உமது குரு குமாரில பட்டரோடு வாதம்
செய்வதற்காக அவரைப் பிரயாகையில் போய்ப் பார்த்தேன். ஆனால் அவர், பாவம் என்னிடம்
வாதம் செய்யும் நிலையில் இல்லை. தன் பௌத்த குருவுக்குத் தான் துரோகம் செய்து
விட்டதாக அவராக நினைத்துக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தன்னைச் சுற்றி உமியை
நிரப்பி அதைத் தீயிட்டுக் கொளுத்தி, அந்தத் தணலில் தன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக
வேகும்படித் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருந்தார். என்னால் அவரைக் காப்பாற்ற
முடியவில்லை. சாவதற்கு முன், ‘மாகிஷ்மதியில் மீமாம்சத்தில் கரை கண்ட பண்டிதனான
மண்டனமிஸ்ரன் என்று என் சிஷ்யன் ஒருவன் இருக்கிறான். அவனோடு வாதம் பண்ணி அவனை வெல்.
அவன் உன் அத்வைதத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அப்புறம் உலகமே அதை ஏற்றுக்
கொள்ளும்’ என்று சொல்லி என்னை இங்கே அனுப்பி வைத்தார்.”
குரு குமாரிலரின் பெயரைக் கேட்டவுடன் மண்டனர் அமைதியானார். குமாரிலரின்
கொடூரமான தற்கொலை முடிவில் மிகவுமே மனம் உடைந்து போன நிலையில் அவர், தன் குருவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை
உணர்வு உந்த, சங்கர சன்யாசியோடு வாதம் செய்ய ஒப்புக் கொண்டார்.
“யுத்தத்துக்கு அழைக்கப் படுகிற வீரனும், வாதத்துக்கு அழைக்கப் படுகிற
பண்டிதனும் மாட்டேன் என்று மறுக்கக் கூடாது. அப்படி மறுத்தால் அவன் கோழையாகித் தோற்றவனாகி
விடுவான், என் சித்தாந்தத்திலும் என் பாண்டித்யத்திலும் எனக்கு அபார நம்பிக்கை
இருக்கிறது. ஆனால் இன்றைக்கு சிராத்த தினம் என்பதால், நான் வேறு எந்தச் செயலிலும்
ஈடுபடுவது சாஸ்திர விரோதம். நாளைக்கு நாம் நம் வாதத்தைத் தொடங்கலாம்” என்று அவர்
பதில் சொன்னார்.
சங்கரர் அதற்கு ஒப்புக் கொண்டார், ஆனால், வாதத்தின் முடிவில் மண்டனர்
தோற்றால், அவர் அவரது குடும்பத்தைத் துறந்து சன்யாசம் மேற்கொண்டு தன் சீடராய்
அத்வைதப் பிரசாரகத்துக்கு உறுதுணையாய்த் தன்னோடு கிளம்பி வந்து விட வேண்டும்’
என்று சங்கரர் நிபந்தனை விதித்தார். உடனே மண்டனர், “அப்படியானால் நீர் தோற்றால்
இந்தக் காஷாயத்தைக் கழற்றி எறிந்து விட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சம்சாரியாக
சம்மதிக்கிறீரா?” என்று திரும்பக் கேட்டார்.
‘ஆஹா, அதற்கென்ன. சம்மதம்” என்றார் சங்கரர்.
மண்டனர் ஏதோ ஒரு வேகத்தில் ரோஷம் மேலிட சங்கரரின் நிபந்தனைக்கு
ஒத்துக் கொண்டு விட்டார்.
சங்கரர் இப்போது இன்னொரு நிபந்தனையைச் சொன்னார். “அப்புறம் உங்கள்
மனைவி சரசவாணியும் உங்களைப் போலவே மகா பண்டிதையாமே? குமாரிலர் சொன்னார். அவரே
நீதிபதியாய் நடுவில் இருந்து நம் வாதத்தைக் கவனித்துக் கடைசியில் யார் ஜெயித்தது
என்று தீர்ப்புச் சொல்லவேண்டும் என்பது
குமாரிலரின் விருப்பம்..”
இப்படி இந்த ஆள் எதற்கெடுத்தாலும் குமாரிலர், குமாரிலர் என்று தன்
குருவின் பெயரைச் சொல்லித் தன் கையைக் கட்டிப் போடுகிறாரே என்று மண்டனர்
நினைத்தார். ஆனால். இவர் சன்யாசி. பார்த்தால் உண்மையான சன்யாசியாகவே தெரிகிறார். உண்மையான
சன்யாசிகள் பொய் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் அன்றி, தன் மனைவியின்
பாண்டித்யத்தை வந்தவர் சிலாகித்துப் பேசியதில் மண்டனருக்கு உள்ளூரப்
பெருமிதமாகவும் இருந்தது.
மண்டனர் பின்னால் இருந்த தன் மனைவி சரசவாணியைக் கூப்பிட்டு, இந்த
ஏற்பாட்டிற்கு அவள் சம்மதிக்கிறாளா என்று
கேட்டார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சரசவாணி தன் முகத்தில் எந்தச்
சலனத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதியாய்த் தலையை ஆட்டினாள்.
மறுநாள் சொற்போர் தொடங்கியது. வாதம் பல நாட்கள் நடந்தது. யாரும்
யாருக்கும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் மற்றவரை
விடப் புத்திசாலியாகக் காட்சி அளித்தார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சரசவாணி
ஓர் உபாயம் செய்தாள். இருவர் கழுத்திலும்
ஒரு மலர் மாலையை அணிவித்து, யார் கழுத்து மலர் மாலை சீக்கிரம் வாட்டம் கொள்கிறதோ
அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னாள்.
துரதிர்ஷ்ட வசமாய் மண்டனரின் கழுத்தில் இருந்த மலர் மாலை முதலில்
வாடத் தொடங்கியது. அதைக் கவனித்த சங்கரர் உற்சாகமாய் சரசவாணியிடம். “அங்கே
பார்..உன் கணவரின் கழுத்து மாலை வாடத் தொடங்கி விட்டது. அவர் வாதம் பண்ணுகிற போது
ரொம்பவே உணர்ச்சி வசப் படுகிறார். கோபம் வருகிறது. என் வாதங்களை மறுப்பதற்கான
சரக்கு அவரிடம் குறைந்து வருவதாக அவர் பயப்படுவது போல் தெரிகிறது. நிபந்தனைப் படி
அவர் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதே தர்மம்” என்றார்.
சரசவாணியின் முகம் இப்போது அந்த மலர் மாலையைப் போல் தானும் வாட்டம்
கண்டது. அவள் இப்போது ஒரு முடிவுக்கு வந்தவள் போல், “இளம் சன்யாசியே, நீங்கள்
சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு நியாயமான நீதிபதியாய் நான் வைத்த நிபந்தனையை
நானே மீறலாகாது. என் கணவர் தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரு மனைவி
அவளது கணவரில் பாதி என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆகவே உமது ஜெயம் பாதி ஜெயம்
தான். முழுமையானதல்ல. ஆகவே என்னோடும் வாதம் செய்து என்னையும் வெற்றி கொண்டால் தான்
நீர் முழுசாய் வெற்றி அடைந்தவர் ஆவீர். எனது இந்தக் கேள்விகளுக்கு பதில்
சொல்லும்.” என்றவள், சங்கரரிடம் காம சாஸ்திரங்களில் இருந்து இக்கட்டான கேள்விகளைக்
கேட்கத் தொடங்கினாள். இவற்றைக் கேட்கிற போது அவள் தன் முகத்தில் எந்த வித
சங்கடங்களையோ தயக்கங்களையோ பிரதி பலிக்காமல் ஒரு ஆன்றவிந்த ஞானியைப் போல் தோற்றமளித்தாள்..
சங்கரர் ஒரு கணம் அதிர்ந்து போனவராய்த் தன் விழிகளைத் தரையை நோக்கித் தாழ்த்திக்
கொண்டார். “நான் சன்யாசி. இந்த விஷயங்களில் எனக்கு அனுபவம் இல்லை, எனக்கு ஒரு
மாசம் அவகாசம் கொடு. உன் கேள்விகளுக்கான பதில்களோடு வருகிறேன்..” என்றார். சரசவாணி
லேசான முறுவலுடன் அதற்குச் சம்மதித்தாள்.
இரவு மூன்றாம் ஜாமத்தை
நெருங்கிக் கொண்டிருந்தது. சரசவாணி, மண்டனர் இருவருமே சயன அறையில் நித்திரை வராமல்
வெகு நேரமாய் விழித்திருந்தனர். சரசவாணி மண்டனரின் அகன்ற மார்புகளின்
குறுக்கே தன் மிருதுவான கரங்களை
வைத்திருந்தாள். மண்டனர் உத்தரத்தைப் பார்த்தபடிக் கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தார். மேலே உள் கூரையில் நிறைய, மர வேலைப்பாட்டுச் சிற்பங்கள், அறையின் மங்கிய அகல் வெளிச்சத்தில்
நிழல் வடிவங்களாய்த் தெரிந்தன. ஒன்றில் இந்திரன் இந்திராணியின் இடையைத் தழுவிய கோலத்தில்
வெள்ளை யானையின் மீது அமர்ந்து அவிர்ப்பாகம் வேண்டி யாகசாலையை நோக்கிப் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.
இன்னொன்றில் தாருகா வனத்து ரிஷிபுங்கவர்கள் தத்தம் பத்தினிகளோடு இந்திரனை வரவேற்கக் கைகளில்
சோமரசத்தோடு காத்திருந்தனர்.
மண்டனர் தன் மீது படர்ந்திருந்த சரசவாணியின் குளிர்ந்த கரங்களைத் தன் கைகளால் பற்றிய படிக்
கூரைச் சிற்பங்களிடமிருந்து கண்களை அகற்றாமலேயே, “இந்த ஸ்பரிசத்துக்கு பதினாலு
உலகங்களையும் பரிசளிக்கலாம், சரசவாணி..” என்று பெரு மூச்சோடு. அவளுக்கு மட்டுமே
கேட்கிற மெல்லிய குரலில் சொன்னார். சரசவாணி ஒருக்களித்துப் படுத்து அவரது
தோள்களில் தன் தலையை வைத்துக் கொண்டாள்; “ஆண்கள் வாய் ஜாலங்களில் வல்லவர்கள்,
அவர்கள் தங்கள் மனைவி மார்களைப் புகழ்கிற வார்த்தைகளை
எல்லாம் அப்படியே சத்தியம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சந்தர்ப்பம்
வாய்த்தால், அவர்களை அவர்கள் எப்பேர்ப்பட்ட தேவதைகளாக இருந்தாலும் அப்படியே உதறி
விட்டு, யாராவது சன்யாசிகள் கூப்பிட்டால் அவர்களோடு
தாங்களும் சன்யாசிகளாகிப் புறப்பட்டுப் போய் விடுவார்கள்..”
மண்டனர் எழுந்து கட்டிலின் தலை பாகத்தில் சாய்ந்து உட்கார்ந்து
கொண்டார். சரசவாணி தனக்குத் தானே, ”நாளையோடு அவர் கேட்ட ஒரு மாசக் கெடு
முடிகிறது...” என்றாள்.
மண்டனர் அவளது தலையை அன்போடு கோதி விட்டார். “சங்கரர் திரும்பி
வருவார் என்று நீ நம்புகிறாயா?” என்று அவளிடம் கேட்டார்.
சரசவாணி சொன்னாள். “இதையே தான் அந்தக் கிளிகளும் என்னிடம் கேட்டன.
நீங்கள் இப்போது கேட்கிறீர்கள் இதல்லாம் என்னை சமாதானம் செய்வதற்காகச் சொல்கிற
வார்த்தைகளாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அந்த சன்யாசியைப் பார்த்தால்
சாதாரணமானவராய்த் தெரியவில்லை.. அதி புத்திசாலியாக இருக்கிறார்.. எப்படியும்
பதில்களோடு அவர் நாளைக்கு வந்து விடுவார் என்றே என் உள் மனசு சொல்கிறது..”
மண்டனர் சில கணங்கள் அமைதியாய் இருந்தார். “அவர் சன்யாசி. அவரால் நீ
கேட்ட விஷயங்களைப் பற்றி எப்படி அனுபவ பூர்வமாய்த் தெரிந்து கொண்டு வர முடியம்?”
என்றவர் கொஞ்சம் தயக்கத்துடன், “ஆனால், சரசா..நீ ஒரு சன்யாசியிடம் அந்த மாதிரி
தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியது சரியல்ல என்றே எனக்குப் படுகிறது..” என்றார்.
சரசவாணி இப்போது அவருக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுத்துக்
கொண்டாள். “அந்த சன்யாசியே அதை தர்மசங்கடமாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு
என்ன பிரச்சனை?” என்று கேட்டாள். “’நான்
துறவி..என் நெறிகளுக்குள் வராதவற்றை நீ வாதத்தில் கொண்டு வருவது சரியில்லை’ என்று
ஏன் அவர் சொல்லவில்லை? ‘ஒரு மாசம் அவகாசம் கொடு, அனுபவ ஞானத்தில் நான் அறிந்து
கொண்டு வருகிறேன் என்று எதற்குச் சொல்ல வேண்டும்? எல்லாவற்றையும் அனுபவித்துத்
தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று என்ன சட்டம் இருக்கிறது?
உதாரணத்திற்கு ஒருவனிடம் மரணத்தைப்
பற்றிக் கேள்வி எழுப்பினால் ‘நான் அனுபவித்துத் தெரிந்து கொண்டு வருகிறேன்’ என்று
சொல்வானா? ஜைமினி சொல்லி இருக்கும் ஆறு பிரமாணங்களில் யூகமும், கேள்வி ஞானமும் கூட
இருக்கிறதில்லையா?”
மண்டனருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவர் பேச்சின்
திசையை மாற்ற விரும்பினார்.
“ஒரு விதத்தில் அதுவும் நல்லது தான்.
அறிவையும் சௌந்தர்யத்தையும் ஒன்றாய்க் குழைத்து உன் போன்ற ஒரு பெண்ணை ரொம்பவும்
அபூர்வமாய் சிருஷ்டித்திருக்கிறான் பிரம்மா. சங்கரர் நாளைக்கு வராவிட்டால், இப்படி
ஓர் அற்புத சிருஷ்டியோடு சேர்ந்திருக்கிற ஆனந்தத்தை நான் நிரந்தரமாய்த் தக்க
வைத்துக் கொள்வேன். வந்து விட்டாலோ, உன்னை ஒரு மாசம் அதிகப்படியாய்த் தக்க
வைத்துக் கொண்ட சந்தோஷத்தோடு அவருடன் புறப்பட்டுப் போவேன்..”
சரசவாணி இப்போது சற்றே சினம் கலந்த குரலில் அவரிடம் பேசினாள். “என்
மீது இவ்வளவு ஆசை இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், ‘வாதத்தில் தோற்றால்
சன்யாசம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று சங்கரர் விதித்த நிபந்தனைக்கு ஏன்
ஒப்புக் கொண்டீர்கள்? அப்படி ஒப்புக்
கொள்வதற்கு முன்னால் என் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்று கூட ஏன்
உங்களுக்குத் தோன்றவில்லை? சன்யாசிகளுக்கு
மட்டும் தான் அத்வைதத்தைப் பரப்புவதற்கான யோக்கியதை இருக்கிறதா? ‘சகலமும் ஒன்று’
என்று சொல்லிக் கொள்வது தானே அவருடைய அத்வைதம்? அப்படியானால் அத்வைதிகளுக்கு,
‘ஆண்-பெண், சன்யாசி-சம்சாரி என்கிற மாதிரியான பேதங்கள் எல்லாம் எப்படி வரலாம்?
இவர் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே சன்யாசம் வாங்கிக் கொண்டு ஊர் ஊராகப் போய்
அத்வைதம் பரப்புகிறார்; அதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால்,
ஏற்கெனவே குடியும் குடித்தனமுமாய்த் தர்ம காரியங்களைப் பண்ணிக் கொண்டு சந்தோஷமாய் இருக்கும் ஒரு சம்சாரியின்
குடும்பத்தைக் கலைத்து ‘நீயும் என்னை
மாதிரிக் காஷாயத்தைக் கட்டிக் கொண்டு என்னுடன் புறப்பட்டு வா’ என்று சொல்வது என்ன நியாயம்? அப்படி என்ன என்னிடம்
இல்லாத ஈர்ப்பை அந்த சன்யாசியிடம் கண்டீர்கள்?”
சரசவாணியை வாதத்தில் வெல்வது என்பது சுலபம் அல்ல என்று மண்டனர்
நினைத்தார். அவள் கேட்கிற கேள்விகளுக்கு அவரிடம் விடை இல்லை. அவள் கேட்பது நியாயம்
தான். இந்த ரூபவதியிடம் இல்லாத என்ன ஈர்ப்புசக்தி அந்த தலை மழித்த சன்யாசியிடம்
இருக்கிறது? ஒரு வேளை குரு குமாரிலரின் பெயரைச் சொல்லி அவர் என் கைகளைக் கட்டிப்
போட்டு விட்டாரோ? அதெல்லாம் போகட்டும்;
ஆனால், இவ்வளவு புத்தி சாலியான இவள் ஏன் எங்கள் இரண்டு பேர் கழுத்திலும் ஒரு
மாலையை மாட்டிவிட்டு ‘மாலை வாடுவதை’ப் போய் ஒரு தீர்மானப் பொருளாய் வைத்தாள்? மாலை என்று இருந்தால் அது எந்த
சமயத்திலாவது வாடத்தானே செய்யும்? வாதம் என்று வந்தால் கோபம், வேகம் எல்லாம்
நடுவில் வராமலா இருக்கும்? வாதத்தில் வாதிடுகிற விஷயம் முக்கியமா, இல்லை வாதிடுகிற
விதம் முக்கியமா? அந்த சமயத்தில் இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் நேரம் பொருத்து
அந்த சன்யாசிக்கும் கூடக் கோபம் வந்திருக்கக் கூடும்.
ஒரு வேளை, சன்யாசம் வாங்கிக் கொள்கிற நிபந்தனைக்கு அவளைக் கேட்காமலேயே
நான் சம்மதித்தது அவளது தன்மான உணர்வை நோகச் செய்திருக்குமோ? அல்லது, நான்
அவளுக்கு அலுத்து விட்டேனோ? போய்த் தொலையட்டும் என்று முடிவு செய்து விட்டாளோ? ச்சே, ச்சே..அப்படி இருக்காது. அப்படி இருந்தால்
என்னை இழப்பது குறித்து இவள் ஏன் இத்தனை சோகமும் கோபமும் கொள்கிறாள்? அது
மட்டுமின்றி பெண்களுக்கே உரித்தான மரபான
தடைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு, இது வரை எங்கேயும் நடந்தறியாத அதிசயமாய், காம
சாஸ்திரத்தைப் பற்றி ஒரு சன்யாசியிடம் பொது மன்றத்தில் தைரியமாய்க் கேள்வி கேட்டாளே,
அந்தச் சாதுரியம் என்னை அவளிடம் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற
வேகத்தால் தானே?
அதற்கப்புறம் அவர்கள் இருவருமே எதுவும் பேசவில்லை. மண்டனர் மௌனமாய்,
கட்டிலில் சாய்ந்த நிலையிலேயே, சாளரத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார். வெளியே
இருள் மண்டி இருந்தது. தூரத்தில் அங்கங்கே மின்மினிகள் மாதிரிச் சிறு சிறு ஒளிப்
புள்ளிகள் தென்பட்டன. அவை வீடுகளின் மாடங்களில் எரியும் அகல் விளக்குகளாக இருக்க
வேண்டும். பகலில் இன்னும் சற்றுப் பின்னல் நீலக் கோடாய்த் தென்படும் நர்மதை இந்த இருட்டில், இருக்கும் இடம்
தெரியாமல் இருளோடு இருளாகக் கலந்திருந்தாள். பகல் முழுதும் அவள் மீது இடைவிடாமல்
குறுக்கும் நெடுக்குமாக மிதந்து கடந்து செல்லும் படகுகள், இந்த மூன்றாம் ஜாமத்து
இரவில், அவளது கரைகளில் கட்டப்பட்டு, அரவமின்றி ஓர் ஓரமாய் ஒதுங்கி முடங்கி இருக்கும்.
நிறையப் படகோட்டிகள் இப்போது அந்தப் படகுகளிலேயே கூடப் படுத்து உறங்கி இருப்பார்கள்.
பொழுது விடிந்தவுடன் அவர்கள் விழித்துக் கொண்டு, தங்கள் காலைக் கிரமங்களைக் கழித்த
கையோடு, வழக்கம் போல் ஜனக் கூட்டத்தை ஏற்றிக்கொண்டு, பாட்டுப் பாடிய படியே எந்தக்
கவலையும் இன்றி நர்மதையைக் கடக்கத் தொடங்கி விடுவார்கள். படகோட்டிகள் பாமரர்கள்.
எந்த சாஸ்திரமும் அறியாதவர்கள். ஆனாலும் நர்மதையைக் கடப்பதென்பது அவர்களுக்கு எவ்வளவு சுலபமாக இருக்கிறது!
மண்டனர் பார்வையை அந்தத் திசையிலிருந்து விலக்கி சரசவாணியின் பக்கம்
திருப்பினார். அவள் இப்போது அயர்ந்து உறங்கத் தொடங்கி இருந்தாள். மண்டனர் தன்
விழிகளை இறுக்க மூடியபடி, கீழே சரிந்து மஞ்சத்தில் சரியாகப் படுத்துக் கொண்டார். எப்போது
உறக்கம் வரும் என்று தெரியவில்லை. மூடிய கண்களுக்குள் நர்மதை .சுழித்துச் சுழித்து
ஓடினாள். படகுகள் அவள் உடல் மீது அனாயாசமாய்க் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தன.
மறுநாள் பொழுது
புலர்ந்து, ஒரு நாழிகை கடந்திருக்கும். மண்டனரின் மாளிகை வாசல் கூடத்துக் கிளிகள்
திடீரென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு சப்தமிடத் தொடங்கின. உள்ளே வேலையாய் இருந்த
சரசவாணி, மனம் துணுக்குற வெளியே வந்து பார்த்தாள். அவளைப் பார்த்தவுடன் கிளிகள்
எப்போதும் போல் ஏக காலத்தில் “சரசவாணி, சரசவாணி..’என்று அவள் பெயரை உச்சரித்துக்
கிறீச்சிட்டன. காரணம் இல்லாமல் இந்தக் கிளிகள் இத்தனை சப்தம் எழுப்பாது என்று
அவளுக்குத் தெரியும்., அவள் வாசல் பக்கம் பார்த்தாள். அவள் பயந்தது நடந்து
விட்டது. அந்தப் பொல்லாத சன்யாசி அங்கே கதவைத் திறந்து கொண்டு புன்னகையோடு உள்ளே
வந்து கொண்டிருந்தார். இந்த முறை உள்ளே நுழைய அவருக்கு அன்றைய தினத்தைப் போல் ‘ஆகாய மார்க்கம்’ தேவைப் படவில்லை. அவரது
கால்கள் பூமிக்கு வந்திருந்தன..
உள் கூடத்தில் எதிர் எதிர் மணைகளில் சரசவாணியும் சங்கரரும் அமர்ந்து
கொண்டனர். மண்டனர் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார். சில கணங்கள் கூடத்தில் ஓர்
அசௌகரியமான அமைதி நிலவியது. சங்கரர் மௌனத்தைக் கலைத்து சரசவாணியை நோக்கிப் பேச
ஆரம்பித்தார். “நான் திரும்பி வரமாட்டேன் என்று தானே நீங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? ஆனால் காலத்தின்
கட்டளையை நீயோ நானோ- யாரால் வெல்லமுடியும்?”
சரசவாணி தன் மனச் சலனங்கள் எதையும் துளியும் தன் முகத்தில்
வெளிப்படுத்தாமல், மென்மையாய் அவரைப் பார்த்து முறுவலித்தாள்.
சங்கரர் தொடர்ந்து சொன்னார். “சரசவாணி! நீ கேட்ட அந்தக்
கேள்விகளுக்கான பதில்களை நான் அனுபவ
பூர்வமாகத் தேடி அறிந்து வந்திருக்கிறேன். சொல்கிறேன், கேள்..” என்றவர், முன்பு அவள் எழுப்பி இருந்த, காம சாஸ்திரம் சார்ந்த
சிருங்கார ரச விவகாரங்களை விரிவாக, ஓர் உபன்யாசம் போல் விவரித்துக் கொண்டே போனார்.
சரசவாணி விழிகளைத் தரையை நோக்கித் தாழ்த்திய படி அமர்ந்திருந்தாள்.
சங்கரர் சொல்லி முடித்தவுடன் அவள் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
“இன்னும் ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று சங்கரர் மெல்லிய நகையோடு
அவளிடம் கேட்டார்.
அவள் சொன்னாள்: “ஒரே ஒரு கேள்வி இருக்கிறது, இளம் துறவியே! ஆனால் இது நமது
வாதத்தோடோ, வாதத்தின் நிபந்தனைகளோடோ சம்பந்தம் அற்றது. நான் கேட்டிருந்த
கேள்விகளுக்கு நீங்கள் விடை தேடிக் கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமே எனக்கு
முக்கியமாக இருக்க வேண்டுமே தவிற, இந்த பதில்களுக்கான அனுபவங்களை நீங்கள் எவ்வாறு
அடைந்தீர்கள் என்பதில் எனக்கு எந்த அக்கறையும் இருக்கலாகாது. ஆனாலும், என்னால்
இதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. சன்யாசியான உங்களுக்கு, அந்த சன்யாசத்துக்கு
எந்த பங்கமும் நேராமல், இந்த அனுபவம் எப்படி சாத்தியமாயிற்று என்று நான் அறிந்து
கொள்ள விரும்புகிறேன். இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்
என்ற எந்தக் கட்டாயமும் இல்லை..”
சங்கரர் சில கணங்கள் அமைதியானார். அவளது விழிகளை நேருக்கு நேர்
சந்திப்பதைத் தவிர்த்தபடி அவர் பேசினார்: “எனது இந்த சரீரத்தை எப்போதும் போல் நான்
பரிசுத்தமாகவே வைத்திருக்கிறேன். அதில் உங்கள் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படத்
தேவை இல்லை...அது எப்படி சாத்தியம் என்று நீ கேட்கலாம். மனம் இருந்தால்
மார்க்கமும் உண்டு அல்லவா? அனுபவ ஞானம்
தேடி நான் திசை தெரியாமல் நடந்து கொண்டிருந்த போது, காட்டில் வேட்டை ஆடுவதற்காக
வந்திருந்த அமருகன் என்ற ஓர் இளம் அரசனின் இறந்து போன சடலம் வழியில் என் கண்ணில்
பட்டது. அப்போது எனக்குள் ஒரு யோசனை தோன்றியது. ஏன் இவன் உடம்பின் மூலம் நாம்
இவனது அந்தப்புற ஸ்த்ரீகளிடத்தில் தாம்பத்திய ரகசியங்களை அனுபவித்து தெரிந்து
கொள்ளலாகாது என்று நினைத்தேன். என் உடம்பை என் சிஷ்யர்களின் பாதுகாப்பில் விட்டு
விட்டு, என் தபோ பலத்தால், வெறும் ஆன்மாவாய் நான் அந்த அழகான அரசனின் உடம்பில்
பிரவேசித்தேன். அவனது ராஜ்ஜியத்துக்குத் திரும்பி, அவனது பட்டத்து மகிஷியிடமும்,
மற்ற அந்தப் புறப் பெண்களிடமும் சிருங்காரம் பயின்றேன். அவர்களுக்கும் சந்தோஷம்
கொடுத்தேன். ஒரு மாசக் கெடு முடிந்தவுடன், அவனது உடலை அங்கேயே போட்டு விட்டு என்
பழைய உடலுக்குத் திரும்பினேன். ஆத்மா, சுகம் துக்கம் என்கிற எந்த தோஷங்களாலும்
தீண்டப் படாதது என்பதால், இந்த அனுபவங்களால் என் ஆத்மா அப்படியே கறை படாமல்
இருக்கிறது. அனுபவித்தது இன்னொருவனின் சரீரம் என்பதால், என் சரீரமும் அப்படியே கறை
படாமல் இருக்கிறது..”
சரசவாணி பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் இமைகள் அந்தக் கிளிகளின்
இறக்கைகளைப் போலவே படபடவென்று அடித்துக் கொண்டன. விழிகளில் மெல்லிய படலமாய் நீர்
கோர்த்துத் தேங்கியது. எதுவும் பேசாமல் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவள்
மண்டனரைப் பார்த்தாள். அவர் முகம் பிரகாசம் இழந்திருந்தது. அவர் தன் மனைவியின்
முகத்தைப் பார்க்கச் சக்தி இன்றித் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
சங்கரரும் எழுந்து கொண்டார். ஒரு பெரிய விஷயத்தை சாதித்து விட்ட
பெருமிதம் அவரது விழிகளில் தெரிந்தது. அவர் எப்போதும் போல் மலர்ந்த முகத்தோடு
இருந்தார். அவரைப் பொருத்தவரை, அவரது வாழ்க்கைக் கிரமங்களில் எந்த மாறுதலும் நேரப்
போவதில்லை, புதியதாய் அவரது சிஷ்யர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது என்பதைத்
தவிர.
மண்டனர் உள்ளே போய்க் காவி உடை தரித்து, சன்யாசக் கோலத்தில் திரும்ப
வந்து சங்கரரின் முன் நின்றார். சரசவாணியிடம் எப்படி சொல்லிக் கொள்வது என்கிற
சங்கடங்களோடு அவர் அவளது சமீபம் போனார். அவள் அவரைப் பார்க்க விரும்பாதவள் போல்,
கூடத்து ஜன்னல் வழியே, தூரத்தில் தெரியும் நர்மதையின் பிரவாகத்தைப் பார்த்தபடி
நின்றாள்.
“சன்யாசியான பின், மனைவி, மக்கள் என்கிற எந்த சொந்தங்களையும் நம்
மனசில் சுமந்து வரலாகாது, மண்டனரே.. இந்தக் கணத்திலிருந்து அவள் உமது மனைவியோ நீர் அவளது கணவனோ இல்லை. யாரிடமும்
சொல்லிக் கொள்ளாமல், யாரையும் திரும்பிப் பாரமல், என்னுடன் என் பாதையில் நடந்து
வாருங்கள்...” என்று சங்கரர் அவரது கைகளைத் தன் கைகளுக்குள் சேர்த்துக் கோர்த்த
படி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் வெளிக் கூடத்தில் சுற்றிலும் தொங்கிக்
கொண்டிருந்த கூண்டுகளுக்குள் இருந்த சரசவாணியின் கிளிகள் இறக்கைகளை மிகவும்
ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டு அந்தச் சின்ன இடத்துக்குள்ளேயே பறந்து வட்டமிட்டு
ஆர்ப்பரித்தன. அதனால், அந்தக் கூண்டுகள் அனைத்தும் தாறுமாறாய் ஆடின. அந்த இடமே
கிளிகளின் கூச்சலால் திடீர் என்று களேபரமாய் ஆனது. சரசவாணி அரவம் கேட்டுத் கிளிகள்
இருந்த இடத்துக்கு வந்தாள். ஆனால் அவள் கிளிகளை எதுவும் சொல்லவில்லை.
கிளிகள் தங்களுக்குள், எல்லோர் காதிலும் விழுமாறு உரக்கப் பேசிக்
கொண்டன.
ஒரு கிளி கேட்டது. “இது
சரியில்லை. சரசவாணி எப்படி இதற்குச் சம்மதித்தாள்? அவள் ஏன் எதுவும் பேசாமால்
சும்மா இருந்தாள்?”
அதற்கு இன்னொரு கிளி பதில் சொன்னது: “அவள் பேசா விட்டால் என்ன? நாம்
பேசுவோம். நாம் தான் அவள். அவள் தான் நாம். அவள் குரலில் நாம் பேசுவோம்”
எல்லாக் கிளிகளும் இப்போது தங்கள் குரல்களை சரசவாணியின் குரலாக
மாற்றிக் கொண்டு விட்டது போல் இருந்தது.
“சரசவாணியைப் போன்ற ஒரு பொக்கிஷத்தைத் துறந்து போக எப்படி இந்த
மண்டனருக்கு மனசு வந்தது?”
“உண்மையில் வாதத்தில் ஜெயித்தது யார்? சரசவாணியா, சங்கரரா?”
இரண்டு கிளிகள் மாறி மாறிக் கேட்டுக் கொண்டன. சட்டென்று சில
வினாடிகள் மௌனமாயின.
மற்றொரு கிளி மெதுவாக ஆரம்பித்தது. : “எனக்கும் இந்த சந்தேகம்
இருக்கிறது. சரசவாணி எவ்வளவு பெரிய புத்தி சாலி என்று நான் எண்ணிப்
பார்க்கிறேன்... தன் கணவரை சன்யாசியாக்க வந்தவரை, அவளும் கொஞ்ச காலம்
சம்சாரியாக்கிப் பார்த்து விட்டாள்! அதனால் நீ கேட்டது சரியே. உண்மையில் ஜெயித்தது சரசவாணி தான்!”
“ஆனால் அது அப்படி இல்லையாமே? சங்கரர் அவளிடம் சொன்ன விளக்கத்தை
முழுசாகக் கேட்டீர்களா, இல்லையா? ஆத்மா மட்டும் தான் அவருடையது. உடல்
அமருகனுடையது. அனுபவித்தது அமருகனின் உடல் தானாம், அவருடைய ஆத்மா இல்லையாம்.”
இப்பொது முதல் கிளி மீண்டும் குறுக்கிட்டது. “அங்கே தான் என்னுடைய
சந்தேகம் ஆரம்பிக்கிறது. உடல் துய்த்து உணர்ந்ததை, அதிலிருந்து நீங்கிய பின் அந்த
உடலில் இருந்த ஆத்மா எப்படி நினைவு வைத்திருக்கும்? அது மட்டும் இன்றி, ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே வேறு வேறு இல்லை
என்று தானே இவர்களின் அத்வைதம் சொல்கிறது? அப்படியானால், உடல்கள் வேறு, ஆத்மாக்கள்
வேறு என்று எப்படி ஆகும்? அரசனின் உடலோடு அனுபவித்தால் என்ன, ஆண்டியின் உடலோடு
அனுபவித்தால் என்ன? எல்லாம் ஒன்று தானே? அதற்கு ஏன் இப்படி இன்னொரு உடம்பில்
போய்ப் புகுந்து கொள்வது, பிறகு மீண்டும் வெளியே வருவது என்று இப்படித் தேவை
இல்லாத சித்து வித்தைகளில் எல்லாம் இறங்கி, இரண்டு உடம்புகளை இம்சைப் படுத்த வேண்டும்?
ஊரார் அபவாதம் பேசக் கூடாதே என்று நினைத்து அப்படிச் செய்ததாய் அவர் வாதிடக்
கூடும். ஆனால், ஒரு முற்றும் துறந்த துறவிக்குத் தன்னைப் பற்றிப் பிறர் என்ன பேசுகிறார்கள் என்ற கவலை எதற்கு? தனது உடல்
பரிசுத்தமாய் இருக்கிறது என்று உலகத்துக்குக் காண்பித்துக் கொள்ள வேண்டியது ஒரு சன்யாசிக்கு அவசியமா என்ன?”
இதைக் கேட்டு, ‘என்னவோ போ..எனக்கு எதுவுமே நியாயமாய்ப் படவில்லை. இந்த விளையாட்டில், ஒன்றுக்கு இரண்டு பெண்கள்
தங்கள் சந்தோஷங்களைப் பறிகொடுத்தது தான் கடைசியில் கண்ட பலன்.” என்று இரண்டாவது கிளி
விரக்தியோடு அலுத்துக் கொண்டது.
“ஒருத்தி சரசவாணி, புரிகிறது. இன்னொருத்தி யார்?” என்று கேட்டது
மூன்றாவது கிளி.
“அமருகனின் மனைவியைச் சொல்கிறேன். அவளது செத்துப் போன கணவனைப் பிழைக்க
வைத்து, அவள் இழந்த சந்தோஷத்தைத் திரும்பக் கொடுத்து, மீண்டும் கொஞ்ச
காலத்துக்குள்ளேயே அதை அவளிடமிருந்து பறித்து..” என்று இதற்கு முன்னால் பேசிய கிளி
பெருமூச்சு விட்டது.
“நியாயமாய் சரசவாணி இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடம் எழுப்பி இருக்க
வேண்டும். ஆனால் அவள் ஏன் கேட்க வில்லை?”
“அதனால் என்ன? அவள் கேட்ட கேள்விகளைக் காட்டிலும், கேட்காத கேள்விகளே
அதிக சக்தி உள்ளனவாக இருக்கின்றன. ஆகவே, வாதம் இன்னும் முழுமை அடையவில்லை.”
இப்போது எல்லாக் கிளிகளும் ஒரே குரலில் இப்படிக் கிறீச்சிட்டன. “ஆமாம்,
நீ சொல்வது சரி. மண்டனர் தோற்ற போது, சரசவாணி என்ன சொன்னாள்? ‘அவரில் பாதி நான்.
என்னையும் வெல்லுங்கள்..’ என்று சொல்லி, மண்டனர் கேட்காத கேள்விகளை அவள் கேட்டாள்.
இப்போது, அதே போல் அவரைத் தடுத்து
நிறுத்தி நாமும் கேட்போம்” என்றபடி, அவை மண்டனரின் கைகளைப் பிடித்தபடி வாசலை
நெருங்கிக் கொண்டிருக்கும் சங்கரரை நோக்கி விளித்துப் பின்னாலிருந்து பெரிதாய்
அறைகூவல் விட்டன: “ஒ, சன்யாசியே! நில்லுங்கள். நாங்கள் சரசவாணியில் பாதியும்
இல்லை, காலும் இல்லை. முழுசுமே நாங்கள் தான் அவள்; அவள் தான் நாங்கள். அவள்
கேட்காமல் விட்ட கேள்விகளை நாங்கள் கேட்கிறோம். அவற்றுக்கு பதில் சொல்லி,
முடிந்தால் எங்களையும் வாதத்தில் ஜெயித்து விட்டு, அப்புறமாய் மண்டனரைக் கூட்டிச்
செல்லுங்கள்..”
இது வரை கிளிகளின் இந்த சம்பாஷனையைக் கேட்டும் கேட்காதவர் போல் மௌனமாக
அந்த இடத்தைக் கடந்து வாசலை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த சங்கரர் அவை
கடைசியாய்ச் செய்த சங்க நாதத்தில், ஒரு கணம் திகைப்பு மேலிடச் சட்டென்று நின்றார்.
இது யாருடைய குரல், சரசவாணியுடையதா, கிளிகளுடையதா, அல்லது இரண்டும் கலந்த கலவையா?
சங்கரர், தவிர்க்க மாட்டாமல் பின்னால் திரும்பிப் பார்த்தார். மண்டனரும் ஓர்
அனிச்சைச் செயலாய்த் திரும்பினார்,
பின்னால், கிளிகள் வாசம் செய்யும் வாசல் கூடத்தில், அவை பேசிய
அடையாளமே சிறிதுமின்றி, ஓர் அசாதாரண
நிசப்தம் நிலவியது. எல்லாக் கிளிகளும் இப்போது சிலைகளாய் உறைந்து போயிருந்தன. மண்டனரின் கண்கள் அந்த இடத்தில் அவசரமாய் சரசவாணியைத்
தேடின. அங்கே அவள் அந்தக் கிளிகளுக்கு
நடுவே. தானும் சிலையாய் உறைந்து
நின்றிருந்தாள்.
---------------------------
(மாதவ வித்யாரண்யர் இயற்றிய ‘ஸ்ரீ சங்கர விஜய’த்தில், எட்டு-ஒன்பதாவது
அத்தியாயங்களில் வரும் சங்கரர், மண்டனமிஸ்ரர், சரசவாணி- விவாத சம்பவங்களைப் பின்புலமாய் வைத்து எழுதப் பட்டது.)
-(கணையாழி, மே, 2017)