Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, May 27, 2017

என்றாவது ஒரு நாள்...

மூலம்: கேப்ரியல் கார்சியா மார்க்கஸ்
(ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஏ.ராம்)
               
(உலகப் புகழ் பெற்ற கொலம்பிய எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கிஸ் ‘மாய யதார்த்தம்’ என்னும் உத்தியுடனேயே அதிகம் தொடர்பு படுத்தி அறியப் பட்டிருந்தாலும், அவர் அந்த பாணியிலிருந்து விலகி  யதார்த்தமாய் எழுதிய சிறுகதை இது. பிறர்க்கு வலிகளையும்  வேதனைகளையும் உண்டு பண்ணியே பழக்கப் பட்ட, ஊழல் பேர்வழியான உள்ளூர் நகராட்சி மேயர் ஒருவருக்கு, தன் பங்குக்கு வலி என்றால் என்ன, ரணம் என்றால் என்ன என்பதைச் சிலநாட்களுக்காவது உணரவைத்துத் திருப்தி அடையும் ஒரு பல் மருத்துவரின் நூதனமான பழி தீர்க்கும் படலத்தைப் பேசுகிற கதை. எந்த அலங்காரங்களும் இல்லை., வார்த்தைகளின் விரயம்  இல்லை.  மிக மிகக் குறைவான  மொழிப் பிரயோகத்தில் வெளிப்படும் இந்தப்  படைப்பு, இதன் அசாதாரண மொழிச் சிக்கனத்தையும் மீறித் தான் சொல்ல வருகிற செய்தியை முகத்தில் அறைகிற மாதிரி எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சர்வ சாதாரணமாய்ச்  சொல்லிவிட்டுச் சென்று விடுகிறது. அதுவே இந்தப் படைப்பின் தனித் தன்மையாகவும் ஆகி விடுகிறது. ஆங்கிலத்தில் இது ‘one of these days’ என்ற தலைப்பில்  மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.)

ந்தத் திங்கள் கிழமை மழையின்றி வெதுவெதுப்பாய் விடிந்தது. முறையான மருத்துவப் பட்டம் எதுவுமற்ற பல் மருத்துவர் ஆரிலியோ எஸ்கோவர் விடிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் என்பதால், சரியாய் ஆறு மணிக்குத் தன் அலுவலகத்தைத் திறந்தார். இன்னமும் பிளாஸ்டர் அச்சிலேயே பொருத்தி இருந்த  சில பொய்ப்பற்களைக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து  வெளியில் எடுத்தார். பின், கை நிறையப் பல் சிகிச்சைக் கருவிகளை அள்ளி எடுத்து, அவற்றின் நீளங்களுக்கு ஏற்றவாறு, காட்சிக்கு வைப்பது போல் அவற்றை மேஜையின் மீது வரிசையாய்ப் பரப்பி வைத்தார். அவர் ஒரு காலர் இல்லாத, வரிவரியான மேல்சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார். அதன் கழுத்துப் பகுதி   தங்கக் குமிழால் மூடியிருந்தது. பின்புறத் தோளிலிருந்து தொங்கும், பெல்ட்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் கால் சட்டையையும்  மாட்டிக் கொண்டார். நிமிர்ந்த ஒல்லியான உடல் வாகு அவருடையது. அவரது பார்வை அபூர்வமாய் இருந்தது. அது பார்ப்பதற்குக் காது கேட்காதவர்களின் பார்வையைப் போல் தோன்றியது.    

மேஜை மீது எல்லா உபகரணங்களும் தயார் நிலையில் இருக்க, அவர் பல் நோயாளிகளுக்கான  இருக்கையை  நோக்கித் துளைப்பானை(Driller) இழுத்து உட்கார்ந்து கொண்டு, செயற்கைப் பற்களைப் பாலீஷ் பண்ணத் தொடங்கினார். தான் என்ன செய்கிறோம் என்ற சிந்தனையே அற்றவராய் அவர் தன் பாட்டுக்கு, தேவை இல்லாத தருணங்களிலும்  துளைப்பானைக் கால்களால் பெடல் செய்து கொண்டு, இடைவிடாமால் ஒரே சீராக வேலை செய்தார்.

எட்டு மணிக்குப் பிறகுக் கொஞ்ச நேரம்  தன் வேலையை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியாய் வெளியே ஆகாயத்தை ஏறிட்டு நோக்கினார். அப்போது, பக்கத்துக்கு வீட்டுக் கூரை முகட்டின் மேல் இரண்டு பருந்துகள் ஆழ்ந்த யோசனையோடு கூடித் தங்கள் உடம்பை வெய்யிலில் உலர்த்திக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். பிற்பகல் உணவுக்கு முன் மறுபடியும் மழை வரக் கூடும் என்று யோசித்த படியே அவர் வேலையைத் தொடர்ந்தார். அவரது பதினோரு வயதுப் பையனின் கீச்சுக் குரல் அவரது கவனத்தைக் கலைத்தது.

“அப்பா”

“என்ன?”

“மேயர் வந்திருக்கார். நீங்க அவர் பல்லைப் பிடுங்குவீங்களான்னு கேக்கறார்.”

“நான் வீட்டில இல்லேன்னு  என்று அவர்கிட்டச் சொல்லிடு.”

அவர் தங்கப் பல்லைப் பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அந்தப் பற்களை முன்னங்கை தூரத்தில் பிடித்துக் கொண்டுப் பாதி மூடிய கண்களால்  பரிசோதித்தார். சின்ன வரவேற்பறையிலிருந்து அவரது மகன் மீண்டும் உரக்கக் குரல் கொடுத்தான்.

“நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு  அவருக்குத் தெரியும்னு சொல்றார். ஏன்னா  நீங்க பேசறது  இங்க அவருக்கு நல்லாவே  கேக்குது!”
பல் மருத்துவர் தங்கப்பல்லைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த வேலையை முழுதுமாக முடித்து, அதை மேஜை மீது வைத்த பின்னர் அவர் இப்படிச் சொல்லிக் கொண்டார். “பரவாயில்ல. இது வரைக்கும் நல்லாவே  வந்திருக்கு..”

அவர் துளைப்பானை மீண்டும் இயக்கினார். அவர் இன்னும் வேலை செய்வதற்காக வைத்திருந்த நிறையப் பல் வரிசைகளை ஓர் அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்துத் தங்கத்தைப் பாலீஷ் பண்ண ஆரம்பித்தார்.

“அப்பா”

“என்ன?”

அவர் தன் குரலின் தொனியை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை.

“நீங்க அவர் பல்லை எடுக்காமப் போனா, உங்களைச் சுட்டுடுவேன்னு சொல்றார்..”

அவர் எந்தச் சலனமும் இன்றி அமைதியாய், துளைப்பானைப் பெடல் பண்ணுவதை நிறுத்தி விட்டு, அதை இருக்கையிலிருந்து விலக்கித் தள்ளினார். மேஜையின் கீழ்-டிராயரை முழுதுமாக வெளியே இழுத்தார். அதில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. அவர் சொன்னார்: “சரி. அவரை என்னை வந்து சுடச் சொல்லு.”

கை மேஜையின் விளிம்பில் அழுந்திய நிலையிலேயே இருக்க, அவர் இருக்கையைக் கதவுக்கு எதிர்ப்புறமாக உருட்டி நகர்த்தினார். மேயர் கதவுக்கருகில் நின்று கொண்டிருந்தார். அவர் தன் கன்னத்தின் இடது புறத்தை நன்றாக மழித்திருந்தார்.. ஆனால், வீங்கிப் போய் வலி கண்டிருந்த  அவரது  வலது கன்னம் ஐந்து நாட்களாய் மழிக்கப் படாத தாடியோடு காட்சி அளித்தது. மருத்துவர் மேயரின் சோர்ந்த விழிகளில் பல இரவுகளின் வேதனையையும் அவநம்பிக்கையையும் பார்த்தார். அவர் டிராயரை மூடி விட்டு, மென்மையான குரலில் சொன்னார்;

“உக்காருங்க”

“குட் மார்னிங்” என்றார் மேயர்.

“மார்னிங்” என்று சொன்னார் மருத்துவர்.

பல் சிகிச்சைக் கருவிகள் வெந்நீரில் கொதித்துக் கொண்டிருந்தன. மேயர் தன் பின்தலையைப் பல்-நாற்காலியின் ‘தலைதாங்கி*யில் சாய்த்துக் கொண்டபடியே, தன்னைச் சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். அவரது மூச்சுக் காற்று சில்லிட்டிருந்தது.

அது ஓர் ஏழ்மையான அலுவலகம்; ஒரு பழைய மர இருக்கை; பெடல் துளைப்பான்; பீங்கான் பாட்டில்கள் வைக்கப் பட்ட கண்ணாடிப் பெட்டி. இருக்கைக்கு எதிர்ப்புறத்தில் தோள் உயரத் திரைச்சீலையோடு கூடிய ஒரு ஜன்னல்.

மருத்துவர் தன்னை சமீபிப்பதை உணர்ந்த மேயர், தன் குதிகால்களை முழு பலத்தையும் பிரயோகித்து  அழுத்தமாய் ஊன்றிக் கொண்டு வாயைத் திறந்தார். ஆரிலியோ எஸ்கோவர் மேயரின் தலையை விளக்கை நோக்கித் திருப்பினார். சொத்தைப் பல்லை ஆராய்ந்த பிற்பாடு, விரல்களில் அளவான அழுத்தத்தைப் பிரயோகித்து மேயரின் தாடையை மூடினார்.

“அனஸ்தீஷியா இல்லாமத்  தான் இதச் செய்யணும்..” என்றார் அவர்.

“ஏன்?’

“ஏன்னா, உங்களுக்குச் சீழ் கோத்திருக்கு.”

மேயர் அவரது கண்களுக்குள் நோக்கினார். “சரி” என்று சொல்லி விட்டுப் புன்னகைக்க முயன்றார். மருத்துவர் திரும்பப் புன்னகைக்கவில்லை. நன்றாகக் கொதிக்க வைத்துக் கிருமிகள் அழிக்கப் பட்ட கருவிகளைப் பாத்திரத்தோடு எடுத்துக் கொண்டு வந்து, மேஜை மீது வைத்தார். இப்போதும் எந்த வித அவசரமும் இன்றி, அந்தக் கருவிகளைக் குளிர்ந்த இடுக்கியால் பற்றி வெளியே எடுத்தார். பிறகு உமிழ்கலத்தைத் (spitton) தன் ஷூவின்  முனையால் தள்ளி விட்டு, எழுந்து போய் வாஷ் பேசினில் கை கழுவினார். அவர் இத்தனையையும் மேயரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே செய்தார். ஆனால், மேயர் மட்டும் தன் விழிகளை மருத்துவரின் மீதிருந்து அகற்றவே இல்லை.

அது கீழ்த்தாடைக் கடைவாய்ப் பல். பல் மருத்துவர் தன் கால்களை அகட்டி நின்று கொண்டார். அந்தப் பல்லை சூடான இடுக்கிகளால் இறுகப் பற்றினார். மேயர்  நாற்காலியின் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டார். பலம் கொண்ட மட்டும் கால்களை ஊன்றித் தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டார். அவரது அடி வயிறு சில்லிட்டு உறைகிற மாதிரி இருந்தது. ஆனாலும் அவர் சத்தம் எதுவும் எழப்பவில்லை. மருத்துவர் தன் மணிக்கட்டுகளை மட்டும் அசைத்தார். குரலில் கோபத்தையும் வெறுப்பையும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கடுமை கலந்த கரிசனத்தை வரவழைத்துக் கொண்டார்.

“இப்ப நீங்க செத்துப்போன எங்க இருபது பேருக்கான விலையக் கொடுக்கப் போகிறீங்க.”

மேயர் தன் தாடை எலும்புகள் நொறுங்குகிற மாதிரி உணர்ந்தார். அவர் கண்களில் நீர் பெருகி நிரம்பியது. பல் ஒரு வழியாய் வெளியே வந்து விட்டதை உறுதிப் படுத்திக் கொள்கிற வரை அவர் மூச்சை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். தன் கண்ணீர்த் திவலைகளின் ஊடாக அந்தப் பல்லைப் பார்த்தார். அந்தப் பல், அவர் ஐந்து இரவுகளாக அனுபவித்த வலிக்கும் வேதனைக்கும் துளியும் சம்பந்தமற்ற ஏதோ ஓர் அந்நிய வஸ்துவைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

முகம் வியர்த்துப் பெருமூச்சு வாங்கிய நிலையில் துப்புவதற்காக  உமிழ் கலத்தை நோக்கிக் குனிந்தவர், தன் சட்டைப் பித்தான்களைக் கழற்றி விட்டுக் கொண்டு, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுப்பதற்காகக் கைகளை நீட்டித் துழாவினார்.  மருத்துவர் அவரிடம் ஒரு சுத்தமான துணியை நீட்டினார்.

“உங்க கண்ணைத் துடைச்சுக்குங்க”

மேயர் அப்படியே செய்தார். அவர் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர் கைகளைக் கழுவிக் கொண்டிருந்த போது, அவர் உடைந்து கொண்டிருக்கும் மேற்கூரையையும், சிலந்தி முட்டைகளோடு கூடிய ஓர் அழுக்கேறிய சிலந்தி வலையையும், இறந்த பூச்சிகளையையும் கண்டார். மருத்துவர் தன் கைகளை உலர்த்திய படியே திரும்பி வந்தார். “படுக்கப் போங்க. அதுக்கு முன்னால உப்புத் தண்ணியால வாய்  கொப்புளியுங்க.” என்று அவர் சொன்னார். மேயர் எழுந்து நின்றார். வழக்கமான ராணுவ சல்யூட்டுடன், “குட் பை” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பித்தான்களைத் திரும்ப மாட்டிக் கொள்ளாமலேயே காலை நீட்டி வாசலை நோக்கி நடந்து போனார்.

“‘பில்’லை அனுப்பி வையுங்க”

“யாருக்கு, உங்களுக்கா, இல்ல ஊராட்சிக்கா?”

“ரெண்டு எழவும் ஒண்ணு தான்..”
                              ____________________

-தளம், டிசம்பர், 2015







Friday, May 26, 2017

சரசவாணியின் கிளிகள்


மாகிஷ்மதி நகரத்தில் கிளிகள் பேசும் வீடு எது என்று யாரைக் கேட்டாலும் சட்டென்று வழி சொல்வார்கள். அந்த அளவுக்கு அந்த வீட்டின் கிளிகள் பிரசித்தம். சுற்றிலும் அழகான தென்னந்தோப்புகளும் குளிர்ந்த தடாகங்களும் சூழ்ந்த அந்த நகரின் அகன்ற தெருக்கள் ஒன்றில் தான் மண்டன மிஸ்ரரின் மாளிகை போன்ற வீடு இருந்தது. அந்த வீட்டின் வாசல் கூடத்தில்  உத்தரத்தில் தொங்கும் கூண்டுகளிலிருந்து கிளிகளின் பேச்சரவம் எந்த நேரமும் கேட்ட வண்ணம் இருக்கும். அவற்றை சாதாரணப் பாமரக் கிளிகள் என்று யாரும் நினைத்து விடவேண்டாம். அவை பேசும் கிளிகள். அதுவும் வெறும் வெட்டிப் பேச்சு அல்ல. மாறாக அறிவார்த்தமான வேதத் தர்க்கங்களைப் பேசும் கிளிகள் அவை. பூர்வ மீமாம்சத்தில்  இருந்து, அந்த வீட்டின் அழகான எஜமானி சரசவாணி தன்  மதுரக் குரலில் அவற்றுக்குப் புகட்டியிருக்கும் மந்திரங்களையும் சுலோகங்களையும் அவளோடு போட்டி போட்டுக் கொண்டு அவையும் கூடச்  சொல்லும்.

மண்டன மிஸ்ரர் இல்லாத நேரங்களில் எல்லாம் சரசவாணிக்குத் துணை அந்தப் பேசும் கிளிகள் தான். சொன்னதை  அப்படியே திரும்பிச் சொல்லக் கூடியவை என்று தான் கிளிகளைப் பற்றிக் காலம் காலமாகக் கதைகளில் எழுதி இருக்கிறார்கள். ஆனால், இவளது கிளிகளோ ஒரு படி மேலே போய் இவள் சொல்லாதவற்றையும் ஊகித்துச் சொல்லும். அவளோடு அந்தரங்கமாய் உரையாடும். உரிமையோடு கேள்விகள் கேட்கும். அவள் சோர்ந்து போய் இருக்கிற நேரங்களில் வேதக் கவிதைகளில் இருந்து சுவாரஸ்யமாய் ஏதாவது ஒன்றை எடுத்து விட்டு அவளை உற்சாகப் படுத்தும்.

உண்மையில் அறிவற்ற அற்ப ஜந்துக்களான கிளிகளுக்கு இதெல்லாம் சாத்தியம் தானா என்று சரசவாணியே நம்பாமல் ஆச்சரியம் கொண்ட தருணங்களும் உண்டு. ஒரு வேளை இந்தக் கிளிகள் பேசும் விஷயமே தானாய்க் கற்பித்துக் கொண்ட பிரமைகள் தானோ என்கிற மாதிரி அவளது பகுத்தறிவு அவளை யோசிக்க வைத்திருக்கிறது. அவளது உள்ளுக்குள் இருந்து எழுகிற ஓசைகள் தான் வெளியில் அந்தப் பறவைகளின் வாய்களில் இருந்து இப்படிக் கிளிப் பேச்சாய்ப் புறப்பட்டு வருகின்றனவோ? அவ்விதம் ஆனால் அந்தக் கிளிகள் அவளிடம் அந்தரங்கமாய் உரையாடுவது வெறும் மாயை தானா?  ச்சே,ச்சே..அப்படி இருக்க முடியாது. இந்த மாயா வாதம். இப்போது புதிதாய்க் கிளம்பி இருக்கும், வேதாந்திகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் உத்தர மீமாம்சகர்களுடனேயே இருந்து விட்டுப் போகட்டும். அவளுக்கு வேண்டாம். அவள் பூர்வ மீமாம்சகி.  இந்த வாழ்க்கையையும் இதன் நித்திய நெறிகளையும் சுக துக்கங்களையும் நிஜங்களாக ஏற்று நேசிக்கிறவள்.

கொஞ்ச நாட்களாகவே சரசவாணியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தெரிந்தது. எப்போதும் மலர்ந்த நிலையிலேயே காணப் படும் அவள் முகம் இப்போதெல்லாம் வாடி, ஒரு நிரந்தர சோகத்தை எதிர்கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிற மாதிரிப் பிரகாசம் இழந்திருந்தது.  காலையில் எழுந்து கணவர் மண்டன மிஸ்ரரின் நித்திய ஹோம அனுஷ்டானங்களுக்கு .வேண்டியவற்றைத் தயார் செய்வதிலிருந்து மாலை வேளைகளில் அவரோடு கூட அமர்ந்து  அவரது மாணவர்களுக்கு ஜைமினியின் மீமாம்ச சூத்திரங்களை விளக்கிச் சொல்வது வரை எல்லா வேலைகளையும் சிரத்தையின்றி ஒரு இயந்திர கதியில் அவள் செய்வதாய்த் தோன்றியது. அவள் ஆசையாய்ப் பேசிக் கொஞ்சி மகிழும் அந்தக் கிளிகளுடன் அவள் செலவிடும் நேரம் கூட வெகுவாய்க் குறைந்து அவள் தனிமையை நாடும் நேரம் அதிகரித்திருந்தது.

அன்றைக்கு மாலை கிளிகளுக்கு உணவளிக்க சரசவாணி கூண்டுகளை நெருங்கிய போது எல்லாக் கிளிகளும் ஏக காலத்தில் ‘சரச வாணி..சரச வாணி..” என்று அவள் பெயரை அப்போது தான் முதல் முதலாக உச்சரிக்கிறார்ப் போலக் கிறீச்சிட்டுக் கத்தின. சரசவாணி எந்த சுவாரஸ்யமும் காட்டாமல், “ஆமாம் எனதருமைக் கிளிகளே.. நான் சரசவாணி தான்.அதற்கென்ன எப்போது?” என்று கேட்டுக் கொண்டே பழங்களையும் கொட்டைகளையும் ஒவ்வொரு கூண்டிலும் வைத்துக் கொண்டே போனாள்.

கிளிகள் அவள் சொன்னதைக் கேட்காதவை போல் தங்களுக்குள் பேசிக் கொண்டன.

“கொஞ்ச நாளாகவே நம் சிநேகிதி சந்தோஷமாய் இல்லை, கவனித்தாயா?’ என்று ஒரு கிளி இன்னொரு கிளியிடம் சரசவாணியின் காதுபடக் கேட்டது.

சரசவாணிக்குக் கிளிகளின் அந்தரங்க பாஷை தெரியும். அவளின் அந்தரங்க பாஷை அவளது கிளிகளுக்கும் தெரியும்.

இன்னொரு கிளி பதில் சொன்னது. “இவள் இப்படி மகிழ்ச்சி இழந்து நாம் பார்த்ததே இல்லை. காரணம் என்னவாக இருக்கும்?’

இப்போது வேறொரு கூண்டிலிருந்து மூன்றாவது கிளி உரையாடலைத் தொடர்ந்தது.

“எல்லாம் போன மாசம், கள்வனைப் போல் சுவரேறிக் குதித்து, கூடத்தில்  சிராத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் பார்க்காமல் உள்ளே நுழைந்து மண்டன மிஸ்ரரரிடம் வாத பிட்சை கேட்டு அடம் பண்ணினாரே ஒரு இளம் சன்யாசி, ஞாபகம் இருக்கிறதா? அவரால் தான் எல்லாப் பிரச்சனையும்..நம் எஜமானி அம்மாளை சோகம் பீடித்ததற்கும் அந்த மனிதரே  காரணம்..”

இது வரைக்கும் கிளிகளின் சம்பாஷனை காதில் விழாத மாதிரித் தன் காரியத்தில் ஈடுபட்டிருந்த சரசவாணி இந்தக் கட்டத்தில் குறுக்கிட்டு, “ஏய் அதிகப் பிரசங்கிகளே,,சும்மா இருங்கள்..” என்று பொய்க் கோபத்துடன் அவற்றை அதட்டினாள். 

எஜமானியின் பொய் அதட்டலுக்கு பயப்படுகிற மாதிரிச் சட்டென்று மௌனமான கிளிகள், ஒரு நிமிஷம் தாமதித்து மீண்டும் ஏக காலத்தில் “சரசவாணி..சரசவாணி,,” என்று அவள் பெயரை உச்சரித்துக் கூச்சல் இட்டன..

சரசவாணிக்குச் சிரிப்பு வந்தது.

கிளிகளின் கூண்டுகளை செல்லமாய்ச் சீண்டி ஆட்டி விட்டு விட்டு, “உங்களுக்கு என்ன வேண்டும் இப்போது?” என்று அவற்றைக் கேட்டாள்.

“நாளைக்கு அடுத்த சுக்ல பட்சம் தொடங்குகிறது. சரியாய் ஒரு மாசக் கெடு முடிகிறது. அந்த சன்யாசி நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டு பிடித்துக் கொண்டு மீண்டும் திரும்ப வந்து உன்னை வாதத்தில் ஜெயிக்கப் போகிறார் என்று நம்புகிறாயா, சரசவாணி?” என்று முதல் கிளி அவளிடம் கேட்டது.

“நீங்கள் ரொம்பவும் பொல்லாத கிளிகளாக இருக்கிறீர்கள், வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் நிறைய இடம் கொடுத்து விட்டேன். போலிருக்கிறது..” என்று மீண்டும் பொய்க் கோபம் காட்டினாள் சரசவாணி.

“எங்களை எத்தனை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறாய், நீ? எத்தனை சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன்னிடத்தில் ஒரு பிரதி உபகாரமாய் நாங்களும் பதிலுக்கு அக்கறை காண்பிக்க வேண்டாமா?” என்று அவளை சமாதானம் செய்கிற தொனியில் குரல் கொடுத்தது நான்காவது கிளி.

சரசவாணி இப்போது மௌனமானாள். கிளியின் பேச்சு அவளை ஆழ்ந்த யோசனையில் மூழ்கடித்தது. அங்கிருந்து அகன்று, படி ஏறி மாடத்துக்குப் போனாள். உள்ளே சலனமிடும் வெவ்வேறான எண்ணங்களோடு சாளரம் வழியே வெளி உலகைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

தூரத்தில் நர்மதை எந்த சலனமும் இன்றி ஓடிக் கொண்டிருந்தது. அதில் படகுகள் மிதந்து கொண்டிருந்தன. படகோட்டிகள் எந்தக் கவலையும் இன்றி அவர்களுக்கு இஷ்டமான பாட்டுகளை உரத்த குரலில் பாடிய படி ஜனங்களை ஏற்றிக் கொண்டு நதியைக் கடந்து போய்க் கொண்டிருப்பது அங்கிருந்து நிழல் படலங்கலாகத் தெரிந்தன.


சரசவாணி வேறு புறம் திரும்பி நோக்கினாள். அங்கே தடாகத்தில் நீலோத்பலங்கள்  மெல்ல வாய் நெகிழ்ந்து மலரத் தொடங்கி இருந்தன. அவை இரவின் வருகையை சந்தோஷமாக எதிர்கொள்ளத் தங்களை தயார் படுத்திக் கொண்டு விட்டன. நிறையச் சக்ரவாகங்கள் மனிதர்களுக்குண்டான  எந்தக் கூச்சங்களும் இன்றி, இணை இணையாய், ஒன்றை ஒன்று பிரியாமலும் ஒன்றோடு ஒன்றாக உரசிக் கொண்டும் தடாகத்தின் வெளிச்சம் குறைந்த பகுதிகளை நோக்கி நீந்திப் போய்க் கொண்டிருந்தன.

சரசவாணி பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சின் போது விம்மித் தணிந்த அவளது ஸ்தனங்களை ஒரு நொடி அவளே கவனித்து விட்டுச் சட்டென்று தன் விழிகளை வெட்கத்தோடு உயர்த்திக் கொண்டாள். அவள் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் தாபங்களும், மோகங்களும் ஆசைகளும் அன்றோ இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்து சிருஷ்டியை என்றும் உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருக்கின்றன?. இந்தச் சக்ரவாகங்கள் செய்த பாக்கியம் கூட நாம் செய்ய வில்லை. இவற்றுக்கு யாரோடு வாதம் செய்து எந்த சித்தாந்தத்தை நிறுவ  வேண்டும் என்று கவலை? சக்ரவாகங்கள் எப்போதாவது சன்யாசம் பூணுவதைப் பற்றி யோசித்திருக்குமா? சநதோஷிப்பதும் பெட்டைகளோடு கூடிக் குலாவிச் சுகித்திருப்பதுமே அவற்றின் இயல்பு. இயல்புகளைத் தொலைப்பது மனிதர்களுக்கு மாத்திரமே சாத்தியம்.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். வீட்டின் பணிப் பெண், விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரிகளைச் சரி செய்து அவற்றை ஒவ்வொன்றாய் ஏற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. சந்தி அனுஷ்டானங்களைச் செய்வதற்காக நதிக் கரைக்குப் போன மண்டன மிஸ்ரர் சற்று நேரத்தில் திரும்பி விடுவார். அவரிடம் இன்றைக்கு இரவு நிறையப் பேச வேண்டும். ஒரு வேளை அவரோடு இப்படி ஏகாந்தமாய்ப் பேசும் இரவு இதுவே கடைசியாகவும் இருக்கக் கூடும். அவருக்குள்ளும்  இத்தகைய எண்ணங்களும் கவலைகளும் ஓடாமலா செய்யும்? அவரை அவள் நன்கு அறிவாள். ஞான ரீதியாகவும் தேக ரீதியாகவும் அவளிடம் அவர் பெற்ற ஆனந்தங்களை அவரால் எப்படி அத்தனை எளிதில் துறந்து விட முடியும்? ஆனால், நாளைக்கு அந்த சன்யாசி சங்கரர் திரும்ப வந்து விட்டால் என்ன செய்வது? அவர் கட்டாயம் வந்தே விடுவார் என்று ஏன் என் மனம் இவ்வளவு உறுதியாய் நம்புகிறது?

கிட்டத்தட்ட நாற்பது நாற்பத்தைந்து நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை, மண்டன மிஸ்ரர் தன் வீட்டுக் கூடத்தில் ஹோமம் வளர்த்து, பிராமணர்கள் புடை சூழ  சிராத்தம் செய்து கொண்டிருந்த  சமயத்தில் ஓர்  இளம் சன்னியாசி கூடத்தில் வந்து அவர் முன்னே குதித்தார். .சிராத்த வேளையில் ஒரு சன்னியாசி, அதுவும் வெளி வாசல் கதவு மூடப் பட்டிருந்த நிலையிலும் இப்படி அத்து மீறி உள்ளே அதிரடியாகப் பிரவேசித்ததில் கோபம் கொண்ட மண்டன மிஸ்ரர், “யார் நீர்? எப்படி உள்ளே வந்தீர்?” என்று அதட்டலாய்க் கேட்டார்.

வந்தவர் எந்தப் பதட்டமும் இன்றி, “நான் சங்கரன். அத்வைதப் பிரசாரகன். ஆகாய மார்க்கமாக உள்ளே வந்தேன்..” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

“சுவர் ஏறிக் குதிப்பது உங்கள் ஊர் பாஷையில் ‘ஆகாய மார்க்கமாக’ வருவதோ?” என்று ஏளனமாய்ச் சிரித்த மண்டனர் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு வந்தவரிடம் பேசினார்.  “நான் சிராத்த காரியத்தில் இருக்கிறேன். இந்த வேளையில் வெளி மனிதர்களை உள்ளே அனுமதிப்பதோ அல்லது அவர்களிடம் பேசுவதோ பிதுர்க்களை கோபப்படுத்தும் செயல். என்ன வேண்டும் உமக்கு?”

“உமது குரு குமாரில பட்டரோடு வாதம் செய்வதற்காக அவரைப் பிரயாகையில் போய்ப் பார்த்தேன். ஆனால் அவர், பாவம் என்னிடம் வாதம் செய்யும் நிலையில் இல்லை. தன் பௌத்த குருவுக்குத் தான் துரோகம் செய்து விட்டதாக அவராக நினைத்துக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தன்னைச் சுற்றி உமியை நிரப்பி அதைத் தீயிட்டுக் கொளுத்தி, அந்தத் தணலில் தன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக வேகும்படித் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருந்தார். என்னால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சாவதற்கு முன், ‘மாகிஷ்மதியில் மீமாம்சத்தில் கரை கண்ட பண்டிதனான மண்டனமிஸ்ரன் என்று என் சிஷ்யன் ஒருவன் இருக்கிறான். அவனோடு வாதம் பண்ணி அவனை வெல். அவன் உன் அத்வைதத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அப்புறம் உலகமே அதை ஏற்றுக் கொள்ளும்’ என்று சொல்லி என்னை இங்கே அனுப்பி வைத்தார்.”

குரு குமாரிலரின் பெயரைக் கேட்டவுடன் மண்டனர் அமைதியானார். குமாரிலரின் கொடூரமான தற்கொலை முடிவில் மிகவுமே மனம் உடைந்து போன நிலையில் அவர்,  தன்  குருவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை உணர்வு உந்த, சங்கர சன்யாசியோடு வாதம் செய்ய ஒப்புக் கொண்டார்.

“யுத்தத்துக்கு அழைக்கப் படுகிற வீரனும், வாதத்துக்கு அழைக்கப் படுகிற பண்டிதனும் மாட்டேன் என்று மறுக்கக் கூடாது. அப்படி மறுத்தால் அவன் கோழையாகித் தோற்றவனாகி விடுவான், என் சித்தாந்தத்திலும் என் பாண்டித்யத்திலும் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இன்றைக்கு சிராத்த தினம் என்பதால், நான் வேறு எந்தச் செயலிலும் ஈடுபடுவது சாஸ்திர விரோதம். நாளைக்கு நாம் நம் வாதத்தைத் தொடங்கலாம்” என்று அவர் பதில் சொன்னார்.

சங்கரர் அதற்கு ஒப்புக் கொண்டார், ஆனால், வாதத்தின் முடிவில் மண்டனர் தோற்றால், அவர் அவரது குடும்பத்தைத் துறந்து சன்யாசம் மேற்கொண்டு தன் சீடராய் அத்வைதப் பிரசாரகத்துக்கு உறுதுணையாய்த் தன்னோடு கிளம்பி வந்து விட வேண்டும்’ என்று சங்கரர் நிபந்தனை விதித்தார். உடனே மண்டனர், “அப்படியானால் நீர் தோற்றால் இந்தக் காஷாயத்தைக் கழற்றி எறிந்து விட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சம்சாரியாக சம்மதிக்கிறீரா?” என்று திரும்பக் கேட்டார்.

‘ஆஹா, அதற்கென்ன. சம்மதம்” என்றார் சங்கரர்.

மண்டனர் ஏதோ ஒரு வேகத்தில் ரோஷம் மேலிட சங்கரரின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டு விட்டார்.

சங்கரர் இப்போது இன்னொரு நிபந்தனையைச் சொன்னார். “அப்புறம் உங்கள் மனைவி சரசவாணியும் உங்களைப் போலவே மகா பண்டிதையாமே? குமாரிலர் சொன்னார். அவரே நீதிபதியாய் நடுவில் இருந்து நம் வாதத்தைக் கவனித்துக் கடைசியில் யார் ஜெயித்தது என்று தீர்ப்புச் சொல்லவேண்டும் என்பது  குமாரிலரின் விருப்பம்..”

இப்படி இந்த ஆள் எதற்கெடுத்தாலும் குமாரிலர், குமாரிலர் என்று தன் குருவின் பெயரைச் சொல்லித் தன் கையைக் கட்டிப் போடுகிறாரே என்று மண்டனர் நினைத்தார். ஆனால். இவர் சன்யாசி. பார்த்தால் உண்மையான சன்யாசியாகவே தெரிகிறார். உண்மையான சன்யாசிகள் பொய் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் அன்றி, தன் மனைவியின் பாண்டித்யத்தை வந்தவர் சிலாகித்துப் பேசியதில் மண்டனருக்கு உள்ளூரப் பெருமிதமாகவும் இருந்தது.

மண்டனர் பின்னால் இருந்த தன் மனைவி சரசவாணியைக் கூப்பிட்டு, இந்த ஏற்பாட்டிற்கு அவள் சம்மதிக்கிறாளா என்று  கேட்டார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சரசவாணி தன் முகத்தில் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதியாய்த் தலையை ஆட்டினாள்.

மறுநாள் சொற்போர் தொடங்கியது. வாதம் பல நாட்கள் நடந்தது. யாரும் யாருக்கும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் மற்றவரை விடப் புத்திசாலியாகக் காட்சி அளித்தார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சரசவாணி ஓர்  உபாயம் செய்தாள். இருவர் கழுத்திலும் ஒரு மலர் மாலையை அணிவித்து, யார் கழுத்து மலர் மாலை சீக்கிரம் வாட்டம் கொள்கிறதோ அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னாள்.

துரதிர்ஷ்ட வசமாய் மண்டனரின் கழுத்தில் இருந்த மலர் மாலை முதலில் வாடத் தொடங்கியது. அதைக் கவனித்த சங்கரர் உற்சாகமாய் சரசவாணியிடம். “அங்கே பார்..உன் கணவரின் கழுத்து மாலை வாடத் தொடங்கி விட்டது. அவர் வாதம் பண்ணுகிற போது ரொம்பவே உணர்ச்சி வசப் படுகிறார். கோபம் வருகிறது. என் வாதங்களை மறுப்பதற்கான சரக்கு அவரிடம் குறைந்து வருவதாக அவர் பயப்படுவது போல் தெரிகிறது. நிபந்தனைப் படி அவர் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதே தர்மம்” என்றார்.

சரசவாணியின் முகம் இப்போது அந்த மலர் மாலையைப் போல் தானும் வாட்டம் கண்டது. அவள் இப்போது ஒரு முடிவுக்கு வந்தவள் போல், “இளம் சன்யாசியே, நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு நியாயமான நீதிபதியாய் நான் வைத்த நிபந்தனையை நானே மீறலாகாது. என் கணவர் தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரு மனைவி அவளது கணவரில் பாதி என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆகவே உமது ஜெயம் பாதி ஜெயம் தான். முழுமையானதல்ல. ஆகவே என்னோடும் வாதம் செய்து என்னையும் வெற்றி கொண்டால் தான் நீர் முழுசாய் வெற்றி அடைந்தவர் ஆவீர். எனது இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும்.” என்றவள், சங்கரரிடம் காம சாஸ்திரங்களில் இருந்து இக்கட்டான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினாள். இவற்றைக் கேட்கிற போது அவள் தன் முகத்தில் எந்த வித சங்கடங்களையோ தயக்கங்களையோ பிரதி பலிக்காமல் ஒரு ஆன்றவிந்த ஞானியைப் போல் தோற்றமளித்தாள்..

சங்கரர் ஒரு கணம் அதிர்ந்து போனவராய்த் தன் விழிகளைத் தரையை நோக்கித் தாழ்த்திக் கொண்டார். “நான் சன்யாசி. இந்த விஷயங்களில் எனக்கு அனுபவம் இல்லை, எனக்கு ஒரு மாசம் அவகாசம் கொடு. உன் கேள்விகளுக்கான பதில்களோடு வருகிறேன்..” என்றார். சரசவாணி லேசான முறுவலுடன் அதற்குச் சம்மதித்தாள்.


ரவு மூன்றாம் ஜாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சரசவாணி, மண்டனர் இருவருமே சயன அறையில் நித்திரை வராமல் வெகு நேரமாய் விழித்திருந்தனர். சரசவாணி மண்டனரின் அகன்ற மார்புகளின் குறுக்கே  தன் மிருதுவான கரங்களை வைத்திருந்தாள். மண்டனர் உத்தரத்தைப் பார்த்தபடிக் கட்டிலில் மல்லாந்து  படுத்திருந்தார். மேலே உள் கூரையில்  நிறைய, மர வேலைப்பாட்டுச் சிற்பங்கள், அறையின் மங்கிய அகல் வெளிச்சத்தில் நிழல் வடிவங்களாய்த் தெரிந்தன. ஒன்றில் இந்திரன் இந்திராணியின் இடையைத் தழுவிய கோலத்தில் வெள்ளை யானையின் மீது அமர்ந்து அவிர்ப்பாகம் வேண்டி யாகசாலையை நோக்கிப் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தான். இன்னொன்றில் தாருகா வனத்து ரிஷிபுங்கவர்கள்  தத்தம் பத்தினிகளோடு இந்திரனை வரவேற்கக் கைகளில் சோமரசத்தோடு காத்திருந்தனர்.

மண்டனர் தன் மீது படர்ந்திருந்த சரசவாணியின்  குளிர்ந்த கரங்களைத் தன் கைகளால் பற்றிய படிக் கூரைச் சிற்பங்களிடமிருந்து கண்களை அகற்றாமலேயே, “இந்த ஸ்பரிசத்துக்கு பதினாலு உலகங்களையும் பரிசளிக்கலாம், சரசவாணி..” என்று பெரு மூச்சோடு. அவளுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில் சொன்னார். சரசவாணி ஒருக்களித்துப் படுத்து அவரது தோள்களில் தன் தலையை வைத்துக் கொண்டாள்; “ஆண்கள் வாய் ஜாலங்களில் வல்லவர்கள், அவர்கள் தங்கள் மனைவி மார்களைப் புகழ்கிற  வார்த்தைகளை எல்லாம் அப்படியே சத்தியம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சந்தர்ப்பம் வாய்த்தால், அவர்களை அவர்கள் எப்பேர்ப்பட்ட தேவதைகளாக இருந்தாலும் அப்படியே உதறி விட்டு, யாராவது சன்யாசிகள் கூப்பிட்டால்  அவர்களோடு தாங்களும் சன்யாசிகளாகிப் புறப்பட்டுப் போய் விடுவார்கள்..”

மண்டனர் எழுந்து கட்டிலின் தலை பாகத்தில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். சரசவாணி தனக்குத் தானே, ”நாளையோடு அவர் கேட்ட ஒரு மாசக் கெடு முடிகிறது...” என்றாள்.

மண்டனர் அவளது தலையை அன்போடு கோதி விட்டார். “சங்கரர் திரும்பி வருவார் என்று நீ நம்புகிறாயா?” என்று அவளிடம் கேட்டார்.

சரசவாணி சொன்னாள். “இதையே தான் அந்தக் கிளிகளும் என்னிடம் கேட்டன. நீங்கள் இப்போது கேட்கிறீர்கள் இதல்லாம் என்னை சமாதானம் செய்வதற்காகச் சொல்கிற வார்த்தைகளாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அந்த சன்யாசியைப் பார்த்தால் சாதாரணமானவராய்த் தெரியவில்லை.. அதி புத்திசாலியாக இருக்கிறார்.. எப்படியும் பதில்களோடு அவர் நாளைக்கு வந்து விடுவார் என்றே என் உள் மனசு சொல்கிறது..”

மண்டனர் சில கணங்கள் அமைதியாய் இருந்தார். “அவர் சன்யாசி. அவரால் நீ கேட்ட விஷயங்களைப் பற்றி எப்படி அனுபவ பூர்வமாய்த் தெரிந்து கொண்டு வர முடியம்?” என்றவர் கொஞ்சம் தயக்கத்துடன், “ஆனால், சரசா..நீ ஒரு சன்யாசியிடம் அந்த மாதிரி தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியது சரியல்ல என்றே எனக்குப் படுகிறது..” என்றார்.

சரசவாணி இப்போது அவருக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுத்துக் கொண்டாள். “அந்த சன்யாசியே அதை தர்மசங்கடமாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.  “’நான் துறவி..என் நெறிகளுக்குள் வராதவற்றை நீ வாதத்தில் கொண்டு வருவது சரியில்லை’ என்று ஏன் அவர் சொல்லவில்லை? ‘ஒரு மாசம் அவகாசம் கொடு, அனுபவ ஞானத்தில் நான் அறிந்து கொண்டு வருகிறேன் என்று எதற்குச் சொல்ல வேண்டும்? எல்லாவற்றையும் அனுபவித்துத் தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று என்ன சட்டம் இருக்கிறது? உதாரணத்திற்கு  ஒருவனிடம் மரணத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் ‘நான் அனுபவித்துத் தெரிந்து கொண்டு வருகிறேன்’ என்று சொல்வானா? ஜைமினி சொல்லி இருக்கும் ஆறு பிரமாணங்களில் யூகமும், கேள்வி ஞானமும் கூட இருக்கிறதில்லையா?”

மண்டனருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவர் பேச்சின் திசையை மாற்ற விரும்பினார்.

“ஒரு விதத்தில் அதுவும் நல்லது தான்.  அறிவையும் சௌந்தர்யத்தையும் ஒன்றாய்க் குழைத்து உன் போன்ற ஒரு பெண்ணை ரொம்பவும் அபூர்வமாய் சிருஷ்டித்திருக்கிறான் பிரம்மா. சங்கரர் நாளைக்கு வராவிட்டால், இப்படி ஓர் அற்புத சிருஷ்டியோடு சேர்ந்திருக்கிற ஆனந்தத்தை நான் நிரந்தரமாய்த் தக்க வைத்துக் கொள்வேன். வந்து விட்டாலோ, உன்னை ஒரு மாசம் அதிகப்படியாய்த் தக்க வைத்துக் கொண்ட சந்தோஷத்தோடு அவருடன் புறப்பட்டுப் போவேன்..”

சரசவாணி இப்போது சற்றே சினம் கலந்த குரலில் அவரிடம் பேசினாள். “என் மீது இவ்வளவு ஆசை இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், ‘வாதத்தில் தோற்றால் சன்யாசம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று சங்கரர் விதித்த நிபந்தனைக்கு ஏன் ஒப்புக் கொண்டீர்கள்? அப்படி  ஒப்புக் கொள்வதற்கு முன்னால் என் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்று கூட ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை? சன்யாசிகளுக்கு  மட்டும் தான் அத்வைதத்தைப் பரப்புவதற்கான யோக்கியதை இருக்கிறதா? ‘சகலமும் ஒன்று’ என்று சொல்லிக் கொள்வது தானே அவருடைய அத்வைதம்? அப்படியானால் அத்வைதிகளுக்கு, ‘ஆண்-பெண், சன்யாசி-சம்சாரி என்கிற மாதிரியான பேதங்கள் எல்லாம் எப்படி வரலாம்? இவர் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே சன்யாசம் வாங்கிக் கொண்டு ஊர் ஊராகப் போய் அத்வைதம் பரப்புகிறார்; அதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், ஏற்கெனவே குடியும் குடித்தனமுமாய்த் தர்ம காரியங்களைப் பண்ணிக்  கொண்டு சந்தோஷமாய் இருக்கும் ஒரு சம்சாரியின் குடும்பத்தைக் கலைத்து ‘நீயும்  என்னை மாதிரிக் காஷாயத்தைக் கட்டிக் கொண்டு என்னுடன் புறப்பட்டு வா’  என்று சொல்வது என்ன நியாயம்? அப்படி என்ன என்னிடம் இல்லாத ஈர்ப்பை அந்த சன்யாசியிடம் கண்டீர்கள்?”

சரசவாணியை வாதத்தில் வெல்வது என்பது சுலபம் அல்ல என்று மண்டனர் நினைத்தார். அவள் கேட்கிற கேள்விகளுக்கு அவரிடம் விடை இல்லை. அவள் கேட்பது நியாயம் தான். இந்த ரூபவதியிடம் இல்லாத என்ன ஈர்ப்புசக்தி அந்த தலை மழித்த சன்யாசியிடம் இருக்கிறது? ஒரு வேளை குரு குமாரிலரின் பெயரைச் சொல்லி அவர் என் கைகளைக் கட்டிப் போட்டு  விட்டாரோ? அதெல்லாம் போகட்டும்; ஆனால், இவ்வளவு புத்தி சாலியான இவள் ஏன் எங்கள் இரண்டு பேர் கழுத்திலும் ஒரு மாலையை மாட்டிவிட்டு ‘மாலை வாடுவதை’ப் போய் ஒரு தீர்மானப் பொருளாய்  வைத்தாள்? மாலை என்று இருந்தால் அது எந்த சமயத்திலாவது வாடத்தானே செய்யும்? வாதம் என்று வந்தால் கோபம், வேகம் எல்லாம் நடுவில் வராமலா இருக்கும்? வாதத்தில் வாதிடுகிற விஷயம் முக்கியமா, இல்லை வாதிடுகிற விதம் முக்கியமா? அந்த சமயத்தில் இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் நேரம் பொருத்து அந்த சன்யாசிக்கும் கூடக் கோபம் வந்திருக்கக் கூடும்.

ஒரு வேளை, சன்யாசம் வாங்கிக் கொள்கிற நிபந்தனைக்கு அவளைக் கேட்காமலேயே நான் சம்மதித்தது அவளது தன்மான உணர்வை நோகச் செய்திருக்குமோ? அல்லது, நான் அவளுக்கு அலுத்து விட்டேனோ? போய்த் தொலையட்டும் என்று முடிவு செய்து விட்டாளோ?  ச்சே, ச்சே..அப்படி இருக்காது. அப்படி இருந்தால் என்னை இழப்பது குறித்து இவள் ஏன் இத்தனை சோகமும் கோபமும் கொள்கிறாள்? அது மட்டுமின்றி பெண்களுக்கே உரித்தான  மரபான தடைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு, இது வரை எங்கேயும் நடந்தறியாத அதிசயமாய், காம சாஸ்திரத்தைப் பற்றி ஒரு சன்யாசியிடம் பொது மன்றத்தில் தைரியமாய்க் கேள்வி கேட்டாளே, அந்தச் சாதுரியம் என்னை அவளிடம் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேகத்தால் தானே?

அதற்கப்புறம் அவர்கள் இருவருமே எதுவும் பேசவில்லை. மண்டனர் மௌனமாய், கட்டிலில் சாய்ந்த நிலையிலேயே, சாளரத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார். வெளியே இருள் மண்டி இருந்தது. தூரத்தில் அங்கங்கே மின்மினிகள் மாதிரிச் சிறு சிறு ஒளிப் புள்ளிகள் தென்பட்டன. அவை வீடுகளின் மாடங்களில் எரியும் அகல் விளக்குகளாக இருக்க வேண்டும். பகலில் இன்னும் சற்றுப் பின்னல் நீலக் கோடாய்த் தென்படும்  நர்மதை இந்த இருட்டில், இருக்கும் இடம் தெரியாமல் இருளோடு இருளாகக் கலந்திருந்தாள். பகல் முழுதும் அவள் மீது இடைவிடாமல் குறுக்கும் நெடுக்குமாக மிதந்து கடந்து செல்லும் படகுகள், இந்த மூன்றாம் ஜாமத்து இரவில், அவளது கரைகளில் கட்டப்பட்டு, அரவமின்றி ஓர் ஓரமாய் ஒதுங்கி முடங்கி இருக்கும். நிறையப் படகோட்டிகள் இப்போது அந்தப் படகுகளிலேயே கூடப் படுத்து உறங்கி இருப்பார்கள். பொழுது விடிந்தவுடன் அவர்கள் விழித்துக் கொண்டு, தங்கள் காலைக் கிரமங்களைக் கழித்த கையோடு, வழக்கம் போல் ஜனக் கூட்டத்தை ஏற்றிக்கொண்டு, பாட்டுப் பாடிய படியே எந்தக் கவலையும் இன்றி நர்மதையைக் கடக்கத் தொடங்கி விடுவார்கள். படகோட்டிகள் பாமரர்கள். எந்த சாஸ்திரமும் அறியாதவர்கள். ஆனாலும் நர்மதையைக் கடப்பதென்பது  அவர்களுக்கு எவ்வளவு சுலபமாக இருக்கிறது!

மண்டனர் பார்வையை அந்தத் திசையிலிருந்து விலக்கி சரசவாணியின் பக்கம் திருப்பினார். அவள் இப்போது அயர்ந்து உறங்கத் தொடங்கி இருந்தாள். மண்டனர் தன் விழிகளை இறுக்க மூடியபடி, கீழே சரிந்து மஞ்சத்தில் சரியாகப் படுத்துக் கொண்டார். எப்போது உறக்கம் வரும் என்று தெரியவில்லை. மூடிய கண்களுக்குள் நர்மதை .சுழித்துச் சுழித்து ஓடினாள். படகுகள் அவள் உடல் மீது அனாயாசமாய்க் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தன.


றுநாள் பொழுது புலர்ந்து, ஒரு நாழிகை கடந்திருக்கும். மண்டனரின் மாளிகை வாசல் கூடத்துக் கிளிகள் திடீரென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு சப்தமிடத் தொடங்கின. உள்ளே வேலையாய் இருந்த சரசவாணி, மனம் துணுக்குற வெளியே வந்து பார்த்தாள். அவளைப் பார்த்தவுடன் கிளிகள் எப்போதும் போல் ஏக காலத்தில் “சரசவாணி, சரசவாணி..’என்று அவள் பெயரை உச்சரித்துக் கிறீச்சிட்டன. காரணம் இல்லாமல் இந்தக் கிளிகள் இத்தனை சப்தம் எழுப்பாது என்று அவளுக்குத் தெரியும்., அவள் வாசல் பக்கம் பார்த்தாள். அவள் பயந்தது நடந்து விட்டது. அந்தப் பொல்லாத சன்யாசி அங்கே கதவைத் திறந்து கொண்டு புன்னகையோடு உள்ளே வந்து கொண்டிருந்தார். இந்த முறை உள்ளே நுழைய அவருக்கு அன்றைய தினத்தைப்  போல் ‘ஆகாய மார்க்கம்’ தேவைப் படவில்லை. அவரது கால்கள் பூமிக்கு வந்திருந்தன..

உள் கூடத்தில் எதிர் எதிர் மணைகளில் சரசவாணியும் சங்கரரும் அமர்ந்து கொண்டனர். மண்டனர் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார். சில கணங்கள் கூடத்தில் ஓர் அசௌகரியமான அமைதி நிலவியது. சங்கரர் மௌனத்தைக் கலைத்து சரசவாணியை நோக்கிப் பேச ஆரம்பித்தார். “நான் திரும்பி வரமாட்டேன் என்று தானே நீங்கள் எல்லோரும்  நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? ஆனால் காலத்தின் கட்டளையை நீயோ நானோ- யாரால் வெல்லமுடியும்?”

சரசவாணி தன் மனச் சலனங்கள் எதையும் துளியும் தன் முகத்தில் வெளிப்படுத்தாமல், மென்மையாய் அவரைப் பார்த்து முறுவலித்தாள்.

சங்கரர் தொடர்ந்து சொன்னார். “சரசவாணி! நீ கேட்ட அந்தக் கேள்விகளுக்கான பதில்களை  நான் அனுபவ பூர்வமாகத் தேடி அறிந்து வந்திருக்கிறேன். சொல்கிறேன், கேள்..” என்றவர்,  முன்பு அவள் எழுப்பி இருந்த, காம சாஸ்திரம் சார்ந்த சிருங்கார ரச விவகாரங்களை விரிவாக, ஓர் உபன்யாசம் போல் விவரித்துக் கொண்டே போனார்.  

சரசவாணி விழிகளைத் தரையை நோக்கித் தாழ்த்திய படி அமர்ந்திருந்தாள். சங்கரர் சொல்லி முடித்தவுடன் அவள் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

“இன்னும் ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று சங்கரர் மெல்லிய நகையோடு அவளிடம் கேட்டார்.

அவள் சொன்னாள்: “ஒரே ஒரு கேள்வி இருக்கிறது, இளம் துறவியே! ஆனால் இது நமது வாதத்தோடோ, வாதத்தின் நிபந்தனைகளோடோ சம்பந்தம் அற்றது. நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு நீங்கள் விடை தேடிக் கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமே எனக்கு முக்கியமாக இருக்க வேண்டுமே தவிற, இந்த பதில்களுக்கான அனுபவங்களை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள் என்பதில் எனக்கு எந்த அக்கறையும் இருக்கலாகாது. ஆனாலும், என்னால் இதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. சன்யாசியான உங்களுக்கு, அந்த சன்யாசத்துக்கு எந்த பங்கமும் நேராமல், இந்த அனுபவம் எப்படி சாத்தியமாயிற்று என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை..”

சங்கரர் சில கணங்கள் அமைதியானார். அவளது விழிகளை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தபடி அவர் பேசினார்: “எனது இந்த சரீரத்தை எப்போதும் போல் நான் பரிசுத்தமாகவே வைத்திருக்கிறேன். அதில் உங்கள் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படத் தேவை இல்லை...அது எப்படி சாத்தியம் என்று நீ கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கமும்  உண்டு அல்லவா? அனுபவ ஞானம் தேடி நான் திசை தெரியாமல் நடந்து கொண்டிருந்த போது, காட்டில் வேட்டை ஆடுவதற்காக வந்திருந்த அமருகன் என்ற ஓர் இளம் அரசனின் இறந்து போன சடலம் வழியில் என் கண்ணில் பட்டது. அப்போது எனக்குள் ஒரு யோசனை தோன்றியது. ஏன் இவன் உடம்பின் மூலம் நாம் இவனது அந்தப்புற ஸ்த்ரீகளிடத்தில் தாம்பத்திய ரகசியங்களை அனுபவித்து தெரிந்து கொள்ளலாகாது என்று நினைத்தேன். என் உடம்பை என் சிஷ்யர்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு, என் தபோ பலத்தால், வெறும் ஆன்மாவாய் நான் அந்த அழகான அரசனின் உடம்பில் பிரவேசித்தேன். அவனது ராஜ்ஜியத்துக்குத் திரும்பி, அவனது பட்டத்து மகிஷியிடமும், மற்ற அந்தப் புறப் பெண்களிடமும் சிருங்காரம் பயின்றேன். அவர்களுக்கும் சந்தோஷம் கொடுத்தேன். ஒரு மாசக் கெடு முடிந்தவுடன், அவனது உடலை அங்கேயே போட்டு விட்டு என் பழைய உடலுக்குத் திரும்பினேன். ஆத்மா, சுகம் துக்கம் என்கிற எந்த தோஷங்களாலும் தீண்டப் படாதது என்பதால், இந்த அனுபவங்களால் என் ஆத்மா அப்படியே கறை படாமல் இருக்கிறது. அனுபவித்தது இன்னொருவனின் சரீரம் என்பதால், என் சரீரமும் அப்படியே கறை படாமல் இருக்கிறது..”

சரசவாணி பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் இமைகள் அந்தக் கிளிகளின் இறக்கைகளைப் போலவே படபடவென்று அடித்துக் கொண்டன. விழிகளில் மெல்லிய படலமாய் நீர் கோர்த்துத் தேங்கியது. எதுவும் பேசாமல் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவள் மண்டனரைப் பார்த்தாள். அவர் முகம் பிரகாசம் இழந்திருந்தது. அவர் தன் மனைவியின் முகத்தைப் பார்க்கச் சக்தி இன்றித் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

சங்கரரும் எழுந்து கொண்டார். ஒரு பெரிய விஷயத்தை சாதித்து விட்ட பெருமிதம் அவரது விழிகளில் தெரிந்தது. அவர் எப்போதும் போல் மலர்ந்த முகத்தோடு இருந்தார். அவரைப் பொருத்தவரை, அவரது வாழ்க்கைக் கிரமங்களில் எந்த மாறுதலும் நேரப் போவதில்லை, புதியதாய் அவரது சிஷ்யர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது என்பதைத் தவிர.

மண்டனர் உள்ளே போய்க் காவி உடை தரித்து, சன்யாசக் கோலத்தில் திரும்ப வந்து சங்கரரின் முன் நின்றார். சரசவாணியிடம் எப்படி சொல்லிக் கொள்வது என்கிற சங்கடங்களோடு அவர் அவளது சமீபம் போனார். அவள் அவரைப் பார்க்க விரும்பாதவள் போல், கூடத்து ஜன்னல் வழியே, தூரத்தில் தெரியும் நர்மதையின் பிரவாகத்தைப் பார்த்தபடி நின்றாள்.

“சன்யாசியான பின், மனைவி, மக்கள் என்கிற எந்த சொந்தங்களையும் நம் மனசில் சுமந்து வரலாகாது, மண்டனரே.. இந்தக் கணத்திலிருந்து அவள் உமது  மனைவியோ நீர் அவளது கணவனோ இல்லை. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், யாரையும் திரும்பிப் பாரமல், என்னுடன் என் பாதையில் நடந்து வாருங்கள்...” என்று சங்கரர் அவரது கைகளைத் தன் கைகளுக்குள் சேர்த்துக் கோர்த்த படி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தில் வெளிக் கூடத்தில் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்த கூண்டுகளுக்குள் இருந்த  சரசவாணியின் கிளிகள் இறக்கைகளை மிகவும் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டு அந்தச் சின்ன இடத்துக்குள்ளேயே பறந்து வட்டமிட்டு ஆர்ப்பரித்தன. அதனால், அந்தக் கூண்டுகள் அனைத்தும் தாறுமாறாய் ஆடின. அந்த இடமே கிளிகளின் கூச்சலால் திடீர் என்று களேபரமாய் ஆனது. சரசவாணி அரவம் கேட்டுத் கிளிகள் இருந்த இடத்துக்கு வந்தாள். ஆனால் அவள் கிளிகளை எதுவும் சொல்லவில்லை.

கிளிகள் தங்களுக்குள், எல்லோர் காதிலும் விழுமாறு உரக்கப் பேசிக் கொண்டன.

ஒரு கிளி கேட்டது.  “இது சரியில்லை. சரசவாணி எப்படி இதற்குச் சம்மதித்தாள்? அவள் ஏன் எதுவும் பேசாமால் சும்மா இருந்தாள்?”

அதற்கு இன்னொரு கிளி பதில் சொன்னது: “அவள் பேசா விட்டால் என்ன? நாம் பேசுவோம். நாம் தான் அவள். அவள் தான் நாம். அவள் குரலில் நாம் பேசுவோம்”

எல்லாக் கிளிகளும் இப்போது தங்கள் குரல்களை சரசவாணியின் குரலாக மாற்றிக் கொண்டு விட்டது போல் இருந்தது.

“சரசவாணியைப் போன்ற ஒரு பொக்கிஷத்தைத் துறந்து போக எப்படி இந்த மண்டனருக்கு மனசு வந்தது?”

“உண்மையில் வாதத்தில் ஜெயித்தது யார்? சரசவாணியா, சங்கரரா?”

இரண்டு கிளிகள் மாறி மாறிக் கேட்டுக் கொண்டன. சட்டென்று சில வினாடிகள்  மௌனமாயின.

மற்றொரு கிளி மெதுவாக ஆரம்பித்தது. : “எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. சரசவாணி எவ்வளவு பெரிய புத்தி சாலி என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்... தன் கணவரை சன்யாசியாக்க வந்தவரை, அவளும் கொஞ்ச காலம் சம்சாரியாக்கிப் பார்த்து விட்டாள்! அதனால் நீ கேட்டது சரியே.  உண்மையில் ஜெயித்தது சரசவாணி தான்!”

“ஆனால் அது அப்படி இல்லையாமே? சங்கரர் அவளிடம் சொன்ன விளக்கத்தை முழுசாகக் கேட்டீர்களா, இல்லையா? ஆத்மா மட்டும் தான் அவருடையது. உடல் அமருகனுடையது. அனுபவித்தது அமருகனின் உடல் தானாம், அவருடைய ஆத்மா இல்லையாம்.”

இப்பொது முதல் கிளி மீண்டும் குறுக்கிட்டது. “அங்கே தான் என்னுடைய சந்தேகம் ஆரம்பிக்கிறது. உடல் துய்த்து உணர்ந்ததை, அதிலிருந்து நீங்கிய பின் அந்த உடலில் இருந்த ஆத்மா எப்படி நினைவு வைத்திருக்கும்? அது மட்டும் இன்றி,  ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே வேறு வேறு இல்லை என்று தானே இவர்களின் அத்வைதம் சொல்கிறது? அப்படியானால், உடல்கள் வேறு, ஆத்மாக்கள் வேறு என்று எப்படி ஆகும்? அரசனின் உடலோடு அனுபவித்தால் என்ன, ஆண்டியின் உடலோடு அனுபவித்தால் என்ன? எல்லாம் ஒன்று தானே? அதற்கு ஏன் இப்படி இன்னொரு உடம்பில் போய்ப் புகுந்து கொள்வது, பிறகு மீண்டும் வெளியே வருவது என்று இப்படித் தேவை இல்லாத சித்து வித்தைகளில் எல்லாம் இறங்கி, இரண்டு உடம்புகளை இம்சைப் படுத்த வேண்டும்? ஊரார் அபவாதம் பேசக் கூடாதே என்று நினைத்து அப்படிச் செய்ததாய் அவர் வாதிடக் கூடும். ஆனால், ஒரு முற்றும் துறந்த துறவிக்குத் தன்னைப் பற்றிப் பிறர்  என்ன பேசுகிறார்கள் என்ற கவலை எதற்கு? தனது உடல் பரிசுத்தமாய் இருக்கிறது என்று உலகத்துக்குக் காண்பித்துக் கொள்ள வேண்டியது  ஒரு சன்யாசிக்கு அவசியமா என்ன?”

இதைக் கேட்டு, ‘என்னவோ போ..எனக்கு எதுவுமே நியாயமாய்ப் படவில்லை.  இந்த விளையாட்டில், ஒன்றுக்கு இரண்டு பெண்கள் தங்கள் சந்தோஷங்களைப் பறிகொடுத்தது தான் கடைசியில் கண்ட பலன்.” என்று இரண்டாவது கிளி விரக்தியோடு அலுத்துக் கொண்டது.

“ஒருத்தி சரசவாணி, புரிகிறது. இன்னொருத்தி யார்?” என்று கேட்டது மூன்றாவது கிளி.

“அமருகனின் மனைவியைச் சொல்கிறேன். அவளது செத்துப் போன கணவனைப் பிழைக்க வைத்து, அவள் இழந்த சந்தோஷத்தைத் திரும்பக் கொடுத்து, மீண்டும் கொஞ்ச காலத்துக்குள்ளேயே அதை அவளிடமிருந்து பறித்து..” என்று இதற்கு முன்னால் பேசிய கிளி பெருமூச்சு விட்டது.

“நியாயமாய் சரசவாணி இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடம் எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் அவள் ஏன் கேட்க வில்லை?”

“அதனால் என்ன? அவள் கேட்ட கேள்விகளைக் காட்டிலும், கேட்காத கேள்விகளே அதிக சக்தி உள்ளனவாக இருக்கின்றன. ஆகவே, வாதம் இன்னும் முழுமை அடையவில்லை.”

இப்போது எல்லாக் கிளிகளும் ஒரே குரலில் இப்படிக் கிறீச்சிட்டன. “ஆமாம், நீ சொல்வது சரி. மண்டனர் தோற்ற போது, சரசவாணி என்ன சொன்னாள்? ‘அவரில் பாதி நான். என்னையும் வெல்லுங்கள்..’ என்று சொல்லி, மண்டனர் கேட்காத கேள்விகளை அவள் கேட்டாள். இப்போது, அதே போல்  அவரைத் தடுத்து நிறுத்தி நாமும் கேட்போம்” என்றபடி, அவை மண்டனரின் கைகளைப் பிடித்தபடி வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் சங்கரரை நோக்கி விளித்துப் பின்னாலிருந்து பெரிதாய் அறைகூவல் விட்டன: “ஒ, சன்யாசியே! நில்லுங்கள். நாங்கள் சரசவாணியில் பாதியும் இல்லை, காலும் இல்லை. முழுசுமே நாங்கள் தான் அவள்; அவள் தான் நாங்கள். அவள் கேட்காமல் விட்ட கேள்விகளை நாங்கள் கேட்கிறோம். அவற்றுக்கு பதில் சொல்லி, முடிந்தால் எங்களையும் வாதத்தில் ஜெயித்து விட்டு, அப்புறமாய் மண்டனரைக் கூட்டிச் செல்லுங்கள்..”

இது வரை கிளிகளின் இந்த சம்பாஷனையைக் கேட்டும் கேட்காதவர் போல் மௌனமாக அந்த இடத்தைக் கடந்து வாசலை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த சங்கரர் அவை கடைசியாய்ச் செய்த சங்க நாதத்தில், ஒரு கணம் திகைப்பு மேலிடச் சட்டென்று நின்றார். இது யாருடைய குரல், சரசவாணியுடையதா, கிளிகளுடையதா, அல்லது இரண்டும் கலந்த கலவையா? சங்கரர், தவிர்க்க மாட்டாமல் பின்னால் திரும்பிப் பார்த்தார். மண்டனரும் ஓர் அனிச்சைச் செயலாய்த் திரும்பினார்,

பின்னால், கிளிகள் வாசம் செய்யும் வாசல் கூடத்தில், அவை பேசிய அடையாளமே சிறிதுமின்றி,  ஓர் அசாதாரண நிசப்தம் நிலவியது. எல்லாக் கிளிகளும் இப்போது சிலைகளாய் உறைந்து போயிருந்தன. மண்டனரின் கண்கள் அந்த இடத்தில் அவசரமாய் சரசவாணியைத் தேடின. அங்கே அவள் அந்தக் கிளிகளுக்கு  நடுவே. தானும் சிலையாய் உறைந்து  நின்றிருந்தாள்.             
                                   ---------------------------

(மாதவ வித்யாரண்யர் இயற்றிய ‘ஸ்ரீ சங்கர விஜய’த்தில், எட்டு-ஒன்பதாவது அத்தியாயங்களில் வரும் சங்கரர், மண்டனமிஸ்ரர், சரசவாணி- விவாத சம்பவங்களைப் பின்புலமாய் வைத்து எழுதப் பட்டது.)

 -(கணையாழி, மே, 2017)




Friday, May 13, 2016

ஆயிரம் பசுக்கள்



னகரின் சபை முடிந்து வெளியே வந்து நதிக் கரையை நோக்கி நடக்கிற போதுதான் கார்கி சற்றே இறுக்கம் தளர்ந்தவளாய்  உணர்ந்தாள். அன்றைய அளவுக்கு அதற்கு முன் அந்த அகண்ட சபா மண்டபத்தில் அத்தனைப் புழுக்கத்தை அவள் உணர்ந்ததில்லை. புழுக்கம் என்றால் காற்றின்மையால்  ஏற்படும்  உடல் புழுக்கம் அல்ல. நெடிதுயர்ந்து, உயரத்தில் பெரிய பெரிய சாளரங்கள் வைத்து நிர்மாணித்த அந்த விசாலமான சபைக் கூடத்தில் காற்றுக்கும்  வெளிச்சத்துக்கும் என்றைக்குமே பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் அது  வார்த்தைகளின் உஷ்ணத்திலிருந்து புறப்பட்ட புழுக்கம்.. அறிவார்ந்த தர்க்கங்களும் எதிர் வாதங்களும் திடீர் என்று திசை மாறி எப்படி எரிச்சல்களாகவும் கோபங்களாகவும் உருமாற்றம்  அடைகின்றன? கடைசியில் வென்றது வாதமா, கோபமா?

எதிரே நதி எந்தத் தர்க்க மயக்கமும் இன்றித் தன் பாட்டுக்கு அமைதியாய் ஓடிக் கொண்டிருந்தது. ரிஷி வாசக்னுவின் மகள், பிரும்மவாதினி கார்கி வாசக்னவி மன உளைச்சல்களோடு நதியின் கரையில் போய் உட்கார்ந்தாள். தொலைவில் மலைகளின் உயரத்தில் தேவதாரு மரங்கள் வரிசையாய்த் தெரிந்தன. அவை ஒவ்வொன்றும் இங்கிருந்து  பார்ப்பதற்குப் பாதி விரிந்த பசுங்கொடைகள் மாதிரி இருந்தன. தேவதாருக்கள் தேவர்களுக்குப் பிரியமானவை; தேவர்களாலேயே வாசம் செய்யப்  படுபவை. வணங்கத் தக்கவை. அதனாலேயே அவை உயரமான இடத்தில் வளர்கின்றன என்று கார்கி விநோதமாய் நினைத்தாள்.

அவளைச் சுற்றிலும் சமவெளியில் நிறைந்திருந்த அசோக மரங்களை அவள் இன்று அதிக சிநேகத்துடன் பார்த்தாள். அவை நிறைய ரத்த நிறத்தில் சிவந்த புஷ்பங்கள் பூத்துக் கிடந்தன. எப்போதும் அவள் விரும்பி சந்தோஷப் படும் அந்தப் பூக்களின்  சிவப்பு இன்றைக்கு ஏனோ அவளை சங்கடப் படுத்தியது. அவை அவள் கடைசியாக சபையில் பார்த்த யாக்யவல்கியரின் சினம் ஏறிய  விழிகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தன.

கார்கி அவற்றிலிருந்து தன் பார்வையை விலக்கி நதியில் நிர்மலமாய்ச் சுழித்து ஓடும் தெள்ளிய நீரில் தன் விரல்களால் கோலம் இடுவது போல் அளைந்தாள். அதன் குளிர்ச்சி அவளுக்கு இதமாய் இருந்தது. உடலிலும் மனசிலும் நிறைந்திருந்த உஷ்ணத்தை அதன் தண்மை தணிப்பதாய்த் தோன்றியது. ஒவ்வொரு முறை அவள் விரல்களால் நீரை அளைகிற போதும், தெளிந்த நீரில் வரைந்த ஓவியமொத்த அவளது அழகிய பிம்பம் சிணுங்கிச் சிணுங்கிக் கலைந்தது.

காலையில் சபையில் நிகழ்ந்த சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாய் அவள்  நினைத்துப் பார்த்தாள். யார் ஒருவன் பிரும்ம ஞானத்தில் சிறந்தவனோ அவனுக்கு அரண்மனையின் பசு-மடத்திலிருந்து ஆயிரம் பசுக்களைப் பரிசளிப்பதாக சபையில் நடந்த பிரம்ம யக்யத்தில் மன்னர் ஜனகர் அறிவித்த பிறகு தான் எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பித்தன. வேத ஞானத்தில் ஒருவருக்கொருவர் எந்த விதத்திலும் சளைக்காத பிற மகா பண்டிதர்கள் எல்லாம் தயக்கத்துடன் அவையடக்கத்தோடு  அமர்ந்திருக்க, இந்த யாக்யவல்கியர் மட்டும் முந்திரிக் கொட்டை மாதிரிச் சட்டென்று எழுந்து, தன் சிஷ்யர்களைப் பார்த்து, ‘அந்த ஆயிரம் பசுக்களையும் நமது ஆஸ்ரமத்துக்கு ஒட்டிக் கொண்டு போங்கள்’ என்று சொல்வதற்கு எவ்வளவு தைரியமும் அகம்பாவமும் இருக்க வேண்டும்!

அப்போது கூட சபையில் மெல்லிதாக ஒரு சலசலப்பு எழுந்ததே இன்றி ஒருவரும் தைரியமாக யாக்யவல்கியரின் செயலைக் கேள்வி கேட்க உடனடியாக முன்வரவில்லை. குரு, பாஞ்சாலம் முதலான தேசங்களில் இருந்தெல்லாம் அழைக்கப்பட்டு வந்து திரண்டிருந்த பெரிய பெரிய வேத விற்பன்னர்கள் நிறைந்திருந்த மகா சபையில் இவர் மட்டும் தான் மிகச் சிறந்த பிரம்மஞானியா என்று கார்கி உள்ளூர அப்போது கோபம் கொண்டாள். அந்த சமயத்தில் தான் அஸ்வலன் என்பவன் மெதுவாகத் தன்  இருக்கையை விட்டு எழுந்து, “நீர் தான் எல்லோரையும் காட்டிலும் சிறந்த பிரம்ம ஞானியோ? எந்த அடிப்படையில் பசுக்களை ஓட்டிச் செல்ல உமது சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டீர்?’ என்று யாக்ய வல்கியரைப் பார்த்துக் கேட்டான். அதற்கு யாக்யவல்கியர், ‘நீங்கள் யாரும் உங்கள் ஞானத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பசுக்களை எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. எனக்குப் பசுக்களின் தேவை இருந்ததால் அவற்றை நான் எடுத்துக் கொண்டேன்’ என்று எத்தனை சாதுரியமாகப் பதில் சொன்னார்!

யாருக்குப் பசுக்கள் தேவையோ அவர்கள் பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள் என்றா அரசர் அறிவித்தார்? அவ்விதமானால் அங்கு குழுமி இருந்த அத்தனை பண்டிதர்களும் நான் நீ என்று முண்டி அடித்துக் கொண்டு பசுக்களைச் சூழ்ந்து கொண்டிருக்க மாட்டார்களா? கார்கியின் எண்ண ஓட்டங்கள் கலைவதற்கு முன்னரே, அஸ்வலன் அவளது எண்ணங்களைப் பிரதிபலிக்கிறவன் போல், “அதுவல்ல இங்கே நிபந்தனை, மகரிஷி. தேவை தான் தகுதி என்றால், இங்கே இருக்கிற எல்லாப் பண்டிதர்களுக்கும் பசுக்கள் தேவைப் படுபவையே. ஆனால், ஞானத்தில் யார் விஞ்சியவர்கள் என்பதே இங்கே கேள்வி. அதனால் பிரும்ம ஞானத்தில் நீர் எல்லோரைக் காட்டிலும் மேலானவர் என்று நிரூபித்து விட்டுப் பிறகு பசுக்களை எடுத்துச் செல்லுங்கள்..” என்று யாக்யவல்கியரை நோக்கிச் சூளுரைத்தான். கார்கி இப்போது சற்று நிம்மதியோடு  நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அஸ்வலன் பின் யாக்யவல்கியரிடம் சரமாரியாகத் தத்துவார்த்தங்கள் பற்றிய   கேள்விகளை எழுப்பினான். அவனைத் தொடர்ந்து ஆர்த்தபாகன், பிஜ்யு, உஷஸ்தன், கஹோலன் முதலானோர் எழுந்து வெவ்வேறு விதமான வினாக்களைத் தொடுத்தனர். யாக்ய வல்கியர் அவர்கள் எல்லோருக்கும் புத்தி சாலித்தனமாய்ப்  பதில் அளித்துக் கொண்டு வந்தார். கஹோலன் யாக்யவல்கியரின் பதிலில் திருப்தி அடைந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்த போது, யாக்யவல்கியர் சபையை கர்வத்தோடு பார்த்தார். இனி அவரைக் கேள்வி கேட்பதற்கு அங்கே யாருமே இல்லை என்பது போலவும், அந்த ஆயிரம் பசுக்களுக்கும் அவரே ஏக போக உரிமை கோருவதை யாரும் தடுக்க முடியாது என்பது போலவும் அவரது பார்வை இருந்தது.

அந்தப் பார்வை தன் மீதும் ஒரு கண நேரம் விழுந்து. சற்றும் தாமதிக்காமல் உடனே அவளைக் கடந்து போனதை கார்கி கவனித்தாள். தனது இருப்பை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. ஒரு வேளை ஆண்களே நிறைந்த அத்தனைப் பெரிய சபையில் அவள் மட்டுமே பெண் என்கிற அலட்சியம் காரணமாக இருக்கக் கூடும். அல்லது பிரும்ம ஞானம் என்பது ஆண்களின் ஏகோபித்த தளம் என்கிற மாதிரியும் அது குறித்துக் கேட்க ஒரு பெண்ணிடம் என்ன கேள்வி இருக்கப் போகிறது என்கிற மாதிரியும் அவரது ஆண் மனத்தில் ஒரு முன் கூட்டிய கற்பிதம் ஆழப் படிந்திருக்கக் கூடும்.

இதற்கு மேலும் பேசாமல் இருப்பது தன் சுயகௌரவத்துக்கு இழுக்கு என்று நினைத்த கார்கி, ஏதோ விசையால் முடுக்கி விடப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்தாள். ‘நான் அந்த சபையில் வீற்றிருக்கும் எந்த ஆண் பிள்ளைகளுக்கும் குறைந்தவள் இல்லை’ என்று அவள் கோபமாய் நினைத்தாள். நானும் மற்ற ஆண் பிள்ளைகளைப் போலவே ஏழு வயசில் உபநயனம் செய்து வைக்கப் பட்டு, பன்னிரண்டு ஆண்டு குருகுலம் வாசம் பண்ணி வேத ஞானம் பயின்றவள். இயற்கையின் அற்புதங்களை வியந்து பலவாறாய்க் கவி பண்ணியவள். தீவிர பிரும்மசரியம் பேணுபவள். யாக்ய வல்கியரின் மனைவி மைத்ரேயியின் அறிவுக்கு எள்ளளவும் குறையாதவள். பிரும்மம் குறித்த தேடலில் இன்னும் சோர்வடையாதவள்.

அவள் யாக்ஞவல்கியரை மடக்க சிருஷ்டி ரகசியங்கள் குறித்த வினாக்களைக் கையில் எடுத்தாள்.

“ஓ, அறிவில் சிறந்த மகா பண்டிதரே, எனது இந்தக் கேள்விகளுக்கு முதலில் பதில் அளித்து விட்டுப் பிறகு பசுக்களை எடுத்துச் செல்லுங்கள். இந்த உலகம் நீரால் நிறைந்திருக்கிறது என்றால், நீர் எதால் நிறைந்திருக்கிறது?”. என்று அவள் தன் முதல் கேள்வியைக் கேட்டாள்.

ஓர் அலட்சியப் பார்வையோடு அவளைப் பார்த்தார் யாக்யவல்கியர். “கேள், கார்கி. நீர் காற்றால் நிறைந்திருக்கிறது’ என்று அவர் அதற்கு பதில் சொன்னார்.

எந்தப் பரிட்சையிலும் முதல் கேள்வி எப்போதுமே சுலபமாகத் தான் இருக்கும். அதனால் பரிட்சையைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. கார்கி அடுத்த கணையை வீசினாள்: “காற்று எதால் நிறைந்திருக்கிறது, யாக்ய வல்கியரே?”

“ஆகாசத்தால்..”

“ஆகாசம்?”

“சூரியனால்..”

“சூரியன்?”

“நட்சத்திரங்களால்”

“நட்சத்திரங்கள்?”

“தேவர்களின் லோகங்களால்..”

கார்கி விடவில்லை. “தேவர்களின் லோகங்கள் எதால் நிறைந்திருக்கின்றன?” என்று கேட்டாள். அவளால், யாக்யவல்கியரின் முகம் சிறுகச் சிறுகப் பொறுமை இழந்து சிவந்து வருவதை உணர முடிந்தது. யாக்ய வல்கியரின்  குரலில் இப்போது உஷ்ணம் ஏறி இருந்தது. அவர் குரல் அடி வயிற்றிலிருந்து வருவது  போல் இருந்தது. அவர் சொன்னார்; “கேட்டுக் கொள், கார்கி. தேவர்களின் உலகம் பிரும்மத்தால் நிறைந்திருக்கிறது. ஏனெனில் நீ கேட்ட இந்த மொத்த வஸ்துக்களும் பிரும்மத்திலிருந்தே தோன்றி வெளி வந்தன..”

கார்கி இதைக் கேட்டுத் தன் கடைசி அஸ்திரத்தைப் அவர் மீது பிரயோகித்தாள்.

“அப்படியானால், பிரம்ம ஞானத்தில் கரை கண்டதாய்ச் சொல்லிக் கொள்ளும்  வேத பண்டிதரே, அந்த பிரும்மம் எதால் ஆனது? அது எதிலிருந்து தோன்றியது?” அவள் கண்களில் அறிவின் தீவிரமும் குரலில் சவால் விடும் அலட்சியமும் தெறித்து அதிர்ந்தன.

யாக்யவல்கியர் இப்போது தன் பொறுமையை முற்றிலும் இழந்து கோபத்தின் உச்சத்துக்குப் போயிருந்தார். கேட்கக் கூடாத ஒரு கேள்வியை அவள் கேட்டு விட்டார்ப்போல் அவர் உடம்பெங்கும் விர்ரென்று உஷ்ணம் ஏறியது.  “கார்கி, உன் கேள்விகளை இதோடு நிறுத்திக் கொள். இதற்கு மேலும் கேட்டால், உன் தலை தூள் தூளாய்ச் சிதறி விடும்..” என்று அவர் அவளை நோக்கி சபையே வெடிக்கக் கத்தினார்.

மொத்த சபையும் அதிர்ச்சியில் உறைந்து போனது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் கார்கியின் இதயம் படபடத்து, முகம் வேர்த்தது. அவள் செய்வதறியாமல் மனமும் உடலும் சோர்ந்து ஆசனத்தில் சரிந்தாள்.

இந்த சமயம் ஜனகர் தர்ம சங்கடங்களோடு எழுந்து, “மகரிஷி, தயவு செய்து அமைதி காக்க வேண்டும்..” என்று விண்ணப்பித்துக் கொண்டார். அந்தப் பெரும் சபையில் தனக்காக நியாயம் பேச யாரும் இல்லை என்பதை கார்கி  அந்த நிமிஷம் புரிந்து கொண்டாள். “அரசே, யாக்ய வல்கியரின் பிரும்ம ஞானத்தை யாரும் சந்தேகிக்க வேண்டாம்..எல்லாப் பசுக்களையும் அவருக்கே கொடுத்து விடுங்கள்..” என்று தன் இருக்கையிலிருந்தே சுரத்தின்றிக்  குரல் கொடுத்தாள்.

அதற்கப்புறம் சபையில் நடந்தவை அர்த்தமற்றவை. அரச மரியாதை கருதி அவள் சபையின் புழுக்கத்தைச் சகித்துக் கொண்டு சபை முடிகிற வரை அமர்ந்திருந்தாள். சபை முடிந்து வெளியே வந்த போது யாக்யவல்கியரின் விசுவாசமான சிஷ்யர்கள் அவள் பக்கம் பார்த்து இகழ்ச்சியாய்ச் சிரித்தபடியே பசுக்களை உற்சாகமாய் ஆஸ்ரமத்தை நோக்கி ஒட்டிக் கொண்டு போனதைப் பார்த்தாள்..

கார்கி, நதி நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டாள். சபையின் ஞாபகங்களில் இருந்து வெளியே வரும் முயற்சியாய்  நீரில் தெரியும் சூரியனின் பிம்பத்தையே உற்று நோக்கிய படி இருந்தாள். அது அஸ்தமன நேரத்து சூரியன் என்பதால், அதன் பிம்பம் பகல் நேரத்து சூரியனதைப் போல் உறுத்தாமல் கண்களுக்கு இதமாய் இருந்தது.  நீரில் தெரியும் சூரியன்  ஆகாயத்தில் தெரியும் சூரியனின் பிம்பம் என்றால் ஆகாயத்தில் தெரியும் சூரியன் எதனுடைய பிம்பம் என்று அவள் தன் மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.  அது பிரம்மத்தின் பிம்பம் என்றால், பிரம்மம் எதனுடைய பிம்பம்?

சட்டென்று மர இலைகள் சலசலக்க எங்கிருந்தோ ஒரு குளிர்ந்த காற்று கிளம்பி வந்து அவளது முகத்தை வருடி விட்டுப் போனது. மனசைத் திசை திருப்பும் இந்த பிம்பங்களின் பொய்ம்மைகளில் இருந்து வெளியே வா, கார்கி.. இந்தக் காற்று நிஜம். இந்தத் தண்ணீரின் குளிர்ச்சி நிஜம். இந்த மரங்களும், செடி கொடிகளும் இங்கே கிறீச்சிட்டுக் கொண்டு கூடு நோக்கிப் பறந்து செல்லும் இந்தப் பட்சி ஜாலங்களும் நிஜம். யாக்யவல்கியருக்கும் அவரது விசுவாசமான சிஷ்யர்களுக்கும் கூட, கண்ணுக்குத் தெரியாத பிரம்மத்தைக் காட்டிலும் கண் முன் நிற்கும் அந்த ஆயிரம் கறவைப் பசுக்கள் தான் நிஜம்!

தூரத்தில் யாக்யவல்கியரின் ஆசிரமம் நிழலாய்க் கண்ணில் பட்டது. ஆசிரமத்தின் கூரையின் மீது படந்திருந்த இளம் சுரைக் கொடிகள்  இங்கிருந்து, இந்த மாலை நேரத்துப் பொன் வெய்யிலில் மங்கிய ஒளிப் படலங்களாய்த் தெரிந்தன. இந்த நேரத்தில் அவரது இரண்டு மனைவிகள்- மைத்ரேயியும் காத்யாயினியும் ரிஷியின் சாயங்கால நியமங்களுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். 

காத்யாயினியை விட மைத்ரேயிக்குத் தான் ஞான மார்க்கத்தில் சிரத்தை அதிகம். காத்யாயினி சின்னச் சின்ன லௌகீக சுகங்களிலேயே  எளிதில் திருப்தி அடைந்து விடுபவள். அதுவும் இன்றைக்கு ஆஸ்ரம வரவு ஆயிரம் பசுக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவளைக் கையிலேயே பிடிக்க முடியாது. இந்த ஆயிரம் பசுக்களில் எந்தப் பசுவின் மடியிலிருந்து முதலில் பால் கறப்பது என்று யோசிப்பதிலேயே அவள் இன்றைய பொழுது முழுவதையும் போக்கி இருப்பாள்!

கார்கிக்கு ஏனோ இப்போது மைத்ரேயியிடம் சில விஷயங்கள் மனம் விட்டுப் பேச வேண்டும் போல இருந்தது. சில சமயம் அவள் இந்த இடத்துக்கு அந்தி சாய்கிற நேரங்களில் வருவதுண்டு.  இந்த அசோக மரங்களில் எந்த ஒன்றின் கீழாவது அமர்ந்து ஏதாவது ஒரு சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டிருப்பாள். அவளும் கார்கியைப் போலவே சுயமாகவே சுலோகம் இயற்றுவதில் வல்லவள். ஒரு தடவை அவள் கார்கியிடம், வைகறைப் போதில் உஷை சிவந்த எருதுகள் பூட்டிய தங்க ரத்தத்தில், தன் காதலன் சூரிய தேவனின் வருகையை அறிவித்துக் கொண்டு தொடுவானத்திலிருந்து ஒளி வெள்ளமாய்ப் புறப்பட்டு வருவதை வருணித்து ஒரு கவி சொன்னாள்.

மைத்ரேயியிடம் கார்கிக்கு எப்போதுமே  ஒரு தனிப்பட்ட மதிப்பு உண்டு. தர்ம நியாயங்களை உணர்ந்தவள் அவள். அவள் கணவர் இன்றைக்கு சபையில் நடந்து கொண்ட விதம் இத்தனை நேரம் அவளுக்கும் தெரிந்திருக்கும்.. அவளிடம் இது பற்றிப் பேச வேண்டும். நியாயம் கேட்க வேண்டும். அவள் நிச்சயம் நியாயத்தையே பேசுவாள். ஏனெனில் உண்மையான ஞான மார்க்கத்தை அறிந்தவள் அவள். அவளிடம் பேசும் போது தன் தலையைப் பற்றிய பயம் எதுவும் இல்லாமல் தைரியமாகப் பேசலாம் என்று நினைத்து கார்கி சிரித்துக் கொண்டாள்.

தொலைவில் யாக்யவல்கியரின் ஆஸ்ரம வாசலின் மூங்கில் கதவுகள் திறக்கும் சபதம் ஏதோ ஒரு பட்சியின் கிறீச்சொலி போல் மென்மையாகக்  கேட்டது. கார்கி அந்த திசையை நோக்கினாள். அவள் மனசின் விருப்பத்தை அறிந்தவள் மாதிரி மைத்ரேயி தான் ஆஸ்ரமத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு அவளை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். கார்கி நதிக் கரையில் உட்கார்ந்திருப்பதை அவள் தூரத்திலிருந்தே கவனித்திருக்க வேண்டும்...

மைத்ரேயி அருகில் வந்தவுடன் கார்கி அவளைப் பார்த்துப் புன் முறுவல் செய்தாள். அது மரியாதை நிமித்தம் செய்யப் பட்ட ஒரு சம்பிரதாயப் புன்னகையாய் மைத்ரேயிக்குப் பட்டது. அதில் எப்போதும் தோய்ந்திருக்கும் வழக்கமான சிநேகம் கலந்த உற்சாகம் இன்றைக்கு இல்லை.

மைத்ரேயி கார்கியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளது தோள்களை நட்போடு மெல்ல அழுத்தினாள்.

“என்ன பலமான சிந்தனை, கார்கி?”

“பெரிதாக ஒன்றும் இல்லை.  ரொம்பவும் சிந்திக்காமல் இருப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” .

மைத்ரேயி விசித்திரமாய் அவளைப் பார்த்தாள்: “ஏன் அப்படி?’

“நிறையச் சிந்தித்தால் கேள்வி கேட்கத் தோன்றும். அப்புறம் தலை சிதறிப் போகலாம். தலை போய் விட்டால், பிறகு எப்படி மறுபடியும் சிந்திக்க முடியும்?’ என்று சொல்லிச் சிரித்தாள் கார்கி.

மைத்ரேயி லேசாய்ப் புன்னகைத்தாள். “ராஜ சபையில் இன்றைக்குக் காலையில் நடந்த விஷயங்களை நீ இன்னும் மறக்கவில்லை என்று எனக்குப் புரிகிறது.. நான் எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். எனக்கும் கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருக்கிறது..”

“எல்லோருக்குமே வருத்தம் தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், அவரவர் குணமே அவரவர் பேச்சிலும் செயலிலும் முடிவாக வெளிப்படுகிறது, இல்லையா?”

“என் கணவர் மீது உனக்குக் கோபம் இன்னும் தீரவில்லை என்று நினைக்கிறேன். எல்லோருக்குமே அவர்களுக்கென்று ஒரு குணமும் சுபாவமும் இருப்பதைத் தவிர்க்க முடியாது, கார்கி. பிரம்மத்துக்கு மட்டும் தான் எந்த குணமும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்...”

“குணங்களே அற்ற பிரம்மத்திலிருந்து தான் இத்தனை குணங்கள் பிறந்திருக்கின்றன என்று நம்புவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. அது மட்டும் இன்றி, இந்த நிர்க்குணப் பிரம்மத்தின் பொருட்டு இந்த மனிதர்கள் அடித்துக் கொள்கிற போது தான், இவர்களின் உண்மையான குணங்களும் அவர்களே அறியாமல்  வெளியே வந்து விடுகின்றன.“ என்று சொன்ன கார்கி கொஞ்சம் நிதானித்தாள். பின் மைத்ரேயியின் பக்கத்திலிருந்து பார்வையை விலக்கி, எதிரே தெரிந்த மலையையும் அதன் மரங்களையும் பார்த்தபடி இப்படிச் சொன்னாள்: எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்த பிரம்மம் தான் காரணம். ஆனால், பிரம்மத்துக்கு என்னவோ எந்தப் பிரச்சனையும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் தான் அது பிரம்மமாய்த் ‘தேமேன்’ என்று எங்கோ மௌனமாய் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது.!.”

மைத்ரேயி கார்கியை உற்றுப் பார்த்துச் சிரித்தாள். இவள் கோபத்தைக் கூட எவ்வளவு கவித்துவத்தோடு வெளிப்படுத்துகிறாள் என்று அவள் நினைத்தாள். நதியின் எதிர்க் கரைகளில் செடிகளும் புதர்களும் மண்டி இருந்தன. அவற்றின் நடு நடுவே விதவிதமான நிறங்களில் பெயர் தெரியாத காட்டு மலர்கள் மாலை நேரத்து வெய்யிலில் ரத்தினக் கற்கள் போல் மின்னிய படி அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன. நிறமே அற்ற ஒரு மூல வஸ்துவிடமிருந்து தான் இத்தனை நிறங்களும் தோன்றி இருக்கின்றனவா?

மைத்ரேயி இப்போது பேச்சை வேறு திசையில் கொண்டு போக எண்ணினாள்.

“நான் உன்னை ஒன்று கேட்கிறேன். என் கணவர் ஒரு கட்டத்தில் உன் தலை சிதறி விடும் என்று கோபமாய்ச் சொன்ன போது, அவர் சபித்தால் அப்படி ஆகிவிடும் என்று உண்மையிலேயே நீ நம்பினாயா? அப்படி நம்பித்தான் நீ உன் வாதத்தை முடித்துக் கொண்டாயா?”

கார்கி ஒரு கணம் மௌனமாக இருந்தாள். பார்வையை மீண்டும் மைத்ரேயியின் பக்கம் திருப்பினாள். “அப்படி நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை, மைத்ரேயி. இயற்கையாய் என் தலை சிதறும் என்று நான் நிச்சயமாய் நம்பவில்லை. ஆனால், உன் கணவர் கோபத்தோடு இப்படிச் சொன்ன போது, அவரையும் அவரைச் சூழ்ந்திருந்த அவரது சிஷ்யர்களையும் ஒரு வினாடி கவனித்தேன். ஆளுக்கொரு உருண்டு திரண்ட, உலோகப் பூண் போட்ட குண்டுத் தடிகளைக் கையில் வைத்திருந்தார்கள்..”

மைத்ரேயிக்குச் சிரிப்பு வந்தது. “நீ புத்திசாலி மட்டுமில்லை..பொல்லாத பெண்ணும் கூட, கார்கி! அதெல்லாம் இருக்கட்டும். பிரம்மஞானிகள் கடைசியில் வன்முறையில் இறங்குகிற அளவுக்குப் போய் விடுவார்கள் என்று நினைக்கிறாயா?”

“தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்படித்தான் அந்த சமயத்தில் தோன்றியது. போக மாட்டார்கள் என்பதற்கு மட்டும் என்ன உத்தரவாதம்? பிரம்மம் இருக்கிறதோ இல்லையோ, கண் முன்னால் கறவைப் பசுக்கள் இருக்கின்றனவே?”

எங்கிருந்தோ பசுக்கள் கத்துகிற சத்தம் லேசாய்க் கேட்டது. அது யாக்யவல்கியரின் ஆசிரமத்தின் சுற்றுப்புற  வளாகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஏனேன்றால், அநேகமாய் ஜனகபுரியின் எல்லாப் பசுக்களும் இப்போது அங்கே தான் இருக்கின்றன!

சற்று அமைதிக்குப் பின் மைத்ரேயி. தயக்கத்தோடு கார்கியிடம் இப்படிக் கேட்டாள். “என் கணவர் சபையில் அப்படி நடந்து கொண்டதைக் கொஞ்சம் மறந்து விட்டுப் பேசுவோம். மனசில் கை வைத்துச் சொல்.. அவரிடம் நீ கடைசியாய்க் கேட்ட அந்தக் கேள்விக்கு உனக்குப் பதில் தெரியுமா?”.

கார்கி சிரித்தாள்: “இதற்கு ஏன் பெரிய பீடிகை எல்லாம் போடுகிறாய்? எனக்கு அந்தக் கேள்விக்கு சத்தியமாய் பதில் தெரியாது..”

மைத்ரேயி விழிகள் விரிய கார்கியைப் பார்த்தாள்.  

“அப்படியானால், யாக்யவல்கியருக்கும் அதற்குப் பதில் தெரியாது என்று நினைக்கிறாயா, கார்கி?”

“தெரிந்திருந்தால் அவர்  அப்படிக் கோபப்பட்டிருக்க மாட்டார். சரி எனக்கு ஒன்று சொல் நீ எப்போதாவது உன் கணவர் யாக்யவல்கியரோடு ஏகாந்தமாய் இருக்கிற போது, நான் சபையில் கேட்ட கேள்வியை தனிமையில் அவரிடத்தில் கேட்டிருக்கிறாயா?”

மைத்ரேயி இப்போது தயக்கத்தோடு சொன்னாள்: “உம்..ஒரு தடவை கேட்டிருக்கிறேன்..”

“என்ன கேட்டாய்?”

“பிரும்மம் எது என்று கேட்டேன்..”

“நீ அவரின் மனைவி என்கிற காரணத்தால் உன் தலைக்கு ஆபத்து ஏற்படவில்லை! அல்லது நீ கேட்ட நேரத்தில் உங்கள்  இரண்டு பேருக்கும் இருந்த நெருக்கத்தின் அளவு கூடக் காரணமாய் இருந்திருக்கலாம்..” என்று குறும்புத் தனமாய்ச் சொல்லிச் சிரித்த கார்கி, “சரி, அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்?” என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

“என்னவோ சொன்னார்..அது நெட்டையும் இல்லை, குட்டையும் இல்லை; நிழலும் இல்லை; வெளிச்சமும் இல்லை; உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை...இதே மாதிரி வரிசையாய்ச் சொல்லிக் கொண்டே போனார்..”.

கார்கி இதைக் கேட்டு அடக்க முடியாமல் சிரித்தாள். அவள் முகம் பிரகாசமானது. “இதிலிருந்தே உனக்கு அர்த்தமாகவில்லையா, மைத்ரேயி, அவருக்கும் பதில் தெரியவில்லை என்று? இல்லையென்றால், இருப்பதைப் புரிந்து கொள்ள எதற்கு இத்தனை ‘இல்லை’கள்?”

அவர்கள் இரண்டு பேருமே இப்போது மௌனமானார்கள். ஆற்று நீரில் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு, அந்தக் குளிர்ந்த நீரின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி சற்று நேரம் பேச்சின்றி இருந்தார்கள். நீரில் தெரிந்து கொண்டிருந்த சூரியனின் பொன்னிற பிம்பத்தை இப்போது அந்தி இருட்டு கவ்வி உண்டிருந்தது. கார்கி மீண்டும் தூரத்து மலையைப் பார்த்தாள். சூரியன் தன்  உஷையைத் தேடிக் கொண்டு அவளது அந்தப்புரத்தை நோக்கி  விரைகிறவன் போல மலை இடுக்கில் தன் பெட்டி படுக்கைகளோடு பதுங்கிக் கொண்டிருந்தான்.

மைத்ரேயி இப்போது எழுந்து கொண்டாள்.  “கார்கி, சந்தியா காலம் முடிந்து இரவு தொடங்கி விட்டது. நான் போக வேண்டும். நீ பிரும்மச் சாரிணி. நீ சுதந்திரமாய் எப்போது வேண்டுமானாலும் உன் ஆஸ்ரமத்துக்குப் போகலாம் என்றாலும் இரவில் இங்கே அதிக நேரம் இருப்பது உனக்கும் அவ்வளவு நல்லதில்லை...அது மட்டுமன்றி உன் தந்தை ரிஷி வாசக்னு, ஆஸ்ரமத்தில் உனக்காகக் கவலையோடு காத்துக் கொண்டிருப்பார்..“

கார்கியும் அவளுடன் கூடவே  எழுந்து கொண்டாள். இரண்டு பேரும் ஒருவர் கைகளை ஒருவர் நட்போடு பற்றியபடி, அசோக மரங்களை எல்லாம் கடந்து  நடந்து போனார்கள்.  ரிஷி வாசக்னுவின் ஆஸ்ரமும் ரிஷி யாக்யவல்கியரின் ஆஸ்ரமும் எதிர் எதிர் திசைகளில் இருந்ததால், இருவருடைய ஆஸ்ரமங்களுக்கும் பிரிகிற வழிகளின் சந்திப்பு வந்தவுடன் விடை பெற்றுக் கொள்கிற  தோரணையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். மரங்களின் அடர்த்தியில் ஒருவர் முகத்து உணர்வுகள் இன்னொருவருக்குப் புலப்படாத அளவுக்கு அந்தி இருள் வியாபித்திருந்தது.

“அப்போது, நான் கிளம்புகிறேன்..” என்று கார்கி, மைத்ரேயியின் விரல்களில்  இருந்து மெல்லத் தன் விரல்களைப் விடுவித்துக் கொண்டாள். ஆனால், மைத்ரேயி கார்கியின் கைகளை விட விரும்பாதவளாய்  அவற்றை மீண்டும் பற்றினாள். அவள் தன்னிடம் இன்னும் எதையோ சொல்ல விரும்புகிறாள் என்று கார்கிக்குப் புரிந்தது.

“மைத்ரேயி, நீ என்னவோ என்னிடம் கேட்க விரும்புகிறாய். எதுவாய் இருந்தாலும் நீ தயக்கம் இன்றிக் கேட்கலாம்..” என்றாள் கார்கி.

“ஒன்றும் இல்லை. நீ பேசியதை எல்லாம் கேட்ட பின் என் மனசில் புதிய கேள்விகள் உறுத்துகின்றன. கார்கி, நீ என்ன நினைக்கிறாய்? சபையில் நீ பிரம்மம் குறித்து எழுப்பிய கேள்விக்கு என் கணவர், ‘தெரியாது’ என்று பதில் சொல்லி இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா?”

கார்கி நிதானமாய்ச் சொன்னாள்: “ஆமாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. என்னைப் பொருத்த வரை ‘எல்லாம் தெரிந்தவன் தான் பிரம்ம ஞானி’ என்று நான் நம்பவில்லை. எது தனக்குத் தெரியாதோ அதைத் தைரியமாய்க் கூச்சம் இன்றித் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் தான் பிரம்ம ஞானி. தெரியாது என்று தெரிந்து கொள்வதும் ஒரு ஞானம் தானே?”

மைத்ரேயியிடம் இருந்து சில கணங்கள் எந்த பதிலும் வரவில்லை. பற்றி இருந்த அவளது விரல்கள் லேசாக அதிர்வதை கார்கி உணர்ந்தாள்.  மைத்ரேயியின் குரல் தழுதழுத்தது. “கார்கி..யாக்யவல்கியரைக் காட்டிலும் நீ எவ்வளவோ வயதில் சின்னவள்..ஆனாலும் உன் அறிவு என்னை வியக்க வைக்கிறது. நியாயமாய் அந்த ஆயிரம் பசுக்களும் உன்னைத் தான் சேர்ந்திருக்க வேண்டும்..”

கார்கி அவளது தோள்களை அன்போடு அழுத்தினாள்.

“நீ மீண்டும் தவறு செய்கிறாய், மைத்ரேயி..ஒரு பிரும்ம ஞானிக்கு அத்தனைப் பசுக்கள் எதற்கு? ஆயிரம் பேருக்குச் சேர வேண்டியவற்றைத் தான் ஒருவனே சுவீகரிக்க நினைப்பவன் எப்படி ஞானியாக இருக்க முடியும்? அவனுக்குப் பெயர் போகி....”

தூரத்தில் எதிர் எதிர் திசைகளில் இருந்த இருவரது ஆஸ்ரமங்களிலும் யாரோ தீபங்களை ஏற்றுவது மங்கலாய்த் தெரிந்தது. மைத்ரேயி வார்த்தைகளின்றி நெகிழ்ந்து  போனாள். விடைபெறும் முகமாக  கார்கியின் தோள்களைப் பற்றி  அவளை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.  இன்னும் சிறிது நேரம் அங்கே இருந்தால் மைத்ரேயி உணர்ச்சி வசப்பட்டுக் கண் கலங்கி விடுவாள் போல் தோன்றியது.

சில தினங்களுக்குப் பிறகு, ஒரு நாள் வைகறைப் போதில்  கார்கி பூக்கள் பறிக்கும் நிமித்தம், யாக்ய வல்கியரின் ஆஸ்ரம வளாகத்தைத் தாண்டி இருந்த மலர் வனம் நோக்கிப் போனாள். போகிற வழியில் ஆஸ்ரமத்தின் வாசலுக்கு முன் சற்று நேரம் தாமதித்தாள்.  உள்ளே மைத்ரேயி எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று ஆஸ்ரமத்துக்குள் பார்வையைச் சுழல விட்டாள். ஏனோ அன்றைக்கு ஆஸ்ரமம், எப்போதுமுள்ள கலகலப்பும் உற்சாகமும் அற்று சிஷ்யர்களின் நடமாட்டமின்றிக் களையிழந்து காட்சி அளித்தது. உள்ளே வழக்கமாய் யாக்யவல்கியர் உட்கார்ந்து சீடர்களுக்கு வேதம் கற்பிக்கும் உயரமான மேடை இன்றைக்கு  வெறுமையாய் இருந்தது. கார்கிக்கு ஏதோ மனதில் நெருடியது.

அவள் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றாள். தூரத்தில் குடிலின் உள்ளிருந்து யாரோ ஒரு பெண் வெளியே வருவது நிழலாய் இங்கிருந்து தெரிந்தது. அந்தப் பெண் வாசலில் நிற்கும் கார்கியை  நெருங்கி வரும் போதே அது மைத்ரேயி என்று புரிந்தது. மைத்ரேயி வெகு அருகில் வந்து விட்ட போதும், கார்கி ஏனோ அவளை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கி  தலை குனிந்தே நின்றிருந்தாள்.

மைத்ரேயி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, கார்கியின் தோள்களைப் பற்றினாள். கார்கி இப்போது அவளை நிமிர்ந்து பார்த்தாள். மைத்ரேயியின் முகம் எந்தச் சலனமும் இன்றி அமைதியாய் இருந்தது.

“மகரிஷி எங்கே? ஏன் ஆஸ்ரமம் இவ்வளவு வெறிச்சோடி இருக்கிறது?”

மைத்ரேயி எதுவும் பேசாமல் இருந்தாள்..

“என்ன நடந்தது?” என்று மீண்டும் கேட்டாள் கார்கி.

“அன்றைக்கு சாயங்காலம் நாம் நதிக்கரையில் பேசி விட்டுப் போனபின் வெகு நேரம் என் மனசாட்சி என்னைக் குடைந்து கொண்டிருந்தது. அதனால்,  நீ என்னிடம் பேசிய நியாயங்களை எல்லாம் அன்று  இரவே மகரிஷியிடம் அவர் ஏகாந்தமாய் நல்ல மனநிலையில் இருக்கிற நேரம் பார்த்து நான் பேசினேன். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் தான் ஞானி என்று நீ சொன்னதையும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் அவரிடம் சொல்லி விட்டேன்..”

கார்கிக்கு ‘திக்’கென்றது. “எல்லாவற்றையுமே சொல்லி விட்டாயா? பெரிய தவறு செய்து விட்டாய், மைத்ரேயி..நாம் அந்தரங்கமாய்ப் பகிர்ந்து கொண்ட எண்ணங்களை எல்லாம் நீ அவரிடம் சொல்லி இருக்கக் கூடாது...அதை எல்லாம் கேட்டு யாக்யவல்கியருக்குக்  கோபம் வரவில்லையா?..”

“இல்லை, கார்கி. அது தான் எனக்கும் ஆச்சரியம்! நான் சொல்லி முடித்த பிற்பாடு,  நெடு நேரம் அவர் ஆகாயத்தை வெறித்த படி எதுவும் பதில் சொல்லாமல் மௌனமாகச் சயனித்திருந்தார். பின் மறு நாள் காலை, என்னையும் காத்யாயினியையும் அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அன்போடு பேசினார். “மைத்ரேயி.. காத்யாயினியையும் ஆஸ்ரமத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்.. நியாயத்தை யார் கேட்டாலும் வயசு வித்யாசம் பாராட்டாமல் ஏற்றுக் கொள்கிற பக்குவம் இல்லை என்றால் அது எப்படி ஞானம் ஆகும்? அது கர்வம் அல்லவா? தெரியாததைத் தெரிந்து கொள்கிற வரை, தெரிந்த மாதிரி நடித்துக் கொண்டிருப்பது நம்மை வேஷதாரிகளின் பட்டியலில் சேர்த்து விடாதா? பூரண ஞானம் என்று ஏதாவது இருக்கிறதா என்று இப்போதும் எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் அப்படி .ஒன்று இருக்குமானால் அதையும் வசபடுத்திக் கொள்கிறவரை நான் பிரும்ம ஞானி ஆகமாட்டேன்.’.என்று சொன்னார். ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று அவரைச் சமாதானப் படுத்த முயன்றேன். அவர் சமாதானம் அடையவில்லை. உன் கேள்விகள் அவரை மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன என்று எனக்குப் புரிந்தது. அமைதியை நாடி மலையின் மீதுள்ள அருவிக் கரையில் கொஞ்ச காலம் தங்கி இருந்து தியானத்தில் ஈடுபடப் போவதாகச் சொன்னார். அங்கு உங்களுக்கு பிரும்ம ஞானம் கிட்டும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். தெரியவில்லை என்று பதில் சொன்னார். எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்டேன். அதற்கும் தெரியவில்லை என்று பதில் சொன்னார்.. ஜனக சபையிலிருந்து பரிசாக வந்த எல்லாப் பசுக்களையும் அவிழ்த்து விட்டு விடுங்கள், அவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். பிறகு நாங்கள் எல்லோரும் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் மலையை நோக்கிக் கிளம்பிப் போய் விட்டார்..“

மைத்ரேயியின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க கார்கிக்கு சங்கடமாக இருந்தது. “கேட்க ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது, மைத்ரேயி.. உனக்கும் காத்யாயினிக்கும் என் மீது கோபம் இல்லையே?...”

மைத்ரேயி சிரமப்பட்டுப் புன்னகைக்க முயன்றாள். அவள் முகத்தில் சோகத்தின் சாயல் இப்போது மெல்ல வெளிப்படத் தொடங்கியிருந்தது. “காத்யாயினியைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு உன் மீது எந்தக் கோபமும் இல்லை. ஆனால், இங்கே கீழே கிடைக்காத எதைத் தேடி அவர் மேலே போய் இருக்கிறார் என்று தான் புரியவில்லை. எப்போது திரும்புவார் என்றும் தெரியவில்லை..”

மைத்ரேயி கார்கியின் பதிலை எதிர்பார்க்காதவள் போல் உள்ளே போய் விட்டாள்.

கார்கி மெதுவாக மலர் வனத்தை நோக்கி நடந்தாள். அவள் மனசில் பல விதமான எண்ணங்கள் கலவைகளாய் ஓடிக் கொண்டிருந்தன. தன் சொற்களால் யாக்ய வல்கியரிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றம் ஒரு  புறம் அவளுக்கு  அவர் மீது மீண்டும் மதிப்பையும் மரியாதையையும் மீட்டுக் கொடுத்திருந்தது உண்மை தான் என்றாலும், அவர் எடுத்த இந்த அதீத முடிவை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. தரையில் கிடைக்காத எந்த ஞானத்தைத் தேடி அவர் மலைக்குப் போய் இருக்கிறார்  என்று கார்கி யோசித்துக் கொண்டே போனாள். இதைத் தானே மைத்ரேயியும் அவளிடம் கடைசியாய்ச் சொல்லி விட்டு உள்ளே போனாள்? யாக்யவல்கியர் இப்படிச் சிரமப் பட்டுத் தேடிக் கொண்டு சென்றிருப்பதை அவர் அருகிலேயே இருந்த மைத்ரேயி எத்தனை சுலபமாய் அடைந்து வைத்திருக்கிறாள்!

போகிற வழியில், இருபுறமும் பரந்த விரிந்து கிடந்த புல் வெளிகளில், பச்சை வானத்தில் மிதக்கும் வெள்ளை மேகங்கள் போல் ஏராளமான பசுக்கள் சுதந்திரமாய் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் ஏதாவது ஒரு பசுவாவது யாக்ய வல்கியர் தேடித் போயிருக்கும் பிரம்ம ஞானத்தை அறிந்து வைத்திருந்தால் அது அவரை தடுத்து நிறுத்தி அவருக்கு முன் போய் நின்று கொண்டு, பிரும்மம் எது என்று ஒரு சுலோகம் பாடி இருக்கக் கூடாதோ என்று நினைத்துச் சிரித்தாள் கார்கி. ஆனால் பசு பேசாது. பிரம்மத்தை அறிந்தவர்களும் பேச மாட்டார்கள்!

அவள் நடந்து கொண்டே கண்களை உயர்த்தி மலைப் பாதையைப் பார்த்தாள். அதன் பசிய காடுகளுக்கு நடுவே வெள்ளைக் கோடு கிழித்த மாதிரி தொலை தூர உயரத்தில் ஓர் அருவி வழிந்து கொண்டிருந்தது. அதற்குக் கீழே மங்கலாய் ஒரு சின்னப் புள்ளி தெரிந்தது. ஒரு வேளை அது பிரும்ம ஞானம் தேடிப் போயிருக்கும் யாக்யவல்கியராகக் கூட இருக்கலாம்.

***************************************************

(பிருஹதாரண்யக உபநிஷத்தில் வரும் கார்கி-யாக்யவல்கியர் சம்வாதத்தை அடிப்படையாக வைத்துக் கற்பனையாக விஸ்தரித்து எழுதப் பட்டது.)

கணையாழி, மே-2016