Monday, October 28, 2013

இன்றைய மனிதர்களுக்கு நடுவே..

ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்டபத்தில், இந்தத் தூணோரத்தில் இப்படிக் கால் வலிக்காமல் தவம் செய்கிறவள் மாதிரி நின்று கொண்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்கள் என்னைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருக்கிற மாதிரி அப்படி ஓர் ஒயிலோடு நிற்கிறேன். இதில் எனக்குப் பிடிபடாத பெருமை. 

பக்கத்தில் இருக்கிற மலைக் கோயிலுக்கு வருகிற யாத்திரிகர்களுக்காக அவர்கள் இளைப்ப்பாற யாரோ  ஓர் அரசன் இந்தக் கல் மண்டபத்தை எப்போதோ நிர்மாணித்தானாம். அப்போதே நானும் இந்தத் தூணோரத்தில் குடியேறினேன்.

என்னை இந்தத் தூணோரம் நிறுத்திய சிற்பி அவன் மனோபாவத்தில் உதித்த நளினங்களை எல்லாம் வடித்து எடுத்து ஓர் அழியாத அலங்காரச் சிலையாக என்னைச் செதுக்கி நிறுத்தி விட்டானாம். எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். ஐயா! உங்களோடு நான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிற போது, உள்ளூரப் படிந்திருக்கிற துக்கத்தோடு தான் பேசுகிறேன்.


சில வருஷங்களாக இந்த  மண்டபத்தில் நான் அதற்கு முன் அனுபவித்து வந்த தனிமையும் சுகங்களும் மாறிப் போய் விட்ட மாதிரி ஓர் உணர்வு அடிக்கடி எனக்கு ஏற்படுகிறது. அதற்கு முழுக் காரணம் நான் நின்று கொண்டிருக்கிற இந்தத் துணுக்குச் சற்றுத் தள்ளி இருந்து வரும் இரண்டு திருவோடுகள் தான். 


அவர்களில் ஒருவன் குருடன். இன்னொருவன் செவிடன். இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள், எப்படி ஜோடி சேர்ந்தார்கள், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் குருடன் செவிடனை எப்போதும் ‘தம்பீ’ என்று தான் அழைப்பான். செவிடன் குருடனைப் பதிலுக்கு ‘அண்ணே’ என்று கூப்பிடுவான்.

இவர்களுக்கிடையே இருக்கிற நட்புறவு ரொம்பவும் ரசிக்கிற மாதிரி இருக்கும். ஒப்பாரி வைக்கிற பொது கூட ஒரு வித நெருக்கம் புலப்படும்.

சில சமயம், இவர்களிடம் ஏதாவது ஒன்றில் காரசாரமாக வாக்கு வாதம் நடக்கும். செவிடன் தான் நிறையப் பேசுவான். குருடன் குறைவாகப் பேசுவான். அதற்குக் காரணம் அவுனுக்குப் பேசத் தெரியாது என்பதல்ல; அவன் எது பேசினாலும் செவிடனுக்குக் காதில் விழுகிற மாதிரி, அந்த மண்டபமே அதிர்கிற குரலில் கத்திப் பேச வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.

ஒரு நாள் செவிடன் சொன்னான்: “அண்ணே! இந்தப் பொம்பளை சிலையைப் பாரேன்..ஆனா, பாவம் உன்னால தான் பாக்க முடியாதே? எல்லாத்துக்கும் கொடுத்து வைக்கணும்! அடடா, என்ன அழகு! அந்த உடம்பை என்னமா வடிச்சிருக்கான் தெரியுமா? என்னால வருணிக்க முடியல. இது செலையே இல்ல. உயிரோட அப்படியே ஒரு அப்சரஸ் நிக்கற மாதிரியே இருக்குண்ணே. அதை எல்லாம் பாத்து ரசிக்கக் கொடுப்பினை வேணும்..”

எனக்குப் பெருமையாக இருக்கும். குருடனுக்கு எரிச்சலாக இருக்கும்.

“அட,சரி தம்பீ..கொஞ்சம் சும்மா இரு. எனக்குத் தூக்கம் வருது..’ என்று செவிடனை அடக்குவான் குருடன்.

இவர்களுடைய சச்சரவுகள் எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

குருடன் மீது மட்டும் எனக்கு ஒரு தனிப்பட்ட அனுதாபம் எழுவது உண்டு. அவன் பூர்வீகத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொள்வேன். அதற்குரிய ஏக்கச் சுருக்கங்களும் துயரம் தோய்ந்த சாயல்களும் அடிக்கடி அவன் முகத்தில் தோன்றும். அவன் அவற்றை வாய் விட்டு விரிவாகச் சொல்வான் என்று நான் எதிர்பார்ப்பதெல்லாம் வீணாகவே போகும்.

ஆனால் எனக்கு உண்மையிலேயே அவன் மேல் அசாத்தியக் கோபம் ஏற்பட்ட நாளும் ஒன்று உண்டு. எப்போதும் போல் செவிடன் என் அழகை வாய் விட்டுப் புகழ்ந்தான்.

“அண்ணே! அந்தப் பொண்ணு முகத்துல பாக்கறவங்க உசிரையே சுண்டி இழுக்கிற மாதிரி அப்படி ஒரு மயக்கற சிரிப்பை எப்படி அந்த சிற்பியால கொண்டு வர முடிஞ்சுது? அதைப் பாத்தாப் போறும். பசி தீர்ந்துடும் அண்ணே..”

“ஆ பெரிய மயக்கற சிரிப்பைக் கண்டுட்டே. இந்த உலகத்துல நம்மள மாதிரி அலங்கோலமா இருக்கறவங்க தான் அதிகம். இந்த மாதிரி அலங்காரமா இருக்கறதெல்லாம் உண்மையிலேயே இந்த உலகத்துக்குத் திருஷ்டிப் பரிகாரம் தம்பீ..என்ன பெரிய அலங்காரம்! எல்லாம் ஒரு நாள் இப்படித் தான்  அலங்கோலமாப் போவப் போவுது..”

நான் நடுங்கினேன். ‘நான் கூடவா அப்படி ஆகி விடுவேன்?” என்று பொருமினேன்.


அன்று இரவு நான் சொல்வதற்கே வெட்கப்படும்படியான ஒரு சம்பவம் நடந்தது. செவிடன் தூங்கிவிட்ட பின், குருடன் தட்டுத் தடுமாறி என்னிடம் வந்தான். முதலில் தயங்குகிறவன் மாதிரி என்னை உச்சி முதல் பாதம் வரை லேசாகத் தடவினான்.

எனக்கு என்னவோ போல் இருந்தது. கண்ணிமைகள் படபடக்கப் பார்வை இழந்த விழிகளால் என் முகம் இருந்த திசையை ஒருவித அனுமானத்தோடு வெறித்து நோக்கியபடி இருந்தான். ”செவிடன் சொன்ன மாதிரி நீ ரொம்ப அழகாத் தான் இருக்கே..” என்று முணுமுணுத்தான். திடீரென்று வெறி வந்தவன் மாதிரி என்னை அப்படியே தழுவினான்.

நான் வெட்கத்துக்கும் அவன் மீது ஒருவித கோபத்தோடு பிறந்த அருவருப்புக்கும் ஆளானேன். சற்று நேரத்துக்கு முன் என்னை வெறும் கல் என்று நிந்தையாகப் பேசி அசட்டை செய்தவன், என்னை இப்போது உயிர் உள்ளவளாய் நினைத்து...சே! சே!....இந்தத் தலைமுறை மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிற சாபம் போலும் இது, என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று இரவு சரியான மழை பெய்து கொண்டிருந்தது. மலைக் கோயிலில் அர்த்தஜாம பூசைக்கான மணி அடித்து ஓய்ந்து அரை மணி நேரம் ஆகி விட்டது. குருடனும் செவிடனும் ஒரு தூணோரம் முடங்கி இருந்தவாறு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் தான் இந்த மண்டபத்துக்குள் ‘அவளும்-அவனும்’ மழைக்காக ஒதுங்கினார்கள். அவளுக்கு இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம். உடம்பு பொன் மாதிரி இருந்தது. அந்த மண்டபத்து மெல்லிருளில் ஒரு தங்கச் சிலையாக தகதகத்து மின்னிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் அவளை அணைத்த மாதிரி நின்று கொண்டிருந்த இளைஞன், அவளுக்குக் கணவனாக இருக்க வேண்டும்.


மழை வலுத்தது. அவள் தலைப்பை இழுத்துத் தன் தோளைப் போர்த்திக் கொண்டு, அவனோடு அவனாக ஒட்டி நின்றவாறு அவனைப் பார்த்து ஏதோ கேட்டாள். மழைச் சத்தத்தில் அவள் குரல் சரியாகக் கேட்கவில்லை. ஆனால், வெண்கலக் கிண்ணத்தை மயிற்பீலியால் தட்டிய மாதிரி, ஓர் இங்கிதமான இனிய ஒலி, அந்த மழைச் சத்தத்தில் மென்மையாகக் கேட்டது. அவன் அவளைப் பதிலுக்குப் பார்த்து ஏதோ சொல்லவும் அவள் பாலாய்ச் சிரித்தாள்.

அவர்கள் இரண்டு பேரும் மண்டபத்துக்குள் வந்தார்கள். உட்கார்வதற்கு இடம் தேடுகிற மாதிரி இருந்தது அவர்கள் பார்வை. சட்டென்று அவள் ஒரு வித நளினமான புன்னகையொடு என்னைச் சுட்டிக் காண்பித்தாள். அவன் சிறிது நேரம் என்னைப் பார்த்து விட்டு, ஒரு விதத் திருப்தியோடு அவளைப் பார்த்துப் பதிலுக்கு ஒரு புன்னைகையை வீசினான். இருவரும் நான் இருந்த தூண் மறைவில், ரொம்பவும் நெருங்கி உட்கார்ந்து கொண்டனர்.

அவர்கள் என் பக்கமாய் வந்தவுடனேயே செவிடன் எழுந்து உட்கார்ந்து கொண்டான். குருடன் நெருங்கி ‘ஸ்..’ என்று சங்கேதக் குரல் எழுப்பியவாறு அவன்  தோளில் குத்தினான். குருடன், “என்ன தம்பீ?” என்று கேட்கவும் உடனே செவிடன் மெல்லிய குரலில் சொன்னான்.

“அண்ணே! ரதி மாதிரி ஒரு பொண்ணும், ஒரு பையனும் மண்டபத்துல மழைக்காக ஒதுங்கி இருக்காங்கண்ணே...”

குருடன், சுவாராஸ்யம் இல்லாமல் தலையை ஆட்டினான்.  

“இது பொது இடம். யார் யாரோ வருவாங்க. அதைப் பத்தி நமக்கென்ன?”

மழை இரைச்சலில் அவன் குரல் செவிடனுக்கு மட்டும் கேட்டிருக்கும்.

செவிடன் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தான். ‘”என்ன அழகு! என்ன அழகு! கண்ணு இருக்கிறவனுக்கில்லே, அதோட அருமை தெரியும்!” என்று சொல்லிக் கொண்டே படுத்தான்.

என் முன்னால் இருளோடு இருளாக இணைந்து பழங்காலத்து அன்றில் பறவைகளைப் போல அப்படியோர் இணக்கத்தில் அமர்ந்து இருந்த அவர்களிடம் எனக்குப் பொறாமையாய் இருந்தது. அவன் அவளிடம் ஏதோ சொல்ல அவள் கலகலவெனச் சிரித்தாள்.

தூணோரமாய் முடங்கி இருந்த குருடன் நெளிவது  தெரிந்தது.

“எப்படிச் சிரிக்கிறா, அவ! சங்கீதம் மாதிரிக் காதுல விழுதே! காது இருக்கிறவனால தான் அதை ரசிக்க முடியும்.” என்று மெல்லச் சொல்லிக் கொண்டான்.

திடீரென்று அந்தச் சிரிப்பொலி நின்று போய் விட்டது, அவளின் சிரிப்பொலி அந்த இடத்தில் எழுப்பி இருந்த ஒரு சுகமான இனிமைக்குத் திருஷ்டி கழிப்பது போலச் செவிடன் கர்ண கடூரமாய்க் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்தான்.

குருடன் மட்டும் ஏதோ மனப் போராட்டங்களோடு நெளிந்து கொண்டிருந்தான். திடீரென்று வெறி பிடித்தவன் மாதிரி எழுந்து, தட்டுத் தடுமாறி என்னை நோக்கி நடந்து வந்தான். கைகளை நீட்டித் துழாவியபடி என்னைத் தடம் கண்டு பிடித்து என் முதுகின் பின் ஒட்டி நின்று கொண்டான்.  

அவன் தொண்டையிலிருந்து வந்த ஒரு குரூரமான உறுமலும் ஏதோ இனம் தெரியாத சில முணுமுணுப்புகளும் என்னை நடுங்கச் செய்தன. திடீரென்று குருடனின் கரடுமுரடான பத்து விரல்களும் என் முதுகில் ஓர் அசுர வேகத்தோடு அழுந்தின. ‘இந்தப் பாவிக்கு என்ன வந்தது?’ என்று தவித்தேன்.

குருடனின் கை விரலில் ஆவேசம்  பெருக்கெடுத்தது. “உனக்குச் சிரிப்பு வேறயா, சிரிப்பு?” என்று வெறியோடு கத்தினான். அவன் குரல் அந்த மண்டபத்துக் கோடியில் போய் எதிரொலித்துத் திரும்பி அவனிடமே மோதியது. அந்தச் சத்தத்தில் அங்கு சுகமாகத் தூங்கி கொண்டிருந்த வவ்வால்கள் ‘கிரீச்’சிட்டுக் கொண்டு நாலாபுறமும் பீதியோடு பறந்து சிதறின.

திடீரென்று நான் அலங்கோலமாய்க் கீழே விழுந்தேன். செவிடன் விரைவாக என்னை நோக்கி ஓடிவந்தான். “அடப் பாவி!” என்று குருடனை நோக்கிக் கத்தினான். என்னை அவசரமாய்த் தூக்கி நிறுத்தினான்.

‘இப்படி இந்த அழகுச் சிலையை அலங்கோலப் படுத்த உனக்கு எப்படி அண்ணே மனசு வந்தது?” என்று கத்தியபடி குருடனைப் பிடித்து உலுக்கினான்.

குருடன் பைத்தியம் பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்தான். விழி இமைகள் பீதியோடு அடித்துக் கொண்டன. முகம், சவத்தைப் போல வெளிறி இருந்தது.

“சிலை போனதுக்கா கத்தறே? சிலைக்குக் கீழ ஒரு கொலையே நடந்துடுச்சு தம்பீ..”

செவிடனோ ஒன்றும் புரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தான்.

“என்ன சொல்றே? சிலைக்குக் கீழே வெறும் தரை தானே இருக்கு?”

“அப்போ அந்தப் பொண்ணு?”

“அவங்க மழை நின்னவுடனேயே போயிட்டாங்களே?”

குருடன் எங்கோ வெறுமையைப் பார்த்து வெறியாய் நின்றான்.

“தம்பீ..பத்து வருஷத்துக்கு முன்னால அவளும் இப்படித் தான் சிரிப்பாச் சிரிச்சிக்கிட்டுருந்தா. ஒரு நாள் என் கண்ணு ரெண்டும் அவிஞ்சி போச்சு. அவளும் என் சொத்தை எல்லாம் வாரிக்கிட்டு எவனோடயோ ஓடிப் போயிட்டா. அந்தச் சிரிப்பு மாதிரியே இருந்தது தம்பி, இவ சிரிச்சதும். என்னால வெறிய அடக்க முடியாம தட்டுத் தடுமாறி எழுந்து வந்து அவங்க இங்கேயே தூங்கறதா நினைச்சு இந்தச் சிலையை ஒரே தள்ளாத் தள்ளி...”  

செவிடன் திக்பிரமையோடு குருடனைப் பார்த்தான்.

“அண்ணே, அழகா மூக்கும் முழியுமா இருந்த சிலையை இப்படி உன்னோட வெறிக்குப் பலியாக்கிட்டியே?”

“போனாப் போவட்டும் தம்பீ! இந்த மண்டபத்துல மூக்கும் முழியுமா எதுவுமே இருக்க வேண்டாம். இந்த இடத்துல நம்மளச் சுத்தி இருக்கிற எதுவுமே நம்மளை விட உசந்ததா இருக்கக்கூடாது;. நாம் இனிமே மறுபடியும் குறையே இல்லாம அழகா மாறப் போறோமா? இல்ல, இந்த சாமி தான் நம்மள அழகா மாத்தப் போகுதா? இல்லையே? ஆனா, அழகா இருக்கறதை எல்லாம் நம்மள மாதிரி மாத்தறது எவ்வளவு சுலபம் பாத்தியா?”  

குருடன் குரூரமாகப் பேசிக் கொண்டே போனான். பேசி முடித்து விட்டு, அதிர்ந்து சிரித்தான். ‘எவ்வளவு குரூரமானவர்கள், இவர்கள்! எவ்வளவு குரூரமானவை இவர்களது எண்ணங்கள்!’ என்று எண்ணி எண்ணி நான் மாய்ந்து போனேன்.

அப்புறம் என்ன? தங்களிடம் பார்க்க முடியாத நளினங்களைக் கல்லிலாவது பார்க்கலாமே என்ற மெய்யான ஏக்கத்தோடு அன்றைக்கு இருந்தவர்கள் என்னைச் செதுக்கி நிறுத்திய நிலை மாறி, தங்களது அவலங்களுக்கு மத்தியில் கல்லில் இருக்கிற அழகுகளைக் கூடக் காணச் சகிக்காது அதையும் தங்களைப் போலவே மாற்றிச் சிதைக்கிற இன்றய மனிதர்களின் குரூரங்களுக்கு நடுவே-


இந்த மண்டபத்தில் வருவோர் போவோரின் கேலிகளுக்கெல்லாம் ஆளாகிக் கொண்டு முகமெல்லாம் சிதைந்து, இவர்களோடு இவர்களாக இவர்களைப் போலவே நானும் மூளியாய் நிற்கிறேன்.
(தினமணி கதிர், 3.11.72)
*
(1972-ஆம் வருஷத்திய தீபாவளி ஒருவிதத்தில் என்னால் மறக்க முடியாத தீபாவளி. காரணம், அந்த வருஷத்திய தினமணி கதிர் தீபாவளிச் சிறப்பிதழில், அந்தக் காலத்திய 'பிரபல'ங்களின் சிறுகதைகளுக்கு மத்தியில் எனது சிறுகதையும் பிரசுரமாகி இருந்தது. இது தினமணி கதிரில் வெளிவந்த என்னுடைய இரண்டாவது சிறுகதை. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு, அதே மாதிரியான இன்னொரு தீபாவளியன்று 'இன்றைய மனிதர்களுக்கு நடுவே' அன்றைய ஞாபங்களை அசை போடுவது சுகமாகவே இருக்கிறது!)

No comments:

Post a Comment