Friday, December 6, 2013

ஒரு பிடில் பெட்டி மூடிக் கிடக்கிறது


ந்தக் குத்துக் கல்லில் அமர்ந்த படி எதிர்த்தாற் போல் தெரிகிற உயர்ந்த மாடிக் கட்டிடத்தையே வெறித்துக் கொண்டிருந்த சுகுமாருக்கு,அந்த இளைஞனின்  குறுக்கீடு எரிச்சல் ஊட்டுவதாய் இருந்தது.

“நான் தொல்லை தருகிறேனா?” என்று குழைந்தபடியே தோளைத் தொடும் அவனை ஒருகணம் நிமிர்ந்து பார்த்து, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று சிறிது குழம்பிய போது, அவனே பேசத் தொடங்கினான்: “உங்களை நான் ரெண்டு நாளாகவே பாத்துக்கிட்டிருக்கேன்.  இந்தக் கல்லை மட்டும் ரொம்பவும் நெருங்கின சிநேகிதன் மாதிரி சொந்தம் கொண்டாடிக்கிட்டு, இதுல வந்து உட்கார்றீங்க..”

அந்த இளைஞன் பேசப்பேச சுகுமாரின் கண்கள் அதிசயமாய் விரிந்து பெரிதாகின. “நீங்க என்னைக் கூர்ந்து கவனிச்சிக்கிட்டு வர்றீங்க போலிருக்கு..” என்று மெல்ல முணுமுணுத்தான்.

அந்த இளைஞன் தன்னை இப்போது அறிமுகப் படுத்திக் கொண்டே சுகுமாரின் அருகில் கிடக்கும் இன்னொரு கல்லில் அமர்ந்து கொண்டான். அவன் பெயர் குருமூர்த்தி என்றும், அவன் சென்னையில் ஒரு பிரபல கம்பெனியில் ‘சேல்ஸ் பிரமோட்ட’ராக வேலை செய்கிறான் என்றும் சுகுமார் தெரிந்து கொண்டான்.

“இங்கேருந்து ஏழெட்டு மைல் தள்ளி இருக்கிற ஸ்பின்னிங் மில்லுல நான் டெக்னீஷியனா இருக்கேன். வேலை நேரம் போக மீதி நேரம் முழுசையும் நான் இந்த இடத்துல தான் கழிக்கறேன். இந்த இடமும் இந்தக் கல்லும் எனக்கு நிரந்தர சொத்தா ஆயிட்ட மாதிரி நான் அடிக்கடி உணர்வதுண்டு. அதெல்லாம் சும்மா ஒரு பிரமை!”  என்றான்.
குருமூர்த்தி அவனை அனுதாபத்தோடு பார்த்தான். ”மிஸ்டர் சுகுமார், நான் சந்திச்ச மனிதர்கள்ளேயே நீங்க ரொம்ப வித்யாமனவர்..”

“மிஸ்டர் குருமூர்த்தி..ரெண்டு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் நான் இந்தத் தோள்ல ஒரு பிடிலோட சுமையைச் சுமந்துக்கிட்டிருந்தேன். இந்த இடம் முழுக்கவும் அது என்னையும் பிரமிக்க வச்சுப் பொழிஞ்ச ராகங்களும் அந்த ராகங்கள் என் மனசுல என்னிக்குமில்லாத ஒரு புதுச் சுமையை ஏத்தி வச்சதும்.....சுமைகள் எனக்கு எப்பவுமே வேண்டி இருந்தன. அதனுடைய அழுத்தங்கள்-நானே வரவழைச்சிக்கிட்டுதுன்னாலும்-எனக்கு சுகமாகவே இருந்தன.” அவன் சிறிது நிறுத்தினான்.

குருமூர்த்தி அவனை விசித்திரமாய்ப் பார்த்தான். “என்னிடத்துல நீங்க எதையோ சொல்ல வரீங்க. ஆனா, சொல்லவும் தயங்கறீங்க. நீங்க எந்தத் தயக்கமும் இல்லாம என் கிட்டப் பேசலாம். ஆனா அதுக்காக நான் உங்கள வற்புறுத்த மாட்டேன்.”

“அதை நான் யார் கிட்ட வேணும்னாலும் சொல்லலாம், மிஸ்டர் குருமூர்த்தி!  ஆனா அதை நான் சொல்றப்போ, நீங்க ஒரு ‘சினிமா சிநேகிதன்’ மாதிரி, கேக்கக் கூடாது! ஒரு  உயிருள்ள மனுஷனோட யதார்த்தமான உணர்ச்சிகளை நாம இப்போ பகிர்ந்துக்கறோம்கிற அக்கறை உங்ககிட்டே இருக்கணும். “

குருமூர்த்தி தன்னைச் சரியாக அமர்த்திக் கொண்ட நிலையில் ஒரு சிகரெட்டை எடுத்து சுகுமாரிடம் நீட்டி, அதை அவன் பெற்றுக் கொண்ட பின்னர், தானும் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுகுமார் தன் சுட்டு விரலை நீட்டிக் குருமூர்த்திக்கு எதிர்ச் சாரியில் தெரியும் மஞ்சள் நிறக் கட்டிடம் ஒன்றைக் காட்டினான். அவன் விரல் நீண்ட திசையில் கம்பீரமாய்த் தெரிந்த அந்த மாடி வீட்டைச் சுற்றிலும் குரோட்டன்ஸ் செடிகளும் விசிறி வாழை களும் வளர்ந்திருந்தன. வெகு நாட்களாய் வர்ணம் பூசப் படாத நிலையில் பழுப்பும் கருப்புமாய்  ஓர் இரும்புக் கதவு  அந்த வீட்டின் காம்பவுண்ட் வாசலுக்குச் சிறை இட்ட மாதிரித் தெரிந்தது.

அந்த வீட்டிற்கு இருபுறமும் தள்ளித் தள்ளி அங்கங்கே சிறிதும் பெரிதுமாய் வீடுகள், மௌன விரதம் மேற்கொள்ளும் மனிதர்களைத் தாங்கிக் கொண்டிருப்பது போலக் கலகலப்பின்றி இருந்தன. தொலைவில் இந்த வீடுகளை எல்லாம் இணைக்கும் தெரு முனையில் ஒரு பழைய பலகையில் ‘அயோத்தி நகர் எக்ஸ்டன்ஷன், ஆறாவது தெரு’ என்று எழுதப் பட்டிருந்த வாசகங்கள் மங்கலாய்த் தெரிந்தன.

“மிஸ்டர் குருமூர்த்தி, அதோ தெரியுதே அந்த மாடி வீட்டுக்குப் பக்கத்துல, உள்ளடங்கினாற் போல...அந்த ஏழாம் நம்பர் வீட்டின் மாடி அறை தான் என்னோட இருப்பிடம். நான் இப்போ சொல்றது எல்லாமே ரெண்டு வருஷங்களுக்கு முன்னால எப்பப்பவோ  வெவ்வேற சந்தர்ப்பங்கள்ல நடந்த விஷயங்கள். தினமும் விடிகாலையில எழுந்து வயலின் சகிதமா இதே இடத்துல வந்து நான் உட்காருவேன். வயலின் கம்பிகள்ள எனக்குக் கட்டுப் படாமலேயே வில் அப்படியும் இப்படியும் நெளியும். வாய், அந்த ட்யூனோட இழைஞ்சி போற மாதிரி எனக்கு ரொம்பவும் பிடிச்ச ‘அன் ஏஞ்சல் இன் த சம்மர் நைட்’ நோட்சை இரைஞ்சு பாடும்.

“ஒரு நாள் ஒரு நிஸ்சலமான வைகறைப் பொழுதில், அந்த விசிறி வாழைக்குக் கீழே எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாம நான் அவளைப் பார்த்தேன். அவளோட உடம்பு அங்கேயும், கண்ணும் மனசும் இங்கேயும் இருந்ததை நான் ஓரப் பார்வையாக் கவனிச்சு, அதை லட்சியம் பண்ணாதவன் மாதிரி என் பாட்டுக்கு பிடில் கம்பிகள்ல விரல்களை ஓட விட்டுக்கிட்டிருந்தேன். ஆனா ஏனோ அந்த நேரத்துல என்  திறமைகள வழக்கத்துக்கு மாறா அதிகமாகவே நான் பிரயோகிச்சு வாசிக்கறதை என்னோட உள் மனம் எனக்கு உணர்த்திக்கிட்டே இருந்தது.”
சுருதிக்காக வயலின் தக்கைகளை முடுக்கி விட்டு,  ஸ்வரங்களைக் காதோடு காதாய் ஆராய்கிற வித்வானைப் போல சுகுமாரும் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பேசாமல் இருந்தான்.

“விசிரிவாழைக்குக் கீழே அவளை நான் பார்த்த கொஞ்ச நேரத்துக்கப்புறம், அந்த வீட்டிலேருந்து என்னை நோக்கி ஒரு இளைஞன் வர்றதைப் பார்த்தேன். வந்தவன் சுதாகர்னு தன்னை அறிமுகப் படுத்திக்கிட்டான். என்னோட சங்கீதம் அவனையும் அவனோட தங்கையையும் ரொம்பக் கவர்ந்திட்டதாச் சொன்னான். அந்த வீட்டை அவனோட அப்பா ரெண்டு நாளைக்கு முன்னால தான் விலைக்கு வாங்கி இருக்கிறதா சொன்னான். சென்னையிலேருந்து இன்னும் கொஞ்ச நாள்ல அவரும் அவனோட அம்மாவும் இங்க வரப் போறதாவும் இப்போ இவனும் இவன் தங்கையும் மட்டும் வந்து தங்கி இருக்கிறதாவும் சொன்னான்.

“அவன் சொன்ன விவரங்கள் எல்லாம் எனக்குத் தேவை இல்லாததாத் தோணினாலும், ஒரு நகரீகத்துக்காக வெறுமனே தலைய ஆட்டினேன். ஆனா, என்னையும் மீறி என் கண்கள் அங்க போறதைத் தவிர்க்க முடியல. என்னை அவனோட அழைச்சிக்கிட்டுப் போயி வாசல்ல நிக்கற அவளைக் கூப்பிட்டு, ‘இவ என் சிஸ்டர்’னு சொல்லி அறிமுகப் படுத்தினான். நான் அவளைப் பார்த்து லேசா ‘ஸ்மைல்’ பண்ணினப்போ, அவ பதிலுக்கு அளவுக்கு அதிகமாவே சிரிச்சதா எனக்குப் பட்டது.

“அவ கேட்டா: ‘எனக்கு உங்களோட வாசிப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா நீங்க ஏன் இப்படி ஒரு நடைபாதைக் கலைஞன் மாதிரி ஒரு பொது இடத்துல உட்கார்ந்து வாசிக்கணும்?’

“நான் சொன்னேன்: ‘என்னைப் பொருத்த வரைக்கும் நான் சங்கீதத்தை வேற யாரையும் சந்தோஷப் படுத்தறதுக்காகவோ சபைகள்ல வாசிச்சுப் பாராட்டுப் பெறணுங்கிறதுக்காகவோ கத்துக்கல. என்னை சந்தோஷப் படுத்திக் கொள்ளவே நான் வாசிக்கறேன். எனக்கு நான் எந்த நோட்சை எப்படி வாசிக்கிறேன் என்கிறது தான் முக்கியமே தவிர, எந்த இடத்துலேருந்து வாசிக்கிறேன் என்கிறது முக்கியமில்ல.’

“நான் இப்படிச் சொல்லிட்டு அவளைப் பார்த்தேன். அப்போ அவளோட கண்கள்ல கிளம்பின மலர்ச்சியை எந்த விதத்துலயாவது, ஒரு ராகமா மாத்த முடியுமான்னு நான் அசட்டுத் தனமா யோசிச்சேன்!

“ஒரு நாள் நான் அவ பேரைக் கேட்டப்போ, அவ சிரிச்சிக்கிட்டே, ‘என் பேரைக் கூடத் தெரிஞ்சிக்காமயா நீங்க இத்தன நாள் பழகினீங்க?’ன்னு கேட்டுட்டு, தன் பேரு ரேணுகான்னு சொன்னா.”

சுகுமார் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தான். குருமூர்த்தியின் முகத்தில் விசித்திரமான சலனங்கள் நிறைந்திருப்பதை அவன் கவனித்தும் கவனிக்காதவன் போலவே இருந்தான்.

“ரேணுகா என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச முதலும் கடைசியுமான சிநேகிதியா இருந்தா. நாளாவட்டத்துல அவ அப்படிக் கூட இல்லாம அதுக்கும் மேற்பட்டு என் அந்தரங்கமான நேசங்களுக்குக் காரணமாய் இருக்கிற அற்புதமான ஒரு ராக வெள்ளமா மாறிப் போனா. பல இரவுகள் நான் அவள நினைச்சுத் தூங்காம இருந்தேன். சில சமயங்கள்ல என்னையும் மீறி, எனக்கே கேக்கிற மாதிரி பிடில் கம்பிகள் வழியா 'ரொஸட்டி’யோட ‘ப்ளஸ்ட் டாம்சல்’ கவிதைகள்ளேருந்து சில வரிகளை முணுமுணுப்புகளாத்  தவழ விடுவேன். என்னோட ஏக்கங்களக் கூட என்னால சந்கீதமாத்தான் பிரதிபலிக்க முடிஞ்சிதுங்கறது என்னோட பலமா பலவீனமான்னு இன்னி வரைக்கும் எனக்குப் புரியல.  

“ஒரு நாள் அவ ரொம்பவும் உற்சாகமா மீராபாயோட ‘மனமோகன தில்கா ப்யாரா’ங்கற பாட்டைப் பாடிக் காமிச்சு அதை பிடில்ல வாசிக்கச் சொன்னா. மீராவோட பத்தி ரசம் முழுசையும் ஒரு லைட் ட்யூன்ல அடக்கப் பிரயத்தனப் பட்டு, நான் முதல் முதலா சிரமப்பட்டு வாசிக்கறப்போ, அவ என் முன்னால தானே ஒரு மீராவாகி, சிரமமே இல்லாம அந்தப் பாவனைகளை முகத்துல தேக்கிக் காதல் வேதனைகளோட நிக்கற மாதிரி எனக்குத் தோணவே நான் திகைச்சுப் போனேன்,

“என் மனசுக்குள்ளேயே வளர்த்துக்கிட்ட ஏக்கத்துக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி- ஒரு நாள், சுதாகர் சொன்னான். அது, ரேணுகா என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறாங்கற விஷயம். எனக்கு உடம்பெல்லாம் யாரோ ஒரு கூடை மல்லிகைப் பூக்களைக் கொண்டு வந்து கொட்டின மாதிரித் தோணிச்சு. ஆனா, என்னோட உணர்ச்சிகளை எல்லாம் மறைச்சுப் புதைச்சு வச்சுட்டு, எனக்கு அவன் சொன்னதில கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லைன்னும், அவளைப் போல இருக்கிற ஓர் அழகான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கு இல்லவே இல்லைன்னும் சொன்னேன்.”

இந்த இடத்தில குர்மூர்த்தி சட்டென்று, “ஒ..மிஸ்டர் சுகுமார், நீங்க ஏன் அப்படிச் சொன்னீங்க?” என்று ஆச்சரியமாய்க் கேட்டான்.

சுகுமார் விரக்தியாய்ச் சிரித்தான். “எனக்கு வயலின் நரம்புகளை ‘ஹேண்டில்’ பண்ணத் தெரிஞ்ச அளவுக்கு என் பிரச்சனைகளை ‘ஹேண்டில்’ பண்ணத் தெரிஞ்சிருக்கல. என்னை எந்த ஒரு அழகான பொண்ணும் காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்கவோ முடியாதுங்கற மாதிரி எனக்கொரு தாழ்வு மனப்பான்மை.

“ஆனா ரேனுகாவைப் பார்த்ததுக்கப்புறம், அவளோட ரசனைகளையும் குழைவுகளையும் ஆர்வம் தேங்கிப் பளபளக்கிற அந்த அழகான கண்களையும் சந்திச்சதுக்கப்புறம் என்னோட பிடிவாதங்கள் தளர்ந்து போய் அந்தரங்கக்துல ஆசைகள் வளர ஆரம்பிச்சுது. ஆனாலும் நான் ஏனோ இப்படி நெனச்சேன். ’எந்தப் பொண்ணும் என்னோட சந்கீத்தால கவரப்படலாம். அந்த அளவுக்கு என் சங்கீதம்  மேன்மையானது. ஆனா எந்தப் பொண்ணும் என் தோற்றத்தால கவரப்பட முடியாது. அந்த அளவுக்கு என் தோற்றம் கவர்ச்சி இல்லாதது..”

அவன் மேலே தொடராமல் மௌனமாய் இருந்தான். குருமூர்த்தி சுகுமாரைக் காட்டிலும் மிகவும் குழம்பிப் போயிருந்தான்.

“அதுக்கப்புறம் கொஞ்சநாள்ல சுதாகர் குடும்பம் ஏதோ சில காரணங்களுக்காக இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு சென்னைக்கே போனது. அவங்க  போயி ஒரு மாசம் கழிச்சு எனக்கு ஒரு நாள் ரேணுகாகாவோட கல்யாணப் பத்திரிகை வந்தது. ஏதோ ஒரு படபடப்பிலேயும் வெறியிலேயும் அந்தப் பத்திரிகையைச் சரியாப் பார்க்கக் கூடப் பொறுமை இல்லாம சிகரெட் தணல்லையே அதைக் கொளுத்தி அது திகுதிகுன்னு எரியறப்போ, ரோமாபுரியக் கொளுத்திட்டு எப்பவோ பிடில் வாசிச்ச நீரோ மாதிரி நானும் கடைசி முறையா அன்னிக்கு பிடில் வாசிச்சேன். ‘ஐ ஸீக் வாட் ஐ கெனாட் கெட், ஐ கெட் வாட் ஐ கெனாட் ஸீக்..’ என்ற தாகூரோட கவிதை வரிகளை எனக்கே புரிஞ்ச சங்கீத மொழியில நான் ஒரு பைத்தியக்காரனைப் போலப் புலம்பினேன்.

“மிஸ்டர் குருமூர்த்தி, முதன் முறையா என் தோள் வயலின் சுமையைத் தாங்க முடியாமல் கனக்கவே, அதை நிரந்தரமாப் பெட்டிக்குள்ள வச்சு மூடினேன். இந்தக் கல்லை சாசுவதமாக்கிக்கிட்டேன். நடைமுறையில நடக்க முடியாத சில விஷயங்களைக் கற்பனை பண்ணியே நடக்க வைக்கறதுல ஓர் அலாதி சுகம் இருக்குன்கிறது எனக்குப் புரியப்புரிய, நான் இங்க இருந்தபடியே என் கற்பனைகளை விரிச்சேன். அவளை மானசீகமா நானே மணந்தேன். இனிமையாக் குடும்பம் நடத்தினேன்.

சட்டென்று சுகுமார் விம்மி விம்மி அழுதான். குருமூர்த்தி அவனருகே வந்து அவன் கண்களைத் துடைத்தான். பிறகு, நிதானமாய் அவனிடம் இப்படிச் சொன்னான்: “மிஸ்டர் சுகுமார்! இப்பவாவது ஓர் உண்மையை நீங்க தெரிஞ்சிக்கணும். உங்க ரேணுகா நிஜமாகவே உங்களுக்கு சொந்தமாகி மூணு மாசத்துக்கும் மேல ஆகுது..”

சுகுமார் ஒன்றும் புரியாமல் அவனை ஏறிட்டு நோக்கினான்.

குருமூர்த்தி திடமான குரலில் சொன்னான்: “உங்க மேல அவளுக்கு ஏற்பட்டிருந்த அபரிதமான ஈடுபாடே ஒரு நோயா மாறி அவளைக் கொன்னுடுச்சு. ஒரு பொண்ணோட அந்தரங்கம் வெறும் உடற்கவர்ச்சியை மட்டும் தான் விரும்பும்னு நீங்க ரொம்ப மெகானிக்கலா தீர்மானிச்சிருக்கீங்க.”

சுகுமார் அதிர்ச்சியோடு கல்லிலிருந்து எழுந்து, உதடுகள் துடிக்கக் குருமூர்த்தியை நோக்கி ஏதோ கேட்க நினைத்த போது உடைந்து போன குரலில் அவன் சொன்னான்:

“என்னைத் தெரியலையா, உங்களுக்கு? தன்னோட உயிரை விட்டுட்ட நிலையில, தான் உங்களுக்குத் தான் சொந்தம்னு நிரூபிச்சிட்டுப் போயிட்ட அவளை, போன வருஷம் இதே நேரத்துல உயிரோட எனக்குச் சொந்தமா ஏத்துக்கிட்டவன் நான்..”

சுகுமார் உடம்பு பதற ‘ரேணு!’ என்று சிதறல்களாய் முணுமுணுத்துப் பழையபடியே அந்தக் கல்லில் தளர்ந்து உட்காரப் போன போது குருமூர்த்தி அவனைத் தடுத்தான்.

“நீங்க இந்தக் கல்லில் உட்கார்ந்து மானசீகமா அடைஞ்சு அனுபவிச்சிருக்கிற விஷயங்களை நான் நிஜமாக் கூட அனுபவிக்கல சுகுமார். ப்ளீஸ், இனிமே நீங்க மறுபடியும் இதுல உட்கார வேண்டாம்.. உங்க ரூமுக்குப் போயி அங்கேயிருந்தே மறுபடியும் உங்க பிடிலை எடுத்து ஏதாவது வாசியுங்க. ரேணுகாவை இழந்த மாதிரி உங்களோட சங்கீதத்தையும் நீங்க இழந்துடக் கூடாது.”

அவன் பேச்சில் இருக்கும் நியாயங்களைப் புரிந்து கொண்டவன் போல, சுகுமார் மெல்ல நடந்து தன அறையை நோக்கிப் போகிற போது குருமூர்த்தி முதன்முதலாய் அந்தக் கல்லை உற்று நோக்கி வறட்சியாய்ச் சிரித்தான். சுகுமார் அதில் உட்கார்ந்து இருந்த நேரமெல்லாம் அவனது தொடர்ச்சியான கற்பனைகளும் தாபங்களும் சுமையாய் அதில் இறங்கி இறங்கியே அது இப்படி நன்றாய்க் குழிந்து போய்விட்டதாய் நினைத்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தூரத்து வீட்டு மாடி அறையில் வயலின் இசையோடு இழைந்தாற்போல  அவன் உரத்த குரலில் ‘ஹேவ் யூ எவர் மெட் ஹர் ஆன் த வே டு ஹெவன்?’என்று பாடுவதைக் கேட்டுக் கொண்டே குருமூர்த்தி தானும் அந்தக் குழிந்த கல்லில் ஒரு கல்லாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 -(16-11-1973, தினமணி கதிரில் வெளி வந்தது.)

* * * 
(கொஞ்சம் காதல் வேட்கை, கொஞ்சம் சோகம், கொஞ்சம் தன்னிரக்கம், நிறைய ஏமாற்றம்,மேகங்களுக்கிடையிலிருந்து எட்டிப் பார்க்கும் மெல்லிய மின்னல் கீற்றுகள் மாதிரி இடையிடையே வாழ்க்கை மீதான நம்பிக்கை-இவையே என் ஆரம்ப காலச் சிறுகதைகளில் தூக்கலாக நின்ற அம்சங்களாக இருந்தன. 

சுய அனுபவங்களின் தாக்கம் சின்ன அடி நாதமாகப் படைப்புகளை வழி நடத்திச் சென்றிருக்கலாம் என்பதை முழுமையாக மறுப்பதற்கில்லை. வெளிப்படுத்த முடியாத, அல்லது வெளிப்படுத்த விரும்பாத சில பிரத்தியேக அந்தரங்க உணர்வுகளை உள்ளே வைத்துத் தவித்த படி வெளியே இயல்பாக இருப்பதாய்க் காட்டிக் கொள்ள முயலும் சில குண சித்திரங்களை வைத்துக் கதை எழுதுவதில் எனக்கு அந்தக் கால கட்டத்தில் ஒரு தனிப்பட்ட சுகம் இருந்திருக்கக் கூடும்!

எனது அத்தகைய சிறுகதைகளில் ஒன்று தான், இந்த 'பிடில் பெட்டி மூடிக் கிடக்கிறது'. 16-11-1973, தினமணி கதிரில் வெளி வந்தது.)



No comments:

Post a Comment