Monday, March 10, 2014

கோடையிலும் வசந்தம் வரும்....



ந்த ஊரில் தான் அவள் இருக்கிறாள். அவள் விலாசம் கூட எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. இருபத்திரண்டு வயதில், நான் தேடத் துணிச்சலின்றி விட்டுப் போன ஒரு பொருளை, இவ்வளவு வருடம் கழித்து இந்த வயதில் போய்த் தேடித் துருவிப் பார்க்க வேண்டும் போல எனக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது.

எனக்குள்ளேயே நான்  வளர்த்துக் கொண்ட ஆசைகளுக்கும் எதிர் பார்ப்புகளுக்கும் இன்றோடு சரியாக முப்பத்தெட்டு வயது. முப்பதெட்டு வயது ஒரு வயதா?

அப்படியானால் எனக்கும் அதே வயது தான்! நான் வேறு, என் ஆசைகள் வேறா? இந்த வாக்கிங் ஸ்டிக்கும், '4.5' மூக்குக்கண்ணாடியும், நரைகளுக்குப் பின்னால் இடம் ஒதுக்கி விட்டுத் தன்னை முதலாவதாகப் பிரகடனப் படுத்திக் கொள்ளும் இந்த முன்  வழுக்கையும் மட்டுமே அனாவசியமாய் என் வயதை மற்றவர்களுக்குப் பகிரங்கப் படுத்தி, என் ஞாபகங்களுக்கு உதாசீனத்தைத் தருகின்றன.

மணிபர்சிலிருந்து ரயில் டிக்கெட்டைத் துருவி எடுத்துக் கையில் பத்திரமாக வைத்துக் கொண்டு, மெல்லக் கூட்டத்தோடு கூட்டமாக வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறேன்.  ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக் கொண்டு  அவசரம் அவசரமாய் வரும் ஒரு தடியன் என் மீது தள்ளாத குறையாக மோதி விட்டுப் போகிற போக்கில் ‘சாரி’ என்கிறான்.

ஸ்டேஷனுக்கு வெளியே, ஒரு குதிரை வண்டியைப் பேசி அமர்த்திக் கொண்டு, அதன் பக்கவாட்டுக் கம்பிகளை நிதானமாய்ப் பற்றி ஜாக்கிரதையாய் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். அவளுடைய பெயரையும், அவள் இருக்கும் தெருவையும் சொல்லி அங்கே ஓட்டச் சொல்கிற போது,  எனக்குள்ளேயே முதன் முதலாக ஓர் இளம் பெண்ணைச் சந்திக்கப் போகிற ஓர் ‘இரண்டும் கெட்டான்’ அசட்டு வாலிபன் மாதிரி வெட்கப் பட்டுக் கொள்கிறேன்.

அட ராமா! இவன் என்னத்திற்கு இந்தக் குதிரையை இந்த விரட்டு விரட்டித் தொலைக்கிறான்? நான் போக வேண்டிய இடம் கொஞ்சம் மெதுவாகத் தான் வரட்டுமே! நானா பறக்கிறேன்? முப்பத்தெட்டு வருடங்கள் நிதானித்திருக்கிறேனே தம்பி? இப்போது மட்டும் என்ன கேடு வந்தது வேகத்துக்கு?

வண்டி இந்தத் திருப்பத்தில் திரும்புகிறது. இன்னும் ஒரே ஒரு தெரு தான். அதற்கடுத்த தெருவில் தான் அவள் வீடு. அவளை இப்போது பார்த்து என்ன செய்யப் போகிறேன்? என்னத்தைப் பேசுவது? எதற்காக வந்ததாகச் சொல்லிக் கொள்வது? சூட்டும் ஸ்லாக்கும் போட்டுக் கொண்டு சாதுர்யமும் மேதைமையும் மிடுக்குமாய்ச் சுற்றி வந்த அந்தக் காலத்தில் அவளிடத்தில் கேட்கத் தவறிய ஒன்றை-இத்தனை வருஷத்துக்கப்புறம் கேட்க வந்திருப்பதாய்ச் சொல்லிக் கொள்வதா இப்போது?

அந்தக் காலத்துத்  தையல் காரன் நாகரிகம் தெரியாமல் அரை அடி ஆழத்துக்கு வைத்துத் தைத்திருக்கும் இந்தச் சட்டைப் பையில்-ரொம்பவும் பாதுகாப்பாய் அந்தக் கடிதம் இருக்கிறது.

நேற்று வரைக்கும் அந்தப் பழைய டிரங்குப் பெட்டிக்கு அடியில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால், பம்பாய்ப் புத்தகக் கம்பெனிக்காரர் ஒருவர் அச்சிட்டு வெளியிட்ட ‘இவான் டுர்கனீ’வின் ‘ஸ்ப்ரிங் டாரென்ட்ஸ்’ நாவலின் நடுவில் இத்தனை வருஷங்களாகக்  காப்பாற்றப்பட்டு வந்த இந்தக் கடிதம்- நேற்று சாயங்காலம் தான் இந்தச் சட்டைப் பைக்குள் வாசம் புகுந்திருக்கிறது. இந்தக் கடிதத்துக்கு முடிவு தெரிந்தாக வேண்டும் இன்றைக்கு...

ருபத்தைந்து வயது  வாலிபன் ஒருவன் அந்த ஊரில், அந்தத் தெருவில், அந்த வீட்டோடு மட்டும் ரொம்பவும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு அடிக்கடிப் போய்ப் பேசிக் கொண்டிருந்த மதுரமான நாட்கள் அவை. அந்த வீட்டில் தான் அவன் அவளைப் பார்த்தான். அவனது கதைகள் அப்போது தான் ஒரு பிரபல பத்திரிகையில் வரத் தொடங்கி இருந்தன. அவற்றைப் பற்றி அவன் வரும் போதெல்லாம் அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் பெருமையாய்ப் பேசி அவனைப் புகழ்வார்கள். குறிப்பாய் அவள் சற்று அதிகமாகவே புகழ்வாள்.

அவளைப் பார்த்த சில நாட்களுக்குள்ளேயே, ஒரு நாள் பொறி தட்டின மாதிரி ஓர் உணர்வு அவனிடத்தில் கிளம்பியது. அது அவனுக்கும் தெரியாமலேயே ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு, இயல்பாய், தவிர்க்க முடியாமல் மேலே எழுந்து வந்து அவனை மாயங்களாய் வியாபித்துச் சூழ்கிறார்ப்போல அவன் நினைத்து ஆச்சரியப்பட்டான்.

அதற்கப்புறம் அவன் மேலும் தாங்க முடியாமல் அவளுக்கு ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தான். எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தவித்து, எப்படியோ ஆரம்பித்து, எப்படித் தொடர்வது என்று புரியாமல் வெட்கப்பட்டு எப்படியோ தொடர்ந்து, எப்படி முடிப்பது என்று புரியாமல் குழம்பி, எப்படியோ முடித்து-தான் எழுதி இருந்த அந்தக் கடிதத்தை எப்படிச் சேர்ப்பது என்று தெரியாமல் அவன் இப்போது தயங்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் அவன் அவள் வீட்டுக்குப் போன போது, அவள் வாசலில் பாலுக்காக செம்புடன் காத்திருந்தாள். “ராகவன் இருக்கானா?” என்று, அவளிடம் எதையாவது பேச வேண்டுமே என்பதற்காகவே அவள் அண்ணனைப் பற்றி விசாரித்துக் கொண்டு அவன் வாசலில் ஏறினான். அவனைப் பார்த்த அளவிலேயே அவள் முகம் பெரிதாய்ப் பிரகாசம் அடைந்தது. அவள் அவனுக்குப் பதில் கூறாமலேயே உள்ளே போனதை அவன் ஒரு பதிலாய் எடுத்துக் கொண்டு தானும் தொடர்ந்து போய்க் கூடத்து ஊஞ்சல் பலகையில் அமர்ந்து கொண்ட போதே வீட்டில் யாரும் இல்லை என்று ஒருவாறு புரிந்து கொண்டான்.

“அண்ணா நில விஷயமா கிராமத்துக்குப் போயிருக்கான். அம்மா அடுத்த தெருவுல நடக்கிற ராதாக் கல்யாணத்துக்குப் போயிருக்கா. தம்பி மூணாவது ஆத்துல கேரம் விளையாடிண்டிருக்கான்..”

“அப்போ நான் அப்பறமா வரேன். குடிக்கறதுக்குத் கொஞ்சம் தூத்தம் மட்டும் வேணும்..”

அவள் தண்ணீருக்காக சமையலறையை நோக்கிப் போகிற போது, மறக்காமல் அவன் மீது ஒரு புன்னகையை வீசி விட்டுப் போனாள். அவன் பையில் அந்தக் கடிதம் கனத்தது. கை விரல்களுக்கு அதை நெருங்கக் கூடத் துணிவு பிறக்காமல் பலகையின் கரடு முரடான துவாரங்களிலேயே அவள் வரும் வரை நெளிந்தது.

“அம்மா இப்ப வந்துடுவா. இருந்துட்டுப் போகலாமே?”

“போகலாம் தான். ஆனா கொஞ்சம் வேலை இருக்கு..”

அவன் எழுந்து விடுவதற்கு நேரம் கொடுத்து விடக் கூடாதே என்று பரபரக்கிற மாதிரி அவள் கேட்டாள்: “பத்திரிகையில வர உங்க கதை எல்லாம் படிக்கறோம்.. ரொம்ப அழகா எழுதறேள்..புதுசா ஏதாவது எழுதி இருக்கேளா?”

அவன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான். கைகள் ரகசியாமாய் சட்டைப் பையில் இருந்த அந்தக் கடிதத்தை ஸ்பரிசித்து விட்டுத் துணிச்சலின்றிச்  சட்டென்று விலகிக் கொண்டன.

அதற்கப்புறம் எத்தனையோ நாட்கள்.... அவன் துணிச்சலுக்கு அந்தரங்கமாய்ச் சவால் விட்டுக் கொண்டிருந்த நாட்கள்... அவன் தவித்துத் தவித்து உள்ளே எரிந்து பெருகும் அந்த நெருப்பைத் தாங்கவும் மாட்டாது, உமிழவும் மாட்டாது மருகிய நாட்கள். அவன் உணர்வுகள் பழுக்க ஆரம்பித்தன. தொடர்ந்து வருடங்களும், கூடவே அந்தக் கடிதமும் பழுக்க ஆரம்பித்தன. அந்த இளைஞன் தான் இத்தனை வருடங்களுக்கு அப்புறம் தன உடம்பும் பழுத்து விட்ட நிலையில் அதே ஊருக்கு, அதே வீட்டுக்கு அவளைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறான் இப்போது...

நான் இரண்டு முறை இரைந்து இருமுகிறேன். முப்பத்தெட்டு வருஷங்களுக்கு முன்னால் இந்த ஒரு சின்ன விஷயத்தைக் கூடச் சாதிக்கத் துணியாமால் பெரிய விஷயங்களை எல்லாம் அலசிக்கொண்டிருந்து விட்டு-அவள் நினைவுகளை மட்டும் அகற்றத் தெரியாமல் சதா பித்தேறிப் போய் வாழ்ந்து-வாழ்வின் கோடைப் பருவத்திற்கு வந்து விட்ட நான் தான் அந்த முட்டாள் வாலிபன் என்று நினைக்கிற போது, எனக்கு என் மேலேயே கோபமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.

இதற்கப்புறம் இரண்டு, மூன்று வருஷங்கள் கழித்துத் தான் இவளுக்குத் திருமணம் நடந்தது. வேலையில் மாற்றலாகி மதுரையில் இருந்த எனக்கு இவள் திருமணப் பத்திரிகை வந்த போது அந்த முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தையும், இவளை நினைத்து நான் அந்தரங்கமாய் எனக்கு நானே அனுபவித்தும் ஏங்கியும் எழுதிப் பத்திரப் படுத்தி வைத்திருந்த வசன கவிதைகளையும் மறுபடியும் எடுத்து வைத்துக் கொண்டுக் கண்கள் திரையிடக் கல் மாதிரி உட்கார்ந்திருந்தேனே தவிர, என் இழப்புணர்ச்சிகளை விலக்கவோ, என்னை நானே தேற்றிக் கொண்டு தெளிவடையவோ விரும்பவும் இல்லை.

வள் சிரிப்பு மோகன அலைகளாய்ப் பின்னால் பரவி அசரீரி மாதிரிக் கேட்டு ’உன்னை நீயே பிடிவாதமாய் ஏமாற்றிக் கொண்டதற்கு நான் என்ன செய்வேன்?’ என்கிற மாதிரி என்னை வதையாய் வதைக்கிறது..

குதிரை வண்டி குலுங்கிக் கொண்டு நின்றதும் கீழே இறங்கினவுடனேயே அந்த வீடு நன்றாய்க் கண்ணில் தெரிகிறது.. படிகளில் காலை வைக்கும்போதே நான் கிடுகிடுவென்று வயதுகள் குறைந்து போய் இருபத்தைந்து வயது வாலிபனாகி விடுகிறேனே, இந்த ஆச்சரியத்தை எங்கே போய்ச் சொல்வது?

யாரோ வருகிறார்கள் கதவைத் திறக்க. முக்கால் வாசி நரைத்த தலையும், தழையத் தழையக் கீழே புரளும் மடிசார் புடவையும் கொஞ்சம் அகலமான நெற்றிக்குக் கீழே எதையோ சதா தீவிரமாய் எண்ணி அப்படியே நிலைத்து விட்ட மாதிரி சற்றுத் தூக்கலான புருவங்களும், ஆசைகள் வற்றிப் போன நிலையிலும் பழைய ஞாபகங்களின் அடிச்சுவட்டில் புதிய சொந்தங்களுக்காகத் துணையின்றி ஏங்குகிற மாதிரி அற்புதமாய்ப் பளபளக்கிற விழிகளும்...

ஒ, கடவுளே! என்னால் இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறமும் கூட இவளைத் தடங்கலின்றிக் குழப்பமின்றி இத்தனை தெளிவாக எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது? 

நீங்க...”-இவளின் தடுமாற்றம் எனக்கு ரொம்பவுமே  பிடித்திருக்கிறது.

“நீங்க தேவகி தானே? என்னைத் தெரியலையா?”

“எனக்குப் புரிஞ்சு போச்சு! அடாடா, வாசல்லயே நிக்கறேளே? உள்ள வாங்கோ. எத்தனை வருஷத்துக்கப்புறம் பாக்கறோம்? என்னால சட்டுன்னு அடையாளம் தெரிஞ்சுக்க முடியல..”

உற்சாகத்தோடு பேசிக் கொண்டு, என்னைக் காமரா அறைக்குள் அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்து உபசரிக்கிறாள்.
“உங்க ஆத்துக்காரர் காலமான விவரமும், கூடவே நீங்க ஊரோட வந்து தங்கிட்டதையும் ரெண்டு மூணு வருஷங்களுக்கு முன்னாலக் கேள்விப் பட்டேன். ரொம்பக் கஷ்டமா இருந்தது...”

“உட்காந்திண்டிருங்கோ. நான் போய்க் காபி கொண்டு வரேன்..”

அவள் பின்கட்டுக்குப் போகிற போது என் மீதே எனக்கொரு பச்சாதாப உணர்வு மிகுந்து எழுகிறது. இவளிடம் நான் எப்போதோ சொல்லத் தவறிய, கேட்கத் தவறிய, கொடுக்கத் தவறிய, ஏதோ ஒன்றினாலேயே ரொம்பவும் அற்புதமான ஓர் அனுபவத்தைப் பிடிவாதமாக இழந்திருக்கிறேன்.

சட்டென்று என் கைகள் அந்தப்  பழுப்பேறின பழைய கடிதத்தை வெறியோடு பையிலிருந்து எடுத்து, அவசரம் அவசரமாய் அங்கிருந்த பெரிய புத்தகத்தின் இடையில் செருகி மூடுகின்றன. என் நெஞ்சின் மிகுந்த படபடப்பின் இடையிலும் நான் ரொம்பத் தைரியமாய் ‘இதைச் செய்யவா எனக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன?’ என்று நினைத்துக் கொள்கிறேன்.

அவள் குரல் பின்னல் கேட்கிறது. “ரொம்ப வுஷங்களுக்கு முன்னால ‘வசந்த காலத்துக் கோடை’ங்கற தலைப்புல நீங்க எழுதி இருந்த ஒரு கவிதைத் தொகுப்பை நான் ஒரு தரம் ‘அவர்’ கிட்ட ஒரு வரி விடாமப் படிச்சுக் காண்பிச்சேன். பின்னால அந்தப் புஸ்தகத்துக்கு ஏதோ பரிசு கூடக் கிடைச்சதாக் கேள்விப் பட்டேன். நீங்க எங்க இருக்கேள்னு தான் தெரிஞ்சுக்க முடியல. இப்பல்லாம் ஒண்ணுமே எழுதறதில்லியா?”

“கோடை காலத்துக்கு வந்ததுக்கப்புறம் தான் நான் வசந்தத்தையே அசை போட்டுண்டிருக்கேன். அதனால புதுசா ஒண்ணும் எழுதவே தோண்றதில்ல..”

அவள் காபியை ஸ்டூலின் மீது வைத்தபடியே, “நீங்க மாறிட்டேளே தவிர, உங்க பேச்சும் அந்தப் பழைய பாணியும் மாறவே இல்ல. ரொம்ப ‘காம்ப்ளிகேட்டடா’- புரிஞ்சிக்கவே முடியாமத் தான் அப்பவும் பேசுவேள்...” என்று சொல்லிச் சிரிக்கிறாள்.


‘நீயும் அப்படியேதான் இப்பவும் சிரிக்கிறே?’ என்று எனக்குச் சொல்ல நா எழுகிற போதும், இன்னமும் என்னைச் சூழ்ந்து நெருக்கும். பத்தாம் பசலித்தனமான கட்டுப்பாடுகளும், போலிப் பண்பாட்டு மேல் பூச்சுக்களும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்து அப்படிச் சொல்ல விடாமல் தடுக்கின்றன.

நான் காபி டம்ளரைக் கீழே வைக்கிற போதே அவள் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பிப்பது தெரிகிறது. சட்டென்று என் உடம்பு அதிர்கிறது. உடம்பு முழுவதும் ஒரே கணத்தில் வேர்த்துப் போய்த் தெப்பலாய் நனைந்து போகிறது.

பக்கங்கள் சரசரவென்று பிரிகின்றன. இதோ, இந்த இடத்தில் அவள் விரல்கள் தயங்குகின்றன. அந்தக் கடிதத்தை அவள் பார்த்து விட்டாள். ‘தேவகி! எப்போதோ எந்தக் காலத்திலேயோ உன்னை இலக்காய் வைத்து இந்த அசட்டு விரல்கள் வாலிப முடுக்கோடு எழுதி இருந்த இந்தக் கடிதம் உனக்குச் சமர்ப்பணமாகி இருக்கிறது...!’ இது என்ன அசட்டுத் திருப்தி, இந்தச் சங்கடங்களிலும்? அவள் படிக்க ஆரம்பித்துவிட்டாளே? இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும்? என் மீது அவளுக்கிருக்கிற மதிப்புகள் யாவும் தவிடு பொடியாகிப் போகுமோ? அல்லது, ‘என்ன மனிதர் நீர்?’ என்கிற மாதிரி ஓர் அலட்சியத்திலும் பச்சாதாபத்திலும் இவள் கண்கள் என்னை ரொம்பவும் அற்பமாகப் பார்க்குமோ?

அவள் நிமிருகிறாள், கண்கள் எங்கோ வெறிக்கின்றன.

“இந்தப் புஸ்தகத்தைக் காலையிலேதான் என் மகள் ரேவதியோட படிக்கிற பிரண்ட் இவகிட்டே, இவ படிக்கணும்கிறதுக்காகக் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனான். இப்பத்தான் எனக்குக் புரியறது, இவ படிக்கிறதுக்காக இவன் ரொம்ப சாமர்த்தியமா வேற ஒண்ணும் இது மூலமாக் கொடுத்திருக்கான்னு. ஆனா ரத்தினச் சுருக்கமா அழகாத் தான் எழுதி இருக்கான்! தன் பேரையோ, இவ பேரையோ எங்கேயும் மறந்தும் கூடக் குறிப்பிடாமப் பாத்துண்டிருக்கிற இவனோட ஜாக்கிரதை உணர்ச்சி தான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. அது சரி, இந்தப் பைத்தியம் எதுக்கு இவ்வளவு பழுத்துப் போன காகிதத்தில போய்க் காதல் கடுதாசு எழுதி இருக்கு? அந்த அளவுக்குத் தன அன்பு பழுத்திருக்குன்னு ‘சிம்பாலிக்கா’த் தெரிவிச்சுக்கறானோ?”

அவள் திடீரென்று இரைந்து சிரிக்கிறாள்: “ரேவதிக்கு இவன் மேல பெரிசா ஒரு இம்ப்ரஷன் இருக்கிறது எனக்கே தெரியும். இவனுக்கு, நேராக் கேக்கப் பயந்துண்டு, இப்படி ஒரு நப்பாசை நடுவுல! இந்த மாதிரி ஒரு திருட்டுத் தனத்துல தான், இவாளுக்கெல்லாம் பெரிய ‘த்ரில்’..” 

அவள் இன்னமும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள். எனக்குத் தான் இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஆனால் என் மனம் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாய் லேசாகி வருவதை நான் உணர்கிறேன். இது எதனால்? ‘எத்தனை வருஷங்களாய் யாருக்காகக் ஒரு கடிதம் கருவூலம் போல் மாதிரிக் காப்பாற்றப் பட்டு வந்ததோ அந்தக் கடிதம் அவளாலேயே இப்போது படிக்கப்பட்டு விட்ட திருப்தியாலா?

நான் பெருமூச்சு விடுகிறேன். ஆனால் ரொம்பவும் சிரமப்பட்டு சந்தோஷப்படுகிற மாதிரி அவளை விடவும் பெரிதாய் நகைத்து, இப்படிச் சொல்கிறேன்: “அப்போ, நான் இருந்து, சீக்கிரத்திலேயே கல்யாணச் சாப்பாடும் சாப்பிட்டுட்டுப் போயிடலாம்னு சொல்லுங்கோ!”


அவளின் பூரணமான புன்சிரிப்பில் என்  முப்பத்தெட்டு வருடத்திய தொடர்ந்த இழப்புகளுக்கு எங்கேயாவது ஓர் ஈடு தெரிகிறதா என்று, இந்தக் கணத்திலும் தேடிப் பார்ப்பதில் ஏன் தான் எனக்கு இப்படி ஒரு விசித்திர தாகமோ, தெரியவில்லை!

-(தினமணி கதிர்,17.5.1974)

No comments:

Post a Comment