Wednesday, March 7, 2012


சுயதர்மம்
(டிசம்பர் 1976-ஆம் ஆண்டுக் 
கணையாழியில் வெளியான 
எனது நாடகம்)



(இடம்: பாஞ்சால தேசத்தை ஒட்டிய ஒரு புறநகர்ப் பூஞ்சோலை. அழகிய இளம் கீற்றுக்களால் வேயப்பட்டிருக்கும் ஓர் அமைதியான பர்ணசாலையின் மூங்கில் கதவுகளைத் திறந்து கொண்டு, அந்தணக் கோலத்தில் ஐந்து இளைஞர்கள் உள்ளே நுழைகிறார்கள். அவர்களுள் ஓரு வாளிப்பான, சற்றே அதிகம் சிவந்த வாலிபன் வனப்பு மிக்க நங்கை ஒருத்தியைக் கைப் பிடித்திருக்கிறான். பர்ணசலையின் முன் அங்கணம் வெறுமையாய் இருக்கிறது. பின் அங்கணத்தில் அவ்விளைஞர்களின் வயது முதிர்ந்த தாய் ஏதோ வேலையாய் இருக்கிற அரவம் ஓர் ஊகமாய்த் தெரிகிறது. மூத்த இளைஞன் கூடத்திலிருந்தே குரல் கொடுக்கிறான்.)

மூத்த இளைஞன்: அம்மா
,.. சீக்கிரம் இங்கே வந்து பாருங்கள்! ஓர் அற்புதப் பொருளைத் தம்பி தனஞ்சயன் கொண்டு வந்திருக்கிறான்.

தாயின் குரல்: (உள்ளிருந்தே) எந்த அற்புதங்களையும் ஆசைப்பாட்டோடு அனுபவித்து மகிழ்கிற பருவத்தை நான் தாண்டி விட்டேன் குழந்தைகளே! பாண்டு ராஜனோடு அந்தப் பேதைப் பெண் மாத்ரியை மாத்திரம் உயிரோடு கொளுத்தி விட்டு
, உத்தம மரபுகளை எல்லாம் புறக்கணித்துக்கொண்டு உயிரோடு இருக்கும் எனக்கு இன்னும் என்ன அற்புதம் மீதி இருக்கிறது? அப்பொருள் எதுவாய் இருந்தாலும் வழக்கப் படியே-அதை நீங்கள் ஐவருமே பகிர்ந்து உண்ணுங்கள்.

மூத்த இளைஞன்: அம்மா
, வந்து பார்க்காமலேயே என்ன வார்த்தை சொன்னீர்கள்? பார்த்தன் கொண்டு வந்திருப்பது உண்ணும் பொருள் இல்லை; அனுபவிக்கும் பொருள்!

குரல்: குழந்தாய்
, இந்தக் கிழவியோடு ஏன் வீணாய்ச் சொல்லாடுகிறாய்? உண்பதும் அனுபவிப்பதும் வேறு வேறு என்று நான் படித்ததில்லை. புலன்கள் அததற்குரிய சுவைகளை உண்பதின் மூலமே அவ்வவற்றின் ஸ்பரிசங்களை அனுபவிக்கின்றன. பாண்டு ராஜனைப் பறிகொடுத்த பின்னர்க் காலவரையின்றி ஒரு மூலையில் முடங்கிக் கைம்மையின் துன்பங்களை உண்டேநான் உயிர் வாழ்கிறேன்.

(இளம் பெண்ணைக் கைப் பிடித்திருக்கும் வாலிபன் பேசுகிறான்.)

வாலிபன்: அம்மா! நான் கொண்டு வந்திருப்பது ஓர் உயிருள்ள பொருள்.

குரல்: வேட்டைக்குச் செல்கிற க்ஷத்திரிய அரசர்கள் அழகிய விலங்குகளை உயிரோடு பிடித்து வந்து தம் அந்தப்புரப் பெண்களுக்கு விளையாடக் கொடுப்பது வழக்கம் தான். ஆனால்
, அரண்மனையைத் துறந்த உங்களுக்கு அந்தப்புர சுகம் ஏது? அர்ச்சுனா! என்ன விலங்கது? மானைக் கொண்டு வந்தாயா, மயிலைக் கொண்டு வந்தாயா?

அர்ச்சுனன்: ஓர் அழகிய பொன் மான்
; அதுவும் பெண் மான்!

குரல்: (பரபரப்போடு) ஐயோ
, பெண் மானா? மறுபடியும் உங்கள் தந்தை செய்த அதே பழைய தவற்றைச் செய்தீர்களா? மான்களின் பிணையைப் பிரித்தீர்களா? மான்கள் நம் வம்சத்தின் நாச காரணமான பழைய கதை உங்களுக்குத் தெரியாதா? (வெளியே வருகிறாள்)

மூ.இ.: தாயே
, இந்த மான் நம் வம்சத்துக்கு நாசமல்ல; மாறாய் அதன் விருத்திக்குக் கிட்டி இருக்கிற வரம்.(அந்தப் பெண்ணைச் சுட்டிக் காட்டி) இவள் பாஞ்சால ராஜன் துருபதனின் செல்வப் புதல்வி கிருஷ்ணை. தம்பி தனஞ்சயனை மணப்பதற்கென்றே, யாஜரின் வேள்வியில் கர்ப்ப வாசம் இன்றிப் பிறந்தவள். சுயம்வரத்தில் உச்சியில் சுழலும் மச்சத்தை அடித்து வீழ்த்தி நம் அர்ச்சுனன் இவளை வாகை கொண்டிருக்கிறான்.

தாய்: (முகமெல்லாம் சட்டென்று கலக்கம் நிறைய) ராஜ குமாரி! ஒரு பிள்ளை உன்னை அங்கே வில்லால் வெற்றி கொண்டு இன்னொரு பிள்ளை இங்கே சொல்லால் தோற்கக் கொடுத்தான். ஐயோ! அலங்காரமாய்ப் பேசியே பழகிப் போன இந்த அரச பரம்பரையும் கவிப் பரம்பரையும் பாழாய்ப் போகட்டும். ஒரு பெண்ணைப் பெண் என்று புரிந்துகொள்ளக் கூடச் சக்தி அற்றவளா நான்
? ஏன் இந்த வறண்ட, உயிரற்ற உவமைகள்? மகோன்னதமான மனிதப் பெண்களை இப்படி மானென்றும் மயிலென்றும்-வெறும் வாயற்ற அற்ப ஜந்துக்களோடு காலம் காலமாய் உவமை கொண்டாடிக் கடைசியில் இன்றைக்கு இந்த ஆண் சமூகம் பெரும் விபரீதத்தைத் தேடிக் கொண்டது.

(வியாச முனிவரும் கிருஷ்ணனும் வருகின்றனர்.)

வியாசர்: இந்த விபரீதம் தவிர்க்க முடியாதது
, குந்தி தேவி!

கிருஷ்: எனக்கும் விபரீதங்களுக்கும் அப்படி என்ன தோழமையோ
? நான் எங்கு போகிற போதும் அங்கு ஒரு விபரீதம் காத்து நிற்கிறது! (சிரிக்கிறான்)

(குந்தியும் பாண்டவர்களும் அவர்களை வரவேற்கின்றனர். கிருஷ்ணன் குந்தியை நமஸ்கரிக்கின்றான்.)

கிருஷ்: அத்தை குந்தி தேவியாரையும் பாண்டவர்களையும் எத்தனை காலத்துக்குப் பிறகு பார்க்கிறேன். அந்த அரக்கு மாளிகைத் தீயில் பாண்டவர்கள் கருகிப் போனதாய்த் துஷ்டர்கள் பரப்பின அவச் செய்தியை நம்பி நான் எத்தனை துடித்துப் போனேன்! அத்தை! உங்கள் புதல்வர்களா இத்தனைப் பெரியவர்களாக வளர்ந்திருக்கிறார்கள்
? இவர்களை அடையாளம் கண்டு கொள்வது எனக்குக் கூட சிரமமாகவே இருக்கிறது...ஆ! இவன் அர்ச்சுனன். அந்தப் பெண்ணின் மேல் வைத்த விழி அகலாமல் நிற்பதிலேயே தெரிகிறது! யுத்தத்தில் எதிரிகளையும், ராஜ சபையில் பெண்களையும் வெல்வதில் இவன் ரொம்ப சமர்த்தன்! மற்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள் அத்தை.

குந்தி: உன் பால்யக் குறும்புகள் இன்னும் உன்னை விட்டு அகலவில்லை. பாண்டவர்களை உனக்கா அடையாளம் தெரியாது
? (யுதிஷ்டிரனைக் காட்டி) இவன் சகல தர்மங்களுக்கும் தானே பிரமாணமாய் நிற்பவன். என் மூத்த மகன்; யுதிஷ்டிரன். (பீமனைக் காட்டி) இவன் சகல பராக்கிரமங்களுக்கும் தானே பிரமாணமாய் நிற்பவன். வாரணாவதத்தில் அந்தப் பாவி புரோசனன் எழுப்பிய வஞ்ச மாளிகையிலிருந்து எங்களைக் காத்து மீட்டு வந்தவன்; வழியில் ஏகசக்ர நகரில் அந்தக் கொடிய பகாசுரனைக் கண் இமைக்கும் நேரத்தில் விண்ணுக்கனுப்பிய மகா வீரன். வாயுபுத்திரன்; பீமன்.

கிருஷ்ணன்: (சிரித்தபடி) இன்னொன்றை விட்டு விட்டீர்களே அத்தை! கானகத்தில் அந்தக் கன்னங்கரிய இடும்பனைப் பந்தாடி அவள் தங்கை இடும்பியை மணந்து கொண்ட மகா புருஷன்.. இவர்கள் நகுல சகாதேவர்கள். அஸ்வ சாஸ்திரத்திலும் தத்துவ சாஸ்திரத்திலும் தமக்கு நிகர் அற்றவர்கள். (திரௌபதியை நோக்கி) பாஞ்சாலி! நலமா
? நீ விரும்பிய மணாளனையே நீ மணந்தாய். எவனோ ஒரு குலம் கோத்திரம் தெரியாத அநாதை அந்தணனுக்கு மாலை சூட நேர்ந்ததே என்ற குழப்பமும் சங்கடமும் இப்போது உனக்குத் தீர்ந்து போயிருக்கும்.

குந்தி: தாய்
, குழப்பங்களையும் சங்கடங்களையும் தீர்த்து வைக்கிறாள். தாரமோ அவற்றைக் கொண்டு வருகிறாள்.

திரௌ: (முதல் முதலாய் வாய் திறந்து) தேவி! இங்கு என்னால் என்ன குழப்பம் நேர்ந்தது
? உள்ளிருந்து விபரீதமான வார்த்தைகளைக் குரல் கொடுத்தவர் தாயாகிய தாங்களே அன்றோ?
சகாதேவன்: தாயோ, தாரமோ..இருவருமே பேதைகள் தான். விபரீதங்கள் பேதைகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றன.

குந்தி: உன் தத்துவ விசாரங்களை ரசிக்கிற மனோ நிலையில் இங்கே யாரும் இல்லை சகாதேவா. (வியாசரிடம் திரும்பி) முனி சிரேஷ்டரே! தாங்கள் வரும் போது
இந்த விபரீதம் தவிர்க்க முடியாதது என்று ஏதோ சொன்னீர்களே..தங்கள் வார்த்தைகள் என் கவலையை அதிகப் படுத்துகின்றன.

வியா: குந்தி! நீயும் யுதிஷ்டிரனும் கொஞ்சம் என்னோடு தனியாக வாருங்கள். சந்தர்ப்பங்கள் வித்தியாசமானவை. அவற்றின் சூட்சுமங்கள் புரியாததாலேயே
, அவை வெளிக்கு விபரீதங்கள் போல் மாயம் பண்ணுகின்றன. (மூவரும் உள்ளே போகின்றனர்)

நகுலன்: சகாதேவா! இங்கே விபரீதத்துக்கு என்ன நேர்ந்தது
? அண்ணன் அர்ச்சுனன் திரௌபதியை வெற்றி கொண்ட மங்கல நாள் அல்லவா இது?
சகா: விபரீதங்கள் எதுவும் மனிதர்களைப் போல் தாம் வருவதற்கு நாள் பார்ப்பதில்லை, நகுலா..இந்தக் கலக்கங்களுக்குக் காரணம் உனக்கு இன்னுமா புரியவில்லை? பிள்ளைகளின் சொல் அலங்காரங்களைப் புரிந்து கொள்ளாமல் ஒரு பேதைத் தாய் உள்ளிருந்தே சொன்ன வார்த்தைகள்.

நகு: எனக்குப் புரிகிறது. ஓ! தாயின் வார்த்தைகள்!

சகா:
வெறும் வார்த்தைகள்! உணர்ச்சிகளுக்கு மனிதன் உருவாக்கிக் கொண்ட சில சௌகரியமான வடிவங்கள்... சமயத்தில் இப்படி அவனுடைய அறியாமையும் அவசரமுமே நிறைந்த சுயரூபங்களையும் பிறருக்குக் காட்டிக் கொடுத்து விடும் சாளரங்கள்.

கிருஷ்: (பேச்சை மாற்றி) திரௌபதி! உனக்கும் அர்ச்சுனனுக்கும் ஜோடிப் பொருத்தம் அற்புதமாய் அமைந்திருக்கிறது. அர்ச்சுனனுக்கு மட்டுமென்ன
? இவர்கள் ஐவருக்குமே உன் சான்னித்தியம் பொருந்தும் போல் தான் தோன்றுகிறது. ஆகா! என் வாயிலிருந்து இம்மாதிரி வார்த்தைகள் ஏன் வருகின்றன? (திரௌபதி திகைப்போடு கிருஷ்ணனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.)

சகா: கிருஷ்ணா! வார்த்தைளை மனித குலம் கண்டறியாமலேயே இருந்திருந்தால் இந்த ஊமை விலங்குகளுக்குக் கிட்டும் உல்லாசத்தில் பாதியையாவது நாம் அனுபவித்து இருப்போம். மனித அறிவு இந்த விதத்தில் பயனற்று மண்ணாய்ப் போனது. மதுசூதனா! நீ பேச வேண்டாம். உனது அழகிய குழலை எடுத்து வேணுகானம் செய். நான் கேட்கிறேன். ஏனெனில் வேணுகானத்துக்குப் பாஷைகள் இல்லை. அது ஓர் அழகு மிகுந்த ஊமை இளவரசியின் அந்தரங்கமான முனகலைப் போல் ரம்மியமானது-வார்த்தைகளின் விஷமங்களால் தீண்டப்படாதது..

கிருஷ்: சகாதேவா! உன் ஞானங்களை உன் மௌனத்தால் பாதுகாத்துக் கொள். நீ மட்டும் ஏன் இத்தனை வார்த்தைகளை வீணே செலவிடுகிறாய்
? அவை மனிதனின் அறியாமையும் அவரமுமே நிறைந்த சுய ரூபங்களைப் பிறருக்குக் காட்டிக் கொடுத்து விடும் சாளரங்கள் தோழா! ( சிரிக்கிறான்)

(உள்ளிருந்து வியாச முனிவரும்
, குந்தியும், யுதிஷ்டிரரும் வெளியே வருகின்றனர்)
யுதிஷ்: (முகத்தில் புதிய களையுடன்) அர்ச்சுனா! வியாச மகரிஷியும் கண்ணபிரானும் சரியான சமயத்திலேயே வந்திருக்கிறார்கள். என் மனக் குழப்பங்களை மகரிஷி சில வார்த்தைகளால் போக்கிவிட்ட அற்புதத்தை எப்படிச் சொல்வேன்? சந்தர்ப்பங்கள் உண்மையிலேயே சூட்சுமமானவை தான் தம்பிகளே!

அர்ச்சு: புரியும்படி சொல்லுங்கள் அண்ணா.

யுதிஷ்: அர்ச்சுனா! வாரணாவத நகரத்திலிருந்து கிளம்பும் முன் நாம் நமக்குள் செய்து கொண்ட அந்தப் பிரதிக்ஞை உனக்கு நினைவிருக்கிறதா
?

அர்ச்சு: நன்றாக நினைவிருக்கிறது. வனவாசத்தின் போது நம் ஐந்து பேரில் எந்தப் பொருளைக் கொண்டுவந்தாலும் அதை நாம் ஐவருமே பகிர்ந்து கொள்வதெனக் குந்தி தேவியின் முன் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம்.

யுதிஷ்: அதில் இது வரை நாம் பிறழ்ந்ததில்லை. இப்போதோ திரௌபதியின் ரூபத்தில் நமக்கு சத்திய சோதனை வாய்த்திருக்கிறது. செய்துகொண்ட சங்கல்பத்தை மீறுதல் ஒரு நல்ல க்ஷத்திரிய குமாரன் செய்கிற தர்மம் இல்லை என்று எனக்குத் தெரியும். நமது தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியே இல்லை. அர்ச்சுனா! நாம் ஐவரும் திரௌபதியையும் பகிர்ந்து கொள்வோம்.

திரௌ: (அதிர்ச்சியாலும் கோபத்தாலும் முகம் சிவந்து கைகளால் தன் இரு செவிகளையும் பொத்தி) ஐயோ! இது என்ன நாராசமான வார்த்தைகள்! தர்மபுத்திரரின் வாயிலிருந்து வரத்தக்க வார்த்தைகளா இவை
? வார்த்தைகள் கொடுமையானவை என்பதில் சந்தேகமில்லை. (அர்ச்சுனிடம் திரும்பி) பிரபு! க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிப் பேசுகிற தங்கள் தமையனார் ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றி ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? ஒருவனுக்கு மேற்பட்டவர்களைக் கூடுகிற பெண் வேசிக்குச் சமமானவள் என்று உங்கள் சாஸ்திரங்கள் சொல்லவில்லையா? ‘அர்ச்சுனனை மணந்து கொண்டு ஐவருக்குப் பாய் விரித்தவள் என்ற ஊர் அபவாதத்தை நான் ஏற்க வேண்டுமா? இதற்குத் தாங்கள் சம்மதிக்கப் போகிறீர்களா?

அர்ச்சு: (கோபமாய்) திரௌபதி! என் தமையன் தர்மமே உருவானவர். அவர் எதைப் பேசினாலும் அதை நாங்கள் தர்மமாகவே தலைக் கொள்வோம். அவர் தர்மமே எனது தர்மம்: அதுவே உனது தர்மமும் ஆகும். கணவனின் தர்மமே மனைவியின் தர்மம்.

வியாச: ஆமாம் பெண்ணே! ஆண்களின் தர்மங்களைச் சார்ந்தே பெண்களின் தர்மங்கள் அமைகின்றன. ஓர் ஆணின செயல்களை மீறவோ
, விமர்சிக்கவோ அவனது தாசியான பெண்ணுக்கு உரிமை இல்லை. இதை மனு தனது ஸ்மிருதிகளில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இது சத்தியமில்லை என்றால் மகாபுருஷரான மனு இப்படிச் சொன்னது எவ்வாறு நேர்ந்திருக்க முடியும்?

திரௌ: ஹும்! மனு
புருஷராய்ப் பிறந்ததால் இது நேர்ந்தது! கணவனின் தர்மமே மனைவியின் தர்மம் என்றால்- மனைவி தன் மனோ தர்மங்களை எங்கே கொண்டு கொட்டுவது?

யுதி: கணவனின் சந்நிதானத்தில்! அவனது தேஜஸின் அக்கினியில் தன் மனோ தர்மங்களைக் கரைத்து ஆகுதியாக்கிக் கொள்கிறவளே மனைவி. புருஷனின் தர்மங்களைப் பேண வேண்டித் தன் சொந்த தர்மங்களை அழித்துக் கொள்வது அவள் செய்கிற மகத்தான தியாகம்..

சகா: தியாகம்! ஆகா...உருக்கமான வார்த்தைகள். இம்மாதிரி சமயங்களில் மனிதர்கள் ஒளிந்து கொள்ள எவ்வளவு உதவியாய் இருக்கின்றன!

வியா: சகாதேவா! தர்மம் தெரிந்தவனே!
கணவனின் தர்மமே மனைவியின் தர்மம் என்று திரௌபதிக்கு விளக்கமாய்ச் சொல், குழந்தாய்.

சகா: துருபத குமாரி! நன்றாகக் கேட்டுக் கொள். கணவனின் தர்மமே மனைவியின் தர்மம். ஏனென்றால்
, இங்கே பெரும் பாலான கணவன்மார்கள் அதர்மங்களையே அதிகம் செய்கிறார்கள். ஆனால் தர்மத்தைத் தனியாகச் செய்ய விரும்புகிற யாரும், அதர்மங்களை மட்டும் அப்படிச் செய்யத் துணிவதில்லை. அவற்றின் பாவங்களைத் தனியாய்ச் சுமக்கப் பயந்து, ‘கணவனின் தர்மமே மனைவியின் தர்மம் என்று சொல்லி அவளையும் துணை சேர்த்துக் கொள்கிறார்கள். இது காலம் காலமாய் இங்கே கணவன் மனைவியரிடம் நிலவி வரும் ஒரு சௌகரியமான உடன்பாடு.

திரௌ: (மனசுக்குள்) கணவனின் சுமைகளை வயிற்றில் தான் தாங்குகிறோமே
, வாழ்க்கையிலுமா தாங்க வேண்டும்?

அர்ச்சு: திரௌபதி! என்ன முணுமுணுக்கிறாய்
?

திரௌ: ஒன்றுமில்லை பிரபு! என்ன நேர்த்தியான தர்மம் என்று வியந்தேன்.

யுதிஷ்: வியாச முனிவரே! திரௌபதியின் கண்களில் ஒரு புதுத் தெளிவை நான் காண்கிறேன். அவள் மனத்திலும் தெளிவை உண்டு பண்ணுங்கள். பாஞ்சாலி தன் மாயையிலிருந்து நீங்கி
, தாம் விரும்பியதைத்தான் இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்ளட்டும்.

திரௌ: (அதிர்ச்சியோடு) என்ன
, நான் விரும்பினேனா? அர்ச்சுனனைத் தவிர வேறு யாரையும் நான் கனவிலும் விரும்பியதில்லை.

வியா: இல்லை பெண்ணே! நீ மாயையால் இவ்வாறு பேசுகிறாய். நீ அவ்விதம் விரும்பவே செய்தாய்.

திரௌ: எப்போது
?

வியா: பூர்வ ஜென்மத்தில்!

(திரௌபதி பெரிதாய்ச் சிரிக்கிறாள்)

வியா: இகழ்ச்சியாய்ச் சிரிக்காதே
, யக்ஞ புத்திரி! போன ஜென்மத்தில் நீ நளாயினியாய் இருந்த போது தாங்க முடியாத தாம்பத்திய வேட்கையோடு ருத்ரனிடம் பர்த்தா, பர்த்தா.. என்று ஐந்து முறை ஆவேசத்தோடு வரம் கேட்டாய். அதன் விளைவே இது.

திரௌ: இது என்ன வேடிக்கை! பூர்வ ஜென்மத்தில் நான் கொண்டிருந்ததாய்த் தாங்கள் கூறும் அத்தகைய நாட்டங்களோ வேட்கைகளோ இந்த ஜென்மத்தில் இதுவரை நான் என்னிடம் ஒருபோதும் உணர்ந்ததில்லை
, மகரிஷி. பூர்வ ஜென்மத்து வேட்கைகளே இந்த ஜென்மத்தில் தொடராமல் போய் விட்ட பொழுது, அந்த ஜென்மத்து வரங்களால் மட்டும் இபோது எனக்கு என்ன லாபம்? பூர்வ ஜென்மத்துக் கதைகளில் தேர்ந்தவரே, இன்னொன்றையும் எனக்குச் சொல்வீர்களா? நான் முன் பிறவியில் ஐந்து புருஷர்களை விரும்பியதால் இது நேர்ந்தது என்றால், இந்தப் பாண்டு புத்திரர்கள் ஐந்து பேரும் முன் பிறவியில் ஒரே பத்தினியை யாசித்தார்களா?

(வியாசர் திகைப்போடு கிருஷ்ணனைப் பார்க்க
, கிருஷ்ணன் பேசத் தெரியாமல் தன் குழலை எடுத்துக் கொள்கிறான்)

கிருஷ்: (குழலில் படிந்து கிடக்கும் தூசுகளைத் தன் உத்தரீயத்தால் துடைத்தபடி) சகாதேவன் சரியாகவே சொன்னான். வார்த்தைகளை நாம் கண்டுபிடித்திருக்கவே கூடாது! சமயங்களில் அவை சௌகரியங்களை விட இடைஞ்சலையே அதிகம் உண்டு பண்ணுகின்றன!
வியா: அப்படி இல்லை கோபாலா. மனித சிரமங்களிலிருந்து ஆச்சரியமாய்ப் பரிணமித்த ஆற்றல் மிக்க வார்த்தைகளைப் பெண்களின் உபயோகத்துக்கு விட்டது தான் தவறு. அவர்கள், தங்கள் அடுக்களைப் பாத்திரங்களைப் போல் அவற்றையும் தாங்கள் நினைத்த வாக்கில் எல்லாம் உருட்டித் தேய்க்கிறார்கள். மனு பெண்கள் வாதிடுவதைக் கண்டிக்கிறார்.

திரௌ: (கோபமாய்) மனுவின் பெண்டாட்டி ஒரு வேளை ஊமை ஸ்த்ரீயாக இருந்திருக்கலாம்
, மகரிஷி. அல்லது அன்றைக்கு ஜனகரின் சபையில் யாக்ஞவல்கியரை எதிர்த்து அறைகூவிய அந்த சூரப் பெண் கார்கி வாசவக்னுவை நினைத்து மனு மருண்டு போயிருக்கலாம்.

யுதிஷ்: பெண்ணே! அரச குமாரியாகிய உனக்குப் பேசும் உரிமையையோ கேட்கும் உரிமையையோ மறுக்கும் எண்ணம் என்னிடம் இல்லை
, ஆனால் நிச்சயித்துச் சொல்லப்பட்ட தர்மங்கள் சில, நிகழ் கால நடைமுறைகளில் தங்கள் முரட்டு இலக்கணங்களைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வதுண்டு. ஜடிலை ஏழு பேரை மணந்தாள்; சத்தியவதி பராசரரும் சந்தனுவுமான இரண்டு பேரைக் கூடினாள்; எங்கள் பாட்டியார் அம்பிகையும் அம்பாலிகையும் விசித்திர வீரிய மகாராஜனுக்குப் பின் வியாசரோடும் சேர்ந்து இரண்டு புருஷர்களுக்கு உடைமையானார்கள்.

வியா: எல்லாவற்றிற்கும் மேலாக உன் மாமி குந்தி தேவியாரோ பாண்டுவைத் தவிர்த்துப் பரபுருஷர்கள் மூன்று பேரைக் கலந்து நால்வருக்கு நாயகியானாள்.

கிருஷ்: ஆனால்
, இவர்கள் யாரையுமே சமூகம் பகிஷ்கரித்து விடவில்லை. ஏனெனில், இவை ஒவ்வொன்றும் புண்ணிய புருஷர்களின் சம்மதத்தோடேயே நிகழ்ந்தன. அவசியங்களும் நிர்ப்பந்தங்களும் நேர்கிற போது பெண்கள் தங்கள் சுய தர்மங்களைத் தாங்களே நிச்சயித்துக் கொண்டு பிடிவாதம் செய்வதை அறிஞர்கள் அனுமதிப்பதில்லை.

சகா: பெண்ணே! கிருஷ்ணன் சரியாகவே சொன்னான். இங்கே தர்மங்கள் எதுவும் நியாய அநியாயங்களைச் சார்ந்து இயங்குவதில்லை
; மாறாய், செல்வாக்கும் அந்தஸ்தும் கொண்டவர்களைச் சார்ந்தே இயங்குகின்றன.

திரௌ: கிருஷ்ணா! மாயங்களில் தேர்ந்தவனே! அவ்விதமானால் இங்கே சாஸ்திரங்கள் என்பவை வெறும் சந்தர்ப்ப வாதங்கள் தானா
?
(கண்ணன் பதில் எதுவும் சொல்லாமல் மெல்ல நழுவித் தன் வேணுவை எடுத்து ஊதுகிறான்.)
சகா: கண்ணன் வார்த்தைகளை இழந்து போனான். இனி அவனால் பேச முடியாது. ஆகா! வடிவமற்ற உணர்வுகளுக்கு இந்த சங்கீதம் எத்தனைப் பெரிய பாதுகாவல்! கண்ணா! யதுகுல திலகா! உன் அற்புதக் குழலில் உனக்குப் பொருத்தமாய் யதுகுல காம்போதியை வாசியேன்...
யுதி: இல்லை, இப்போது கண்ணன் வாசிப்பது நீலாம்பரி.
சகா: கோபாலன் புத்திசாலி. வார்த்தைகள் தடுமாறித் தவிக்கும் இத்தகைய சஞ்சல காலங்களில் நியாயங்களைத் தூங்க வைக்க இதுவே அற்புத யுக்தி.
அர்ச்சு: துருபத குமாரி! வியாச மகரிஷியும், அண்ணன் யுதிஷ்டிரனும் அறத்தையே பேசினார்கள். என் பிரியே! எங்கள் ஐவருக்குமே பிரியையாக உனக்கு இன்னும் என்ன சங்கடம்?
யுதிஷ்: இதைச் செய்வதன் மூலம் உனக்குப் பெருங்கீர்த்தி வரக காத்திருக்கிறது, பெண்ணே!
திரௌ: இந்த மாயக்கண்ணன் வாசிக்கிற கீதம் என்னை என்னவோ செய்கிறது. என் மனம் உங்கள் பாஷையில் சொல்லப் போனால் அந்த அற்புதத் தியாகத்துக்குத் தயாராகிறது. நிர்ப்பந்தங்களுக்கு இனித் தியாகம் என்கிற புதுப் பெயர் என்னால் கிடைக்கட்டும். பராக்கிரம சாலியான காண்டீபரை ஒரு பலவீனமான ஸ்திரீ இக்கட்டிலிருந்து காப்பாற்றியதாய் நாளை என்னைப் பெண்குலம் போற்றட்டும்..
வியா: ஆகா! என் மகா காவியத்தின் பிரமிக்க வைக்கும் புரட்சிமயமான அத்தியாயம் இந்தக் கணத்தில் பூர்த்தி அடைந்து விட்டது. பாண்டு புத்திரர்களே! அங்கே வானில் தேவர்கள் கூடி நின்று பெருங்குதூகலத்தோடு துந்துபியை ஆர்ப்பரிப்பதைப் பாருங்கள்! சகாதேவா, நீ ஏன் சிரிக்கிறாய்?
சகா: ஒன்றுமில்லை, மகரிஷி. ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் இந்தப் பெண்ணை அடைய இப்படி நாங்கள் நாலு பேர் இருப்பது தெரியாமல், அந்த மூட மன்னன் துருபதன் அத்தனைப் பிரயத்தனங்களோடு ஒரு மச்சப் பொறியை வேறு நிர்மாணித்தானே, அதை நினைத்துச் சிரித்தேன்.
திரௌ: பலன்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிற மனித வர்க்கம் எப்போதுமே அதற்கான முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. (மாலையோடு யுதிஷ்டிரரை நெருங்கி ஒரு நிமிஷம் தயங்கிய நிலையில்) சுவாமி! எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இம்மாலையை நான் தங்களுக்கு அணிவிப்பதற்கு முன்னால், அதைத் தயவு செய்து தீர்த்து வைப்பீர்களா?
யுதி: கேள், பெண்ணே.
திரௌ: வனவாசத்தில் உங்களுக்குக் கிட்டுகிற எதையும் நீங்கள் ஐவருமே பகிர்ந்து கொள்வதென அன்றைக்குச் செய்து கொண்ட அந்தப் பழைய சங்கல்பத்தைப் பேண வேண்டியே இப்போது என்னையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்ததாய்ச் சொல்கிறீர். ஆனால், தர்மம் அறிந்தவரே, பீமசேனர் வனவாசத்தில் அந்த இடும்பியை மணந்து கொண்ட போது அவளை மட்டும் இதே போல் ஏன் நீங்கள் யாரும் பகிர்ந்து கொள்ளவில்லை?
பீமனைத் தவிர மற்ற நால்வரும்: (பரபரப்பும் கோபமுமாய்) ஆ! அவள் ராட்சசி அல்லவா?
திரௌ: அடடா! எத்தனை சத்தியமான வார்த்தைகளை இப்போது பேசினீர்கள்! (மெல்லச் சிரிக்கிறாள்) இதன் சூட்சுமம் இப்போது தான் புரிகிறது. இடும்பி ராட்சசியாய்ப் போனதால் உங்கள் சங்கல்பத்துக்கு வேலையின்றிப் போயிற்று. நான் ராஜகுமாரியாய்ப் போனதால் அது இப்போது மட்டும் எங்கிருந்தோ இறக்கை முளைத்து உதவிக்கு ஓடி வந்தது! ஓ..ஆடவர் தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல. பாவம், அவை முன்னதைப் பின் தொடர்கிற வெறும் நிழற்படைகள்..(மாலையை யுதிஷ்டிரனின் கழுத்தில் அணிவிக்கிறாள். யுதிஷ்டிரர் தலை குனிகிறார்-மாலையை வாங்கிக் கொள்கிற சாக்கில்!)
-கணையாழி, டிசம்பர் 1976)

-(
புகைப்படம்: பீட்டர் பரூக்கின் மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி)

1 comment:

  1. ஆடவர் தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல.... எத்தனை சத்தியமான வார்த்தைகள்

    ReplyDelete