Friday, May 4, 2012

மணிமேகலையின் கண்ணீர்-(நாடகம்:கணையாழி வெள்ளி விழா மலரில் (1990) வெளியானது)


                                                                                  .
ரங்கத்தின் நடுவிலிருந்து ஒருவன் பயத்துடனும் பரபரப்புடனும் மேடைக்கு ஓடி வருகிறான். உடம்பு இறைக்கிறது. ஆயாசத்துடன் பெஞ்சில் அமர்கிறான். கையில் புத்தகங்கள் திணித்த பழைய பை இருக்கிறது. அது அந்த அவசரத்தில் கீழே விழுந்து சிதறுகிறது. அதைப் பொறுக்க சக்தி இன்றி, உடம்பு இறைக்க, நின்று பார்க்கிறான். பிறகு, குனிந்து மெதுவாய் ஒவ்வொரு புத்தகமாய்ப் பொறுக்கித் தூசி தட்டுகிறான். இருமுறை இருமுகிறான். தோளில் தொங்குகிற குடுவையிலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். கடைசி சொட்டுக்குப் பின்னும், அதிலிருந்து நீர் வராதா என்று ஏங்குகிற மாதிரி, அதை வாய்க்கு நேராகக் கவிழ்த்தபடி நிற்கிறான்.

பின்னால் இரண்டு பெண்கள் சிரிக்கிற குரல் மட்டும் கேட்கிறது. வெள்ளைத் துணியில் சட்டென்று கைகொட்டி ஆரவாரிக்கும் தோற்றத்தில் சில நிழல்கள் மறைந்து போகின்றன. தொடர்ந்து நிசப்தம் நிலவுகிறது. பின் மேடையில் வெளிச்சம் பரவுகிறது. மங்கலான வெளிச்சம். அவன் ஒரு காலை ஒரு கையால் கட்டிக் கொண்டு உட்கார்ந்து, மாறி மாறிப் புத்தகங்களைப் புரட்டுகிறான். திடீரென்று அவனுக்கு விக்குகிறது. விக்கல் பெரிதாகிப் பெரிதாகி வளர அதே கதியில் தபேலாவின் ஒலி சிறிது சிரிதாய்ப் பின்னணியில் பெரிதாகி ஒலித்து அடங்குகிறது. மறுபடியும் அவன் தண்ணீர்க் குடுவையை எடுத்து வாய்க்கு மேல் கவிழ்க்கிறான். ஒரே ஒரு சொட்டு மாத்திரம் விழுகிறது. மீண்டும் மேடையில் வெளிச்சம் மங்குகிறது. பின்னால், வெள்ளைத் திரையில் நிழல்கள் தோன்றி பழைய படியே சிரித்து எக்காளமிடுகின்றன. அவன் சோர்ந்த நிலையில் நாலைந்து புத்தகங்களைத் தலைக்கு அணை கொடுத்து பெஞ்சில் படுத்துக் கொள்கிறான். இப்போது வயலினிலிருந்து நடுக்கமான சுருதிகள் மெல்லப் பரவுகின்றன.

(பின்னணியில்) மூன்று குரல்கள்: (நகைப்புடன்) அதென்ன அட்சய பாத்திரமா, கவுக்கக் கவுக்கப் பெருகி வரத்துக்கு!

(அவன் திரும்பிப் பார்க்கிறான். குரல்கள் சட்டென்று தேய்ந்து போகின்றன. அவன், திடுக்கிட்டு எழுந்து, உட்கார்ந்து தலைக்கு அணை கொடுத்திருந்த புத்தகங்களை எடுத்து எதையோ தேடுகிறான். ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டுகிறான். ஒரு குறிப்பிட்ட பக்கம் கிடைத்தவுடன், சற்று நிதானித்து, சோர்வு மிக்க குரலில் படிக்கிறான்.)

அவன்: "மண்டிணி ஞாலம் எங்கும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.."

(திரும்பத் திரும்ப உண்டி கொடுத்தோர் கொடுத்தோரே .." என்கிற வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.)

(அரங்கில் மீண்டும் இருள் பரவுகிறது. கலீர்..கலீர்.. என்று சலங்கைச் சத்தம் கேட்கிறது. பின்னால் வெண் திரையில் மூன்று நிழல்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொணடு ஓடுகின்றன. இரண்டு பெண்கள் சிரிப்பது கேட்கிறது. தொடர்ந்து ஒரு பெண் குரல் விசும்புகிற சத்தம். அழுகை தேய்ந்து, சிரிப்புகள் மேலே எழும்புகின்றன. மறுபடியும், அழுகை ஒலி எழும்பி மெல்லத் தேய்கிறது. விளக்குகள் அணைகின்றன. இப்போது சுருதிப் பெட்டியிலிருந்து சுருதிகள் கிளம்பி வருகின்றன.)

குரல்: (சுருதியோடு இணைந்து)
அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்ன சம்பவ
யக்ஞாத் பவந்தி பர்ஜன்யோ
யக்ஞ: கர்ம சமுத்பவ...

இன்னொரு குரல்: அன்னம் பிரம்மா உபாசதே..
அன்னம் பிரம்மா உபாசதே..

குரல்: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...

குரல்கள்: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...
(மீண்டும் ஒரு முறை)

(பின்னால் மறுபடியும் சிரிக்கிற குரல்கள்... தொடர்ந்து அழுகிற குரல்..மாறி மாறிச் சலங்கை சப்தங்களுடன் நிழல்கள் வெள்ளைத் திரையில் ஒன்றை ஒன்றை துரத்திக் கொண்டு ஓடுகின்றன. சட்டென்று நிசப்தம். மேடையில் சில நொடிகள் இருள். பின் வெளிச்சம் வருகிற போது அவன் புத்தகங்களுக்கிடையே மல்லாக்கக் கிடந்தபடி முனகுகிறான்.)

பசி...பசி...தாகம்..பசி...பசி...

(பின்னால் நிறையக் குரல்கள் பசி..பசி..என்று எதிரொலிக்கின்றன.)

(மறுபடியும் பெண்களின் சிரிப்பொலி சலங்கைச் சப்தம் கேட்கிறது. அரங்கை இருள் சூழ்கிறது. பசி முனகல் மெல்ல வருகிறது. ஒளி ஒரு பக்கம் மட்டும் குவிகிறது. சிவப்பு ஆடையுடன் விரித்த தலையுடன் ஒற்றைச் சிலம்புடன் ஒரு பெண் நடந்து வருகிறாள். இவள் பார்வையாளர்களுக்கு முதுகு காட்டியபடி, மேடையின் விளிம்பில் ஆரம்பித்து, பின் திரை வரை 'திம் திம்' என்று சப்தம் எழுப்பி நடக்கிறாள். திரையை அடைந்ததும், அங்கேயே இடுப்பில் கை ஊன்றி நிற்கிறாள். இந்த சமயம், மேடையின் மறுபுறம் ஒளி குவிகிறது. இதே தோற்றத்தில் விரித்த தலையோடு இன்னொரு பெண் கையில் ஒரு குறுவாளுடன், பார்வையாளருக்கு முதுகு காட்டி அதே 'திம் திம்' ஒலியுடன் நடந்து சென்று- பின் திரைக்கு அருகில் நின்று கொள்கிறாள். இப்போது, ஒளி அவன் மீது குவிகிறது. அவன் இருபுறமும் மாறி மாறி அவர்களைப் பார்க்கிறான். அவர்களின் முகம் அவனுக்குப் புலப்படுவதில்லை. திடீரென்று வயிற்றைப் பிடித்துக் கொள்கிறான். பசி..தாகம்..என்று முனகுகிறான்.)

(இடது புறத்துப் பெண் சிரிக்கிறாள்)

அவன்: (கோபத்துடன் திரும்பிப் பார்த்து) என்ன சிரிப்பு?

இடப்புறத்துப் பெண்: (இரைந்த குரலில்)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை...

(தொடர்ந்து ஜோ..ஜோ..என்று குரல் எழுப்பி, கைகளை உயர்த்தி மழை பெய்கிற மாதிரி அபிநயிக்கிறாள்.)

அவன்: (மழை எதுவும் காணாமல், நாக்கைத் துருத்தி, நாலா புறமும் முகத்தைத் திருப்பித் தவிக்கிறான். பின், வலது புறத்துப் பெண்ணைப் பார்த்து) நீ யாரம்மா?

(வலது புறத்துப் பெண், இப்போது சட்டென்று கை கால்கள் எல்லாம் அதிர விஸ்வரூபம் எடுப்பது போல் அபிநயித்து நிற்கிறாள்.)

வலது புறத்துப் பெண்: எங்கே துரியோதன
துச்சாதன ரத்தம் பீமா?
கொண்டு வா, இங்கே ஒரு குடம்!
இது எந்த ரத்தம்?
தலை ரத்தமா? தொடை ரத்தமா?
எந்த ரத்தமாய் இருந்தால் என்ன?
எந்தப் பகுதி ரத்தமும் இந்த நிறம் தானே?
கொட்டு என் தலையில்..
கூந்தலை முடிந்து எத்தனை நாளாயிற்று?

(சட்டென்று மேடையில் சிவப்பு ஒளி பரவி வருகிறது. யுத்த முரசு பின்னணியில் ஏழெட்டு முறை அதிர்ந்து ஓய்கிறது.)

அவன்: யாரு நீங்க ரெண்டு பேரும்? இப்ப எனக்குப் பசிக்குது. சோறு இருக்கா உங்க கையிலே..?

வலது புறத்துப் பெண்: ரத்தம் வைத்திருக்கிறேன் வேண்டுமா? என் குழலில் பூசியது போக எஞ்சிய ரத்தம். துரியோதனின் தொடையிலிருந்து பீமன் கதை உறிஞ்சி எடுத்த ரத்தம். ஒன்பதாயிரம் வருஷம் போயும் இன்னும் உறையாத ரத்தம்.

(இரு பெண்களும் இப்போது, தபேலாவின் ஜதிகளுக்கு ஏற்பக் கால்களைப் பரப்பி நடனம் ஆடிக் கொண்டே, இடம் மாறி நிற்கிறார்கள்.)

(மனிதன் இப்போது எழுந்து, அவர்கள் இருவருக்கும் நடுவில் மண்டியிட்டு நின்று ஆகாயத்தைப் பார்த்துக் கைகளை நீட்டுகிறான்.)

மனிதன்: சக்தீ, சக்தீ, சக்தீ..
என் முன்னால் வா..
என் பசி தீர, சக்தீ வா.
என் தாகம் தீர, சக்தீ வா..
எனது சக்தியை எனக்கு மீட்டளிக்க
சக்தீ, சக்தீ..
நீ எங்கிருந்தாலும் வா..

(அந்த இரண்டு பெண்களும் சிரிக்கிறார்கள்)

அவன்: (திரும்பி, கோபமாய்) ஏன் சிரிக்கிறீங்க?

இரு பெண்களும்: நாங்களே சக்திகள்..எங்களை முன்னால் வைத்துக் கொண்டு, எங்கோ முறையிடுகிறாயே?சிரிக்காமல் என்ன செய்வது?

(அவன் மெல்லத் தலை குனிகிறான். ஒளி மங்குகிறது. தபேலாவின் ஜதிகள் மறுபடியும் மெல்ல ஆரம்பித்துப் பெரிதாகக் கேட்கின்றன.
இடது புறத்திலிருந்து மூன்று உருவங்கள் துப்பட்டியைப் போர்த்திக் கொண்டு மெதுவாய் மேடையில் பிரவேசிக்கின்றன. அவர்களின் முகங்கள் அந்தப் பெண்களின் பக்கம் திரும்பி இருக்கின்றன.)

முதல் ஆள்: (முதுகைக் கூனி நடந்து கொண்டே) பசிக்குச் சோறு தருவியா?

இரண்டாம் ஆள்: தாகத்துக்குத் தண்ணி தருவியா?

மூன்றாம் ஆள்: நோய்க்கு மருந்து தருவியா?

(மூவரும் இருளில் மறைகிறார்கள். அந்த இரு பெண்களும், கால்களை வீசி அபிநயத்தோடு அசைந்து மறுபடியும் இடம் மாறுகிறார்கள்.)

இடது புறத்துப் பெண்: (சட்டென்று திரும்பி) நான் கற்புக்கரசி.

வலது புறத்துப் பெண்: (அவ்விதமே திரும்பி) நான் காவல் தெய்வம்.

இடது புறத்துப் பெண்: நான் காவிய நாயகி.

வலது புறத்துப் பெண்: நான் இதிகாசத் தலைவி.

இடது புறத்துப் பெண்: நான் கண்ணகி!

வலது புறத்துப் பெண்: நான் திரௌபதி!

இடது புறத்துப் பெண்: நானே சக்தி!
.
வலது புறத்துப் பெண்: நானே சக்தி...!

அவன்: (தடுமாறிய குரலில்)
நான் மனிதன்.
பசி நிறைந்த மனிதன்.
தாகம் நிறைந்த மனிதன்.
சக்திக்காக ஏங்குகிற மனிதன்.

(இப்போது பின்னணியில் சுருதிப் பெட்டியிலிருந்து ரீங்காரமாய ஒலி வருகிறது. மிருதங்கம் விட்டு விட்டு மென்மையாய் சப்திக்கிறது. மேடையில் ஒளி மங்கி மறுபடியும் பரவி விகசிக்கிறது.)

கண்ணகி: (தரையைச் சட்டமாய் மிதித்து மிதித்து நடந்து வந்து அவன் முன் நிற்கிறாள்.) நானே கண்ணகி. ஒற்றைச் சிலம்பு என் அடையாளம்.

திரௌபதியும் முன்னால் வந்து: நானே திரௌபதி. ரத்தக் கூந்தல் என் அடையாளம்

அவன்: (குனிந்த தலையுடன்)

நான் மனிதன்.
சாதாரண மனிதன்.
பசி என் அடையாளம்.
துக்கம் என் அடையாளம்.
நோய் என் அடையாளம்.

கண்ணகி: உன்னை நான் பசி அற்றவன் ஆக்குகிறேன்.

மனிதன்: (ஆச்சரியத்துடன்) எப்படி?

கண்ணகி: என்னை நம்பி விருத்தம் இரு!

மனிதன்: ஐயோ..பசியைத் தீர்க்க உபாயம் கேட்டால் பட்டினி கிடக்கச் சொல்கிறாயே..நாங்கள் தினமும் அதைத் தானே செய்கிறோம்?

திரௌபதி: உன் துக்கத்தை நான் தீர்த்து வைக்கிறேன்.

மனிதன்: எப்படி?

திரௌபதி: என் பெயரைச் சொல்லிக் கொண்டு நெருப்பின் மேல் நட!

(அவன், ஆ..ஆ.. என்று முனகிக் கொண்டு, ஒரு காலால் நொண்டியபடி, நெருப்பின் மேல் நடப்பது போல பாவனை செய்து, தடுமாறிக் கீழே விழுகிறான். பின்னணியில் தாரை தப்பட்டை ஒலிகள கர்ண கடூரமாய்க் கேட்கின்றன.)

அவன்: ஐயோ..நாங்கள் என்றைக்குப் பன்னீரில் நடந்தோம், புதிதாய்த் தீயில் நடக்க? ஆ..ஆ..

திரௌபதி: ஓ..நெருப்பு! எனக்கு மிகவும் வஸ்து...

(திடீரென்று அரங்கில் இருள் நிறைகிறது. பின்னணியில், சிவப்பாய் நெருப்பு எரிகிறது. மனிதர்களின் அலறலும் ஓலமும் கேட்கின்றன.)

(கண்ணகியும் திரௌபதியும் மாறி மாறிச் சிரித்து விட்டுப் பாடுகின்றனர்.)

பாட்டு: எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ...தீ...இந்நேரம்!
பங்கமுற்றே பேய்களோடப்
பாயுதே தீ தீ .. இந்நேரம்!

கண்ணகி: இந்த நெருப்பு என் நெஞ்சிலிருந்து புறப்பட்ட நெருப்பு. மதுரை எரிகிற நெருப்பு.

திரௌபதி: இந்த நெருப்பு என் சொல்லிலிருந்து புறப்பட்ட நெருப்பு. குருட்சேத்திரத்துப் பிணங்களின் சிதைகளுக்கு மூட்டிய நெருப்பு.

(பின்னணியில் மறுபடியும் ஓலங்கள் கிளம்பி, சட்டென்று நிசப்தம் பரவுகிறது. மனிதன் காதுகளைப் பொத்தியபடி பின் வாங்குகிறான்.)

மனிதன்: (கைகளை ஆட்டி)

இல்லை..இல்லை... நீங்கள் சக்திகள் இல்லை..நீங்கள் கொலைகாரிகள்.

கண்ணகி: முட்டாள், நாங்கள் செய்தது கொலை இல்லை.

திரௌபதி: (அபிநயத்தோடு) சம்ஹாரம்!

கண்ணகி: நீ செய்தால் கொலை. நான் செய்தால் சம்ஹாரம்.

திரௌபதி: கொலை வேறு; சம்ஹாரம் வேறு!

கண்ணகி: பட்டினி வேறு; விரதம் வேறு!

திரௌபதி: தூக்கம் வேறு; தியானம் வேறு!

மனிதன்: எல்லாம் வேறு..வேறு.. சொல் வேறு, பதம் வேறா? இதென்ன குழப்பம்? வேண்டாம் பெண்களே..போங்க, போங்க. நீங்க ஆபத்தானவங்க.உங்களுக்கு நெருப்பை மூட்டத் தான் தெரியும்; அணைக்கத் தெரியாது.

(அவர்கள் கோபவேசமாய் அவன் மீது பாய்வது போல் பாவனை செய்ய அவன் அடி வயிற்றில் கை வைத்து அமர்கிறான்.)

மனிதன்: இங்கே தினமும் மூணு வேளையும் எரியற நெருப்பு? அதை அணைக்க சக்தி உண்டா உங்களுக்கு?

கண்ணகி: (கோபமாய்) துன்மார்க்கா!

திரௌபதி: துஷ்டா!

கண்ணகி: (சுழன்று கூத்தாடி)

மாநகர் மதுரையைக்
கணத்தில் எரித்தது,
எந்தப் பொறி?

திரௌபதி: (சுழன்று, கண்ணைக் காட்டி அபிநயித்து)
மங்கை நல்லாளின்
கண்ணில் கிளம்பிய
கற்புப் பொறி!

(மறுபடியும் சுழன்று)

கௌரவர் சேனையைக்
களத்தில் நசுக்கி, ரத்தக்
களரியாக்கியது, யார் சக்தி?

கண்ணகி: அவிழ்த்த கூந்தலை
முடிக்க எண்ணிய
அம்மையின் சக்தி!

மனிதன்: (கண்ணகியை நோக்கி)
உனக்கு முக்கியம், செத்துப் போன உன் புருஷன்.
(திரௌபதியை நோக்கி)
உனக்கு முக்கியம், அவிழ்த்துப் போட்ட ஒரு முழக் கூந்தல்.
அதற்குப் பலி அப்பாவி மக்கள்; அழகிய மாநகர்..
எருவுக்கும் ஆகாத செத்த மனித உடம்பு.
சவுரிக்கும் ஆகாத ஒரு முழக் கூந்தல்.
நாலு நாள் சீவாமல் விட்டால் பேன் குடியேறும் கூந்தல்.
இந்த உப்புப் பெறாத சாக்குகளின் மறைவில்,
மிருகத்தனமான பழி உணர்ச்சி.
வெஞ்சினம்; கொலை வெறி..
வெறும் வெறி..
வெறி..வெறி...

(குறுக்கும் நெடுக்குமாக உலவுகிறான்)

உங்களுக்கு வெறி.
எங்களுக்குப் பசி.
பசி-மனித குணம்.
வெறி-மிருக குணம்.
இதில், தெய்வ குணம் எது?
வெறியும் பசியும் தெய்வத்துக்கு வருமா?

(உடம்பு நடுங்க)

என் உடம்பு முழுக்கவும் உஷ்ணம் ஏறுது..
உங்களைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு.
என் கண் முன்னால் நிக்காதீங்க.
போங்க..போங்க..

(மனிதன் கத்துகிறான். கண்ணகியும் திரௌபதியும் சிரிக்கிறார்கள்.)

கண்ணகி: கோபப்படாதே, தம்பி! என்னைக் கொஞ்சம் கும்பிடேன்.

திரௌபதி: துக்கப்படாதே தம்பி! என் மேல் ஒரு துதிப் பாடல் பாடேன்.

மனிதன்: எனக்குக் கும்பிடவும் தெரியாது, துதிக்கவும் தெரியாது.

கண்ணகி, திரௌபதி: (இருவரும் சேர்ந்து வியப்போடு ஒரே குரலில்)

சற்று முன் மனிதன் என்று சொன்னாயே..இப்போது கும்பிடத் தெரியாது என்று சொல்கிறாயே? கும்பிடுவது ஒன்றைத் தவிர வேறு என்ன தெரியும் உங்களுக்கு?

திரௌபதி: (கம்பீரமாய் நின்று) எங்கே, நெடுஞ்சாண் கிடையாய்க் கீழே விழு பார்ப்போம்!

கண்ணகி: என்ன வேண்டுமோ கேள் தருகிறோம்.

மனிதன்: (தடுமாறி, சற்று யோசித்து) ஆகாரம் தருவீர்களா?

கண்ணகி(கைகளை உயர்த்தி): ஆசீர்வாதம் தருகிறோம்.

மனிதன்: உண்ண என்ன தருவீர்கள்?

திரௌபதி: ஆசீர்வாதம் தருகிறோம், மகனே! அதை உண்ணப் பழகிக் கொள்.

மனிதன்: (வயிற்றைப் பிடித்துக் கொண்டு) பசி...பசி...

திரௌபதி: (கண்ணகியிடம்) கண்ணகி! நம் சந்நிதியிலேயே இவன் பசி பசி என்று புலம்பி நம்மை அவமதிக்கிறானே..

கண்ணகி: அது தான் எனக்கும் ஆச்சரியம் தருகிறது..பசி என்ன இவனுக்குப் புதிதா? இத்தனை வருஷங்களில் அது அவனுக்குப் பழக்கமாகி இருக்க வேண்டுமே?

திரௌபதி: இல்லை. இவன் பொய் சொல்கிறான். அன்றைக்குக் கிருஷ்ணன் அட்சய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த எச்சில் பருக்கையைச் சாப்பிட்ட உடனேயே, உலகில் பசி ஓடிவிட்டது. அதற்கப்புறம், யாருக்கும் பசி எடுக்க வாய்ப்பே இல்லை.

மனிதன்: பசி...பசி...

(இப்போது இனிமையாய் மணிச் சத்தமும், தம்புரா சுருதிகளும் கேட்கின்றன. ஒரு பெண், தூய வெள்ளை உடையுடன் கையில், ஓர் அழகிய பாத்திரம் ஏந்தி நடந்து வருகிறாள்.)


புதிய பெண்: பசிப் பிணி என்னும் பாவி அது களைந்தோர்
இசைச்சொல் அளவைக்கு எந்நா இயலாது.

புத்தம் சரணம் கச்சாமி.
தர்மம் சரணம் கச்சாமி.
சங்கம் சரணம் கச்சாமி.

நீக்கமற நிறைந்திருக்கும் பசியே,
உணவால் உன்னைத் தொழுகிறேன்.
நீக்கமற நிறைந்திருக்கும் தாகமே,
நீரால் உன்னைத் தொழுகிறேன்.

(அவள் மெதுவாக நடந்து வந்து, நடுவில் நிற்கிறாள். மனிதன், சட்டென்று மண்டியிட்டுக் கை கூப்புகிறான்.)

மனிதன்: உன்னைப் பார்த்ததுமே என் பசியில் பாதி தேய்ந்து போனது. நீ யாரம்மா?

அவள்: கணக்கற்ற நூற்றாண்டுகளுக்கு முன் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் பொங்கி விழுங்கியது. அன்றைக்கே, அந்த உலக அறவியின் பசியும் துக்கமும் நோயும் கடலில் கரைந்திருக்கும் என்று நம்பினேன்.

எல்லாம் பொய்.

ஆபுத்திரனின் கதையும் பொய்.

அவன் அறியாமையால், அன்று கோமுகிப் பொய்கையில் விட்டெறிந்த அந்த அமுத சுரபிக்காகக் கணக்கற்ற நாட்கள் நான் மணிபல்லவத் தீவில் காத்திருந்ததும் பொய்.

(கண்ணகியும் திரௌபதியும் இகழ்ச்சியுடன் அவளை வட்டமிடுகின்றனர். மணிமேகலை தலை குனிந்து நிற்கிறாள்.)

மனிதன்: உலகுக்கு உணவூட்டினாய், நீயே சக்தி!
(அவளை நோக்கி) உன்னையே அர்ப்பணித்தாய், நீயே சக்தி!
பசித்த மனிதர் மனிதர் மத்தியில்-
பரிதி போல் வலம் வந்தாய், நீயே சக்தி!

(மணிமேகலை பாத்திரத்தால் முகத்தை மூடிக் கொள்கிறாள். கண்ணகியும் திரௌபதியும் அவளை நெருங்குகின்றனர்.)

திரௌபதி: யாரடி நீ.. ஏதடி, உனக்கு சக்தி?

கண்ணகி: ஊரைக் கொளுத்திப் பழக்கமுண்டா?

திரௌபதி: யுத்தம் எடுத்துப் பழக்கமுண்டா?

கண்ணகி: சிலம்பை உடைத்துப் பழக்கமுண்டா?

திரௌபதி: சபதம் எடுத்துப் பழக்கமுண்டா?

கண்ணகி: நெருப்பை மூட்டுவாயா?

திரௌபதி: ரத்தம் பூசுவாயா?

கண்ணகி: கணவனை அறிவாயா?

திரௌபதி: காதலை உணர்வாயா?

கண்ணகி: கனகவிசயன் உனக்காகக் கல் சுமப்பானாடி?

திரௌபதி: பூசாரி உனக்காகப் பூக்குழி இறங்குவானாடி?

கண்ணகி: கோயில் உண்டாடி, உனக்கு?

திரௌபதி: ஒரு குளமும் உண்டாடி, உனக்கு?

இருவரும்: (ஒரே குரலில்)

போடி..போடி...
மூளி...கோளி..பேடி...

(மணிமேகலையின் கண்களில் நீர் தளும்ம்புகிறது. பின்னணியில்,சோகமாய் ஓர் இசை மெல்ல ஒலிக்கிறது.)

மணிமேகலை: ஆபுத்திரனிடம் அட்சய பாத்திரத்தை இரவல் வாங்கினேன். ஆதிரை வீட்டு வாசலில் பிச்சைக்காரியாய் நின்றேன். ஆயிரமாயிரம் பேருக்கு அன்னம் வார்த்தேன். புத்த பூர்ணிமை வெளிச்சத்தில் புவிக்கு விடுமோட்சம் கிடைக்கும் என்று நம்பினேன்.

பூம்புகாரைக் கடல் கொண்டதேயன்றி, பசியையும் துக்கத்தையும் கடல் கொள்ளவில்லை.
அமுதசுரபியின் கனத்தை எத்தனை நாள் தாங்குவேன்? இதற்கு முடிவே இல்லையா?

மனிதன்: (ஓடிப்போய், அவள் முன் மண்டியிட்டு)
அம்மா தாயே...நீயே தெய்வம்...என்னைத் துன்பத்திலிருந்து காப்பாற்று

மணிமேகலை: (சோகம் நிறைந்த குரலில்)
என்ன யாரும் இனம் கண்டு கொள்ளவில்லை.
அமுதசுரபியைப் பறித்து ஆற்றில் எறிந்தீர்க்ள.
என்னையும் அடியோடு மறந்து போனீர்கள்.

மனிதன்: உனக்குப் பயமுறுத்தத் தெரியவில்லையே, அம்மா?
பயமுறுத்தினால் அல்லவா தெய்வமாப் பூசிப்போம்? பவ்யமா நின்னா எப்படி?
கண்ணகியையும் திரௌபதியையும் தெய்வமாக்கினோம்.மனிமேகலையைத் தூக்கிக் கடலில் எறிந்தோம்.

மணிமேகலை: ( கோபமாய்) புத்தரை என்ன செய்தீர்கள்?

மனிதன்: பத்திரமாய் இலங்கைக்கும் பர்மாவுக்கும் ஏற்றி அனுப்பிட்டோம்.எங்களுக்கு எதுக்கு அவங்கள்லாம்?

(கண்ணகியும் திரௌபதியும் இப்போது ஆக்ரோஷமாய்க் கூத்தாடுகிறார்கள்.)

(பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.)

தாம்...தோம்...தக்கத்தோம்.
தாம்...தோம்...தக்கத்தோம்.
தாம்...தோம்...தக்கத்தோம்.
தாம்...தோம்...தக்கத்தோம்.
                 
அதிரட்டும் உலகம் யாவும்
எரியட்டும் செந்தீ எங்கும்
                                                                       
நாலாபுறமும் ஓங்காரம்
நடக்கட்டும் நம் சம்ஹாரம்

உடையட்டும் ரத்த ஓடை
உலகமே எங்கள் மேடை
                                                                                           
தாம்...தோம்...தக்கத்தோம்
தாம்...தோம்...தக்கத்தோம்
                                                                                               

(கண்ணகி சிலம்பை ஆவேசமாய் 'மீண்டும்' போட்டு உடைக்கிறாள். திரௌபதி விரித்த கூந்தலை முடிக்கிறாள்)

மனிதன்: (குரலில் வலுவிழந்து, மணிமேகலையைப் பார்த்து) அம்மா, அந்த அமுதசுரபியிலிருந்து என் பசிக்குச் சோறிடுவாயா? உன்னைத் தொழக் கூட எனக்குத் தெம்பில்லை.

மணிமேகலை: (கலங்கும் குரலில்) அமுத சுரபியில் சோறு என்றோ வற்றி விட்டது மகனே! இப்போது, இது நிறைய, ஆயிரமாயிரம் வருஷங்களாய் நான் அழுது அழுது நிரப்பிய கண்ணீர் மட்டுமே வற்றாமல் தேங்கி இருக்கிறது..அதைத் தீர்த்தமாய்த் தருவேன், கையேந்துவாயா?

(மணிமேகலை விம்மி விம்மி அழுகிறாள். கண்ணகியும் திரௌபதியும் பெரிதாய்ச் சிரித்து அபிநயங்களோடு பின்னால் கூத்தாடுகின்றனர். மனிதன் சோர்ந்து தரையில் சாய்கிறான்.)                    
*

(கணையாழி, ஆகஸ்ட் 1990)

(புகைப்படங்கள்: 1982-ஆம் ஆண்டு இந்நாடகம், நான் அப்போது பணி புரிந்த பள்ளியின்
ஆண்டு விழாவில் எனது இயக்கத்தில் குழந்தைகளைக் கொண்டு
நிகழ்த்தப் பட்டது. அதிலிருந்து இரண்டு காட்சிகள்)




                               
                 




















                         





















No comments:

Post a Comment