ஜாபாலா
சத்யகாமன்
கௌதமரிடம் போய்த் தனக்கும் மற்ற எல்லாப் பிள்ளைகளையும் போல் வேதம் கற்றுக்
கொடுக்குமாறு கேட்டான். கௌதமர் சத்ய காமனை ஏற இறங்கப் பார்த்து, "உன் தந்தை பெயர் என்ன? உன் கோத்திரம் என்ன?" என்று கேட்டார்.
சத்யகாமன் மனம்
குழம்பிய நிலையில் தன் தாய் ஜாபாலாவிடம் வந்து,"அம்மா, எனக்கு வேதம் படிக்க வேண்டும். என் அப்பா யார்? என் கோத்திரம் யாது? குருநாதர் அறிந்து வரச்
சொன்னார்.."என்றான். ஜாபாலா கொஞ்ச நேரம் எதையோ யோசித்த படி மௌனமாய் இருந்தாள். பின் சத்யகாமனிடம்,
" குழந்தாய், நான் சின்ன வயசில் வறுமையின் காரணமாய் யார்
யார் வீட்டிலோ வேலை செய்திருக்கிறேன். அந்த சமயத்தில் நீ யாருக்குப் பிறந்தாய்
என்பதை நான் அறியேன். அதனால்,உன் அப்பா
பெயரையோ கோத்திரத்தையோ என்னால் கூற
முடியாது. படிப்பதற்கு அப்படி ஒரு அடையாளம் அவசியம் தேவை என்றால்,நான் சொன்னதை அப்படியே உன் குருவிடம் போய்ச்
சொல். கூடவே, ‘என் பெயர்
சத்யகாமன், என் தாயின் பெயர்
ஜாபாலா..அதனால் நான் சத்யகாம ஜாபாலன்'
என்றும் சொல்.." என்றாள்.
சத்யகாமன்
குருவிடம் சென்று, மற்ற எல்லா
மாணவர்களும் நிறைந்திருந்த சபையில் தைரியமாய் எந்த வித மனத் தடைகளும் அற்றவனாய்த்
தன் தாய் சொன்னதை அப்படியே ஒரு வார்த்தை
விடாமல் திரும்பச் சொன்னான். கூடவே, தனது கோத்திரம் ஜாபாலா கோத்திரம் என்றும் அதனால் தன்னை சத்யகாம ஜாபாலன் என்றே
அடையாளப் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினான்.
அந்த மேன்மை
வாய்ந்த குரு இதைக் கேட்டுச் சற்றும் அவன் மீது
இகழ்ச்சியோ வெறுப்போ காட்டாது, சபையே ஆச்சரியப்
படுகிற மாதிரி, "சத்யகாமா, எவன் ஒருவன் இவ்விதம் தைரியமாய் சத்தியத்தைப்
பேசுகிறானோ அவனே பிராம்மணன். அந்த வகையில் வேதம் படிக்கத் தகுதியான முதல் ஆள் நீ
தான். போ, அவர்கள் எல்லோருடனும் போய் உட்கார்ந்து
கொள்.." அவனைப் பார்த்து சந்தோஷத்தோடு சொன்னார்.
இந்தக் கதை
கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷங்களுக்கும் மேல் பழமையான சாந்தோக்கிய உபநிஷத்தில் வருகிறது. தந்தைவழி
வம்சாவளியே முன்னிறுத்தப் பட்டு, கோத்திரங்களாய்
அங்கீகரிக்கப் பட்ட ஓர் ஆண்-மைய சமூக
அமைப்பில் அந்த மரபைத் தைரியமாய் உடைத்தெறிந்து, முதன் முதலில் தாயின்
பெயரில் கோத்திரம் சொன்னவள் ஜாபாலா.
ஜாபாலா உணமையோ, கற்பனையோ நாம் அறியோம். ஆனால்,
தைரியம், சுயமரியாதை,சத்ய வேட்கை, தன்னம்பிக்கை
போன்ற பொது மனிதப் பண்புகளின் அடையாளமாகத் தனியே தெரிகிறாள் இந்த அதிசய ஜாபாலா.
உலக மகளிர்
தினமான இன்று, அதிகம் அறியப் படாத இந்த வேத காலத்து ஜாபாலாவை
இங்கே நினைவு கூர்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
(Photo Courtesy: A still from the 1983-film Adhisankaracharya by G.V.Iyer)
No comments:
Post a Comment