Thursday, September 12, 2013

அப்பாவும் பிள்ளையும்


ந்த ராத்திரி அற்புதமாய் இருந்தது. மொட்டை மாடியின் கட்டாந்தரை யில், அப்பாவின் பக்கத்தில் சந்துரு மல்லாக்கப் படுத்துக் கிடந்தான். ஆகாயம்  முழுக்கவும் நட்சத்திரங்கள் வாரி இறைக்கப் பட்டிருந்தன. அப்பா அவனுக்கு ஒவ்வொரு நட்சத்திரமாய்க் காட்டினார். கேள்விக்குறி மாதிரி வானின் வடதிசையில்  சப்தரிஷி மண்டலம் தெரிந்தது. அந்த ஏழு நட்சத்திரங்களையும் அப்பா அவனுக்குக் காட்டிக் கதை சொன்னார். அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. அப்பாவை இறுக்கக் கட்டிக் கொண்டு அவன் தன் சந்தோஷத்தைப் பிரகடனப் படுத்திக் கொண்டான். அந்த நிலையிலேயே கழுத்தை ஒடித்து அந்த ஏழு நட்சத்திரங்களையும் அண்ணாந்து பார்த்தான். ஒவ்வொன்றும் அவனைப் பார்த்துச் சிமிட்டிச் சிமிட்டி சமிக்ஞை மொழியில் என்னமோ பேசுகிறார்ப் போலத் தோன்றியது.

இப்படியே இந்த மாதிரியே இந்த ராத்திரியாகவே இருந்து விட்டால் எந்தனை நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். இப்படி, அப்பாவுடன் ஒட்டிக் கொண்டு, உரிமையோடு அவர் வயிற்றில் காலைப் போட்டுக் கொண்டு, ஜில்லென்று காற்று வீசுகிற இந்த மெல்லிய இருட்போதில் நிர்மலமான அந்த ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு, அந்தக் கேள்விக் குறி நட்சத்திரங்கள் ஏழையும் இமை கொட்டாமல் வெறித்துக் கொண்டு படுத்திருக்கிற ஆனந்தம் நிலைத்திருக்க, யாராவது இந்த நேரமும் பொழுதும் நகராமல் பண்ணினால் தேவலையே என்று தோன்றியது. ஆனால், அது சாத்தியமில்லை என்று உணர்ந்ததில், மனசு முழுக்கவும் அடுத்த நிமிஷமே சோகம் வந்தது.

போன வாரம் இப்படி ஒரு ராப்போதில் தான், தெருக்கொடியில் குடியிருக்கும் மூர்த்தி வீட்டிலிருந்து, உடம்பை நடுங்க வைக்கிற மாதிரிக் குரூரமாய் ஓர் அழுகை ஒலி பீறிட்டு வந்தது; எல்லார் வீட்டு வாசலிலும் ஆண்களும் பெண்களும் ஒரு நிமிஷத்தில் நிறைந்து போயினர். பக்கத்து வீட்டுச் சீனு மாமா தான் துண்டை வெறும் தோளில் போட்டுக் கொண்டு அவசர அவசரமாய் என்ன ஏது என்று பார்க்க ஓடினார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் விஷயம் தெருவெல்லாம் பரவி விட்டது. மூர்த்தியின் அப்பா செத்துப் போய் விட்டார். மூர்த்தியையும் அவனது முப்பத்தைந்து வயசு அம்மாவையும் அனாதைகளாக்கி விட்டுத் திடுதிப்பென்று புறப்பட்டுப் போய்விட்டார். அந்தக் கோடி வீட்டு அழுகுரல் இன்னும் தெளிவாய் ஞாபகத்தில் இருந்தது.

அவன் இந்த நேரத்தில் அப்பாவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். உடம்பில் பெரிதாய் நடுக்கம் வந்தது. மூர்த்தியின் அப்பா மாதிரி, அவன் அப்பாவும் செத்துப் போய்விடவில்லை. ஸ்தூலமாய் முழுமையாய் மூச்சு விட்டுக் கொண்டு பக்கத்தில் தான் படுத்திருக்கிறார். ஆகாயத்து நட்சத்திரங்களை அவனுக்குக் காட்டுகிற  இந்த அப்பா, அவரது சுவாசம், அந்த உடம்புச் சிவப்பு, இந்தக் கட்டாந்தரை, அவரை உரசிக் கொண்டு அவர் மீது சுவாதீனமாய்க் கால் பரப்பிக் கொண்டு படுத்திருக்கிற அவன்- இவை எல்லாம் அந்த ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலவே நிஜம். இது எப்போதும் நிஜமாக இருக்க வேண்டும். இந்த ராத்திரி நகராமல் இப்படியே நிற்க வேண்டும். விடியவே கூடாது. இப்படி இது விடிந்தும் அஸ்தமித்தும் ராத்திரிகளும் பகல்களும் மாறி மாறி வரத் தொடங்கினால் எந்த ஒரு ராத்திரியாவது இன்றைக்கு அவன் அருகில் படுத்திருக்கிற இந்த அப்பாவும் மூர்த்தியின் அப்பா மாதிரிச் செத்துப் போவார். அப்புறம் அவனுக்கு நட்சத்திரங்களைக் காட்ட அப்பா இருக்க மாட்டார். முதுகில் தட்டித் தூங்க வைக்க அப்பா இருக்க மாட்டார். பாதி ராத்திரியில் மூத்திரம் வந்தால், வாசல் வரை துணைக்கு வந்து அவன் போய் முடிக்கிற வரை அருகில் நின்று கொண்டிருக்க அப்பா இருக்க மாட்டார். 

அவன் நடுக்கத்தோடு அப்பாவை மெல்லத் தடவினான். “அப்பா..” என்று அழுகிற குரலில் கூப்பிட்டான். தூங்குகிற தருவாயில் இமை செருகின அப்பா, சட்டென்று துணுக்குற்று விழித்துக் கொண்டு அவன் பக்கமாய்த் திரும்பிப் படுத்துக் கொண்டு அவன் தலையைக் கோதினார்.

“என்னடா ராஜா..?”

“அப்பா..மூர்த்தியோட அப்பா மாதிரி நீயும் செத்துப் போயிடுவியா, அப்பா?”-அவன் விசும்பத் தொடங்கினான்.

“சீ அசடு. யாருடா அப்படிச் சொன்னது?”

“நீ சாகக் கூடாது, அப்பா..”

“போடா அசட்டுப் பயலே..அதெல்லாம் ஒன்னும் சாக மாட்டேன். கண்ணை மூடிண்டு தூங்கு”

“நெஜமா நீ சாகக் கூடாது. எப்பவுமே சாகக் கூடாது..”

அவனுக்குத் தொண்டை கரகரத்தது. கண்களில் நீர் தேங்கிப் பார்வையை மறைத்தது.

போடா பைத்தியம். இப்படி எல்லாம் அசடு மாதிரிக் கற்பனை பண்ணிண்டு அழக் கூடாது.”

“மூர்த்தியோட அப்பா மட்டும் ஏன் செத்துப் போனார்?”

அப்பா பேசாமல் இருந்தார். திடீரென்று ஒரு சின்ன வெள்ளை மேகம் அந்த ஏழு நட்சத்திரங்களையும் வெடுக்கென்று கவ்வியது. ஆகாயம் முழுக்கவும் அங்கங்கே திட்டுத்திட்டாய், பஞ்சு பஞ்சாய் சின்னச் சின்ன மேகங்கள் உற்பத்தியாயின. 

அவன் கண் முன்னால் இப்போது முற்றிலும் புதிய ஆகாயம் விரிந்திருந்தது. யாரோ எந்த மூலையிலோ ஒளிந்து நின்று கொண்டு அந்தப் பஞ்சுப் பிசிருகளைப் பலமாய் ஊதியிருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.

“எப்படி இவ்ளாம் மேகம் வந்தது?”

அப்பாவுக்கு அவனது சிந்தனை திசை மாறியதில் சந்தோஷமாய் இருந்தது. அவர் அவனிடம் உற்சாகமாய்ப் பேசினார்.

“மேகம் எப்படி உற்பத்தியாறது, சொல்லு..சயின்ஸுல படிச்சிருப்பியே..?”

“நேக்குத் தூக்கம் வரதுப்பா..”

“படவா..!” அப்பா அவனைச் செல்லமாய்த் தட்டினார்.

“சமுத்திரத் தண்ணி சூரியனோட வெப்பத்துல ஆவியாகி மேல போயி மேகமா மார்றது. அப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமாக் குளுந்து கறுத்து..”

“மூர்த்தியோட அப்பா  ஏன் செத்துப் போனார்னு சொல்லுப்பா..“

‘அப்புறம் அடி தான் கிடைக்கும். தூங்கு பேசாம. நான் முதுகுல தட்டிண்டே இருக்கேன். அப்படியே தூங்கிப் போயிடுவியாம், என்ன?”

அவன் சிணுங்கிக் கொண்டே குப்புறப் படுத்திக் கொண்டான். அப்பா மெதுவாய் அவன் முதுகில் தட்டிக் கொண்டே இருந்தார். அப்படி அவர் தட்டுகிற ஒவ்வொரு தட்டின் போதும், எங்கோ பறக்கிற மாதிரி  இருந்தது. கொஞ்சம் உடம்பைத் திருப்பி தலையை நிமிர்த்திப் பழையபடி ஆகாயத்தைப் பார்க்கலாம் போல் இருக்கும். அந்த மேகத் திரள் இப்போது சப்தரிஷி மண்டலத்தை விட்டுவிட்டு வேறு பக்கம் நகர்ந்து விட்டதா என்று பார்க்கத் தோன்றும். ஆனால் அப்பாவின் மிருதுவான் தட்டல்கள் தடங்கலின்றித் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிற ஆனந்தத்தை இழக்க விரும்பாமல் அவன் குப்புறக் கிடந்தான். அப்பா கண்ணயரும் போதெல்லாம் அவர் கை சோர்ந்து தொய்ந்து அவன் முதுகில் ஸ்தம்பித்துப் போகவே, அவன் மெல்லச் சிணுங்கி “தட்டுப்பா..” என்று குரல் கொடுப்பான். அப்பா சட்டென்று கண் விழித்து, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தட்டத் தொடங்குவார்.

அவன் வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அப்பாவுக்கு மட்டும் படுத்தவுடன் தூக்கம் வந்து விடுவது  அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அது மட்டுமில்லை. தூங்கி வெகு சீக்கிரத்திலேயே சுவாச வீச்சுக்கள் பெரிதாகி விசித்திர சப்தங்களுடன் குறட்டை விடவும் ஆரம்பித்து விடுகிறார், அப்பா. சில சமயம் மூங்கிலை ஏழெட்டு வண்டுகள் குடைகிற மாதிரி சப்தம் வரும். சில சமயம் சிங்கம் கோபத்தோடு உறுமுகிற மாதிரிக் கேட்கும். சில சமயம் இங்கிதமாய், மூங்கில் துளைக்குள் காற்று புகுந்த புகுந்து வேறு புறமாய் வெளிப்படுகிற மாதிரி ஒலி வரும்.
          
எல்லோரும் தூங்கிப்போய் ஊரே அமைதியில் ஆழ்ந்திருக்கும் அந்த அமானுஷ்யமான இராப் போதில் இவன் மட்டும் விழித்திருக்க, அப்பாவின் மூக்குத் துவாரத்திலிருந்து விட்டு விட்டு வரும் அந்த விசித்திர சப்தம்  இவனைப் பயமுறுத்தும். அந்த சமயங்களில் எல்லாம் இவன் அப்பாவை உலுப்பி எழுப்பி அவரின் ஆழ்ந்த துயிலைக் கலைத்து சிணுக்கத்துடன் “பயமாய் இருக்குப்பா..” என்பான். அறிதுயில் கலைந்த நிலையிலும் அப்பா இவன் மீது கோபம் கொள்ளாமல் இவன் பக்கம் திரும்பி இவனை இறுகக் கட்டிக் கொண்டு மறுபடியும் முதுகில் தட்டுவார். குறட்டை ஒலி சட்டென்று தடங்கிச் சிறிய இடைவெளிக்குப் பிறகு வேறு ஸ்தாயியில் வேறு ராகத்தில் வெளிப்படத் தொடங்கும்.
          
இன்றைக்கு அப்பா ஆச்சரியமாய் சத்தமின்றித் தூங்கிக் கொண்டிருந்தார். அவன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து உட்கார்ந்து கொண்டான். தெருக் கம்பத்துக் குழல் விளக்கு வெளிச்சம் மொட்டை மாடியின் விளிம்புகளில் விழுந்து தரையில் அவன் படுக்கை வரை வழிந்திருந்தது. ரேடியோ ஏரியலுக்காகக் கட்டியிருந்த அந்த உயரமான சீரற்ற மூங்கிலின் நிழல் சரியாய் அப்பாவின் மீது கிடை மட்டமாய் விழுந்து அவரை இரண்டு கூறாய் வெட்டி இருந்தது.
        
அவன் எழுந்து உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். பின் பக்கத்து வாழைக் கொல்லையிலிருந்து தவளைகளின் சப்தம் மெல்லக் காற்றில் மெல்ல வந்தது.
        
நிசிப் போதில் கேட்கும் இந்த தவளைகளின் ஓலம் அவன் வயிற்றைப் பிசைந்தது. இத்தனை தவளைகளின் சத்தங்களில் எந்த ஒன்றாவது பாம்பு தவளையை விழுங்கும் சத்தமாக இருக்கும் என்று அவன் சிநேகிதன் ஒருத்தன் சொன்னது ஞாபகம் வந்தது. இது பற்றி அப்பாவிடம் மறு நாள் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. கீழே இறங்கி வாசலுக்குப் போக பயமாக இருந்தது. தனது இத்தகைய பயங்களை நினைத்துப் பலதடவை அவனுக்கே வெட்கம் வந்திருக்கிறது..தன்னொத்த பையன்கள் எத்தனை பேர் தைரியமாய் ரயில்வே ஸ்டேஷன் பொட்டல் வரைக்கும் போய் டூரிங் தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சினிமாப் பார்த்து விட்டு வருகிறார்கள்? ஏன் இவனுக்கு மட்டும் இந்த பயம் இருட்டு இருட்டாய்க் கண் முன் குமிந்து குமிந்து வந்து மருட்டுகிறது? எப்போதும் அவனது பயங்களிலிருந்து அவனைக் காப்பாற்றி இன்சுலேஷன் டேப் மாதிரி இப்படி அப்பாவும் அம்மாவும் எத்தனை காலம் இருக்க முடியும்? அவனுக்குக் கண்களில் நீர் மண்டிக் கொண்டு நின்றது. மேலே ஆகாயத்தில் கும்பல் கும்பலாய் நட்சத்திரங்கள் கூடி நின்றுக் கிசுகிசுக்கிற மாதிரித் தோன்றின. எவற்றோடும் சேராமல் வெகு தொலைவில் அந்தகாரத்தில் வானத்தின் ஏதோ ஒரு கோடியில் சின்னதாய்த் தன்னந்தனியாய் ஓர் ஒற்றை நட்சத்திரம் திடீரென்று கண்ணில் பட்டது. அட, நீ ஏன் இப்படித் தனியனானாய்? உன்னைச் சுற்றி எத்தனை பெரிய பாழ் வெளி? உன் குரல் யாருக்கு எட்டும்? உனக்கு மட்டும் பயமாக இல்லை?

இனிமேலும் சிறுநீரை அடக்க முடியாது என்று தோன்றியது. கீழே போய்த்தான் ஆக வேண்டும். என்ன பயம், பாழாய்ப் போன பயம்? கீழே முன் அங்கணத்தில் பாட்டியும் அத்தையும் படுத்திருப்பார்கள். பின் அங்கணத்தில் பெட்ரூம் விளக்கைத் தலை மாட்டில் வைத்துக் கொண்டு கதவை ஒருக்களிக்கச் சாத்தி மரக்கட்டையைத் தலைக்கு அணை கொடுத்து அம்மா தூங்கிக் கொண்டிருப்பாள். பாவம், அந்த மூன்று நாட்களும் அவள் தலைக்குக் கட்டையை வைத்துக் கொண்டு தான் தூங்குகிறாள். பின்கட்டில், வீட்டுக்கார மாமி, அவளின் கண் தெரியாத கிழத்தாயார், பகல் எல்லாம் தெருப் பையன்கள் வீட்டுக்கு வந்தால் நாய் மாதிரி ‘வள் வள்’ என்று விழும், மாமியின் தலை மழித்த விதவை அக்காள்- போதாக் குறைக்குக் கூடத்தில் அப்பா சிரத்தையாய் பூஜை பண்ணி வழிபடும் தாத்தா காலத்து சுவாமி விக்கிரகங்கள்- இத்தனை இருக்கையில் என்ன பயம்? அவனை எது என்ன செய்ய முடியும்?

அப்பாவை எழுப்பாமலேயே, அவன் மெல்ல எதிலும் இடித்துக் கொள்ளாமல் படிகளில் இறங்கி, ரேழி விளக்கைப் போட்டு, பிறையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்து, தாழ்ப்பாளைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்தி அதன் கிரீச்சொலி இருட்டின் நிசப்தத்தை மெல்லச் சீண்டி இம்சைப்படுத்த, கம்பி கேட்டைத் திறந்தான். தெரு, மனித அரவமற்று வெறிச்சோடி இருட்டிலும் பேரமைதியிலும் மூழ்கிக் கிடந்தது. இவன் வீட்டுக்கு நேர் எதிரே இருக்கும் விளக்குக் கம்பத்தில் வழக்கமாய் ஓர் இருபத்தைந்து வாட் விளக்கு மங்கலாய் ஒரு துக்கம் கலந்த வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டு இருக்கும். இன்று அதுவும் தன் பிராணனை விட்டு விட்டிருந்தது. ஏழெட்டு வீடுகள் தள்ளி இருந்த அந்தத் தெருவின் ஒரே குழல் விளக்கு மட்டும் தனது வெளிச்சத்தை முடிந்தவரை விநியோகித்துக் கொண்டிருந்தது.  அந்தக் குழல் விளக்கு தந்த தைரியத்தில் அவன் தெருவில் இறங்கி அவசர அவசரமாய் டிராயரைத் தூக்கிக் கொண்டு வாசல் சாக்கடை ஓரத்தில் உட்கார்ந்தான். இவனது நிழல் அரை மயக்க வெளிச்சத்தில் விசித்திரப் பரிமாணங்களோடு விடுவிடுவென்று பெரிதாகி நீண்டு எதிர்ச்சாரி வரை போய் விழுந்து கிடப்பதைக் கண்டு வெருண்டு, சுருண்டு படுத்திருந்த நாய் ஒன்று மெல்ல உறுமியது. தொடர்ந்து அங்கங்கே  நிறைய நாய்கள் ஏக காலத்தில் குரைக்கத் தொடங்கின. அவன் பயத்தில் தாறுமாறாய்ப் பெய்து டிராயரை எல்லாம் நனைத்துக் கொண்டான். அப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். இத்தனை நாய்களில் எந்த ஒன்றாவது தன மீது பாய்ந்து குதறப் போவதாய் அவனாகக் கற்பனை பண்ணிக் கொண்டான்.
  
      திடீரென்று நாய்கள் குரைப்பதை நிறுத்தி விட்டன. இவன் நம்மவன் என்று அவை உணர்ந்திருக்க வேண்டும். சற்றுமுன் உருமின நாய் மெல்ல இவனது நீண்ட நிழலைக் கண்டு சிநேகமாய் வாலை ஆட்டியது. இவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயம் குறைந்தது. இப்படி நிதானம் இழந்துப் பரபரப்பாய்த் தான் டிராயரை நனைத்துக் கொண்டது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று தன் மீதே கோபம் வந்தது.

     நாலைந்து வீடுகள் தள்ளி யார் வீட்டுக் கதவோ திறக்கிற சப்தத்தைத் தொடர்ந்து, யாரோ டார்ச் லைட்டுடன் வெளியே வந்து சுவரோரமாய் வேட்டியைச் சுருட்டிக் கொண்க்டு உட்கார்ந்தார்கள். அவனுக்கு இப்போது புதுசாய்த் தைரியம் வந்திருந்தது. அந்தத் தெருவின் அகண்ட இருள் மண்டிய அமைதி மண்டலத்தில் அவன் மட்டும் தனியனாய் இல்லை. இன்னொரு பேர் தெரியாத துணையும் இருக்கிறது. துணை இருந்தால் போதாதா? துணைக்குப் பேர் எதற்கு?

     இவன் இப்போது ரொம்பத் தைரியசாலியாய், கைகளைப் பின்னல் கட்டிக் கொண்டு, தெருவின் இரவுத் தோற்றத்தை ஒரு கவிஞன் போல் நின்று ரசிக்க முயற்சி செய்தான். சிலுசிலுவென்று எங்கிருந்தோ ஒரு ரம்மியமான காற்று வந்து அவன் உடம்பு முழுதும் வியாப்பித்துக் கடந்து சென்றது. தெருக்கோடியில் பெருமாள் கோவிலின் கருத்த மெருகிழந்து போன, எந்தத் தலைமுறையிலோ குடமுழுக்குப் பண்ணின பழைய கல்-விமானம் மங்கலாய்த் தெரிந்தது. இந்தப் பக்கம் திரும்பி நின்றால் மறுகோடியில் அதற்கு நேராய் அதை விடக் கொஞ்சம் புதுசாய் சிவன் கோவில் கோபுரம்- இருட்டில் இரு கோடிகளில் இப்படி எதிரும் புதிருமாய் நிற்கும் இரண்டு கோவில்களும், இடைப்பட்ட இந்தப் பெரிய தெருவும், இதன் வீடுகளும், அதனுள் உறங்கும் மனிதர்களும், இவனது பயங்களும்-எல்லாமே விசித்திரமாய் அழகுள்ளவையாகவே இருக்கின்றன. பயத்துக்குக் கூட அழகிருக்கிறது. நாளை அப்பாவிடம் இப்படி இருட்டில் பயந்து கொண்டே தனியாய் நின்றதையும், பயம் சட்டென்று விலகிப் போனதையும் சொல்ல வேண்டும். பயத்தை முற்றவிட்டுப் பார்த்தால், ஒரு வேளை அது தானாய்ப் பழுத்துக் கடைசியில் தைரியமாய்க் கனிந்தாலும் கனியலாம்.. இரவு  முற்றிப் பகல் வருகிற மாதிரி...

        அவன் மெல்லப் படியேறித் திண்ணைக்கு வந்தான். சட்டென்று அலை அலையாய், தூரத்துச் சிவன் கோயில் இருட்டிலிருந்து சிவனின் உடுக்கை மாதிரி ஒரு சத்தம் மெல்ல மெல்ல மிதந்து பெரிதாகிக் கொண்டே வந்தது. அய்யோ, குடுகுடுப்பாண்டி வருகிறான்..! நேராகச் சுடுகாட்டிலிருந்து, மண்டை ஒட்டுக்கு பூஜை பண்ணிவிட்டு, மை எடுத்துக் கொண்டு வருகிறான். யார் வீட்டு வாசலிலாவது நின்று அவன் எதைச் சொன்னாலும் அது பலிக்கும். கல்யாணம் ஆகும் என்று சொன்னால் கல்யாணம் ஆகும். இழவு விழும் என்று சொன்னால் இழவு விழும். அந்த நடுநிசி வேளையில் யார் அவன் கண்ணில் எதிர்ப்பட்டாலும் அவ்வளவு தான்.. அவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

        வாசலில் கதவைப் பூட்டியது கூட ஞாபகம் இல்லாமல் அவன் மாடிப்படியில் விழுந்தடித்துக் கொண்டு ஏறி, அப்பாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டான். கீழே குடுகுடுப்பைச் சத்தம் வெகு அருகாமையில் கேட்டது. ஒரு வேளை அது நம் வீடாகக் கூட இருக்கலாம். சுவாமி, கடவுளே.. அவன் அங்கு நின்று எதுவும் சொல்லிவிடக் கூடாது. குடுகுடுப்பை ஒலி சட்டென்று நின்றது. குடிபோதையில் உளருகிறமாதிரி கரகரப்பான குரலில் குடுகுடுப்பாண்டி தடுமாறி ஏதோ ராகம் போட்டுக் கத்தினான். இவன் ஆள் காட்டி விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். காதுக்குள் ‘நொய்’ என்று சத்தம் வந்தது. மூடிய கண்களுக்குள் குடுகுடுப்பை கலர்க் கலராய்க் கிழிசலை உடுத்திக் கொண்டு சினிமாவில் ஆடுகிறமாதிரி ஆடினான். தூக்கம் கண்களை அழுத்தியது. குடுகுடுப்பாண்டி எப்போது போனானோ, இவன் அப்படியே தூங்கிப் போனான்.
(கணையாழி,செப்.2013)
*
(ஓவியம்: நன்றி: கணையாழி )


        

No comments:

Post a Comment