ஆயிரத்துத்
தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் வருஷம் என்று நினைக்கிறேன். .. ......... வருஷம் அவ்வளவாய் நினைவில் இல்லை. தேதி ‘ஜூலை பதினாலு’ என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக நினைவில் இருக்கிறது. ‘அன்றைக்கு உலகம் அழியப் போகிறது’ என்றுப் பல மாதங்கள் முன்னமேயே பத்திரிகைகள்
எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு 'சோதிடப்' புரளிகளைப் பரப்ப
ஆரம்பித்திருந்தன. இந்த ஆரூடத்தை யார்
முதலில் தொடங்கி வைத்தனர், இதற்கான அடிப்படை
என்ன என்பது போன்ற விவரங்கள் எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. எனக்குஅப்போது பதினோரு வயசு
தான் நடந்து கொண்டிருந்தது. ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக்
கொண்டிருந்ததாய் ஞாபகம்.
எதற்காகவோ நானும் அம்மாவும் திருவானைக் காவலில் இருந்த என் பாட்டி வீட்டுக்குப்
போய் இருந்தோம்.
ஜூலை பதினாலு நெருங்க நெருங்கப் பத்திரிகைகள் வியாபார நோக்கத்தோடு வித விதமாய்க்
கயிறு திரிக்கத் தொடங்கி இருந்தன.
'ஆரூட மேதைகள்' ஒவ்வொருவரும்
எந்தெந்த விதத்தில் எல்லாம் அன்றைக்கு உலகம் அழியக் கூடும் என்று தங்கள் தங்கள்
கற்பனைச் சரக்குகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். .அங்கொன்றும்
இங்கொன்றும் ஒலித்த ஒரு சில viஞ்ஞான-விவேகக் குரல்கள்
கூட இந்த வியாபார, ஜனரஞ்சக
இரைச்சல்களின் இடையே எடுபடாமல் போயின.
சிறு பையனாக இருந்த எனக்கு அன்றைக்கு உலகம் எந்த மாதிரி அழிந்து போகும்
என்பதில் பல்வேறு வகையான பயம் கலந்த கற்பனைகள் இருந்தன. . பெரும் காற்று வந்து
உலக உருண்டையை அப்படியே பாதாளத்தில் கொண்டு போய்ச் செருகி விடுமோ? அல்லது அத்தனை
சமுத்திரங்களும் நாலா திசைகளிலிருந்தும் பொங்கித் திரண்டு வந்து அப்படியே
எல்லாவற்றையும், எல்லாரையும் 'கபக்' என்று ஒரே
விழுங்காய் விழுங்கிக் கபளீகரம் பண்ணி ஏப்பம் விட்டு விடுமோ? அதற்கப்புறம்
நாமெல்லாம் என்ன ஆவோம்? எங்கே போவோம்? அம்மா, பாட்டி எல்லாரும்
என்ன ஆவார்கள்? எல்லோரும் தனித்தனியாய் எங்காவது வேறு
வேறு மூலைகளுக்குப் போய் விடுவோமா? முக்கியமாக, உலகம் அழியப் போகிற
ஜூலை பதினாலுக்கு முந்திய நாளான ஜூலை பதிமூன்றாம் நாள்-வீட்டுப் பாடம்
பண்ணி விட்டுப் படுக்கப்போக வேண்டுமா, அல்லது அதற்கு
அவசியம் இல்லையா?
ஜூலை பதின்மூன்றாம் நாள் இரவு பாட்டியும் அம்மாவும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குக்
கூட்டிக் கொண்டு போனார்கள். . கோவிலில் கூட்டம் அதிகமாய் இருந்ததா என்று
நினைவு இல்லை. மறு நாள் உலகம் அழியப் போவதைப் பற்றிய
கவலை எதுவும் அவர்கள் முகத்தில் இருந்ததாயும் எனக்கு ஞாபகம்
இல்லை. ஆனால், கோயிலில் இருக்கிற போதே சொல்லி வைத்தாற்
போல் பேய் மாதிரி ஒரு மழை அரை மணி நேரம் அடித்துத் தீர்த்தது. நான் பாட்டிக்கும்
அம்மாவுக்கும் நடுவே பயந்து ஒண்டிக் கொள்ள, கோவில்
மண்டபத்திலேயே மழை நிற்கிற வரை காத்திருந்து விட்டு, அப்புறம் திருவானைக்
காவலுக்கு பஸ் பிடித்து வந்தோம்.
வருகிற வழி எல்லாம் பாட்டி ஏதேதோ சுலோகங்களை முணு முணுத்தபடியே
வந்தாள்.
அன்றைக்கு ராத்திரி பாட்டிக்கும் அம்மாவுக்கும் நடுவே உடம்பைக் குறுக்கிப்
படுத்துக் கொண்டென்.
ஏன் திடீர் என்று மழைவந்தது? அப்புறம் ஏன் நின்று
விட்டது? ஒரு வேளை ராத்திரிப் பன்னிரண்டு மணிக்குப்
பிரளயம் வரப் போகிறதோ? அதற்கான முன்னோட்டம் தான் அந்த மழையோ? அம்மாவாலும்
பாட்டியாலும் மட்டும் எப்படிப் பயப்படாமல் தூங்க முடிகிறது? பாட்டி வரும்
வழியில் என்ன சுலோகம் சொல்லி இருப்பாள்?
கொஞ்சம் தள்ளிச் சுவரின் உச்சியில் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. அது என்னையே
பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. மறுநாள் உலகம்
அழியப் போகிறது என்று அதற்கும் தெரிந்திருக்குமோ? கண்களை பயத்தோடு
இறுக்க மூடிக் கொண்டேன்.
மறு நாள் பொழுது விடிந்து விட்டது என்று அம்மா என்னை உலுக்கி எழுப்பிய போது
தான் தெரிந்தது. கண்ணை அகல விரித்து
நாலா புறமும் பார்த்து உலகம் அழியாமல் பத்திரமாய் இருப்பதை உறுதி செய்து கொண்டேன். உலகம் அழிய வில்லை. அது எப்போதும் போல்
பத்திரமாய் இருக்கிறது...‘ஒரு வேளை இது வேறு
ஒரு புது உலகமாய் இருக்குமோ என்று சந்தேகம் வரவே, சுவர் உச்சியில்
பார்த்தேன். அங்கே அந்தப் பல்லி
அதே இடத்தில் அந்த நிலையிலேயே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டு
உட்கார்ந்திருந்தது. இந்த முறை அது முறைக்கிற மாதிரித்
தெரியவில்லை. மாறாக என்னைப் பார்த்துக் கேலியாக சிரித்துக்
கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது!
No comments:
Post a Comment