Sunday, February 16, 2014

1.
கரி படிந்த அடுக்களையில்
காரியம் பண்ணுகிற போதெல்லாம்
அவள் கண்மை கரைந்து போகிறது.

கருணையற்ற கட்டாந்தரையின் 
முரட்டுத்தனமான இடுக்குகளில்
அழுந்தி அழுந்தித் தடங்குகிற போதெல்லாம்
அவள் பாதங்களின்
மென்மை கரைந்து போகிறது.

நீர்க் குடத்தோடு குழாயடியில்
ஊர்க்கும்பலோடு நின்று சோர்கிற போதெல்லாம்
அவள் இடை கரைந்து போகிறது.

இவளை இந்த நிலைகளில் எல்லாம் கண்டு
கள்ளத்தனமாய் உள்ளுக்குள்ளேயே
பெருமூச்சிடுகிற போதெல்லாம்
என் பிரும்மச்சரியம் கரைந்து போகிறது!

No comments:

Post a Comment