Tuesday, February 4, 2014

சிதைவில் சில சித்திரங்கள்

ந்த மாடர்ன் ஆர்ட் ஷோவுக்கு வந்திருந்த நிறையப்பேர்களில் அவள் மட்டும் தினேஷின் கவனத்தைத் தனியாகக் கவர்ந்தாள். சுவர் முழுதும் சீராக சட்டங்களிடப்பட்டு, வண்ண வண்ண வனப்புக- ளாய் அலங்கரித்துக் கொண்டிருந்த அவனு- டைய ஓவியங்கள் ஒவ்வொனறையும் அவள் நோக்குகிற மாதிரி வேறு யாரும் நோக்கவில்லை.

“ஐ ஆம் தினேஷ்..இந்த ஓவியங்களுக்கு சிந்தனா ரீதியாகவும் ‘பிரஷ்’ ரீதியாகவும் சொந்தக் காரன்..”

அவள் சட்டென்று அவனைத் திரும்பி நோக்கினாள். அவனுடைய ஓவியங்களைப் பார்க்கிற அதே ஆர்வம் இப்போது அவனைப் பார்க்கிற போதும் விழிகளில் தெறித்துப் பிரகாசித்தது.

“சமீபத்தில் ‘மாடர்ன் ஆர்ட் பெடரேஷன்’ முதல் பரிசு கொடுத்துக் கௌரவித்த ஒரு புகழ் பெற்ற சித்திரக்காரர், தானே என்னிடம் வந்து அறிமுகம் செய்து கொள்ள நேர்ந்தது எனக்கு அளவிட முடியாது சந்தோஷத்தைத் தருகிறது.” என்று சொல்லி மென்மையாய்ச் சிரித்தாள் அவள். தன் ஓவியங்களில் குழம்பிச் சிதறிக் கிடக்கிற வண்ணங்கள்  எல்லாம் அங்கங்கே ஓர் அளவோடு இழைந்து, ஒரு முழுமை பெற்று இப்போது இவளாகத் தன் முன் இறங்கி வந்து இப்படிச் சிரிப்பதாய் அவன் நினைத்தான்.

அந்த நேரத்தில் அவள் சிறிது நகர்ந்து அவனுடைய வேறொரு ஓவியத்தின் மீது தன் பார்வையைச் செலுத்த ஆரம்பித்தாள். அதற்கு அவன் ‘டிஸ்டார்ஷன்ஸ்’ (சிதைவுகள்) என்று தலைப்புக் கொடுத்திருந்தான். அதை அவள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தாள். இனம் புரியாது சங்கமித்துக் கிடக்கும் வண்ணக் கலவைகளினூடே, ரொம்பவும் நளினமான ஓர் இளம் பெண் அடையாளம் தெரியாமல் சிதறி நிற்பதாய் அவள் ஓர் அனுமானமாய்க் கண்டு பிடித்தாள். அவள் விழியோரங்களில் ஒரு கண நேரப் பிரகாசம் அசாதாரணமாகப் பளிச்சிட்டு மறைந்தது.

தினேஷ் இப்போது அவள் அருகில் போய் நின்று, "இதில் என்ன தெரியிது, உங்களுக்கு?" என்று ஆர்வமாய்க் கேட்டான். அவள் தான் நினைத்ததை, ‘அது சரியாக இருக்குமோ என்று தயங்குகிற குரலில் ஓர் ஆசிரியரிடம் சந்தேகத்தோடேயே பதில் சொல்கிற மாணவனைப் போலப் பதில் சொன்னாள். அதைக் கேட்ட அளவிலேயே அவன் தன்னையும் மறந்து, தான் நிற்கிற இடத்தையும் மறந்து, கைகளைத் தட்டி உற்சாகமாய், ‘”வெரி குட்..” என்று ஆரவாரித்தான்.

அவள் கொஞ்சம் நிதானித்து விட்டுச் சொன்னாள்: “இதை ஓர் அனுமானமாய்த் தான் நான் சொன்னேன். பிக்காஸோவோட ‘ஸீட்டட் உமன்’, ‘மா ஜூலி’ மாதிரிப் படங்களை இதுக்கு முன்னாலே நான் பார்த்திருக்கேன். அவற்றின் அடிப்படையிலேயே இதுவும் எனக்கு ஒரு மாதிரி அர்த்தமாச்சு. மத்தபடி மாடர்ன் ஆர்ட்டைப் பத்திப் பிரமாதமான ஞானம் எதுவும் இல்ல...”

இப்படிச் சொல்லிவிட்டு அவனை அவள் வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் அவனக் கடந்து போகும் போது, அவன் கைகளைக் குலுக்கி விட்டுப் போனார்கள். அவர்கள் அவனிடம் ஆளுக்கொரு தலைப்பைச் சொல்லித் தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டே நகர்ந்தார்கள். ஒருவர் அவனுடைய ‘ட்ரீம் ஆப் ய ரோஸ்'ஓவியத்தை நானூற்றைம்பது ரூபாய்க்கு அவனுடைய உதவியாளரிடம் விலை பேசி இருப்பதாய்த் தெரிவித்த போது அவன் முகமெல்லாம் மலரத் ‘தேங்க்ஸ்’ என்று சொல்லி அவரின் கைகளைப் பற்றிக் கொஞ்சம் அதிக நேரம்  குலுக்கினான்!

எல்லோரும் போன பிறகு அவன் அவள் பக்கம் திரும்பினான். “எல்லாப் படங்களுக்கும் பின்னாலேயும் ஒரு கதை இருக்கு..” என்றான்.

ஹாலின் மூலையில் ஸ்க்ரீன் வைத்துத் தடுத்திருந்த அவனுடைய பிரத்தியேக அறைக்கு அவளை அழைத்துக் கொண்டு போய் உட்காரச்  சொன்னான் அவன். தன் உதவியாளன் ஒருவனைக் கூப்பிட்டுத் தனக்கும் அவளுக்கும் கூல்ட்ரிங்க்ஸ் கொண்டு வரச் சொன்னான். அவன் பேச்சை அவள் ஆவலோடு கவனிக்கத் தயார் ஆனாள்.

“உங்களுக்குக் காதல் மாதிரி ஏதாவது ஒரு விஷயத்துல சென்டிமென்டலா தோல்வி ஏற்பட்டு, இந்தச் சிதைவுகளாப் பிரதிபலிச்சிருக்குமோன்னு நான் சந்தேகப் படறேன்..” என்று சொல்லி மெல்லச் சிரித்தாள் அவள்.

“நோ, நோ..அந்த மாதிரி அசட்டுத் தனங்கள்ல எல்லாம் என்னை இழந்து போக நான் என்னிக்குமே அனுமதிச்சதில்லே. ஆனாலும், நான் இப்படி வரைய ஆரம்பிச்சதுக்கு ‘சென்டிமென்டலா’ ஒரு காரணம் இருக்கிறது உண்மை தான்..”

சில வினாடிகள் அவன் மௌனம் சாதித்து விட்டுத் தொடர்ந்தான்: “ரவி வர்மா ஆர்ட் ஸ்கூல்ல முதல் தடவையா, ‘ஹ்யுமன் போர்ட்ரைட்’ வரையறதுக்காகக் கிளாஸ்ரூம்ல உட்கார்ந்திருக்கேன். ஸ்டேஜுக்குப் பக்கத்துலேருந்து எங்க மாஸ்டர் குரல் கொடுக்கறார்....’மை டியர் பாய்ஸ்..உங்களோட பயிற்சி, உணர்ச்சியும் உயிரும் பெறப் போற உச்சகட்டம் இன்னிக்குத் தான்  ஆரம்பிக்குது. அதே சமயத்துல உங்களோட வேற சில உணர்ச்சிகளை நீங்க  மூட்டை கட்டி ஓரமா வைக்க வேண்டிய நேரமும் இது தான். இங்கே உங்களோட தூரிகையும் கண்ணும் மட்டுமே இயங்கணும். மனம் இயங்கக் கூடாது. படைப்பின் பரிபூரணத்துவம் ‘கலா ரீதியா’ உங்களுக்கு இப்போ பிரசன்னமாகும். பிரஷ் முனையில் அது வெவ்வேற கோணங்கள்ல உண்டாக்கும் விளைவுகளே உங்க ஒவ்வொருத்தரோட எதிர்காலப் பெருமைகளின் அஸ்திவாரமாக அமையும்.’

“ஒரு மாடல் பெண் படைப்பு ரகசியங்களை எல்லாம் ரொம்ப அசட்டையா பகிரங்கப் படுத்திக்கிட்டு எங்களுக்கெதிரே புன்னகையோட வந்து நிக்கறா.. மாணவர்கள் மத்தியிலே இனம் புரியாத சலசலப்பு ஏற்படுது.  மாஸ்டர் திரும்பி ஏதேதோ லெக்சர் பண்ணறார்..எனக்கு அது முதல் அனுபவம்.

“திடீர்னு எல்லாரும் பிரஷ்ஷை எடுத்து அந்த மாடலை அவங்கவங்களுக்குத் தெரியற கோணங்கள்ல ஆவேசமா வரைய ஆரம்பிக்கறாங்க. அவங்க எல்லாருமே எனக்கு ஒரு கணம் ஏதோ ரிஷிபுங்கவர்கள் மாதிரித் தோணறப்போ, என் விரல் மட்டும் குளிர்ந்து மரத்துப் போய் பிரஷ்ஷை நழுவ விட்டுட்டு நடுங்குது.  இதுக்கு முன்னால நான்  பார்த்து வரைஞ்ச பூவரச மரத்துக்கும், ரோஜாச் செடிக்கும், கிச்சிலிப் பழத்துக்கும்-இன்னும் எல்லா ஜடப் பொருள்களுக்கும்- இப்போ நான் வரைய வேண்டிய இவளுக்கும் எல்லா வகையிலேயும் வித்தியாசம் இருக்கிறதா எனக்குப் படுது.  என்னைச் சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே அந்தப் பழைய ஜடங்களைப் பார்க்கிற நிலையிலேருந்து எந்த வித்தியாசமும் இல்லாம இப்போ இவளையும் மெஷின் மாதிரிப் பார்த்து வரைஞ்சிக்கிட்டிருக்கறது, எனக்கு சகிக்க முடியாததா இருக்கு...

“நான் என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டுப் பிரஷ்ஷைக் கையில எடுத்துக்கறேன்.  வரைய ஆரம்பிக்கிறேன். மத்தவங்க எல்லாரும் அவளோட உருவத்தை வரையறப்போ, நான் மட்டும் அவளோட உருவம் என்கிட்டே ஏற்படுத்தற சலனங்களையும், பிரமிப்புகளையும் வரையறேன். அவற்றுக்கு எப்படி எந்தக் குறிப்பிட்ட வடிவம் இல்லையோ அப்படியே என் படமும் உருவங்களுக்குக் கட்டுப் படாத சிதைவுகளா உருவெடுக்குது. என்னோட படத்தைப் பார்த்துட்டு ‘அவ’ உள்பட எல்லாரும் சிரிக்கிறாங்க! அதுக்கப்புறம் என் முன்னால முழுமையா நிக்கற எந்த உருவமும் என் பிரஷ் முனையில சிதைவுகளாவே வெளிப்படுது.”

அவன் இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான். அவள் அவனை வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் எதையோ யோசித்தவள் மாதிரிச் சொன்னாள்: “மிஸ்டர் தினேஷ்..உங்களை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. குறிப்பா உங்க சித்திரங்களைக் காட்டிலும். ஆனா, ஏன் நீங்க உங்களோட இந்தச் சிதைவு மனநிலையிலேருந்து கொஞ்சம் வெளிவரக் கூடாது? நம்மைச் சுத்தி இருக்கிற இந்த விரிந்த பிரபஞ்சப் பரப்புல  நீங்க ஏன் முழுமையத் தேடக் கூடாது? முழுமையிலேருந்து சிதைவு வெளிப்படற மாதிரி, சிதைவுகள்லேருந்து ஏன் நீங்க முழுமைய வெளிக்கொணர முயற்சிக்கக் கூடாது? நான் உங்களோட ஸ்டைல மாத்த நினைக்கறதா நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது.  இதை ஒரு ரசிகையோட பிரத்தியேக வேண்டுகோளா எடுத்துக்குங்க. எனக்கு உங்க கிட்டேருந்து சிதைவுகளே இல்லாத ஒரு முழுமையான ஓவியம் வேணும்...உங்க வீட்டு விலாசத்தைக் கொடுத்தீங்கன்னா, எப்ப வேணும்னாலும் நான் அங்கேயே வந்து வாங்கிக்கறேன்..”

அவளது விழிகளின் படபடப்பிலும் குரலின் தொனியிலும் அவன் எதையோ தேடினான். உடனே அதில் சோர்ந்து .போனவன் போல், ஒரு சொல்லத் தெரியாத இனிய பரபரப்போடு அவளிடம் தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். “நாளைக்கே நீங்க வரலாம். நீங்க விரும்பற மாதிரியே ஒரு ஓவியம் உங்களுக்காகத் தயாரா இருக்கும். இது வரைக்கும் என் பாணியை யாருக்காகவும் நான் மாத்திக்க சம்மதிச்சதில்ல. ஆனா, ஏனோ தெரியல, நீங்க ரொம்ப விசேஷமா என்னைப் பாதிச்சிருக்கீங்க...” என்றவன், இப்படிச் சொல்லும் போது அவளது விழிகளை நேருக்கு நேர்  பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தான்.

தினேஷ் அன்றைக்கு சாயங்காலமே, தன்னுடைய வீட்டுச் சித்திர அறையில் ஆவேசம் வந்தவனைப் போல் தூரிகையை எடுத்து வண்ணங்களில் தோய்த்துத் துணியில் வரைய ஆரம்பித்தான். அவன் கண் முன்னால் அவள் சொன்ன பிரபஞ்சம் விரிந்து எழுந்து பேரொளியாய் நின்றது. அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே அது வெண் மேகங்களாய்ச் சிதறிப் பிரிந்தது. அடுத்த கணம் அது, அளவாய்க் கூடிக் குழுமி, கரு விழிகளாகவும், செவ்விதழ்களாகவும், மெல்லிய வெள்ளுடை போர்த்திய விம்மிய மார்புகளாகவும் சிறிது சிறிதாய் உருக்கொண்டுக் கடைசியில் அவளாய் முழுமை பெற்று அவன் முன் விகாசித்தது.

இரவு முழுவதும் கண் விழித்து வரைந்து முடித்தவன், நெடுநேரம் யோசித்துக் கடைசியில் அந்த ஓவியத்துக்கு ‘Nameless Bliss’ என்று ஆங்கிலத்திலும், ‘பெயரற்ற பரவசம்’  என்று கூடவே தமிழிலும் பெயரிட்டான். மீதி இரவு முழுதும் தூக்கமின்றி அந்த ஓவியத்தையே வெறித்துப் பார்த்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.  

வள் மறுநாள் காலை பத்து மணி சுமாருக்கு அவன் வீட்டைத் தேடி வந்தாள். கூடவே அவளோடு களையான முகத்தோடு கூடிய ஓர் இளைஞனும் வந்தான். தினேஷ் அவர்கள் இருவரையும் உற்சாகமாக வரவேற்று வரவேற்பறையில் உட்கார வைத்தான். உள்ளுக்குள்ளேயே ஓர் அதிருப்தியோடு ‘தனியாக வராமல் யாரையோ கூட்டி வந்திருக்கிறாளே’ என்று கொஞ்சம் கோபமாக நினைத்தான்.

அவள் அவனைப் பார்த்து முதல் நாளைப் போலவே மலர்ந்து சிரித்தாள். “மிஸ்டர் தினேஷ், நான் சொன்னது ஞாபகம் இருக்கா? முயற்சி பண்ணிப் பாத்தீங்களா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

அவன் உற்சாகமாய்ச் சொன்னான்: “சர்ட்டன்லி! நேத்து ராத்திரி முழுக்கவும் அது தான் எனக்கு வேலை.  நீங்க எதிர்பார்த்த மாதிரியே இது என்னோட பழைய பாணியிலேருந்து முழுக்க முழுக்க மாறுபட்ட படம். அதைப் பாக்கறப்போ உங்களுக்கு சந்தோஷம் மட்டும் இல்லாம ஒரு இனிய அதிர்ச்சியும் கூட இருக்கும்..”

அவள் விழிகள் விரிந்து ஒளி காட்டின. “அப்படியா...ப்ளீஸ், ப்ளீஸ்...அதை சீக்கிரமாக் கொண்டு வாங்களேன்...”-அவள் குழந்தையைப் போல் குழைந்து குரலில் அவசரம் காட்டினாள்.

தினேஷ் அந்த ஓவியத்தை எடுத்து வருவதற்காகத் தன் அறையை நோக்கி ஓரடி வைத்த போதே, அவள் குரல் மறுபடியும் அவனை நிறுத்தியது.   

“.ஐ ஆம் சாரி.. உங்களுக்கு இவரை அறிமுகம் பண்ணி வைக்கவே மறந்துட்டேன்..”

தினேஷ் ஒரு நெருடலோடு திரும்பினான்..ஏனோ அசட்டுத் தனமாய் ‘அப்படி இருக்கக் கூடாது’ என்று நினைத்தான்.

ஆனால் அப்படித் தான் இருந்தது.

அவள் சொன்னாள்: “மீட் மை ஹஸ்பண்ட், சுதாகர்.. இவருக்கும் என்னைப் போலவே ‘பெய்ன்டிங்’குல ரொம்பவே  ஆர்வம்..உங்களைப் பத்தி நிறையவே சொல்லி இருக்கேன் இவர் கிட்டே..”

தினேஷ் சிரமப் பட்டுப் புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு அவனிடம் கை குலுக்கினான். “ஒரு நிமிஷம்.. இதோ வந்திடறேன்..” என்று சொல்லிவிட்டுத் தன் ஓவிய அறைக்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டான். உள்ளே, முதல் நாள் இரவு முழுதும் அவன் கண் விழித்து மிகுந்த பிரயத்தனங்களோடு வரைந்திருந்த ‘நேம்லஸ் ப்ளிஸ்’ஸிலிருந்து அந்தப் பெண் முழுசாய், பூரணமாய், அணு அணுவாய் அளந்து செதுக்கப் பட்ட சிலை போல் அவனைப் பார்த்து மயங்க மயங்கச் சிரித்தாள். ஒரு வினாடி தனது சிருஷ்டியின் முழுமையில் தானே மயங்கிக் கிறங்கிய அவன், சட்டென்று, “ஊஹூம்..எனக்கும் முழுமைக்கும் ராசி இல்ல” என்றபடி, ஒரு வித வெறியோடு பிரஷ்ஷை எடுத்துக் கோபமாய்ச் சாயத்தில் தோய்த்தான்.

தினேஷ் தன் அறையை விட்டு வெளியே வந்து, அவள் கேட்டு அவளுக்காக அவன் வரைந்த அந்த ஓவியத்தை அவர்கள் முன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வைத்தான். “உங்களுக்காக நான் நேத்து ராத்திரி முழுக்க ரொம்பவே மெனக்கெட்டு வரைந்தது. நேம்லஸ் ப்ளிஸ்’..” என்றான்.

மிகவும் ஆர்வத்தோடு, அதை உற்றுப் பார்த்த அவள் முகம் சட்டென்று சுருங்கிக் கூம்பியது. அவள் ஒருவித இயலாமையும் ஏமாற்றமும் கலந்த பார்வையோடு தன் கணவனைப் பார்த்தாள். அவன் ஏதும் புரியாதவன் போல் தன் தோள்களைக் குலுக்கினான். தினேஷ் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தவனாய் வேண்டுமென்றே ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அனுதாபமா, கேலியா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாத  குரலில், இப்படிச் சொன்னாள்: ””ஸோ, தினேஷ்! நீங்க மாறல. அல்லது மாற விரும்பல...அல்லது மாத்த முடியல..”

அவன் உடனே அவள் பக்கம் திரும்பி, ஒரு போலியான மலர்ச்சியை முகத்தில் வரவழைத்துக் கொண்டு, உடைந்து போன குரலில் அவளிடம் பேசினான். “நோ, மிஸஸ் சுதாகர்.. நம்மால மாத்த முடியறவங்க கூட நமக்கே தெரியாம நம்மளோட சம்பந்தப்பட நேர்றப்போ தான், அந்த மாற்றமும் நடக்குது. ஆனா, அந்த சம்பந்தம் வெறும் தற்காலிகமான, தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பிதம்னு தெரியறப்போ, மாறினவங்க யாராய் இருந்தாலும்  அவங்க ஏற்கனவே இருந்த தங்களோட பழைய உலகத்துக்குத் திரும்பிடறதைத் தவிர வேற வழி இல்ல..”

முதல் நாள் முழுமையை வழங்கிய கைகளாலேயே, சற்று முன் சிதைந்து போய் அடையாளம் இழந்து உருக்குலைந்து அவர்கள் முன்  காற்றில் படபடக்கும் அந்த ஓவியத்தைப் போலவே  அவனது வார்த்தைகளுக்கும் அர்த்தம் எதுவும் விளங்கவில்லை அவர்களுக்கு.
                  -(26.09.1974, தினமணி கதிரில் வேறு தலைப்பில் பிரசுரமானது)

* * *
(ஓர் ஓவியனின் மன நிலைகள் எப்படி அவனது ஓவியத்தைப் பாதித்து அதன் வடிவையும் வெளிப்பாட்டையும் மாற்றி அமைக்கிறது என்பதை அடிப்படையாய் வைத்து நான் எழுதிய இந்தச் சிறுகதை ஒன்று, 1974-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்திய தினமணி கதிரில் பிரசுரமானது. இது நவீன ஓவிய இயக்கத்தை (Modern Art Movement), வேறொரு கோணத்தில் முன்வைத்த கதை. 

சிறுகதைக்குச் "சிதைவில் சில சித்திரங்கள்' என்று பெயரிட்டிருந்தேன். பெயருக்கேற்றார்ப்போல், எடிட்டிங் என்கிற உரிமையில் தினமணி கதிர் என் கதையின் தலைப்பை 'எனக்காக' என்று மாற்றியதோடு அல்லாமல், நீளக் குறைப்பு என்கிற பெயரில் எனது மூலப் பிரதியிலிருந்து நிறையப் பத்திகளை நீக்கிப் பிரசுரித்திருந்ததால் கதையும் மிகவும் பரிதாபமாகச் சிதைந்து போயிருந்தது. படிக்கிற வாசகனுக்கு, அங்கங்கே கதையின் தொடர்பு திடீர் திடீர் என அற்றுப் போகிற உணர்வு ஏற்பட்டு அவனது முழுமையான வாசிப்பு அனுபவம் இடைஞ்சலுக்கு ஆளான போது, எடிட்டரின் கருணையற்ற கத்திரிக்கோல் தான் அதற்குக் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இத்தனை வருஷத்துக்குப் பிறகு அந்தக் கதையை எனது வலைத் தடத்தில் மீள் பதிவு செய்ய முனைகிற போது, என்னிடம் நான் அப்போது எழுதிய மூலக் கையெழுத்துப் பிரதி இல்லை என்பதால், நீக்கப் பட்ட பகுதிகள் எதுவும் எனக்குக் கோர்வையாக நினைவில் இல்லை. இருந்தும் அன்றைய மனநிலையில் நான் என்ன மாதிரி எழுதி இருக்கக் கூடும் என்று ஒரு குத்து மதிப்பான அனுமானத்தோடு, கதையின் தொலைந்து போன பகுதிகளைத் திரும்பவும் மறுஆக்கம் (reconstruct) செய்து கதையை அதன் அசல் வாசத்தோடு தர முயற்சித்திருக்கிறேன்.

இந்தச் சிறுகதை பிரசுரமானதில் எனக்கு அப்போது மகிழ்ச்சியே என்றாலும், விவஸ்தை அற்ற எடிட்டிங்கால் என் மூலப் பிரதி சிதைந்து போனதில் அதே அளவுக்குக் கோபமும் வருத்தமும் வந்தன. கதையின் முடிவில் ஓவியன் தன் ஓவியத்துக்குச் செய்வதையே என் சிறுகதைக்கும் பத்திரிகை ஆசிரியர் செய்து விட்டார் போலும் என்று என்னை நானே விளையாட்டாய்ச் சமதானப் படுத்திக் கொண்டேன். இருந்தும், இந்த வருத்தத்தை ஈடுகட்டுகிற வேறொரு சந்தோஷமான விஷயம் இந்தப் பிரசுரத்தில் இருந்தது. அது, என் அபிமான ஓவியர் கோபுலு என் கதைக்குப் படம் வரைந்திருந்தது தான்.)


*




No comments:

Post a Comment