இது நடந்து ஐந்தாறு வருஷங்கள் இருக்கும் என்று
நினைக்கிறேன். ஒரு நாள் எழுத்தாளர் திலீப்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு, “ராம், உங்களிடம் நீங்கள் எழுதிய வெளிவட்டங்கள் நாவலின் பிரதி ஏதாவது
வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. காரணம், நான்
எழுதிய ஒரே நாவலான இந்த ‘வெளிவட்டங்கள்’, கலைஞன் பதிப்பக வெளியீடாக 1979-ஆம்
வருஷம், அதாவது இந்தத் தொலைபேசி அழைப்பு வந்த நாளுக்கு சுமார் முப்பது
வருஷங்களுக்கு முன் வெளிவந்தது.
பெயர் வெளிவட்டங்கள் என்றாலும், போதிய போஷகர்கள்
(promoters) இன்றி
அது சில உள்வட்டங்களில் சிலாகித்துப் பேசப்பட்டதோடு நின்று போனது. நிறைய
எதிர்பார்ப்புகளோடு நான் அந்த நாவலை எழுதியிருந்தேன். கலைஞன் பிரசுரகர்த்தர் திரு.
மாசிலாமணி அவர்கள் எனது பிரதியால் மிகவும் கவரப்பட்டவராய், நான் எழுத்துலகுக்கு
அப்போது புதியவன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், எந்த வியாபார நோக்கமும்
இன்றி மிகுந்த உற்சாகத்தோடு, தனது வெள்ளிவிழா வெளியீடுகளில் ஒன்றாக அதை வெளிக்
கொணர்ந்திருந்தார். ஒரு சுவாரஸ்யமான
விவாதத்தை அல்லது சர்ச்சையைத் தூண்டி விடுகிற potential-உம் அந்த நாவலுக்கு இருந்தது. இருந்தும்
துரதிர்ஷ்ட வசமாக அது நிறையப் பேரின் கவனத்துக்குப் போகாமல், காலவெள்ளத்தில் ஷெல்ஃபில் முடங்கிப் போய்விட்டது.
அந்த நாவலைப் பற்றித் தான் அன்றைக்குத் திலீப்
குமார் தொலைபேசியில் என்னிடம்
விசாரித்திருந்தார். நான் அவரிடம்
சொன்னேன். “இப்போது அது எங்கேயும் அச்சில் இல்லை. என்னிடம், எனது பிரத்தியேகப்
பிரதி ஒன்றே ஒன்று தான் இருக்கிறது” என்றேன்.
“அந்த
நாவலை இயக்குனர் வசந்த் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தீவிர ஆர்வத்தோடு என்னிடம்
வந்து இருக்கிறார். நீங்கள், இந்தப் பக்கம் வருகிற போது அந்தப் பிரதியைக் கொண்டு
வந்து கொடுத்தால், அவர் படித்தவுடன் நானே அதை அவரிடமிருந்து பத்திரமாய்த் திரும்ப
வாங்கி உங்களிடம் தந்து விடுகிறேன்.
உங்கள் பிரதியின் பாதுகாப்புக்கு நான் கேரண்டி” என்றார் திலீப்குமார். என்
ஆச்சரியம் இன்னும் அதிகமானது .நான் அடுத்த வாரம் பிரதியைக் கொண்டு தருவதாக அவரிடம்
சொன்னேன்.
நான் பிரதியோடு சென்ற அன்றைக்கு, திலீபின்
ஷோரூமில் வசந்தும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனெவே நல்ல,
வித்யாசமான, வணிக அம்சங்கள் குறைவாக உள்ள படங்களை வசந்த் தந்திருந்ததால் அவர் மீது
எனக்கு ஒரு மரியாதை இருந்தது. திலீப் என்னை வஸந்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
நான் அவரிடம் கேட்டேன்: “முப்பது வருஷத்துக்கு
முன்னால் வெளியாகி, மிகக் குறைந்த பேர்களாலேயே படிக்கப் பட்டு, புற உலகின் கவனத்தை
ஈர்க்காமல் அலமாரிக்குப் போய் விட்ட இந்த நாவலைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய
வந்தது? அது மட்டும் அல்லாமல் இதைத் தேடிக் கண்டுபிடித்துப் .படிக்க வேண்டும் என்கிற அளவுக்கு எப்படி இதில்
ஈர்ப்பு வந்தது?”
தமிழில் வந்திருக்கும் எல்லா நல்ல
எழுத்துகளையும் குறிப்பாக மரபு சாரா
எழுத்துகளைத் தேடித் படிப்பதில் தொடக்க காலத்திலிருந்தே தனக்குத் தணியாத தாகம்
உண்டு என்று அவர் சொன்னார். அதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே தூண்டு கோலாய் இருந்ததாய் அவரது பால்ய நண்பர் ஒருவரின்
பெயரைக் குறிப்பிட்டார். வங்கி அதிகாரியாய் இருந்த அந்த நண்பர் ஒரு தீவிரமான
புத்தகப் பிரியராம்.
வசந்த் சொன்னார்: “நான் வாசித்த பெரும்பான்மையான
புத்தகங்கள் என் பால்ய சிநேகிதன் சிபாரிசு பண்ணியது தான். போன வாரம் ஏதோ பேச்சு
வந்த போது, ‘பல வருஷங்களுக்கு முன்னால் ‘வெளி வட்டங்கள்’ என்று ஒரு நாவல் வந்ததே,
உனக்குத் தெரியுமா? ரொம்பவும் அபூர்வமான நாவல் அது. நாவலின் நிறைய இடங்களில்
சுற்றுப் புறத்தைக் கூட மறந்து நான் சத்தம் போட்டு ரசித்துச் சிரித்திருக்கிறேன்.
ஆபீசுக்கே எடுத்துக் கொண்டு போய் சக ஊழியர்களிடம், நாவலின் முக்கியமான இடங்களைப்
படித்துக் காட்டி மகிழ்ந்து இருக்கிறேன். அது எங்காவது கிடைத்தால் வாங்கிப் படி.’ என்று
சொன்னான். அவன் லேசில் ஒரு புத்தகத்தை அடுத்தவர்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டான். முப்பது வருஷங்களுக்கு முன்னால்
படித்த நாவல் ஒன்றை இன்று வரை ஞாபகம் வைத்துக் கொண்டு அதைப் படிக்கும் படி எனக்கு
சிபாரிசு செய்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்று தோன்றியது.
திலீப் குமார் தான் இந்த மாதிரி நூல்களைப் பற்றி விசாரிக்கச சரியான ஆள் என்று
நினைத்தேன்”
உண்மையில் வசந்த் சரியான நபரைத் தான்
தேர்ந்தேடுத்திருந்தார். 1979-இல் நான் சென்னைக்கு வேலை தேடிக் குடியேறின போது அறிமுகமான
இலக்கிய நண்பர்களில் திலீப் குமாரும் ஒருவர். தாய் மொழி குஜராத்தியாக இருந்தாலும்
தனது சிறந்த சிறுகதைகளால் தமிழை வளப்படுத்தியவர்.
வசந்த்திற்கு என் நாவல் பற்றி எப்படித் தெரிய
வந்தது என்பதை அறிந்த போது நிஜமாகவே நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி, நாம்
அறிந்திராத திசைகளிலிருந்தும் நாம் அறிந்திராத மனிதர்களிடமிருந்தும் நமக்கு எதிர்பாராமல்
கிடைக்கும் இத்தகைய அங்கீகாரங்கள், அவை எத்தனை
சின்னதாய் இருந்தாலும், அவற்றுக்கு எவ்வளவு சாகித்ய அகாடமிகளும் ஈடாகாது என்று
தோன்றியது.
இன்றைய இளம் வாசகர்களுக்காகவும், நாளைய இளம்
வாசகர்களுக்காகவும் வெளி வட்டங்கள் முழு நாவலையும் PDF-வடிவில் Internet Archive-இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். Free download- வசதியும் உண்டு. அவகாசம் கிடைக்கும் போது ஆர்வம் உள்ள வாசகர்கள்
படித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கோருகிறேன். குறிப்பாய்ப்
பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. காரணம், படித்துப் பார்த்தால் தான் தெரியும்!
நாவலுக்கான link:
https://archive.org/details/velivattangal
நாவலுக்கான link:
https://archive.org/details/velivattangal
No comments:
Post a Comment