கொதிக்கிற வெயிலில் கோஷம் போட்டுக் கொண்டே ஒரு கும்பல் போனது. அந்தக் கும்பலில் அவனும் இருந்தான். நாலைந்து கோஷங்களை அவனுக்கு நன்றாய் மனப்பாடம் ஆகிற மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவற்றை மனப்பாடம் பண்ணுவதில் அவன் அதிக சிரமப்பட வில்லை. ஊர்வலம் முடிந்தவுடன் கோஷம் போட்டுக் கொண்டு பின்னால் வந்த சிறுபிள்ளைகளுக்கு எல்லாம் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுப்பதாய்ச் சொல்லி இருந்ததால், அவன் அந்த கோஷங்களை மனப்பாடம் பண்ணுவதில் அதிக அக்கறையும் உற்சாகமும் காட்டி இருந்தான்
ஊர்வலத்தில் போட்டுக் கொண்டு போக, அவன் மாதிரிப்
பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு கறுப்புச் சட்டை கொடுத்திருந்தார்கள். ‘ஊர்வலம்
முடிந்தவுடன் மறக்காமல், கழற்றித் தந்து விடவேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப்
பட்டிருந்தது. இதற்கு முன் யார் யாரோ போட்டுக் கழற்றியதின் ஞாபகார்த்தங்களாய் அவை
சுமந்திருந்த வேர்வை நெடிகளையும், தோய்க்காமல் விடப்பட்ட கறைகளையும் ஒரு ரூபாய்க்
காசுக்காக அவன் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
தார் உருகி இளகிப்போன சாலையில், அந்தச் சுடுகிற
பகல்போதில் இடையனுக்குப் பின்னால் கத்திக் கொண்டு போகிற ஆட்டுக் குட்டிகளைப் போல,
கும்பலில் ஒருத்தனாய், தனித்துவம் இழந்து சுயமரியாதை பறி போய்த் திரும்பத் திரும்பக்
கீறல் விழுந்த கிராமபோன் தட்டு மாதிரி ஒன்றையே கோஷித்துக் கொண்டு அவன் நடந்து
போனான்.
“கடவுள் இல்லை..கடவுள் இல்லை..இல்லவே இல்லை..”
எதிர்மறைகள் நேர்மறைகளை விட எந்த விதத்திலோ அதிக
சக்தி வாய்ந்தனவாய்த் தோன்றுகின்றன... சொல் அமைப்பில், வாக்கியக் கட்டில், அட்சர
வெளிப்பாட்டில்.. முடியவே முடியாது என்று அடம் பிடிக்கிற குழந்தையின் பிடிவாதம்
மாதிரி.. மாட்டவே மாட்டேன் என்று எல்லாவற்றையும் வீசி எறிந்து விட்டு முகம்
திருப்புகிற ஒரு சிறு பெண்ணின் வைராக்கியம் மாதிரி...
“இல்லவே இல்லை..இல்லவே இல்லை..”
ஊர்வம் அலங்கார மேடையை நெருங்கியவுடன் அவனைச்
சட்டென்று சோகம் கப்பிக் கொண்டது. இந்த வியர்வை நாறும் சட்டையும் நாளைக்கு ‘இல்லவே
இல்லை’ என்று ஆகி விடும். ஒரு ரூபாய்ப் பணத்துக்காக, எச்சில் இலைக்குப் போட்டி
போட்டுக் கொண்டு அடித்துக் கொள்ளும் தெரு நாய்கள் மாதிரி, ஊர்வலக் கமிட்டி
செகரட்டரியிடம் பையன்களோடு பையனாய்ப் போய் அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்க
வேண்டும். அது ஒரு வேளை வரும். அப்புறம் அதுவும் ‘இல்லவே இல்லை’ ஆகி விடும்! கவளம்
கவளமாகப் பசிக்கிற வேளையில் பிரத்தியட்சமாய் உள்ளே போகிற சோறு உள்ளே போனவுடன் என்ன ஆகிறது? எங்கே
போகிறது? எப்படி அவை இல்லாமல் போகின்றன? ஏன் அது அடுத்த வேளைக்கு உதவுவதில்லை?
அலங்கார மேடையின் நடுவே ‘தலைவர்’ படம் மாலை
மரியாதைகளோடு வைக்கப் பட்டிருந்தது. ‘இல்லவே இல்லை’ என்ற அந்த மகத்தான
எதிர்மறையைக் கண்டறிந்து தைரியமாய்ப் பிரகடனம் பண்ணி விட்டுப் போன அந்தத் தலைவரின்
பெயரை யார் யாரோ துதி பாடினார்கள். நடுநடுவே ‘இல்லவே இல்லை’ எட்டிப் பார்த்தது.
தனக்குப் பிடித்த அந்த ‘இல்லவே இல்லை’ வரும் போதெல்லாம் அவன் உடம்பு சிலிர்த்தது.
அவை தானே கண்டறிந்த மகா வாக்கியங்கள் போல் அவன் உடம்பில் மீண்டும் கோஷ போதை
விறுவிறுவென்று ஏறியது.
‘தலை மறைக்கிறது’ என்று ஒருவர் அவனை உட்காரச்
சொல்லி அதட்டிய போதே அவன் உள்ளூர அவமானம் அடைந்தான். தான் முக்கியத்துவம் இழந்து
போனதைப் போல் கோபமும் கொண்டான். இந்த அலங்காரங்களுக்கும், அறைகூவல்களுக்கும்,
கொண்டாட்டங்களுக்கும்- தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவனுக்குப் புரிய
ஆரம்பித்தது. அவன் அவர்களுக்குத் தேவை கும்பலில் தான்; கோஷத்தில் தான். முகங்களோடு ஒரு
முகமாய்; குரல்களோடு ஒரு குரலாய்; வெறும் எண் அவன். ஒன்று, இரண்டு, மூன்று மாதிரி.
நாளை பத்திரிகையில் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேர் திரண்டதாய்ச் செய்தி வந்தால்,
அவன் அந்த ஐயாயிரத்தில் எங்கோ நடுவில், அடையாளம் தெரியாத நடுவில், அடையாளம்
தெரியாத நம்பர்ப் புழுக்கத்தில்- ஓர் எண்ணிக்கையாய் இருப்பான்.
ஒரு ரூபாய்ப் பணம் உணவாகி உள்ளே போன பிற்பாடு,
அவன் தன் வழக்கமான கல் மண்டபத்துக்கு வந்து ஆசுவாசமாய்த் தூணில் சாய்ந்து
கொண்டான். அந்தி வேளைச் சிலுசிலுப்பில்
மனசின் கனம் லேசாய்க் கரைகிற மாதிரித் தோன்றியது. அந்த நேரம் பார்த்து,
நெற்றியில் திருமண்ணும், தலையில் கட்டுக் குடுமியுமாய், செக்கச் செவேலென்று,
சட்டையில்லாத மார்பில் யக்ஞோபவீதம் குறுக்காய்ப் புரள, இவன் வயசொத்த இன்னொரு
பிள்ளை அதே மண்டபத்துக்கு வந்து இவனெதிரில் இருந்தத் தூணோரம் உட்கார்வதற்காகத்
தோளிலிருந்த துண்டால் தரையில் தூசியைத் தட்டினான்.
இவன் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்துச் சிரித்தான்.
இவனது சிரிப்பை ஒரு சினேக சங்கேதமாய் எண்ணிப் பதிலுக்கு அவனும் சிரித்து விட்டுத்
தூணில் சாய்ந்து கொண்டு, அடிவானை ஆசையோடு நெருங்கிக் கொண்டிருக்கும் தூரத்துச் சூரியனைப்
பார்க்கலானான். பார்த்த நிலையிலேயே, ‘ஊரிலேன் காணி இல்லை; உறவு மற்றொருவர் இல்லை’
என்று பாசுரம் சொல்லத் தொடங்கினான்.
சட்டென்று அந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டுச்
சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்த இவன், இப்போது நிஜமாகவே சிநேக பாவத்தோடு
அவனுக்கருகில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அவன் பாசுரத்தை நிறுத்தி விட்டு இவனைப் பார்த்தான், கேள்விக் குறியோடு.
இவன் கேட்டான்: “நீ சொல்றதுலயும் ‘இல்லை’ வருதே?”
இவனது கேள்வியின் சூட்சுமம் அவனுக்கு
விளங்கவில்லை.
இவன் சொன்னான்: “ நீ இப்ப ஒரு பாட்டுப்
பாடினியே, அதைச் சொல்றேன். அதுலயும் ‘இல்லை, இல்லை’ வரதைச் சொல்றேன். எனக்கு இந்த
‘இல்லை’ வந்தாலேயே ரொம்பப் பிடிக்கும். அதுவும் ‘இல்லவே இல்லை’ வந்தா இன்னும் பிடிக்கும்..!”
பிராமணச் சிறுவனுக்கு இவன் பேசுவது வியப்பை உண்டு பண்ணியது.”அது ஏன் அப்படி?”
என்று அவன் கேட்டான்.
“அது ஏனோ தெரியல.. ஆனா, அந்த வார்த்தையச்
சொல்றப்போ எல்லாம், ஒரு பெரிய சத்தியத்த யாரோ உணர்த்தற மாதிரி இருக்கும்..”
“உனக்கு அப்பா அம்மா யாராவது இருக்காளா?”
“இல்ல”
“தம்பி தங்கை?”
“இல்ல”
“வீடு, வாசல்?”
“இல்ல”
“சாப்பாடு, துணி, படிப்பு, உத்தியோகம்?”
“ஊஹூம், இல்ல.. இல்ல.. இல்லவே இல்ல. “
எதிர்மறைகள், எதிர்மறைகள் .. கால யந்திரத்தின் வலிமையான,
கூரான, முள்ளாய்க் கீறிக் கிழிக்கும் கோரமான பல் சக்கரங்கள்..
பாசுரம் சொன்ன சிறுவன் இவனைப் பரிதாபமாய்ப்
பார்த்தான்.
இப்போது இவன் முறை வந்தது. “உனக்கு எல்லாம்
இருக்குதா?”
அவன் கொஞ்ச நேரம் ஒரு சரியான பதிலுக்குத் தேடுவது போல் மௌனமாய் இருந்தான்.
“இப்படிக் கேட்டா என்ன பதில் சொல்றது? எல்லாம்
இருக்குன்னாலும் பொய்; ஒண்ணுமே இல்லேன்னாலும் பொய்...” என்று சொல்லி முகவாயைச்
சொரிந்து கொண்டே சூரியனைப் பார்த்தான். சூரியன் லேசாய் நிறம் வெளிறிச் சிவக்கத்
தொடங்கி இருந்தது.
“நீ சாப்பாட்டுக்கு என்ன செய்யறே?”
“தினமும் விடியக் காலையில எழுந்திருந்து, பஜனை
கோஷ்டியோட சேந்துண்டு, ‘ராதே ராதே, ராதே ராதே, ராதே கோவிந்தா..”ன்னு பாடிண்டே கோயிலுக்குப்
போறேன். அங்க வெண்பொங்கலும் புளியோதரையும் கிடைக்கும். சாயங்காலம் கோயில்
திருவோலக்க மண்டபத்துல உக்காந்துண்டு அரையர்களோட சேந்து திவ்யப் பிரபந்தம்
சொல்றேன். அப்பா மடைப்பள்ளியிலிருந்து ஏதாவது கொண்டு வந்து தருவார்.”
இவன் நிஜமாகவே ஆச்சரியப் பட்டான். இந்தப்
பிள்ளையும் கோஷம் போடுகிறான்; கும்பலோடு போகிறான்... ஆனால், கோஷத்தின் தொனியும்
பாவங்களும் தான் வேறு. இவனுக்கு கோஷ முடிவில் ஒரு ரூபாய் கிடைக்கிற மாதிரி,
அவனுக்கு வெண் பொங்கல் கிடைக்கிறது. அவ்வளவு தான் வித்யாசம்!
எல்லாருமே இதற்காகத்தான் கோஷம் இடுகிறார்கள். ஒரு
நிர்ப்பந்தமே போல் கோஷம் இடுகிறார்கள். தனது சுய பிரக்ஞை இன்றி, பித்தானை
அழுத்தினால், ஏற்கெனவே பதிவு பண்ணினதைப் பேசுகிற விளையாட்டு பொம்மை மாதிரி....
வெண்பொங்கலை நினைத்தவுடன் இவன் நாக்கில் ஜலம் ஊறியது.
“உன்னோட நானும் வந்து கோசம் போட்டாப் பொங்கல் தெனம்
கெடைக்குமா?”
“அது கோஷம் இல்ல. நாம சங்கீர்த்தனம். உனக்கு
அதெல்லாம் வாயில நுழையுமா?”
“நீ சொல்லிக் குடு. நான் புடிச்சுக்குவேன். ‘இல்ல,
இல்ல’ வர்ற மாதிரி எதுனாச்சும் இருக்குதா?”
“அப்படியெல்லாம் எதிர் பார்த்தா முடியாது. எங்கே
இதைச் சொல்லு பாப்போம். ‘அநாத நாதா தீன பந்தோ ராதே கோவிந்தா..’ “
அவன் அதைச் சொல்ல சிரமப்பட்டான். “என்னாப்பா,
கஸ்டமா இருக்குதே?” என்று குழந்தை போல் சிணுங்கினான்.
“கஷ்டப்பட்டாத் தான் பொங்கல் கிடைக்கும்.
சரி..சரி.. முதல்ல உனக்கு ஈசியா இருக்கிற மாதிரிச் சொல்லித் தரேன். நாங்க ஒவ்வொரு
அடி சொல்லி முடிச்சவுடனேயும் நீ, ‘ஜெய்...ஜெய்...விட்டல’ன்னு சொல்லு. அப்புறம்
ஒண்ணொண்ணாப் பழகிக்கலாம். இன்னொரு விஷயம்.. நீ இந்த மாதிரி எல்லாம் வந்தா யாரும்
பஜனையில சேக்க மாட்டாங்க. குளிச்சு சுத்தமா
நெத்தியில திருமண்ணாவது விபூதியாவது இட்டுண்டு, துண்டை இடுப்பில கட்டிண்டு, மேல்
சட்டை இல்லாம வரணும்.”
அவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கறுப்புச் சட்டை வேஷம் மாதிரி, இங்கு வேறு வித வேஷம்... வேஷங்களை அவ்வளவு அவசியமாக்கி விட்ட மனிதர்கள்!
இப்போது இவன் மட்டும் மண்டபத்தில் தனியாக உட்கார்ந்திருந்தான்.
பிராமணச் சிறுவன் போய் விட்டான். தான் நாளைக்குப் போடப் போகிற புதிய கோஷங்களைப்
பற்றி மறுபடியும் நினைத்தான். இன்னும்
கொஞ்ச காலத்திற்குப் பழைய ‘இல்லவே இல்லை’ கிடையாது. இன்னும் ஒரு மாசம் கழித்தோ, இரண்டு மாசம்
கழித்தோ கையில் காசு சேர்ந்தவுடன் அந்தக் கட்சி மறுபடியும் ஊர்வலம் நடத்தும். அப்போது
அது இவனைக் கூப்பிட்டு அனுப்பும். இவனும் ஒரு ரூபாய்க் காசுக்காக, ஊர்வலத்தில்
போய் கோஷம் போடுவான். அதுவரை இந்தப் புதிய கோஷங்கள். அதற்கப்புறம் வேறு ஏதாவது
கோஷங்கள். வெறும் கோஷங்கள்.. அர்த்த,
அவசியங்களைப் பற்றி யாரும் கவலைப் படாமல் ஒரு சமூகக் கடமை மாதிரி, தனித் தனியாய்ப்
பிரிந்து எழுப்புகிற கோஷங்கள்.
அவனுக்கு இப்போது மறுபடியும் வயிற்றில் லேசாய்ப்
பசிக்கத் தொடங்கியது. கண்ணில் நீர் கப்பிக் கொண்டது. வாழ்க்கை அந்தக் கல்
மண்டபத்துத் தரையைப் போல் முரடாய்க் கனத்தது.
“ஜெய், ஜெய் விட்டல....ஜெய் ஜெய் விட்டல..”
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை... இல்லவே இல்லை..”
அவன் காதுகளுக்குள் கோஷங்கள் ‘ஞொய்’ என்று ரீங்காரம்
இட்டன.
இல்லை என்று தெளிந்த பிற்பாடு ஏனிந்த கோஷம்?
இருப்பதைப் பற்றி ஏன் யாருக்கும் பிரக்ஞை இல்லை?
அவன் துக்கம் நிறையத் தூரத்துச் சூரியனைப்
பார்த்தான். அது இப்போது நன்றாய்க் கனிந்து முழுதும் சிவந்திருந்தது.
-5.8.1979, 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியானது.
* * *
(நவீன சமூகவியற் கருத்துகளின் தாக்கம் காரணமாக, ஆரம்ப காலத்திலிருந்தே நான் 'பெரியார் பிராண்ட்' நாஸ்திகத்திலிருந்தும் 'சங்கராச்சாரியார் பிராண்ட்' ஆஸ்திகத்திலிருந்தும் விலகி நிற்கக் கற்றுக் கொண்டிருந்தேன். இதைக் கருவாய் வைத்து , நாஸ்திக ஆஸ்திக கோஷங்களின் வெறுமையை எள்ளல் செய்து நான் 1979-இல் 'கோஷங்கள்' என்ற சிறுகதையை எழுதினேன்.
கதையை, அந்த நாட்களில் முற்போக்கு எழுத்தாளர்களின் சங்கப் பலகையாய் இருந்த ஒரு பிரதான இடது சாரி இலக்கியப் பத்திரிகைக்குக் கொடுத்தேன். இந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணியது தான் இதற்குக் காரணம்.
ஆனால், என் கதை anticommunist-ஆக இருப்பதாகச் சொல்லி அவர்கள் அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஒரு கதை அதன் நோக்கத்துக்கு முற்றிலும் எதிர்மறையாக அர்த்தம் பண்ணப் பட்டிருந்தது எனக்கு ஒரு விதத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைத் தந்தது.
அதற்கப்புறம் பல நாட்கள் 'கோஷங்கள்' -கதை என் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது. ஒரு நாள், எனது வெளிவட்டங்கள் நாவலைப் பிரசுரித்த நண்பர் திரு மாசிலாமணி அவர்கள் மூலம், அப்போது 'இதயம் பேசுகிறது' இதழில் இணை ஆசிரியராக இருந்த திரு. தாமரை மணாளனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிடம்,"உங்களைப் பற்றி மாசிலாமணி ரொம்ப உயர்வாகச் சொல்லி இருக்கிறார். ஏதாவது கதை இருந்தால் கொடுங்கள். போடுகிறேன்" என்றார்.
நான் அவரிடம் "இந்த மாதிரி எழுத்துகளை எல்லாம் உங்கள் பத்திரிகை போடுமா என்று தெரியவில்லை . போட்டால் சந்தோஷம். ஆனால், இதை எடிட் பண்ணிப் போடுவதாய் இருந்தால் வேண்டாம் " என்று சொல்லி என் 'கோஷங்கள்' கதையைக் கொடுத்தேன். அவர் எனக்கு வாக்களித்த மாதிரியே என் 'கோஷங்கள்' கதையும் எந்த வெட்டும் இல்லாமல், மாயாவின் அழகான ஓவியத்தோடு, 5.8.79- 'இதயம்' இதழில் பிரசுரமானது.
அப்போது நான் சென்னையில் ISCUS (Indo Soviet Cultural Society) கட்டிட மாடி அறையில் தங்கி இருந்தேன். அங்கே என்னுடன் கூடத் தங்கி இருந்த நண்பர் திலக்கின் தந்தை ஒரு தீவிரக் கம்யூனிஸ்ட் தொண்டர். பழகுவதற்கு மிகவும் இனியவர். ராஜபாளையத்துக்காரர். அவர் இந்தக் கதையைப் படித்து விட்டு மிகவும் நெகிழ்ந்து போய் என் கைகளை அன்போடு பற்றிக் கொண்டு “நாங்கள் இத்தனை வருஷமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதை ரொம்ப அழகாக நறுக்குத் தெறித்த மாதிரிச் சொல்லி விட்டீர்கள்” என்று மனசாரப் பாராட்டினார். நான் அவரிடம், அவருடைய ‘காம்ரட்’கள் நடத்தும் பத்திரிகை இதை ஆன்டி-கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தித் திருப்பிக் கொடுத்து விட்டதைச் சொன்ன போது அவர் அதை நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார்.)
No comments:
Post a Comment