Tuesday, October 14, 2014

தாத்தா காலத்து பீரோ


பாட்டி சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் அந்த பீரோவைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பாள். பாட்டியின் எண்ணம் முழுவதும் அந்த பீரோவே பெருமளவுக்கு வியாபித்துக் கிடந்தது. ஒருவேளை, அந்த பீரோ தாத்தாவின் இன்னொரு பிம்பமாய் அவளது உள்மனதில் அழுத்தமாய்ப் பதிந்திருக்கக் கூடும்.

பீரோவைப் பற்றிப் பேச்சு வருகிற போதெல்லாம் பாட்டியின் முகத்தில் பலவிதமான உணர்வு மாற்றங்கள் ஏற்படும். சில சமயம் அது பரவசம் போல் தோற்றம் காட்டும்; இன்னொரு சமயம் எதையோ இழந்ததை மீட்டு வரும் ஏக்கமாய் வெளிப்படும்; வேறொரு சமயம் திரும்பப் பெற முடியாத ஒரு பழசை வீணுக்கு அசை போடுகிற விரக்தியாய் வடிவம் கொள்ளும்.

தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஏனென்றால், தாத்தா காலமான போது, என் அப்பாவுக்குத் திருமணமே ஆகி இருக்க வில்லை! அப்போது அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் தாத்தாவின் ஜாகை  உத்தம பாளையத்தில் இருந்தது. உத்தம பாளையத்தில், நாட்டுக்கோட்டைச் செட்டியார் நடத்திக் கொண்டிருந்த ஒரு வங்கியில் தாத்தா மேனேஜராக இருந்தார். அப்போதெல்லாம் சென்னை மாகாணத்தில் வங்கிகள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் வசமே இருந்தததாக அப்பா சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

தாத்தாவிடம் செட்டியாருக்கு அசாத்திய நம்பிக்கையும் அபிமானமும் இருந்தன. வங்கிப் பொறுப்பு மட்டும் அல்லாமல், செட்டியார் தனக்குச் சொந்தமான ஏலக்காய் மலை எஸ்டேட்டின் வரவு செலவுக் கணக்குகளின் பொறுப்பு முழுசையும்  தாத்தாவிடமே ஒப்படைக்கிற அளவுக்கு அந்த நம்பிக்கையின் தீவிரம் இருந்தது. பாட்டி  தாத்தாவைப் பற்றிச் சொல்கிற போது, “உங்க தாத்தா ஏலக்காய் எஸ்டேட் முழுசையையும்  நிர்வகிச்சிண்டிருந்தாரே  தவிர, ஆத்துக்கு இத்தனூண்டு ஏலக்காய் கூட எடுத்துண்டு வந்து நான் பார்த்ததில்ல. எஸ்டேட் ஏலக்காய் வாசனை கூட எனக்குத் தெரியாது. சமையலுக்கு வேண்டிய ஏலக்காய் கூடக் கடையில போய் தான் வாங்கிண்டு வந்து கொடுப்பார்..” என்று ஒரு பெருமூச்சோடு  சொல்லுவாள். பாட்டி, தாத்தாவின் நேர்மையைப் புகழ்ந்து பேசுகிறாளா அல்லது அவர் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதர் என்று மறைமுகமாக நொந்து கொள்கிறாளா என்பது எனக்கு அந்த சமயங்களில் புரியாது.

நான் அப்படிச் சந்தேகப் படுவதற்கான காரணங்கள் இருந்தன. பாட்டிக்குத் தாத்தா தனக்கு ஒரு வீடு வாங்கிவைத்து விட்டுப் போகவில்லை என்பது ஒரு பெரிய மனக் குறையாக இருந்து வந்தது. என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒவ்வொரு தடவையும் எது குறித்தாவது சண்டை வருகிற போதெல்லாம், ‘அவர் இருக்கறப்போவே, எனக்குன்னு சொல்லிக்க ஒரு வீட்டு கூட வாங்கிக்கத் தெரியலையே?’ என்று பெரிதாய் ஒப்பாரி வைப்பாள்

அந்த சமயங்களில் எல்லாம் எனக்குப் பாட்டி மீது அனுதாபம் வரும். தாத்தா வாங்காத வீடு  பற்றிய மனக் குறை பாட்டியைப் பெரிதாய் வாட்டிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும், தனக்கென்று ஒரு சுதந்திரமான சொந்த வாசஸ்தலம் இல்லையே என்கிற சுய இரக்கமே அதில் தொனித்ததாய் எனக்குத் தோன்றும்.


இப்படித் தாத்தா வாங்காத வீடு பற்றிய புலம்பல்கள் தலை காட்டாத தினங்களில் எல்லாம் பாட்டி, தாத்தா வாங்கிய பீரோவைப் பற்றிப் பிரஸ்தாபிக்க ஆரம்பிப்பாள். ஒரு வாரத்தில் நாலு தடவையாவது உத்தம பாளையத்திலேயே விட்டுவிட்டு வந்த அந்த  பீரோவைப் பற்றிப் புலம்பாமல் இருக்க மாட்டாள், அவள்.

அப்பா இல்லாத போதே பாட்டியின் பீரோ பற்றிய பிரஸ்தாபங்கள் அதிகமாக இருக்கும். அப்பா ஆபீசிலிருந்து வந்தவுடன் பாட்டி ‘விதியே விதிப் பழமே வித்தாயோ வாசல்லே’ என்று ஏதோ அவளுக்கு மட்டுமே பரிச்சயமான  ஒரு பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு விடுவாள். ஏனென்றால், அப்பா, அந்த பீரோவைப் பற்றிப் பாட்டி பேச்செடுத்தாலே ’ஆரம்பிச்சாச்சா, ஆபீசிலேருந்து வந்ததும் வராததுமா..?” என்று கோபமாய் எரிந்து விழுவார்.

தாத்தா உத்தம பாளையத்தில் இருந்த போது, ரொம்பவும் ஆசைப்பட்டு ஒரு பீரோ வாங்கினாராம். வாங்கினார் என்று சொல்வதை விட, ஆசாரியை வீட்டுக்கே வரவழைத்துத் தன் பார்வையிலேயே அதைச் செய்யச் சொன்னார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். பாட்டியின் வர்ணனைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு பீரோவின் தோற்றக் குணாதிசயங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமே ஆகி இருந்தன. பீரோ என்றால் இரும்பு பீரோ என்று நினைத்து விட வேண்டாம். மர பீரோ. சாதாரண மரம் இல்லை, தேக்கு மரம். பாட்டி இப்படிச் சொல்வாள், “தேக்கும் கூட சாதாரணத் தேக்குன்னு நினைச்சுக்காதேடா, பர்மாத் தேக்கு!” பின்னால் தான் எனக்குத் தெரிந்தது, அந்தக் காலத்தில். பக்கத்துக் கேரளத்தில் விளைந்த தேக்காக இருந்தாலும் பர்மாத் தேக்கு என்று சொல்லிக் கொள்வதில் தான் எல்லோருக்கும் கௌரவம் என்று!

பாட்டி சொல்லிச் சொல்லி தாத்தாவின் பீரோ என் கண் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றதோடன்றி, அடிக்கடிக் கனவிலும் வரத் தொடங்கியது. எனக்கே அப்படி என்றால், பாட்டியின் கனவுகள் எப்படி இருக்கும் என்று  நான் வெகுவாக யோசித்து ஆச்சரியப் படுவேன். சினிமாக்களில் வருகிற மாதிரி, பாட்டியின் கனவுகளில் எப்போதும் தாத்தாவின் உருவமும் அந்த பீரோவின் உருவமும் பளிச் பளிச்சென்று மாறி மாறி வந்து போகிறார்ப் போல்  நானே ஒரு கற்பனை பண்ணிக் கொண்டு சிரித்துக் கொள்வேன். 

பீரோவைப் பற்றிப் பாட்டிப் பலவகையில் வர்ணிப்பாள். பாடாத குறைதான்! பாட்டி ஒரு புலவராக இருந்திருந்தால், அந்த பீரோவைப் பற்றி ஒரு சின்னக் காவியமே பாடி இருப்பாள். தேக்கில் செய்யப்பட்ட பீரோ அதற்கே உரிய அழகான பழுப்பு நிறத்தில் இருந்தது. அதன் அங்க லட்சணங்களைப் பற்றிப் பாட்டி இன்னும் நிறையச் சொல்லி இருக்கிறாள். அந்த ஆசாரி வெறும் கூலிக்காகக் கடனே என்று அதைச் செய்யவில்லை. தாத்தா மீது ரொம்பவும் மரியாதையும் விசுவாசமும் உள்ளவர் அவர். தாத்தா  அவருடைய பெண் கல்யாணத்துக்கு பாங்கிலிருந்து ‘லோன்’ எல்லாம் எடுத்துக் கொடுத்து ஒத்தாசை பண்ணியதை  மறக்காமல், அந்த நன்றியை பீரோவின் ஒவ்வொரு அணுவிலும் அவர் இழைத்திருந்தார். மிகுந்த பொறுமையோடும் சிரத்தையோடும்  அங்குலம் அங்குலமாய் இழைக்கப் பட்டுப் பாலீஷ் பண்ணின அந்த பீரோவின் கதவுகளும் வெளிப்புறமும் பளிங்கில் செதுக்கிய ஒரு தேவதைச் சிலை மாதிரி அப்படி ஒரு மொழு மொழுப்பாய் இருக்குமாம். ‘இங்கே மட்டும் அந்த பீரோ இருந்தால், தினமும் ஒரு பத்து தடவையாவது அதன் கதவுகளில் என் கன்னத்தைத் தேய்த்துத் தேய்த்து மகிழ்ந்திருக்கலாமே என்று நான் அப்போதெல்லாம் வேடிக்கையாய் ஆசைப் படுவேன்.

தாத்தா அந்த பீரோவைப் ‘புதுப் பெண்டாட்டி’யைப் பார்த்துக் கொள்வது போல் அவ்வளவு கரிசனமாக வைத்துக் கொண்டிருந்தாராம். அந்த பீரோவைத் துடைப்பதற்காகவே தனியாய் வழவழப்பான சின்னப் பட்டுத் துணி ஒன்றைத் தாத்தா வைத்திருந்தார். எப்போது, யார் அதைத் திறந்து மூடினாலும் அவர்களின் கை பதிந்த தடம் உடனே அழிந்து விடுகிற மாதிரி அந்தப் பட்டுத் துணியால் துடைத்து விட வேண்டும் என்று அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். தாத்தா வீட்டில் இருக்கும் போது, அவரே அதை அலுப்பு சலிப்பின்றிச் செய்வார். விடுமுறைக்கு அகமதாபாத்திலிருந்து வரும் பேரக் குழந்தைகள், தாத்தாவைச் சீண்டிப் பார்ப்பதற்காகவே அந்த பீரோவைச் சுற்றிசுற்றி வந்து கண்ணா மூச்சி விளையாடும் என்றும்  தாத்தா பொய்க் கோபத்தோடு கையை ஓங்கிக் கொண்டு எழுந்து பக்கத்தில் வருவதற்குள் பீரோவின் உடம்பில் நன்றாய்க் கன்னங்களைத் தேய்த்து விட்டு ஓடி விடும் என்றும் பாட்டி சொல்லிச் சிரிப்பாள்.

பாட்டி பீரோவைப் பற்றி அவ்வப்போது ஏதேனும் சுவாரஸ்யமான கதைகள் சொல்வாள். பாட்டி இயல்பாகவே கதை சொல்வதில் வல்லவள் என்பதால், அவளது கதைகள் சம்பவங்கள் போலவும் சம்பவங்கள் கதைகள் போலவும் எது நிஜம் எது கற்பனை என்று புரியாத மாதிரி மாறி மாறி மயக்கம் காட்டும்.  அப்படித் தான் ஒரு தடவை சமையல் அறையில் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பூனையைப் பாட்டி விரட்டிக் கூடத்துக்குத் துரத்திக் கொண்டு போக, அது ஒரே துள்ளாய்த் துள்ளி பீரோவின் பின்னால், பீரோவுக்கும் சுவருக்கும் உள்ள இடைவெளியில் போய் ஒளிந்து கொண்டு விட்டதாம்.  

பூனையைச் சுவர் இடைவெளியிலிருந்து வெளியே கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதாய் இருக்க வில்லை. பூனை இசைகேடாய் பீரோவுக்கும் சுவருக்கும் நடுவில் தாறுமாறாகச் சிக்கிக் கொண்டு விட்டது. பாட்டி சொன்னாள்: “கையை விட்டுப் பூனையை எடுக்கலாம்னா கையைப் பூனை பிராண்டிடப் போறதேன்னு பயம். அப்புறம் பூனையைக் கையால தூக்கறப்போ  பூனை மயிர் கீழ உதுந்துட்டா என்ன செய்யறது? உதுர்ற ஒவ்வொரு ரோமத்துக்கும் பொன்னால ரோமம் செஞ்சு தானம் பண்ணணுமாக்கும்!  இல்லேன்னா ஆத்துக்குப் பீடை இல்லையோ? ஆனா அத்தனை தங்கம் இருந்தா நாலு பொண்களுக்குக் கல்யாணம் பண்ணலாமே!”

ஒரு பூனையை விடுதலை செய்வது என்பது இவ்வளவு ‘காஸ்ட்லி’யான விஷயம் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது! அதை விட, எனக்குப் பூனையை அதன் முடி உதிராமல் எப்படி வெளியில் கொண்டு வந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.

தாத்தா பாங்கிலிருந்து வருகிற வரை பூனை மியாவ் மியாவ் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வழியாய்ச் சோர்ந்து ஓய்ந்து விட்டதாகப் பாட்டி சொன்னாள். பூனை ஒரு வேளை செத்துப் போயிருக்குமோ என்று பாட்டிக்கு ஒரே பயம். பூனை மீது உள்ள பாசத்தினால் இல்லை. பூனையின் ஒரு முடி போனாலே அதற்குச் சமமாய்த் தங்கம் தானம் கொடுக்க வேண்டும் என்கிற போது, பூனையே போய் விட்டால்? அவ்வளவு தங்கத்திற்கு எங்கே போவது!

நல்ல வேளை, தாத்தா ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாய்ப் பாட்டி விஷயத்தைச் சொல்ல, தாத்தா ‘சந்தி’ கூடப் பண்ணாமல் எதிர்த்த வீட்டு மாமாவைக் கூட்டிக் கொண்டு வந்து, மெதுவாய் அவ்வளவு பெரிய பீரோவைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்த, சோர்ந்து படுத்திருந்த பூனை, துணுக்குற்றுக் கண் விழித்துச் சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில் ஒரே துள்ளாய்த் துள்ளி வெளியே ஓடி விட்டது. ஆனாலும் தாத்தாவுக்கு நிரந்தர வேதனை தருகிற மாதிரி, பூனை ஒரு காரியம் செய்து வைத்திருந்தது. அது, தான் நாள் முழுவதும் அங்கே தங்கி இருந்ததின் ஞாபகார்த்தம் போல் பீரோவின் பின் பக்கப் பலகையில் நன்றாய்த் தன் நகங்களால் கீறி, தாத்தா துடைத்து துடைத்துப் பாதுகாத்த அதன் வழுவழுப்பான மேனியில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டுப் போய் விட்டது. 

தாத்தா இறந்து போன பிற்பாடு, தொடர்ந்து உத்தம பாளையத்தில் இருக்க விருப்பமின்றி, மதுரைக்கு ஜாகை மாறிய போது, அவ்வளவு பெரிய பீரோவை அங்கே எப்படி எடுத்துக் கொண்டு போவது என்பதில் பிரச்சனை வந்தது. மதுரை வடக்கு  மாசி வீதியை ஒட்டி இருந்த ஒரு சந்தில், தாத்தாவின்  தூரத்து உறவினர் ஒருவர் வீட்டு மாடிப் போர்ஷனில் பார்த்திருந்த இடம் உத்தம பாளையம் வீடு மாதிரி எல்லாம் பெரிசில்லை. மனிதர்களோடு சேர்த்து அவர்களின் மரசாமான்களையும் ஏற்றுக் கொள்கிற அளவுக்கு அதற்குத் தெம்பு இல்லை.

ஆகவே, பீரோவைத் தற்காலிகமாக உத்தம பாளையத்திலேயே, அதே தெருவில் எதிர்த்த வீட்டில் இருந்த, தாத்தாவின்  நெருங்கிய சிநேகிதர் யக்ஞமூர்த்தியின் வீட்டில் விட்டுவிட்டுப் போவதென்றும், பின்னால் எப்போது முடிகிறதோ அப்போது போய் எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவாயிற்று. பாட்டிக்கு இதில் சிறிதும் இஷ்டம் இல்லை. என்றாலும், தாத்தா ஆசை ஆசையாய்ப் பேணிப் பாதுகாத்த பீரோ புதியதாய்ப் போகிற வீட்டின் இட நெருக்கடியில் தட்டு முட்டு சாமான்களோடு சாமான்களாய்ப் பொலிவிழந்து சிதைந்து போகவும் கூடும் என்று அப்பா எடுத்துச் சொன்னதால் பாட்டி ஒருவாறாய்ச் சமாதானம் அடைந்தாள். ஒரு பெரிய சபையில் இத்தனை காலம் வீற்றிருந்த ராஜ சிம்மாசனம் தனக்குரிய ஸ்தானத்தை  இழந்து ஒரு சின்ன இடத்தின் புழுக்கத்தில் கவுரவமின்றி நின்று கொண்டிருப்பதில் பாட்டிக்கும் சம்மதம் இல்லை.  ‘பீரோ எங்க போயிடப் போறது? நம்ம யக்ஞத்துக்கிட்ட தானே விட்டுட்டுப் போறோம்? அவன் மகா நாணயஸ்தன். தாத்தான்னா அவனுக்கு அவ்வளவு பிரியம். பீரோவைத் தன் குழந்தை மாதிரிப் பாத்துப்பான்..’ என்று பாட்டி தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

ஆனால் மதுரைக்குக்  குடிபெயர்ந்த பிறகு எல்லாமே பாட்டியின் கைகளை மீறிப் போயின. பொருளாதார நெருக்கடியால் அப்பா இண்டர்மீடியட்டோடு படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேடி வடக்கே செல்ல நேர்ந்தது. மதுரை ஜாகையைக் கலைத்து விட்டுப் பாட்டி, தாத்தாவின் பூர்வீக கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்த திருவாரூருக்கு இடம் மாறினாள்.  அப்பாவின் அத்திம்பேர் அந்த சமயத்தில் அகமதாபாத்தில் இருந்தார். அவர் அப்பாவுக்கு அங்கே ஒரு மில்லில் வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருந்தார். ஆனால் கொஞ்ச காலத்திலேயே அப்பா வேலையும் ஊரும் பிடிக்காமல் மறுபடியும் திருவாரூருக்கே திரும்ப வந்து விட்டார். பிறகு அப்பா சர்வீஸ் கமிஷன் எழுதிப் பாஸ் பண்ணிக் கூட்டுறவுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். ஊர் ஊராக மாற்றலாகி மூட்டை முடிச்சுக்களை அடிக்கடிக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய அரசாங்க வேலை என்பதால், கால ஓட்டத்தில், உத்தம பாளையத்தில் அனாதையாக விடப்பட்ட அந்த பீரோவை  அநேகமாக பாட்டியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் மறந்தே போனார்கள்.

ஆனால் பாட்டி மட்டும் பீரோவை மறக்கவில்லை. தாத்தாவை எப்படிப் பாட்டியால் மறக்க முடியாதோ அதே போலத் தாத்தாவின் ஞாபகங்களோடு பின்னிப் பிணைந்திருந்த பீரோவும்  பாட்டியின் உள் மனதில் ஒரு நீக்க முடியாத ஞாபகமாகப் புதைந்திருந்தது. அது ஒரு வாழ்ந்து முடிந்த கடந்த காலத்தின் எச்சம் போல் பாட்டியின் நிகழ் காலத்தை அவ்வப்போது நெருடியது. “ஆமா, பிரமாத பிதுரார்ஜித சொத்து! அந்த பீரோ இப்போ எந்த நிலையில் இருக்கோ, யாருக்குத் தெரியும்? அதைத் தேடிக் கண்டுபிடிச்சு எடுத்துண்டு வர செலவுலப் புதுசாவே ஒண்ணு பண்ணிடலாம். அப்படியே கொண்டு வந்தாலும், அதைப் பேரீச்சம்பழக்காரன் கிட்ட தான் போடணும்’ என்று ஒரு தடவை அம்மா எள்ளலோடு சொன்ன போது, பாட்டி ஒரு மூலையில் போய் உட்கார்ந்து மௌனமாய்க் கண் கலங்கினாள்.

அப்பா வெளிப்படையாய் பீரோ விஷயத்தில் அசிரத்தையாய் இருந்த மாதிரிக் காட்டிக் கொண்டாலும், பீரோ பற்றியும் யக்ஞமூர்த்தியின் இருப்பிடம் பற்றியும் அவ்வப்போது யார் மூலமாகவாவது விசாரித்துத் தெரிந்து கொண்டு பாட்டியிடம் சொல்வார். அப்படித்தான் ஒருநாள், “யக்ஞமூர்த்தி மாமா இப்போ உத்தம பாளயத்திலே இல்லையாம். திண்டுக்கல்லுக்கோ எங்கியோ போயிட்டதாக் கேள்விப்பட்டேன்.. சரியான விவரம் விசாரிக்கச் சொல்லி இருக்கேன். அவர் பீரோவைப் பத்திரமா வச்சுண்டிருப்பார். கவலைப் படாதே..” என்று அப்பா சொன்ன போது, பாட்டியின் முகத்தில் ஒரு சின்னப் பிரகாசம் வந்தது.  ஆனால், அந்தப் பிரகாசம்  நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்தத் தகவல் கிடைத்த கொஞ்ச நாளிலேயே அப்பாவுக்கு சேலத்துக்கு மாற்றலாகி விட்டது. அப்பா அதற்கப்புறம் எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டார். புதிய இடத்துக்கு மாற்றலாகிப் போகிற இந்த சந்தர்ப்பத்தில் பீரோ விஷயத்தைக் கிளற பயந்து பாட்டியும் அதைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்து விட்டாள்.  

அதற்கப்புறம் என்னென்னவோ நடந்து விட்டன. அப்பாவுக்கு வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றல்கள் வந்து கொண்டிருந்தன. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இடையில் வரும் சண்டைகளும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனாலும், இருவருக்குமே வயசாகிக் கொண்டிருந்ததாலோ என்னவோ,  அந்த சண்டைகளின் தீவிரம் குறைந்து கொண்டிருந்தது. ஒரு தடவை பாட்டியும் அம்மாவும் ரொம்பவும் நட்போடு அதிசயமாய் ரேழியில் உட்கார்ந்து பல்லாங்குழி கூட விளையாடினர்.

“பாவம், உங்க பிள்ளை உங்க ஆத்துக்காரர் வச்சுட்டுப் போன அந்த பீரோவை எப்படியாவது எடுத்துண்டு வந்து உங்க கண்ணுல காட்டிடக் கூடாதோ? ஆனா, அவரும் தான் என்ன பண்ணுவார்? ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை கவர்மென்ட் காரன் மூட்டையைத் தூக்கிண்டே இருக்கச் சொல்றான்..” என்று ஒரு தடவை அம்மாவே பாட்டியிடம் கரிசனத்தோடு ஆறுதலாய்ப் பேசினாள். இந்தக் கட்டத்தில் பாட்டி வயதின் முதிர்ச்சி காரணமாய் உடலாலும் மனதாலும் வெகுவாகச் சோர்ந்து போயிருந்தாள். பீரோ ஒரு தொலைதூரத்து நிழல் போல் அவளின் நினைவுகளை விட்டு நீங்கத் தொடங்கி இருந்தது.

“எங்கியோ அது பத்திரமா இருக்கு. எனக்குத் தான் அதை என் காலம் முடியறதுக்குள்ள பாப்பேனான்னு தெரியல்ல..இப்ப அந்தக் குறை எல்லாம் கூடப் பெரிசா இல்ல. அவரே போன பிற்பாடு, அவர் வாங்கின ஒரு ஜட வஸ்து கிட்டப் போயி நான் ஏன் இவ்வளவு அபிமானம் வச்சுண்டிருக்கணும்? அசடு இல்லையோ நான்?” என்று பாட்டி ஒரு நாள் ஒரு வேதாந்தி போலவும் பேசினாள்..

பாட்டி செத்துப்போன போது, நான் சென்னையில் ஹாஸ்டலில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா அப்போது கும்பகோணத்திற்கு மாற்றலாகிக் கடலங்குடித் தெருவில் இருந்தார். அப்பா கொடுத்திருந்த தந்தியைப் படித்து விட்டு பாத்ரூமில் போய் யார் கண்ணிலும் படாமல் கேவிக் கேவி நான் அழுதேன். ராத்திரி  ரயிலைப் பிடித்து விடியற்காலை  கும்பகோணம் வீட்டுக்குப் போன போது, பாட்டியை ரேழியில் கிடத்தி இருந்தார்கள். அவள் வெகு சாந்தமாய்த் தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. சின்ன வயதில் பாட்டி மடியில் படுத்துக் கொண்டே கேட்ட புராணக் கதைகளும், பாட்டி என்னை இடுப்பில் சுமந்து தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஆடி ஆடி நடந்தபடி அழைத்துக் கொண்டு போன கோயில்களும் அடுக்கடுக்காய் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அழுதே பார்த்து அறியாத அப்பா பாட்டியின் தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டு அன்றைக்கு அடக்க முடியாமால் அழுதது மனசை என்னவோ செய்தது.

பாட்டியின் காரியங்கள் எல்லாம் முடிந்த பின் நான் சென்னைக்குக் கிளம்பத் தயாராய் இருந்த அன்று, தபாலில் அப்பாவின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்த அப்பா ஒரு வித விரக்திச் சிரிப்புடன் கடிதத்தை என்னிடம் கொடுத்தார். கடிதத்தைப் படித்த போது நிஜமாகவே எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கடிதம் ஆச்சரியத்தை அளிக்கிற மாதிரி, யக்ஞமூர்த்தியிடமிருந்து வந்திருந்தது. அவரே தன் தள்ளாத வயதில் அதை எழுதி இருக்க வேண்டும். வயதான விரல்களின் நடுக்கம் எழுத்துகளின் சிதைந்த வடிவங்களில் வெளிப்பட்டிருந்தது.

“ஆசீர்வாதம். ஆச்சரியமாய் ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு உன்னுடைய விலாசம் எனக்குக் கிடைத்தது தெய்வ சங்கல்பம் தான். யார் யாரோ எங்கெங்கேயோ போய்ப் பல வருஷம் எந்தத் தொடர்பும் இல்லாமல் எப்படி எப்படியோ காலம் போய் விட்டது. எனக்கு ரொம்பவே வயசாகி விட்டது. யாருடைய உதவியும் இல்லாமல் எங்கேயும் வெளியில் போகிற மாதிரி சரீரம் இல்லை. கடந்த ஐந்தாறு வருஷங்களாக நானும் என் குடும்பமும் மன்னார்குடி மூணாம் தெருத் திருப்பத்தில், ஃபின்ட்லே ஹைஸ்கூல்  பக்கத்தில் ஜாகை இருந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கடிதம் எழுதுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. என் பிள்ளை, பெண் எல்லாரும் வற்புறுத்தியதின் பேரில் நானும் என் மனைவியும் மன்னார்குடி ஜாகையைக் கலைத்துக் கொண்டு மெட்ராசுக்கே போய் விடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் உன் தாயார் என்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன, உன் அப்பாவின் பீரோவை இன்று வரை நான் என் சொந்தக் குழந்தையைப் போல் கண்ணும் கருத்துமாய்ப் பாவித்து பத்திரமாய் வைத்துக் கொண்டிருக்கிறேன். மரமோ தங்கமோ எதுவாய் இருந்தாலும் பிறத்தியார் பொருளை அவர்களிடமே திருப்பிச் சேர்க்கிற வரை மனசில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நாங்கள் மெட்ராஸ் போவதற்கு முன்னால், நீ ஒரு தடவை இங்கே வந்து அந்த பீரோவை வாங்கிக் கொண்டால் எனக்கு ரொம்பவும் நிம்மதியாய் இருக்கும்., பக்கத்தில் தான் கும்பகோணம் இருக்கிறது. அதனால் அவசியம் வரவும். அம்மா எப்படி இருக்கிறார்? அவருக்கும் ரொம்பத் தள்ளாமை ஏற்பட்டிருக்கும். அவருக்கு அந்த பீரோவின் மேல் கொள்ளைப் பிரியம். இத்தனை வருஷம் இப்படித் தொடர்பே இல்லமால் போய் விட்டதை நினைத்தால் துக்கமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும்? நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் பகவத் சங்கல்பம். இப்படிக்கு, ஆசிர்வாதங்களுடன் யக்ஞ மூர்த்தி.”

கடிதத்தை முடித்தவுடன் கனக்கும் மனசோடு அப்பாவை ஏறிட்டுப் பார்த்தேன். அப்பா அவசரம் அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டது போல் இருந்தது. அதற்கப்புறம், என் சென்னைப் பயணத்தைத் தள்ளி வைத்து விட்டுப் பிடிவாதமாய் நானும் அன்றைக்கு சாயங்காலமே அப்பாவுடன் மன்னார்குடிக்குப் புறப்பட்டேன். பஸ்ஸில் போகிற போதெல்லாம் ஏதோ தேடாமலேயே கிடைக்கப் போகும் ஒரு பழம் புதையலைப் பெற்றுக் கொள்ளப் போகிறவர்கள்  மாதிரி எங்களைக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு சாதாரண பழைய மர பீரோவுக்கு அத்தகைய  புதையலுக்கான தகுதியெல்லாம் இருக்கிறதா என்றெல்லாம் நான் யோசிக்க வில்லை. எனக்குப் பிரியமான பாட்டி, பாட்டிக்குப் பிரியமான தாத்தா, தாத்தாவுக்குப் பிரியமான பீரோ என்று யாவும் ஒரு விவரிக்க இயலாத மாய உணர்வுச் சங்கிலியில் பின்னிக் கொண்டு நின்றதால் அந்தப் பயணம் எனக்கு சுகமாகவே இருந்தது. ‘ஒரு வேளை பாட்டி வேண்டுமென்றே தான் கிளம்பிப் போய்த் தனக்குப் பதிலாகத் தாத்தாவை அனுப்பி .வைத்திருக்கிறாளோ?’ என்று கூடத் தோன்றியது.

மன்னார்குடி நெருங்க நெருங்க, தாத்தாவின் பீரோவை மட்டும் அல்லாது  நான் இது வரை பார்த்திராத தாத்தாவின் தோற்றத்தையும்  நானே எனக்குள் வித விதமாய் உருவகித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தாத்தா பீரோவைத் திறந்து திறந்து மூடுவதும், அதைப் பட்டுத்  துணியால் துடைப்பதும் நிழலுருவங்களாய்த் தெரிந்தன. அங்கு போனவுடன், மறக்காமல் முதல் வேலையாய், பீரோவின் பின்புறம் போய், ‘அன்றைக்கு அந்தப் பூனை கீறின நகத் தடங்கள் இன்னமும் அதில் அழியாமல் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்’ என்று ஏனோ விநோதமாய் எண்ணிக் கொண்டேன்.
                                                  (தளம், ஜூலை,2014)



5 comments:

  1. ரொம்பவும் அருமையான கதை :-)

    ReplyDelete
    Replies
    1. இப்போது தான் தங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். நன்றி, ஸ்ரீவித்யா.

      Delete
  2. கதை முடிய மனம் கனத்துப் போனது . தாத்தாவின் பீரோவை போலவே இன்று பல தாத்தாக்களையும் , பாட்டிகளையும் கூட நாம் கவனிக்காமலேயே விட்டு விடுகிறோம் . மனதை தைத்த கதை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கதை.ஆவலுடன் உள்ளேன் பர்மா தேக்கு பீரோவை காண்பதற்கு..வாழ்த்துக்கள்.

    ReplyDelete