Friday, March 27, 2015

உலக நாடக தினம்


      மார்ச்-27

     உலக அரங்க தினமும் (World Theater Day) அது தொடர்பான சிந்தனைகளும்

  
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என்று வருஷம் முழுதும் ஏதாவது ஒரு நாள் எது குறித்தாவது அல்லது யார் குறித்தாவது கொண்டாடப் பட்டு வருகிறது. சில பரவலாக அறியப் படுகின்றன. சில நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அதன் சர்ச்சைத் தன்மையைப் பொருத்து ஊடகங்களாலேயே பிரபலப் படுத்தப் படுகின்றன. சில அப்படி ஒன்று இருப்பதே அறியப்படாமல், உலகின் எங்கோ சில  மூலைகளில் சின்னச் சின்னக் குழுக்களால் மட்டுமே அனுசரிக்கப் பட்டு  நமக்கும் தெரியாமல் நம்மைக் கடந்து போய் விடுகின்றன. அந்த அளவில், ஒவ்வொரு வருஷமும் மார்ச் இருபத்தேழாம் நாள் ‘உலக அரங்க தினமாக’(World Theater Day) அறிவிக்கப் பட்டு உலகின் பல நாடுகளில் நடனம், நாடகம் போன்ற நிகழ்கலைகளின்(Performing Arts) வழியாக விளம்பரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ எதுவும் இன்றிக் கொண்டாடப் பட்டு வருவது, நிகழ்கலைத் துறை சார்ந்த ஆர்வலர்களிலேயே நிறைய பேருக்குத் தெரியாது.

சர்வ தேச அரங்கப் பயிலகம்(International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி  நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப் பட்டது.  

இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961-இல், ஹெல்சிங்கியில் நடந்த ITI-இன் ஒன்பதாவது உலக சம்மேளனத்தின் போது, ஃபின்லாந்தின் தேசீய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அது 1962-ஆம் ஆண்டு செயல் வடிவம் பெற்றது. 

1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட நூறு ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது..  

\இந்த உலக அரங்க தினத்தின் முக்கியமானதும் கவனத்துக்குரியதுமான அம்சம், ஒவ்வொரு வருஷமும் இந்த நாளில், சர்வதேசத் தரம் வாய்ந்த எழுத்தாளர் ஒருவரின் மூலம் உலக அரங்க தினச் செய்தி என்று ஒன்று வெளியிடப் படுவதாகும்.. முதலாம் ஆண்டுச்செய்தி(1962), நாடகம் மட்டும் அல்லாது, கவிதை, ஓவியம், நாவல், சினிமா என்று பல்துறைகளிலும் முத்திரை பதித்த ஃபிரெஞ்சு இலக்கியகர்த்தாவான Jean Cocteau என்பவரால்  வெளியிடப்பட்டது. 

இந்தச் செய்தி-ஆசிரியர்களின் வரிசையில், ஆர்தர் மில்லர், பீட்டர் ப்ரூக், பாப்லோ நெருடா, ரிச்சர்ட் பர்டன், யூஜின் அயனஸ்கோ, மார்டின் எஸ்லின், எட்வர்ட் ஆல்பி, கிரீஷ் கர்னார்ட் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இந்த ஆண்டின் செய்தியை அளித்திருக்கும் Dario Fo ரொம்பவுமே விசேஷமானவர். 1997-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் இந்த ஃபோ. அமைப்பு சாரா இடது சாரி நாடகாசிரியரான இவர், நாடக நடிகையும் பெண்ணிய வாதியுமான தனது மனைவி Franca Rame–உடன் இணைந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய கால கட்டத்தில் இத்தாலி முழுவதும் தனது அதிகார-எதிர்ப்பு நாடகங்களை நிகழ்த்திப் பரபரப்பை உண்டு பண்ணியவர். 

இவரது  நாடகங்கள், இத்தாலியில் பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி-இயக்கக் காலத்தில் பிரபலமாக இருந்த ‘காமெடியா டெல் ஆர்ட்டீ’ என்ற நாடோடித் தெருநாடகக் குழவினரின் அங்கத(Satire) நாடக வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மூலம் சமகால அரசியல், சமூக, மத அமைப்புக்களை நையாண்டி செய்ததாலும், இத்தாலியின் பாசிச அதிகார மையத்தைக் கேள்வி  கேட்டதாலும்  இவர் அரசின் கோபத்துக்கு ஆளானார். இவரது நாடகக்குழு பல வருஷங்களுக்குத்  தடை செய்யப் பட்டது. 

1970-இல், அமைப்பை எதிர்த்துக் கலகம் செய்த ஓர் இத்தாலிய ரயில்வே தொழிலாளி போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்டு, அதை வெறும் விபத்தாய்ச் சித்தரித்து மூடி மறைக்க முயற்சிகள் நடந்த போது, ஒரு கிளர்ச்சிக்காரனின் அகால மரணம்(The Accidental Death of an Anarchist) என்ற நாடகத்தை எழுதி, ஃபோ இத்தாலி முழுதும் மேடை ஏற்றினார். ஃபோவின் இத்தகைய கடும் அரசியல் விமர்சன நடவடிக்கைகளால் எல்லாம் கோபம் கொண்ட இத்தாலிய போலீஸ், நாடக நடிகையும் இவரது மனைவியுமான ஃப்ராங்கா ரேமைக் கடத்திக் கொண்டு போய் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைத்துப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியது. இது நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குள்ளேயே மீண்டும் மேடையில் தோன்றிய ரேம் இன்னும் அதிக ஆவேசத்தோடும் புது உத்வேகத்தோடும் பாசிச எதிர்ப்புத் தனி-வசனங்களை(Monologue) மேடைகளில் நடித்துக் காட்டி அரசின் நரம்புகளை அதிர வைத்தார். (கிட்டத்தட்ட இதற்கு இணையான சம்பவம் இந்தியாவிலும் நடந்தது. 1989-ஆம் ஆண்டு, டில்லியருகே, ஒரு தெரு நாடக நிகழ்வின் போது தெருநாடகக் கலைஞர் சஃப்தார் ஆஸ்மி ஓர் அரசியல் கட்சிக் குண்டர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் நடந்து முடிந்த இரண்டாவது நாளே, மனம் தளராத அவரது மனைவி மொல்லாய்ஷ்ரீ ஆஸ்மி அதே இடத்தில், பாதியில் நின்று போன அதே நாடகத்தைத் தைரியமாக மீண்டும் நடத்திக் காட்டினார்.) ஒத்த எண்ணங்களும், மன இணக்கமும், அசாத்தியக் கொள்கை உறுதியும் கொண்ட இத்தகைய நாடகத் தம்பதியர், உலக நாடக வரலாற்றில் மிகவும் அபூர்வமாகவே தென்படுகிறார்கள்.

அந்த அளவில் டேரியோ ஃபோவின் இந்த ஆண்டைய உலக அரங்க தினச் செய்தி இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில், அவர் எப்படிக் கத்தோலிக்க மத அமைப்பு, தனது  மறுமலர்ச்சி எதிர்வினைகளாகப் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ‘காமெடியா’ தெருநாடகக் குழுவினரை இத்தாலியை விட்டே ஓடஓட விரட்டியது என்பதையும், அப்போதிருந்த போப்பாண்டவர்  எப்படி மற்ற மத குருமார்களின் தூண்டுதலின் பேரில் ரோம் நகரத்து Tordinona  நாடக அரங்கைத் தகர்த்தெறிய உத்தரவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். 

அந்தக் காலகட்டத்தில் நாடகம் என்பது  சமயத்துக்கு எதிரானதும், அபசாரமானதும், ஆபாசமானதும், யாருக்கும் பயனற்றதுமான மக்களைத் திசை திருப்பும் மலிவான ஒன்றாகவே சித்தரிக்கப் பட்டிருந்தது. அதனால் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு அதன் வளர்ச்சி  கவலையை அளித்தது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் நாடகம் பற்றி எவரும் லட்சியம் கூடப் பண்ணுவதில்லை என்கிற விஷயம் ஃபோவை மிகவுமே வேதனை கொள்ளச் செய்கிறது. ஒரு மிகப் பெரிய ‘கலாச்சார நெருக்கடி’க்கு ஆளாகி இருக்கும் இன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கைச் சூழலில், அழிந்து கொண்டிருக்கும் அரங்கத்தை மீட்டெடுத்து, அன்றைய காமெடியா டெலார்ட்டீயைப் போலவே மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இன்றைய இளம் நாடகக் காரர்கள் முனைப்பாக இருக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியம் என்பதே ஃபோ விடுக்கும் செய்தியின் சாராம்சமாகும்.

உலக அரங்க தினம் கொண்டாடப் படுவதென்பது  ஒரு கலை வடிவை அழியாமல் காப்பாற்றிக் கொடுப்பது, அல்லது அன்றைய நாளில் மக்களைப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்விப்பது என்கிற மாதிரியான வெறும் ஒரு அடையாள நிகழ்வாய்க் குறுகி விடாமல் பார்த்துக் கொள்வதிலேயும் ஐ.டி.ஐ. கவனமாக இருக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஐ.டி.ஐ.-ஜெர்மனியும் ஐ.டி.ஐ.-சூடானும் இணைந்து, 2004-இல் சூடானின் உள்நாட்டுப் போர் வெடித்திருந்த பழங்குடிப் பகுதிகளில் போய்த் தெரு நாடகங்களை நிகழ்த்தியது. அது மட்டுமல்லாமல் அந்தப் பிரதேசத்தில்  அதுவரை சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு பழங்குடி மக்களிலிருந்தே ஆட்களைத் திரட்டி, அவர்களை அந்த நாடகங்களில் பங்கேற்கிறவர்களாகவும், பார்வையாளர்களாகவும் ஈடுபடுத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்படிப் பங்கேற்றவர்களில் இரண்டு தரப்பையும் சேர்ந்த போர் வீர்களும். போலீஸ்காரர்களும் கூட இருந்தனர். இத்தகைய கலை நிகழ்ச்சிகளின் போது, இரண்டு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.  

இந்த வகையில் உலக அரங்க தினம், பிற தினங்களைப் போலன்றிப் பல தளங்களில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறது. இது அருகிக் கொண்டிருக்கும் ஒரு கலை வடிவைப் பாதுகாப்பது என்ற அளவோடு மட்டும் நின்று விடாமல், அதை மண்ணும் மாந்தரும் பயன் பெறுமாறு எப்படி வளர்த்தெடுப்பது என்பதிலும் நமக்கு அக்கறை இருக்கிறது. சங்க காலத்தில், சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மன்னர்களிடையே போய்க் கவிதை பாடிப் போரை நிறுத்திய புலவர்களைப் பற்றியெல்லாம் நாம் படித்திருக்கிறோம். தனி மனிதச் செயல்பாடான கவிதைக்கே அத்தனை ஆற்றல் இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்த குழுச் செயல்பாடான நாடகத்திற்கு அதை விட இன்னும் அதிக ஆற்றல் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கலை வடிவின் மொத்த உள்-ஆற்றலையும் சமூகம் சரியாய்ப் பயன் படுத்திக் கொண்டதா என்பது  சந்தேகமே.


Theater என்னும் சொல்லை நாடகம் என்று மொழி பெயர்ப்பது சரியாகப் படவில்லை. அப்படிச் செய்தால், அது மேடை நாடகம் போன்ற ஒரு குறிப்பிட்ட வடிவத்தையே சுட்டும் சொல்லாகக் குறுகி விடுகிற அபாயங்கள் உண்டு. மாறாக, அது நாடகம், நாட்டியம், இசை-நாடகம்(Opera), நிழல்க்கூத்து(Shadow theater), பாவைக்கூத்து(puppet theater), தெருக்கூத்து(Folk Theater) என்று பல விரிந்த வெளிகளில் பரவி நிற்பதால், Theater-ஐ அரங்கம் என்றே எழதுவது சரி என்று தோன்றுகிறது. இந்த அரங்கம் என்னும் சொல் நான்கு புறமும் சுவர்கள் சூழ்ந்த ஒரு மூடிய கான்க்ரீட் கூடமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிரற்ற சுவர்களுக்குப் பதிலாக, அது நாலாபுறமும் உயிருள்ள மக்களே சூழ்ந்த திறந்த வெளியாகத் தோற்றம் கொள்வதும் இதில் சாத்தியம் என்பதால், ‘அரங்கத்தின்’ வீச்சு இன்னும் அதிக ஆற்றல் கொண்டதாகிறது.

உலகில் நாடகம் தோன்றிய விதம் பற்றிய சுவாரஸ்யமான புராணக் கதை ஒன்று இருக்கிறது. பிரம்மன் ஐந்தாவது வேதமாக நாட்டிய சாஸ்திரத்தை உருவாக்கி, அதைப் பரத முனிவரிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட பரதரும் தனது நூறு புத்திரர்களையும், பிரம்மன் அனுப்பிய சில தேவலோகத்துக் கந்தர்வர்களையும் வைத்து உலகின் முதல் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அதன் பார்வையாளர்களாகத் தேவர்களும், அசுரர்களும் மனிதர்களும் அரங்கில் கூடி யிருக்கின்றனர். 

நாடகத்தின் போக்கு தேவர்களுக்கு சாதகமாக இருக்கவே அசுரர்கள் கோபம் கொண்டு நடிகர்களின் பேச்சு, உடல் இயக்கம் முதலியவற்றைத் தங்களது  மாய சக்தியால் செயலிழக்கச் செய்து நாடகத்தைத் தொடர முடியாமல் செய்து விடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தேவர்கள் அசுரர்களைத் தாக்க, நாடகம் பாதியில் நின்று போய்க் கலகத்தில் முடிகிறது. இந்த சமயத்தில், நாட்டிய சாஸ்திரத்தைப் பரதரிடம் கொடுத்த பிரம்மன் தலையிட்டு, அசுரர்களை அழைத்துப் பேசி, நாடகத்தின் மேன்மைகளைப் பிரசங்கம் செய்து, நாடகத்தைத் தொடர்ந்து நடத்த விடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இந்தக் கதையைத் தனது ‘உலக அரங்க தினச் செய்தி’யில்(2002) மேற்கோள் காட்டும் கிரீஷ் கர்னார்ட், தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார். “அதற்கப்புறம் அந்த நாடகம் தொடர்ந்து நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், நாடகாசிரியன், நடிகன், பார்வையாளன் ஆகிய மூவரும் இடைவெளியற்ற ஒரு தொடர்ச்சியாய் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரு நாடகத்தில் இவற்றில் எந்த ஒன்று ஸ்திரத் தன்மை இழந்து வெடிக்கிற போதும் அது அந்த நாடகத்தின் போக்கையே மாற்றி எழுதி விடுகிறது. இந்த அதிசயம் வேறு எந்த ஊடகத்திலும் சாத்தியம் இல்லை."

உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து இசையும், இசையிலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் பிறந்ததாய்ச் சொல்லும் சுவையான பழந்தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அப்படியானால், அடுத்த கட்டமாக நாடகத்திலிருந்து என்ன பிறக்கும்? பரதர் நிகழ்த்திய முதல் நாடகத்தில் நேர்ந்தது போல் கலகமும் பிறக்கலாம். அல்லது, சூடானின் கலகப் பிரதேசங்களில் நிகழ்த்தப் பட்ட நவீன நாடகங்களில் நேர்ந்த மாதிரித் தீர்வுகளும் பிறக்கலாம். (அவை தற்காலிகமானவயாக இருந்தாலும் கூட). கலகம் இன்றித் தீர்வுகள் இல்லை. கேள்விகள் இன்றிக் கலகம் இல்லை. கேள்வியிலிருந்தே கலகம் பிறக்கிறது. கலகத்திலிருந்தே தீர்வு பிறக்கிறது. அந்த அளவில். கேள்வி, கலகம், தீர்வு அனைத்துமே ஏதோவொரு விதத்தில் எதிர்வினைகளே. இந்த எதிர் வினைகள் தான் அரங்கத்தை, எத்தனை சோதனைகளுக்கிடையேயும், எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.                                                                 
                                                                                                                           (தளம்,ஏப்ரல் 2013)                                           

No comments:

Post a Comment