ஊர்மிளை
உத்தியானவனத்தில் சோர்வோடு உட்கார்ந்திருந்தாள். எத்தனை நேரம் தான் இப்படி
மானையும் மயிலையும் முயலையும் புறாவையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது?
அவளுக்கு சலிப்பும் கோபமும் வந்தன. சில நாட்களுக்கு முன் வரை இதே நந்தவனம்
அவளுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருந்ததென்னவோ உண்மைதான். அப்போதெல்லாம்
லட்சுமணன் அவளுடன் இருந்தது அதற்குக் காரணமாய்
இருந்திருக்கக் கூடும். அப்போது கூட அவன் அதிக நேரம் அவளோடு செலவழித்ததாக அவள்
உணர்ந்ததில்லை. ராமனின் சேவையில் அவன் செலவழித்தவை போக எஞ்சிய நேரத்தில், அவளுக்கும்
கொஞ்சம் ஒதுக்கிய மாதிரி இருந்தது. அவனை யாரும் வேண்டுமென்றே அப்படி அவளிடமிருந்து பிரித்து வைத்தார்கள்
என்று அவள் எண்ணவில்லை. ஆனாலும், தன் தமக்கை சீதை கூட ஏன் அவனிடம் அவனுக்கென்று
மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்று ஞாபகப் படுத்திக் கடிந்து கொள்ளவில்லை? அவளுக்கு இந்த
விஷயத்தில் அவள் மேல் நிறையவே கோபம் வந்தது.
இருந்தும் லட்சுமணன்
அவளோடு கழிக்கிற அந்த சொற்ப நேரங்களிலேனும் அந்த உத்தியானவனம் அவளுக்குப்
பிரியமளிக்கக் கூடியதாகவே இருந்தது. ஒருமுறை அவனை அவள் வற்புறுத்தி ரதத்தில்
அயோத்தி நகரைத் தாண்டி சரயு நதி தீரத்துக்கு அழைத்துக் கொண்டு போனாள். போகிற
வழியில் இருபுறமும் பச்சைப் பசேல் என்று செழித்து வனப்போடு இருந்த வயல் வெளிகளின்
நடுவில், நீர்நிலை ஒன்றில் இரண்டு கிரௌஞ்சப் பறவைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து சல்லாபித்துக்
கொண்டிருந்தன. அந்தக் காட்சியை அவள் அவனுக்கு வெட்கத்தோடு காண்பித்ததும், அவன்
எந்தச் சலனமும் இன்றி, “வெகு நேரம் ஆகி விட்டது ஊர்மிளை.. அரண்மனையில் அண்ணா
தேடுவார்..” என்று சொன்னதும் அவளுக்கு இப்போது எரிச்சலோடு நினைவுக்கு வந்தன.
இனிமேல் அண்ணா
தேடமாட்டார் என்று இப்போது ஊர்மிளை நினைத்துக் கொண்டாள். ஏனெனில், நீ தான் உன்
அண்ணனின் நிழலாய் மாறி ஏற்கெனவே நிழல்கள் மண்டிய வனத்துக்குள் வெகு தூரம் போய் நிழலோடு
நிழலாய்க் கரைந்து விட்டாயே? எப்படி உனக்கு இதைச் செய்ய மனம் வந்தது? உனக்குத்
தான் உணர்வுகள் வறண்டு போயின என்றால் ராமன் ஏன் உனக்கு புத்தி சொல்ல வில்லை? என்
சகோதரி சீதைக்கு எங்கு போயிற்று அறிவு?
தூரத்தில் ஒரு செண்பக
மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அது அவளைப் பார்த்துச் சிரிப்பது
போலிருந்தது. ஊர்மிளைக்கு அழுகையும் கோபமும் வந்தன. மிதிலையில் அவள் தந்தை ஜனகரின்
அரண்மனைத் தோட்டத்தில் நிறைய செண்பக மரங்கள் இருந்தன. அவளும் சீதையும் அந்த செண்பக
மரங்களின் நிழலில் பூப்பந்து ஆடுவார்கள். சில சமயம் சேடிப் பெண்கள் ஏதாவது பரிகாசம்
பண்ணுகையில் சீதையும் அவளும் கலகலவென்று ஜலதரங்கம் போல் சிரிப்பார்கள். அப்படிச்
சிரித்து விட்டுச் சட்டென்று செண்பக மரங்களைத் திரும்பிப் பார்த்தால் அவையும்
பூத்துக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருக்கும். அப்போது சீதை சொல்வாள்:
“ஊர்மிளை..உனக்குத் தெரியுமா? ஒரு சுலோகம் இருக்கிறது. பெண்கள் சிரித்தால் செண்பக
மரம் பூப்பூக்குமாம்.. அது உண்மை தான் போலிருக்கிறது..”
ஊர்மிளை இப்போது தன்
முன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த செண்பக மரத்தை அசூயையோடு பார்த்தாள். அது
உண்மை இல்லை சீதை. இந்த மரம் பெண்கள் அழுதாலும் பூக்கிறது.. இதற்கு எள்ளளவும் விவஸ்தை
இல்லை..
அவளுக்கு அடக்க
முடியாமல் துக்கம் வந்தது. மிதிலை நாட்கள் நினைவுக்கு வந்தன. ஒரு வசந்த காலத்து
இளம் காலைப் போதில் அவள் சீதையோடு கன்னிமாடத்தில் நின்று கொண்டு தெருவை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு வயதான முனிவரோடு வில்லும் கையுமாய் இரண்டு
வனப்பான வாலிபர்கள் ராஜ பாட்டையில் கண்ணைப் பறிக்கிற சௌந்தர்யத்தோடு மெல்ல நடந்து
போய்க் கொண்டிருந்தார்கள். ஊர்மிளைதான்
அவர்களைச் சீதைக்குக் காண்பித்தாள். மாநிறத்தில் ஒருவனும் இளஞ்சிவப்பு நிறத்தில்
இன்னொருவனும் இருக்க, அந்த இருவரில் யார் ரொம்ப அழகு என்பதைத் தானும் சீதையும் தங்களுக்குள்
வெட்கத்தோடு சர்ச்சித்துக் கொண்டதை அவள் இப்போது நினைத்துப் பார்த்தாள்.
அப்பா ஜனகர்,
சீதையைக் கைப்பிடிக்கத் தன்னிடம் இருந்த சிவதனுசை நாணேற்ற வேண்டும் என்ற கடும்
நிபந்தனை விதித்திருந்த நிலையில், ஊர்மிளை, “அடியே சீதை, அப்பாவின் நிபந்தனையை
வைத்துப் பார்க்கும் போது, உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் ஆவது கஷ்டம் தான்”
என்று அடிக்கடி அவளிடம் பரிகாசம் செய்வாள். ஆனால், அன்றைக்கு அரசவையில் முதல் நாள்
வீதியில் பார்த்த அந்த மாநிற வாலிபன் சர்வ சாதாரணமாய் அந்தப் பெரிய சிவதனுசை
அசட்டையாய்க் கையில் தூக்கி நாணேற்றியதோடன்றி அதை இரண்டாகவும் ஒடித்துப்
போட்டபோது, உப்பரிகையில் சீதைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் ஊர்மிளை. “ஏய்,
உன் ஆள் வீரன் மட்டும் இல்லை. பெரிய
அதிகப் பிரசங்கியாகவும் தெரிகிறான்.. இல்லையென்றால், வில்லை வெறுமனே நாணேற்றச்
சொன்னால் இப்படி அதை யாருக்கும் உபயோகம் இல்லாமல் இரண்டாக உடைத்துப் போடுவானா?..”
என்று சீதையின் காதில் அவள் அப்போது தணிந்த குரலில் கேலி செய்ததும், .அது கேட்டுச் சீதை கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்
கொண்டதும் இப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தன.
எல்லாம் கனவு போல்
தான் இருக்கிறது. ‘சீதையை ராமன் தன்னுடனேயே மறக்காமல் காட்டிற்குக் கூட்டிக்
கொண்டு போனதற்கும், ஆனால் லட்சுமணன் மட்டும் தன்னை எந்த அக்கறையும்
இன்றி இங்கேயே தவிக்க விட்டுப் போனதற்கும் என்னென்ன நியாயங்கள் இருக்க முடியும்?’
என்று அவள் யோசித்துப் பார்த்தாள். ஒரு
வேளை சீதையை அடைய ராமன் ஒரு பெரிய வில்லை உடைக்க வேண்டியிருந்தது போல், என்னை
அடையக் குறைந்தபட்சம் ஒரு கல்லையாவது நீ உடைத்திருக்க வேண்டும். அப்போது, உனக்கு
என் அருமை தெரிந்திருக்கும். ஆனால், நான், உனது பிரயத்தனங்கள் எதுவுமின்றி,
ராஜகுமாரி சீதையோடு வெறும் உபரியாக
உன்னுடன் அயோத்திக்கு வந்தவள்...
அவளது கோபம் இப்போது
அப்பா ஜனகரின் மேலும் திரும்பியது. சீதை மட்டும் உங்களுக்கு என்ன உசத்தியாகி
விட்டாள்? அவளுக்கு நீங்கள் ஒரு விலை வைத்த மாதிரி எனக்கு மட்டும் என் எந்த
விலையும் வைக்க வில்லை?
சற்று நேரம் முன் தான் சேடிப் பெண் ஒருத்தி வந்து, சாரதி
சுமந்திரன் திரும்பி வந்து விட்ட விவரத்தை அவளிடம் சொன்னாள். சுமந்திரன் தான் ராம
லட்சுமணர்களையும் சீதையையும் ரதத்தில் ஏற்றிக் கொண்டு வனத்தில் விடப் போனான். அவர்கள் மூவரும் சரயுவைத்
தாண்டி, வெகு தொலைவுக்கப்பால் தமசா நதியையும் கடந்து, இரவோடு இரவாகக் கானகத்துள்
பிரவேசித்து விட்ட செய்தியைச் சுமந்திரன் சுமந்து வந்திருந்தான். தமசாவின் கரை வரை
அவர்களை விடாமல் தொடர்ந்து போன ராஜவிஸ்வாசம் மிக்க அயோத்தி மக்கள் ஏமாற்றத்துடன் ஊர்
திரும்பி விட்டார்களாம்.. ‘உற்ற மனைவியையே தவிக்கவிட்டுப் போன ‘தம்பி’யின்
அண்ணனுக்கு ஊர் ஜனங்களிடம் என்ன அக்கறை இருக்க முடியும் என்று அவள் கோபமாக
நினைத்தாள்.
யாரோ அவளது மெல்லிய
தோள்களைப் பற்றி அழுத்தினார்கள்., ‘லட்சுமணன் தான் மனம் மாறித் திரும்பி வந்து
விட்டானோ’ என்ற நப்பாசையோடு ஊர்மிளை திரும்பிப்
பார்த்தாள். அவள் பின்னால் ஒரு கன்னங்கரிய இளம் பெண் நின்றிருந்தாள். நிறத்தில்
தான் கரியள் என்றாலும் எளிதில் யாரும் புறந்தள்ளி விட முடியாத சிநேகமும் வசீகரமும்
அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்தன. அந்தப் பெண் தனக்கு மிகவும் பரிச்சயம் உள்ளவள் போலவும்
ஆனாலும் அடையாளம் விளங்காத புதியவள் போலவும் விநோதமாய் உணர்ந்த ஊர்மிளை அவளைக்
குழப்பத்தோடு ஏறிட்டு நோக்கினாள்.
“நீ யார்? நீ
எனக்குப் பரிச்சயம் உள்ளவள் போலவும் இருக்கிறாய்; இல்லாதவள் போலவும் இருக்கிறாய்..
எப்படி இங்கு வந்தாய்? என்ன வேண்டும் உனக்கு?” என்று அவளிடம் கேட்டாள் ஊர்மிளை.
அந்தக் கரிய நங்கை ஊர்மிளையைப்
பார்த்துப் புன்னகைத்தாள்.. “தோழி..நான் உன்னை அறிவேன். உன் உள் மனமும் என்னை
அறியும். நான் உனக்கு நெருக்கமானவள். உனக்கு மட்டும் இன்றி, கவலையில் உழலும் மொத்த
மானிட இனத்துக்கும் நான் நெருக்கமானவள். இந்த சமயத்தில் உனக்குத் துணையாக இருக்கவே
நான் வந்தேன்....”
ஊர்மிளையின் குழப்பம்
இன்னும் அதிகரித்தது. “பெண்ணே, நீ பேசுவது எனக்குப் புரியவில்லை. உன் துணையால்
எனக்கு உபயோகம் இருக்கும் என்று தோன்றவில்லை. என் தனிமையைக் கெடுக்காமல் நீ இந்த
இடத்தை விட்டுப் போய் விடு.”
“ஏற்கெனவே உன்னைத்
தனிமையில் தவிக்கவிட்டுப் போனவன் மீது நீ மிகுந்த கோபத்தோடு இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.
இப்போது, உன் தனிமையைப் போக்க வந்த என்னையும் நீ துரத்துவது எந்த வகையில் நியாயம்
ஊர்மிளை?”
ஊர்மிளை சட்டென்று
நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் கண்களில் ஓர் ஒளிப் புள்ளி தெறித்து விழுந்தது.
“யார் என் தனிமைக்குக் காரணமானார்களோ அவனது இடத்தை நீ எப்படி நிரப்ப முடியும்? உன்
பேச்சு விந்தையாக இருக்கிறது எனக்கு. முதலில் இதைச் சொல். நீ யார்? உன் பெயர்
என்ன? உன்னை யார் இங்கே அனுப்பியது?”
அந்தப் பெண் இப்போது ஊர்மிளைக்கு
முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் தலையைத் தன் கரிய விரல்களால் அன்போடு
கோதி விட்டாள். “என் பெயர் நித்ரா. எவன் மீது நீ கோபமாய் இருக்கிறாயோ அவன் தான்
என்னை உன்னிடம் அனுப்பி வைத்தான் என்று வைத்துக் கொள்ளேன்..” என்று சொல்லி அவள் சிரித்தாள்.
ஊர்மிளை அவளது
கரங்களை மெல்ல விலக்கினாள். “நித்ரா..உன் பெயர் நன்றாக இருக்கிறது. கருமை கூட
உனக்கு சோபையையே கூட்டுகிறது. ஆனாலும் லட்சுமணன் தான் உன்னை என்னிடம் அனுப்பினான்
என்பதில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. காட்டில் ராமனோடு இருக்கிற போது, அவனுக்கு
என்னுடைய ஞாபகம் கூட வரும் என்று என்னை நம்பச் சொல்கிறாயா, பெண்ணே?”
ஆனாலும் அந்தப் பெண்
சொன்னது உண்மையாக இருக்க வேண்டும் என்று ஊர்மிளையின் உள் மனம் ஏங்கியது. தொலைவில்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவை சப்தித்தது. லட்சுமணன் செய்தது சரியில்லை தான்.
ஆனாலும் அவன் அப்படி ஒன்றும் ஈவு இரக்கம் அற்ற கல் நெஞ்சக் காரன் இல்லை...
நித்ரா, ஊர்மிளையின்
மன ஓட்டத்தை அறிந்தவள் போல் பேசினாள். “லட்சுமணன் இரக்கம் அற்றவன் இல்லை ஊர்மிளை..
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனிதர்களின் கைகளைக் கட்டிப் போட்டு விடுகின்றன.
எனக்கு பதில் சொல் ஊர்மிளை. ராமன் கூட சீதையை அயோத்தியிலேயே இருக்கச் சொல்லித்தான்
கட்டாயப் படுத்தினான். ஆனால் சீதை பிடிவாதமாய் அவனுடன் போனாள். ஆனால், நீ ஏன்
அப்படி அடம் பிடித்து லட்சுமணனுடன் செல்லவில்லை?”
ஊர்மிளை விரக்தியாய்ச்
சிரித்தாள். ”அப்பிப்பிராயம் கேட்டால் அல்லவா அடம் பிடிப்பதற்கு? அப்புறம்- என்
கணவன் மகா கோபக்காரன் என்பது உனக்குத் தெரியாதா? கோபம் அவனது பலமா பலவீனமா என்பதை
நான் அறியேன். எனக்கு அவனிடம் ஏனோ காதலை விடப் பயமே அதிகம் இருந்திருக்கிறது. சாந்தம்
நிறைந்த அண்ணனின் நேர் மாறான பிம்பம் அவன். ராமனின் சாந்தத்தை என் சகோதரி தனக்கு
சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டாள். குறைந்த பட்சம் பிடிவாதம் பிடிப்பதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு அளிக்கப்பட்டது...”
நித்ரா ஊர்மிளையைப்
பார்த்துக் குறும்போடு சிரித்தாள். “சீதை உன்னை விட சாமர்த்தியசாலி என்று ஒப்புக்
கொண்டால் என்ன குறைந்து போய் விடுவாய் ஊர்மிளை? ஒன்றுக்கு மூன்று மாமியார்களிடம்
அகப்பட்டுக் கொண்டு நாட்டில் கிட்டும் கூட்டு அரண்மனை வாசத்தை விடவும், கணவனோடு
காட்டில் கிட்டும் சுதந்திரமான தனிப் பர்ணசாலை வாசம் எவ்வளவு சுகமானது என்று அவள்
புத்திசாலித் தனமாய் யோசித்திருக்கிறாள்..”
“உண்மை தான். ஆனால் ராமனுக்கு
சீதை மேல் இருந்த அளவு கடந்த பிரேமை கூட அவள் பிடிவாதம் ஜெயிக்கக் காரணமாய்
இருந்திருக்கக் கூடும். சொல்லப் போனால், ராமனின் உள் மனசு சீதை அப்படி அடம்
பிடித்துத் தன்னுடன் வரமாட்டாளா என்று கூட
ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால். என்னவனுக்கு அப்படி எல்லாம் அதீதப் பிரேமை எதுவும்
என் மீது இருந்ததாய் நான் எந்தத் தருணத்திலும் உணர்ந்ததில்லை..”
ஊர்மிளை சற்று நேரம்
மௌனமாய் இருந்தாள். பிறகு கோபத்தோடும் பெருமூச்சோடும் இப்படிச் சொன்னாள்:
“லட்சுமணனை நான் திரும்ப என்றாவது சந்திக்கிற போது, அவனிடம் மறக்காமல் கேட்க வேண்டும், ‘அவன் ஏன் கல்யாணம் செய்து
கொண்டான்’ என்று..”
நித்ரா அவளை
இரக்கத்தோடு பார்த்தாள். ஊர்மிளை வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அயோத்தி
நகரின் தொலை தூரத்துப் புறநகர்ப் பகுதியிலிருந்து யாரோ ஒருவன் பணவம் என்னும் பறையை விட்டுவிட்டுத் தட்டிக்
கொண்டிருக்கும் சப்தம் மெல்லக் காற்றில் பரவி வந்தது.. இந்தக் கருவியை இவன் இந்த நேரத்தில் ஏன் வாசிக்கிறான்
என்று தெரியவில்லை. ஒரு வேளை அவன் பொழுது
போகாமல், ஒரு பயிற்சிக்காக அதை வாசித்துக் கொண்டிருக்கலாம். இருந்தும், மங்கிய
மாலைப் பொழுது இரவைத் தழுவிக் கொள்ளக் காத்திருக்கும் அந்த அந்தி வேளையில்,
விட்டுவிட்டு வரும் அந்தப் பணவ ஒலி, ஊர்மிளையின் மனதில் இனம் தெரியாத சங்கடங்களை
உண்டு பண்ணியது..
நித்ரா ஊர்மிளையின்
கவனத்தைத் திருப்பினாள்: “மனசைச் சிதற விடாதே ஊர்மிளை. உனக்கு உன் கணவன் மீது உள்ள
கோபத்தின் நியாயம் எனக்குப் புரிகிறது. ஒரு வேளை லட்சுமணனுக்கும் அது
புரிந்ததனாலேயே அவன் என்னை உன்னிடம் அனுப்பி இருக்கிறான் என்று நினைக்கிறேன்..”
என்றபடியே அவள் உரிமையோடு ஊர்மிளையின் விழி இமைகளை மெல்ல வருடி விட்டாள். ஊர்மிளை
இந்த முறை அவள் விரல்களை விலக்கவில்லை. அவளுக்கு அந்த வருடலின் இதம் இப்போது தேவைப்பட்ட
மாதிரி இருந்தது.
“என்னை நம்பு தோழி.
லட்சுமணனுக்கு உன் மேல் நிஜமாகவே அக்கறை இருக்கிறது. அதனாலேயே தனிமையின் கனத்தை நீ
சற்றேனும் உணராமல் இருக்க, தான் பதினான்கு வருஷங்கள் விழித்திருந்து துறக்கப்
போகும் தூக்கம் முழுவதையும், அவன் உனக்கு இடம் மாற்ற என்னை அனுப்பி இருக்கிறான்.
இந்த ஏற்பாட்டில் உங்கள் இரண்டு பேருக்கும் லாபம் இருக்கிறது. அவன் மட்டும் என்ன செய்வான், பாவம்? இரவு பகல் எந்நேரமும் ராமனையும்
சீதையையும் கண்ணிமைக்காமல் பாதுகாக்கிற கடமையை அவன் தானே தன் மீது சுமத்திக்
கொண்டிருக்கிறான் அல்லவா? அதனால் அதை பின்னம் வராமல் நிறைவேற்ற அவன் தன்
தூக்கத்தைத் தியாகம் செய்ய முடிவு பண்ணி இருக்கலாம்..” இந்த இடத்தில் சற்று
நிறுத்தி ஊர்மிளையின் முக மாற்றங்களைக் கவனித்தாள் நித்ரா.
ஊர்மிளை எந்த
சலனத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் பேசினாள்: “நான் தன்யனானேன் பெண்ணே. .லட்சுமணன்
என் மீது கொண்ட பரிவை அறிய நேர்ந்து எனக்கு உடல் சிலிர்க்கிறது. என்ன அக்கறை மனைவி
மீது! ஒரு விஷயம் புரிந்து கொள் பெண்ணே..அவன் கடமையாற்ற இடைஞ்சலாய் இருக்கும் தூக்கத்தை
வீணடிக்காமல் வாங்கிக் கொள்ள இன்னொருத்தர் வேண்டியிருக்கிறது அவனுக்கு. அதற்குத்
தான் தன் மனைவியான என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்
அவன். என் மீது உள்ள அக்கறையினால் அல்ல. ஆனால், ஒரு ஆறுதல், அந்த அளவுக்காவது
அவனது ஞாபகத்தில் நான் எஞ்சி இருப்பதை நினைத்து...”
நந்தவனத் தடாகத்தில்
மஞ்சள் வெயில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்தது. இருள் ஒரு மௌனமான சோகத்தைப்
போல் அந்த இடத்தில் மெள்ள ஊடுருவிக் கவியத் தொடங்கியது.
ஊர்மிளையின் கோபத்தை
எப்படித் தணித்து அவளை சமாத்தானப் படுத்துவது என்கிற யோசனையோடேயே நித்ரா பேசினாள்: “உன் கோபம் எனக்குப்
புரிகிறது ஊர்மிளை. ஆனால் இப்படி யோசித்துப் பார். தந்தையின் வயோதிகத்தை வாங்கிக்
கொண்ட மகனின் கதையைக் கேட்டதில்லையா நீ? அதனாலேயே அந்த மகன் காவியத்தில் இடம் பெற்றுப்
பெரும் கீர்த்தி அடைந்தான். அதே போல், கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்ட
மனைவியாய், நாளைய ராமகாவியத்தில் உனது தியாகமும் கீர்த்தியோடு பேசப்பட்டால், அது
உனக்குப் பெருமை தானே?”
இப்போது, ஊர்மிளை
கோபத்தை அடக்க முடியாமல் நித்ராவை விழிகள் சிவக்கப் பார்த்தாள். “அப்படி என்னைப்
பார்க்காதே ஊர்மிளை. உன் விழிகளின் சிவப்பு எனக்கே அச்சம் அளிக்கிறது. அவற்றில் தான் இன்னும் பதினான்கு வருடங்கள் நான்
வாசம் செய்யப் போவதாக லட்சுமணனுக்கு
வாக்களித்திருக்கிறேன்..” என்று தணிந்த குரலில் சொன்னாள் நித்ரா. ஊர்மிளை இதைக் கேட்டுத் தன் முகத்தை
வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவள் திரும்பிய
பக்கம் அதே தடாகம் மீண்டும் கண்ணில் பட்டது. தடாகத்து நீர் மஞ்சள் நிறத்தை இப்போது
முற்றிலுமாகத் துறந்து இருளின் கருமையில்
தனது அடையாளத்தை ஒருசேர இழந்து விட்டிருந்தது. எல்லா பட்சிகளும் ஒவ்வொன்றாய்
நீங்கி விட்ட நிலையில் மரக் கிளைகள் இரவின் நிசப்தத்தில் வெறிச்சோடி இருந்தன. அந்த
இருளும் நிசப்தமும் ஊர்மிளையின் தனிமையை மேலும் கனமாக்கி அவளது மனசை இன்னும்
அச்சப்படுத்தியது. அவளது மெல்லிய தோள்கள் இப்போது லேசாய் நடுங்கின.
‘தன் சகோதரிகள்
சீதைக்கோ மாண்டவிக்கோ ஸ்ருதகீர்த்திக்கோ நேராத அனுபவங்கள் தனக்கு மட்டும் ஏன்
நேரிடுகின்றன’ என்று அவள் கேட்டுக் கொண்டாள். சீதை புத்தி சாலி என்றால், மாண்டவியும் ஸ்ருதகீர்த்தியும்
பாக்கியசாலிகள் என்று அர்த்தமா? கணவன் எங்கு போனாலும் அவனது நிழலாய், அவனது
தலைப்பைப் பிடித்துக் கொண்டு போவது தான் பாக்கியமா? காதல் இன்பத்தின் மென்மையான சிருங்கார
உணர்வுகள் எதுவும் லபிக்கப் பெறாத மரக்கட்டைகளுக்கு மனைவியானவர்களுக்கும் இது பொருந்துமா? கணவனின் வெறும் நிழல் தான்
மனைவியா? பெண்ணும் ஆணைப் போல் ஸ்தூலமானவள் இல்லையா?
நான் லட்சுமணனின் நிழல்
இல்லை. யாருடைய நிழலும் இல்லை. எனக்கென்று தனியாய் எப்போதும் என் உடம்பின் நிழல்
என் கூடவே இருக்கிறது. ராமன் இருக்கும்
இடம் சீதைக்கு அயோத்தி என்றால், லட்சுமணன் ‘இல்லாத இடம்’ எனக்கு மட்டும் எப்படி அயோத்தியாயிற்று?
எனக்கும் அயோத்திக்கும் என்ன உறவு? நான் மிதிலையிலிருந்து வந்தவள்... இப்போது லட்சுமணன் நிஜம் இல்லை என்கிற போது,
அவன் மூலம் வந்த இந்த அயோத்தியும் நிஜம்
இல்லை. இந்த இருட்டும், தனிமையும், இந்தப் புதிய சிநேகிதி நித்ராவும் மட்டுமே நிஜம்.
ஊர்மிளை இப்போது
நித்ரா இருந்த திசையில் திரும்பினாள். ஏற்கனேவே கருமையாய் இருந்த நித்ரா இப்போது தான்
நிற்பதே புலப்படாமல் இருட்டோடு இருட்டாக ஒன்றி இருந்தாள். அவளது சுவாசம் மட்டும்
ஊர்மிளைக்கு மெல்லக் கேட்டது. அவள் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
“இந்த ஏற்பாட்டுக்கு
நான் சம்மதிக்கிறேன். ஆனால் எந்தப் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அல்ல.
எனக்குத் தெரியும், நீ சொல்லும் அந்த நாளைய மகா காவியத்தில், அதன் ஓர் இருண்ட
மூலையில் கூட என் பெயர் இடம் பெறாது என்று. தமையனுக்காகப் பதினான்கு வருஷங்கள்
தூக்கத்தைத் துறக்கப் போவது லட்சுமணனுக்கு வேண்டுமானால் தியாகமாக இருக்கலாம்.
ஆனால், யாரும் என் செயலையும் தியாகம் என்று சொல்லி என்னை அனுதாபத்துக்குரியவள் ஆக்கி
விடாதீர்கள். யாருடைய இரக்கத்திலும் வரும்
பிச்சையாய் இந்தத் தூக்கத்தை நான் ஏற்கவில்லை. நானே விரும்பி என் சொந்தக்
காரணங்களுக்காக இதை வரித்துக் கொள்கிறேன். இது ஒரு விதத்தில் லட்சுமணனுக்கு, அவன்
கடமையைச் செய்ய நான் செய்யும் உபகாரமாக
வேண்டுமானாலும் அமைந்து விட்டுப்
போகட்டும். எனக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நித்ரா! நான் தயாராக
இருக்கிறன். பதினான்கு வருஷங்கள் நீ என் இமைகளில் தங்கி இந்த க்ஷணமே என்னைத்
தூங்கச் செய். இந்த நெடிய தூக்கம் பிறர் நினைக்கிற மாதிரி லட்சுமணன் மீதுள்ள எனது தாபத்தை
மறக்க அல்ல; மாறாக எனது கோபத்தை மறக்க. எனக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை மறக்க. இந்த
நீண்ட நித்திரையில் எனக்கு இன்னொரு உதவியும் செய் நித்ரா. தயவு செய்து எனக்குக்
கனவுகளற்ற தூக்கத்தைக் கொடு. கனவில் கூட
யாருடைய முகமும் வருவதை நான் விரும்பவில்லை..”
நித்ராவின் முக
பாவங்கள் எதுவும் அந்த இருட்டில் புலப்படவில்லை. ஊர்மிளை அவளது மிருதுவான
ஸ்பரிசத்தை மட்டும் உணர்ந்தாள். அவள் ஊர்மிளையைத்
தன் தோள்களில் சாத்திக் கைத்தாங்கலாய் அரண்மனை அந்தப்புரத்துக்குள் அழைத்துப்
போனாள். மலர் மஞ்சத்தில் படுக்க வைத்தாள். அகிற் புகையின் சுகந்த வாசத்தில், அகல்
விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், ஒரு லேசான மயில் இறகால் ஊர்மிளையின் விழி இமைகளை
வருடிக் கொடுத்தாள். ‘விழித்துக் கொண்டே அங்கே ஒருவனும், தூங்கிக் கொண்டே இங்கே ஒருத்தியும்
இப்படிப் பதினான்கு ஆண்டுகள் தங்களது அழகிய இளமையை அநியாயமாய் வீணடிக்கத்
துணிந்தார்களே...” என்று வருத்தத்தோடு கடைசியாய்த் தனக்குத் தானே முணுமுணுத்தாள் நித்ரா. பின் அவளது இமைகளில்
தாவி ஏறி அருவம் ஆனாள். ஊர்மிளை, கனவுகள் அற்ற நீண்ட நித்திரையில் ஆழ்ந்து போனாள்.
* * * * *
பதினான்கு வருஷங்கள் கழிந்து ஒரு நாள், ஓர்
இளங்காலைப் போதில், யாரோ ஒரு முரட்டு ஆணின் ஸ்பரிசம் பட்டுப் பாதித் தூக்கமும் பாதி விழிப்பும் கலந்த நிலையில் ஊர்மிளை மெல்லக் கண் திறந்தாள்..
எதிரே நின்றவனின் உருவம் மங்கலாய்த் தெரிந்தது. காதோரம் நரை தட்டி இருந்தது. நீண்ட
காலம் தூக்கம் துறந்த கண்கள் இடுங்கிச் சோர்ந்து துவண்டிருந்தன. கண்களில் இப்போதும்
காதலின், பிரியத்தின் அறிகுறிகள் எதுவும்
தென்படவில்லை. மாறாக அதே பழைய, பழகிப் போன, இறுகிய கடமை உணர்ச்சி. ஒரு வேளை அது,
அவன் மீது அவள் உருவாக்கிக் கொண்ட பழைய அபிப்பிராயங்களின் எச்சங்கள் ஏற்படுத்திய பிரமையாய்க்
கூட இருக்கலாம்.
லட்சுமணன் கட்டில் விளிம்பில் அமர்ந்தபடி
உரிமையோடு ஊர்மிளையின் தோள்களைப் பற்றி
இருந்தான். “அம்மா, கண்களைத் திறவுங்கள்... யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்.”
என்று பின்னாலிருந்து எந்த சேடிப் பெண்ணோ மகிழ்ச்சியோடு குரல் கொடுத்தாள். ஊர்மிளை
சிரமப்பட்டு, ஆர்வமேயின்றிக் கண்களை முழுமையாகத் திறக்க முயன்றாள். தாயின் கதகதப்பன அணைப்பில்
நெடுநேரம் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீர் என்று எதிர்பாரமல்
வெடுக்கென்று பிடுங்கப்பட்ட குழந்தையைப் போல் அவள் எரிச்சல் அடைந்தாள். அந்த
எரிச்சல் மாறாமலேயே, “யார் நீ? உன்னை இதற்கு முன் நான் எங்கேயும் பார்த்தது
இல்லையே.. எப்படி என் அந்தப்புரத்துக்குள்
வந்தாய்? யார் உன்னை அனுமதித்தது?” என்று அவள் லட்சுமணனைப் பார்த்துக் கோபமாய்ச்
சரமாரியாய்க் கேள்வி எழுப்பினாள்..
லட்சுமணன் குழப்பம் அடைந்தான். அதே சமயம்,
பதினான்கு வருடத்து நீண்ட இடைவெளியில், காலம் உடலில் விளைவித்திருக்கும் வயதின்
மாற்றங்களால் தன் புற அடையாளம் அவளுக்கு மறந்து போனது இயல்பே என்று அவன் சமாதானம்
அடைந்தான். அதனால், அவன் தான் யார் என்பதை ஊர்மிளையின் நினைவுக்கு மீண்டும்
கொண்டுவரும் முயற்சிகளில் சிரமப்பட்டு இறங்கினான். “ஊர்மிளா..என்னை நன்றாகப் பார்.
நான் உன் கணவன் லட்சுமணன். பல வருஷங்களுக்கு முன்னால். உன் அப்பா ஜனகரின் சபையில் யாராலும்
அசைக்கக் கூட முடியாத அந்தப் பெரிய வில்லை என் அண்ணா ராமன் தான் ஒடித்து உன் அக்கா
சீதையை மணந்து கொண்டார். அந்த சமயத்தில் தான் ஜனகரின் இன்னொரு புதல்வியான உன்னை
நான் கைப்பிடித்தேன். விதி வசத்தால் உன்னைப் பிரிந்து, பதினாலு வருஷங்கள் அண்ணனோடும் அண்ணியோடும் நான் வனத்தில் கழிக்க நேர்ந்தது. வன வாசம் முடிந்து இப்போது எல்லோரும் நலமாக அயோத்தி
திரும்பி விட்டோம். திரும்பிய உடனேயே,
முதல் வேலையாய் உன்னைப் போய்ப் பார்க்கச் சொல்லி அண்ணி சீதை என்னை இங்கு அனுப்பி
வைத்தாள்..”
லட்சுமணன் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் சொல்லி
முடித்துவிட்டு அவளை ஆசையோடு பார்த்தான். ஊர்மிளை கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டாள்.
இப்போதும் நீயாக வரவில்லை. சீதை ஞாபகப்படுத்தியே
வந்திருக்கிறாய்..
ஊர்மிளையின், தணிந்திருந்த கோபங்கள் இப்போது
புதிய வேகத்தோடு மீண்டும் சீறிக் கிளம்பின.: “நீ சொல்லும் விஷயங்கள் எதுவும்
எனக்குத் தெரியாது.. இப்போது நீ சொன்ன பெயர்களும் எனக்கு நினைவில் இல்லை. உன்
முகமோ, உன் குரலோ, உன் ஸ்பரிசமோ எதுவுமே எனக்குப் பரிச்சயம் ஆனவையாய்த்
தோன்றவில்லை. என்னைத் தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து உடனடியாய் வெளியே போ..”
என்று அவள் லட்சுமணைப் பார்த்துக் கத்தினாள்.
லட்சுமணன் வெலவெலத்துப் போனான். ‘நிஜமாகவே
இந்தப் பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? அல்லது என்றோ பதினான்கு
வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் அடிபட்ட அவளது சுயபிம்பம் அவனது அடையாளத்தை அங்கீகரிக்க
மறுக்கிறதா?’ என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
முதன் முதலாய் அவனுக்கு ஏதோ புரிகிற மாதிரி இருந்தது. மனசில்
லேசாய்க் குற்ற உணர்வுகள் தலை தூக்கின. அவற்றின் புதிய கனத்தோடு, பதினான்கு
ஆண்டுகள் கண் விழித்த களைப்பும் சேர்ந்து
கொள்ள, அவன் கண்கள் மெல்லச் செருகிக் கொண்டு வந்தன. அவன் ஊர்மிளையை விட்டு
விலகி, சற்றுத் தள்ளி இருந்த இருக்கையில் போய் சாய்ந்து கொண்டான். ஊர்மிளை அவனைப்
பார்ப்பதைத் தவிர்த்து வேறொரு புறம் முகத்தைத் திருப்பி இருந்தாள். சற்று முன்
அவள் வெளிப்படுத்திய கோபப் பெருமூச்சில் இன்னும் அவளது மார்புகள் விம்மி விம்மித்
தணிந்து கொண்டிருந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் ஊர்மிளையின் இமைகளில் இருந்து
மெதுவாய்க் கீழே இறங்கினாள் நித்ரா. “காலம் எந்த ரணத்தையும் ஒரு நாள் ஆற்றும்,
லட்சுமணா.. ஆனால் அது வரை பொறுமையாய்க்
காத்திருப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை..” என்று முணுமுணுத்துக் கொண்டே அவள்
லட்சுமணனை நோக்கி ஒரு கரிய நிழலாய் நடந்து போனாள்.
ஊர்மிளை இப்போது நன்றாக விழித்துக் கொள்ள, சற்றுத்
தள்ளி. லட்சுமணன் புரிபடாத உணர்வுகளோடு தூங்க
ஆரம்பித்திருந்தான்...
*************************
(இந்தச் சிறுகதை, தெலுங்கில் வழங்கும் ஊர்மிளா தேவி நித்ரா’ என்ற ஒரு கதைப் பாடலின் (Ballad) மையக் கருவை மட்டும் தழுவித் தமிழில் சுயமாய்ப் புதிய கோணத்தில் எழுதப் பட்டது.)
-கணையாழி (ஆகஸ்ட், 2015)
No comments:
Post a Comment