சரியாய்க் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் கண்ணம்மா
காலிங் பெல்லை அடித்து விடுவாள். அவள் தரும் காலிங் பெல் சத்தத்தைக் கொண்டே
கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம். அவ்வளவு துல்லியம். அவள் காலிங் பெல் பித்தானை
அழுத்துவதில் கூட ஒரு மென்மையும் அழகும் இருப்பதாய்த் தோன்றும். ஓர் அன்பான தோழமை
உணர்வு அந்த சத்தத்தில் இருக்கும். அதை எப்படிப் புரியவைப்பது என்பது தெரியாது. ஓர்
உள்ளுணர்வாய்த் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்ச நேரத்திலேயே வந்து
போகும் பால்காரன், பேப்பர்க்காரன் இவர்கள் எல்லோரும் அழுத்துகிற அழைப்புமணி
சத்தங்களில் வெளிப்படும் நிதானமின்மை, பரபரப்பு, முரட்டுத்தனம் இவை ஏதும்
கண்ணம்மாவின் காலிங் பெல்லில் இருக்காது.
கண்ணம்மா வேலைக்குச் சேர்ந்து சில காலத்திலேயே
அவளை மிகவும் பிடித்துவிட்டது சுலோசனாவுக்கு. பம்பாயிலிருந்து அவள் கணவனுக்குச்
சென்னைக்கு மாற்றலாகி இந்தப் புதிய ஃபிளாட்டுக்குக்
குடியேறிய கடந்த சில மாதங்களில் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு வேலைக்காரி
கிடைக்காமல் அவள் நிறையவே சிரமப்பட்டாள்.
மும்பையில் வேலைக்காரி கிடைப்பது குதிரைக் கொம்பு மாதிரி. அப்படியே
கிடைத்தாலும் அவர்கள் போடுகிற கண்டிஷன்கள்
மதராசிகளுக்கு மயக்கத்தைத் தந்து விடும். ஓர் ‘உ.பி.’க்காரப் பெண்ணிடம் மாட்டிக்
கொண்டு தான் பட்ட சங்கடங்களை எல்லாம் சுலோசனா சென்னை வந்தும் மறக்கவில்லை. இங்கே
அத்தனைப் பிரச்சனைகள் இல்லை என்றாலும், நல்ல நம்பகமான, முகம் சுளிக்காத, கை நீளாத, அதே சமயம் மாத பட்ஜெட்டிற்கும் ஒத்துவருகிற
பெண்ணாய்த் தேடவேண்டி இருந்தது.
ரொம்பச் சின்னப் பெண்ணாகயிருந்தாலும் சரி, ரொம்ப
வயசானவளாயும் இருந்தாலும் சரி, கஷ்டமான வேலைகளைச் செய்யச் சொல்ல மனசு வராது.
ஆனால், அதற்காக அழகான, மதர்ப்பான இளம் பெண்ணாய்த் தேடுவதிலும் ஓர் அசட்டு பயம்
இருந்தது. எப்போதாவது தான் வீட்டில் இல்லாமல் இருந்து, அந்த நேரம் அவளும் தன்
புருஷனும் மட்டும் தனியாக இருந்து, டைனிங் டேபிளுக்குக் குறுக்காய் ‘சாஸ்’
பாட்டிலை எடுக்க அவள் குனிகையில் சற்றே அவளின் உத்தரீயம் விலகி விட, அவனும் கண
நேரம் சபலங்களுக்கு ஆட்பட்டு- இந்த சினிமாத்தனமான மூடக் கற்பனை குறித்து சுலோசனா
தனக்குள்ளேயே வெட்கமடைந்தாலும், எந்த வித
ரிஸ்கும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தாள். ‘ஆண்பிள்ளைகளை அவ்வளவு
எளிதில் நம்பி விடாதே’ என்று அவளுடைய அம்மாவே அவளை ஒரு தடவை எச்சரித்திருந்தாள்.
ஆக, இத்தனை முன் ஜாக்கிரதைகளுக்கும் ஒத்து
வருகிற சகல யோக்கியதாம்சங்களோடு கிட்டத்தட்ட ‘மெனோபா’ஸை நெருங்கிக் கொண்டிருக்கிற வயதில் ஒரு பெண்மணி, கண்ணம்மா
ரூபத்தில் அவளுக்குக் கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் தான். பெருங்களத்தூரில் இருக்கிற
அவளுடைய ஒனறு விட்ட அக்காள் மூலமாகத் தான் கண்ணம்மா அறிமுகமானாள்.
கண்ணம்மாவுக்குப் பூர்வீகம் எல்லாம்
இராமநாதபுரம் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். ஆரம்பத்தில் பேருக்குக் கொஞ்சம்
நிலம் இருந்தும், மழையை நம்பி வாழ்கிற நிச்சயமற்ற வாழ்க்கை. வறுமையின்
எரிச்சல்களோடும், வசதியான வாழ்க்கை குறித்த கனவுகளோடும், எவனோ துபாயில் வேலை
வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டியதில் மயங்கி, இருந்த சொற்ப நிலத்தையும், விற்றுவிட்டுச் சென்ன்னைக்கு
வந்தானாம் அவள் புருஷன்.
துபாய்ப் பேர்வழி இவனை லாட்ஜில் தங்கவைத்து
விட்டு, ‘இதோ வருகிறேன்’ என்று பணத்தோடு போனவன் தானாம். ‘இந்த மனுஷனை
நம்பியதற்குப் பேசாமல் மழையை நம்பி இருக்கலாம்’ என்று பிற்பாடு ஞானம் வந்த
புலம்பியிருக்க வேண்டும். கண்ணம்மா, ஏமாளிப் புருஷனை நொந்தபடி, வேறு வழியின்றி
ஜீவனத்திற்காக சென்னைக்கே வந்து விட்டாள். யாரோ இரக்கப்பட்டு கிண்டி தொழிற்பேட்டையில்
ஒரு சின்னத் தொழிற்கூடத்தில் அவனைக் ‘கேஷுவல் லேபர’ராகச் சேர்த்து விட வண்டி ஏதோ
ஓடத் தொடங்கியது.
கண்ணம்மாவுக்குக் குழந்தைகள் எதுவும் இல்லை.
அதனாலேயே சுலோசனாவின் இரண்டு வயதுப் பையனைக் கவனித்துக் கொள்கிற வேலை என்பதில்
அவளுக்கு ஓர் ஈடுபாடு வந்திருக்க வேண்டும்.
விடிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து சோறாக்கி விட்டுச் சரியாய்
ஐந்தரைக்கெல்லாம் வேலைக்கு வந்து விடுவாள். முதல் அழைப்பு மணிச் சத்தத்தை அனேகமாக
அவளே தான் எழுப்புவாள். வாசல் கதவில் தொங்கும் துணிப்பையில் பால்காரன்
வைத்துவிட்டுப் போகும் பால் கவர்களை எடுத்து வந்து ஃபிரிட்ஜைத் திறந்து உள்ளே வைத்து மூடுவதிலிருந்து அவளுடைய
அலுவல்கள் ஆரம்பித்து விடும். சுலோசனா, ஆறுமணிக்குப் பாதித் தூக்கம் நிறைந்த
விழிகளோடு கைவிரலைச் சொடுக்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டே படுக்கை அறையிலிருந்து
வெளிவரும் போது, வீடு பெருக்கி, பினாயில் தண்ணீரால் தரையை மெழுகி, பாத்ரூமில்
பாத்திரங்களை அலம்பி, டர்க்கி டவலால் அவற்றைத் துடைத்து சமையலறை ஷெல்ப்களில்
அழகாய் அடுக்கி வைத்திருப்பாள்.
அப்புறம், கதவு இடுக்கில் பேப்பர்காரன் உள்ளே செருகி வைத்திருக்கும் மடிப்புக் கலையாத இங்கிலீஷ் பேப்பரைக் குனிந்து எடுத்துத் தூசு தட்டி டீப்பாயின் மீது வைப்பாள். சில சமயம், அவள் ஒருவித ஆவலோடு முன்பக்கத்தில் பெரிசாய்ப் புகைப்படம் ஏதாவது வந்திருந்தால், பேப்பரை முகத்திற்கெதிராகப் பிடித்தபடி, சிலகணம் உறுப் பார்ப்பாள். சுலோசனா அதைக் கவனித்து விட்டு, “என்ன கண்ணம்மா, இங்லீஷ் பேப்பர் படிக்கிறியா?” என்று கிண்டலாகக் குரல் கொடுத்தால், உடனே வெட்கத்துடன் அதை டீப்பாயின் மீது அவசரமாய் வைத்து விட்டு, “ஆமா, நான் தமிழ் படிச்சு வாழ்ந்தேன், இப்ப இங்கிலீஷ் படிக்க..” என்று ஒரு விரக்திச் சிரிப்புடன் அலுத்துக் கொள்வாள்.
அப்புறம், கதவு இடுக்கில் பேப்பர்காரன் உள்ளே செருகி வைத்திருக்கும் மடிப்புக் கலையாத இங்கிலீஷ் பேப்பரைக் குனிந்து எடுத்துத் தூசு தட்டி டீப்பாயின் மீது வைப்பாள். சில சமயம், அவள் ஒருவித ஆவலோடு முன்பக்கத்தில் பெரிசாய்ப் புகைப்படம் ஏதாவது வந்திருந்தால், பேப்பரை முகத்திற்கெதிராகப் பிடித்தபடி, சிலகணம் உறுப் பார்ப்பாள். சுலோசனா அதைக் கவனித்து விட்டு, “என்ன கண்ணம்மா, இங்லீஷ் பேப்பர் படிக்கிறியா?” என்று கிண்டலாகக் குரல் கொடுத்தால், உடனே வெட்கத்துடன் அதை டீப்பாயின் மீது அவசரமாய் வைத்து விட்டு, “ஆமா, நான் தமிழ் படிச்சு வாழ்ந்தேன், இப்ப இங்கிலீஷ் படிக்க..” என்று ஒரு விரக்திச் சிரிப்புடன் அலுத்துக் கொள்வாள்.
சுலோசனாவுக்குக்
கண்ணம்மா மீது அனுதாபம் வரும். தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்ற ஆதங்கமும்
வேதனையும் கண்ணம்மாவுக்கு நிறையவே இருந்தன. ஒரு குக்கிராமத்து விவசாயக் குடும்பச்
சூழலில், பள்ளிப் படிப்பு பற்றிய எந்த அக்கறையும் யாருக்கும் இருக்கவில்லை. ஏழு
வயசிலிருந்து பதினாறு வயசு வரைத் தலையில் சும்மாடு கட்டி, வயற்காட்டில் வேலை
செய்யும் அப்பனுக்குச் சோறு சுமந்தவள், அதன் பின் கல்யாணம் ஆகிப் புருஷன்காரனுக்குச்
சோறு சுமந்தாள். அவளது இளமைக் காலம் அப்படித்தான் எந்தவித சுவாரஸ்யமும் இன்றிக்
கழிந்திருந்தது. எப்போதாவது டவுன் பள்ளிக் கூடத்து யூனிஃபார்ம் போட்ட பள்ளிக் கூடத்துப் பையன்களைப் பார்த்து ஏக்கப்
பெருமூச்சு விடுவதோடு சரி.
ஒருநாள்
மத்தியானம் சாப்பாடு எல்லாம் முடிந்து, குழந்தையைத் தூங்கப் பண்ணி விட்டு, கூடத்து
மொசைக் தரையின் வழுவழுப்பை ஸ்பரிசித்த படி, சுலோசனா ஒருக்களித்துப் படுத்துக்
கொண்டே கண்ணம்மாவின் பழைய கதைகளைக் கிளறிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் தள்ளிக்
கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு. சுலோசனா பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள்
கண்ணம்மா. “அதை ஏம்மா கிளர்றீங்க? படிப்பறிவு இல்லாத மனுசாளுக.. உப்புச்
சப்பில்லாத வாழ்க்கை. வயலு, வரப்பு, களத்துமேடு, கேப்பங்கூழு.. இதான்
பொளுதன்னியும் வாழ்க்கை...” என்று அலுத்துக் கொண்டாள்.
சுலோசனா சொன்னாள்:
“நான் நகரத்துலேயே வளர்ந்தவ. கிராமத்தைப் பத்தி, எல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது.
ரொம்பச் சின்ன வயசுல, அப்பாவோட பூர்வீகக் கிராமத்துக்குப் போன ஞாபகம். அப்பாவோட
பெரியப்பா ரயில்வே ஸ்டேஷனுக்கு டயர் வண்டி அனுப்பிச்சிருந்தார். அப்பல்லாம் டயர்
வண்டி வச்சிருந்தா, இப்பக் கார் வச்சிருக்கிற மாதிரி. கிராமங்களுக்கெல்லாம்
எலக்ட்ரிசிட்டி வராத காலம். வீட்டு வாசல்ல ஒரு பெரிய புளிய மரமும் வைக்கோல் போரும்
இருக்கும். பக்கத்துலயே மாட்டை அவுத்துத் தனியாக் கட்டிப் போட்டு வண்டி மட்டும்
சாச்சு வச்சிருக்கும். ஆறு மணி வரைக்கும் அந்த வண்டி மேல ஏறிக் குதிச்சு வெளயாடுவோம்.
உன்னை மாதிரியே எங்க கிராமத்துத் தாத்தா வீட்டுலயும் ஒரு நல்ல வேலைக்காரி இருந்தா.
அவ பேரு கூட எனக்கு இப்ப மறந்து போச்சு. அவ, அந்த வண்டிக்குள்ள எங்களுக்குச் சரியா
உக்காந்துக்கிட்டுக் கதை எல்லாம் சொல்வா. நாங்க அரைக் கண்ணைத் திறந்து வைக்கப்
போரையும் புளிய மரத்தையும் பாப்போம். வெளிச்சம் மங்கி இருட்டுப் பரவப் பரவ அந்தப்
புளிய மரமும் வைக்கப் போரும் ரெண்டு பிசாசு நிக்கற மாதிரித் தெரியும். நாங்க
வண்டியிலிருந்து கீழே குதிச்சு ஒரே ஓட்டமா உள்ள ஓடுவோம். அவ எங்களத்
துரத்திக்கிட்டே, “கதையை முழுசாக் கேளுங்கடி பொண்டுகளா..”ன்னு கத்திக்கிட்டு ஓடி
வருவா. “ஏண்டி, கொழந்தைங்க கிட்ட எந்த நேரத்துல எதைச் சொல்றதுன்னு தெரியாதா? நாலு
எழுத்துப் படிச்சிருந்தா இல்ல நல்ல விஷயம் வாயில் வரும்? களிமண்ணு..” அப்படீன்னு
தாத்தா அவளைத் திட்டுவாரு. ஆனா அவ அதுக்கெல்லாம் முகம் சுளிக்கவே மாட்டா.
கண்ணம்மா. .உனக்கும் அவளுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. அவ, உன்னை மாதிரித்
தனக்கு எழுதப் படிக்கத் தெரியலையேன்னு எப்பவுமே கவலைப் பட்டதே இல்லை...”
கண்ணம்மா சுலோசனா
பேசியதை ஆர்வமாய்க் கேட்டபடி இருந்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமால் எதையோ
யோசித்தபடி,ப் படுத்திருந்தாள். ”என்ன தீவிரமான யோசனை?” என்று கேட்டு விட்டு,
சுலோசனா எழுந்து போய் ரெகுலேட்டரைத் திருகி மின் விசிரியின் வேகத்தைக் கொஞ்சம்
குறைத்துவிட்டு வந்து, சோபாவின் மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். கண்ணம்மாவும்
இப்போது மரியாதை கருதி, எழுந்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள்.
“அம்மா, நான்
நாலெழுத்துப் படிக்கலயேன்னு வருத்தப் படறதுக்கு ஒரு காரணம் உண்டு. பூர்வீகத்துல
எங்கப்பாவுக்குக் கொஞ்சம் நெலம் இருந்தது. யாரு கிட்டேயும் கையேந்தி நின்னு சீவனம்
பண்ணத் தேவையில்லாத அளவுக்குன்னு வச்சுக்குங்களேன். மிராசுதாருப் பய, இவருக்குப்
படிக்கத் தெரியாதுங்கறதைப் பயன் படுத்திக்கிட்டு, இவரை நல்ல ஏமாத்தி இவரோட நிலத்தை
வாயில போட்டுக்கிட்டான்.”
கண்ணம்மாவின்
முகத்தில் சோகம் தெரிந்தது. இப்போது சுலோசனா ஆர்வமும் அனுதாபமும் கலந்த குரலில்,
“இது எப்படிக் கண்ணம்மா நடந்தது?” என்று கேட்டாள்.
கண்ணம்மா
தொடர்ந்தாள்: “எங்கூரு மிராசுதாரு இருக்கானே, அவன் நம்ம சினிமாவுல வர்ற
மிராசுதாருங்க மாதிரியே ரொம்பவும் அயோக்கியன். என்னென்னமோ தில்லுமுல்லுப் பண்ணி
ஊருல இருக்குற முக்கால் வாசி நிலத்தை எப்படியோ வளைச்சிப் போட்டிருந்தான். எல்லாம்
பினாமி பேருல தான். எங்கப்பாரு நிலம் மட்டும் நடுவுல மாட்டிக்கிச்சு. ஒரு நாள்
வீடு தேடி வந்து ‘அந்த நிலத்தை ஒரு வெல போட்டுக் கொடுத்திடுங்கண்ணே, நான்
வாங்கிக்கறேன்’ன்னு ஒரு அடிமாட்டு வெலக்குக் கேட்டான். ‘சோறு போடற பூமா தேவியை
யாருக்கும் விக்க மாட்டேன். போடா’ன்னு எங்கப்பா வீராப்பா அவனை வெரட்டி
அடிச்சிட்டாரு. ஆனா, அந்த வீராப்பெல்லாம் எனக்குக் கண்ணாலம்னு வந்தப்போ எங்கியோ
பறந்து போச்சு. கண்ணால செலவுக்கு ஒரு அய்யாயிரம் கொறைஞ்சிது. அந்த வருசம், பருவ
மழை தப்பிப் பயிரெல்லாம் காஞ்சு கருவாடாப்
போன நேரம். தெரிஞ்சவங்க யாராரு கிட்டயோ கேட்டும் பணம் பொறளல. கடைசியில
சாட்சிக்காரன் கால்ல உளுவறக்குப் பதிலா சண்டைக் காரன் கால்லே உளலாம்னு
பொலம்பிட்டு, அந்த மிராசு கிட்டயே போயி, ‘பூமிய அடமானமா வச்சுக்கிட்டு அய்யாயிரம்
கொடுங்க. அடுத்த வெள்ளாமையில திருப்பிக் கொடுத்துடறேன்’ன்னு வெக்கமில்லாமக்
கேட்டாரு.”
“சோறு போடற
பூமா தேவிய விக்கக் கூடாதுன்னு சொன்ன அப்பாவா..” என்று ஆச்சரியமாய் இடை மறித்தாள்
சுலோசனா.
“விக்கத் தான்
கூடாது. அடமானம் வைக்கலாமே. பூமா தேவி வெறும் மண்ணு தானே. பொஞ்சாதி இல்லையே. ஆனா,
காசுமொடைன்னு வந்தா கட்டின பொஞ்சாதியையே அடமானம் வைக்கும்மா நம்ம படிப்பறிவு
இல்லாத பாமர சனம். எல்லாம் கெட்ட நேரம் தான். அடகு வச்சது கூடப் பெரிய தப்பாப் படல
எனக்கு. ஆனா, பத்திரத்துல என்ன எளுதியிருக்குன்னு தெரியாமலேயே இது கை நாட்டு
வச்சுதே, அந்தக் கண்றாவிய எங்க போயிச் சொல்ல? மிராசுதாரு வாசிச்சுக் காட்டினது
ஒண்ணு. ஆனா, அதுல அவன் எழுதிக்கிட்டது வேற ஒண்ணு. நிலம் முழுசையும் தனக்கே
வித்துப் பணம் வாங்கிக் கிட்டதா அவன் அதுல எழுதி இருந்தானாம். இதுக்குத் தான்
எழுதப் படிக்கத் தெரியாதே. ஊருப் பெரிய மனுசன் வாசிச்சுக் காட்டினது சரியா
இருக்கும்னு நம்பிடுச்சு..”
சுலோசனாவுக்கே
இப்போது அசாத்தியக் கோபம் வந்தது. “இது என்னடீ அக்கிரமமா இருக்கு. இவருக்குத் தான்
படிக்கத் தெரியாதுன்னா, ஊருல படிக்கத் தெரிஞ்சவங்க யாருகிட்டயாவது காட்டி என்ன எழுதியிருக்குன்னு
கேட்டிருக்கலாம் இல்ல..”
“பக்கத்துலேயே
ஊருக் கணக்குப் புள்ளையும் இருந்துருக்கான். எல்லாம் சரியாத் தான் இருக்குன்னு
அந்தப் பரதேசிமவனும் சொல்லியிருக்கான். எல்லாம் கூட்டுக் களவாணிங்கம்மா. இந்த
அறிவு கெட்ட மனுசனுக்குத் தான் புத்தி எங்க போச்சு? நிலம் கை நளுவிப் போச்சு.
கோர்ட்டு, கேசுன்னு போவறதுக்குக் கையில துட்டும் இல்ல. அப்புறம், குய்யோ
முறையோன்னு புலம்பி நடுத்தெருவுல நின்னு மண்ண வாரி இறைச்சதோட எல்லாம் முடிச்சு
போச்சு.”
கண்ணம்மாவின்
கதை சுலோசனாவை ரொம்பவே உலுக்கி விட்டது. இப்படியுமா ஒரு மனுஷன் ஏமாற முடியும்?
கண்ணம்மாவின் அப்பாவுக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால், இப்படி
ஏமாந்து போயிருப்பாரா? படிப்பு, மனிதனுக்கு எத்தனைப் பெரிய பாதுகாப்பு, கவசம்.. கண்ணம்மாவின்
அப்பாவுக்கு இது ஏன் புரியாமால் போனது? அந்த மனிதர் தான் படிக்காமல் போனதோடு, தன்
சந்ததியையும் அல்லவா படிப்பறிவின்றிக் கெடுத்து விட்டிருக்கிறார்? ஆனால் கண்ணம்மா
தன் இழப்பை நன்கு உணர்ந்திருக்கிறாள். தனது இழப்பு வெறும் நாலு ஏக்கர் நிலம்
இல்லை. அதற்கும் மேல் ஏதோ ஒன்று என அவள் உணரத் தொடங்கி இருக்கிறாள். வாழ்வின்
வெறுமையைப் படிப்பினால் நிரப்பி விட முடியும் என்று அவளுக்குத் தோன்றி இருக்கிறது.
ஆனால் காலம் கடந்த ஞானம்...வெறும் பஸ்ஸையோ ரயிலையோ தவற விட்ட இழப்பா அது?
சுலோசனா ஒரு
முடிவுக்கு வந்தாள். “கண்ணம்மா, தினமும் நான் சாயங்காலம் பள்ளிக் கூடம்
முடிஞ்சவுடனே உனக்கு ஒரு மணி நேரம் எழுதப்
படிக்கக் கத்துத் தரப் போறேன். உன்காப்பா பண்ணின தப்பை நீயோ வேற யாரோ
வாழ்க்கையில மறந்தும் கூடப் பண்ணிடக் கூடாது. என்ன சொல்றே?” என்று ஆவேசமாய்க்
கேட்டாள்.
கண்ணம்மாவின்
கண்களில் ஓர் ஒளிப்பொறி தெறித்தது. “நெசம்மாவா சொல்றீங்கம்மா? இத்தனை
வயசுக்கப்புறம் எனக்குப் படிப்பு வருமா?”
“எல்லாம்
வரும். மனசுல முதல்ல வைராக்கியம் வேணும். படிப்புக்கும் வயசுக்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது.” என்றவள், “நாளைக்கு நான் ஸ்கூல்லேருந்து வரப்போ ஒரு
சிலேட்டும் அரிச்சுவடிப் புஸ்தகமும் வாங்கிக்கிட்டு வருவேன். நீ ரெடியா இரு. நாளையிலேருந்து
உனக்கு தினமும் சாயங்காலம் ஒரு மணி நேரம் ட்யூஷன். உன் புருஷன் கிட்ட தினமும்
இனிமே ஒரு மணி நேரம் லேட்டாத் தான் வருவேன்னு சொல்லிடு.” என்று தீர்க்கமாய்ச்
சொன்னாள்.
சுலோசனா ஒரு மெட்ரிக்குலேஷன்
பள்ளியில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதமே ஆகி இருந்தது.
பம்பாயில் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் நாலைந்து வருஷம் வேலை பார்த்துக் கைநிறைய சம்பளம்
வாங்கிக் கொண்டிருந்தவள், கணவன் சென்னைக்கு வர நேரிட்டதால் அந்த வேலையை விடும்படி
ஆகிவிட்டது. இங்கே வந்த பின்னும் அவள் வேலைக்குப் போவது அவசியமாய் இருந்தது.
புதிதாய் வாங்கிய Flat–க்காக ஒன்றரை லட்சம் வரை கணவன் தன் கம்பெனி மூலமாகக் கடன்
வாங்கிருந்தான். மாதம் ஏறக்குறைய இரண்டாயிரம் ரூபாய் வரை வீட்டுக் கடனுக்காகக்
கட்டவேண்டி இருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொள்கிற பிரச்சனையும்
கண்ணம்மா கிடைத்ததின் மூலம் தீர்ந்து விட்டதால், பக்கத்திலேயே இருந்த ஒரு பெரிய
இங்கிலிஷ் மீடியம் பள்ளிக்குக் கணித ஆசிரியை வேலைக்கு மனுப்போட்டாள். நிறையப்
பள்ளிகளில் சம்பளம் படுகேவலமாக இருந்ததால் அவற்றில் சேர மனம் வரவில்லை. இந்தப்
பள்ளி மட்டும் அரசாங்க சம்பளம் என்று விளம்பரம் செய்திருந்ததால் அவள் ஒத்துக்
கொண்டு வேலைக்கு சேர்ந்தாள்.
நாளைக்குத் தான் முதல் மாத சம்பளம் வாங்க
வேண்டும். ஒரு முதுகலைப் பட்டதாரி ஆசிரியரின் அடிப்படை சம்பளம், அதுற்குமேல்
சமீபத்திய பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி இத்தியாதி எல்லாம் சேர்ந்து நாலாயிரத்துக்கு
மேல் வரவேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தாள். கடனுக்கான பிடித்தம் போக,
கணவன் கொண்டு வருகிற மூவாயிரத்தைந்நூறோடு இதையும் போட்டால் தான் சற்றுத்
தாரளாமாகச் செலவு செய்ய முடியும். குழந்தைக்கு முணுக்கென்றால் உடம்புக்கு வந்து விடுகிறது.
இப்போதெல்லாம், குழந்தைக்கு மூக்கொழுகுகிறது என்று டாக்டரிடம் போனால் கூட முன்னூறு
ரூபாய்க்கு மருந்து எழுதித் தருகிறார்கள்.
மறுநாள் பள்ளிக்கூடம் கிளம்புகிற போது,
இன்றைக்கு முதல் சம்பளத்தில் வாங்குகிற முதல் பொருள், கண்ணம்மாவுக்கு
எழுத்தறிவிப்பதற்கான சிலேட்டும் அரிச்சுவடிப் புத்தகமுமாகத்தான் இருக்க வேண்டும்
என்று தீர்மானித்துக் கொண்டாள். அந்தப் பொருள்கள் விலையில் அற்பமானவையாக
இருந்தாலும் அவற்றின் மூலம் சாதிக்கப்போகிற லட்சியம் எத்தனை அற்புதமானது என்று
நினைத்தபோது மனசு முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது.
பஸ்ஸைப் பிடித்துப் பள்ளிவாயிலில் நுழைகிற
போதும் சுலோசனாவின் மனம் லேசாகவே இருந்தது. வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப்
போடுகிற போது, கூட வேலை பார்க்கிற கல்யாணி டீச்சர் குட்மார்னிங் சொன்னாள். “என்ன
சுலோ.. புடவை புது டிசைனா இருக்கே. எங்க வாங்கினீங்க...” என்று கேட்டாள். பதில்
சொல்லாமல் முகத்தில் புன்னகையை வலிய வரவழைத்துக் கொண்டாள். இவள் இது வரைக்கும்
புடவை, நகை சமாசாரங்களைத் தவிர வேறு அகடமிக்காக எதையுமே பேசக் கேட்டதில்லை.
சுப்புலட்சுமி
மிஸ் சுலோச்சனாவைப் பார்த்து முறுவலித்தாள். “இன்னிக்குத் தானே முதல் சம்பளம்? அப்படியே
கொண்டு போய் ஆம்படையானிடம் கொடுத்துடாதே. சங்கரா ஹால்ல பூனம் சாரிஸ் எக்சிபிஷன்
போட்டுருக்கான். எல்லாம் பாதி வெல. நறுக்குன்னு நாலு வாங்கிண்டு போ. வேணும்னா
நானும் வரேன்...” என்று காதருகில் கிசுகிசுத்தாள். சுலோசனா மறுபடியும் கோபத்தைக்
கட்டுப் படுத்திக் கொண்டு சிரித்து வைத்தாள்.
ஆரம்ப மணி
அடிப்பதற்கு இன்னும் ஐந்து நிமிஷம் இருந்தது. அக்கவுண்டன்ட் மேஜையைச் சுற்றி
சம்பளக் கவரை வாங்கிக் கொள்வதற்காக நிறையப் பெண்கள் நின்று கொண்டிருக்கவே, முதல்
பீரியட் முடிந்து ஓய்வாக இருந்த இரண்டாம் பீரியடில் அக்கவுண்டன்டிடம் போனாள்.
அநேகமாக எல்லாரும் வாங்கிக் கொண்டு போய் விட்டனர்.
“என்னம்மா,
முதல் சம்பளம் வாங்கறீங்க. முதல் ஆளா வராமக் கடைசியா வரீங்களே. காசு விவகாரத்தை
இல்ல முதல்ல முடிக்கணும்?” என்று சிரித்துக் கொண்டே அவளுடைய சம்பளக் கவரை
எடுத்துக் கையில் கொடுத்தார் அக்கவுண்டன்ட்.
எதுவும்
சொல்லாமல் சுலோசனா கவரைப் பிரித்துப் பணத்தை எண்ணத் தொடங்கினாள். பணத்தை எண்ணி
முடித்தவுடன் சுலோசனாவின் முகத்தில் ஏமாற்றம் பரவி இருந்தது. மேஜை மீது விரித்துக்
கிடந்த சம்பளப் பதிவேட்டில் அவளது பெயருக்கு நேராக, ரெவின்யூ ஸ்டாம்புக்குப்
பக்கத்தில் எழுதியிருந்த தொகையைப் பார்த்தவுடன் ஏமாற்றம் அதிர்ச்சியாக மாறியது.
முகம் சட்டென்று சிவந்தது. “என்ன சார் இது, கவர்ல ரெண்டாயிரம் தான் இருக்கு? ஆனா,
லெட்ஜர்ல நாலாயிரத்து ஐந்நூறுன்னு எழுதியிருக்கீங்க?”- குரலில் பதட்டம் வந்தது.
அக்கவுண்டன்ட்
தலை குனிந்த படி இருந்தார். “ஏம்மா, வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம் ஆகுது. மத்த
டீச்சர் யாரும் இதப்பத்தி உங்ககிட்ட எதுவுமே சொல்லலியா?”
“எந்தெந்தக் கடையில
புடவை, மேட்சிங் பிளவுஸ் எல்லாம் வாங்கலாம்னு சொன்னாங்க... ஆனா, நான் கேட்டதுக்கு
நீங்க இன்னும் பதிலே சொல்லல. கவர்ல ஒரு அமௌண்டை வச்சிட்டு, ரிஜிஸ்டர்ல இன்னொரு
அமௌண்டை எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்றீங்களே..அது என்ன விஷயம்னு கேட்டேன்..”
அக்கௌன்டன்ட்
இப்போது அவளை நேருக்கு நேர் பார்த்தார். “இந்தப் பள்ளிக்கூடத்துல இதாம்மா வழக்கம்.
நெறையப் ப்ரைவேட் பள்ளிக்கூடங்கள்ள இப்படித்தாம்மா நடக்குது. கையில ஒரு தொகை
கொடுப்பாங்க. ரிஜிஸ்டர்ல இன்னொரு தொகை எழுதிப்பாங்க. அதெல்லாம் ஒரு
அட்ஜஸ்ட்மென்ட். ஆடிட்டிங்ல கவர்ன்மென்ட் சம்பளம் கொடுக்கறதாக் கணக்குக்
காட்டுவாங்க. மூணு வருஷத்துக்கு ஒரு தடவை ரெகக்னிஷன ரினியூ பண்ண அப்பளை பண்றப்போ
கவர்ன்மென்ட் சம்பளம் கொடுக்கறதாக் காட்டணும்.”
“ஆனா,
விளம்பரத்துல கவர்ன்மென்ட் சம்பளம்னு தானே போட்டுருந்தது? இன்டர்வ்யூல கூட
இதப்பத்தி ஒண்ணும் சொல்லலியே. நான் உங்க கரெஸ்பாண்டென்ட் கிட்டயே பேசிக்கறேன்..”
“கரெஸ்பாண்டென்ட்
ஊருல இல்லம்மா. குடும்பத்தோட சிங்கப்பூர் டூர் போயிருக்காரு, வர்றதுக்குப் பத்து
நாள் ஆகும். நல்லா யோசிச்சு முடிவு பண்ணிக்குங்க. அவரு வந்தாலும் ஒண்ணும் ஆவப்
போறதில்ல. நியாய அநியாயங்களப் பத்தி இந்தக் காலத்துல யாரும்மா கவலைப்படறாங்க?”
பீரியட் மணி
அடித்து விட்டது. சுலோசனா கோபமாக சம்பளக் கவரை மேஜை மீது போட்டாள். “அதெல்லாம்
எனக்குத் தெரியாது, சார். டோன்ட் ட்ரீட் மி அஸ் அன் இல்லிடரேட். இந்த ஃப்ராடுல
எல்லாம் என்னாலக் கையெழுத்துப் போட முடியாது.” என்று தீர்மானமாகச் சொன்னாள்.
அக்கவுண்டன்ட்
வெலவெலத்துப் போனார். “என்ன டீச்சர், உங்களோட பெரிய வம்பாப் போச்சு... ரொம்ப ‘ஐடியல்பர்ச’னா
இருப்பீங்க போலருக்கே... ஒண்ணும்
அவசரமில்ல. நிதானமா யோசியுங்க. உங்க ஹஸ்பண்டைக் கன்சல்ட் பண்ணுங்க. அப்பறமா ஒரு
முடிவெடுங்க... இப்பக் கிளாஸுக்குப் போங்க...” என்றபடி கவரை எடுத்து மேஜை
டிராயருக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே குனிந்து
எதையோ எழுதத் தொடங்கினார்.
சுலோசனா கனத்த
மனசோடு வகுப்புக்குப் போனாள். காலையில் வரும்போது அத்தனை லேசாக இருந்த மனசு
அதற்குள் எப்படி இத்தனைக் கனமாயிற்று என்று நினைத்தாள். வகுப்பில் பாடம்
நடத்துவதில் மனம் செல்லவில்லை. ஒரு சமன்பாட்டைக் கரும்பலகையில் எழுதி, இடதுபக்கம்
வலது பக்கத்திற்குச் சமம் என்று நிரூபிக்கச் சொல்லிவிட்டு நாற்காலியில் மௌனமாக
உட்கார்ந்து கொண்டாள். லேசான சலசலப்போடு வகுப்பு சமன்பாட்டில் மூழ்கியது. சற்று
நேரம் கழித்து, ஒரு மாணவன் மட்டும் நோட்டுப் புத்தகத்தோடு தயங்கித் தயங்கி அவளிடம்
வந்தான்.
“என்ன ப்ரூவ்
பண்ணிட்டியா?” என்று குரலில் சுரத்தில்லாமல் கேட்டாள் சுலோசனா.
அவன்
சொன்னான். “எவ்வளவு தடவை ட்ரை பண்ணினாலும், ப்ரூஃப் கெடைக்கவே மாட்டேங்குது மிஸ். ஐ தின்க், தி ஈக்வேஷன் மே பீ பால்ஸ்...”
சுலோசனாவுக்கு
இப்போது அசாத்தியக் கோபம் வந்தது. பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள். “ஹவ்
டாரிங், டு டாக் லைக் திஸ்? ஈக்வேஷன்ஸ் நெவர் ஃபெயில்.. உனக்குப்
போடத் தெரியலேன்னு சொல்லு...’” என்று கத்தினாள். வகுப்பே
அவள் கோபத்தைக் கண்டு ஆடிப்போன மாதிரி
இருந்தது. இந்த ஒரு மாதத்தில் அவள் அப்படிக் கோபப்பட்டு அவர்கள் பார்த்ததில்லை.
ஆனாலும், ‘இந்தப் பையன் ரொம்பவும் தான் அதிகப்பிரசங்கி. இவனுக்கு இது நன்றாக
வேண்டும்.” என்று வகுப்பில் நிறையப் பேர் நினைத்துக் கொண்டார்கள்.
மதிய உணவு இடைவேளையின் போது, சுலோசனா பள்ளிக்கு
வெளியே வந்து எதிர்த்தாற் போலிருந்த ஒரு பப்ளிக் பூத்திலிருந்து தன் கணவன் அலுவலகத்துக்குப்
போன் பண்ணினாள். அவன் தான் போனை எடுத்தான். இவள் படபடப்பு அடங்காத குரலில்
எல்லாவற்றையும் விவரித்தாள். இப்போதைக்குத் தனக்கு மூன்று வழிகள் தான் இருப்பதாக
அவனிடம் சொன்னாள். ஒன்று: தனக்கு நியாயமாய்ச் சேர வேண்டிய நாலாயிரத்து ஐந்நூறைத்
தரும்படி நிர்வாகத்திடம் கேட்பது. இரண்டு: கையில் தருகிற உண்மையான தொகையையே
ரிஜிஸ்டரிலும் எழுதச் சொல்லிப் பின் கையெழுத்திடுவது. மூன்று: இரண்டுமே சாத்தியம் இல்லை என்றால் வேலையை ராஜினாமா
செய்துவிடுவது.
சுலோசனாவின் புருஷன் அந்தப்புறம் ரொம்ப நிதானமாக
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தான். இவளுடைய படப்படப்பு
எதுவுமே அவனிடம் இருந்ததாகத் தெரியவில்லை. “என்ன பதிலே பேச மாட்டேங்கறீங்க... இந்த
மூணுல எதைச் செயல்லாம், சொல்லுங்க...” என்று சுலோசனா மறுபடியும் படப்படத்தாள்.
அவன்
அமைதியான குரலில் பேசினான், “லுக் சுலோ... இந்த மூணுமே நடக்கப் போறதில்ல. ஏன்னா,
முதல் ரெண்டுக்கும் மானேஜ்மென்ட் நிச்சயம் ஒத்துக்காது. மூணாவதை உன்னால இப்ப இருக்கற
நெலைல செய்ய முடியாது. கொஞ்சம் நெனைச்சுப்பாரு. எனக்கு மாசம் சம்பளத்துல வீட்டுக்
கடனுக்காக ரெண்டாயிரம் ரூபா போயிடுது. உன்னோட இந்த ரெண்டாயிரம் இருந்தா எவ்வளவு செளகரியமா
இருக்கும்னு யோசி. நம்ம கொழந்தையோட மெடிக்கல் பில் மட்டும் எவ்வளவு ஆச்சுன்னு
கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கோ... பை தி வே, டூ தவுஸண்ட் இஸ் நாட் தட் மச் ய பேட்
சாலரி. யூ கான்ட் அஃபோர்ட் டு லூஸ் இட்... பேசாமக் கையெழுத்துப் போட்டுடு...”
சுலோசனா
இன்னும் அதிர்ச்சிக்கு ஆளானாள். அடிவயிற்றில் ஏதோ சங்கடம் செய்தது. “பட் வி ஆர்
நாட் அன்எஜூக்கேட்டட்... கண்ண மூடிட்டுக் கையெழுத்துப் போடறத்துக்கு...” குரல்
கம்மியது. தொண்டை கரகரத்தது. கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. போனின் அந்தப்
பக்கத்தில் அவன் குரலில் திடீரென்று ஒரு கண்டிப்பு தோன்றியது.
“பேசாம நான் சொன்னதைச் செய்யி...”
இவள்
மீண்டும் ஏதோ சொல்வதற்குள் அவன் போனை வைத்துவிட்ட சப்தம் கேட்டது. சுலோசனவுக்குப்
பெரிதாய் அழுகை வந்தது. எல்லார் மீதும் கோபம் வந்தது. யதார்த்தங்களின்
சன்னிதியில், தான் செயலிழந்து போவதை உணர்ந்து அவமானமாயும் இருந்தது. கைக்குட்டையை
எடுத்து முகத்தில் வழிகிற வேர்வையைத் துடைக்கிற சாக்கில், கண்களில் ஊற்றாய்ப்
பெருகும் நீரை யாரும் பார்த்துவிடாமல் ஜாக்கிரதையாய்த் துடைத்துக் கொண்டாள்.
அன்று
மாலை பள்ளி முடிந்து, வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கிற போது அவள்
யாரிடமும் பேசவில்லை. கைப்பையில் அந்த முழுமையற்ற சம்பளக் கவர் கூட கனக்கிற மாதிரித்
தோன்றியது.
மனசில்
என்னென்னமோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. வகுப்பில் அந்தப் பையன் அதிகப் பிரசங்கித்தனமாய்க்
கேட்ட கேள்விக்குத் தான் அத்தனைக் கோபமாய் அவனை அறைந்திருக்க வேண்டாம் என்று
தோன்றியது. அவன் அப்பாவித்தனமாய்க் கூட அப்படிக் கேட்டிருக்கலாம். ஆனால், ஏற்கனவே
நிரூபிக்கப்பட்ட சமன்பாடுகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய்ப்பதில்லை என்பது ஒரு
பக்கம் இருக்க, நிரூபிக்கப்பட்டதாய் நாம் நினைத்துக் கொண்டிருக்கிற வேறு சில
சமன்பாடுகள் பொய்யாகவும் போய் விடலாம்.
பஸ்
ஸ்டாப்பிற்குப் போகிற வழியில் தான் நோட்டுப் புத்தகக் கடை இருந்தது. வாசலில்
விதவிதமாய் சிலேட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. சிலேட்டைப் பார்த்தவுடன் கண்ணம்மாவிடம்
தான் காலையில் கிளம்பும் போது கூறிவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. ஒரு நிமிஷம்
நின்றவள், என்னவோ சட்டென்று உறுத்த, அவற்றை வாங்க மனசு இடம் கொடுக்காமல் பஸ்
நிறுத்தத்தை நோக்கிச் சோர்வோடு நடக்கத் தொடங்கினாள்.
அவள்
பஸ்ஸுக்காகக் காத்திருந்த அத்தனை நேரமும், வீட்டிற்குப் போனவுடனேயே எதிர்ப்படும்
கண்ணமாவுக்கு என்ன பதில் சொல்வது என்பதைப் பற்றியே தீவிரமாய் யோசித்துக்
கொண்டிருந்தாள்.
(கணையாழி- ஜூன், 1996)
No comments:
Post a Comment