Wednesday, May 18, 2011

ஸ்டான்லி கா டப்பா



"தாரே சமீன் பர்" - படத்துக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த படம் சமீபத்தில் வெளியான " ஸ்டான்லி கா டப்பா ".

"தாரே சமீன் பர்" படத்துக்குக் கதை எழுதிய அமோல் குப்தே தான் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். குப்தேவுக்கு இயக்கத்தைப் பொறுத்தவரை இது முதல் படம். "தாரே சமீன் பர்" -இன் பரிமாணங்கள் இந்தப் படத்தில் கிடைக்கவில்லை என்றாலும், இது வேறொரு தளத்தில் நின்று பள்ளிக் குழந்தைகளின் மன நிலையை அணுகுகிறது.

படம் முழுதும் பள்ளிக் குழந்தைகளின் அப்பாவித்தனமும் சின்னச் சின்னக் குறும்புகளும் நிறைந்த யதார்த்தமான வகுப்பறைக் காட்சிகள் அற்புதமாய்க் கண் முன் விரிகின்றன.குழந்தைகளின் சாப்பாட்டு டப்பாக்களில் இருந்து வலுக்கட்டாயமாய் பங்கு கேட்டு வாங்கித் தின்பதையே தினமும் வாடிக்கையாய்க் கொண்டிருக்கும் ஹிந்தி வாத்தியார் பாபு வர்மாவுக்கு (அமோல் குப்தே), டப்பாவே இல்லாமல் வருகிற சிறுவன் ஸ்டான்லி (பார்ததோ குப்தே) புதிராகவும் எரிச்சல் ஊட்டுகிறவனாகவும் தெரிகிறான். தங்களை எப்போதும் சந்தோஷமாய் வைத்திருக்கும் சிறுவன் ஸ்டான்லியோடு தங்கள் டிபன் பாக்ஸ் உணவை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிற மற்ற குழந்தைகள் வர்மாவின் எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகின்றனர்.

ஸ்டான்லிக்கென்று கொண்டு வருவதற்கு டப்பா எதுவும் இல்லை. அவனது டப்பா எப்போதும் காலியாகவே இருக்கிறது. இரவில் ஓட்டலில் குழந்தைத் தொழிலாளியாகவும் பகலில் பள்ளிச் சிறுவனாகவும் இரண்டு முரண்பட்ட எல்லைகளுக்கு நடுவே ஊசலாடும் அவனது சோகம் எந்த மெலோ-டிராமாவும் இன்றி யதார்த்தமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

பார்த்தோ உட்பட இந்தப் படத்தில் நடிக்கும் அத்தனைக் குழந்தைகளும் தொழில் ரீதியான நடிகர்குளுக்குச் சவால் விடுகிற மாதிரி நடித்திருக்கிறார்கள். சிறுவன் பார்த்தோ ஒரு பேட்டியில்,"முதலில் நாங்கள் நடிக்கிறோம் என்றே எங்களுக்குத் தெரியாது.. ஏதோ workshop என்று சொல்லி சனி ஞாயிறுகளில் கூட்டி வந்து பயிற்சி கொடுத்தார்கள். பார்த்தால் கடைசியில் இதுதான் சினிமா என்று சொல்லி விட்டார்கள்.." என்று சொல்லியிருப்பது சுவாரஸ்யமான செய்தி. அது மட்டும் இல்லாமல் "இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் படிப்பு ஒரு நாள் கூடத் தடை படாமல், முழுக்க சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் படமாக்கப் பட்டது" என்று படத்தின் கடைசில் காண்பிக்கப் படுகிறது.
(குழந்தைகளை வைத்து reality show போட்டிகள் நடத்தும் தொலைக் காட்சி ஊடகங்கள் கவனிக்க)

ஏற்கெனெவே சில விமர்சனங்களில் குறிப்பிட்டதையே தான் திரும்பவும் சொல்ல வேண்டி இருக்கிறது. " இந்தப் படத்தில் குழந்தைகள் அசலான குழந்தைகளாக இருக்கிறார்கள்; பெரியவர்கள் அசலான பெரியவர்களாக இருக்கிறார்கள்.."

உங்கள் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும்,கூடவே உங்கள் குழந்தைக்காலத்தை ஓர் இரண்டு மணி நேரம் திரும்பவும் இன்னொரு முறை வாழ்வதற்காகவும் இந்தப் படத்தை அவசியம் எல்லோரும் போய்ப் பாருங்கள்.ஏனென்றால், இந்திய சினிமா வயசுக்கு வந்திருப்பதை மறுபடியும் இந்தப் படம் நிருபித்திருக்கிறது.