Saturday, June 21, 2014

கர்ப்பக்கிரகம்


மண்டபம் முழுக்கவும்  தூசி மண்டிக் கிடக்கு. இந்தக் கல் தூண்ல சாஞ்சிண்டே எத்தனை நாழி தான் தபஸ் பண்றது? அப்படித் தான்  வச்சிண்டா என்ன? எதுவும் பண்ணாம ஒரே இடத்துல உக்காந்துண்டு எதையாவது நினைச்சுண்டு சும்மா இருக்கறது தானே தபஸ்? தபசைக் கலைக்கறதுக்குன்னு வர துஷ்ட தேவதைகள் மாதிரி, இந்த வவ்வால் பட்டாளம் தான் சும்மாப் பறந்து பறந்து வந்து மூஞ்சியிலேயும் முதுகிலேயும் மோதிண்டிருக்கு சனியன். ஆனா இன்னிக்குத் தேவலை. அவ்வளவா இந்தப் பட்டாளத்தைக் காணோம். இருக்கிற ரெண்டொண்ணும் கூரையில் போய்த் தேமேன்னு தலைகீழாத் தொங்கறது. வேடிக்கை தான். அதுகள் கண்ணுக்கு நான் தலை கீழா உக்காந்திண்டிருக்க மாட்டேனா என்ன?

நான் யாரு, நான் எதுக்கு இங்க வந்தேன்லாம் இப்போ சிந்திக்கிறதுல்ல. அதெல்லாம் சிந்திச்சு சிந்திச்சு அலுத்துப் போயிடுத்து. பதில் வராத கணக்கை எத்தனை நாளைக்குப் போட்டுண்டிருக்கிறது? வேதம் படிச்ச பிராமணன் தான் சுவாமி நானும். ‘நான் யாரு’ன்னா என்ன பதில் சொல்றது?  ‘நான் தான் அது’ன்னு சொன்னா உடனே ‘அது யாரு’ன்னு கேக்க மாட்டேளோ? சட்டுன்னு முகவாயைச் சொறிஞ்சிண்டு அதுவும் நான் தான்னு பதில் சொல்லி சாமர்த்தியமா நழுவிக்கறதா பெரிய காரியம்? ஆனா இந்த உருப்படி இல்லாத காரியத்தால யாருக்கு என்ன பிரயோஜனம்? சித்தாந்த ரீதியில ‘அது’வும் ‘நானும்’ என்ன எழவாவது இருந்துட்டுப் போகட்டும். இப்போ லௌகீக ரீதியில நான் யாருன்னு சொல்றேன். லௌகீகம் தான் பிரத்தியட்சம் இல்லையோ?

ஏழு வயசுல எனக்கு பிரம்மோபதேசம் பண்ணி வச்சார் எங்கப்பா சுந்தரேசக் குருக்கள். பத்து வயசுலயே புருஷ சூக்தம் பாராயணம் பண்ணினேன். பதிமூணு வயசுல தேவி சூக்தம். அப்புறம் சௌந்தர்யலகரி...’கதா தத்தே வாணி முக கமல தாம்பூல ரசதாம்’னு பாடம் சொல்றப்போ அப்போ ஏற்படாத பரவசம் பதினாறு வயசுல அதுக்கு அர்த்தம் புரிஞ்சப்போ  ஏற்பட்டது. ‘கிளுகிளுப்பு’ன்னு சொன்னா அபசாரமாப் போயிடுமோன்னு பயந்துண்டு தான் பரவசம்னு சொல்றேன். வெறும் நாமதேயங்கள் லோகத்தை என்ன மாதிரியெல்லாம் வேஷம் போட்டுண்டு ஏமாத்தறது! நெனைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு..

அந்த வயசுல பாக்கறது, கேக்கறது, நெனைக்கறது, எல்லாமே சேப்பா, மிருதுவா, இளமையா இருக்கணும்னு சதா மனசு நிமிஷம் விடாம ஏங்கிண்டிருந்தது. அப்பா சிரத்தையா விடிகாலமே எழுந்து ஆத்துக்குப் போய்க் குளிச்சு நெத்தியிலேயும் மார்லேயும் பட்டைப் பட்டையா ஸ்படிகம் மாதிரி விபூதி இட்டுண்டு ஈரத்துண்டோட கூடத்துல ஸ்ரீருத்ரம் சொல்றப்போ தான், நான் மொட்டை மாடியில சோம்பல் முறிச்சுண்டு எழுந்திருப்பேன். சூரியன் கண்ணை உறுத்தற மாதரி வெள்ளி முலாம் பூசிண்டு கிழக்கு வானத்துல மேல கெளம்பிண்டிருக்கும். பாயைச் சுருட்டி வச்சுட்டு மேலண்டைக் கைப்பிடிச் சுவர் கிட்டப் போயிக் கொஞ்ச நேரம் நிப்பேன்.

மூணாம் தள்ளி, வக்கீல் குமாஸ்தா வீடு ஒண்ணு இருந்தது. அவாத்துக் கொல்லைக் கெணத்துக்குப் பக்கத்துல தட்டி வச்சு நாலாபுறமும் தடுத்து ஒரு அடைப்பு உண்டு. அதுல தான் அவாத்துப் பொம்மனாட்டிகள்லாம் குளிப்பா. அந்த அடப்புக்குள்ள போய் ஒருத்தர் நின்னுண்டா தோள் வரைக்கும் நன்னாத் தெரியும். கொஞ்சம் உயரமா இருந்தா இன்னும் சௌகரியம்! மத்தவா பாக்கற பிரக்ஞை அவாளுக்கு இருக்காது. எனக்கும் அந்த மாதிரி சமயங்கள்ல எந்தப் பிரக்ஞையும் இருந்ததில்ல. 

சந்தனத்துலப் பிடிச்சுக் குழைச்சு வச்ச மாதிரி அத்தனை உயரத்துக்கு மொழுமொழுன்னு குமாஸ்தாவாத்து மாமி- அப்படித்தான் கூப்பிடுவேன்- இங்கேர்ந்து சூரிய கிரணத்துல பளீர் பளீர்னு கண்ணுல  அறையற மாதிரித் தெரிவா. உடனேயே நெத்தி, கை, கால் எல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போகும். என்ன காரணம்னு புரியாமலேயே இந்த வீடு, நிலம், சாப்பாடு, வேத பாராயணம், தட்சிணை, சந்தியா வந்தனம், எல்லாமே அர்த்தமற்றுத் தெரியும். மனசுல ஒரு வெறுமையும் கனமும் வந்து வியாபிச்சுக்கும். ’வெறுமை எப்படிக் கனக்கும்’னு  அறிவு கொழம்பும். சித்த நாழிக்கெல்லாம் “டேய், சீனு, தூங்குமூஞ்சி, எழுந்து வாடா..அப்பா கோயிலுக்குப் புறப்பட்டுப் போயி அரை நாழியாறது”ன்னு கீழே அம்மாவோட குரல் வீடே அதிர்ற மாதிரிக் கேக்கும்.

‘முப்போதும் திருமேனி தீண்டுவார்’னு சுந்தரமூர்த்தி பாடறாரே, அந்தப் பரம்பரை எங்களோடது. இன்னிக்கு நெனச்சிண்டா பெருமைக்குப் பதிலா சிரிப்பு வரது. முப்போதும் திருமேனி தீண்டுவார்’னு தனியா ஒருத்தர் இருக்காளாக்கும்? கல்யாணம் ஆனவா எல்லாருமே முப்போதும் திருமேனி தீண்டறவா’ தான்! அதுவும் குமாஸ்தாவாத்துத் திருமேனி மாதிரி ஒண்ணு கிடைச்சுட்டா?

அப்பாவுக்கு அந்தப் பெருமை எல்லாம் ரொம்ப உண்டு. அவரோட வைதீக நம்பிக்கைகளும் பாரம்பரிய அபிமானங்களும், படிக்கப்பட்ட ஆகம சாஸ்திரங்களும், ‘திருமேனி தீண்டற ஜாதியில, தான் பொறந்ததே ஒரு மகத்தான பூர்வ பலனா அவரை நெனைக்க வச்சிருக்கணும். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. ஒரு தடவை கண்ணுல நீர் தளும்ப, உணர்ச்சி மயமான முகத்தோட அவர் சொன்னார். “கொழந்தே, அம்பாள் கையிலேருந்து முதன் முதலா வேலை வாங்கறப்போ பால முருகனுக்கு ஏன் உடம்பெல்லாம் வேர்த்தது தெரியுமா? வேல் வேறெதுவும் இல்ல. தேஜோ ரூபமான அம்பாளோட திருமேனி தான் அது. அதைத் தொடறது ஜகன்மாதாவோட திருமேனியைத் தீண்டறதாகோதோ? அதான் கொழந்தைக்கு வேர்க்கறது..”

கர்ப்ப கிருகத்துலேருந்து அலங்காரம் எல்லாம் முடிஞ்சு, தீபாராதனைக்காகத் தெரைய விலக்கறப்போ அப்பாவோட முகம், தோள்பட்டை எல்லாம் வேர்வை பாளம் பாளமா வாரி இறைஞ்சிருக்கிற காட்சி எனக்கு உடனே தோணித்து. அப்படீன்னா, மாடி மேலண்டைச் சுவத்துல விடிகாலம் நிக்கறப்போ எனக்கும் என்னத்துக்கு வேர்க்கணும்?

ஒரு வெள்ளிக் கிழமை... அந்த நாள் எனக்கு நன்னா ஞாபகமிருக்கு. அது நடக்கறதுக்கு சித்த நாழி முன்னால வரைக்கும் நான் குருக்கள் பிள்ளைங்கற பிரஞ்ஞை எனக்கே இருந்திருக்குமான்னு நினைச்சுப் பார்த்தா, மலைப்பா இருக்கு. கர்ப்ப கிரகத்துக்குள் நான் அப்பா மாதிரிப் பிரவேசிக்க வேண்டிய ஒரு காலம் வரணும்னோ, மடி ஆசாரத்தோட பயபக்தியா, ஆகமம் பிசகாம பூஜை புனஸ்காரங்களை எல்லாம் தினசரிப் பண்ணனும்னோ நான் ஆசைப் பட்டிருப்பேனாங்கறது கூட சந்தேகம் தான். அந்தக் கருங்கல் சுவர்களுக்குள்ளப் போய்ப் புகுந்துண்டு, எண்ணைச் சிக்கேறின தாத்தா காலத்துத் தெரை ஒண்ணை இழுத்து விட்டுண்டு, உடம்பு புழுங்க அந்தப் பக்கம் நிக்கறதை நெனச்சுப் பாத்து நான் அருவருப்பு கூட அடைஞ்சதுண்டு. நான் மொட்டை மாடியில சூரியோதயத்தும் போது கையைப் பின்னாலக் கட்டிண்டு, சட்டை இல்லாத உடம்போட நின்னுண்டு, உஷத் காலத்துக் காத்து ஜிலுஜிலுன்னு உடம்பெல்லாம் பரவி நெறைய சுதந்திர புருஷனா, தெருவுல கோலம் போடற பொம்மனாட்டிகளைப் பாத்துண்டு நிக்கறப்போ வர்ற சந்தோஷமும் புளகாங்கிதமும் என்னைப் பொறுத்த வரைக்கும் ரொம்பப் பெரிசு. ஆனாலும், அது,  அன்னிக்கு, அப்படி நேர்ந்தது... அப்படியே தான் நேர்ந்தது.

விசுவநாத கனபாடிகள் வேஷ்டி முறுக்குக்கு மேல, கறுப்பு அரணாக்கயிறு தெரியப் பிதுங்கின வயிறோட என் முன்னால் இறைக்க இறைக்க நடந்து வந்தார். நான் ஆத்து வாசல்ல, கரும்பைக் கடிச்சுத் துப்பிண்டே முழங்கை சாறு வழிய நின்னுண்டிருதேன். “அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லயாமே, கொழந்தே?” ன்னு கேட்டுண்டே உள்ள போனார்.

ஓவ்வொரு வெள்ளிக் கிழமையும் அப்பா தான் அம்பாளுக்கு சந்தனக் காப்பு சாத்துவார். தலையிலிருந்து கால் வரைக்கும், அளவெடுத்துப் பூசின மாதிரி, கல்லோட கருமையே தெரியாத மாதிரி அப்படியொரு கைவண்ணம். ராத்திரி, அப்பாவே தான் சந்தனக் காப்பை சுலோகம் சொல்லிண்டே கலைச்சு அபிஷேகம் பண்ணி அம்பாளுக்கு நீல வஸ்திரத்தைச் சாத்தி வர்றது வழக்கம். அன்னிக்குக் காலம்பற கோயிலுக்குப் போயி அலங்காரமெல்லாம் பண்ணி உச்சிக்கால பூஜையையும் முடிக்சுட்டு ஆத்துக்கு வந்ததுமே உடம்பு அனலாக் கொதிக்கப் படுக்கையில விழுந்துட்டார் அப்பா. அரைக் கண்ணத் தெறந்துண்டு, கிருகிருப்பா எதையோ உத்தரத்துல பார்க்கப் பிரயத்தனம் பண்ற மாதிரி மல்லாக்க கிடந்து ‘ஈஸ்வரி, ஈஸ்வரி’ன்னு முனகினார். ‘தினசரிக் கொட்டற பனியில விடியக் காலம்பர பச்சைத் தண்ணியில குளிச்சா ஜுரம் வராம என்ன பண்ணும்?’னு கத்திண்டே அம்மா கஞ்சித் தம்ளரோட சமையல் ரூமுலேருந்து கூடத்துக்கு வந்தா. கனபாடிகள் இடுப்புலேருந்து சுருக்குப் பையை உருவி, “உமக்கு ஒண்ணுமில்லேங்காணும், நாளைக்கே ஜோராயிடுவீர்..”னு சொல்லிண்டு விபூதியை இட்டார். 

அப்பா கண்ணைத் தெறந்து கனபாடிகளைப் பார்த்தார். சிரமப்பட்டு எழுந்து உக்காந்துண்டார். “வெள்ளிக் கிழமையும் அதுவுமா இப்படிப் படுத்துண்டுட்டேன். ராத்திரி சந்தனக் காப்பைக் கலைச்சு, அர்த்த ஜாமம் யாரு பண்ணுவா?”ன்னு மறுபடியும் முனகினார்.  கனபாடிகள் பெரிசாச் சிரிச்சார். எச்சல் கையோட நான் கெணத்தங்கரைக்குப் போறதைப் பாத்துண்டே ‘அம்பாள் காரணமில்லாம உம்மைப் படுக்கையில போடலேங்காணும்”னு எறைஞ்சு சொல்லி அப்பாவுக்கு சூசகமாப் புரிய வைக்கறப்போ, நான் ஒத்தைக் கையில எச்சத் தட்டை ஏந்திண்டு, இன்னொரு கையில வாளிக் கயிற சரசரன்னு வேகமா கிணத்துக்குள்ள விட்டுட்டு, வாளி பளார்னு தண்ணியை அறைஞ்சுண்டு ‘களக் களக்’குன்னு ஜலம் குடிக்கறதை சுவாரஸ்யமாப் பாத்துண்டு நின்னேன்.

என்னோட கர்ப்பகிருகப் பிரவேசம் அப்படித்தான் ஆரம்பமாச்சு. சந்நிதி வாசல்ல இருந்த ஒருத்தர் ரெண்டு பேரும் குங்குமம் வாங்கிண்டு கலைஞ்சு போன பிற்பாடு கனபாடிகள் என்னை உள்ளே போகச் சொல்றார். பயபக்தியோட அலங்காரத்தைக் கலைச்சு, சந்தனத்தை எல்லாம் கால் படாமத் தட்டுல அள்ளி வச்சி ‘ஏண்டா வஸ்திரம் கட்டத் தெரியுமோ?’ன்னு அவர் கேக்கறப்போ, நான் வெக்கப் பட்டுண்டு  சிரிக்கறேன். எண்ணைச் சிக்கேறி அங்கங்கே சுருங்கித் தொங்கற தெரைய ஒரு கையால விருட்டுன்னு இழுத்து விட்டு சந்நிதியை மறைக்கறப்போ, அதிலிருந்த மாடு தானும் கொம்பை ஆட்டிண்டு, உடம்பி சிலுப்பிண்டு குஷியா எழுந்து நின்னுண்ட மாதிரித் தோண்றது.

நான் உள்ளே போறேன். குப்புன்னு முன்னப்பின்னப் பழக்கப் படாத ஒரு புழுக்கம் வந்து உடமபிச் சூழ்ந்துக்கறது. அந்தப் புழுக்கத்தையும் மீறி, ரம்யமா, சுகந்தமா, ஒரு சந்தன வாசனை மூக்குக்குள்ள மெதுவாப் பூர்றது. பின்னாலத் தொங்கற திரையே திடீர்னு சுவரா மாறி, என்னை வெளியுலகத்துலேர்ந்து பேர்த்து எடுத்து, வேற ஒரு சின்ன உலகத்துக்குள்ள கொண்டு வந்து  ஏதோ காரணத்தோட நிக்க வச்சுட்ட மாதிரி இருக்கு. அப்படி இப்படி அசையாம அந்தரத்துல கோடு கிழிச்ச மாதிரி உள்ளே விளக்குலேருந்து ஒரு சுடர் கிளம்பி நிக்கறது. அந்த வெளிச்சச் சிதறல்ல சந்தனக் கலர்ல ஆறடி  உசரத்துக்கு, வாயோட சேப்பும் கண்ணோட கறுப்பும் நெஞ்சுல அறையற மாதிரி எடுப்பாத் தெரிய-ஒரு பொம்மனாட்டி நின்னுண்டு, திடீர்னு என்னைப் பாத்துச் சிரிக்கறா. நேக்கு உடம்பெல்லாம் வேத்துக் கொட்டறது.

‘நித்யானந்த ஹரி...வராபயஹரி...
சௌந்தர்ய சௌந்தர்ய..’

மேலே வரமாட்டேங்கறது. வாய் கொழர்றது. இது என்ன சௌந்தர்யம்..இது என்ன உயரம்..இது என்ன தேஜஸ்...எல்லாத்துக்கும் மீறி ‘இது என்ன ஏகாந்தம்’னு நெனைச்சு ஹ்ருதயம் பலமா அடிச்சுக்க ஆரம்பிக்கறது. இப்படி ஒரு தனிமையில, இப்படி ஒரு சின்ன இடத்துக்குள்ள  இப்படி ஒரு சந்தன வாசத்துல, இதுக்கு முன்னால எந்த ஒரு ஸ்த்ரீயோடயும் இருந்ததில்லையே, இதென்ன விசித்திர அனுபவம்’னு மனசுல ஒரு ஆச்சரியம் மின்னலா வந்து மறைஞ்சு போறது.

நெருங்கிப் போறேன். தாம்பாளத்தைக் கீழ வச்சுட்டு நிமிந்து பாக்கறேன். என் தலை உசரதுக்குத் தோள் தெரியறது. சந்தனம் காஞ்சு லேசாப் பொருக்குத் தட்டத் தொடங்கி இருக்கவே, ஜலத்தைத் தெளிச்சு வழிச்சு எடுக்கறதுக்காகத் தோள்ல விரல வைக்கறேன். திடீர்னு அந்த உதட்டுச் சிரிப்பு பெருசாகி, அதுல அந்த உடம்பே சிரிக்கறது. கைக்கு சந்தனத்தோட ஸ்பரிசம்  மறைஞ்சு போறது. பதிலுக்கு மிருதுவா மொழுமொழுப்பா உஷ்ணமும் குளிர்ச்சியுமா யாரோட உடம்புச் சதையையோ தீண்டின மாதிரி இருக்கு. குமாஸ்தாவாத்து மாமி குறும்புச் சிரிப்புச் சிரிச்சுண்டு, ‘பொம்மனாட்டிகள் குளிக்கற இடத்துக்குள்ள  பூந்துண்டு இதென்ன விஷமம் கண்ணா..’ன்னு செல்லமா சிணுங்கிண்டு நிக்கறா. என் நெஞ்சை ஏதோ வந்து அடைச்சுக்கறது. உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு ஏதோ பரவறது. மொட்டை மாடியிலேருந்து அவ்வளவு உயரத்துலருந்து எப்படித் தைரியமா இவாத்து பாத்ரூம்ல குதிச்சேன்? இது எப்படி நேர்ந்தது? இத்தனை சமீபத்துல இப்படி மேல எதுவுமில்லாம, சேப்பா, கொழையக் கொழைய- கொஞ்சம் கூடக் கூச்சமில்லாம ஒரு ஸ்திரீ பதினாறு வயசுப் பிள்ளையைப் பக்கத்துல வச்சுண்டு நிப்பாளோ?

நிர்த்தூதாகில கோர பாவனஹரி..
பிரத்தியக்ஷ...பிரத்தியக்ஷ....

மாமி தான் சிரிப்பா சிரிக்கறா.

“டேய் இன்னும் என்னடா பண்றே, அலங்காரத்தை கலைக்கவா இத்தனை நேரம்?’னு கனபாடிகள் வெளியிலருந்து கத்தறார். நான் கொழப்பமா இருக்கேன். என்ன நடந்ததுன்னு புரியாம சுத்திப் பாக்கறேன். உடம்பெல்லாம் குமாஸ்தாவாத்து மாமியோட ஸ்பரிசம். எதுத்தாப்பல அந்தப் பொம்மனாட்டி அலங்காரம் கலைஞ்சு இன்னும் எதுவும் நடக்காத மாதிரி சிரிச்சிண்டு நிக்கறா...மார்லேயும் தோள்ளையும் சதை உரிஞ்சி உரிஞ்சி தொங்கறது. உரிஞ்ச சதைக்குள்ள கன்னங்கறேல்னு, கரடு முரடா கல்லா ஒரு ஸ்தூலம் பிதுங்கிண்டு வர்றது.. என் உடம்பெல்லாம் ஒட்டிக் கொண்டது போக கீழெல்லாம் துண்டு துண்டா சதை செதறிக் கிடக்கு. நான் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டுக் காதுக்குப் பக்கத்துல ஜிவ்வுன்னு அனல் அடிக்க, தெரையை ஆவேசமா விலக்கிண்டு, கருங்கல் படியில கால் விரல் மடங்கி விண்ணு விண்ணுன்னு வலிக்க, பைத்தியம் மாதிரி வெளியில ஒடறேன். “டேய், என்னடாது, என்னடாது?”ன்னு பின்னால கனபாடிகளோட குரலோட சேர்த்து இன்னும் யார் யாரோட குரல் எல்லாமோ கேக்கறது. எனக்கு எதுவுமே விளங்கல. உடம்பு சதை எல்லாம் விசித்திரமா உரிஞ்சி, கறுப்பு சரீரத்தோட ஒரு ஸ்திரீ மட்டும் என்னைத் துரத்திண்டே இருக்கா.

அவ்வளவு தான். அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் அனாவசியம் தான். என்ன நடந்ததுன்னு யாரு கிட்டேயும் சொல்ல நான் மறுத்துட்டேன். அல்லது சொல்லத் தெரியல. ஆனா இனிமே எந்த சந்தர்ப்பத்துலேயும் கர்ப்பக் கிரகத்துக்குள்ள இன்னொரு தடவை பிரவேசிக்க மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டேன். என்னத்துக்கு இன்னொரு தடவை பிரவேசிக்கணும்? எல்லார் மாதிரியும் ஒரு காலத்துல நானும் ஒரு கர்ப்பக்கிரகத்துலேருந்தே வெளியேறினவன் இல்லையோ?


-கணையாழி, அக்டோபர்,1989