Tuesday, December 31, 2013

மை ஒற்றும் தாள்

வளைப் பற்றி அந்தத் தெருவில் பல பேர் பல மாதிரிப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவை எல்லாவற்றிலுமே முடிவாக ஒரே அர்த்தம் தான் இருந்தது.

அவற்றை எல்லாம் தான் மட்டும் அந்தத் தெருவுக்கே அந்நியனைப் போல சந்தானம் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர, அவற்றில் அவன் சம்பந்தப்பட எப்போதுமே விரும்பவில்லை.

அந்தத் தெருவில் அவன் வசித்துக் கொண்டிருத்த வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வாடகை வீட்டில் அவள் தங்கி இருந்தாள். பகல் நேரம் எல்லாம் அந்த உள்ளடங்கின வீட்டு வாசல் அறையில் எதையாவது படித்துக் கொண்டோ, அல்லது துணிகளில் ஏதாவது எம்ப்ராய்டரி பண்ணிக் கொண்டோ காணப்படுகிற அவள் இரவு ஒன்பது மணிக்கு மேல் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே போய் விடுவாள்.

அந்த நேரங்களில் எல்லாம், வாசல்களில் காற்றுக்காகக் கயிற்றுக் .கட்டிலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற சாக்கில், பனியன் கூட இல்லாமல் திறந்த மார்புடன் நிறைய ஆண்கள் தன்னைக் கண் கொட்டாமல் கவனிப்பதையும் அவள் லட்சியம் பண்ணுவதில்லை.

சில சமயங்களில் அவள் வீட்டு முன், இரவு எட்டு மணிக்கு மேலே எவனாவது ஒருவன் காரிலோ, ஸ்கூட்டரிலோ வருவான். அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அவள் பகிரங்கமாகவே காரின் முன் சீட்டிலோ, அல்லது ஸ்கூட்டரின் பின்னாலோ  நெருக்கமாய் உட்கார்ந்தபடி, வருகிறவனின் தோளின் மீது சுவாதீனமாய்க் கைகளை அழுத்திக் கொண்டு போவாள்.

“இப்படியொரு அக்கிரமம் தெனம் நடக்குதே.. பாத்துக்கிட்டே இருந்தா எப்படி? மானமுள்ள பொண்டுகள் பரம்பரை பரம்பரையா இருக்கிற தெருய்யா இது. இங்க என்ன கேள்வி முறையே இல்லாம போயிடுச்சா?” என்று நிமிடத்துக்கு ஒருமுறை எழுந்து போய்ப் புகையிலைச் சாற்றை லாந்தர்க் கம்பத்தோரமாய்த் துப்பிக்கொண்டே கோடி வீட்டு நாயுடு வழக்கம் போலவே பேச்சை ஆரம்பிப்பார்.

‘ஹும்! இதல்லாம் நல்லதுகில்லே நாயுடு!” என்று அவரது நண்பர் ஒருவர் அங்கலாய்ப்பார்.

“எல்லாத்தையும் சினிமாப் பாக்குற மாதிரிப் பாத்துக்கிட்டிருந்துட்டு, ‘தேவி’ வெளியில போன பிற்பாடு இப்படிக் கயித்துக் கட்டில் கான்பரன்ஸ் போட்டுக் கத்துவீங்க..” என்பார் இன்னொருவர்.

இப்போது நிறையப் பேர் சிரிப்பார்கள்.

ஏதாவது ஒரு மாலைப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு தன் வீட்டுக் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சந்தானத்தின் காதில் அந்த நேரததில் இந்த இரைச்சல்களும் விமரிசனங்களும் குற்றச்சாட்டுகளும் சிரிப்புகளும் நாராசமாய் விழும். படிக்கிற விஷயங்களில் கவனம் போகாமல் பல சமயங்களில் எரிச்சல் தாளாது முணுமுணுத்துக் கொண்டே உள்ளே கூடத்துக்குப் போய் விடுவான். அங்கு போய் உட்கார்ந்ததுமே அவன் மனைவி புவனா வந்து பிடித்துக் கொள்வாள்.

அந்தப் பெண்ணைப் பற்றி மற்ற பெண்களிடமிருந்து புதிது புதிதாய்த் தான் தெரிந்து கொண்டவற்றை அவனிடம் ஆரம்பிப்பாள். கொஞ்ச நேரத்திலேயே, சலிப்புடன் படுத்த நிலையிலேயே ஈசிச்சேரில் தூங்கி விடுவான் சந்தானம். புவனாவின் வியாக்கியானங்களை எல்லாம் பாவம், நாற்காலி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்!



ப்பும் மந்தாரமுமாய் இருந்த அன்றைக்குக் காலையில் அவன் ஏதோ காரணங்களுக்காக  ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே இருந்த போது, தபால் காரன் வந்து கவர் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனான். அது அவன் மனைவி பெயருக்கு இருக்கவே, அதைப் பிரிப்பதா வேண்டாமா என்று சில வினாடிகள் லேசாய்த் தயங்கி நின்றான். குழாய் அடிக்குப்  போயிருந்த அவள் வம்புதும்புகளை எல்லாம் முடித்துக் கொண்டு வந்து சேர இன்னும் அரை மணியாவது ஆகும் என அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால், கூடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்தக் கவரைப் பிரித்துக் கடிதத்தை வெளியே எடுத்தான்.

புவனா திரும்பி வந்து அவனைக் கடந்த போது, அவனது முகம், உணர்ச்சி, மனநிலை அனைத்தும் வழக்கத்துக்கு மாறாய் இருந்தன. அதை அவள் கவனிக்காததால் நேரே உள்ளே போய்க் குடத்தை வைத்து விட்டுத் திரும்ப வந்தாள். அவள் வருகிறவரை தன் வெறுப்புகளையும் கோபங்களையும் பலவந்தமாய் உள்ளே அடக்கிக் கொண்டு, அவை தன்னையும் மீறிக் கண்கள் வழியாய் அனலாய் வழிகிற நிலையில் சந்தானம் ஈசிச்சேரில் மௌனமாய்க் கிடந்தான்.

புவனா அவன் முன் வந்து நின்று சாப்பிடுவதற்காக அவனை அழைத்தாள். அவன் ஒரு வினாடி, அவள் உருவம் முழுதும் புதிதாக எதையோ தேடுகிறமாதிரி பார்வையினால் ஊடுருவினான். அவள் சங்கடம் கொண்டு நெளிந்து மீண்டும் அவனை அழைத்தாள்.

“எனக்கு முதல்ல ஒரு விஷயம் தெரியணும்...” அவன் குரலில் கடுமை இருந்தது. அவனது நீட்டிய கையில் அந்தக் கடிதம் காற்றில் படபடத்தது. “இதுல நம்ம ரெண்டு பேரோட கௌரவமுமே சம்பந்தப் பட்டிருக்கு..” என்று அவன் வாய் கோபமாய் முணுமுணுத்தது.

அவள் ஒன்றும் புரியாமல் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அதைப் படிப்பதற்காக உள் அறையை நோக்கி நகர்ந்தாள். அவன் கடுமையாய், “நோ..அந்த லெட்டரை இங்கயே படி..” என்று அதட்டிச் சொல்லவே, அவள் அப்படியே நின்று, உடம்பில் இனம் தெரியாத பயமும் படபடப்பும் பரவ அந்தக் கடிதத்தை மெல்லப் படிக்க ஆரம்பித்தாள்.

அதைப் படிக்கப் படிக்க அவள் நெற்றி தெப்பமாய் வேர்க்கத் தொடங்குவதையும் இதயத்தின் துடிப்பு அதிகமாவதையும், கால் விரல்கள் தரையில் பாவாமல் தவிப்பதையும் சந்தானம் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கடிதத்தின் கடைசி வரியை முடித்து, அதை மடித்து விட்டு அவனை நோக்கி நிமிர்கிற போது அவள் முகம் வெகு நேரம் அடுப்பில் இருந்த பால் செம்பைப் போலக் கறுத்துப் போயிருந்ததது. விழிகள் படபடக்க, உடல் நடுங்க அழுகை பெருகும் குரலில் அவள் சொன்னாள்.

“எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே புரியலே. எவனோ ஒரு பாவி வேணும்னே இப்படி எல்லாம் எழுதி இருக்கான்..இவனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் ஒரு பாவமும் அறியாதவ.. என்னை நம்புங்க..”

அவளிடமிருந்து உடைந்து போய்ச் சிதறல்களாய் எழும் சீரற்ற அந்த வார்த்தைகளை முழுவதுமாய்க் கேட்கக் கூடப் பொறுமை இன்றி, அவன் அவளின் பெயரையும் அந்த வீட்டு எண்ணையும் தாங்கி நிற்கும் கடித உறையை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்குகிற போது, நிற்கவும் திராணியற்றுத் தரையில் உட்கார்ந்து விட்ட அவள், அந்த உறையை ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தாள். சற்று நேரம் எதையோ மனசுக்குள் யோசிக்கிறவள் போல் அமைதியாய் இருந்தவள், சட்டென்று குரலில் பரபரப்பை வரவழைத்துக் கொண்டு அவனிடம் சொன்னாள்.

“ஐயோ! இது எனக்கு வந்த லெட்டரே இல்லே. அந்தத் தபால்காரன்-இல்லே, இல்லே- இதை எழுதினவன் ஆறாம் நம்பரைத்தான் தவறுதலா, ஒன்பதுன்னு எழுதியிருக்கான். இது ‘அவ’ளுக்கு வந்திருக்கிற லெட்டர். அவ இந்தத் தெருவிலே இருக்கறதால  என்ன பாதகம்னு ஒரு நாள் கேட்டீங்களே, இப்போ இந்தப் பழியும் பாவமும் நம்ம வீட்டுக்கே வந்து சேர்ந்து, ஒரு பாவமும் அறியாத என்னை நீங்க இப்படி ஒரு கேள்வி கேக்கறமாதிரிப் பண்ணிட்டுதே, பார்த்தீங்களா?” –புவனாவின் குரல் கரகரத்தது. விழிகளில் நீர் நிறைந்து கன்னங்களில் வழியத் தொடங்கியது.

சந்தானம் கேட்டான். “அதை எப்படி அத்தனை திட்டவட்டமாச் சொல்றே?”

அவள் அழுகையினூடே சொன்னாள்: “அவ பேரும் புவனா தான். எனக்குத் தெரியும்...”

சந்தானத்தின் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி நிறைகிற மாதிரி இருந்தது. இதற்கு மேலும் எதுவும் பேசாமல் அவன் அந்தக் கடிதத்தை அவளிடமிருந்து வாங்கி உறையில் போட்டு மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டான். அதைக் கிழித்துத் ‘தலையைச் சுற்றி’ எறிந்து விடவேண்டும் என்று புவனா படபடத்தாள். அவன் நிதானமாய் இப்படி அவளிடம் சொல்லிக் கொண்டே புறப்பட்டான்: “அது நாகரிகம் இல்ல. இதை அவ முகத்துலேயே விட்டெறிஞ்சிட்டு வர்றது தான் முறை..”

முதன்முதலாய் அவள் வீட்டு வாசலை அவன் மிதித்தான். சுற்று முற்றும் பார்த்துச் சற்றுத் தயக்கத்தோடு நிதானித்தான். எக்காரணத்தைக் கொண்டும் தான் அந்த வீட்டிற்குள் அதிக நேரம் தாமதித்து விடக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

கூடத்தில், மேசை முன் அமர்ந்து எதையோ எழுதிக் கொன்டிருந்த அவள், அவன் காலடி ஓசை கேட்டு சட்டென்று நிமிர்ந்தாள். அவள் கண்களில் வியப்பும் திகைப்பும் கலந்த ஒரு விசித்திர உணர்வு அந்தக் கணத்திலேயே மண்டி எழுந்தது. அவனை அவள் அந்த இடத்தில் சிறிதும் எதிர்பார்த்திருக்கவே முடியாத நிலையில், வரவேற்பதில் ஒரு வினாடி குழம்பிப் போனாள்.

சந்தானம், அவளை அத்தனை நெருக்கத்தில் சந்திக்கிற அந்த முதல் தடவையில்-தன்னுடைய ஓரப் பார்வை வழியே ‘இவள் தன் மனைவியை விடவும் அழகாகவே இருக்கிறாள்’ என்று தவிர்க்க முடியாமல் நினைத்தான். 

இதற்குள், அவள் பரபரப்போடு நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அவனை உட்காரச் சொல்லி உபசரித்தாள். அவன் சட்டென்று தன் சட்டைப் பையிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்து அவளிடம் நீட்டியவாறு சொன்னான்:

“நான் இங்கே உக்கார்றதுக்கோ அல்லது வேற எதுக்கோ வரல்ல. இந்த லெட்டர் இன்னிக்குக் காலையிலே என் வீட்டுக்கு வந்ததுல, எனக்கும் என் மனைவிக்கும் நடுவுல முதல் தடவையா ஒரு விபரீதமான பிரச்சனை வந்துடுச்சு.  அது இன்னும் அசிங்கமா வளர்றதுக்கு முன்னால, அவ ஒரு வழியா உண்மையைக் கண்டுபிடிச்சுட்டா. அவ பேரும் உங்க பேரும் என்ன காரணத்தாலயோ ஒண்ணா அமைஞ்சதோட இல்லாம, இந்தக் கவர்ல வீட்டு நம்பர் வேற தலைகீழா மாறி எங்களுக்கு வந்திருக்கு. அதனால தான் இந்தக்  கவரைப் பிரிக்கும் படியா ஆயிடுச்சு..அதுக்காக நான் வருத்தம் தெரிவிச்சுக்கறேன்..”

அவள் இனம் புரியாத கலவரங்களோடு அந்தக் கடித்தை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டாள். அவள் அந்தக் கடிதத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிற போதே அவன் மேலும் இப்படிச் சொன்னான். “இந்த மாதிரிக் கடிதங்கள்லாம்  உங்களுக்குத் தான் வர முடியும்னு என் மனைவி சொன்னா..”

அவள் விரல்கள் நடுங்கின. அவனுடைய இந்தக் கடைசி வார்த்தைகளில் குண்டடி பட்டுச் சிதறிய புறாவைப் போல அவள் துடித்து நின்றாள். பிறகு, தன் புடவைத் தலைப்பால் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, ஒரு கணம் அவனை ஏறிட்டுப் பார்த்து, சிதைந்த குரலில், “ஒரு நிமிஷம் எனக்காக வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்..” என்று கேட்டுக் கொண்டே அந்தக் கடிதத்தோடு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்து போது, அந்தச் சில நிமிடங்களில் அவள் உள்ளே சத்தமேயின்றி அழுதிருக்கிறாள் என்பது அந்த விழிகளின் சிவப்பில் தெரிந்தது. சந்தானத்துக்கு இது வியப்பை அளித்தது. அவள் தலை குனிந்தவாறே, “இதுல நம்பர் மட்டும் தலை கீழாப் போகல..எல்லாமே போயிருக்கு..” என்று மெதுவாய் முணுமுணுத்தாள்.

பிறகு, “இப்படிப் பட்ட கடிதங்கள் எனக்கு மட்டும் தான் வர முடியும்கறது உங்க மனைவியோட கணிப்புப் போலருக்கு.. சரி, அப்படியே இருக்கட்டும். இது எனக்கு வந்த லெட்டர்தான்னு ஒத்துக்கறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. என்னைப் பத்தி இந்தத் தெருவுல யாராரு என்னென்ன பேசிக்கறாங்கன்னு எனக்கும் நல்லாத் தெரியும். எனக்கு அதிலெல்லாம் கொஞ்சங்கூட வருத்தமே இல்ல. நான் ஏன் வருத்தப் படணும்? என்னைப் பத்தி மட்டும் பேச இத்தனை பேரு இருக்காங்கங்கிறதுல நான் சந்தோஷம்னா அடையணும்?” என்றாள். பிறகு, ‘இருங்க.. உங்க முன்னலேயே இந்தக் கவர்ல ‘ஒன்பதை’ ‘ஆறா’த் திருத்திடறேன்...” என்று அவன் காதில் விழுமாறு சொல்லிக் கொண்டே, மேஜை மீதிருந்த பேனாவை எடுத்துக் கவரில் அந்த எண்ணைத் திருத்தினாள்.

அப்படி அவள் திருத்துகிற போதே, பேனாவிலிருந்து மை கொடகொடவென்று கொட்டிக் கவரில் படிந்தது. அவள் உடனே மேஜை டிராயரைத் திறந்து, உள்ளேயிருந்து ஒரு ‘பிளாட்டிங் பேப்பரை’ எடுத்து மை கொட்டிய இடத்தில் வைத்து அழுத்தமாய் மையை ஒற்றி எடுத்தாள்.

சந்தானம் அந்தச் செய்கையை ஒரு வினாடி கவனித்துக் கொண்டிருந்து விட்டு விளையாட்டாய், “பிளாட்டிங் பேப்பர் எப்பவுமே தயாராக் கைவசம் வச்சிருப்பீங்க போலிருக்கு!” என்று சொல்லியபடியே வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவள் குரல் பின்னால் கேட்டது: “ஆமா.. ‘பிளாட்டிங் பேப்பர்கள்’ இருக்கிறது எத்தனை சௌகரியமா இருக்கு! இந்த வெள்ளைப் பேப்பர்ல இப்படி வச்சு ஒத்தி எடுத்திட்டா எல்லா மையும் பிளாட்டிங் பேப்பருக்கு வந்திடுது. ஆனா, நாம எப்பவுமே ‘பிளாட்டிங் பேப்பர்’ மையாறதேன்னு கவலைப் படறதுல்லே..  ஏன்னா, அது, பாவம்,   ஏற்கனேவே மையாத் தானே இருக்கு?”  

அவன் உடம்பெல்லாம் ஒரு முறை பெரிதாய் எதனாலோ உலுக்கப்பட்ட மாதிரி உணர்ந்தான். அவ்வார்த்தைகள் இயல்பாய்ச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல என்பதும், அவற்றில் அசாதாரணமான ஆழம் இருக்கிறது என்பதும் அவன் அறிவுக்குப் புரிந்தது. ‘இவள் இந்தத் தெருவுக்கு இடைஞ்சலாய் இருக்கிறாளா, சௌகரியமாய் இருக்கிறாளா?” என்ற ஒரு புதிய கேள்வி எழுந்து அவனை வெகுவாய்க் குழப்பியது.

அவன் வீட்டுக்குள்  நுழைந்த போது, புவனா படபடப்போடு அவனிடம் கேட்டாள்:"என்ன,அந்த லெட்டரை அவ மூஞ்சியில விட்டெறிஞ்சிட்டீங்களா? அந்த நீலி ஏதாவது சொல்லியிருப்பாளே?”

அவன் எங்கோ வெறித்துக் கொண்டு இப்படிச் சொன்னான்: “அது தனக்கு வந்த லெட்டர் தான்னு அவ சொன்னா. கூடவே இன்னொண்ணும் சொன்னா.. பிளாட்டிங் பேப்பர்கள் இருக்கிற வரைக்கும் வெள்ளைப் பேப்பர்கள் கவலைப் பட வேண்டியதில்லைன்னு...”

புவனா முகமெல்லாம் வெளிற அவனைப் பார்த்தாள்.

-(8.3.1974, தினமணி கதிர் இதழில் வேறு தலைப்பில் பிரசுரமானது) 


* * *
பழுப்பேறிய பழங்கதைகள்.. ('மை ஒற்றும் தாள்' பற்றி...)
*************************************************

1970-களின் ஆரம்பத்தில் மன்னார்குடியில் இருந்த போது என் அறைக்குச் சக்ரபாணி என்ற ஒரு நண்பர் அடிக்கடி வருவார். சக்ரபாணி ஒரு சிறந்த இலக்கிய ரசிகர். எழுத்துகளின் நுட்பமான அம்சங்களையும் நயங்களையும் சட்டென்று அடையாளம் கண்டு வாய் விட்டுப் பாராட்டக் கூடியவர். அவரது தொடர்பு அந்தக் கால கட்டத்தில் என் இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்து விசையாக இருந்தது.

ஒவ்வொரு முறை எனது ஏதாவது ஒரு சிறுகதை தினமணி கதிரில் பிரசுரம் ஆகும் போதும், அவர் என் அறையில் ஆஜர் ஆகி விடுவார். அந்தப் படைப்பை வார்த்தை வார்த்தையாய் ரசித்துப் பாராட்டுவார். இது தவிர நான் தனியே ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைக்கும் கவிதைகள், உரைநடைகளை எல்லாம், அவை எழுதப்பட்ட சூட்டோடு இருக்கும் போதே அவரிடம் வாசித்துக் காட்டுவதில் எனக்கு ஒரு பெரிய சுகம் இருக்கும். அவற்றைப் படிக்கிற போது, அங்கங்கே அவர் முகம் ரசனையில் மலர்ச்சி காட்டும். சில இடங்களில் என்னை அந்த வரிகளை மறுபடியும் படிக்கச் சொல்லிக் கேட்டு, ”ப்ச்..அற்புதம்” என்று தன்னை மறந்து கண்களை மூடி முணுமுணுத்து அனுபவிப்பார். அவர் ஒரு வாரம் என் அறைக்கு வராவிட்டால் அந்த வாரமே எனக்கு மிகப் பெரிய வெறுமையாய்த் தோன்றும்.

ஒரு புதன் கிழமை சாயங்காலம் சக்ரபாணி என் அறைக்கு ரொம்பவும் உற்சாகத்தோடு வந்தார். “என்ன சக்ரபாணி, இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க?” என்று நான் அவரிடம் கேட்டேன். “விஷயம் இருக்கு ராம்..முதல்ல கையைக் கொடுங்க..” என்று சொல்லி என் கைகளைக் குலுக்கினார். “என்ன இந்தப் பீடிகை எல்லாம் புதுசா இருக்கு? விஷயத்தைச் சொல்லுமய்யா..” என்றேன் நான்.

சக்ரபாணி முகமெல்லாம் மலர்ச்சியோடு பேச ஆரம்பித்தார். “ராம்..இன்னிக்குக் காலம்பர ஹரித்ரா நதித் தெருவுல இருக்கிற என்னோட சிநேகிதர் ஒருவரைப் பார்க்கலாம்னு போயிருந்தேன்.. வீட்டுத் திண்ணையில் ரெண்டு பேர் உக்காந்து பேசிக் கிட்டிருந்தாங்க. ஒருத்தர் கையில இந்த வாரத் தினமணி கதிர் இருந்துது. அதுல வந்திருக்கிற ஒரு கதையை அவர் இன்னொருத்தர் கிட்ட காட்டி, ‘சமீபத்துல நான் வாசிச்ச கதைகள்லேயே ரொம்ப அபூர்வமான கதை இது..’னு பாராட்டிக்கிட்டிருந்தார். நான் அவரிடமிருந்து கதிரைக் கேட்டு வாங்கி என்ன கதை அதுன்னு பார்த்தேன். எனக்கு நிஜமாகவே ஆச்சரியம் தாங்கலே. அது உங்க கதை ராம்!. என்ன சந்தோஷமான ‘கோயின்சிடன்ஸ்’ பாருங்க.. நான் அவர் கிட்ட, ‘சார், இந்தக் கதையோட ஆசிரியர் என்னோட நண்பராக்கும்.. நம்ம ஊர்க் காசுச் செட்டித் தெருவுல தான் இருக்கார்’னு சொன்னேன். அவருக்கு ஒரே சந்தோஷம். அவரோட பாராட்டுகளை உங்க கிட்டே சொல்லச் சொன்னார். நீங்க இன்னும் நிறைய எழுதணும்னும் சொல்லச் சொன்னார்... ராம்.. நம்மத் தெரிஞ்சவங்க நம்மளப் பாராட்டறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. அது சில சமயங்கள்ல, பொய்யாவோ இல்ல மிகையாவோ கூட இருக்கலாம். ஆனா, நம்மளத் தெரியாதவங்க கிட்டேருந்து எதிர்பாரம வர இந்த மாதிரிப் பாராட்டுகள் தான் நமக்கு உண்மையாக் கிடைக்கிற பெருமை..”

அன்றைக்கு முதல் நாள் தினமணி கதிரில் வெளி வந்திருந்த ‘மை ஒற்றும் தாள்’ (இது வேறு தலைப்பில் அப்போது பிரசுரமாகி இருந்தது) என்ற என் சிறுகதையோடு சம்பந்தப்பட்டது தான் நான் மேற்சொன்ன சுவாரஸ்யமான சம்பவம். இந்தக் கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் சக்ரபாணியும் என் நினைவுக்கு வருவார். இப்போது அந்த இனிய நண்பர் சக்ரபாணி எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவரையும் நான் அறியாத அவரது சிநேகிதரையும் சந்தோஷப் படுத்திய அந்தக் கதை, பழுப்பேறிய காகிதங்களாய் எனது கோப்பில் இன்னும் பத்திரமாக இருக்கிறது..)

*



No comments:

Post a Comment