Friday, February 28, 2014

உணர்வுகளுக்கு வடிவமில்லை

வள் கதவைத் தட்டிய போது சரியாக ஒன்பது மணி இருக்கும். கோபி கதவைத் திறந்தபோது, இருளில் அவள் உருவம் முதலில் சரியாகப் புலப்பட வில்லை. அரை மணி நேரத்துக்கு முன்னால் கொட்டிய மழையில் அவள் நனைந்து கொண்டே வீதிகளில் அலைந்திருக்க வேண்டும் என்று அவன் ஊகித்ததற்கேற்ப அவள் அணிந் திருந்த புடவை தெப்பலாய் நனைந்து, அந்த ஈரத்தில் அவளது திரட்சியான மேனியை இறுகப் பிணைத்துக்  கொண்டிருந்தது.

வாசல் விளக்கு சில நாள் முன்னர் பியூஸ் போயிருந்த படியால் கோபி உள்ளே போய் டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு அவசரமாய் வந்தான். அவளோ, எந்த அவசரமும் இன்றி நிதானமாய் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள், தவம் செய்கிறவளைப் போல.

கோபி, டார்ச் விளக்கின் சுவிட்சை அழுத்தினான். பல நாளுக்கு முன் என்றோ ஒரு நாள் உள்ளே அடைக்கப்பட்ட பாட்டரி செல்கள் இன்று ஆயுட்காலத்தின் கடைசிக் கட்டத்தில் இருந்து கொண்டு முக்கித் தின்றியபடி ஒரு மங்கலான ஒளிச் சிதறலை அவள் முகத்தில் தெளித்தன. அவளுடைய வட்டமான பெரிய விழிகள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் மலங்க மலங்க விழித்தன. அந்த விழிகளின் மருட்சியில் உடம்பின் நிதானத்தையும் தாண்டி, உணர்வுகளின் அவசரம் தெரிந்தது.

கோபி அவளை அடையாளம் புரிந்து கொண்டு சில கணம் திகைத்தான். திகைப்பையும் மீறிக் கொண்டு, வியப்பின் எல்லையில் அவன் சிந்தையில் ஒரு கேள்விக்குறி உருவாகியது. அந்தக் கேள்விக் குறியால் அவள் முன்னால் லாபம் ஏதுமில்லை என்று அவனுக்குத் தெரிந்திருந்ததால், அதன் வளைந்த முதுகைப் பலவந்தமாக நிமிர்த்தி அதை ஆச்சரியமாய் ஆக்கி விட்டு, அந்தப் பாவனையோடேயே அவள் முகத்தை வியப்பாய்ப் பார்த்தான்.

“இங்கே எதுக்கு இப்போ வந்தே?”

மௌனமாய் அவனைப் பேதைமைகளோடு பார்த்தாள் அந்தப் பெண். அவள் முகத்தில் குழம்பித் தளும்பிக் கொண்டிருந்த உணர்ச்சிகளில் அவனுடைய கேள்விக்கான பதில் இருந்தது. அவளின் உதடுகளில் அதற்கான வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளுக்காக, நிறைவேற முடியாத  ஏக்கங்களோடு பிரிகிற உதடுகளிலிருந்து அவளது உணர்ச்சிகளைப் போலவே உருவமற்ற காற்று தான் வெளியே முடியும்.

கோபி அவள் முகபாவங்களைக் கொண்டு எதையும் புரிந்து கொள்ளாமல் இருந்தான். கைவிரல்களை மடக்கி, ‘எங்கே வந்தே?’ என்கிற அர்த்தத்தில் அவள் முன் சைகை காட்டிக் கேட்டான். அவளோ, பழையபடியே மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றாள்.

கோபிக்கு ரொம்பவும் சங்கடமாய் இருந்தது. அவள் நின்ற கோலமும் அந்தச் சூழ்நிலையும் அந்தச் சூழ்நிலை வளரும் அந்த நேரமும் அவனது மனதில் பிரமைகளையும் சலனங்களையும் உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவள் உடம்பைச் சுற்றி ஒட்டிரயுந்த அந்தப் பழம் புடவையின் வழியே கீழே வழிகிற மழை ஈரத்தோடு அவளுடைய கட்டான் உடம்பின் கவர்ச்சியும் அவளது வடிவமில்லாத உள்ளத் துயரங்களும் எல்லாமாக வெளிப்பட்டு வழிகிற மாதிரித் தோன்றியது அவனுக்கு.

நல்ல சிவப்பாய்-அவள் வாழ்கிற வாழ்க்கைக்கும், அவளுக்கு இயற்கை அளித்திருந்த கொடுமையான வேதனைகளுக்கும் நிலையான பலவீனங்களுக்கும் மாற்றாக-பளபளப்பாய் ஒரு வருணிக்கவியலாத பிரகாசத்தோடு அந்தப் பேதைப் பெண்ணின் மேனி அந்த மெல்லிய இருட்டில் நெருப்புத் துண்டாய்த் தகதகத்துக் கொண்டிருந்தது.

அந்த நிலையில், உடம்பில் ஒட்டிய ஆடைகளோடு, கழுத்தைச் சுற்றி இருபுறமும் தோள்களில் பொங்குகிற வனப்புகளும் கீழே விம்முகிற மார்புகளுமாக அவை தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கிளப்பி விடுகிற மன விகாரங்கள் எதையும் அறியாமல் ஓர் அப்பாவியாய் அவள் நின்றாள்.

இனிமேலும் அப்படி வைத்த கண் வாங்காமல் அவளைத் தான் பார்த்தால், அந்தப் பார்வை தன்னுள் விளைவிக்கும் விளைவுகள் மிகவும் ஆபாசமாக இருக்கும் என்று உணர்ந்தவன், ‘இப்போது அடுத்து என்ன செய்வது’ என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, அது வரை அவனை மலங்க மலங்கப் பார்த்துக்  கொண்டிருந்த அவளது விழி முனைகளில் அவளது மன உணர்ச்சிகள் உலையில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர்ப் பாத்திரத்தின் மூடியையும் நெம்பிக் கொண்டு வெளியே பொங்குவது போல, கண்ணீராய் உருவெடுத்துத் தேங்கின. திடீரென்று அவள் விசும்பி விசும்பி அழுதாள். ஒரு சிறு குழந்தையைப் போல அந்தச் சமயத்தில் அவளது வட்டமுகம் பரிதாபமாய்த் தேம்பி நிற்பதைப் பார்த்து, நெஞ்சில் வேதனைகளோடும்  புரியாத தர்ம சங்கடங்களோடும் கோபி நின்றான்.

“இப்போ எதுக்காக அழறே? ஒன் கூட ஒருத்தன் சுத்திக்கிட்டிருந்தானே, என்ன ஆனான்?” என்று சத்தமாகக் கேட்டான். தான் அப்படி அவளிடம் கேள்வி கேட்பது எவ்வளவு பெரிய அசட்டுத் தனம் என்று மறுபடியும் புரிந்து கொண்டு, அந்தக் கேள்வியின் அர்த்தங்களைச் சைகைகளாக்கினான் அவன்.

அவன் சைகைகளைப் புரிந்து கொண்டவள், அத்ற்குப் பதிலாக இரண்டு நீர் முத்துகளை விழி இமைகளை மூடித் திறந்து, கன்னங்களில் வழிய விட்டாள்.

‘அவன் எங்கேயோ ஓடிட்டான்’ என்று அர்த்தமா இதற்கு?

ஊமைகளோடு பேசுகிற போது, பேசுகிறவர்களும் ஊமைகளாகி சைகை பாவங்களால் நடிக்க வேண்டிய வேடிக்கையை நினைத்துக் கொண்டான் கோபி.

அவள் ஊமை; அவளுக்கு உணர்வுகளே மொழி; கண்ணீரே வார்த்தைகள்; அவள் ஆளுகிற சாம்ராஜ்யத்தில் அவளே பிரஜை; மௌனத்தில் பிறந்து, மௌனமாய் வளர்ந்து, மௌனமாய் முடியப் போகிற வாழ்க்கை அவளுடையது.

கோபி இப்படி நினைத்துப் பார்த்த போது, இன்னொரு கேள்வி சமாதானமாய்ச் சிந்தனையில் உருவெடுத்தது. ‘இவளுடைய வாழ்க்கையின் அந்த இடைப் பகுதியைத் தவிர, மற்றபடி  ஆரம்பமும் முடிவும் எல்லாருடைய வாழ்க்கைகளைப் போலத் தானே இருக்கிறது?’

இன்னும் கொஞ்ச நேரத்தில் வரதன் வந்து விடுவான். ஷிப்ட் முடிந்து தொழிற்சாலையிலிருந்து அவன் தினமும் திரும்பி வருகிற நேரம், அந்த ஒன்பதிலிருந்து பத்துக்குள் தான் இருக்கும். ‘எதிரில் அனாதையாய் நிற்கிற அவளை இப்போது என்ன செய்வது?’ என்று அவன் யோசித்தான். ‘உள்ளே அழைத்துக் கொண்டு போகலாமா’ என்றாலும் வரதனை நினைக்கும் போது அவனுக்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.

தன் குணங்களுக்கு நேர் மாறாக வரதனைப் போன்ற ஓர் அண்ணன் வாய்த்திருப்பது அவனுக்கு அந்த வேளையில் சோகமாய் இருந்தது. தன்னை விடப் பத்து வயது வித்தியாசமான வரதனின் குணங்களோ பல நூறு வயதுகள் தனக்கு வித்தியாசமானவை என்று அவனுக்குத் தெரியும்.

அவனது மனநிலைகளும் குனசித்திரங்களும் பிறரால் அனுமானிக்க முடியாதவை. தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அவற்றின் இயல்புக்கு மீறிய வடிவம் கொடுத்துப் பிறரைப் பயமுறுத்துபவன் வரதன். கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள்ளேயே அவனது மிருகத்தனமான வெறிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கசங்கித் துவண்டு வாடிப் போன அவனது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாய் உதிர்ந்து போனாள்.

சாகக் கிடந்த போது அவள் வரதனுக்கு அறிவுரையாய் ஏதோ சொல்லப் போக, அவன் வெறி பிடித்தவன் மாதிரி ஸ்டூலின் மீது இருந்த மருந்து பாட்டிலை ஆவேசமாய் எடுத்துத் தரையில் வீசி எறிந்து அதைச் சுக்கல் சுக்கலாய் உடைத்து மருந்தை நாலாபுறமும் சிதற அடித்து விட்டுப் போன அந்த நாளை நினைத்த பொது இப்போதும் கோபி உள்ளூரக் குமைந்தான். அந்த மருந்து சிதறிய சில மணி நேரங்களுக்குள்ளேயே அவளது உயிரும் உடம்பை விட்டுக் காற்றில் சிதறி விட்டது. கோபி பெருமூச்சு விட்டான். மனதுக்குள் ஒரு முடிவு பண்ணிக் கொண்டான்.

அவளைப் பார்த்து உள்ளே வருமாறு சைகை காட்டினான். அவள் நீர்ப்பெருக்கு சட்டென்று ஓய்ந்தது. முகத்தில் ஒரு புதிய நிறைவோடு அனைத் தொடர்ந்து மெல்ல உள்ளே போனாள்.  அவளுடைய ஈரமான கால்களின் சுவடுகள் தரையில் அவள் நடந்ததற்கு அடையாளமாய்ப் பதிந்தபடி இருந்தன.  அவன் கூடத்தின் ஓரமாய் இருந்த ஓர் உள்ளடங்கிய அறையை அவளுக்குக் காட்டினான். அவள் தயக்கத்தோடும், கண்களில் இனம் புரியாத ,மருட்சியோடும் அந்த அறைச் சுவரின் மூலையில் போய் ஒடுங்கிக்  கொண்டு முகத்தை மட்டும் திருப்பி அவனை மிரள மிரளப் பார்த்தாள்.

கோபி சில கணம் யோசித்தான். ‘அந்த ஈர உடைகளோடு அவள் அன்று இரவு முழுவதும் இருக்க முடியுமா?’ என்று யோசித்தவன், சில வருடங்களாய்ப் பெண் வாடையே இல்லாத இந்த வீட்டில் அவள் கட்டிக் கொள்கிற மாதிரிப் புடவை, ரவிக்கைக்கு எங்கே போவது என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

பிறகு கொடி அருகே போய்த் தன்னுடைய லுங்கியையும், ஒரு பெரிய டர்க்கி டவலையும் எடுத்துக் கொண்டு அவள் முன்னால் கொண்டு போய் அவன், அவள் கையால் பிடித்துக் கொள்ள வாகாய் அவற்றை வீசினான். அவளோ, அவற்றைப்  பிடிக்க எந்த சிரத்தையும் இன்றி கைகள் வெறுமனே கீழே தொங்கப் பேதையாய் நிற்கவே, அந்தத் துணிகள் அவள் பாதங்களில்  விழுந்தன. பாதத்து ஈரத்தில் லுங்கியின் முனை லேசாய் நனைந்து போயிற்று.

இப்போது அவள் குனித்து அவற்றை எடுத்துக் கொண்டு அவற்றைச் சில கணம் வெறித்துப் பார்த்தாள். அவற்றைத்  தவிற அவளுக்குத் தர வேறு எதுவும் தன்னிடம் இல்லை என்கிற மாதிரி அவன் சைகை காட்டவே, முதன் முதலாக அவளது இதழ்கள் ஒரு மெல்லிய முறுவலை அவனை நோக்கி ஓட விட்டன. அவன் வெளியே வந்தான். அவள் மெதுவாய் அடி மேல் அடி எடுத்து வந்து உடை மாற்றுவதற்காகக் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

வரதன் வந்து விட்டதற்கு அறிகுறியாக வாசலில் சைக்கிள் சத்தம் கேட்டது. கோபி தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, நாற்காலியில் இருந்த படியே ஏதோ ஒரு  புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருதான்.

செருப்பு சத்தம் வாசல்படிகளில் கேட்டதைத் தொடர்ந்து சைக்கிளைப் பூட்டும் ஒலியும்  கேட்டது. வரதன் எப்போதுமே தரையை அதிர அதிர மிதித்து நடப்பவன் ஆதலால் அவனது காலடிச் சத்தம் நெருங்க நெருங்க ஏதோ ஒரு பூகம்பத்தை எதிர் நோக்கி இருப்பவன்  போல, கண்கள் புத்தகத்திலும் மனம் கூடத்து அறையிலும் சுழல அமைதியின்றி அமர்ந்திருந்தான்.

வரதன் உள்ளே நுழைந்தான்.

“என்னடா கோபி, கீழே ஒரே ஈரச்சுவடா இருக்கே? எங்கியாவது மழையில நடந்திட்டு வந்தியா?”

கோபி நிமிர்ந்தான். வரதன் சட்டையைக் கழற்றிக் கோட் ஸ்டாண்டில் மாட்டிக் கொண்டிருந்தான். அவன் இன்னும் அந்த ஒருக்களித்திருந்த கதவின் பின் நிர்மலமான பேதைமைகளோடும் நிலையான பலவீனங்களோடும் ஒரு பெண்ணுள்ளம் அந்த அறையில் ஒடுங்கி இருப்பதைப் பார்க்கவில்லை. கோபிக்கோ உள்ளுரத் திகிலாய் இருந்தது.

“என்னடா பதிலே இல்லை?”

தலைக்கு மேல் வளர்ந்து இவன் வாங்காத பட்டதையும் வாங்கி இவைக்கும் அதிகமான சபலத்தோடு கௌரவமான வேளையிலும் இருக்கிறேன். இன்னும் என்னை இவன் ‘டா’ போட்டுத் தான் அதட்டலாகப் பேசுகிறான்’ என்று கொஞ்சம் குமைச்சலோடு நிமிர்ந்தான்.

என்ன கேட்டே?”

“நான் கேட்டது கூடக் காதுல ஏறாம, அவ்வளவு டீப்பாப் படிப்போ? கீழே எல்லாம் ஈரச்சுவடா இருக்கே, வெளியில போயிருந்தியான்னு கேட்டேன்.”

“இவ்வளவு சின்ன விஷயம் கூட உனக்கு ஏன் இவ்வளவு அக்கறைக்குரிய நிகழ்ச்சியா இருக்கு?” -மறுபடியும் புத்தகத்தில் தன கண்களை ஓட்ட முயன்று தோற்றான் கோபி.

வரதனின் குரல் மறுபடியும் ஒலித்தது.

“அதுக்கில்ல. அந்தச் சுவடெல்லாம் ஒரு பொம்பளையோட பாதச் சுவடு மாதிரி இருக்கேன்னு கேட்டேன்..”

அதிர்ச்சியோடு நிமிர்ந்தான் கோபி. வரதன் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான், துல்லியமாய்.  கோபி பரபரத்தான்.

“உனக்குப் பொம்பளைகளோட கால் சுவடுகளெல்லாம் ரொம்பப் பரிச்சயம் போலிருக்கு..”

ரதனைப் பற்றிக் கோபி நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அவனைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்த வதந்திகளை அவன் நம்பவே செய்தான். வரதன் வாரத்துக்கு ஒரு முறை வீட்டில் இருக்க மாட்டான்...

“யாரு கிட்டேடா பேசறே?” வரதன் உரக்கக் கேட்டான். கோபி புத்தகத்தை மூடி மேஜை மீது பட்டென்று வைத்தான்.

“இப்போ என்ன நடந்து போயிடுச்சுன்னு நீ இப்படிச் சத்தம் போடற?”

“ஓ..நான் இல்லாத சமயங்கள்ல இப்படித் தான் நடக்குதா?”

“நீ இல்லாத சமயங்கள்ல எது, எப்படி நடக்குதுன்னு நீ இருக்கிற இடங்களுக்கு அப்போ எல்லாம் நான் வந்து பாத்திருந்தாத் தானே சொல்ல முடியும்?”-இப்படிக் கேட்டு விட்டு நேரிடையாய் ஏன் அவனிடம் கேட்டோம் என்று கோபி உள்ளூர வருத்தப்பட்டுக் கொண்டான்.

வரதன் எரிமலையாய் வெடித்தான்.

“நான் வெளியில போறது உண்மைதாண்டா. அதுக்காக இப்படி வீட்டுக் குள்ளேயே கூட்டிக்கிட்டு வந்து நடத்த உனக்கு என்ன தைரியம்?”

தேள் கொட்டிய மாதிரி நிமிர்ந்தான் கோபி.

“என்ன சொல்றே அண்ணா?”

“அண்ணான்னு கூப்பிடாதே. இந்தக் கொடியில தொங்கற ஈரப் புடவையும் ஜாக்கெட்டும் உன்னோட யோக்கியதையையும் திருட்டுத் தனத்தையும் காட்டிக் கொடுத்துடுச்சு. யாருடா உள்ளே?”

காரியம் கைக்கு மீறிப் போன உணர்வில் கோபி மௌனமாய் நடந்து சென்று, ஒருக்களித்திருந்த கதவை ஆவேசமாய்த் திறந்தான்.

அவள், அந்த மூலையில் பூனையைப் போல அடங்கி ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். லுங்கியைத் தாறுமாறாய்ச் சுற்றிக் கொண்டும், அந்த டர்க்கி டவலால் மார்பை இறுக்கமாய்ப் போர்த்திக் கொண்டும் உட்கார்ந்திருந்த அவள் மேனியின் கவர்ச்சி இப்போது இயல்புக்கு மீறியதாய்த் தோன்றியது.

‘இவளா!” என்று  ஏளனமாய்ச் சொன்ன வரதன், திரும்பிக் கோபியைப் பார்த்து அருவருப்போடு கேட்டான்: “இந்த ஊமைப் பொணத்தையா வீட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு வந்தே?”

இந்த வார்த்தைகளில் கோபியின் மனம் புண்ணாகியது.

“பிணங்கள் எல்லாமே ஊமை தான், அண்ணா. ஆனா, ஊமைகள் எல்லாம் பிணங்கள் இல்லே. அவங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு..”

“பின்னே என்னடா, அவ தெய்வமோ?” மீண்டும் வரதனின் முகம் ஏளனத்தில் வெடித்தது.

“தெய்வமும் ஊமை தானே?” என்ற கோபி, மறுபடியும் சொன்னான்: “அவ பொறந்ததிலேருந்து இதுவரைக்கும் யாருகிட்டேயும் எதையும் பேசியிருந்திருக்க மாட்டா. அவளோட இந்த முடிவில்லாத மௌன விரதம் எத்தனை மகிமையானது தெரியுமா? மத்தவங்களோட உணர்ச்சிகளை வதைக்கறதுக்காகவே  பேசிக்கிட்டிருக்கிற மனிதர்களுக்கு மத்தியில, தன்னுடைய உணர்ச்சிகளைத் தானே வதைச்சிக்கிட்டுப் பேசாமயே வாழற இவ, தெய்வம் தான்!”

“ஒ!” என்றான், வரதன்.

“சார் ரொம்பவும் கருணாமூர்த்தியாயிட்டார் போலிருக்கு! என்ன கருணை! என்ன கருணை!” என்று இகழ்ச்சியாய்ச் சிரித்தான்.

“அப்போ நாளைக்கு இவளை நீயே கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பமும் நடத்துவேன்னு சொல்லு!”

“தெய்வங்களை யாரும் கல்யாணம் செஞ்சிக்கறதில்ல...”

இப்போது வரதன் பலமாகச் சிரித்தான்,

“நீ எப்படியோ சுத்தி எங்கியோ போறேன்னு நெனைச்சா, கடைசியா என்கிட்ட தான் வர்றே! ‘அப்படி’ இருந்துட்டுப் போகட்டும்னு சொல்றே இல்ல? அவளோட கலையாத மௌனம் ஒரு சாதகமாவும் இருக்கும்!”

இப்போது கோபி சீறினான். வரதனின்  வார்த்தைகளில் இருந்த நெருப்பு அவனைத் தகித்தது.

“நீ பேசறது எதுவுமே அவ காதில விழாதுங்கற தைரியமா உனக்கு? பிறவி ஊமைகளுக்குக் கடவுள் காதுகளையும் செவிடாக்கினது ஏன்னு எனக்கு  இப்பத் தான் தெரியுது. தன்னோட உணர்ச்சிகளைப் பேசி வெளியிட முடியாத கொடுமைக்கு நடுவுல, தன்னோட உணர்ச்சிகள் புண்படாத மாதிரி மனிதாபிமானமே இல்லாம மத்தவங்க பேசறதைக் கேக்கற கொடுமையும் வேண்டாம்னு தெய்வம் இரக்கப்பட்டு அப்படிச் செஞ்சிருக்கும்..”

இவர்கள் தன்னை வைத்துக் கொண்டே, தன்னால் அனுமானிக்க முயடியாத, தன்னைப் பற்றிய சிலவற்றையே பேசுகிறார்கள என்று புரிந்து கொள்ளாத நிலையிலும், இவர்களின் முகபாவங்கள் எல்லாமே இவர்களுக்கு நடுவில் அமங்கலமாயும், அழையா  விருந்தாளியாயும் நுழைந்திருக்கிற தனக்காகவே தோன்றியிருக்கின்றன என்று மட்டும் புரிந்து கொண்டவளாய்ச் சோகமாய்ப் பர்ர்த்தபடி இருந்தாள் அவள்.

“அவள என்ன செய்யறதா உத்தேசம்?”

“அவளைப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு. அவ வேற எங்கியும் போகாம என்கிட்ட மட்டும் எதையோ நம்பிக்கையோட எதிர்பார்த்து இந்த வீட்டுக் கதவைத் தட்டி இருக்கா. அவள நான் திருப்பி அனுப்ப மாட்டேன். அவ யாரு என்னன்னு எனக்குத் தெரியாது. யாருக்குத் தான் தெரியும்? அவளுக்கே கூடத் தெரியுமாங்கறது சந்தேகம் தான். அவளுக்கே  தெரிஞ்சிருந்தாத் தான் என்ன? அதை அவளால மத்தவங்க கிட்டே சொல்லவா முடியும்? இப்படி ஒரு பயங்கரமான துயரத்தோட, என்னை நம்பி வந்திருக்கிற இவளுக்கு நான் ஏதாவது செய்யணும். இல்லேன்னா, நான் ரொம்பவும் கொடுமையானவன்னு தான் அர்த்தம்.”

“பெரிய புத்தர் பரம்பரையில் வந்தவனோ நீ? டேய், இப்ப இவ மேல உனக்கு ஏற்பட்டிருக்கிற இரக்கம் எதுனாலேன்னு என்னக்குத் தெரியும்! அவ ஊமைங்கறதுக்காக நீ இரங்கல; அவ அழகான ஊமைங்கிறதால தான் நீ இரங்கறே! இவளே ஒரு அசிங்கமான ஊமையா இருந்திருந்தா நீ இதே மனிதாபிமானத்தோட நடந்திருப்பியாடா?”

கோபி திகைத்து  நின்றான். வரதனின் குரல் சுவர்களெல்லாம் எதிரொலித்து அதிர்வது போல அவன் உணர்ந்தான். அவன் உடம்பும், உணர்வுகளும் சொல்லத் தெரியாமல் பதறின.

“டேய்! எனக்குத் தெரியாது. நாளைக்குக் காலயில நான் எழுந்திருக்கிறப்போ அவ இந்த வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது. இருந்தா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”

வரதன் முடிவாகச் சொன்னான். பிறகு கூடத்து ஓரத்தில் இருந்த கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டான். ‘இவன் என்னிக்கு மனுஷனா இருந்திருக்கான்?’ என்று மனதுள் எண்ணிக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டு வரதனை வெறிக்கப் பார்த்தான் கோபி. வரதன் நடந்தது எதுவுமே தெரியாதவன் மாதிரி சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

கோபி அவளை ஏறிட்டுப் பார்த்தான். பழையபடியே அவள் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள். “நீ ஊமையாகத் தான் பொறந்தே, ஏன் அழகாகவும் பொறந்தே?” என்று அவளைப் பார்த்து விரக்தியோடு கேட்டான் கோபி. அவன் வாயசைவைப் பார்த்து ஏதோ புரிந்து  கொண்டவளாய் லேசாகச் சிரித்தாள். தொடர்ந்து, அவள் விழியோரத்தில் நீர் தேங்கித் தளும்பியது.

கோபி எதுவும் புரியாமல் கூடத்துக்கு வந்தான். படுக்கையைத் தரையில் விரித்துக் கொண்டு விளக்கை அணைத்துப் படுத்தான். மனம் குழம்பி அலை பாய்ந்தது. அவன் கண்ணெதிரில் வரதனின் கோபமாய்ச் சிவந்த விழிகளும், அவளின் பரிதாபமாய் விழிக்கிற விழிகளும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன.

அவளை இதற்கு முன் சில சமயம் அவன் பார்த்திருந்தானே தவிர அவளைப் பற்றி அவனுக்கு  வேறு எதுவும் குறிப்பாகத் தெரியாது. இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற வழியில் ஒரு குறுகிய  திருப்பத்தில் ஒரு குடிசையில் அவள் இருந்து கொண்டிருந்தாள். அவளோடு கூட, அவளோடு ஏதோ உறவு முறை கொண்டாடிக் கொண்க்டு ஒரு முரட்டு வாலிபனும் அப்போது இருந்தான்.

அந்த வழியாய்க் கோபி சைக்கிளில் போகிற போதெல்லாம் அவள், குடிசைக்கு வெளியே கொடியில் ஈரத் துணிகளை உலர்த்திக் கொண்டிருப்பாள். ஒரு சமயம் மழைக்காகக் குடிசை ஓரமாய் அவன் ஒதுங்கிய போது, அவள் வெளியே வந்து, ‘பெப்பே!’ என்று குரல் எழுப்பி அவனை உள்ளே அழைத்தாள். அவன் தயக்கத்தோடு உள்ளே போனான்.

அவளைத் தவிர வேறு யாரும் அப்போது இல்லை. அடுப்பிலிருந்து அப்போது தான் இறக்கி இருந்த தேநீரைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதைச் சாப்பிடுகிற போது, அவள் எதையோ இழந்த சோகங்களோடு அவனையே பார்த்துக் கொண்டு  நின்றாள்.

அதற்கப்புறம், அவளை அவன் இப்போது தான் பார்க்கிறான். தன் வீட்டை எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு அவள் இப்போது வந்திருக்கிறாள் என்று கோபி நினைத்துக் கொண்டான். ஊரில் அவளையும் அவளோடு இருந்த அந்த  முரடனையும்   .இணைத்து என்னென்னவோ  பேசிக் கொண்டார்கள். ஆனால் யாருமே, அந்த இளம் ஊமையின் அந்தரங்கங்களையோ உள்ளத்து உணர்ச்சிகளையோ அணுகிப் பார்க்க விரும்பவில்லை.

அதற்கப்புறம் அவளை அவன் இப்போது தான் பார்க்கிறான். தன் வீட்டை எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு அவள் இப்போது வந்திருக்கிறாள் என்று கோபி நினைத்துக் கொண்டான். ஊரில் அவளையும் அவளோடு இருந்த அந்த முரடனையும் இணைத்து என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். ஆனால், யாருமே, அந்த இளம் ஊமையின் அந்தரங்கங்களையோ உள்ளத்து உணர்ச்சிளையோ அணுகிப் பார்க்க விரும்பவில்லை.

அவள் யார்? தெரியாது. அவளைப் பெற்றவர்கள் யார்? தெரியாது. அவளோடு கூட இருந்த முரட்டு இளைஞனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? தெரியாது. அவளும் அவனும் நடத்திய வாழ்க்கையின் கட்டங்கள் எப்படிப்பட்டவை? தெரியாது.. அவள் இப்போது அநாதை; அது தெரியும். அவளின் இழப்புகள் மகத்தானவை.; அது தெரியும். அவள் அழுகிறாள்; அதுவும் தெரியும்.

கோபிக்குத் தெரிந்ததும் தெரியாததும் எல்லாமாய்ச் சேர்ந்து ஒரு சுமையாய் விழி இமைகளில் அழுத்தின. அந்தச் சுமையின் அழுத்தத்திலேயே ‘இவளுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்’ என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் தூங்கிப் போனான்.

கோபிக்கு விழிப்பு வந்த  போது விடியற்காலை மூன்று மணி இருக்கும். யாரோ மெல்லிய குரலில் ஒலியெழுப்பி அவனைக் கூப்பிட்ட மாதிரி இருக்கவே, அவன் விழித்துக் கொண்டான். விடிவிளக்கின் மங்கிய ஒளியில் வாசலுக்குப் போகும் வழியருகே சுவரோரமாய் அவள் மருட்சியோடு நின்று கொண்டிருந்தாள்.

கோபி துணுக்குற்றுப் படுக்கையிலிருந்து எழுந்தான். வரதன் கட்டிலில் குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான். கோபி பரபரப்போடு அவள் அருகே போனான். அவள் எங்கோ கிளம்பத் தயாராய் இருக்கிற நிலையில் நின்றாள்.

கோபி அருகே வந்து அவள் முகத்தைப் பார்த்தவுடனேயே அது வரை குளமாய்த் தேங்கியிருந்த விழிநீர் இப்போது அணையை உடைத்துக் கொண்டு வெள்ளமாய்ப் பெருகி வழிந்தது. காய்ந்தும் காயாமலும் இருந்த புடவையும் ஜாக்கெட்டும் அந்தக் கண்ணீர்ப் புனலில் மறுபடியும் ஈரமாகத் தொடங்கின.

லுங்கியையும் டவலையும் அழகாய் மடித்துக் கையில் வைத்திருந்தவள் அவற்றை அவனிடம் கொடுத்து விட்டு, இரு கைகளையும் கூப்பி அவனை ஒரு பக்தையைப் போல் அழுது கொண்டே வணங்கினாள். கோபி எதுவும் புரியாது அவள் முகத்தைப் பார்த்தான்.

அந்தப் பால் வடியும் முகத்தில் இப்போது புதிதாக நகம் கீறிய மாதிரிச் சில சிராய்ப்புகள் தெரிந்தன. அது அந்த வீட்டு அறைகளில் அலைந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரு முரட்டுப் பூனையின் வேலையாக இருக்கும் என்று கோபி நினைத்துக் கொண்ட பொது, அவளைப் பார்க்க அவனுக்குப் பாவமாய் இருந்தது.

கோபி அவளைப் பார்த்து ‘எங்கே போறே?’ என்கிற மாதிரி சைகைகளால் கேட்ட போது, அவள் இரண்டு கைவிரல்களையும் அகல விரித்து, ‘எங்கோ போகிறேன்’ என்கிற மாதிரி சைகைகளால் பதில் சொன்னாள். எதையோ சொல்ல நினைத்து, வெளியிட முடியாது தவிக்கிற மாதிரி அவள் நின்றாள்.

அந்தக் கூடத்தைச் சுற்றி மிரட்சியோடு விழிகளை அலைய விட்டவள், அவன் முகத்தை மறுபடியும் ஏறிட்டுப் பார்த்து விட்டு, புடவைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டு சிறு குழந்தை போலக் கேவிக் கேவி அழுத படி வாசலை நோக்கி ஓடினாள். கோபி, பரபரப்போடு அவளைத் தொடர்ந்து சென்ற பொது, அவள் தெரு இருட்டில் கலந்து விட்டாள்.

அன்றைக்கு சாயங்காலம் சீக்கிரமே வரதன் வீடு திரும்பி இருந்தான். அவன் முகம் களையிழந்து களைப்பாய் இருந்தது. அவன் உள்ளே நுழைந்த போது, கோபி விழிகளில் துக்கம் படிய உட்கார்ந்திருந்தான்.
“அண்ணா, நேத்திக்கு உன்னால ஊமைப் பொணம்னு வருணிக்கப் பட்ட அந்த அப்பாவிப் பொண்ணு, இன்னிக்கு நிஜமாவே பொணமாயிட்டாளாம். உனக்கு சந்தோஷம் தானே?”

வரதன் அதிர்ச்சியோடும் கலவரத்தோடும் நிமிர்ந்தான்.

‘என்ன சொல்றே கோபி?”

“இந்தத் தெருக் கோடியில இருக்கிற பாழுங் கிணத்துக்கிட்டே கூட்டமா இருக்கே, நீ பாக்கலையா?”

வரதனின் முகம் இருண்டது.

கோபி தொடர்ந்து சொன்னான்: ‘விடியற்காலையில அவ கிளம்பிப் போறப்போ எதையோ சொல்ல நினைச்சு அது முடியாம கேவிக் கேவி அழுதா. அவ செத்துப் போனது கூட எனக்குப் பெரிய வருத்தமா இல்ல. அவ ‘நெனச்சதை அவளால சொல்ல முடியாமப் போச்சே, அது தான் எனக்குப் பெரிய துக்கமா இருக்கு. மத்தபடி அவளோட  வாழ்க்கைக்கும், சாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ரெண்டிலுமே அவ சந்திச்சது மௌனத்தைத் தான். அவ ஊமை...அவளோட உணர்ச்சிகளுக்கு என்ன வடிவம் இருக்கு?”

கோபி பேசப்பேச வரதனின் முகம் விகாரமாகிக் கொண்டே வந்தது. திடீரென்று அவன் இப்படிக் கத்திக் கொண்டே, உடல் பதறக் குலுங்கி அழுதான்.

“டேய் கோபி! என்னை மன்னிச்சிடுடா...நேத்து ராத்திரி நான்....நான்....தப்பு செஞ்சுட்டேண்டா...”

கோபி சிலையாய் நின்றான். மேலே எதுவும் பேச முடியாமல் தன் முன்னால் குமுறிக் குமுறி அழுகிற நிலையில் முதன் முதலாய்த் தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்துப் போய் அவன் நின்றான்.

அவன் கண் முன்னால், அன்று விடியற்காலை அந்த அபலைப் பெண் புறப்படுமுன் அவனைப் பார்த்து விம்மி விம்மி அழுத நிலை இப்போது தெரிந்தது. அதற்கு அர்த்தமும் தெரிந்தது. கோபி அழவில்லை. அவனுக்கும் சேர்த்து அவன் அண்ணன் அழுது கொண்டிருந்தான்.

(-23.3.1973 தினமணி கதிரில் வெளிவந்தது.)




No comments:

Post a Comment