Friday, September 13, 2013

சிறுகதை


ஜங்ஷன்

எஸ்.எம்.ஏ.ராம் 






சின்ன ஜங்ஷன். இங்கிருந்து இரண்டு கிளைகள் வெவ்வேறு திசைகளில் பிரிவதால் இது ஜங்ஷனாயிற்று. பிரிந்தாலும் ஜங்ஷன்; சேர்ந்தாலும் ஜங்ஷன். உயரத்திலிருந்து பார்த்தால் பிரிதல் சேர்தல் எல்லாம் ஒன்று தான். ஒரே புள்ளி. அதில் தான் தண்டவாளங்களின் பிரிதல் சேர்தல் எல்லா நிகழ்ச்சிகளும்.

இன்ஜினை அவிழ்த்துக் கொண்டு போய் விட்டாகள். இந்த ஸ்டேஷனில் தான் மின் என்ஜினுக்குப் பதிலாக  டீசல் எஞ்சினையும், டீசல் எஞ்சினுக்குப்  பதிலாக  மின் எஞ்சினையும் மாற்றுகிறார்கள். பழைய காலத்தில் வண்டியில் மாட்டுக்குப் பதிலாகக் குதிரையையும் அல்லது குதிரைக்குப் பதிலாக மாட்டையும் மாற்றிப் பூட்டுகிற மாதிரி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  இன்னும் முக்கால் மணி நேரமாவது ஆகும். சங்கரன் ரயில் பெட்டியை விட்டுக் கீழே இறங்கினான். கையைச் சுடுகிற வரை சிகரெட் எரிந்து விட்டது. இனித் தூக்கி எரிய வேண்டியது தான். கொஞ்ச நேரம் கேன்டீனில் போய் உட்காரலாம் என்று தோன்றியது. பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் அவன் வழக்கமாய் உட்கார்ந்து நண்பர்களோடு பேசும் இடம். அதே கரை படிந்த வாஷ்பேசின். அதே விரிசல் விழுந்த வட்டமான   மரமேஜை. சுவர்க் கடிகாரம் கூட அன்றைக்குப் பார்த்த மாதிரியே தான் இருந்தது. காலத்தை மீறிக் கொண்டு காலம் காட்டுகிற-அல்லது காலம் தள்ளுகிற அவஸ்தை.

சங்கரன் உள்ளே போய்ப் பூரியும் காப்பியும் வாங்கிக் கொண்டு மேஜைக்கு வந்தான். ஜன்னல் வழியாய் எதிர்ப் பிளாட்ஃபாரத்தில் இன்னொரு திசையில் செல்லும் ரயில் மெதுவாய் உள்ளே வருவது தெரிந்தது. ரயில் ஜன்னல்களில் எல்லாம் முகங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவியலாய்க் குரல்களின் இரைச்சல். அந்த ரயிலும் இன்னும் முக்கால் மணி நேரம் நிற்கும். அதன் என்ஜினும் டீசலுக்கோ, மின்சாரத்துக்கோ மாறத் தனியே பிரிந்து செல்லும். அதிலிருந்தும் இவனைப் போலவே ஓர் ஒற்றை மனிதன் எவனாவது பொழுதைக் கழிக்க இந்தக் கேன்டீனுக்கு வரலாம். பழகின முகமாகவும் அது இருக்கலாம். அதுவும் பூரியும் காப்பியும் வாங்கிக் கொண்டு இந்த மேஜைக்கே வந்து, இவனெதிரிலேயே உட்கார்ந்து கொள்ளலாம். ஏனெனில் இது ஜங்ஷன். சந்திப்புகள் நிகழ்ந்தே தீர வேண்டிய இடம்.

சொல்லி வைத்த மாதிரியே நிகழ்ந்தது. சங்கரனின் முன்னால் வந்து உட்கார்ந்த மனிதனுக்கு இவனது வயதே இருக்கலாம். தேனடை மாதிரி முகவாயில் தாடி வைத்திருந்தான். நெற்றியில் பட்டையாய்த் திரு நீறு பூசி இருந்தான். கழுத்தில் உத்திராட்சம் கட்டி இருந்தான்,. இடுப்புக்குக் கீழே கறுப்பு வேஷ்டி. சபரிமலைக்குப் போகிறவன். என்னவோ நினைத்து சங்கரன் தனக்குத் தானே சிரித்த போது, எதிராளி இவனை நெற்றி சுருங்கப் பார்த்தான்.

தான் சிரித்தது இவனைப் பாதித்திருக்குமோ என்று சங்கரனுக்கு உறுத்திய கணத்தில் தாடிக்காரன் தயக்கத்தோடு, “நீ.. சங்கரன் இல்லே...?” என்று இவனைப் பார்த்துத் தணிந்த குரலில் கேட்டான்.

சங்கரன் ஆச்சரியமாய் அவனை ஏறிட்டுப் பார்த்தான். தாடி அவனது அடையாளத்தைப் பெருவாரியாய் மங்கடித்திருந்தது. ஆனால் அதையும் மீறி அந்தக் குரல்...அந்தக் குரலுக்குரிய உதடுகள்..இடுங்கிய கண்கள்..எல்லாமாய் சங்கரனின் ஞாபகத் திரையில் சலனங்களை உண்டு பண்ண, அவன் ஆச்சரியமாய் ‘அவனா இவன்’ என்று யோசித்தான்.

“என்னத் தெரியலே..? நான் தான் சுந்தரம்..”

“மை குட்நெஸ்! ரேஷனலிஸ்ட் சுந்தரம்!  இது என்னப்பா வேஷம்?”

“அது இருக்கட்டும். நீ எப்படி இங்கே..”

சங்கரன் தான் வேலை பார்க்கிற இடம், போகிற ஊர் எல்லாம் சொல்லி, எதிர்த்திசையில் செல்கிற அந்த ரயிலில் தனது பெட்டி எண், இருக்கை எண் ஆகியவற்றையும் சொல்லிச் சிரித்தான்,

சுந்தரம் எதுவும் பேசாமால் எதிரில் இருப்பவனையே உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பழைய ஞாபகங்களை அசை போடுகிற மாதிரி அவன் முகபாவம் இருந்தது; அல்லது எதிராளியின் முகத்தை ஆராய்கிற மாதிரியும் இருந்தது.

சங்கரனே மௌனத்தைக் கலைத்தான். “நாம் பழகின காலம் எல்லாம் ரொம்பப் பசுமையா ஏதோ நேத்திக்கு நடந்த மாதிரி ஞாபகத்துல இருக்கு. பதினைஞ்சு வருஷமாவது இருக்காது, நாம கடைசியாப் பார்த்து? அதுக்கப்பறம் ஒரு ரெண்டு வருஷத்துக்கு நம்ம கிட்டக் கடிதத் தொடர்பு கூட இருந்ததா ஞாபகம். நாம கடைசியா சந்திச்ச அந்த சாயங்காலப் போது இன்னும் கூட நினைவுல இருக்கு. அன்னிக்கு ரங்கபுரம் துர்க்கை கோவில்ல பௌர்ணமி பூஜை அமர்க்களப் பட்டது. ஸ்பீக்கர் செட்டுலேருந்து ஒரே அம்மன் பாட்டுக்களாப் போட்டுத் தள்ளிக் கிட்டிருந்தாங்க. ’காஞ்சியில காமாட்சி, காசியில விசாலாட்சி, மதுரையில மீனாட்சி’ன்னு ஒரே புள்ளி விவரமாக் கொடுத்துண்டு ஒரு பாட்டு.. அப்ப நீ ஒரு கமென்ட் அடிச்சியே, “அம்மன் எத்தனை இடத்துல பிரான்ச் வச்சிருக்காய்யா’ன்னு....ஞாபகம் இருக்கா? எனக்கு இப்ப நெனச்சாலும் சிரிப்பு வருது..”

சங்கரன் பூரியை விண்டு வாயில் போட்டுக் கொண்டான். சுந்தரம் ரவாக் கிச்சடியில் இருந்து ஒரு மிளகாயைத் தேடி எடுத்து வெளியில் எறிந்தான். சங்கரனின் கூர்மையான ஞாபக சக்தியை வியக்கிறவன் மாதிரி முகத்தில் பிரகாசம் காட்டினான்.

“ஆனா உனக்கு அப்படியெல்லாம் பேசறது அப்பப் பிடிக்காதே?” என்ற சுந்தரம், சட்டென்று பேச்சை மாற்ற விரும்பி, “முந்தி எல்லாம் இதே கேண்டீன்ல ரவா கிச்சடின்னா எத்தனை முந்திரிப் பருப்பு கையில அகப்படும்? ஹ்ம்ம்..அப்படியும் ஒரு காலம் இருந்தது. அப்ப வீசினக் காத்து கூட இப்ப வீசற காத்தை விட மேன்மையானதா இருந்திருக்கணும்னு நினைக்கத் தோணுது.. எல்லாமே எப்படி மாறிப் போச்சு!”  என்று தொடர்ந்து பேசினான்.

‘சிலது தலைகீழா மாறிடுது.. சிலது கொஞ்சம் கொஞ்சமா மார்றது தெரியாம மாறுது. சிலது மாறாம அப்படியே இருக்கு. இந்த ரவுண்ட் டேபிள்; அந்த சுவர்க்கடிகாரம்..”

“அய்யர்  இருக்காரா இல்லையா?”

“அய்யர் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். பையன் தான் மேற்பார்வை பண்றானாம். பையனுக்கு இதை இம்ப்ரூவ் பண்றதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லேன்னு சொன்னாங்க. சந்நிதித்  தெருவுல ஒரு வீடியோ கடை தெறந்திருக்கானாம். நல்ல பிசினஸ். சிவன் கோவில் குருக்கள்லேருந்து அத்தனை பெரும் அவன் கிட்ட கஸ்டமர்ஸ்! லீஸ் முடிஞ்சவுடனே இதை வேற யாருக்காவது கொடுத்தாலும் கொடுத்திடுவான். இதெல்லாம் அப்பப்பக் கேளிவிப்படறது..அவ்வளவு தான். எல்லாம் செகண்ட் ஹான்ட் இன்ஃபர்மேஷன். நானும் இந்த ஊரை விட்டுப் போயி எத்தனை வருஷமாச்சு!”

சுந்தரம் ரொம்பவும் ஆச்சரியப்பட்டான். “நீ இங்க இல்லாமலேயே இத்தனை விஷயங்களைத் தெரிஞ்சு வச்சுருக்கியே? பெரிய ஆச்சரியம் தான். அந்த நாள்லேருந்தே உனக்கு எல்லாத்துலேயும் க்யூரியாசிட்டி அதிகம். பேசாம நீ ஒரு பிரஸ் ரிபோர்டராப் போயிருக்கலாம்!” சுந்தரம் சிரித்த போது, முன் பற்கள் இரண்டும் பக்க வாட்டுப் பற்களோடு தொடர்பின்றி வித்தியாசமான வெள்ளையாய் இருந்தன. அந்தக் காலத்தில் அந்த இரண்டு பற்களும் அவனுக்கு மங்கிப் பழுப்பாய்த் தெரியும். ஒரு வேளை புதுசாய்க் கட்டி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் அவனிடம் இந்த அவசரம் நிறைந்த குறுகிய இடைவெளியில் விசாரித்துக் கொண்டிருப்பது அசட்டுத் தனம். ஆனால் இந்த வேஷத்துக்கு எப்படி மாறினான் என்று மட்டும்   கேட்டுத் தெரிந்து கொண்டு விடவேண்டும். இல்லை என்றால் மண்டை வெடித்து விடும்.

சங்கரன் பேச வாயெடுக்கும் முன் சுந்தரம் மௌனத்தைக் கலைத்தான். “ஏம்பா..அந்தக் காலத்துல எல்லாம்     
நெத்தியில ஒரு சின்ன விபூதிக் கீத்தும் சந்தனப் பொட்டும் வச்சிக்காம வெளியில வர மாட்டியே. என்ன ஆச்சு அதெல்லாம்? வேர்வையில அழிஞ்சு போச்சா?”

சங்கரன் சட்டென்று பதில் சொல்லாமல் இன்னொரு பூரி விள்ளலை வாய்க்குள் தள்ளி, அதை நன்றாய்க் கடித்து மென்று விட்டுக் கொஞ்சம் தண்ணீர் குடித்தான். சுந்தரம் இன்னும் கொஞ்சம் கிச்சடியைக் கையில் எடுத்தான்.

“சுந்தரம்.. உனக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் சொல்லப் போறேன் இப்போ.....நான் அந்தப் பழைய சங்கரன் இல்ல. எனக்குக் கடவுள்  நம்பிக்கை எல்லாம் போயிப் பல வருஷம் ஆச்சு.”

சுந்தரம் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தவன் மாதிரி சங்கரனைப் பார்த்தான். இவனா? எப்படி நம்புவது இதை? செவ்வாய், வெள்ளி கோவிலுக்குப் போகத் தவற மாட்டான். பிரதோஷம் என்றால் கல்லூரிக்குக் கூட மட்டம் போட்டு விட்டு, நந்திகேஸ்வரர் சன்னதியில் பழி கிடப்பான். ஊரில் எந்த இடத்திலாவது பஜனை என்றால், இவன் தான் சுருதிப் பெட்டியைத் தோளில் மாட்டிக்கொண்டு நாலரைக் கட்டையில் கத்தியபடி முன்னால் நடந்து போவான். ‘கடவுள் இல்லை என்று எவனாவது சொன்னால் கோபமாக, ”கடவுள் இல்லாம சூரியன் எப்படி உதிக்கறதாம்? பூமி எப்படி சுத்தறதாம்?” என்கிற ரீதியில் எதிராளியைப் பதில் கூடச் சொல்ல விடாமல் தர்க்கத்தில் இறங்கி விடுவான். இப்போதும் ஞாபகம் இருக்கிறது. மேலத்தெரு பிள்ளயார் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, பி.காம். பரிட்சையைக் கூடப் பொருட்படுத்தாமல், ஏப்ரல் மாத வெய்யிலில் எப்படித் தெருத் தெருவாய் அலைந்தான்? அந்தப் பிள்ளையா இவன்?

சுந்தரத்தின் கண்களில் இருந்த வியப்பு சங்கரனின் கண்களிலும் தெரிந்தது. எது மூலம், எது பிரதிபலிப்பு என்று கண்டு பிடிப்பது கஷ்டம் தான்.

சங்கரனே பேசினான்; ”நான் எப்படி மாறினேன்கறது இருக்கட்டும்..நீ எப்படி இப்படி பக்திப் பழமா மாறினே? என்னால துளிக் கூட நம்பவே முடியலே. உங்கப்பா எப்பேர்ப்பட்ட சுயமரியாதை இயக்கத் தீவிர வாதி!”

சுந்தரத்தை நன்றாகவே நினைவிருக்கிறது.. ‘திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் என்றால், அப்புறம் மடையர்களே ஏன் தினமும் காலையில் பல் தேய்க்கிறீர்கள்? டூத் பேஸ்ட் செலவாவது மிச்சம் ஆகுமே?’ என்று கோவில் சுவரில் கரிக்கட்டியால் எழுதியவன் அவன். சைக்கிள் கேரியர் பெட்டியில் வெள்ளைப் பெயிண்டால் ‘கடவுளை மற..மனிதனை நினை” என்று எழுதி வைத்துக் கொண்டு ஊரை வலம் வருவான். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தை வகுப்பு மாணவர்களிடம் சர்க்குலேஷன் விட்ட விஷயம் முதல்வர் வரைக்கும் போக, பரம பக்தரான அந்தப் பிரின்சிபால் இவனை வேறு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிப் பத்து நாள் கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததும் கூட இப்போது நினைவுக்கு  வருகிறது.... அந்த சுந்தரமா இவன்?

சுந்தரம் லேசாய்ச் சிரித்துக் கொண்டே எழுந்திருந்து போய்க் கை கழுவி விட்டு இரண்டு பேருக்கும் சேர்த்து அவனே காபி வாங்கிக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தான். காபியிலிருந்து ஆவி பறந்து வந்து முகத்தில் குப்பென்று மோதியது. சுந்தரம் கைக்குட்டையால்  முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“சங்கரன்..பழசெல்லாம் வெறும் பிரமை. கனவு. நிஜம் மாதிரித் தோணற பிரமை. ஏன், நாம் ரெண்டு பெரும் சந்திச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த நிமிஷங்கள் கூட, நாம ரயிலேறினதுக்கபுறம் வெறும் பிரமை தான் இல்லியா? ‘தன்னம்பிக்கை தான் சத்தியம், தெய்வ நம்பிக்கை எல்லாம் பேத்தல்’னு எங்கப்பா சொல்லிக்கிட்டிருந்தார். அப்பா தான் என்னோட நம்பிக்கையா இருந்தார். என்னோட பலமா இருந்தார். என்னோட தைரியமா இருந்தார். அப்பா இல்லாத என்னைக் கற்பனை கூடப் பண்ண முடியாத அளவுக்கு ‘அப்பா பிள்ளையா’ நான் வளர்ந்தேன். அவரோட நம்பிக்கைகளே என்னோட  நம்பிக்கைகளா இருந்தது. ‘அறிவே பலம்; பகுத்தறிவு அதைவிட பலம்’னு அவர் அடிக்கடி சொல்வார். நண்பர்களுக்கு மத்தியிலே நின்னுக்கிட்டு அவர் அட்டகாசமாப் பண்ணற தர்க்கங்கள் எல்லாம் என்னைப் பிரமிக்க வைக்கும். அவர் படிக்கச் சொன்னதைப் படிச்சேன். பேசச் சொன்னதைப் பேசினேன். .யோசிக்கச் சொன்னதை யோசிச்சேன், நான் குழம்பறப்போ தெளிய வைக்கிறவராகவும் நான் பயப்படறப்போ தைரியம் ஊட்டறவராகவும் அவர் எப்பவும் என் கூடவே இருக்கப் போறார்னு நான் நெனச்சேன். ஆனா சங்கரன், திடீர்னு ‘பிளட் கான்சர்’ வந்து அவர் செத்துப் போனார். நான் அதிர்ச்சியிலயும் துக்கத்துலயும் இடிஞ்சு போனேன். ‘அறிவே பலம்’னு வாழ்க்கை முழுதும் பேசிக்கிட்டிருந்த அவரை மனித அறிவு ஏன் காப்பாத்த முடியாமப் போச்சுன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன். திடீருன்னு அப்பா காணாமப் போனதை என்னால ஜீரணிக்க முடியல. அவரோட ஞாபகங்கள் என்ன ராவும் பகலும் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுது. வெறும் அறிவு கடைசி வரைக்கும் ஒரு மனுஷனுக்குத் துணையா வர முடியுமான்னு எனக்கு சந்தேகம் வந்தது. சாம்பிராணி வாசனை, கற்பூர ஆரத்தி, குத்து விளக்கு வெளிச்சம், எல்லோரும் சேர்ந்து ஏகக் குரல்ல ஏத்தி இறக்கிப் பாடற நாம


சங்கீர்த்தனம், சீராத் தொடுத்துக் கோர்த்த புஷ்ப ஹாரங்களுக்கு  மத்தியில மயக்கற மாதிரி மந்தகாசம் பண்ற அந்தக் கிருஷ்ண விக்கிரகம்..எல்லாமாச் சேர்ந்து மெஸ்மரிசம் பண்ணி என்னை வசப் படுத்தி இருக்கணும்.... அப்பா நம்பின பகுத்தறிவுக்கும் மிஞ்சி ஒரு பிரபஞ்ச அறிவு இருக்கணும்னு எனக்குக் தோணிச்சு. நான் மாறிட்டதா உணர்ந்தேன். பழைய சுந்தரம் ஒரு கனவு. இறந்து போன என் அப்பாவைப் போல...

சுந்தரம் பேசி முடிக்கிற வரை, சங்கரன் அவனையே, காபியைக் கூட ஆற்றாமல் சுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். காபியில் இப்போது பாதி ஆவி அடங்கி இருந்த மாதிரி இருந்தது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். முதல் மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷம் தான் இருந்தது. சுந்தரம் காபியை வாயில் வைத்து லேசாய் உறிஞ்சிக் கொண்டே விழிகளை மட்டும் மேலே உயர்த்தி சங்கரனைப் பார்த்தான்..

சங்கரன் காபியை ஒரு மடக்குக் குடித்து விட்டுப் பேசினான். “எனக்கு எந்த அளவுக்குக் கடவுள் மேல நம்பிக்கையும் பக்தியும் இருந்ததுன்னு உனக்குத் தெரியும்.கல்யாணம் ஆகிக் குழந்தை பொறந்தது வரைக்கும் எல்லாம் எந்த மாற்றமும் இல்லாமத்தான் போயிண்டிருந்தது.. கலையில எழுந்திருச்சுக் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்லாமக் காபி கூடக் குடிக்க மாட்டேன்.  புயலே அடிச்சாலும் வெள்ளிக் கிழமை கோவிலுக்குப் போறது தவற மாட்டேன். குழந்தைக்கு ரெண்டு வயசானப்போ, குலதெய்வம் கோவிலுக்கு மொட்டை அடிக்கறதுக்காகக் குடும்பத்தோட போனோம். மொட்டை அடிச்சுட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டத் தோள்ல குழந்தையோடக்  கோவில் குளத்துல இறங்கினேன். படியெல்லாம் பாசியா இருந்ததைக் கவனிக்கல. கால் சறுக்கி நானும் குழந்தையும் தனித் தனித்தனியாத் தண்ணியில விழுந்தோம். எனக்கு வெறும் சிராய்ப்போட போச்சு. ஆனா குழந்தையோட தலை படிக்கல்லில மோதி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுது. சின்ன கிராமம். எந்த ஆஸ்பத்திரி வசதியும் இல்ல. டாக்சி புடிச்சுத் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிண்டு போனோம். ஒண்ணும் பிரயோஜனம் இல்ல. அவ்வளவு தான் சுந்தரம். ப்ரெயின் ஹாமரேஜ்னு சொன்னாங்க...குழந்தையை டாக்டரும் காப்பாத்தல; கடவுளும் காப்பாத்தல...”

பல வருஷங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு பெரிய சோகத்தை இப்போது அவனால் ஒரு தகவலைப் போல் சொல்லிக் கொண்டு போக முடிந்த போதும், அவனது குரலும் விரலும் மெல்ல நடுங்குகிற மாதிரி சுந்தரத்துக்குத் தோன்றியது. சங்கரனின் விரல் நடுக்கத்தில் டம்ளரில் இருந்த காபி மெல்லச் சலனித்துத் தளும்பியது. சுந்தரம் சம்பிரதாயமாய் “ஐ ஆம் சாரி..” என்று சங்கரனிடம் சொன்னான்.

சங்கரன் தொண்டையைச் செறுமிக்கொண்டு இன்னும் கொஞ்சம் காபி சாப்பிட்டான். ”சுந்தரம்..தன் சந்நிதியிலேயே ஒரு உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு கடவுள் என்ன கடவுள்? அந்தக் கடவுளால யாருக்கு என்ன பிரயோஜனம்? என் குழந்தை செத்துப் போனதுக்கு விதி தான் காரணம்னா, நடுவுல கடவுள்னு இன்னொண்ணு எதுக்கு? இந்த மாதிரி எல்லாம்  எனக்குக்குள்ளக் கேள்வி மேல கேள்வி எழுந்துது...”  சங்கரன் ஒரு நிமிஷம் இடைவெளி விட்டு, சுந்தரத்தை இப்போது நேருக்கு நேராய்ப் பார்த்து ஒரு வறட்டுப் புன்னகையோடு இப்படிச் சொன்னான். “ஸோ..நானும் உன்னை மாதிரியே மாறிட்டேன்...பட் இன் தி ஆப்போசிட் டைரக்ஷன்..”

டம்ளரில் இருந்த மீதிக் காபி முழுசுமாய் ஆவி அடங்கி ஆறிப் போய் இருந்தது. இருவருமே எதுவும் பேசாமல் சற்று நேரம் மௌனமாய் உட்கார்ந்திருந்தார்கள். சுவர்க் கடிகாரத்தின் முட்கள் எந்த சித்தாந்த மயக்கமும் இன்றித் தம் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தன.

ரயில்கள் கிளம்புவதற்கு முன்னறிவிப்பாய் முதல் மணி அடித்து விட்டது. அவற்றின் என்ஜின்கள்-ஒன்று டீசலுக்கும் இன்னொன்று மின்சாரத்துக்கும் மாறி இருக்க வேண்டும்....சுந்தரமும் சங்கரனும் மீதிக் காபியைக் குடிக்காமலேயே, எழுந்திருந்து ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டார்கள். சங்கரன் தன் விசிட்டிங் கார்டை சுந்தரத்திடம் கொடுத்து ‘ஊருக்குப் போய் மறக்காமல் தன்னோடு தொடர்பு கொள்ளச் சொன்னான். சங்கரன்  உற்சாகத்தோடு தலையை ஆட்டினான். பிறகு இருவருமே இப்போது எதிர் எதிர் திசைகளில் பிரிந்து தங்கள் தங்கள் வண்டிகளை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
*
(திண்ணை 27 May, 2013 )

No comments:

Post a Comment