Friday, October 11, 2013

எனது முதல் சிறுகதை (தினமணி கதிர், செப்.1972)


அப்பா ஈசிசேரில் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஸ்டூலில் எவர்சில்வர் செம்பு நிறையத் தண்ணீர். அவர் அந்தப் புத்தகத்தைப்படித்து முடிப்பதற்குள் செம்புத் தண்ணீர் பாதி காலி ஆகி விடும்.

நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். தெரு விளக்குகள் எல்லாம் எரியத் தொடங்கி விட்டன. அந்தக் கோடியில் உள்ள விளக்கு மட்டும் ‘மினுக் மினுக்’ என்று சாவுக்குப் போராடும் நோயாளியைப் போல் மங்கி மங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

தெருவில் ஓரிருவர் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்த்த வீட்டுப் பெண் வெளியில் எறிந்த எச்சில் கலைக்கு இரண்டு நாய்கள் பாய்ந்து அடித்துக் கொள்கின்றன. இந்த இரைச்சலில் பக்கத்து வீட்டுப் பாட்டியின் இருமல் சத்தமும் எங்கோ அழும் ஒரு குழந்தையின் வீறலும் கலந்து ஓரே களேபரமாய்க் காதில் ஒலிக்கிறது. மேஜை மீது குழம்பிக் குவிந்து கிடக்கும் புத்தகங்களைப் போல, இந்தச் சூழ்நிலையின் ஆரவாரக் குழப்பங்கள் மனசைப் பைத்தியம் பிடிக்கச் செய்து விடுவது போலத் தோன்றுகின்றன.

ஒரு விதக் கலக்கத்தோடு நான் திரும்பிப் பார்க்கிறேன். அப்பா அப்படியே அமர்ந்த படி படித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் குழப்பத்தில் அவரால் எப்படி நிம்மதியாய்ப் படிக்க முடிகிறது? அவரால் முடிகிறது...அவர் எந்தப் புத்தகக் குவியலிலும் கீதையை அடையாளம் கண்டு கொள்வார். தாகூரைப் புரிந்து கொள்வார். மாக்ஸ் முல்லரை இனம் கண்டு .பிடிப்பார். அவருக்கு அவரைச் சுற்றி நடக்கின்ற குழப்பங்கள் அனாவசியம். ஏன், என்னுடைய மனத்தில் பிரவாகித்துக் கொண்டிருக்கும் துயரங்கள் கூட அவரை ஒன்றும் செய்வதில்லையே?

என் மனம் கனக்கிறது. மனசின் கனம்  கண்ணீரில் லேசாக வழிந்து கரைகிறது. அம்மா என்று எனக்கு ஒருத்தி இருந்திருந்தால் இப்படி நான் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்க அனுமதிப்பாளா? இப்படிப் புத்தகங்களைக் கட்டிக் கொண்டு உலக சிந்தனை இல்லாமல் ஒரு மனிதர் எனக்குத் தந்தையாக வாய்த்ததில் எனக்கு மிஞ்சியது என்ன? என் கழுத்தில் ஒரு தாலியைக் கட்ட எந்த மனிதனும்  தயாராய் இல்லை. என் கழுத்தில் ஏற வேண்டிய தாலி அப்பாவுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை.  


உள்ளே சோற்றுக்காக வைத்த உலைநீர் கொதித்துப் பொங்கி ஸ்டவ்வில் வழிகிற சத்தம் கேட்கிறது. ஸ்டவ் ‘சொய்’ என்று சத்தம் போட்டுக் குமுறுகிறது. குமுறட்டும், நன்றாகக குமுறட்டும். உணர்ச்சி இல்லாத ஸ்டவ்விடத்தில் எனக்கென்ன இரக்கம்?

ஒரு முடிவோடு அப்பாவின் முன் போகிறேன். என்னுடைய பலவீனமும் என்னோடு கூடவே வருகிறது.

‘அப்பா!”

அப்பா நிமிர்ந்து பார்க்கிறார். 

“அப்படி என்ன படிப்பு, உலகமே புரியாத மாதிரி?”

“இதைப் படிக்கிறப்போ தான் எனக்கு உலகமே புரியறதும்மா. என்ன அருமையா இந்த உலகத்தைப் படம் பிடிச்சாப்பல எழுதி இருக்கான் தெரியுமா?”

எனக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வருகிறது.

“உங்க பொண்ணையே புரிஞ்சிக்க முடியல உங்களால. உலகத்தைப் புரிஞ்சுண்டு  என்ன செய்யறதா உத்தேசம்?”

“உனக்கு என்ன ஆயிடுத்து?”

“இன்னும் என்ன ஆகணும்? போன வாரம் என்னப் பொண் பாக்க  வந்தவன் நேத்து ஏதோ சொல்லி அனுப்பி இருந்தானே, என்ன அது?”
அவர் என்னைக் கேள்விக் குறியோடு பார்ப்பது எனக்குப் புரிகிறது.

“தெரியாமத் தான் கேக்கறியாம்மா?”

அப்பா தலையைக் குனிந்து கொள்கிறார்.

நான் சொல்கிறேன்.

“எனக்குத் தெரியும். வழக்கப் படி இந்தப் பிள்ளையும் அதைத் தானே சொல்லி அனுப்பினான்? எனக்குக் கால் சரியில்ல. நான் சாச்சு சாச்சு நடக்கறேன். அதானே அப்பா?”

என் மனசுக்குள் துக்கம் வெடித்து விடும்போலப் பொங்கிக் கொண்டு வருகிறது. அதை உள்ளூர அடக்கிக் கொண்டு நிற்கிறேன்.

அப்பா கையிலிருந்த புத்தகத்தை மடித்து வைக்கிறார்.

“நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புறியறதும்மா. ஆனா, நான் வேற என்ன பண்ண முடியும்? எத்தனையோ டாக்டர்கள் பார்த்தும் உன் பலவீனத்தைக் குணப்படுத்த முடியல்ல. எத்தனையோ மகான்கள்  வந்தும் இந்த சமூகத்தோட பலவீனத்தைக் குணப்படுத்த முடியல்ல...”
என் கண்ணில் நீர் முட்டுகிறது.

அவர் பேசாமல் அமர்ந்திருக்கிறார். அவர் விரல் கூட என் கண்ணீரைத் துடைப்பதற்கு நீளவில்லை. “அழுது என்ன பிரயோஜனம்?” என்கிறார் அவர்.

நான் ஆவேசம் வந்தவள் போலச் சொல்கிறேன்.
“நான் சாகப் போறேன்..”

:”எதுக்கு?”

“எனக்கு இங்க வாழறதுக்குப்  பயமாயிருக்கு..”

“வாழறதுக்கே பயமாயிருக்குங்கறே..எப்படித் தைரியமா சாகப் போறே?” என்று கேட்டுவிட்டு அவர் பழையபடி புத்தகத்தை எடுத்துப் பிரிக்கிறார். ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்கிறார்.

“சரி. போம்மா. வாசல் கேட்டை உள் பக்கமாத் தாப்பாப் போட்டுட்டுப் போ..”

குரலில் தான் எத்தனை நிதானம்! எங்கேயோ ஊருக்குப் போகிறவளை வழி அனுப்புகிறவர் போலல்லவா இவர் பேசுகிறார்! எவ்வளவு நெஞ்சழுத்தம்!

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அப்பா ஒரு தத்துவவாதி. அவரைப் பொறுத்த வரை தற்கொலையும் வாழ்க்கையும் ஒன்று தான்!
ஆவேசத்தோடு வெளியே வருகிறேன். காற்று சில்லென்று உடம்பில் உராய்ந்து விட்டுப் போகிறது.  நான் வெறி பிடித்தவள் போல் எங்கேயோ நடக்கிறேன். எங்கு போகிறன் என்பது எனக்கு அப்போது பிரச்சனையாக இல்லை. கால்கள் தாமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து சின்ன ரயில்வே லெவல் கிராசிங் ஒன்று வருகிறது. ‘கேட்’டை அப்போது தான் நீலச் சட்டை அணிந்த ஒருவன் மெள்ளத் தள்ளிக் கொண்டு போய்ச் சாத்திக் கொண்டிருக்கிறான். கேட்டின் தலையில் சின்னதாய் ஒரு சின்ன சிவப்பு விளக்கு அழுது கொண்டு எரிகிறது. ‘என் சாவை இந்த கேட் தடுத்து நிறுத்தி விடப் போகிறதோ’ என்று ஏளனமாக எண்ணிப் பார்க்கிறேன்.

லெவல் கிராசிங் சிவப்பு விளக்கும் சாலை விளக்குகளும் மங்கி மறைந்து விடுகின்றன.. காலுக்குக் கீழே ரயில் பாதையில் கரடு முரடான  கல்லும் முள்ளும் வேகத்தைத் தடை செய்து கால்களைப் பதம் பார்க்கின்றன. என்னைச் சுற்றி இருள் பரவிக் கொண்டிருக்கிறது.

எத்தனை தூரம் நடந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. காலில் கல்லோ முள்ளோ குத்தி ரத்தம் கசிகிறது. நான் என்னை மறந்து காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வலியால் முனகுகிறேன். எனக்குக் கூடவே  சிரிப்பும் வருகிறது. சிறிது நேரத்தில் உடல் சிதறிச் சிதைந்து சாகப் போகிறவள் இந்தச் சின்ன வலி பொறுக்காமல் இப்போது  முனகுவதை நினைத்து.

இன்னும் கொஞ்ச நேரம் தான். இந்த வழியாகப் போகிற எக்ஸ்பிரஸ்  ரயில் வீல் என்று அலறிக் கொண்டு காவேரிப் பாலம் மீது அசுரத்தனமாக ஓடி வரும். பாலத்தைக் தாண்டி, அந்த வளைவில் வருவதற்கு நாலைந்து நிமிடங்கள் கூட ஆகப் போவதில்லை.

என் உடம்பு முதன் முறையாக நடுங்குகிறது. ஏதோ ஓர் அசட்டுத் துணிவில் தண்டவாளத்தில் குறுக்காகப் படுக்கிறேன். முதுகைக் கற்களும், முட்களும் தண்டவாளத்தின் இரும்புத்  தகடுகளும் கிழித்து விடுவது போலக் குத்துகின்றன.

‘வாழறதுக்கே பயமாருக்குங்கறே, எப்படித் தைரியமா சாகப் போறே?” என்று அப்பா கேட்ட கேள்வி என் நினைவில் மோதுகிறது. நிஜமாகவே வாழ்வதை விட சாவதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டுமோ?
திடீரென்று என் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓர் அலறல்.

கட..கட..கட.. கட..  ரயில் வந்து கொண்டிருக்கிறது. நெஞ்சு ஏன் இவ்வளவு வேகமாகத் துடிக்கிறது? உடம்பு ஏன் இப்படிப் பரபரக்கிறது? தலையும் முகமும் ஏன் இப்படி ஜிவு ஜிவு என்று கொதிக்கின்றன? முகமெல்லாம் ஏன் வேர்த்துக் கொட்டுகிறது?

திடீரென்று அந்த ஓசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஓய்ந்து போகிறது. தொடர்ந்து ரயில் வீறிட்டு அலறுவது இருளின் அவைதியைக் கிழித்துக் கொண்டு கேட்கிறது.எனக்குப் புரிந்து விட்டது. அவுட்டரில் இன்னும் சிக்னல் விழவில்லை. ரயில், பாதிப் பாலத்தில் நின்று கொண்டு ஓலம் இடுகிறது,

கீழே படுக்கும்போது இருந்த வெறியை விட அதிகமான வெறியோடு எழுந்து கொள்கிறேன். திடீரென்று என்னை யாரோ இடறிக்கொண்டு செல்வது தெரிகிறது. பின்னால் யாரோ ஓடி வரும் சப்தம். நான் பயத்தோடு பக்கத்தில் ஒரு புதர் மறைவில் மறைகிறேன். தண்டவாளங்களின் நடுவே ஓர் உருவம் நடந்து செல்கிறது. அதன் நடை இயல்பான நடையாகத் தெரியவில்லை எனக்கு. பின்னால் யாரோ ஓடி வருகிறார்கள். பின்னல் வருபவன் முன்னால் நடந்து செல்பவனை நெருங்கி அவன் முதுகைச் சேர்த்துப் பிடித்து ரயில் பாதையிலிருந்து வெளியே இழுத்து வருகிறான். அவன் தோளைப் பிடித்துக் குலுக்குகிறான். இருளில் அவர்கள் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பின்னல் இருக்கிறவனின் குரல் எனக்குத் தெளிவாகக் கேட்கிறது.

“ஏண்டா, பாவி. கொஞ்ச நேரம் நான் பாக்கலேன்னா உன் கதி என்ன ஆயிருக்கும்? ரயில்ல அடிபட்டுச் செத்துப் போயிருப்பியே? இப்படித் தூக்கத்தில் நடக்கற வியாதிய வச்சிண்டு எத்தன நாள் காலம் தள்ளுவே? நல்ல வேளை, நான் பாத்துட்டுப் பின்னாலேயே ஓடி வந்ததால நீ இன்னிக்குப் பொழச்சே..ஆனா தினம் தினம் உன்ன யாரு இப்படிப் பாதுகாக்க முடியும்?.”

ரயிலின் வீரல் ஒலி மறுபடியும் கேட்கிறது. குப்..குப்.. என்று அது கிளம்பும் சத்தமும் கேட்கிறது. பாலத்திலிருந்து ரயில் புறப்பட்டு விட்டது.நான் மௌனமாகப் புதர் மறைவிலேயே நிற்கிறேன். விழித்துக் கொண்டே சாவை நோக்கி நடந்து வந்தவளுக்கும் தூங்கிக் கொண்டே சாவை நோக்கி வந்தவனுக்கும் ஒரு நிமிஷம், தான் நின்றதின் மூலம் சாவை நிறுத்தி விட்ட அந்த ரயில் இப்போது எங்களை வேகமாகக்  கடந்து போகிறது. .அதன் ஹெட்-‘லைட் வெளிச்சத்தில் எனக்கு முன்னால் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த அந்த இருவரில் ‘தூங்கிக் கொண்டே’ சாகத் துணிந்தவனைக் காண எண்ணிப் புதர் மறைவிலிருந்து எட்டிப் பார்க்கிறேன்.

அடுத்த வினாடி என் முகம் குப்பென்று வியர்க்கிறது. போன வாரம் என்னைப் பெண் பார்க்க வந்த அவன் தான் இவன்! அப்போது கூடத் தூங்கிக் கொண்டே தான் என்னைப் பார்க்க வந்தானோ? இப்படி ஒரு பலவீனத்தைத் தன்னிடம் வைத்துக் கொண்டா இவன் என் பலவீனத்திற்கு விலை கேட்டான்?

ரயில் எங்கள் மூவரையும் தாண்டி விரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் சக்கரங்களையே வெறிக்கப் பார்த்தபடி நிற்கிறேன். இந்தச் சக்கரங்களில் பட்டுச் சிதைந்து சின்னா பின்னமாகிப் போக இருந்தவள் அல்லவா நான்? ஒரு நிமிஷ தாமதம் எனக்கு வாழ்க்கையைப் புரிய வைத்து விட்டது.

நான் வந்த வழியே திரும்பி நடக்கிறேன். சாய்ந்து சாய்ந்து நடக்கிறேன். எனக்கு அதைப் பற்றி இப்போது கவலை இல்லை. வீட்டில் அப்பா, முன் இருந்த மாதிரியே ஈஸிசேரில் சாய்ந்தபடி இருப்பார் என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பி வந்ததைக் கூட ஆச்சரியமாய்ப் பார்க்க மாட்டார் அவர். “நீ திரும்பி வந்துடுவேன்னு எனக்குத் தெரியும். தற்கொலை பண்ணிக்க ரொம்பத் தைரியம் வேணும்..”  என்பார்.

“நான் இனிமே அதப் பத்தியெல்லாம் நினைக்க மாட்டேன் அப்பா. அப்புறம் நான் சாச்சு சாச்சு நடக்கறேன்னு வரவா எல்லாம் சொல்லிட்டுப் போயிடறா இல்லையா? ஆனா இந்த சமூகத்துல யாருமே நேரா நடக்கறதில்ல அப்பா..நெறையப் பேர் தூங்கிண்டே கூட நடக்கறா அப்பா!” என்பேன். அவருக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது. ஆனாலும் புரிந்த மாதிரிச் சிரிப்பார்.

வீட்டிற்குப் போனவுடன் முதல் வேலையாய் மேஜை மீது அலங்கோலமாகக் கிடக்கும் புத்தகங்களை அழகாக அடுக்கி வைப்பேன். அவற்றை எல்லாம் இனிமேல் ஒன்று விடாமால் அப்பாவுக்குப் போட்டியாகப் நானும் படித்துக் கொண்டிருப்பேன்.

என் மனம் காற்றை விட லேசாகி விடுகிறது..


நான் நடந்து வருகிற பாதையைப் பார்க்கிறேன். தொலைவில் ரயில் பாதை வளைந்து திரும்பும் இடத்திலிருந்து பார்த்தால் காவேரிப் பாலம் கரிக்கோடு போல இந்த இருட்டிலும் தெளிவாகத் தெரியும். நாளைக்கும் இதே நேரத்தில் ஒரு ரயில் காவரிப் பாலத்தில் வரும். நாளைக்கு மட்டுமா? தினமும் வந்து போய்க் கொண்டு தான்  இருக்கும். ஆனால், இனிமேல் இப்படி நான்  பைத்தியக்காரி மாதிரி காலில் குத்திய முள்ளைக் கூடப் பொருட்படுத்தாமல் ஓடி வந்து சாவதற்காக ரயில் பாதைக்கு நடுவில் படுத்துக் கொண்டிருக்க மாட்டேன்..     
*


பின் குறிப்பு  :

பத்திரிகையில் வெளி வந்த எனது முதல் சிறுகதை இது. பிரக்ஞை பூர்வமாக நான் எழுதிய முதல் சிறுகதையும் இது தான். அதற்கு முன்னால் நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையிலும் பிற சந்தர்ப்பங்களிலும் சிறுகதை வடிவங்களைப் பற்றிய அரை குறை அறிவோடு பயிற்சிக்காக சில கதைகள் எழுதியதுண்டு. அவை எல்லாம் பட்டியலில் சேர்வதற்கான தகுதி வாய்ந்தவை அல்ல. 

இந்தக் கதை தினமணி கதிரில் 1972-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பிரசுரமானது. அப்போது எனக்கு வயது இருபத்தொன்று. சென்னையில் கல்லூரிப் படிப்பு முடிந்து (என் தந்தை இருந்த) மன்னார்குடியில் வந்து தங்கி இருந்த காலம் அது. வேலையின்மை, சுய விரக்தி, குடும்பச் சிக்கல்கள், எதிர்காலம் பற்றிய வெறுமை உணர்வு போன்ற குழப்பமான மன உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டு, கூடவே அடிக்கடித் தற்கொலை எண்ணங்களும் தலை காட்டிக் கொண்டிருந்த ஒரு கலவையான மனோ நிலையில் இந்தக் கதையை நான் எழுதினேன். இருந்தும் கதையை ஒரு வித ‘ஆப்டிமிஸ’த்தோடு தான் முடித்திருந்தேன். 

அந்தக் கதையைத் தினமணி கதிருக்கு அனுப்பி வைத்த போது கதையோடு கூடவே, தினமணி கதிரில் என் கதை வெளியாவதற்கான நியாயங்களைக் கோடிட்டுக் காட்டி ஒரு நீண்ட கடிதத்தையும் அப்போது தினமணி கதிர் ஆசிரியராய் இருந்த சாவிக்கு எழுதி இருந்தேன். அனுப்பிய பின்னர் தான் நான் அப்படி ஒரு கடிதத்தை எழுதியதைத் தவிர்த்திருக்கலாமோ என்று உறுத்தியது. 'சரி..இல்லாவிட்டாலும் கூட நம் கதையை எல்லாம் இவர்கள் பிரசுரித்துக் கிழிக்கப் போகிறார்களாக்கும்.." என்று நினைத்து, நம்பிக்கையின்றிக் கதை தபாலில் திரும்பி வரும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். 

கிட்டத்தட்டப் பதினைந்து நாட்கள் கழிந்தன. கதை திரும்பி வராததால் ஒரு வேளை பிரதி குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கலாம் என்று எண்ணி சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப் படுகிற மாதிரி, அன்றைய தபாலில் அந்த வாரத் தின மணி கதிர்ப் பிரதி ஒன்று வந்தது. அதில் என் கதை பிரசுரமாகி இருந்ததைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷ உணர்வு எப்படி இருந்தது என்பது, இருபது வயதில் தனது படைப்பை ஒரு பெரிய பிரபலமான பத்திரிகையில் முதல் முதலாக அச்சில் பார்க்க நேர்கிற பிற சக எழுத்தாளர்களுக்கு மட்டுமே புரியும்.

அந்தக் கதை பிரசுரமாகிச் சில நாட்களுக்குப் பிறகு கடைதெருவில் எதிர்ப்பட்ட எனது பெரும் மரியாதைக்குரிய பழம் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு, “உன் கதையைத் தினமணி கதிர்ல படிச்சேன். நன்னா வந்திருக்கு. நெறைய எழுது..” என்று என்னிடம் சொன்ன போது, அதை விட அதிக சந்தோஷமாக இருந்தது. அப்புறம் இன்னொரு ஆச்சரியமும் எனக்குக் காத்திருந்தது. பதினைந்து நாட்களுக்குப் பிறகு என் பெயருக்குக் கதிரிலிருந்து அறுபது ரூபாய்க்கான காசோலை ஒன்று வந்தது தான் அது. எனக்கு நிஜமாகவே தலைகால் புரிய வில்லை. கதிரில் வந்த எனது கதையை எனக்கு நானே பல தடவை படித்துப் படித்துப் பார்த்து மகிழ்ந்த மாதிரி, அந்தக் காசோலையை, வங்கியில் போடுவதற்கு முன் பல தடவை திரும்பத் திரும்பக் கைகளால் தடவி தடவிப் பார்த்து மகிழ்ந்தேன். 

ஏனென்றால், முன்னது எனது முதல் ‘பிரசவம்’ என்றால் பின்னது எனது முதல் சம்பாத்தியம் அல்லவா!





No comments:

Post a Comment