Tuesday, October 23, 2018

பெரியார் பற்றி....


பகுத்தறிவுக் கொள்கைகள் ஒரு தனி மனிதருக்குச் சொந்தம் இல்லை.பகுத்தறிவுக் கொள்கைகள், சடங்குகளையும், மத நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குவது போன்றவை சார்வாகன், புத்தர் காலத்திலிருந்து உள்ளது தான். பெரியார் அவற்றை சுயமாகக் கண்டு பிடிக்கவில்லை. பெரியார் அதைக் காலத்தின் தேவைக்கேற்பத் தைரியமாக முன்னெடுத்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அவரது பகுத்தறிவு கூட வெறும் இந்து மதத்து மூடநம்பிக்கைகளையும் பிராமணர்களையும் சாடுவது என்பதாகவே குறுகிப் போனது. உண்மையான பகுத்தறிவு வாதி எல்லா மதங்களையும் சமமாக விமர்சிப்பவன். எந்த மதத்தைச் சாடினால் தன் பாதுகாப்புக்கு பங்கம் வராது என்பதை அவர் புத்திசாலித்தனமாக அறிந்து வைத்து செயல்பட்டதாகவே தோன்றுகிறது. ஏற்கெனவே சமூகத்தில் இலை மறை காய் மறைவாக உள்ளூரக் கனன்று கொண்டிருந்த பிராமணர்கள் மேலான அதிருப்தியின் காரணமாய், அவர் தனது 'பகுத்தறிவு'ப் பிரச்சாரத்தில் பிரதானப்படுத்திப் பேசிய 'பிராமணத் துவேஷம்', அவரது கடவுள் மறுப்பு வாதத்துக்குக் கவசமாக மாறியது.
பெரியாரின் பிரசாரத்தில் இருந்த கடவுள் மறுப்பு, சடங்கு மறுப்பு, பெண் விடுதலை போன்ற பிற அம்சங்கள் தமிழ்ச் சமூகத்தில் பெரிய அளவிலான எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. மாறாக இளைஞர்கள் மத்தியில், சமூகத்தின் அத்தனை தீமைகளுக்கும் பிராமணர்கள் மட்டுமே மூல காரணம் என்கிற ஒரு தவறான கருத்தை முன்னிறுத்தி, தீவிர பிராமண துவேஷத்தை அவர்கள் மனசில் விதைத்ததிலேயே முடிந்தது. பெரியாரின் பிரச்சாரம் சமூகத்தில் பிராமண ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது உண்மை என்றாலும், அதற்கு மாறாக மற்ற ஜாதி இந்துக்களின் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், சமூகத்தை, பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்று அபத்தமாய்க் கூறு படுத்தியது.
எந்த ஒரு சமூகத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி, ஒரு கர்ம யோகியாய்ப் பெரியார் உலகின் மொத்த மதங்களின் மூடத் தனங்களையும் எதிர்த்து சமமான அழுத்தத்தோடு பிரச்சாரம் செய்ததாய் நான் நம்பவில்லை. இதைச் சொல்வதனால் எனக்குப் பெரியார் மீது மரியாதை இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. எனக்கு நிறைய விஷயங்களில் பெரியாரைப் பிடிக்கும். குறிப்பாய்ப் பெண்ணியம் குறித்த அவரது சிந்தனைகள் காலத்தை விஞ்சியவை. ஆனால் அவை எதுவும் நிற்கவில்லை. பிராமண வெறுப்பு மட்டுமே பெரியார் விட்டுச் சென்ற எச்சமாய் அவரது சந்ததியருக்கு எஞ்சியது. பெண் விடுதலை பேசிய பெரியாரின் பிற்காலச் சீடர்கள் பெரியார் படத்தில் பெரியார் மனைவி மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கக் கூடாது என்று அபத்தமாகப் போர்க்கொடி பிடித்தார்கள்.
ஜெயகாந்தன் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது: "பெரியாரையும் அண்ணாவையும் பார்க்காமல் இருந்தால் நான் ஒரு கம்யூனிஸ்டாகி இருப்பேன் என்று கருணாநிதி சொல்கிறார். ஆனால், பெரியாரையும் அண்ணாவையும் பார்த்ததால்தான் நான் கம்யூனிஸ்ட்டானேன்!"

No comments:

Post a Comment