Saturday, November 2, 2013

கதை கதையாம் காரணமாம்



ஒவ்வொரு பண்டிகைக்குக்கும் பின்னால் ஒவ்வொரு கதை சொல்லப் படும். சில சமயங்களில் ஒரு பண்டிகைக்குப் பின்னால் பல கதைகளும் இருப்பது உண்டு. அந்த வகையில் இந்த தீபாவளிக்குப் பின்னால் சுவாரஸ்யமாய் நிறைய கதைகள் இருக்கின்றன. 


நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்றதாய்த் தமிழ் நாட்டுக் காரர்களும்,சத்தியபாமா கொன்றதாய்க் கர்நாடகக் காரர்களும், காளி கொன்றதாய் வங்காளத்துக் காரர்களும் தீபாவளி கொண்டாடுவதற்குக் கதை சொல்கிறார்கள். யார் யாரைக் கொன்றிருந்தாலும், கொல்லப் பட்டது 'அசுரனே' ஆயினும், ஒரு கொலையைக் கொண்டாடுவதில், தார்மீக ரீதியில் மனசு உறுத்தினாலும், மனசுக்கு இதமாய் மற்ற கதைகளும் கூடவே வருகின்றன.



உதாரணத்திற்கு, வட இந்தியர்கள், ராமன் பதினாலு வருஷங்கள் வனவாசம் முடிந்து நகரம் திரும்பியதை அயோத்தி மக்கள் வீதிகள் தோறும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடிய நாளாய்த் தீபாவளிக்கு இன்னும் கொஞ்சம் நாசூக்கான கதை வைத்திருக்கிறார்கள். 'வன வாசம் முடிந்து நகரம் மீளுதலில்' உள்ள குறியீடுகளை நாம் நமது பின் நவீனத்துவ அல்லது முன் நவீனத்துவ வாதிகளுக்கு இப்போதைக்கு விட்டு விட்டு மற்ற கதைகளுக்குப் போகலாம்! 



ஜைனர்களும் தீபாவளியை விட்டு வைக்கவில்லை. மகாவீரர் இந்த நாளில் தான் நிர்வாணம்(முக்தி) அடைந்ததாய் அவர்கள் நம்புகிறார்கள். சீக்கியர்களுக்கோ குரு ஹர கோவிந்த் முகலாயச் சிறையிலிருந்து விடுதலை அடைந்து அமிர்தசரஸ் திரும்பியது இதே தீபாவளி நன்னாளில் தானாம். 



ஆக, இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் எல்லாரும் அவரவர்க்குகந்த வேறு வேறு கதைகளோடு ஒரே தீபாவளியை நாடெங்கும் பன்னெடுங்காலமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதே ரீதியில், நபிகள் நாயகம் மதீனாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பிய நாளும், ஏசு கிறிஸ்து சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த நாளும், மோசஸ் இஸ்ரேலியர்களை எகிப்திலிருந்து விடுவித்து செங்கடலைக் கடந்து கூட்டிப் போன நாளும் இதே தீபாவளியாக இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம் தான்! 



அப்படி இருந்திருந்தால் மொத்த உலகமும் நமது தீபாவளியைப் பட்டாசு வெடித்து, மங்கள ஸ்நானம் பண்ணிக் கொண்டாடி இருக்கும். அப்போது, ரம்ஜானுக்கும், கிறிஸ்துமசுக்கும் தயங்காமல் வாழ்த்துச் சொல்லி விட்டு தீபாவளிக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கும் நம் உள்ளூர்ப் 'பகுத்தறிவு சிங்கங்கள்' வேறு வழி இன்றி தீபாவளிக்கும் வாழ்த்துச் சொல்லும் நிலை உருவாகி இருக்கும்!



சரி. எந்தக் கதை எப்படிப் போனாலும், எத்தனை கதைகளை எப்படிச் சொன்னாலும், பண்டிகைகளுக்குப் பின் உள்ள கதைகளில் பகுத்தறிவைத் தேட வேண்டியதில்லை என்பது தான் அடியேனது தாழ்மையான அபிப்பிராயம்.



பண்டிகைகளுக்குப் பின் உள்ள உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் மட்டுமே கணக்கில் கொள்வோம். ஏனெனில், இந்தப் பண்டிகைகள், கதைகளை மட்டும் தம்முள் சுமந்து கொண்டு வராமல், நமது குழந்தைக் காலத்து ஞாபங்களையும் தம்முள் சுமந்து கொண்டிருக் கின்றன. மீண்டும் மீண்டும் குழந்தைகளாக மாற நமக்கும் இந்தப் பண்டிகைகளை விட்டால், வேறு சந்தர்ப்பங்கள் எப்போது தான் கிடைக்கும், சொல்லுங்கள்?


      -( Art Courtesy: Bapu @http://bapuartcollection.com)

No comments:

Post a Comment