Friday, November 15, 2013

கனவில் ஒரு தூக்கம்


ந்த நேரத்தில் நித்யா அங்கு வருவாள் என்று எதிர்பார்க்காததாலேயே பிரபு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான். ஆனால் அந்த ஆச்சரியத்தின் சாயல் எதுவுமே இன்றி, வழக்கத்துக்கு மாறான சோர்வுக் குறிகளோடு வதங்கிய முகமாய் அவள் நிற்கவே, அவனது ஆச்சரியம் சட்டென்று கரைந்து அதிர்ச்சியாய் இறுகியது.

அவள் ‘உள்ளே வரட்டுமா’ என்கிற மாதிரி கண்களை அசைத்தாள். ’இவளின் இந்த விழி அசைவுகளுக்கு மட்டும் என்ன விலை மதிப்பிடலாம்?’ என்று ஏனோ அர்த்தமே இன்றி எண்ணி ஒருவித உள் நெகிழ்ச்சியோடு அவளை அறைக்குள் அழைத்துப் போய் உட்காரச் சொன்னான் பிரபு.

கொஞ்ச நேரம் அவனையே கண் கொட்டாது பார்த்த நித்யா, அவனைப் போலத் தானும் புன்னகைக்க வேண்டும் என்று எண்ணி முயற்சி பண்ணித் தோற்றுப் போனாள்.

“இந்த நேரத்துல நான் ஏன் இங்க வந்தேன்னு நீங்க கேப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க கேக்கவே இல்ல...”

நித்யா இதைத் தயக்கங்களோடு சொல்கிற போது அவளின் இளஞ்சிவப்பான நெற்றிப் பொட்டிலும், இமை விளிம்பிலும் ஓரிரு வியர்வைத் துளிகள் அந்த ஊதற்காற்றிலும் உருவாகி இருந்தன.

அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். அதன் விளிம்பில் இருந்த இரண்டு பெரிய ‘யூஃபோம்’ தலையணைகளில் ஒன்றை ஒரு குழந்தையைத் தூக்குகிற லாகவத்தோடு தூக்கித் தன் மடியில் வைத்து அழுத்திக் கொண்டான். “இந்தக் கேள்வியை இந்த அறை நிலைப்படியிலேயே உன்கிட்டே என் பார்வையாலேயே நான் கேட்டுட்டேன். அதை நீ புரிஞ்சிக்கிட்டிருப்பேன்னு நான் நெனச்சேன். என்னுடைய பார்வைகளை நீயோ, உன்னுடைய பார்வைகளை நானோ அந்தந்த அர்த்தங்களோட அப்படியே புரிஞ்சிக்கறதுல இதுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் நிதானிச்சுக் குழம்பினதில்ல. இப்போ, உன் கிட்ட மட்டும் ஏதோ ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டுப் போயிருக்குங்கற மாதிரி, எனக்கு நெனைக்கத் தோணுது. “

அவள் தன் கைப்பையின் ‘ஜிப்’பை எதையோ எடுக்க நினைக்கிறவள் மாதிரி திறக்க ஆரம்பித்தாள். அப்போது ஏனோ அவளது மருதாணிச் சிவப்பேறிய அந்த மெல்லிய விரல்கள் அங்கங்கே தயங்கித் தயங்கி அசாத்தியமாய் நடுங்குவதை அவன் கவனித்தான். விரல்கள் ‘ஜிப்’பைப் பாதிக்கு மேல் திறக்க முடியாமல் நடுங்குகிற நிலையில் நின்றன. அவள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

பிரபு பரபரத்து அவளருகே கட்டிலை இன்னும் கொஞ்சம் இழுத்துக் கொண்டு உட்கார்ந்தவனாய், “ஒ, நித்யா! உனக்கு ஏன் இப்படி வேர்க்குது?” என்று குழப்பமாய்க் கேட்டான்.

“நோ..நோ.. ஒண்ணுமில்ல பிரபு. சும்மாக் கொஞ்சம் நர்வஸா இருந்தது...” என்று சொல்லிப் போலியாய்ச் சிரித்தாள்.

பிரபு கட்டிலிலிருந்து எழுந்து வேகமாய் அறையின் மூலைக்குப் போய் ஒரு சின்ன மண் கூஜாவிலிருந்து குளிர்ந்த நீரை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி  எடுத்துக் கொண்டு வந்து அவளிடத்தில் நீட்டினான். அதை வாங்கிக் கொள்கிற போது அவள் விரல்களின்  அதிர்வில் அந்தக் கிளாஸ் டம்ளரின் நீர் சின்னச் சின்ன அலைகளாய் ஜனித்து, அந்தச் சலனங்களில் நித்யாவின் முகம் சிதறல்களாய்ப் பிரதிபலித்தது.  

அவன் அவளிடம் மெதுவாய்ச் சொன்னான்: “உன்னைக் கடைசியா நான் சந்திச்சது ஒரு மாசத்துக்கு முந்திய ஏதோ ஒரு வெள்ளிக் கிழமைன்னு எனக்கு ஞாபகம். அதுக்கப்புறம் உன்னை என்னால பார்க்க முடியல. உன் ஆபீசுக்கு ரெண்டு; மூணு தடவை போன் பண்ணினேன். நீ கெடைக்கல. உன்னை ஒன்னோட ஆபீசிலியோ, வீட்டிலியோ வந்து உரிமையாய்ப் பார்க்க முடியாம, ஒன்னோட தயக்கம் காரணமான வேண்டுகோள்களும் இந்த சமூகக் கண்களோட கூறான குதர்க்கப் பார்வைகளும்- எல்லாமாச் சேர்ந்து என்னைத் தடுத்துடுச்சு. நேத்திக்குத் தான் ரொம்ப யோசிச்சு உன்னைப் பத்தி என் அப்பாவுக்கு எழுதினேன். உன் அப்பாவைப் பார்த்துப் பேசி ஒரு நல்ல முடிவா எடுத்திடணும்னு தீர்மானமா எழுதினேன்.”

“இந்த சமூகத்தோட பார்வைகள்ல நம்மோட ஒவ்வொரு மூவ்மெண்டும் பதிவாயிக்கிட்டே இருக்கு பிரபு. உங்களோட தனி அறைக்கு நான் வந்து போற விஷயம் கொஞ்சம் சாடை மாடையா வெளியில தெரியறப்போ கூட அது உங்களையோ என்னையோ பாதிக்கிற ஒரு கௌரவப் பிரச்சனையா ரொம்பவும் அசிங்கமா உருவெடுக்கக் கூடும்..”


ப்படி அன்றைக்குச் சொன்னவள் தான் இப்படி இந்த முன்னிரவு நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தானே இங்கு வந்ததில் அவன் ரொம்பவும் நம்பிக்கையின்றி ஆச்சரியப்பட்டான். ‘இந்த விஷத்திலும் இவளிடத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்று நினைத்தவன், இப்படி ஒவ்வொரு நிலையிலேயும் இவளிடத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை எல்லாம் திரட்டிச் சேர்க்கும் பொழுது ‘நித்யா’ என்கிற இவளே ஒரு பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி இங்கே வந்து நிற்கிறாளோ?-என்று குழப்பமாய் அவன் எண்ணினான்.

அவன் குழப்பங்களை மிகுதிப் படுத்துகிற மாதிரி அவள் இப்படிச் சொன்னாள்:

“அன்னிக்கு இங்கே வரணும்னு எனக்குத் தோணல்ல. ஏன்னா, என்னிக்காவது ஒருநாள் இங்கே வந்து நிரந்தரமாத் தங்கிடுவேன்னு நான் கற்பனை பண்ணி வந்சிருந்தேன். இன்னிக்கு..” இந்த இடத்தில், அவள் ரொம்ப ரொம்பத் தயங்கி வார்த்தைகளே கிடைக்காதவள் மாதிரித் தவித்து, உணர்வுகளின் படபடப்பு குரல் வழியாய்ப் பெருகுவதைத் தடுக்க முடியாமல் நடுங்கி-

அவன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, அவளின் தவிப்புகளை ரசிக்கிற மாதிரி விநோதமாய் அவளை வெறிக்க ஆரம்பித்தான்.

“பிரபு! இன்னிக்கு நிலை...மாறிடுச்சு. என்னிக்குமே இங்கேயோ அல்லது நீங்க இருக்கிற வேற எங்கேயோ நான் வந்து சேர்ந்திருக்கிற முடியாத நெலை உருவாயிருக்கு. அதனாலேயே முதலும் கடைசியுமா இன்னிக்கு இந்த நேரத்துல உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போயிடணும்னு நான் வந்தேன்...”

பிரபு ஒன்றுமே பேசாமல் சுருள் சுருளாய் ஆவேசம் வந்தவன் போலப் புகை வளையங்களை ஊதித் தள்ளுவதை அவள் பார்த்து லேசாய்ப் பயந்தாள். அதே சமயம், தங்களுக்கு மட்டுமே தெரிந்து நடந்திருந்த அந்தரங்கமான சில ‘செலவழிப்புகளும், சம்பாதிப்புகளும்’ இப்போது அந்தப் புகை  வளையங்களைப் போல இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றில் கலந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்து விடப் போகிற அநித்தியங்களாய்-வெறும் பொய்த் தோற்றங்களாய்த் தோன்றவே, அவள் தன் மனம் முழுதும் துக்கச் சுமை அழுத்தி எடுப்பதை உணர்ந்தாள்.

“பிரபு! ப்ளீஸ், ஏதாவது பேசுங்களேன். உங்களோட மௌனம் எண்ணக் கொல்லுது..”

பிரபு சட்டென்று சிரித்தான். ”வார்த்தைகளை விட மௌனம் அதிகமாக் கொல்றதுண்டா, நித்யா?”

அவள் பதிலின்றி மௌனமானாள். அவன் சற்று நடந்து விட்டு மறுபடியும் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அவள் இப்போது மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாய், பாதித் திறந்த கைப்பையை முழுக்கவும் திறந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதை அதற்குள் இருக்கும் விஷயங்களை முன்கூட்டியே அனுமானித்தது போலவே ரொம்பவும் நிதானமாய் அவசரமேயின்றிப் பிரித்து உள்ளேயிருந்த அவளின் கல்யாணப் பத்திரிகையை ஒரு முறை நோட்டமிட்டான். ஒரு வினாடி கழித்து, டர்க்கிட் டவலால் முகத்தை நன்றாய்த் துடைத்து விட்டுக் கொண்டு, “கன்கிராஜூலேஷன்ஸ், நித்யா!” என்றான்.

அந்த வார்த்தைகளின் உள்ளீடான புழுக்கம் புரிந்து, ‘இவன் தன் உள்ளுணர்ச்சிகளை வேண்டும் என்றே பலாத்காரமாய் அடக்கிக் கொண்டு, வலிதாய்த் தனக்கு வாழ்த்துக் கூறுகிறான்’ என்று எண்ணினாள் நித்யா. அவள் ரொம்பவும் துக்கம் கம்மச் சொன்னாள்:

“ஐ ஆம் வெரி சாரி பிரபு! என்னைக் கொஞ்சம் பேச அனுமதிப்பீங்களா? ஒரு சில நிர்ப்பந்தங்களின் காரணமாகவே, நான் வழி இல்லாமத் தான் இந்தக் காரியத்துக்கு உடன்பட வேண்டியிருந்ததுன்னு உங்களுக்குப் புரிய வைக்கிற கடமை எனக்கு இருக்கு.”

பிரபு லேசாய்ச் சிரித்தான். “நாட் நெசஸ்ஸரி நித்யா.. அதெல்லாம் தெரிஞ்சுக்கவும் நான் ஆசைப்படல. சில நிர்ப்பந்தங்களுக்காக ஒருத்தரைக் காதலிக்கறதும், வேற சில நிர்ப்பந்தங்களுக்காக இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கறதும் இந்தக் காலத்துல ரொம்பவும் சகஜம்.”

நித்யா கொஞ்ச நேரம் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். “பிரபு..நான் இப்பக் கூட உங்களை மனப்பூர்வமாக் காதலிக்கறேன்...”

பிரபு சொன்னான்: “இந்த ஃபார்மல் வசனங்களால யாருக்கு என்ன பிரயோஜனம்? இனி உன்னை நானோ என்னை நீயோ தொடர்ந்து காதலிக்கறதால உனக்கோ எனக்கோதான் என்ன லாபம்? முதல்ல இந்தக் காதல்ங்கற வார்த்தைக்கு நாம என்ன அர்த்தம் கொடுத்து உபயோகிச்சிக்கிட்டிருக்கோம்னே எனக்குப் புரியல...”

“பிரபு, உங்களோட துக்கம் எனக்குப் புரியுது. இழப்போட துயரத்தை உள்ள அடக்கிக்கிட்டு, இப்படி விரக்தியா  வெளியில பேசறீங்க..”

பிரபு கேட்டான். “இழப்பா? எதை இழந்துருக்கேன் இப்போ? நான் இழந்துட்டதா நீ சொல்ற எதையுமே நான்  இன்னும் அடையவே இல்லியே?”

நித்யாவுக்கு வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. அவள் தன்னை சிரமப்படுத்திக் கட்டுப்படுத்திக் கொண்டபோது அந்தத் துயர நெருக்கத்தில் அட்டைப் பெட்டிக்குள் இருக்கிற சிவப்பு பல்பைப் போல அவளின் அழகிய வெண் விழிப் படலம் லேசாய்ச் சிவந்து தெரிந்தது.

அவள் அந்தச் சிவப்பு முழுதும் கரைந்து போகிற மாதிரிப் பெரிதாய் அவனைத் தழுவிக்கொண்டு அழ வேண்டும் என்று உள்ளூரக் கொஞ்ச நேரம் ஏங்கினாள். அவன், அவள் முன்னால் ஏதேதோ அர்த்தங்கள் பேசுகிற பார்வைகளோடு தன் சுண்டு விரல் நகத்தை லேசாய்க் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

நித்யா சட்டென்று அவன் கைகளைத் தன் நடுங்கும் கைகளால் இறுகப் பற்றியபடிக் குரல் உடைந்து சிதற, நெஞ்சின் உள் ஓசை பறை போல வெளியேயும் விட்டு விட்டு அதிர, “பிரபு” என்று வார்த்தைகள் இன்றித் தடுமாறினாள்.

“மனிதர்கள் மார்றப்போ, கூடவே அவங்களோட அக்கறைகளும் மாறிடும்னு எனக்கு இப்பத்தான் லேசாப் புரியுது. அந்த அளவுக்கு இங்க ஒவ்வொருத்தரோட உணர்ச்சிகளும் ரொம்ப பலவீனப்பட்டுப் போயிருக்கு. இப்போ, நான் குறிப்பா எதையுமே ஃபீல் பண்ணல. நீ என் கிட்டேயிருந்து பிரிஞ்சு யாரோடயோ வாழறதுக்காகப் போறேங்கிற ஒரு சின்ன உணர்ச்சியைத் தவிர எனக்கு வேற எதுவுமே ஏற்படல. அது யாருன்னு தெரிசிக்கக்கூட எனக்கு ஆசையோ  வேகமோ கொஞ்சமும் இல்ல. உன்னை அடையப் போற அவன் மேல எனக்குப் பொறாமை கூடக் கிடையாது. அவனை ரொம்பவும் ‘அதிர்ஷ்டசாலி’ன்னு நீ அவனுக்குக் கிடைச்சிட்டதாலேயே நான் எல்லோரையும் போல வர்ணிச்சுட்டேன்னா, அப்புறம் நீ எனக்குக் கெடைக்காதது ஒரு ஈடு செய்ய முடியாத நஷ்டம்னு நானே உள்ளூர ஏங்கறதா அர்த்தமாயிடும். அந்த அளவுக்கு என்னை நான் அகௌரவப் படுத்திக்க எப்பவும் விரும்ப மாட்டேன். பெஸ்ட் விஷஸ் நித்யா..!”.

‘இவனால் எவ்விதம் இப்படியெல்லாம் பேச முடிகிறது?’ என்று அவள் எண்ணிச் சிலிர்த்த போது, ‘இவனை நாம் இழந்து விட்டோம்’ என்கிற மாதிரி ஓர் உணர்வு மலை போல் வளர்ந்து நின்று அவளை வதைத்தது.

அவள் கிளம்புவதற்காக எழுந்து கொண்டாள். அவனும் அவளை வழியனுப்புவதற்காக எழுந்து கொண்டான். அவனிடமிருந்து விடை பெறவே முடியாமல் தேம்பித் தவிப்பவள் போல் விழிகள் படபடத்து நடுங்க அவள் அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு  நின்றாள். பின் தயக்கங்களோடு மெல்ல வெளியேறினாள்.

மாடிப்படியின் விளிம்பிலிருந்தபடியே அவள் தெருவில் ஓர் இரவு காலத்துத் தேவதையைப் போல நடந்து போய்க் கொண்டிருப்பதை விழிகள் முழுதும் ஏக்கங்கள் நிறையப் பார்த்து விட்டுப் பிரபு உள்ளே வந்தான். கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். சன்னல் திரைச் சீலையைப் பார்த்துக் கொஞ்ச நேரம் அதற்குள் ஏதேதோ பழைய ‘கனவுகளை’ ஓடவிடுவதாய்க் கற்பனை பண்ணினான்.,

ஏனோ அவனுக்கு அந்த நேரத்தில் தனக்கும் அவளுக்கும் இடையே மட்டும் அந்தரங்கமாய் இனிமையாய் நடந்து முடிந்திருந்த சில பழைய நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்த மன நிலையில், தனக்குத் தூக்கம் வர முடியும் என்று அவனுக்குத் தோன்றாததால், அவன் ஆவேசமாய் அலமாரியைத் திறந்து தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்துக் கொண்டான். மாத்திரைகளை ஒவ்வொன்றாய் ஆவேசமாய் வாயில் போட்டுக் கொண்டான்.

‘தூங்குகிற போது கனவு காண்கிறவர்களே நிறைந்திருக்கிற உலகத்தில், கனவு காண்பதற்காகவே தூங்க விரும்புகிற முதல் மனிதன் நான்..’ என்று முணுமுணுத்தான். அந்த நிலையிலேயே நித்யாவைத் தான் நினைக்கிற கோணங்களில் எல்லாம் கற்பனை செய்து கனவில் ரசிக்க ஆரம்பித்தான்.

அவன் கனவில் நித்யா ஒளிப் பிழம்பாய்த் தோன்றி அவன் முன்னால் நெளிந்தாள். அவளை நெருங்க நெருங்க அவன் ஓடினான். திடீரென்று நித்யா மங்க ஆரம்பித்தாள். அவளைப் பிடிக்க முடியாமல் திண்டாடித் தவித்த பிரபு, பாவம்- சிறிது நேரத்திலேயே கனவிலும் தூங்கிப் போனான்.


 --தினமணி கதிர், 24.08.1973
*
(தூங்கும் போது கனவு காண்கிறவர்கள் மத்தியில் கனவு காண்பதற்காகவே தூங்க ஆரம்பிக்கிற இவன், இறுதியில் கனவிலும் தூங்கிப் போகிறான்!என் 'கனவில் ஒரு தூக்கம்' என்ற இந்தச் சிறுகதை, 24.8.73 தினமணி கதிரில் பிரசுரமானது. அது மட்டுமன்றி, அந்த ஆண்டு இறுதியில், கதிரின் 'ஆகஸ்ட் மாதத்துச் சிறந்த சிறுகதையாக 'கனவில் ஒரு தூக்க'ம் தினமணி கதிரால் தேர்வு செய்யப்பட்டது. இப்போது நினைத்துப் பார்த்தால், எல்லாமே கனவு மாதிரி தான் இருக்கிறது!)

No comments:

Post a Comment