Wednesday, November 6, 2013

பூர்ணிமா

பிரபல புல்லாங் குழல் வித்வான் ராம்பாபு வினுடைய கார் சாந்தி புரத்துக்கு இன்னும் ஏழெட்டு மைல் இருக்கிற போது ஒரு பிரபலமல்லாத கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்த உடனேயே ஏதோ இஞ்சின் கோளாறு காரணமாய்ச் சட்டென்று நின்று போனது. இன்னும் இரண்டு மணி நேரத்துக்குப் பின் சாந்திபுரம் மிராசுதார் வீட்டுக் கல்யாணத்தில் தான் செய்யப் போகிற புல்லாங்குழல் கச்சேரியிலேயே அவனது கவனமும் ஆர்வமும் நிறைந்திருந்த நேரத்தில் இப்படி ஓர் இடையூறு நேரவே, ஏற்கெனெவே சிவந்த முகம் இன்னும் சிவக்க டிரைவரைக் கோபித்துக் கூச்சலிட்டான்.

அவனருகே இருந்த அவன் மனைவி பூர்ணிமா இப்படி அவன் கூச்சலும் கோபமுமாய்ச் செய்கிற ‘ராகமாலிகை’களை ஒரு சிரமுமின்றி வினாடியில் சிரிப்பாக்கி அவனைக் குளுமைப் படுத்தினாள். அவனது கை விரல்களை நளினமாய்ப் பற்றிக் கொண்டு “டிரைவர் இன்ஜினை சரி பண்ணிட்டுக் கூப்பிடட்டும். அப்படி ஒண்ணும் இப்ப நேரமாயிடல. நாம இந்த ஊருக்குள்ள கொஞ்ச தூரம் காலாற நடந்துட்டு வரலாமே?” என்று கூறிவிட்டுக் கீழே இறங்கினாள்.‘இவள் விழிகள் விரிகிற அளவுக்கு இந்த ஊரில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது?’ என்று புரியாமல், ஒருவித சலிப்போடு அவன் அவளோடு அந்த ஊருக்குள் நடந்தான்.

மலைப்புறத்து ஊரானதால் அதற்குரிய ரம்மியங்களோடு அழகு கொழித்துச் சிதற, சிலு சிலுவென்ற மலைக்காற்று மேனியெங்கும் மொய்த்துப் பரவ, அந்த ஊரின் ஒவ்வோர் இடமும் கவர்ச்சியாய் இருப்பதைப் பூர்ணிமா கவனித்து, பூப்பந்தாய் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு துள்ளினாள். திடீரென்று அவள் சொன்னாள்: “உங்க கையில இப்ப மட்டும் புல்லாங்குழல் இருந்திருந்தா, இந்த இடத்துலேயே ஒரு மோகனம் வாசிக்கச் சொல்லி இருப்பேன்..”

ராம்பாபுவின் முகம் சுருங்கியது. “நான்சென்ஸ்! என்னை என்ன தெருத் தெருவா வாசிக்கிற நாடோடிப் பிச்சைக் காரன்னு நினைச்சியா?”

பூர்ணிமா பயந்து போனவளாய், “எதுக்குக் கோபப்படறீங்க? தெருவுல வாசிக்கிறதால சங்கீதம் மட்டமாயிடும்னு  நெனைக்கிறீங்களா? எத்தனயோ வருஷங்களுக்கு முன்னால சாகித்ய கர்த்தாக்களும் மகான்களும், எல்லாரும் பரவசப் படற மாதிரி தெருக்கள்ல பாடித்தான் இதே சங்கீதத்தைக் ஆல விருட்சமா வளர்த்தாங்கங்கறதை மறந்துடாதீங்க..”

பூர்ணிமாவின் விழி இமைகள் அழகாய்ச் சிட்டாய்ப் படபடத்தன. ராம்பாபு அவள் பேசியவற்றை நிதானமாய்ப் பொறுமையாய்க் கேட்டான். மெல்ல மௌனமாய் நடந்தான்.அவர்கள் அந்த சின்னக் கோயிலின் அருகே வந்தபோது, பேச்சு தடைப்பட்டுப் போகிற மாதிரி-ஓர் இளம் பெண்ணின் மெல்லிய அழுகையைப் போல-ஒரு பிறந்த குழந்தையின் இங்கிதமான முனகலைப் போல- அசாத்திய மென்மையாய்த் தணிந்து தணிந்து காதில் அலை அலையாய்த்  தொடர்ந்து எதுவோ மோத ஆரம்பித்தது.

ராம்பாபு கண நேரம் ஸ்தம்பித்தான். பூர்ணிமா சட்டென்று தன்னை மறந்து கண்களை மூடிப் பரவசமானாள். மூடிய இமைகளிலிருந்து  அந்த அலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பப் பொல பொலவென்று நீர் முத்துகள் படிகங்களாய் அவள் கன்னக் கதுப்புகள் வழியே இறங்கின. அந்த ஊரின் விசித்திரங்களிலேயே மிகப் பெரிதான ஒன்றைக் கண்டு விட்ட ஆச்சரியத்தில் பூர்ணிமாவின் மேனியெங்கும் முதன்முறையாய் ஒரு நடுக்கத்தோடு விம்மிதம் ஒன்றும் பரவியது

அந்தச் சின்னக் கோயில் முன்னாலிருந்த ஒரு பழைய காலத்துக் கல் மண்டபத்துத் தரையில் உட்கார்ந்து கொண்டு கிராமத்தின் சில பேர்களடங்கிய ஒரு பாமரக் கும்பலுக்கிடையே உன்னதமான சாஸ்திரிய சங்கீதத்தை ஒரு நாடோடிப் பிச்சைக் கார இளைஞன் புல்லாங்குழலில் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அந்த ஏழை வாலிபனின் மெலிந்த விரல்கள் அவனது பழுப்பேறிய குழலின் தொளைகளில் அளந்து வைத்த மாதிரித் தாவித் தாவி ஓடின. அவன் கன்னங்களின் இருபுறமும் உப்பென்று விம்மியும் உள்வாங்கியும் இயங்கவும், உதடுகள் லாகவமாய்க் குவிந்து காற்றை உள்ளேயும் வெளியேயும் அனுப்பவும், குழியினுள் அக்காற்று ஓர் ஒலி வடிவம் சீராய்ப் பெற்று கீதமாய் வெளிவந்த ரசவாத வித்தையைப் பூர்ணிமா விழிகளில் வியப்பு விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராம்பாபுவின் தங்கப் பூணிட்ட குழலுக்குள் தேங்கி இருந்து மேடையில் ஆடம்பரமாய்ப்  பெருக்கெடுத்துப் பாய்கிற அதே விஷயங்களே இங்கே இந்த ஏழையின் அழுக்கேறிய குழலுக்குள் ரொம்ப நாட்களாய் அடைபட்டுக் கிடந்து, இப்போது பீறிட்டுப் பாய்கிற வெள்ளமாய்த் தோன்றுகிற அதிசயத்தை உணர்ந்து சிலிர்த்தாள் அவள்.

பூர்ணிமாவின் முகத்து உணர்ச்சிகளைத் துல்லியமாய் ஆராய்ந்தான் ராம்பாபு. இவள் இந்த ஏழைக் கலைஞனுக்காக இரக்கப் படுகிறாள் என்பதை விட, இவள் இவனுடைய இந்தத் தெருச்சங்கீதத்தை ரசிக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட கோபம் முகமெல்லாம் வெறுப்பாய் மாற அவன் அவள் காதருகே குனிந்து சொன்னான்: ”எனக்கு இந்த இடத்துல நிக்கவே பிடிக்கல. காருக்குப் போகலாம் வா..”

“ஏன்?” என்று அவள் நகராமலேயே கேட்டாள்.

“டாமிட்! இவனை ஒரு சங்கீதகாரன்னே என்னால ஏத்துக்க முடியல. இவன் இருக்கிற இடம், இவனைச் சுத்தி நின்னு ரசிக்கிற இந்தக் கூட்டம் எல்லாமே பாக்க அருவருப்பா இருக்கு எனக்கு...இதெல்லாம் நமக்கு ஒத்து வராது.. வா.. இந்த இடத்துலேருந்து முதல்ல கிளம்பலாம்..”

“ஆனா உங்களுக்கு அருவருப்பாத் தெரியற அதே இடத்துலேருந்து தானே, இவன் ஆரோக்கியமான, இதயத்தையே சுத்தப்படுத்தற மாதிரி இப்படி ஒரு இசையை வெளிப்படுத்திக் கிட்டிருக்கான்...?”

ராம்பாபுவிற்கு இதற்கு மேலும் பொறுமை இல்லை. கோபத்தையும் வெறுப்பையும் அவள் மீது ஒரே பார்வையில் வீசிவிட்டுக் காரை நோக்கி அவன் வேகமாய் நடந்து  போய் விட்டான்..

பூர்ணிமா இன்னும் உணர்ச்சி வசப்பட்டே இருந்தாள். அந்தக் கூட்டத்தில் ஒருவனை அணுகி அந்த இளம் வித்வானின் பெயரை விசாரித்தாள். அவன் பெயர் சாமுண்டி என்று தெரிந்து கொண்டாள். அவன் தன் ஏழ்மையின் காரணமாய்க் கீஷே விரித்திருக்கிற துண்டில் சிதறி இருந்த நாணயங்கள் யாவுமே, அவனுடைய சங்கீதத்தை நிர்ணயிக்கிற விலையாய் அல்லாமல், அதைக் கேட்டவர்களின் வெவ்வேறான ரசனைகளின் விலையாகவே அவளுக்குத் தோன்றியதால், அவளுக்கு லேசாய்ச் சிரிப்பு வந்தது. தனது கைப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்தவள், ‘ராம்பாபு தன் கச்சேரிகளுக்கு வாங்குகிற ஆயிரத்தோரு ரூபாய்க்குச் சமமாய் இந்தப் பத்து ரூபாய் நோட்டை நான் நினைத்துக் கொள்ள முடியுமா?’ என்ற உறுத்தலோடு அதை அந்தக் கந்தல் துணி மீது போட்டு விட்டு நடந்தாள்

சாந்திபுரத்தில், தங்களுக்காக ஏற்பாடு பண்ணப் பட்டிருந்த கெஸ்ட்ஹவுசிற்கு அவர்கள் வந்து சேர்ந்த போது மணி ஆறே காலாகி விட்டது. அறைக்குள் வந்தவுடனேயே ராம்பாபு ஆவேசமாய்க் கதவை அறைந்து சாத்திவிட்டுக் கைப்பெட்டியைத் திறந்து கையேடு கொண்டு வந்திருந்த ‘ஸ்காட்ச்’ விஸ்கி பாட்டிலை எடுத்துக் கண்ணடித் தம்ளரில் ஊற்றிக் கண்கள் சிவக்கச் சிவக்கக் குடித்தான்.

அவனுடைய இந்தச் செயல் பூர்ணிமாவுக்குப் புதிதாய்த் தோன்றவில்லை. தன் கோபம் எல்லை மீறுகிற போதெல்லாம் அவன் வழக்கமாய்ச் செய்கிற விஷயம் தான் அது. ஆனால் ஏழு மணிக்கு அவன் செய்ய வேண்டிய கச்சேரி ஒன்று இருக்கும் போது  அவன் இப்படிப் பைத்தியமாய் இதைச் செய்கிறானே என்று அவள் எண்ணிச் சற்றே துணுக்குற்றாள். அவள் மீது அவனுக்கிருந்த கோபம் இன்னும் மாறாத நிலையிலும் அவளை நெருங்கி அவன் முத்தமிட முயன்ற போது, பூர்ணிமா அவனிடமிருந்து தன்னை லாகவமாய் விலக்கிக் கொண்டு, இன்னும் ஒரு கோப்பை விஸ்கியை அவனுக்கு ஊற்றிக் கொடுத்தாள்.

இந்த சமயத்தில் கதவை யாரோ தட்டவே பூர்ணிமா போய்க் கதவைத் திறந்தாள். வந்திருந்தவரைக் கச்சேரி ஏற்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கிறவர் என்று அவள் ஊகித்துக் கொண்டாள்.

“என் பேரு நஞ்சுண்டன்...நான் தான் ரிசப்ஷன் இன்சார்ஜ்.. ஏழு மணிக்குக் கரெக்டாக் கச்சேரி ஆரம்பிச்சுடணும்னு சொல்றார் மிராசுதார். ராம்பாபு வாசிக்கப் போறார்னு பந்தல்ல தாங்க முடியாத கூட்டம்!” என்றார், வந்தவர்.

பூர்ணிமா சற்று நேரம் மௌனம் சாதித்தாள். பிறகு நிதானமாய்க் கேட்டாள்: “மிஸ்டர் நஞ்சுண்டன், ராம்பாபு இந்த ஊருக்கு வர்றது இது தானே முதல் தடவை?”

“ஆமாம்”

“ராம்பாபு இப்போ வேணுகானம் பண்ற நிலையில இல்ல. அவர் சுயநினைவுக்குத் திரும்ப இன்னும் மூணு மணி நேரமாவது ஆகும்!” என்று அழுத்தம் திருத்தமாய்ப் பூர்ணிமா கூறினாள். அவளுடைய கொழுவிய கையின் சுட்டு விரல் காட்டிய திசையில் ராம்பாபு போதை மயக்கத்தில் ஆனந்தமாய் சயனத்திருந்த கோலம் கண்டு அதிர்ச்சி அடைந்த நஞ்சுண்டன் நிலை குலைந்து போனார்.

“அம்மா, இன்னிக்குக் கச்சேரி இல்லேன்னா, மிராசுதருக்குப் பதிலா, கூட்டமே என்னைக் கொன்னு போட்டுடும். அவர எழுப்பி உடனடியா ஏதாவது பண்ணியாகணும் நீங்க..” என்று பரபரத்தார்.

பூர்ணிமா எந்தப் பரபரப்பும் இன்றி நிதானமாய்ப் பேசினாள்.

“மிஸ்டர் நஞ்சுண்டன், இந்த ஊர்ல ராம்பாபுவைக் ‘கேட்டவங்க’ளைத் தவிரப் ‘பார்த்தவங்க’ யாரும் இல்லை இல்லியா? அதை நான் இப்போ என்னோட சோதனைக்குப் பயன்படுத்திக்கப் போறேன். நீங்க உடனே போயி, ‘ராம்பாபு ரொம்பவும் களைச்சுப் போயி வந்திருக்கறதால கச்சேரி எட்டு மணிக்குத் தான் ஆரம்பமாகும்னு சொல்லுங்க. ராம்பாபு மாதிரி ஒரு பிரபல வித்வானுக்காக ஒரு மணி நேர தாமதத்தை நம்ம ரசிகர்கள் பொருட்படுத்த மாட்டாங்க. கூடவே, ‘ராம்பாபு ரொம்பக் கண்டிப்பானவர், ரொம்பவும் சுதந்திரமானவர், அதனால யாரும் கச்சேரிக்கு நடுவுல அதை வாசி, இதை வாசின்னு சீட்டெல்லாம் எழுதி மேடைக்கு அனுப்பக் கூடாதுன்னும் சொல்லுங்க. ஆனா, அவங்க எல்லாரும் எதிர்பார்க்கிற அதே உசந்த சங்கீதம் பெரிய விருதுகளோட கூடிய ராம்பாபு கிட்டேருந்து வராம, எந்த விருதுகளும் இல்லாத’ ஒரு சாதாரண- ஊர் பேர் தெரியாத- ஏழைச் சாமுண்டி கிட்டேருந்து வரப் போறதுங்கற உண்மைய மட்டும் தப்பித் தவறிக் கூடச் சொல்லிடாதீங்க..”

நஞ்சுண்டன் அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்ச கட்டத்துக்குப் போன போது, பூர்ணிமா வெகு நிதானமாய்த் தன் திட்டங்களை விவரித்துக் கொண்டு போனாள். நஞ்சுண்டனுக்கு அவற்றை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

ட்டு மணிக்குச் சரியாய்க் கச்சேரி ஆரம்பமாகியது. நஞ்சுண்டன் உண்மையிலேயே நஞ்சை உண்டவர் மாதிரி வியர்க்க வியர்க்க,  நடுங்கிக் கொண்டே ஓர் ஓரமாய் ஏதேதோ தெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ராம்பாபுவின் பட்டு வேஷ்டிக்குள்ளும் சில்க் ஜிப்பாவுக்குள்ளும் சென்ட் வாசனைக்குள்ளும் அடைபட்டிருந்தும் சாமுண்டியின் ஏழை மனம் பழைய கோலங்களின் ஞாபகங்களிலும் இன்று புதியதாய் வந்திருக்கிற இந்த திடீர் அந்தஸ்தின் நம்ப முடியாத மயக்கங்களிலும் நீந்தி பயத்தால் துடித்துக் கொண்டிருந்தது.

அவனுக்குப் பின்னால் எதையோ மகத்தான ஒன்றை சாதித்து விட்ட பெருமிதத்தில் பூர்ணிமா எவ்வித நடுக்கமுமின்றிக் கையில் இன்னொரு குழலோடு உட்கார்ந்திருந்தாள். அந்தச் சிறு கிராமத்தில் சாமுண்டியைத் தேடிக் கண்டு பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி விஷயங்களை அவனுக்கு விவரித்து, அவனை ஒப்புக் கொள்ள வைத்து, அவனது ஏழ்மைக் கோலங்களை நீக்கி, ராம்பாபுவின் தங்கப் பூணிட்ட குழலை அவன் கையில் திணித்து, அவனைத் தைரியப் படுத்தி, மேடையில் அமர்த்தி வைப்பதற்குள், அவள் பட்ட பாட்டை எண்ணிப் பூர்ணிமா பெருமூசெறிந்தாள்.

சாமுண்டி ரொம்பவும் தேர்ந்த கலைஞனாய் எடுத்த எடுப்பில் ஹம்ஸத்வனியில் வாதாபியை ஆரம்பித்தவுடனேயே சபையே தன்னை மறந்து தாளமிட ஆரம்பித்தது. இதை இரு கண்களாலும் பார்த்துப் பூரித்துப் போனாள் அவள். மிகப் பெரிய ஓர் அற்புதத்துக்குத் தானே காரணமாகி விட்ட உண்மையை நினைத்து உடம்பு முழுதும் சிலிர்ப்பு பரவப் பிரமையோடு அமர்ந்திருந்தாள் பூர்ணிமா.

சாமுண்டி சங்கீதத்தில் ஒன்றிப் போனான். சாமுண்டியின் சங்கீதத்தையும் ராம்பாபுவின் சங்கீதத்தையும் இனம் பிரிக்க முடியாமல் இன்னும் ரசிகர் கூட்டம் தலையாட்டிக் கொண்டிருந்ததே தனக்குக் கிடைத்த பெரும் வெற்றியாய் நினைத்து, ‘இதைக் கொண்டாடக் கூடத் தனக்கு சக்தி இல்லையே’ என்று உள்ளூர ஆனந்தலகரியில் மூழ்கினாள் பூர்ணிமா. உண்மையில் சபையில் நிறையப் பேர் சாமுண்டியின் சங்கீதத்தை மட்டும் அல்லாமல் தன்னையும் கள்ளத் தனமாய் ரசித்துக் கொண்டிருப்பது அவளுக்குப் புரிய இன்னும் அதிகமாய்ச்  சிரிப்பு வந்தது.

சாமுண்டி அடுத்ததாய் அவனுக்கு மிகவும் பிடித்தமான முகாரியை எடுத்தான். சோகத்தையும் சுகானுபவமாகி அவன் அந்த ராகத்தில் மாய அதிர்வுகளை உண்டு பண்ணினான். ராகம் உச்சம் அடைந்த போது, சபையோடு அவனும் தன் இசையில் ஒன்றிப் போனான். இந்த நேரத்தில் தான் சாமுண்டி யாரும் எதிர்பார்க்காத வேறு ஓரு காரியத்தையும் செய்தான். அவன் இந்த ராகத்தைத் தெருக்களில் வாசிக்கிற போதெல்லாம் அவன் வழக்கமாய்ச் செய்கிற மாதிரியே, இப்போதும் மேடையிலிருந்து இறங்கித் தன் தோளில் இருந்த  துண்டைத் தரையில் விரித்து விட்டுத் தான் என்ன செய்கிறோம் என்றே புரியாதவனாய் அங்கேயே நின்று கொண்டு ‘முகாரியை இன்னும் அழுத்தமான சோகத்தோடு வாசிக்க ஆரம்பித்தான். 

இதைக் கண்டு பூர்ணிமா வெலவெலத்துப் போனாள். கூட்டத்தில் பெரிதாய்ச் சலசலப்பு பரவத் தொடங்கியது. அதுவரை மெய்மறந்து உட்கார்ந்திருந்த நஞ்சுண்டன் இப்போது கோபமும் அவமானமும் மிகுந்து, “நான் அப்பவே சொன்னேனே, கேட்டீங்களாம்மா..? ஒரு பிரபல வித்வானோட பெண்சாதி செய்யக் கூடிய காரியத்தையா செஞ்சிருக்கீங்க?” என்று ஆவேசமாய்க் கத்தினார்.

கூட்டத்தில் எவனோ ஒருவன், “டேய், இவன் நம்ம பக்கத்தூருப் பாட்டுப் பிச்சைக்காரன் சாமுண்டிடா!” என்று கூவினான். சாமுண்டி பயந்து போய் உடம்பெல்லாம் நடுங்கப் பூர்ணிமாவின் பக்கம் திரும்பினான். அவள், தன் ஆனந்தத்தை எல்லாம் பறிகொடுத்துச் செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அந்த ஒரு கணத்தில் அந்த ‘நாகரிக’ ரசிகர் கூட்டம் சாமுண்டியின் மீது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைக் குதறியது.

புல்லாங்குழல் இன்றியே இப்போது சாமுண்டி அவலக் குரலில் முகாரி பாடினான். அவன் அலறல்க் குரலைக் கேட்டுப் பூர்ணிமா ‘இது என்ன அநியாயம்’ என்று கத்தினாள். சாமுண்டியோ அந்தக் கூட்டத்தின் வெறித்தனமான தாக்குதலுக்கு  ஆளாகி உடம்பெல்லாம் ரத்தக் காயங்களாய், பழைய படியே கிழிந்து கந்தலாய்ப் போன அந்தப் புதிய  உடைகளுடன், அலங்கோலமாய்ப் பறக்கும் தலை முடியோடு ராம்பாபுவின் தங்கப் பூணிட்ட புல்லாங்குழலை ஆவேசத்தோடு இரண்டாய் உடைத்து எறிந்து விட்டு இரைக்க இரைக்கத் தெருவில் ஓடினான்.

ராம்பாபு அறையில் ஆனந்தமாய் உறங்கிக் கொண்டிருந்தான். பூர்ணிமா சோகமாய் நின்று கொண்டிருந்தாள். நஞ்சுண்டன் அவளிடம் குரூரமான சாயல்களோடு ஆறுதலைப் போல ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

“அம்மா! ராம்பாபுவையும் சாமுண்டியையும் ஒண்ணாக்கிடலாம்னு கற்பனை பண்ணினீங்களே, முடிஞ்சிதா உங்களால? அவன் தெருவுல தான் இருக்கணும்னு ஆண்டவன் ஏற்கெனெவே அவன் தலையில எழதி வச்சுட்டான். அதை யாரால மாத்த முடியும்?”

அதைக் கேட்டுப் பூர்ணிமாவின் கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. பிரளய காலத்து இடி போலத் தன்னையும் மறந்து அவள் கத்தினாள்: “நான்சென்ஸ்! அவன் தலை விதிய ஆண்டவன் எழுதி வைக்கல சார். உங்களப் போல உள்ள கீழ்த்தரமான மனுஷங்க தான் எழுதி வச்சிருக்கீங்க. பாடினவன் யாருன்னு தெரியாத வரைக்கும் உங்களால ரசிக்க முடிஞ்ச அவனோட சங்கீதத்தை, அவன் யாருன்னு தெரிஞ்சதுக்கப்புறம் ஏன் ரசிக்க முடியல? இந்த சமூகத்தோட கோணல்கள இன்னும் எத்தன தலை முறை போனாலும் யாராலும் நிமித்த முடியாதுன்னு இன்னிக்கு நான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா, இன்னிக்கு நடந்ததுக்கு உண்மையான பேரு சாமுண்டியோட ‘விதி’ இல்ல. ஒரு மெய்யான கலைஞனுக்கு இந்த சமூகம் செஞ்சிருக்கிற அநீதி.....”

நஞ்சுண்டன் குற்ற உணர்ச்சிகளோடு தரையை அளக்கிற மாதிரி அடிகளை எடுத்து வைத்து நடந்தார், உண்மையான கலைஞன் ஒருவனின் திறமைகளை அளக்கத் தவறி விட்டு.

அவர் போனபின், பூர்ணிமா ராம்பாபுவின் மூடிய விழிகளைப் பார்த்தபடி சொன்னாள்: “சங்கீதம் சாமுண்டியையும் உங்க அளவுக்கு உசத்தத் தயாராத்தான் இருக்கு, ராம் பாபு! ஆனா, நீங்களோ உங்க சமூகமோ தான் அதுக்குத் தயாரா இல்ல..”

ராம்பாபுவோ இன்னமும் ஆனந்த பைரவியில் அழுந்தித் தூங்கிக் கொண்டிருந்தான்.
-(தினமணி கதிர், 29.6.1973)
 *
(படைப்பாளியின் அந்தஸ்து, படைப்பின் தரம் ஆகியவை குறித்துக் காலம் காலமாய் நிலவி வரும் சமூக மனோபாவங்களையும், அணுகு முறைகளையும் ஒரு கோபமான விமரிசனத்துக்கு உள்ளாக்குகிற, எனது 'பூர்ணிமா' என்ற இந்தச் சிறுகதை, 29.6.1973, தினமணி கதிரில் வெளியானது. அந்த வயதுக்கே உரிய அறச் சீற்றங்கள் இந்தக் கதையில் சற்றே உரத்த குரலில் வெளிப்பட்டிருக்கிறது என்பது நிஜம் தான். இதே கதையை இன்றைக்கு நான் எழுதி இருக்கிற பட்சத்தில், இதன் நடையும் தொனியும் ஓரளவுக்கு மாறி இருக்கவும் கூடும். ஆனாலும் அன்றைக்கு இந்தக் கதை எழுப்பிய கேள்விகளும் சூழலும் இன்றைக்கும் அப்படியே மாறாமல் இருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை.)



,



No comments:

Post a Comment